Pages

Saturday 25 August 2012

பேனாவில் இருந்து வடியும் இரத்தத்துளிகள்...


அண்மையில் பிரான்சின் வெயில்நாளொன்றில் பாரிஸின் மையப்பகுதியில் வெள்ளையினத்தவர்களின் நடுவே உலகெங்கும் சிதறி இருக்கும் என் இனத்தில் இருந்து தெறித்த ஒரு துளியாக இலக்குகள் எதுவுமின்றி நான் அலைந்துகொண்டிருந்தேன்....என் மொழியின் சுவடுகளே இல்லாத சனசந்தடிமிக்க அந்த நகரத்தில் புள்ளிகளுடன் புள்ளியாய் வெள்ளைகளின் நடுவே நாடிழந்த ஒரு அகதித்தமிழனாய் நான் நின்றுகொண்டிருந்தேன்....நடமாடும் பொம்மைகள்போல் விளையாடிக்கொண்டிருந்த வெள்ளையினக் குழந்தைகளின் புன்னகையில் மனதைப் பறிகொடுத்தபடி பொன்னிறத்தில் அமைந்த அந்த அற்புதமான மாலைப்பொழுதை நான் அனுபவித்துக்கொண்டிருந்தபொழுது விளையாட்டில் தன்னைமறந்த குழந்தை ஒன்று திடீரெனத் தவறி அங்கிருந்த சிமெண்ட் நிலத்தில் விழுந்துவிட்டது.காலில் சிறிதாக அடிபட்டுவிட்டிருந்தது.வெயில் நாளென்பதால் இரத்தம் நிற்காது வழிந்தோடிக்கொண்டிருந்தது.கணப்பொழுதில் அந்தக்குழந்தையை பலர் மொய்த்துவிட்டனர்.சில நிமிடங்களில் அம்புலன்ஸ் வண்டி ஒன்று அவ்விடத்திற்க்கு வந்து சேர்ந்துவிட்டது.ஒரு பெருந்துயர்க் காட்சி அப்பொழுது என்மனதில் விரிகிறது.2009 ஆம் ஆண்டின் ஆரம்பகாலங்களில் இப்படி எத்தனை எத்தனை ஆயிரம் எங்கள் குழந்தைகள் இரத்தம் சிந்தியபடி நிலத்தில் கிடந்தார்கள்.எந்தத்தப்பும் செய்யாத அந்தக் குழந்தைகளின் கண்ணீருடன் கூடவே கசிந்த நீதியினதும்,மனச்சாட்ச்சியினதும் ஓலங்களில் தோய்ந்து மூச்சடைத்துப்போய்க் கிடந்தது பூமி..வீரிட்டுக் கதறி அழுத எம் குழந்தைகளின் ஓலங்கள் உலகின் காதுகளை அடையும் முன்னரே வீரியமிழந்து காற்றுடன் கரைந்துபோயின...எங்கள் குழந்தைகளை அரவணைக்கவோ,அவர்களின் காயங்களுக்கு கட்டுப்போடவோ இந்தக் குழந்தைக்கு இருந்ததுபோல் அப்பொழுது யாரும் அங்கிருக்கவில்லை.அநாதையாகத் தெருக்களில் வீசியெறியப்பட்டு இரத்தம் சிந்தியபடி எங்கள் குழந்தைகள் கிடந்தனர்.இரக்கமற்று கண்களை இறுகமூடிக்கிடந்தது உலகம்.

பிஞ்சுக்குழந்தை மலர்விழி.....அண்ணா என்றழைக்கும் அழகிய மழலைக்குரலுக்கு சொந்தக்காறி.இனிய ஒரு சங்கீதம்போல அலைபேசியினூடு ஒலிக்கும் அவள் குரலில் மயங்கி மணித்துளிகளை மறந்து நான் பேசிக்கொண்டிருப்பேன்...அவளின் குழைவான சொற்கள் என் செவிகளில் விழும்போதெல்லாம் சிறகடித்துப்பறக்கும் பல்லாயிரம் வண்ணாத்துப்பூச்சிகளின் நடுவே என் மனம் மிதந்துகொண்டிருக்கும்...தெறித்து விழும் அவள் மழலைமொழியில் என் பால்ய காலங்களின் பிம்பங்களை நான் தரிசிப்பேன்...பின்னொருநாளில் உயிரை நடுங்கவைக்கும் குண்டொலிகளின் நடுவே மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துப் பார்க்கும்போது செல்பட்ட தன் கால்களில் ஒன்று துண்டாடப்பட்டு வெற்றிடமாக இருப்பதைப்பார்த்து எப்படித் துடித்திருப்பாள் அந்தப் பிஞ்சுமகள்...ஒற்றைக்காலுடன் அவள் உயிர்வாழ்வதைக்கூடப் பொறுக்கமுடியாத சிங்களம் அவள் கால்காயம் ஆறமுன்னரே கொத்துக்குண்டால் தலைசிதற சாகடித்தது....எத்தனைதடவை வெடித்துச் சிதறி இருக்கும் புத்தனின் இதயம்...இப்பொழுதெல்லாம் அண்ணா என்ற வார்த்தையை எந்தக்குழந்தையிடமிருந்து கேட்டாலும் சொற்களில் அடங்கா வலியுடனும் தவிப்புடனும் துண்டாடப்பட்ட தன்கால்களைப் பார்த்த மலர்விழியின் முகமே மனதில் விரிந்து என் இதயத்தை சாகடிக்கிறது....

சர்மிலா அம்மம்மாவின் மடியில் தூங்காமல் ஒருபோதும் உறங்கிப்போனதில்லை..கண்களில் வியப்பும்,புதினமும் விரிய விரிய அம்மம்மாவின் கதைகளைக் கேட்டபடி ஆனந்தமாய் உறங்கிப்போகும் குட்டி உலகம் அவளுடையது.அவள் புன்னகையிலும்,குறும்புத்தனங்களிலும் சிங்களம் என்ன குற்றத்தைக் கண்டதோ...வயிறு பிளந்து குடல் வெளித்தள்ள செத்துக்கிடந்த அம்மம்மாவின் பிணத்திற்க்குப் பக்கத்திலேயே தனியாகக் கிடந்த அவள் தலை என் கண்ணெதிரே தெரிகிறது...இனிக்கதை கேட்க முடியாதே என்று தனியே கிடந்த அந்த முகத்தில் தெரிந்த ஏக்கத்தையும்,தவிப்பையும் எந்த ஒரு இதயமுள்ள மனிதனாலும் இலகுவில் கடந்து சென்றுவிடமுடியாது...

கந்தக நெடி நிரம்பிய ஒரு மாலைப்பொழுதில் முள்ளிவாய்க்காலில் பங்கர் ஒன்றின் அவிச்சலுக்குள் பசிமயக்கத்தில் நினைவிழந்துகொண்டிருந்தால் சின்னஞ்சிறுமி ப்ரியா..பசியோடு துடித்துத்துவண்டு விழுந்துகொண்டிருந்த பிஞ்சுக்குழந்தையின் முகத்தைப் பார்க்கமுடியாமல் மழைபோலப் பொழிந்துகொண்டிருந்த கொத்துக்குண்டுகளின் நடுவே கால்வயிற்றுக் கஞ்சியாவது காய்ச்சலாம் என அரிசி தேடிப்போன தந்தையின் தலையை நெஞ்சில்துளி ஈரமில்லா சிங்கள அரசு அனுப்பிய சிப்பாய் ஒருவனின் தோட்ட துளைத்த செய்திகூடத்தெரியாமல் அப்பாவந்துவிடுவார் என்று பிஞ்சின் பசிபோக்க சொல்லிக்கொண்டிருந்த குடும்பத்தின் பசியை அவர்கள் இருந்த பங்கரின் மேல் எரிகுண்டைப்போட்டு மொத்தமாகவே அணைத்துவிட்டிருந்தது சிங்களம்...இப்பொழுதெல்லாம் கொதிக்கும் உலையில் பசியால் சோர்ந்து சோர்ந்துபோகும் ப்ரியாவின் பிஞ்சுமுகத்தின் பிம்பமே ஆடி ஆடி மேலெழுந்துவந்து அடங்கிப் போகிறது...என் உணவுக்கோப்பை முழுவதும் அவளின் நிறைவேறாத பசியே நிறைந்து போய்க்கிடக்கிறது...

சின்னஞ்சிறுமி அகிலா சிங்கள ராணுவத்திடம் தன் தந்தைக்காக மன்றாடிக்கொண்டிருந்தபோது நாங்கள் உலகின் வீதிகளில் கதறி அழுது கையாலாகதவர்களாக திகைத்துப்போய் நின்றுகொண்டிருந்தோம்...வல்லரசுகளின் பாதங்களை எங்கள் எல்லோரது கண்ணீரையும் ஒன்றாக்கி கழுவினோம்...வீதிகளை மறித்து எம் தேசத்து சேதிகளை கத்திக்கதறி உரைத்தோம்...எம் கண்ணீர்தான் காய்ந்துபோனது...எம் குரல்வளைதான் தேய்ந்துபோனது...சோர்ந்துபோய் நாங்கள் நின்றபோது எங்கள் குழந்தைகளின் உடல்களின்மேல் சிங்களத்தின் ஊர்திகள் ஊர்ந்துகொண்டிருந்தன...ஒரு தலைமுறை புதைக்கப்படுவதை மெளனமாய்,இயலாதவர்களாய் நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்....நாங்கள் சக்தியற்றவர்களாக நின்றோம்...எங்கள் பலம் ஒரு எல்லைவரைதான் இருந்தது..அதைத்தாண்டி எதையும் செய்ய முடியாத இயலாதவர்களாக இருந்ததுதான் எம் வாழ்நாட்களில் இனி எப்பொழுதும் மறக்கமுடியாத ஒரே ஒரு குற்றவுணர்ச்சியாக வரலாறு முழுக்க எம்மை வதைத்துக் கொண்டிருக்கும்..

ஒற்றைவரியைக்கூட எழுதமுடியாமல் எம் கவிஞ்ஞர்கள் பலரின் பேனாக்களின் வழியே இன்றும் ஓலங்களே இறங்குகின்றன....அவலமாக செத்துப்போன எம் குழந்தைகளின் கண்ணீர்த்துளிகள் பேனாமையாய்க் கரைந்தோடுகின்றன....இன்னும்கூட இரக்கமின்றி,எந்தவிதக்குற்றவுணர்வுமின்றி,கொஞ்சம்கூட வெட்கமின்றி எங்கள் எழுத்தாளர்கள் பலரின் பேனாக்கள் தங்கள் குழந்தைகளின் குரல்வளையை நெரித்த கொலைகாரர்களின்குரலாய்ப் பேசுகின்றன...தம் உறவுகளின் மேல் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் இனப்படுகொலையை,தம் சகோதரிகளின் மேல் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளை,எமதுமக்கள் சொல்லவே வாய்கூசும் எத்தனையோ உண்மைகளை தங்கள் குழந்தைகளின் புதைகுளிகளின்மேல் நின்றபடி நியாயப்படுத்துகின்றன....வெட்கமற்ற உங்கள் எழுத்துக்கள் இந்த உலகில் இன்னும் விற்றுத்தீர்ந்துகொண்டிருப்பதுதான் செத்துப்போன எம் குழந்தைகளை இன்னுமொருமுறை சாகடிக்கிறது,புதைக்கப்பட்ட என்னினத்தை மீண்டுமொருமுறை புதைக்கிறது....பாடல்களையும்,ஆடல்களையும்,திரைப்படங்களையும் எட்டுக்கோடி தமிழர்களின் ஊடகங்கள் ஒளிபரப்பிக்கொண்டிருக்க தெருக்கோடிகளில் நின்றபடி எங்கள் கண்ணீரைப் பதிவுசெய்ய நாங்கள் எப்பொழுதும் சில வெள்ளைமனிதர்களின் ஊடகங்களை தேடிப்போகவேண்டியிருக்கிறது....எங்கள் குழந்தைகளின் ஓலங்கள்,எங்கள் சகோதரிகளின் கண்ணீர்கள்,எங்கள் அண்ணண்களின் கண்களில் தெரிந்த இயலாமைகள்,ஏக்கம்கள்,மரணத்தின் நிழல்கள் என எங்கள் அவலம்கள் எல்லாம் நல்லிதயம் படைத்த பல வெள்ளையின மனிதர்களின் பேனாக்களில் இருந்து இன்றும் இரத்தமாய்க் கசிந்துகொண்டிருக்கின்றன...எங்கள் குழந்தைகள் சிந்திய இரத்தத்தை சுவைத்தபடி இரக்கமின்றி எழுதிக்கொண்டிருக்கும் என் இனத்தில் தவறிப்பிறந்தவர்களே...உங்கள் மரணம் எழுதப்படும் கடைசி நாளில்,நீங்கள் எழுதியவைகள் மரணவேதனையாக உங்களை சூழ்ந்துகொள்ளும் ஒரு நாளில்,எங்கள் குழந்தைகளின் கண்ணீரை எதிர்கொள்ளமுடியாமல் கூனிக்குறுகிப்போய் நிற்பீர்கள்...ஒரு பெரும் தரித்திரமாகவே வரலாற்றில் உங்கள் இருப்பு எழுதப்படும்...

முள்ளிவாய்க்காலுடன் என் இனம் நிம்மதியான தூக்கம் இழந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன...எப்பொழுதும் காதோரங்களில் கேட்டுக்கொண்டிருக்கும் ஓலங்களுடனேயே ஆரம்பிக்கின்றன எங்கள் நாட்கள்..தலையணையின் அடியில் தலையை இழந்த சர்மிலா எப்பொழுதும் என்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறாள்...அகிலாவின் அழுகை ஒலி என் படுக்கை எங்கும் நிரம்பிக்கிடக்கிறது...காணாமல்போன தன் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் அகிலாவின் முகத்தைப் பார்க்கும் தைரியம்கூட எனக்கில்லை...ஒருகாலம் புன்னகையும்,கலகலப்பும்,உறவுகளும் நிரம்பிக்கிடந்த அவள் வாழ்க்கையில் இப்பொழுது ஆத்திரமும்,அழுகையும்,தனிமையுமே நிறைந்துகிடக்கிறது...அகிலாவைப்போல் ஆயிரம் ஆயிரம் அகிலாக்களின் புன்னகைகள் முள்ளிவாய்க்காலுடன் பறிக்கப்பட்டுவிட்டன...எம் தங்கைகளின் கண்ணீரால் எழுதப்படுகின்றன இலங்கைத்தீவின் சாபங்கள்...அணைக்கமுடியாத விடுதலை நெருப்பை அணைக்கத்துடித்த ஆக்கிரமிப்புக்கரங்கள் ஒரு இனத்தின் குரல்வளையை நெரித்துக்கொன்றுவிட்டுக் கொக்கரிக்கிறது...பேசமுடியாத ஊமையாய் ஆக்கப்படிருக்கிறது ஈழத்தில் என் இனம்...

எங்களுக்கென்றொரு தேசம் இருந்தது....எங்களுக்கென்றொரு கூடிருந்தது...படுத்துறங்க மரநிழல் இருந்தது...நிம்மதி என் தேசத்து நிழலில் படுத்துறங்கியது...இன்று வெறுமையும்,களைப்பும்,துயரமுமாய் என் தேசத்து வீதிகள் வெறித்துக்கிடக்கின்றன....வன்னியின் பொட்டல்வெளிகளில் அணலாய் எரிக்கும் துயரங்களிலும்,அடக்குமுறைகளிலும் இருந்து ஆவியாகின்றன எம்மக்களின் கண்ணீர்த்துளிகள்...பள்ளிபுத்தகங்களுக்குப் பதிலாக எங்கள் குழந்தைகள் வாழ்க்கைச் சுமைகளை சுமந்தபடி தள்ளாடுகிறார்கள்...அடுத்தவேளை உணவிற்க்கு வழிதேடுவதைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்கமுடியாதபடி அவர்களின் எதிர்காலங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன...எரித்துக்கொண்டிருக்கும் வேதனைகளுடனும் ஆற்றுப்படுத்தவே முடியாத குற்றவுணர்வுகளுடனும் உடல்கூட்டுக்குள் அடைந்துகிடக்கிறது என் உயிர் வாழ்க்கை...

இப்பொழுது எங்கள் குழந்தைகளுக்குத்தேவை வெறும் அரசியல்க்கோசம்களும் வெற்று வசனம்களும் அல்ல...ஏக்கத்துடன் இருக்கும் அந்தக்குழந்தைகளின் கண்களில் நம்பிக்கை ஒளியை விதைக்கும் எதிர்காலத் திட்டங்கள்,தூக்கிவிட ஒரு தோளுக்காக ஏங்கும் அந்தப் பிஞ்சுகளின் கைகளைப் பிடித்து அழைத்துச்செல்லும் இதயங்களின் உதவிகள்,அவர்களின் வாழ்க்கை நேர்கோட்டில் செல்லும் வகையில் அவர்களை தாங்கிப் பிடிக்கக்கூடிய ஒரு கட்டமைப்பைக் கட்டி எழுப்புதல்,இன்னமும் போரின் எச்சங்களில் இருந்து மீளாமல் இருக்கும் எங்கள் பிஞ்சுகளின் விழிகளில் இருக்கும் அச்சத்தைப் போக்கி அவர்களை ஆற்றுப்படுத்தி மீண்டும் கல்வியில் இணைத்து எல்லாக்குழந்தைகளைப் போலவும் ஒரு அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும் திட்டங்கள்,ஏற்கனவே இவற்றைச் செய்துகொண்டிருக்கும் நேர்மையான அமைப்புகளை இனங்கண்டு தனிப்பட்ட வகையில் இவற்றைச் செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்களையும் ஒன்றாக்கி தாயகத்துக்கு உதவும் ஒரு வலிமையான அமைப்பாக புலம்பெயர்ந்தவர்கள் உருவாகுதல் போன்றனவே தற்போது எங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற முக்கியமாகவும்,உடனடியாகவும் நாம் செய்யவேண்டியவைகளாக இருக்கிறது...

எனதருமை உறவுகளே..! எங்கள் குழந்தைகள் பசியால் வாடியபோது,பாலுக்கு ஏங்கியபோது,பங்கர்களின் இருட்டுக்குள் இருந்து வெளிச்சத்தைதேடியபோது,பிணங்களின் நடுவே அனாதையாக நின்றுகொண்டு மனங்களைத்தேடியபோது மனச்சாட்ச்சியே இல்லாத உங்கள் சிலரின் இதயங்கள் காட்சி ஊடகங்களின் முன்னே கால்களை நீட்டியவாறு உணவுக்கோப்பைகளை ருசிபார்த்துக்கொண்டிருந்தன..எந்தவித சலனுமுமின்றி உங்கள் உலகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது....எந்தக்காரணமும் இன்றிக் கொல்லப்பட்ட எம்மக்களைக் காக்க மறந்து எப்படித்தான் வீழ்ந்துகிடந்தீர்களோ..? உறவுகளே...!செத்துப்போனவர்கள் உங்கள் ரத்தம்கள் என்ற சுயநினைவுகூட இன்றி எப்படி இயங்குகிறது உங்கள் உலகம்...இரக்கமில்லாதவர்களே...!சினிமாக்கதாநாயகர்களின் அழுகை ஒலி விழுந்த உங்கள் காதுகளில் எங்கள் பிஞ்சுக்குழந்தைகளின் இதயத்துடிப்பு கடைசிவரை விழவே இல்லையே...ஏன் என்று கேட்கக்கூட விருப்பமில்லாது உங்கள் கண்களையும்,காதுகளையும் இறுக மூடிவைத்திருந்தீர்கள்...இன்றுவரை திறக்கவிலையே உங்கள் பலரின் இரும்பு இதயங்கள்..

எங்கள் குழந்தைகளின் கண்ணீரை கைகளில் ஏந்தியபடி வீதிகளில் நீதிகேட்க இன்னும் சில இளைஞ்ஞர்கள் இருக்கிறார்கள்...நீறுபூத்த நெருப்பாக கணன்றுகொண்டிருக்கும் இதயத்துடன் நீதிக்காக போராடும் ஓர்மத்துடன் அவர்கள் என்றும் இருப்பார்கள்...அவர்களில் ஒருவனாய் நானுமிருப்பேன்....மலர்விழியினது அண்ணா எனும் மெல்லிய அதிர்வு,அகிலாவின் கதறல்,சர்மிளாவின் ஏக்கம்,ப்ரியாவின் பசியால் வாடிச்சோர்ந்த முகம் இவை எவையும் எம்மைத்தூங்கவிடாது...எங்கள் வீடுகள் முழுவதும் நிறைந்துகிடக்கும் இந்தப்பிஞ்சுகளின் ஏக்கம்களும்,புன்னகைகளும்,கதறல்களும் எங்களை வீதிகளில் நிக்கவைத்துக்கொண்டே இருக்கும்....மரணம் வரைக்கும் எங்களை அது ஓயவிடாது...நாங்கள் கைகளில் ஏந்திவைத்திருப்பது வெறும் பதாதைகளும் கொடிகளும் அல்ல...அவை எங்கள் ஆன்மாவின் வெளிப்படுத்தமுடியாத பெரும் வலி,கதறல்..எப்படியாவது உலகின் காதுகளுக்கு கொண்டுசேர்த்துவிடவேண்டும் என்ற பெரும் துடிப்பு...

செத்துப்போன எங்கள் தங்கைகளின் ஆன்மாக்கள் எங்கள் உடலை கடைசிவரைவழிநடத்தும்...மரணம் வரைக்கும் எம் இனத்தின் விடிவிற்க்கு உழைத்துக்கொண்டே இருப்போம்...என் இனத்தின் துயரங்களை தீர்க்கமுடியாத ஏக்கத்துடனேயே என் உயிர் ஒரு நாள் நின்றுபோகலாம்...அப்பொழுதும் தூங்காத என் ஆன்மா என் தாய்மண்ணில் அலைந்துகொண்டிருக்கும்....என் கல்லறையைத்தாண்டிச்செல்லும் காற்று ஒரு நாள் என் காதில் என் இனத்துக்கு நீதிகிடைத்த சேதி உரைத்துச்செல்லும்...அகிலாவின் அழுகை ஒலி ஓய்ந்ததாகவும்,எம் குழந்தைகள் மரணத்தின் வாடையைச் சுவாசிக்காமல் வாழும் ஒரு புதிய தேசம் உருவாகி இருப்பதாகவும் அது உரத்துச் சொல்லிவிட்டுப் போகும்...அப்பொழுது நான் நிமதியாகத் தூங்கிப்போவேன்...

3 comments:

நிலாமதி said...

எங்கள் துயரங்ககளை எழுத்தில் வடிக்கும் தாயகக் கடமையுள்ள தங்களுக்கு என் பாராட்டுக்கள். காயங்கள் மறைந்து போனாலும,வடுக்கள் மறைவதில்லை . இப்பதிவை வாசிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் உறைக்க வேண்டும். உலகுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அழியாத கோலங்களின் இப் பதிவுகள்.

சுபேஸ் said...

நன்றிகள் அன்பு அக்கா வாசிப்பிற்கும் கருத்து பகிர்விற்கும்..

வேலணையூர்-தாஸ் said...

இன்றுதான் பார்த்தேன் மனதை ஏதோ செய்தது நாங்கள் வரலாற்றை பதிவு செய்யாதிருக்கிறோமாஃ என்ற குற்றவணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை்--- உமது தொகுி வரப் போவதாய் அறிகிறேன் படிக்கஆவலாய் இருக்கிறேன்.

Post a Comment