Pages

Monday, 22 August 2016

சிதைந்தும் சிதறுண்டும் போனபின்
தூங்காத நிலவின் கீழ் கையேந்தா
மனிதரின் யுகக்கதைகள்.....
முதிர்ந்த மரத்தின் பொருக்குத்தோலில்
காலரேகை படர்ந்து விரிந்து
உலர்ந்த காலத்தின் சாட்சியாய்.....
காட்டுப்பறவையின் ஏகாந்தம் சூழ
பிரபஞ்சவெளியில் குரலெடுத்தழுகிறது
முதிர் மரம்...
சலனமின்றி மரத்தடி இருக்கையும் நானும்...
நெடுமரமடியில் நனையா மனத்தோடு நானிருந்தும்
சத்தியநதியை தம் குரலாய் சுமந்து வரும் ஒவ்வொன்றும் அலைக்கிறது
மௌனத்தின் மீது மனம் கொண்ட  தீராக்காதலை....
இயலாமை
பாழ் மௌனத்தின் பார்வைபிடுங்கி
ஓங்கி அறைகிறது ஒடுங்கிய சாளரத்துள் தனைப்பூட்டிக்கொண்ட
இவ்வாழ்வின் மீது...
தேவனே....!
சிலுவையில் நீர் சிந்திய ரத்தம்
எனக்குமானதெனில்,
காலமென்று நீண்டு வானத்தின் கீழெரியும்
இவ்வாழ்வின் மீதொரு கருணை கொள்ளும்...,
முட்களை சிரசேற்றி
நாட்கள் கிடந்துழலும் வெளியில்
சிலுவைகள் மரித்துப்போகட்டும்...

Tuesday, 19 July 2016

பரணில் கிடக்கும் பழைய நாட்குறிப்புகள்...


யுத்தம் யுத்தம்...கொடும் யுத்தம்...  சுற்றிவளைப்புகள்..சுட்டுப்படுகொலைகள்...கைது செய்யப்படுதல்...காணமல் போதல்...இடப்பெயர்வு..செல்லடி...

பத்திரிகளில் படிக்காமலும் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அயலவர்களுடன் இவைகளைப்பற்றி கதைக்காமலும் இவைகளில் ஏதோ ஒன்றை ஒவ்வொருவரும் எதிர்கொள்ளாமலும் அன்று எமக்கு நாட்களும் மாதங்களும் நகர்ந்ததில்லை..

96க்கு பிறகு இரவில் ஊர்வீதி எப்பிடி இருக்கும் என்று பார்த்ததே இல்லை.. இரவிரவா கடையடி கோயிலடி வாசிகசாலை மதகுகளில் நின்று நண்பர்களுடன் அரடையடித்துவிட்டு பத்து பதினொரு மணிக்கு கொத்துக்கடைக்கு போய் சுடச்சுட கொத்து சாப்பிடுவதை வெறும் கற்பனையில் மட்டுமே நினைத்து பார்க்க முடியும்...

பிரசவ வலியில் துடிக்கும் பிள்ளைதாச்சியை கூட முன்னால் லாம்புடனும் வெள்ளைக்கொடியுடனும் ஒருத்தர் போக வைத்தியசாலையில் கொண்டுசேர்த்த வரலாறு யாழ்ப்பாணத்தில் 90களின் இறுதியில்..

இரண்டாயிரத்தின் ஆரம்பகாலம்... சமாதானம்... பலநூறு யுகங்களாக அடக்கி வைத்திருந்த ஆசைகளை ஒருத்தன் ஒரே நாளில் அநுபவிக்க கிடைத்தால்... இரவிராக தூங்காமல் வீதிகளில் அலைந்தோம்... மதகுகளில் குந்தி இருந்து குதுகலித்தோம்... கொத்துக்கடை இரவிரவாக திறந்திருந்தது... வீட்டில் அம்மாக்கள் பிள்ளையை இன்னும் காணவில்லை எண்டு பதைத்து துடித்து தேடவில்லை.கைகளை விரித்து காற்றில் பறந்தோம்...

சேவ் எடுக்க ஆரம்பித்த கட்டற்ற இளம்பருவத்தில் சமதானம் வந்தது...

நான் மற்றும் நண்பன்... ஏலெவல் முடிஞ்சுது... வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டலைந்தபடி...

பிள்ளையார் கோயில் பின்வளவில் கிறிக்கற்... எனக்கும் கிறிக்கற்றுக்கும் எட்டாப்பொருத்தம்... வில்லங்கத்துக்கு வீட்டுக்கு வந்து ஏத்திக்கொண்டு போகும் நண்பன்... வீட்ட சும்மா இருக்கிற விசரிலையும் பெட்டையளப்பாக்கலாம் எண்ட புழுகிலையும் ஏறிப்போயிடுறது..

கிரவுண்டுக்கு போனா கிறிக்கட் எனக்கு ஒட்டாது.. அங்காலை இன்னொரு குறுப் கிளித்தட்டு இல்லா வொலிபோல் பாடிவந்தேன் இப்பிடி ஏதும் நமக்கு விளங்குறமாதிரி விளையாடிக்கொண்டிருப்பாங்கள்.. நேரபோய் அவங்களோட ஒட்டிக்கொள்ளுறது..

கிரிக்கட்டும் கிளித்தட்டும் முடிய சாதுவா மம்மல் இருட்டாகிடும்..பிறகு கோயிலடி வாசிகசாலையில் போயிருந்து மேளமடிச்சு பாட்டு பாடுறது... பாட்டுக்கு பாட்டு இசைக்குழு எண்டு வாயில வாற நிகழ்ச்சி எல்லாம் செய்யுறது.. இயக்கப்பாட்டு இடைக்காலப்பாட்டு எண்டு பலதும் வடிவேலு சொன்னதுபோல ஒரு புலோவில போகும்... கத்தி களைச்சு பொட்டையள பத்தி கதச்சு நக்கலடிச்சு முடிய பத்து பதினொரு மணியாகிடும்..

நல்ல பசி பசிக்கும்.. சந்தியில இருந்த சாப்பாட்டுக்கடை பூட்டுற நேரமாகிடும்.. கடைக்காறருக்கு தெரியும் எப்பிடியும் இந்த ரீம் சாப்பிட வருமெண்டு...

பெரிய ஒரு கொக்ககோலா போத்தில் எடுப்பம்...கடையில பூட்டுற நேரத்து மிச்சம் மீதி எல்லாம் மேசைக்கு வரும்...  எழுதாத உடன் படிக்கை போல ஒரு ரேனில எல்லாரும் பில் கட்டுவம்..

இப்பிடி வெட்டி சீன் போட்டு வீட்டு காசில வயிறு வளர்த்தபடி நாட்கள் அளிகின்றன.. சும்மா இருந்து வீட்டுக்காசிலை திண்டா உடம்பு தினவெடுக்கதான் செய்யும்.. மனக்குரங்கு அடுத்த கட்ட சந்தோசத்த தேடித்தாவும்..

நண்பனுக்கும் வவுனியாவில் இருந்து ஏலெவல் எழுதிப்போட்டு அம்மம்மாக்காறிவீட்ட வந்து நிண்ட பக்கத்து வீட்டு பெட்டைக்கும் லவ் ஆகுது..

வாசிகசாலையும் தெருவும் சந்திக்கின்றன... பெட்டை தெருவால போறது நண்பன் வாசிகசாலையில இதுக்கெண்டே வலோக்காரமா பேப்பர மணித்தியாலக் கணக்கா பாத்துக்கொண்டு இருக்கிறது..

கண்ணும் கண்ணும் கலந்து காதலாகி கதைக்க வெளிக்கிட்டு முதலில ஊருக்கு ஒளிச்சு ஒளிச்சு கதச்சு பிறகு பெட்டையின்ர அண்ணண்காறனுக்கு தெரிய பெட்டை வீட்டை விட்டு வெளிய போறது நிறுத்த படுகிறது...

காதலிய காணாத மனம் பதைபதைக்கிறது...துடி துடிக்கிறது..ஒருவேலிதான் இருவீட்டுக்கும்..காதலி பிரிவில் வாடும் மனது வேலியே கதியென கிடந்து அங்கிருந்து காதலியின் சிக்னலை பெறுகிறது..

நண்பன் வேலியே தவமெனக்கிடப்பது நண்பனின் தாய்க்கு மெதுவாக சந்தேகத்தை உண்டாக்குகிறது.. ஒருநாள் நண்பன் வேலிக்கு அருகில் நின்று தன் காதலியை பார்த்து இண்டைக்கு நீ வெளிய வந்து என்னோட எப்பிடி எண்டாலும் கதைக்காட்டி என்ர மண்டையை உடைப்பன் எண்டு சைகையால் சத்தியம் செய்ய நண்பனின் காதலியோ அண்ணா நிக்கிறான் இண்டைக்கு வரேலா எண்டு கெஞ்சி மன்றாட முடியாது எண்டு நண்பன் ஓட்டினால் தன் மண்டையை உடைத்ததை கண்டதில் இருந்து நண்பனின் தாய்க்கு விடயம் உறுதியாகியதால் அன்றிலிருந்து சிலநாட்களாக நண்பன் வீட்டில் அழுகையும் ஒப்பாரியும் தான்..

இருவீட்டிலும் பிரச்சினை கொஞ்சம் அடங்கட்டும் எண்டு இருவரும் சைகையால் பேசி உடன்பாட்டுக்கு வந்துவிட்டு இருவரும் சில மாதங்கள் நல்ல பிள்ளைகள் போல் வீடுகளுக்கு நடித்ததால் இரு வீட்டிலும் இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்கிறது...

நண்பன் பழையபடி வாசிகசாலை கோயிலடி எண்டு நம்முடன் உலாவ ஆரம்பிக்கிறான்..

நண்பனின் காதலியும் சீனிதேயிலை வாங்கவெண்டு மெதுமெதுவாக ரோட்டில் உலாவத்தொடங்குகிறார்...

இப்பொழுது ரெண்டுபேரும் ரொம்ப உசார்... நேரில் சந்திச்சு பேசிக்கொள்வதில்லை.. சீசாபோத்திலுக்க கடிதத்த வச்சு நண்பனின் காதலி எறிவா.. நண்பன் படிச்சிட்டு பதில் கடிதத்தை அதே சிசா போத்திலுக்க வச்சு எறிஞ்சுவிடுவான்..தெருவில விலத்தேக்க யாரும் காணாமல் நைசா கடிதத்த போடுறது..என்னட்ட குடுத்துவிடுறது எண்டு பல வழிகளில் கடிதம் பரிமாறி காதல் வளர்கிறது..

நிறையக்கடிதங்கள்...எங்கட வீட்டதான் எல்லாக்கடிதத்தையும் என்ர சூட்கேசு ஒண்டுக்குள்ள அடியில மறச்சு வச்சிருந்தம்..நண்பன் தன் வீட்டில் வைத்திருந்தால் தகப்பனிடம் பிடிபட்டுவிடும் எண்ட பயம்..

காலம் பறந்தோடுகிறது...

2005 களின் இறுதி மற்றும் 2006 களின் ஆரம்ப காலங்கள்...  யுத்தம் மெதுமெதுவாக நெடுந்தூக்கம் கலைத்து பசியுடன் இரைதேட புறப்படும் பாம்பொன்றைப்போல மெதுமெதுவாக ஊரெங்கும் தன் சீற்றத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நேரம்..

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.பற்றற்ற முனிவனைப்போல அது சலனமற்றுக் கடந்து கொண்டிருக்கிறது.உலகத்தில் நிகழும் எந்த நிகழ்ச்சிகளாலும் அது சலனப் படுவதில்லை.ஒருவரை விட்டு ஒருவர் பிரிய வேண்டிய கணங்களை காலம் விரைவாகச் சுமந்து வந்து கொண்டிருந்தது.யுத்தம் நிலங்களைத்துண்டாடி உயிர்களை மட்டுமா பலி எடுக்கிறது..?பல்வேறு உணர்ச்சிப்போராட்டங்களுக்கும் அல்லவா காரணமாகிறது.பலகாதலர்களைப் பிரித்துப்போட்டுச் சிரித்துப்பார்க்கிறது யுத்தம்..

தேடல்கள் கைதுகள் படுகொலைகள் காலை மாலை மதிய உணவு போல யாழ்ப்பானத்தில் மனிதர்களை வேட்டையாட... சொல்ல முடியாப்பிரச்சினைகள்.. எல்லாரும் நாட்டை விட்டு திசைக்கொன்றாய்...

நண்பனின் காதலும் கனவுபோல முடிந்து போனது தொடர்புகள் இல்லாமல்...

இந்த முறை ஊருக்கு போன போது எனது சூட்கேசில் ஒளிச்சு வச்சிருந்த நண்பனின் அந்த நாட்களின் கடிதங்களை வாசிக்க கிடைத்தது...

நண்பனின் கடிதங்களில் பல அனல் கக்கும் கவிதைவரிகள் இருந்தன..இது அதிலொன்று

"கண்கள் தீண்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது, பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலையவைப்பது"

எமது அரும்பு மீசைக்கால பல மலரும் நினைவுகளை அந்தக்கடிதங்கள் கிழறிவிட்டன...

கடிதங்கள் என்பவை காலங்கடந்து படிக்கும்போது உயிரும் உணர்வும் கலந்தவையாகவே எப்போதும்...இப்படி உயிரும் உணர்வும் கலந்த கடிதக் கதைகள் பலநூறு எம்மில் பலரிடமும் இருக்கும்..

நானும் ஊரிலை கடிதத்தை எதிர்பார்த்து தபால்காரனுக்காக ஒரு காலத்திலை காத்திருந்தவன் தான்..அப்பொழுது அப்பா வெளிநாட்டில் இருந்தார் நான் உள்ளூரிலதான் இருந்தன்..காற்சட்டை போட்டிருக்கும் வயசு..ஒரு பதினொரு பன்னிரண்டு மணியளவிலதான் எங்க ஊரு தபால்காறன் வருவார்.மூன்று வீடுதள்ளி அவர் கடிதம் கொடுக்கும்போது எழும் அவரின் சைக்கில் பெல் ஒலி கேட்டதும் நான் கேற்றுக்கை போயிடுவன்.பள்ளிக்கூடம் விடுமுறை என்றால் எங்கட வீட்டுக்கு தபால் கொடுக்க அந்தாள் பெல் அடிக்கத்தேவையில்லை..அதுக்கு அநாவசியம் இல்லாமல் நான் பத்து மணிக்கே கேற்றில போய் நிப்பன்.நல்ல மனுசன்..கடிதம் வந்துதோ வரேல்லையோ இறங்கிக் கதைத்து விட்டுத்தான் போகும். ஒரு 48/50 வயசிருக்கும். கடைசி வரைக்கும் அந்தாளின்ரை பெயரைக்கேக்க மறந்து போனன். அந்த வயசில அது எனக்கு முக்கியமாய்த்தெரியவில்லை.இப்பிடி இடம்பெயர்ந்து வந்து அந்தக்காலத்தை நினைச்சு மாய்வன் எண்டு ஆர் நினைச்சது..தபால்காற மாமா தபால்காற மாமா என்றுதான் கூப்பிடுறனான்.வெள்ளை என்வலப்பில கரையில சிவப்புக்கோடு போட்டு வந்தா உடைக்காமலே அப்பாவின் கடிதம் ஒண்டு வந்திருக்கு என்று அம்மாவிடம் சொல்லிவிடுவன்..மண்ணிற என்வலப்பு என்றால் உள்ளூர்கடிதம்.90க்கும் 95க்கும் இடைப்பட்ட காலம்,யாழ்ப்பாணம் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம். தொலைபேசி எல்லாம் எப்படி இருக்கும் என்றே தெரியாது..கடிதமும் கப்பலிலதான் வரும்..கப்பலும் மாசத்தில ஒருக்காத்தான் வரும்..மாசமும் முப்பது நாளைக்கு ஒருக்காத்தான் வரும்..அந்த முப்பது நாளும் அப்பாவின் கடிதம் பார்க்காமல் ஒரே விசராக இருக்கும்...கப்பல் வந்திட்டுது என்றால் உதயனில் தடித்த எழுத்தில் செய்தி வரும் கொழும்பில் இருந்து ஜயாயிரம் தபால் பொதிகளுடன் கப்பல் காங்கேசன் துறைக்கு வந்திருக்கு என்று..அந்தச்செய்தியைப்படித்து விட்டு ஒவ்வொரு விரலா எண்ணிக்கொண்டிருப்பம் எப்ப தபால்காற மாமா வருவார் என்று..இப்பிடியே காலம்போக அப்பாவின் குரலைக்கேக்கவேணுமெண்ட ஆசையில் ஊரில் உள்ள வெளிநாட்டுக்காரர் எல்லாம் போய் ரெலிபோன் கதைச்சிட்டு வரேக்கை கொழும்பு ஒரேஞ்சும் அப்பிளும் கொண்டு வாறதைப்பாத்திட்டு உசிரைக்கையில புடிச்சுக்கொண்டு கிளாளியால வவுனியாவுக்கு நானும் அம்மாவும் ரெலிபோன் கதைக்கப்போனது ஒரு தனி அனுபவம்..அதை எழுத வெளிக்கிட்டால் தனி பதிவு எழுதோணும்..

ஆரம்ப காலத்திலை வெளிநாட்டுக்கு வெளிக்கிட்ட ஆட்கள் சொல்லுவினம் ஒவ்வொரு முறை கடிதம் வரும் போதும் இதிலாவது கலியாணத்தைப்பற்றி ஏதாவது வரும் என்று நினைச்சுக்கொண்டு திறக்கிறது.ஆனால் கலியானத்துக்கு பதிலா காசைப்பற்றிதான் இருக்கும்... செம கடுப்பா இருக்கும் எண்டு சொல்லி பம்பலடிக்க கேட்டிருக்கிறன்...

சிலவேளைகளில் நேரடியாக கதைக்கமுடியாத விடயங்களை கடிதங்களில் இலகுவாக எழுதிவிடலாம்!

ஆனால் இப்போது யாரும் யாருக்கும் கடிதம் எழுதுவதில்லை!

இப்போது பலரும் பழைய கடிதங்களை பொக்கிஷமாகப் போகும் இடங்கள் எல்லாம் காவிக்கொண்டிருக்கக்கூடும்... சிலர் ஞாபகங்களிலும்...

இப்படி இரத்தமும் சதையுமாக இக்கடிதங்கள் எங்களின் வாழ்க்கையோட ஒருகாலத்தில் இரண்டரக்கலந்திருந்தன.. அவை வெறும் கடிதங்கள் அல்ல பேசும் உணர்வுகள்..கடிதங்களினதும் தபால்காரனதும் வாழ்க்கையை பேசும் ஒரு படம்தான் the postman சந்தர்ப்பம் இருந்தால் ஒருமுறை பாருங்கள்....

Friday, 29 January 2016

காட்டுப்பூவாயினும்
தடவித் தடவி
தன் பிரியத்தை உரைக்கிறது
காற்று...

அணிலொன்றின் வருகையில்
மலர்கிறது மரம்..

துளித்துளியாய் பொழிகிறது
வானம்
காற்றுடன் கைகொட்டி ரசிக்கிறது
வனம்...

நிலவு அணைக்கிறது
நதிகள் பூமியை நனைக்கின்றன
மூங்கில்கள்
இன்னமும் இசைக்கின்றன..

யார் சொன்னார் அன்பற்றது
இவ்வுலகென்று.. <3
வீடுகள் உறங்கிய தெருக்களின் இருக்கைகளில் மீதமாய்
இருக்கிறது காதலர்கள் விட்டுச்சென்ற முத்தங்கள்
இரவின் இசையை காதலுடன் மீட்டுகின்றன
மரங்கள்
வானத்தைக் காட்டிலும் பரிசுத்த நிர்வாணமாய் இருக்கிறது இந்த இரவு
என் கனவை தொட்டுணரும் பட்டாம் பூச்சியே
உன்னைக்கனவுற்றபடி அசையாத இரவின் போதையில் மிதக்கிறேன்

உன் கனவுகளின் வண்ணங்களிலும் தோய்ந்துகிடப்பது
பாதி ஒளிந்துள்ள நிலவைப்போல
பரிதவிப்பது
வசந்தமாய்ப் பூப்பது
வாழ்வின் கணங்களை ரசிப்பது
பின் அதனுள் உருகிக்கிடப்பது
காதல் அல்லவா.

ஓய்வற்ற வாழ்வென்பது சலிப்புற்று
நீண்டுகிடக்கும் நெடு வானம்
அதை நீந்திக் கடந்திட ஓடும் ஒற்றை மேகம் நான்
வாழ்வை நிறுத்திவைத்து நனைக்கவரும் மழைமேகம் நீ
என் பெருமூச்சின் தீப்பிழம்பை
கண்ணாடியில் படியும் சுவாசத்தைப்போல
நீ மூடி அணைக்கிறாய்
என் தூக்கங்களுக்கெல்லாம் உன் பாடலை தலயணையாக்குகிறாய்
துயரறியா வீட்டில் பரவும் நேசம் நான்
காதல் நிரம்பிய காற்றை தழுவும் ரோஜாச்செடி நீ..

பறவைகளின் குரலிசைப்பொழிவில்தான் உனக்கான என் பாடலும் ஒளிந்திருக்கிறது
தேடிக்கண்டடையும் தீராத்தாகத்தோடு நீ வருகிறாய்
இறகிலும் இலேசான உன் விழிகளின் வருடலினால்
எனை பரசவத்திற்குள் நகர்த்துகிறாய்
இனி யுகத்துக்குமாய் நான் தனிமையுறமாட்டேன்..

ஓ..என் தோழியே..
நேசிப்பதென்பதும்
நேசிக்கப்படுவதென்பதும்
காதல் ததும்பும் ஓர் கவிதையைப்போல
எத்துணை இனிமையானது..

மரித்துப்போகாத மீட்பர்கள்.. ---

தனித்த பயணத்தின் நெடுவழியில்
தொலைந்துபோகமுடியாமல்
அவர்கள் திரும்பி வந்திருக்கிறார்கள்..

அவர் பயண நெடுகிலும்
பூக்களை சொரிந்த
கரங்களும்
அவர் சுவடுகள் அறிந்தபோது
தடங்களை பாடிய மனிதர்களும்
பார்க்க விரும்பா திசையொன்றிலிருந்து
அவர்கள் திரும்பி வந்திருக்கிறார்கள்..

வெறிச்சோடிய அவர் தெருக்களில்
நெருப்பை அள்ளிக்கொண்டலைகிறது
காலம்..
எறிந்துகொண்டிருக்கிறார்கள்
திசைகளின் மீது தம் துயரை
மீதமிருக்கும் வாழ்வும்
ஒவ்வொரு சொல்லாக
வற்றிப்போகிறது..

மரணத்தின் கரைகைள் முடிவின்றி நீண்ட
காலமொன்றில்
கண்ணீர் பெருகி ஓடிய தடயங்களில்
ஏதோ ஒன்றில்
அவர் பயணத்தின் எச்சமும்
மிச்சமிருக்கக்கூடும்

ஊர் எரித்த சிதைகளிலிருந்து
உயிர்த்து நடந்தது அவர் நெடும்பயணம்
வாலிபத்தின் பெரும்பொழுதுகள்
அவ்வழி நீளக்கடந்த காலங்களோடே
தேய்ந்தழிந்தன

மீதமிருக்கும் நாட்களோடு
ஓரமாய் ஒரு இருப்பு
கூனிக் குறுகிக் குனிந்து
காணச்சகியாத வாழ்வொன்று
கடந்து வந்த தெருக்களில்
சிந்திய உதிரத்தின் வாடையோடு

கருணையற்ற வெளியொன்றின் நடுவே
தாகம் வாட்டிய மனிதர்களின்
கொடுந்துயரை ஏந்தி அவர்கள் நடந்தார்கள்

தெருக்களில் உறைந்த கண்ணீரை
நதிகளில் மிதந்த துயரை
வனங்களில் அலைந்த தேம்பல்களை
தனித்தே தோள்களில் சுமந்தார்கள்..

தமக்காய் பாடமறுக்கும் மனிதர்களின் சிலுவையையும்
முட்கள் போர்த்திய விரிப்புகளின் மேல்
முன்னொரு பொழுது விரும்பியே சுமந்தார்கள்..

இப்போ
திரும்பி வருவார்கள் என
யாரும் நினைத்திருக்கவே முடியாத்
திசை ஒன்றில் இருந்து
அவர்கள் திரும்பிவந்திருக்கிறார்கள்

தெருக்களில் வதைபடும்
தம் துயரை சுமக்கக்கூடுமென
நம்பிய பலரும்
தெருவுக்கு வரவேயில்லை..

காற்றின் குரலும்
கடலின் கண்ணீரும்
முடிந்துபோகிறது..

கையறு நிலையின் காலமொன்றில்
கடைசித்துளி கண்ணீரும் காய்ந்தபின்பு
வெள்ளிகள் வற்றிய வனத்திடையே
தனித்து நிற்கிறார்கள்..

எல்லாத்திசைகளும் சுடுகின்ற தெருவில்
எந்தத்திசையில் இனி அவர் நடப்பார்..?

#மீள் #தேர்தல் :(

துயர்க்கதை...

பசியாறி அறிந்திராக் கடலொன்றின்
ஆழத்தோடு சூழ்ந்தது துயரம்..
எறும்புகளின் புற்றின் மேல்
வெறுப்புடனும் வன்மத்துடனும்
பொழிந்தது அமிலமழை..
கொடுக்குடன் போராடின
எளிய எறும்புகள்..
கூடி எதிர்த்தன
கொடுமையின் பிரதிகள்..

போர் காலப்புழுதியாய் விரட்ட
கொட்டியது தணற்சாம்பல்..
ஓலச்சட்டையை அணிந்தன
ஊர்கள்..
தெருக்களை எரித்தது கொடிய
பசிவெயில்..
தீரா வஞ்சத்தோடு
எழுந்து கருக்கொண்டு
ஒளியை விழுங்கி
இருளைப்பரவி
முளைத்துப் புடைத்து
வீங்கிப் பருத்தது விதிரேகை..

கடைசி எறும்பும்
குத்திய கொடுக்கோடு
வீழ்ந்து மடிய
வீரம் புதைந்தது காட்டில்
விதையாய் போன
எறும்புகளுக்காய்
முள்ளாய்க் கனத்தது
வரலாறு..

இரவும் அழிய பகழும் அழிய
ஓடிக்களைத்த இரத்த ஆறு
காய்ந்து கறுத்து
காலவடுவாய்
வாழ்வு நெடுகிலும்..

தடங்களில் ஒழிந்திருக்கிறது
பயணங்களின் கதைகள்..
செரிக்கையில் முள்ளாய்
நினைக்கையில் நீறாய்
வார்த்தைகள் முடிவில்லா வானத்தில்
மோதித்திரும்பிட துடிக்கும் பந்தாய்
முடிந்தது பிரளயகாலம்..
முடியாமல் நீள்கிறது
காலங்களின் பேரடுக்கில்
சீழ்பிடித்த புண்ணாய்
துயரம்..

தெருப்படலை திறந்தே இருக்க
போர்ப்புரவி கிளறிய புழுதிக்காட்டில்
தொலைந்தும் தொலைத்தும்
தொலைக்கப்பட்டும்
திரும்பிவராதவருக்காய்
காத்திருந்த கண்கள் தூர
காய்ந்து உப்பாய்ப்போனது
காலக் கிழவியின் கண்ணீர்..

துயர நிலவின் ஒளியில்
நிலமும் நீரும் கலங்கி அழ
காற்றும் வானும்
காலம் புதைத்த
எறும்புகளின்
கண்ணீராய் ஒலிக்கிறது..

இரத்தமும் சதையும் சூழ
முற்றுறாத கதையில்
நீதி
எறும்புகளின்
நூற்றாண்டு அழுகை வாங்கி
முள்ளடர்ந்து மண்டிய
தோலாசனத்தின் மேல்..
மெளனம் ஒரு கடன் காறனைப்போல சொற்களை சேகரிக்க
கவிதைகளை உதிர்த்தபடி மஞ்சல் இலைகள் வீழ்கின்றன...
பூமி வீழ்ந்த பூக்களினால் மணக்கிறது..
கிளைகளில் முடிந்துபோன வசந்த காலங்களை
உதிர்ந்த இலைகள் உக்கிப்போன நரம்பிகளிலிருந்து ஒழுகும் மழைத்துளிகளில் ஒவ்வொன்றாய் மீட்ட
ஏகாந்த வனத்தில் யுகங்கள் அலைகின்றன...
நினைவுகளை விழுங்கியும் செரிக்கமுடியாமல்
விரைகிறது காலம் தன் வழியில்...
நீண்ட வானில் எவருமற்று இருளுக்குள் கரையும்
ஆட்காட்டிக் குருவியின் குரலைப் போன்று இத்தனிமை...
ஏந்திச் செல்லவியலாது அத்துனை சோகத்தையும்
கரைத்துவிடும் எத்தனத்துடன் பகலும் இரவும்...
தங்கிவிடுகின்ற தவிப்புடன் தேய்கிறது மாலைகள்...
மெளனக்குளத்தை பாசிபிடித்த நினைவுகள் காலிடறிக்கலைக்க
தரையுமின்றிக் கடலுமின்றி அலையும்
கடல்மணலில் புதையுன்ட படகுபோல்
மரணத்திற்கும் வாழ்தலிற்கும் இடையில்
துருப்பிடித்துக்கிடக்கிறது இலையுதிர் காலம்...
வாழ்வு ஓர் பனிமலையாய் கரைந்து தீர்கிறது...
எல்லோர்க்குமாய் ஒழுகும் வானத்தின் கீழ்
மழை இப்பொழுதெல்லாம் குழந்தைகளை மட்டுமே நனைப்பதாய்க் காண்கிறேன்...

Tuesday, 6 January 2015வண்ணங்கள் மங்கிய ஓவியச்சிதறல் ஒன்றில்
கையசைக்கிறது காலம்....
தீர்ந்துபோகாத வெயில்ப்பொழுதுகள் மீது
நெடுமூச்சின் ஆவி படர
மென்மயிர்ப் பூனைபோல சிலிர்த்துக்கிடக்கிறது
மனது.....
உன் முத்தங்களின் நினைவுகள் புரையேற
தவித்தெழுகிறது ஆன்மா.....
உனக்கான என் தீராக்குரலோ
வெறுமை இட்டு நிரப்பும் நீயற்ற வெற்றிடத்தின் அழுத்தத்தில் நசியுண்டபடி.....
கடக்க முடியாத வழியின் தூரமாய் ஞாபகங்கள் விரிந்துகிடக்க
அள்ளித்தேக்கிவந்த நினைப்பில் ஒழுகுகிறது
பிரிவின்துயர்.....
அறையப்பட்ட சிலுவையில் மரித்துயிர்த்து
கண்ணீரின் உவர்ப்பில் மாட்டிக்கொண்ட
காயமாய் நேசம்.....
உனக்காய் சேர்த்துவைத்த புன்னகைகளில்
பழுப்பேறிக்கிடக்கின்றன எதிர்பார்ப்புகள்....
மெளனம் வந்தமர்ந்த வீட்டில்
சூரியன் குடித்த சொற்களாய்ப்போயின
நம் உரையாடல்கள்....
நம் புன்னகையின் மரணம் அறிந்து
நீர் பூக்கும் மழைக்காலங்களும்
நீலமாய் விரியும் நெடுவானமும்
ஏதுமுரைக்கா மெளனத்தில்.....
கிழிஞ்சலாகித்தொங்கும் காதலின் நரம்புகளின் மேல் அமர்ந்திருந்து மீட்டுகிறது
திறந்திருந்த ஜன்னல் வழியே நுழைந்துவந்த நிலவு....
கடந்துபோகும் இசையில் வலுக்கத்தொடங்குகிறது
பெருந்தோப்பிலிருந்து தனித்துப்போன கவிதை ஒன்று...


எந்த நதியை நான் குடித்தேன்..
எந்தக் கடலை நீ அருந்தினாய்..
வாழ்வு முடியாமல் நீண்டதே ஓர் கனவொன்றில்..
ஆயிரம் சூரியன்கள் உதித்த அவ்விரவில்தான்
உன் பால் முகத்தை நான் முழுதும் பார்த்தேன்..
என் இரவெல்லாம் அன்று தீர்ந்தன..
நதியொன்றில் நான் கரைந்து கடலொன்றில் மிதந்தேன்..
என் கரையெங்கும் நீயிருந்தாய்..
கொஞ்சம் கவிதைகள் கைகள் நிறையக் கூட இருந்தன..
அள்ளிப்பருகிய கடல் சிந்திய துளிகளில்
நான் பருகி எஞ்சிய உன் முத்தம் வழிந்தது..
ஒருகோப்பை வைனும்
உன் ஒரு துளி புன்னகையும்
என் வாழ்வை நிரப்புமென்று
என் வழிகள் எங்கிலும் நான் அறிந்திராப் புதினம் நிகழ்த்தினாய்..
கால்கள் தொடாத நிலமொன்றை
ஒரு கனவைப்போல நான் பார்த்தேன்..
நீயிருந்தாய் நானிருந்தேன்..
எஞ்சிய யாவும் ஒரு மாயம்போல் தெரிந்தகாட்டில்
உன் காதல் நிறைந்து தழும்பிய கோப்பை என் கைகளில்..
காலமது எங்கோ கரைந்து போனது காற்றில்..
அண்ணார்ந்து பார்த்தேன்
ஓடிக்கொண்டிருந்தன மேகங்கள்..
ஒழுகி வழிந்துகொண்டிருந்தன காலங்கள்..
குனிந்தபோது அத்தனை வேகமாய்
உருகிபோய்விட்டிருந்தன எல்லாப்பனியும்..
நீயில்லை.. முன்பொருகாலம் நாம் குடித்த நேசிப்பின் கடல் இல்லை..
காலியாகிக்கிடக்கிறது உன் முத்தங்களை நிறைத்து
என் கைகளில் வழிந்த கோப்பை...
ஊசியிலை மரங்களின் இலைகள் எல்லாம் இப்போ உதிர்ந்துவிட்டன..
அவற்றின் புன்னகையை பறித்த
துயர்ச்சாம்பல் படிந்த காலத்தைக் கூடவே நானும் கடக்கிறேன்..
பாசி பிடித்துக்கிடக்கிறது உன் கைகளில் வழிந்த
காதலை ஏந்திய வீதிகள்..
வெறுப்பின் பாடலை உரைத்துப் பூத்த மலரில்
உனைப் பார்த்து நானறியேன்..
யாதொன்றின் துயராயும் உனைப்பார்த்து நானறியேன்..
பின் யார் நம் காதலைப் பறித்தது..
நாமருந்திய தேனீரில் கசப்பின் விதைகளை யாரிட்டார்..
வாழ்வை ஒரு இசையைப்போல,
காலங்களை எதிரொலிக்கும் ஓவியத்தைப்போல,
ஊசியிலை மரமொன்றின் துயரறியாப் புன்னகையைப்போல
பருகிக்கொண்டிருக்கையில்
எம் தேனீரில் கசப்பின் விதைகளைப்போட்டவர் யாரோ..
உன் வேரின் அடியில் இருந்து என் காதலைப்பாடிய குயில்
எங்கோ தொலைந்துவிட்டது..
பூக்களில் சிரித்த உன் காதல் உதிர்ந்துவிட்டது..
வானம் மறைத்து நிறைத்த உன் அன்பு வற்றிவிட்டது..
என் நதியின் கரைகளில் இப்போ நீயில்லை,
என் படகின் துடுப்பில் இப்போ உன் விசை இல்லை..
வழ்வு ஒரு சமுத்திரமாய் என் நதியைக் கலக்கையில்
மெதுமெதுவாய் மூழ்கத்தொடங்குகிறேன்..
உன்னைப்போலவே இனியிரு கைகள் வந்தணைத்தால்
நானும் தன் கரைகளில் விட்டுச்செல்லக்கூடும்
என் தடங்களை என்கிறது இரக்கமில்லாக் கடல்..
கரைகளில் உனை ஒழித்துக்
கண்ணீரை நிரப்பிய விதியைச் சபிக்கின்றன
கடலிடையில் போராடும் என் துயர்க்குமிழிகள்..


நினைவு நனைத்த சிறகை உலர்த்தும்போதெல்லாம்
கோதுண்டும் கொத்துண்டும் விடுகின்றன
யாதேனும் சில அழுத்தமான காயங்கள்..
பச்சையங்களைக்குடித்தபின் பட்டமரத்தின் செதில்களையும்
தட்டிப்பார்க்கும் தீவிரத்துடன் காலம்..
இலைகளற்ற காலவெளிக்குள் வதைபடுகிறது தனிமை..
வழிப்போக்கனின் புன்னகைகூட அற்ற தெருவில்
பாதங்கள் முழைத்து நடக்கின்றன
வசந்தம் பூத்திருக்கக்கூடிய காட்டுக்கு..
ஓராயிரம் கவிதைகளில்
அன்பு நழுவி ஓடிக்கொண்டிருக்கிறது..
ஆயினும் எரியும் நாட்களில் பிரியத்தின்
ஒற்றை நீர்த்துளிகூடக்கிடைக்கா வாழ்வு..
நேசிப்பின் தேம்பல்களைக் கவனியாது
நேரமுட்களில் முளைத்து நடக்கும் நாட்களின்
குதியில் மிதிபடுகிறது வாழ்க்கை..
கவனிக்கத்தவறிய காயம் இளைப்பாறத்துடிக்கும் இருக்கையில்
அலட்சியத்தின் முட்கள்..
கடந்துபோகும் காற்றில் வலுக்கத்தொடங்கி
வெளிக்குள் பரவுகின்றன பழைய முகங்கள்..
கடைசித்துளி நம்பிக்கையும் தீர்ந்த
யெளனம் தழைத்த பூங்காவில்
பேச்சை அலங்கரித்துப் பின் பலியிட்டபோதெல்லாம்
சிவப்பாய்க் கசிந்த தீவிரத்தின் சூட்டில்
அன்பு சாம்பலாயானது..
ஒழுகியோடி அலசிய சொற்களில் கழுவுண்டன
அவரவர்க்கான சாய முகங்கள்..
மிச்சமிருக்கும் சொற்களைத்தூவி முகங்களைக்கடந்து
மீண்டுமொருமுறை மெளனத்தின் ஆற்றில் மிதக்கையில்
துயரம் படகாகிவிடுகிறது..
வலித்த கைகளிலோ வந்தமர்ந்து முழைத்துவிடுகிறது
துடுப்பாய் ஓர் கவிதை..

வாழ்வின் பெருமழையே..
என் முற்றத்தில்
என்றைக்குமாய் என் காதலைச் சொரியப் பொழியும் மழையே...
இவ்வாழ்வின் பசுந்தரையை பார்த்தேயிராத மனிதரையும் நனைக்கும் மழையே,
கரைந்தும் கதறியும் நனைந்தும் சிதறியும் துளிகளாய் உருமாறியும் உயிரோடு உயிர் பேசுவோம் வா மழையே..
என் கரையெல்லாம் நிறைத்து நிறைந்திருக்கும் ஆதிக்காதல் சுமக்கும் வானமும் சாகுமோ சொல் மழையே..
அவளற்ற பொழுதுகளில் நீ பெய்த துளிகளில் நான் நனைந்தே அறியேன் என்று
முன்பொரு நாள் உன்தோழியாய் இருந்த என் தோழியின் காதல் அறியுமோ சொல் மழையே..
வாழ்வை ஒரு கவிதையாய் கடக்கும் மனிதர்களைப்பாட வந்த மழையே,
உன் கானமெல்லாம் கசிந்துருகுகிறது பூமி..
அப்பாடலில் என் கூரை நனைந்து அன்றொரு நாள்
நீ நனைத்த என் காதல் ஊரும்போதெல்லாம் உடுத்தியிருக்கும் துயர ஆடைகள் நனைந்தழுகின்றன..
யாரறிவார் உன் துளியுள் கலந்து கரைந்த என் துயரை யாரறிவார்..
என்னையும் அவளையும் நனைத்த உன் பழைய மழை கரைந்து மறைந்து ஏதோ ஒர் பெருங்கடலில் இன்று மிதக்கக்கூடுமோ என் நினைவுகளைப்போல..
நம் மோனத்தில் கலந்து கசிந்து காற்றாய் மிதந்த அந்த வானத்தை இன்று தொலைத்துவிட்டோம்..
யாரும் கேட்டுணராப்பாடலை நீயும் அவளும் நானும் நிலவும் ரசித்திருக்கப்
பூத்திருந்த மலரொன்றின் புன்னகை மெல்ல இறங்கி அவள் கரங்களில் தவழ்ந்து என் தலை தடவிய நொடியில்
சிலிர்த்த இரவும் பூங்காவின் இருக்கையும்
இன்றும் ஏந்தியிருக்கக்கூடும் அப்பூவின் புன்னகையை..
என்னையும் உன்னையும் அவளையும் தழுவிப்
பின் வெட்கத்தில்
வானத்தில் துணையின்றி அலைந்துகொண்டிருந்த
ஒற்றை வெண்மேகத்தையும் சுமந்துகொண்டு
நழுவி ஓடிய தென்றல் இன்று அவள் குழந்தையை தழுவிக்கொண்டிருக்கக்கூடும்..
யாரறிவார் அந்த ஒற்றைமேகம் இன்று என் தோழில் கனப்பதை..
யாரறிவார் அப்பழைய பூங்காவின் இருக்கையில் என் தனிமையை..
கோடை ஒன்றில் மழையை பொழிந்த அந்தக் காதல் எங்கென்று நீயறிவாயா..
என் சோலை முழுதும் வேர்களை நனைத்த நேசிப்பின் நதி ஊற்று எங்கென்று நீயறிவாயா..
என் தோப்பில் இன்று குயில்கள் இல்லை..
கூவி அழைக்கக் குரல்களும் இல்லை..
காதல் வற்றிய நதி செத்துக் கோடை பாய்கிறது அதன் தடமெங்கும்..
மழையே..வாசம் கொண்டு வந்து முன்பொருநாள் பூத்திருந்த என் வசந்தத்தில் நனைத்து நனைத்து நனைந்த மழையே..
என் தேகம் எங்கும் நுழைந்து
ஆன்மாவின் அருகிருந்து
காதலைப்பொழிந்த அப்பழைய வசந்தத்தைக்
கண்டால்
இக்கவிதையை பொழிந்துவிடு என் பிரிய மழையே..

ஒட்டாத வாழ்வு...


------------
யாருமற்ற நதியோரம்
நானும் 
நாலைந்து இருக்கைகளில்
தனிமையும்..
நான் முற்றிலும் தீர்ந்துவிட்டதாய்
நதியிலும் நதிக்கரையில்
உதிர்ந்த சருகுகளிலும்
மிதந்தபடி உரைக்கிறது
மனது
காலம் கடந்து செல்கிறது
நான் மட்டும்
நகரமுடியாமல்
ஏதோ ஓர்சந்தியில்..
பழைய வாழ்க்கை
இழையோடக்
கண்கள் பனிக்கிறது..
வந்தமர்ந்த கிளையில்
வாழ்ந்ததற்கான அடையாளங்களோ
ஞாபகங்களோ எதுவுமில்லை..
கட்டிடக் காட்டிடையில்
தொலைந்தே போயின
காலடித்தடங்கள் யாவும்..
நிலமோ என் நிழலை
வெறுக்கிறது
நதிகளோ என் பாடலை
மறுக்கின்றன
தெருக்களிலோ என்
சுவடுகள் பதியவில்லை
ஒட்டிக்கொள்ளும்படியாக
இந்தமண்ணிண் வாசனைகளில்
எதுவுமேயில்லை..
பனிமூடிய நாட்களெல்லாம்
பட்டுக்கொள்ளாமலே கடக்கின்றன..
எருக்கலைக்கும்
நாயுன்னிக்கும்
புரிந்த என் மொழியோ
பைன் மரத்திற்கும்
செயின் நதிக்கும்
புரியப்போவதே இல்லை..
மனமும் உடலும்
பிரிந்தேகிடக்க
சலிக்காமல் வீசும்
குளிர்காற்றிலோ
சலனங்கள் எதுவுமில்லை
விலகித்தூரமாய்
வாழ்விருக்க
நொருங்கிய பாத்திரமாய்ச்
சிதறிக்கிடக்கிறேன்
முகமற்ற அந்நியனுக்கு
அடையாளங்களேது
உயிர் எரிக்கும் துயரெழ
வானத்தின் கீழே பிரமாண்டமாகிறது
வெயில்காட்டின்
ஞாபகச் சுமை...

இடிபாடுகளினுள் கூடுகட்டும் பறவை..


-----------------------
காலம் இருள்கவிழ்ந்து
ஒரு யுக நீட்சியாய் நகர்கையில்
மூடுண்ட பிசாசு வெளியொன்றினுள்
வாழ்வு வியாபித்திருந்த பொழுதுகளை
ஒருதொகை நினைவுகளை
சுமக்க இயலாமல்
சுமந்திருந்திருக்கிறது
இடிபாடுகளினுள் கூடுகட்டும்
பறவை
சிதைக்கப்பட்ட நிலமொன்றின்
மறக்கப்பட்ட பிரதிநிதி அது
வாழ்வின் மீதான ஆசை
ஏதுமில்லை அதற்கு
ஆயினும் வாழ்தல்
மரணத்தால்
விதிக்கப்பட்டிருக்கிறது..
தோப்பிலிருந்த
பறவைகளை எல்லாம்
பிடுங்கி வீசி எறிந்துவிட்டது
போர் கொட்டிய பாழ்மரணம்
எஞ்சியவையும் சுயம் சிதற
தூரப்பறந்துவிட்டன
கலங்கித்ததும்பும் விழிகளில்
துயரத்தை விரித்து
வாழ்வை தனியான வயலொன்றில்
விதைக்கும்
ராட்சதக்கவலைகளோடிருக்கிறது
அப்பறவை
யாருமில்லாப் பறவைக்கு
கைவிளக்கு வெளிச்சங்களையும்
அணைத்துவிடுகின்றன
மழைக்கால ஒழுக்குகள்
நதியில் விழுந்த துளிகளாய்
கண்ணீரெல்லாம்
வாழ்வு முடியும் திசையின்
தொலைவு வரை
சலிக்காமல் துரத்துகிறது
காலங்களை மீறியதோர் சாபம்
இறுகிப்போன பறவையின்
மெளனம் கலைத்து
மரணம் கைவிட்டுச்சென்ற
காலத்தின் கடைசியிடம்
பேச்சிடைப்பொருளானபோது
கோபக் கவளங்கள் நெஞ்சிறங்க,
அழிவின் அலறல் தெறித்துச்சிதறிய
தோப்பில்
விசமுட்கள் துளைத்த தாய்ப்பறவை
தன்மடியில் இருத்திவைத்து
இறக்குமுன் இட்ட முத்தம்
இரத்தச்சிவப்பென ஒளிர்ந்தது
அதன் அலகுகளில்
கேட்க மட்டுமே பழக்கப்பட்ட நானும்
செவிகளாக மட்டுமாயினேன்
பறவையின் துயரிற்கு...
வக்கிரங்களை வாரியெடுத்து 
சாகசக்காற வெளியில் 
நீதியின் சாம்பல் மேடுகளில் 
பூத்துத் திளைக்கும் உலகே..!

காற்று ரணமாய்க் கிழிக்கையில் 
எடுத்துச்செல்ல இயலாத பெருந்துயரத்தை - தம் 
மெலிந்த சிறகுகளில் சுமந்திருக்கும் 
பறவைகளின் கதையை 
எந்தக்காலத்தின் அறைகளுக்குள் 
ஒளித்து வைக்கப்போகிறாய் ...?

சாக்காட்டுத் தேசங்களிலிருந்து 
துயர் கசியும் பறவைகளின் பாடலை 
யாரேனும் உணர்ந்ததாய் தெரியவில்லை,
அன்பின் பாடல்களைக்கேட்டறியா 
செவிட்டு மனிதர்களுக்கிடையில்
ஒடுக்கப்படும் தேசங்களின் பாடல் மோதி அலைகிறது...

எம் நிழல்களில் உழல்வனவோ 
விடுதலையை தொலைத்த 
வெம்மையின் எச்சங்களாயிருக்கையில், 
அழுதழுது கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்க 
வெயில் நதியில் மிதக்கும் 
கைவிடப்பட்ட தேசங்களின் மனிதர்களிற்காக 
ஒரு துளி நிழலை எங்கே பெறுவோம்..? 

தீயெரித்த வனமொன்றில் சிதறிய பறவைகள் நாம்
எம் தாயிருந்த கூடும் அற்றுப்போன போது 
பொருளற்ற இருட்பாடல்களை பின்னிக்கொண்டு 
அதனிடையே நெடுந்தூக்கத்தில் உறைந்து போனோம்..

எங்கள் கூடுகள் பற்றியும் 
கூரிய சொண்டுகள் கவ்விய 
எம் குஞ்சுகள் பற்றியும் 
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை.. 
கிளையில்லை, 
ஆகாயமில்லை, 
ஒரு கூண்டு கூட இல்லை.. 
எம் பழைய முகங்கள் எதிலும் இல்லை, 
குருதி தோய்த்து வரைந்தவை எல்லாம் 
பட்டுப்போன வனமொன்றில்...

தேய்ந்தழியக் காத்திருக்கும் 
நோய் கொண்ட வரலாற்றுடன் 
காலங்காலமாய் கடந்துவந்த வாழ்வின்
அடையாளங்கள் எதுவுமின்றி
பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்
தொலைந்துதான் போவோமோ..?

வலி சுமக்கும் பறவைகளே..! 
உலகத்தில் எமதிருப்பையும் உரைப்பதற்காய் 
தனித்த சிறகுகளுடன் எழுந்தவர்கள் நாங்கள்
எல்லாம் கடந்து விட்டன.. 
காற்றிப்போ எம் பக்கம் இல்லை, 
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி 
கடன் வாங்கி நாமும் அழவேண்டும்.. 

திரையை இழுத்து மூடிக்கொள்ளும் நீதியின் 
முகத்தில் மோதிய இயலாமை...
மிகுந்த நம்பிக்கைகள் சிதைந்த ஏமாற்றங்கள்... 
குருதியின் சுவை கொண்ட கண்ணீர் ... 
வெளிறிய ஆகாயம் அதிரும் ஒப்பாரிகள்...
கனவுகளைப் புசித்துப் பெருகும் இருள்...
காலியான தேநீர்க்கோப்பையிலிருந்து வரும் 
இறந்த காலத்தின் வாசனை.. 
ஏகாந்தத்திலும் அதற்கு அப்பாலும் கசியும்
ஏக்கங்களுடன் அடைபடும் வாழ்க்கை...

என 

அகண்ட இவ் வெறுமைவெளிகளை கடக்கையில் 
ஒரு சொட்டு சுதந்திரத்தைக்கூட யாசிப்பவர்களுக்கு 
இந்த உலகம் மிகத் தனிமையானதுதான்... 
  
ஒ வலி சுமக்கும் 
எம் பிரிய பறவைகளே..!  
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி 
கடன் வாங்கி இனி நாமும் அழவேண்டும்..

வக்கிரங்களை வாரியெடுத்து
சாகசக்காற வெளியில்
நீதியின் சாம்பல் மேடுகளில்
பூத்துத் திளைக்கும் உலகே..!
காற்று ரணமாய்க் கிழிக்கையில்
எடுத்துச்செல்ல இயலாத பெருந்துயரத்தை - தம்
மெலிந்த சிறகுகளில் சுமந்திருக்கும்
பறவைகளின் கதையை
எந்தக்காலத்தின் அறைகளுக்குள்
ஒளித்து வைக்கப்போகிறாய் ...?
சாக்காட்டுத் தேசங்களிலிருந்து
துயர் கசியும் பறவைகளின் பாடலை
யாரேனும் உணர்ந்ததாய் தெரியவில்லை,
அன்பின் பாடல்களைக்கேட்டறியா
செவிட்டு மனிதர்களுக்கிடையில்
ஒடுக்கப்படும் தேசங்களின் பாடல் மோதி அலைகிறது...
எம் நிழல்களில் உழல்வனவோ
விடுதலையை தொலைத்த
வெம்மையின் எச்சங்களாயிருக்கையில்,
அழுதழுது கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்க
வெயில் நதியில் மிதக்கும்
கைவிடப்பட்ட தேசங்களின் மனிதர்களிற்காக
ஒரு துளி நிழலை எங்கே பெறுவோம்..?
தீயெரித்த வனமொன்றில் சிதறிய பறவைகள் நாம்
எம் தாயிருந்த கூடும் அற்றுப்போன போது
பொருளற்ற இருட்பாடல்களை பின்னிக்கொண்டு
அதனிடையே நெடுந்தூக்கத்தில் உறைந்து போனோம்..
எங்கள் கூடுகள் பற்றியும்
கூரிய சொண்டுகள் கவ்விய
எம் குஞ்சுகள் பற்றியும்
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை..
கிளையில்லை,
ஆகாயமில்லை,
ஒரு கூண்டு கூட இல்லை..
எம் பழைய முகங்கள் எதிலும் இல்லை,
குருதி தோய்த்து வரைந்தவை எல்லாம்
பட்டுப்போன வனமொன்றில்...
தேய்ந்தழியக் காத்திருக்கும்
நோய் கொண்ட வரலாற்றுடன்
காலங்காலமாய் கடந்துவந்த வாழ்வின்
அடையாளங்கள் எதுவுமின்றி
பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்
தொலைந்துதான் போவோமோ..?
வலி சுமக்கும் பறவைகளே..!
உலகத்தில் எமதிருப்பையும் உரைப்பதற்காய்
தனித்த சிறகுகளுடன் எழுந்தவர்கள் நாங்கள்
எல்லாம் கடந்து விட்டன..
காற்றிப்போ எம் பக்கம் இல்லை,
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி
கடன் வாங்கி நாமும் அழவேண்டும்..
திரையை இழுத்து மூடிக்கொள்ளும் நீதியின்
முகத்தில் மோதிய இயலாமை...
மிகுந்த நம்பிக்கைகள் சிதைந்த ஏமாற்றங்கள்...
குருதியின் சுவை கொண்ட கண்ணீர் ...
வெளிறிய ஆகாயம் அதிரும் ஒப்பாரிகள்...
கனவுகளைப் புசித்துப் பெருகும் இருள்...
காலியான தேநீர்க்கோப்பையிலிருந்து வரும்
இறந்த காலத்தின் வாசனை..
ஏகாந்தத்திலும் அதற்கு அப்பாலும் கசியும்
ஏக்கங்களுடன் அடைபடும் வாழ்க்கை...
என
அகண்ட இவ் வெறுமைவெளிகளை கடக்கையில்
ஒரு சொட்டு சுதந்திரத்தைக்கூட யாசிப்பவர்களுக்கு
இந்த உலகம் மிகத் தனிமையானதுதான்...
ஒ வலி சுமக்கும்
எம் பிரிய பறவைகளே..!
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி
கடன் வாங்கி இனி நாமும் அழவேண்டும்..ஓர் குளிர் நாளில் வெயிற்சுமையுடன் 
மெளனமுறங்கும் அக்கடற்கரைப்பூங்காவில் வந்தமர்ந்தேன்.. 
என் கைகளில் கனக்கின்ற ஞாபகங்களில் சிறிதை
காற்றில் மெதுவாய் இறக்கிவைத்தேன்..
எம் கதைகளை காற்று இரைந்து பேசத்தொடங்கியது..
மரங்களுடனும் செடிகளுடனும்
முத்தங்களைப்பரிமாறிக்கொண்டிருந்த மாலையுடனும்
அது கண்ணீருடன் பேசத்தொடங்கியது..
வெள்ளையின மனிதர்களின் கதவுகளை மோதி
அலைந்துவந்த காற்று பேசிக்கொண்டே இருந்தது..
யூகலிப்ஸ் மரத்தின் கீழ் நடுத்துண்டு உடைந்த இருக்கையும்
நரம்பு மட்டும் எஞ்சிய பழைய வசந்தம் ஏதோ ஒன்றின் முடிவில்
உதிர்ந்த மஞ்சல் இலைகளும்
சலிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தன..
கடலின் பின்னால் புதைந்த என் சந்ததியோடு உதிர்ந்த இலைகளுக்கு இப்போ நரம்புகளும் உக்கத்தொடங்கியிருக்கும்..
நெஞ்சடைத்தது துயரெழுந்து..
என் கைகளில் கனக்கின்ற ஞாபகங்களில் மிகுதியை கொந்தளித்துக்கொண்டிருந்த கடலலைகளின் மேல் நீந்தவிட்டேன்..
அலைகளின் மேல் மிதந்த அந்திச்சூரியனும் கடலும் காயம் மிகுந்து இரத்தச்சிவப்பாயின..
மேகங்கள் உடைந்துபோய் அழுதன
நான் என்ன செய்வேன்..
இந்த ஞாபகங்களைத்தானே என் மண்ணிலிருந்து எடுத்து வந்தேன்..
பிறந்தபொழுதும் தவழ்ந்தபொழுதும் நடந்தபொழுதும்,
பின் வளைந்த முதுகுகளில் வாழ்வை சுமந்துகொண்டு அகதியாய் அலைந்த போதும்
எம் தலைமுறையுடன் கூடவே வந்தது போர்..
எம் பாடல்கள் வாளொன்று கிழித்த உடலொன்றிலிருந்து ஒழுகிய இரத்தம்போல் அல்லாமல்
திராட்சையின் சுவையோடு இசைந்திருக்கவும் முடியுமோ..?
நாங்கள் காவி வந்தவற்றை உங்கள் தாழ்வாரங்களில் விரிப்பதாக முறைக்காதீர்கள்..
அவை நீங்கள் எங்கள் வனங்களில் தூவிய முட்செடிகளின் கனிகள்தானே..
காலம் ஓர் திருப்பத்தில் கவிழ்த்தது எம் இனத்தை..
அதன் ஊழிக்கிடையில் மூழ்கிப்போனது எம் மூன்று தசாப்தப் பெருங்கனவு..
மிச்சமிருக்கும் தலைமுறைக்கோ மிதிபட்டபடி ஓர் கனவு..
முட்களில் இருந்து தனை மீட்க
வனாந்தரங்களைக் கடந்து
ஓர் தேவதூதன் வருவான் என்று சொன்னது
என் வாசங்களில் இடறிய ஏதோ ஓர் றோசாப்பூ..
காலங்களை எண்ணிக்கொண்டிருந்தபோது மாலை வந்துவிட்டது உதிர்வதற்கு..
பாவம் அந்த றோசாப்பூ..
காற்று என் தலைமுறையின் கனவிற்காய்
துயருடனே இரைந்துபாடுகிறது..
கடல் அழுதுவடிகின்றது..
நான் உதிர்ந்து கிடக்கும் அந்த மஞ்சல் நிற இலைகளின் நரம்புகளுக்கிடையே
அலையும் என் புதைந்த சந்ததியிடம் மண்டியிட்டுக்கொண்டிருக்கிறேன்..
தொலைவாய் ஓர் பேருந்தின் இரைச்சலில்
என் நிகழ்காலம் விழிக்கிறது..
எழுந்து நடக்கிறேன்..
முகத்திலும் மார்பிலும் துரத்தி வந்தமர்ந்து அந்நியன் என்கிறது துருவக்குளிர்..
நானோ அத்தெருவில் அனாதையாய் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறேன்...