Pages

Monday 21 October 2013

கண்ணீரால் முடியும் என் கவிதைகள்...


காதல் வெளியில்
தூக்கம் தொலைத்த
இலையுதிர்கால
இரவொன்று
ஒளிர்கின்றது...

இதயத்தில் இருக்கும் 
பிரிவுத்துயர் தணல்கின்ற
எரிமலைகள்
எரித்துவிடுகின்றன
ஒளிர்கின்ற இரவை..

அறையெங்கும்
நிரம்பிக்கிடக்கும்
விளக்கொளியின் நடுவே
கண்களுக்கு தெரியாமல்
குறுக்கும் மறுக்குமாய்
அலைகின்றன நினைவுகள்...

பாறையெனக் கிடந்த
உன் பொழுதுகளின் மீது
பக்குவமாய் நான் வரைந்த
காதல் ஓவியத்தை
நீ கிழித்தெறிந்த போது
சிதறியவைகளாக இருக்கலாம்..

புன்னகை எழுதிய முகத்தை
கண்ணீர் மூடிமுடிக்கும் முன்
நினைவுச்சிதறல்கள்
சுழன்றெழும் வீச்சில்
சிறைப்பிடிக்க வேண்டும்
கவிதைகளில்...

பாதைகள் எங்கும்
காதலுடன் பரவிக்கிடந்த
பூக்களை
வாரி அணைக்க சேர்த்துவைத்த
அன்பை எல்லாம் மொத்தமாய்
உன் பிரிவு தின்றுவிட்டது..

வலியைத்தவிர
இனி எதைக்கொண்டு நிரப்புவேன்
என் கவிதைகளை..?

வெறும் ஆற்றாமைகளும்
பிரிவும்
வலியுமாய் என் கவிதைகள்
வீங்கிப்பருத்திருப்பதாக
நீங்கள் சொல்லலாம்...

சொல்லுங்கள்..

பறித்தெடுத்த பூக்களால்
நிறைந்திருக்கும்
வரவேற்பறைகள்
அழகும் வண்ணமுமாய்
ஒளிர்ந்திருக்கலாம்

ஆனால்..

பூக்களைத்தொலைத்த
மரங்களின் உணர்வுகள்
ஒருபொழுதும்
பூத்துக்கிடப்பதில்லை..

தன் நிலவைத்தொலைத்த
என் கவிதைகளும்தான்..

உன்மேலான காதலால்
உருகும் இதயத்தின் பாடலின்
துயரத்தில் கரைந்து
துயிலாதிருக்கிறது
இந்த இரவு..

எழுதுகோல் தவிக்கிறது
எல்லாவற்றையும்
சிறைப்பிடிக்க...

முடிவதில்லை..

எப்பொழுதும்
புன்னகை எழுதிய முகத்தை
கண்ணீர் மூடி
முடித்துவைக்கிறது
என் கவிதைகளை...

நிறைவேறாத அன்பு
நீர்ச்சுழியாய்
இப்புறமும் அப்புறமும்
இதயத்தை அலைக்க
நடுவில் இயல்பிழக்கிறேன்..

இவ்வழியா அவ்வழியா
எவ்வழியால்
எழுகின்றன நினவுகள்..?
 

1 comment:

நிலாமதி said...

நிறைவேறாத அன்பு நீர்ச் சுழியாய்..........சுழியில் இருந்து தப்பி விட்டீர்களேன்று தேற்றிக் கொள்ளுங்கள். இன்னும் வாழ்க்கை மிச் சம் இருக்கிறது துயர் மீண்டு வாழுங்கள். i

Post a Comment