Pages

Sunday 26 February 2012

ஈழவிடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியில் சமூகப்பிளவுகளின் செல்வாக்கு....

தமிழர்களின் இனவிடுதலைப்போராட்டம் ஏன் தோல்விகண்டது என்பதற்கான பதிலாக உலக நாடுகளின் எதிர்ப்பே காரணம் என்று எமது ஊடகங்களிலும் எங்களிக்கிடையேயும் சொல்லிக்கொள்கிறோம்.இதில் உண்மை இருக்கின்றது. ஆனால் இந்த உலகத்துக்கு முன் நாம் எப்படி இருந்தோம் என்பதையும், உலக நாடுகள் ஏன் எம்மை எதிரியாகப் பார்க்கத்தொடங்கின என்பதற்கான காரணங்களையும் நாம் யாரும் ஆராய்ந்துபார்க்க விரும்புவதில்லை..அவற்றைப் பேச வெளிக்கிட்டால் அவற்றின் பின்னே மறைந்துள்ள எமது ஊத்தைகளும் வெளிப்பட்டுவிடுமே என்ற பதற்றத்தில் தெரிந்துகொண்டே காரியத்துடன் நாம் யாரும் அவற்றைப் பற்றி பேசுவதில்லை..இங்கு தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டம் என்பதற்க்குள் புலிகளினது மட்டுமின்றி இனவிடுதலைய வேண்டி நிகழ்த்தப்பட்ட தமிழர்களது எல்லாப் போராட்டங்களும் அடக்கம்...

உலகம் எமது போராட்டத்தை தீண்டத்தகாத ஒன்றாக எப்பொழுது பார்க்க ஆரம்பிக்கிறது? எமக்குள் பல இயக்கம்களாகப் பிரிந்து நின்று எங்களுக்குள்ளேயே உயிர் வாழப் போராடுகிறோம்..ஆளையாள் போட்டுத்தள்ளி கொலைகளை செய்கின்றோம். இந்த அடிபிடிகளின் விளைவாக முக்கால் வாசிக் குழுக்கள் காவிவந்த கொள்கையை மறந்துவிட்டு யாரிடம் இருந்து விடுதலை வேண்டிப் புறப்பட்டதோ அவர்களிடமே போய் இணைந்துகொள்கிறன. மக்கள் நம்பிக்கை இழக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விரக்தியடைகின்றது. மதப்பிளவுவருகின்றது. இது இனப்பிரச்சனையா மதப்பிரச்சனையா என்ற கேள்வி வருகின்றது. பிரதேசவாதம் வருகின்றது. அரசியல் படுகொலைகள். பெருவாரி மக்கள் போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு நிற்கின்றார்கள். இது குழு மோதல். பயங்கரவாதம் என்று உலகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு சிங்களப் பேரினவாதம் என்ற புறநிலைக் காரணத்தை தவிர என்ன அகநிலை பதில் எம்மிடம் இருந்தது??

சாதியால்,பிரதேச வாதத்தால்,எம்மிடையே உள்ள உட்பிரிவுகளால்(வர்க்கம் மதம் போன்றன) தமிழர்களிடையே இன ஒற்றுமை நிகழவில்லை..இவைகள் இனம் என்ற ஐக்கியப்பாட்டுக்கு ஏதிரான சக்திகள். இந்த சக்திகளை அழிக்காமல் இன ஐக்கியப்பாடு இல்லை. இன ஐக்கியப்பாடு இன்றி இனவிடுதலை இல்லை.பிரிவினை,மேலான்மை கொள்ளும் மற்றும் போட்டி மனப்பான்மை,சமூக வேறுபாடுகளால் நிகழாமல் இருந்த இன ஒற்றுமை என்பவற்றால் இந்த சமூகத்தின் பிரதிநிதிகளாகப் போராடப் புறப்பட்ட போராளிக்குழுக்கள் மிகச்சரியாகப் போராட்டத்திலும் தாங்கள் இந்த சமூகத்தின் பிரதிநிதிகள்தான் என்பதை குத்துப்பாடுகள்,தங்களுக்குள்ளேயே அடிபாடுகள்,பிரிவினைகளின் மூலம் நிரூபித்தனர்.இன ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட பிரிவினைகளைத் தொடர்ந்து சிங்களவர்களுடன் ஒட்டிக்கொண்டு தமிழர்கள் தமது இனவிடுதலைக்கு எதிராகச் செய்த துரோகங்கள்,அதைத்தொடர்ந்து அவர்கள் மேல் நடத்தப்பட்ட கொலைகள்,பொறாமை மற்றும் காழ்ப்புணர்வில் தமிழர்களே தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் மேற்கொண்ட பரப்புரைகள் என்பவற்ரைத்தொடர்ந்து எமது போராட்டத்தை இனவிடுதலைப் போராட்டமாகக் கருதாமல் குழுமோதலாக உலகின் மனதில் ஏற்பட்ட தப்பான அதிர்வலைகள்,இவற்றின் நீண்டகால விளைவுகளே மூன்றுதசாப்தங்களுக்குப் பின்னர் எம்மை நோக்கிய சர்வதேச எதிர்ப்பை அந்த நேரத்தில் இருந்தே சிறுகச்சிறுகக் கட்டிவந்து இறுதி அழிவிற்கு இட்டுச்சென்றன.

ஒரு போதும் நோய்க்கு நிரந்தரத்தீர்வு தேடுவதாக எம்மவர்களின் அரசியல் நடவடிக்கைகள் அமைவதில்லை..இது காலங்காலமாக எம்மவர்களிடையே உள்ள ஒரு மிகத்தவறான அணுகுமுறை ஆத்திரத்தில் தனி நபர்கள் மேல் மேற்கொள்ளும் வசைபாடல்களிலும் அவர்களைப் போட்டுத்தள்ளுவதிலுமே எங்களது போராட்ட காலங்களில் அமைந்த பெரும்பான்மையான நாட்கள் ஓடிப் பறந்து விட்டன...இது உலகத்தின் அதிர்ப்த்தியை எம்மேல் கட்டி வளர்க்க உதவியதே அன்றி எமது போராட்டத்திற்க்கு எந்த விதத்திலும் உதவவில்லை..ஒவ்வொரு தனிமனிதனையும் எச்சில் பொறுக்கி நாயாக திட்டும்போது அவன் இன்னுமின்னும் வேகமாக எதிரிக்கோ அல்லது தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு விசுவாசமாகவோ தனது துரோகப் பந்தை எம்மை நோக்கி எறிந்து கொண்டிருந்தான்..அதே போல் ஒவ்வொரு தனிமனித அரசியல்க் கொலைகளின் பின்பும் இன்னொருவன் அதே கொள்கைகளைக் காவிக்கொண்டு இன்னும் வேகமாக முன்னையவன் செய்தவற்றை செய்துகொண்டிருந்தான்...இந்தப் படுகொலைகள்,வசைபாடல்கள்,சீண்டல்கள்,துரோக முத்திரைகள் ஒரு சதவீதம் தன்னும் எமது போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த உதவவில்லை..மாறாக பல மடங்கு பின்னோக்கி விழவே உதவியது..சிங்கள அரசியல் வாதிகள் மேல் நிகழ்த்த்தப் பட்ட கொலைகள் கொல்லப்பட்டவனின் கொள்கைகளைக் காவி வந்த அரசியலில் செல்லாக் காசாயிருந்த பின்னையவனுக்கு சும்மாயிருந்த மக்களின் ஆதரவையும் பெருக வைத்து முன்னையவனின் இன அழிப்புக் கொளகைகளை போருக்கு ஆதரவான நிலைப் பாட்டை இன்னமும் தீவிரமாக மேற்கொள்ள ஊக்குவித்தது..இந்தியாவின் மேலும் இதே கொள்கையையே நாம் கொண்டிருந்தோம்..தனி நபர்கள் ஏறி நிற்கும் அரசியல் தளங்களைப் பற்றி நாம் விமர்சிப்பதில்லை..அரசியல் வாதியையும் அவன் பொண்டாட்டியையும் விமர்சித்து விசிலடிப்பதில் எங்கள் சக்தியை விரயமாக்குகிறோம்..வெறுமனே சுப்பிரமணிய சுவாமியும்,சோ வும்,சோனியாவும் அழிந்து போய்விடுவதால் இந்த அரசியல் தளம் ஆட்டம் கண்டுவிடப் போவதில்லை..ராஜீவ் காந்தி இறந்ததால் இன்னொரு சோனியாகாந்தி வந்து ராஜிவ் நினைத்ததை செய்து முடித்தாள்...அடிப்படை பார்ப்பனிய சாதி அரசியலை இந்தியாவில் இருந்து ஒளித்துக்கட்டுவதாகவே எமது எதிர்ப்புகள் அமையவேண்டும்...அவைதான்,அந்தக் கொள்கைகளைக் காவிவருபவர்கள்தான் எமது ஈழப் போராட்ட நலன்களுக்கும் எதிரானதாக இந்தியாவில் மிகப்பெரும் தடையாக தொடர்ந்து இருக்கின்றன/ர்..இந்துத்துவ பார்ப்பன மேலாதிக்க சாதி அரசியலை எதிர்த்து ஈழத்தமிழர்களோ ஈழத்தமிழ் ஊடகங்களோ வாயைத்துறந்ததே மிகமிகக் குறைவு அல்லது இல்லையென்றே கூறலாம்..ஆனால் இந்தியாவில் இந்த பார்ப்பன,சாதிய அரசியல் தளத்திற்க்கு எதிராகப் போராடுபவர்களே ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

எங்களிடையே இருக்கும் ஜாதி,மத,பிரதேச,ஊர் வெறி இன ஒற்றுமைக்குத் தடையாக இருந்தது,இருக்கிறது..இன ஒற்றுமை இல்லாத தமிழனால் வியட்னாமியனைப்போல் ஒன்று பட முடியவில்லை..ஜாதிகள்,ஊர்கள் அல்லது மதங்களின் அடையாளத்தால் தமிழன் என்ற அடையாளத்தின் மூலம் பெறும் இன்பத்தை விட மிக அதிக சுய இன்பத்தை உணர்கிறது இந்த இனம்..இது நேரடியாகத் தாக்காமல் புலிகளின் போராட்டத்தை வெளித்தெரியாமல் மிக மோசமாக சுற்றிவளைத்துத் தாக்கிக்கொண்டிருந்தது....ஒரு கொஞ்சப் பேர் போராடிக்கொண்டிருந்தார்கள்..ஒட்டு மொத்த சமூகமும் போராடவில்லை..மிகுதிப் பேர் தங்கள் சமூக அந்தஸ்த்தைப் பாதுகாப்பதில் குறியாக இருந்தனர்..அகதியாக இடம்பெயரும் போதும் கூட தங்கள் ஜாதி அந்தஸ்த்தைக் காப்பாற்றிக் கொள்வதில் மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டனர்..பொருளாதார இருப்பின் மூலம் தங்கள் அந்தஸ்த்தைத் தக்க வைப்பதற்க்காகப் போராடப் புறப்பட்ட பிள்ளைகளைக் கூட மனத்தை மாற்றி வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்..இன்னும் கொஞ்ச மேல்தட்டு வகுப்பினர் தங்கள் பிள்ளைகளை கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி போராட்டத்தின் நிழல் கூட அவர்கள் மேல் படாமல் பார்த்துக்கொண்டனர்..ஆரம்பகாலங்களில் ஒரு மீனவன் தலைமை தாங்கும் அமைப்பில் இணைவதோ என்று கணிசமானது ஜாதி விசருடன் வேறு அமைப்புக்களில் இணைந்து கொண்டது(கவனிக்க - இங்கு இப்படிப்பட்ட மன நிலையுடன் இயக்கங்களுக்குப் போனவர்கள் போராடப் புறப்பட்டது இனவிடுதலைக்கு அல்ல..தாங்கள் மட்டும் சிங்களவனிடம் இருந்து விடுதலை பெறவேண்டும்..இனத்துக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களிடமிருந்து சமூக விடுதலை பெறக்கூடாது..தொடர்ந்தும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும்..அவர்களை ஆள்வதற்க்கும் சிங்களவர்களின் இடையூறுகள் இன்றி தாம் வாழ்வதற்க்குமே இவர்கள் போராடப் போனது..இப்படிப்பட்ட மனநிலையுடன் இருந்த,இருக்கும் சமூகத்தால் எப்படி இனவிடுதலையை தமிழன் என்ற அடையாளத்தின் கீழ் ஒற்றுமையாகப் பெற்றெடுக்க முடியும்..?)

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிளவுகள் பிரதேச வாதத்திற்க்கு மிகச்சிறந்த உதாரணம்... யாழ்ப்பாணியம் மற்றையவர்களை ஏதோ புழுக்களைப் போல் பார்க்கும் மெண்டாலிற்றி(பிரதேச வெறி யாழ்ப்பாணத்துக்குள்ளே சுருங்கும்போது அது ஊர் வெறியாக மாறுகிறதென்பது தமிழினத்தின் இன்னொரு வித பைத்தியக்காற மனநிலை)...இது மற்றைய பிரதேச மக்களின் மனங்களின் உள்ளே அவிந்து குமைந்து கொண்டிருந்த சமூகவலி.. ஒரு சிறு பொறி கிடைத்ததும் குப்பெனப் பற்றிக்கொண்டது...இன ஜக்கியம்,தமிழின விடுதலை என்பவை எல்லாம் இங்கே பின் தள்ளப்பட்டு பிரதேசவாதம் முன்வருகிறது...பிரதேச வெறி என்னும் மனநிலை இந்த சமூகம் அவர்களுக்கு ஏற்படுத்திய அவமானங்கள்,அழுத்தங்களின் மூலமும்,இந்த சமூகத்தில் இருந்து அவர்கள் காலம்காலமாக கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்துமே அவர்களிடம் உருவாகியது..இது தமிழின விடுதலைப் போரை மழுங்கடித்துவிடும் என்ற சிந்தனையை விட பிரதேசப் பற்றே அவர்களுக்கு முதன்மையாகத் தெரிந்தது...இப்படிப்பட்ட தாழ்த்தப்பட்டதும் உயர்த்தப்பட்டதுமான இருவேறு மனநிலையில் உள்ள ஒரு இனத்தினால் ஒற்றுமையாகப் பொதுத் தேசியத்திற்க்காக ஒன்றுபட்டுக் கூட்டாகப் போரிட முடியுமா..? எங்களுக்குள் நிகழ்ந்த குத்துப்பாடுகளும் பிளவுகளுமே இது சாத்தியமற்றது என்பத்ற்க்குப் போதும்போதும் என்கிற அளவுக்கு காரணங்களை கொண்டிருக்கின்றன..

தேசிய அளவில் பிரதேச வாதம் என்னும் மனநிலையுடன் தன் இனத்தையே பிரித்துப் பார்க்கும் இந்தச்சமூகம் பிரதேசத்துக்குள் ஊர் ரீதியாகவும் ஊருக்குள் சாதி ரீதியாகவும் குடும்பத்துக்குள் ஆண் ஆதிக்கத்தின் மூலமும் பிரிவினைகளின் வெவேறு வடிவங்களை கட்டமைத்து தனிமனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.எட்டுப்பேர் இருக்கும் சபையில் இருந்து எட்டுக்கோடி பேர் இருக்கும் சமூகம் வரைக்கும் தன்னை உயர்த்திப் பேசுவதற்க்காக மேலானவனாகக் காட்டுவதற்க்காக ஜாதி,மத,ஊர்,பிரதேச பிரிவினைகளை இந்தச்சமூகம் ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறது.வீட்டுக்குள்ளே இது ஆண் என்ற மேலாதிக்க செருக்கு மனநிலையையும் பெண்களை இயலாதவர்களாக ஆண்களுக்குக் கீழ்ப்படிவானவர்கள் என்ற கருத்தையும்,ஊருக்குள்ளே ஜாதிப் பிரிவுகளையும்,பிரதேசத்துக்குள் ஊர்ப்பிரிவினைகளையும்,தேசத்துக்குள் பிரதேசப் பிரிவினைகளையும் கற்றுக்கொடுத்து சமூகப்பிளவுகளை உருவாக்கி இன ஒற்றுமை என்ற ஒன்றை தமிழர்களுக்கு எட்டாக் கனியாக்கி வைத்திருக்கிறது இந்த சமூகக் கட்டமைப்பு.இந்த சமூகம் காலம் காலமாகக் கற்றுக்கொடுத்த பாடங்களே போராட்டம் என்று வந்த போது போராளிக் குழுக்களுக்கிடையேயும் தங்கள் மேலாதிக்கம் மட்டுமே இருக்க வேண்டும் மற்றையவைகள் தங்களுக்குக் கீழானவையாக இருக்கவேண்டும் என்ற மேலாதிக்க மனப்பான்மையை அடக்கி ஆழும் எண்ணத்தை,போட்டி மனப்பானமையை ஏற்படுத்தி அழிவை,பிளவுகளை நோக்கி அவற்றை வழிநடத்தியது.

இதேவித சமுகப் பிளவுகள்தான் தமிழகத்திலும் இன ஒற்றுமை நிகழாமல் இருக்கக் காரணமாக இருக்கின்றன..ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்து முடியும் வரை தமிழகத்தைச் சேர்ந்த திராவிடக் கட்சிகளும் சரி இதர கட்சிகளும் சரி ஈழப்போராட்டம் என்ற ஒரு விடயத்துக்காகவேனும் கடசிவரை ஒரு அணியில் நிற்கவில்லை.அழிவின் உச்சக் கட்டத்திலும் நிற்கவில்லை.ஒரு சின்ன உதாரணம்..தமிழ் நாட்டின் எத்தனை கிராமங்களில் மேல்சாதி என்று தம்மைக் கூறிக்கொள்ளும் தமிழர்கள் தன் சக தமிழனை கீழ் சாதி என்று சொல்லி தன் சொந்த இனத்திற்க்கே தண்ணீர் தராமல் தடுத்து வைத்திருக்கிறார்கள்...ஏரியாக்களைப் பிரித்தும்..சாதிக்கொரு ஏரியாவை ஒதுக்கியும்..சுவர்களைப் போட்டுப் பிரித்துத் தடுத்து உள்ளே வரவிடாமலும் தன் இனத்திற்க்குள்ளேயே நிறையத் தனி நாடுகளைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்..மலையாளி தண்ணி தரமாட்டேன் என்கிறான் என்பதற்க்கு எதிராகப் போராட ஒவ்வொரு தமிழனையும் ஒற்றுமையாக வரும்படி கூறும்போது ஒற்றுமை அங்கு எப்படி நிகழமுடியும்..?இப்படித்தான் ஈழப்போராட்டத்துக்கு ஆதாரவாகவும் அவர்களால் ஒன்றுபடமுடியவில்லை..பார்ப்பணியம் அதற்க்கு மிகப்பெரும் தடையாக இருந்தது..இங்கேதான் சமூக விடுதலை இல்லாமல் இனவிடுதலை சாத்தியமற்றதென்பது நடைமுறச் சம்பவங்களுடன் விளக்கம் பெறுகிறது.

ஒவ்வொரு தனி மனிதன் மேலும் இந்த சமூகம் கடுமையான அழுத்தங்களையும்,கட்டுப்பாடுகளையும் பிரயோகித்துக்கொண்டிருக்கிறது.இந்த அழுத்தமே சமூகம் மீதான இந்தப் பயமே இந்த இனத்தில் இருக்கும் ஒவ்வொரு தனிமனிதனையும் புரட்ச்சிகரமாகச் சிந்திக்க விடாமல் தடுத்துவைத்திருக்கின்றன.இந்த சமூகத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட சதவீதமான இளைஞ்ஞர்களே போராடப் புறப்பட்டார்கள்.அவர்களுக்குள்ளும் மிகச்சிறுவீதமானவர்களே சமூக அடக்குமுறைகளை உடைத்துக்கொண்டு புரட்ச்சிகரமான சிந்தனைகளுடன் போராடப் புறப்பட்டவர்கள்.ஏனையோர் அந்தந்த நேரங்களில் அவர்களின் வீடுகளில் நிலவிய குடும்பச்சூழல்,தனி மனித பிரச்சினைகள்,விரக்திகளில் இருந்து தப்புவதற்க்காகப் போராட்டத்தை ஒரு வழியாகத் தெரிவு செய்தவர்கள்.ஒரு மிகச் சிறு வீதத்தினரைத் தவிர மற்றையவர்களை புரட்ச்சிகரமாகச் சிந்திக்க முடியாதபடி,அப்படிச் சிந்தித்தாலும் அதை நடை முறைப் படுத்த முடியாதபடி அவர்கள் மேல் வெவேறு வடிவங்களில் இந்த சமூகம் மறைமுக அழுத்தங்களை வழங்கிக்கொண்டிருந்தது(உதாரணம் - சாதி மாற்றத்தை எதிர்க்கும் ஒருவன் சாதி குறைந்த பெண்ணைத் திருமணம் செய்தால் சமூகம் எப்படிப் பட்ட அழுத்தங்களை அந்தத் தம்பதிகளுக்கு வழங்கும் என்பது).எமது சமூகம் தனி மனித சுதந்திரத்தை,சுயமாகச் சிந்திப்பதை நடைமுறைப் படுத்தும் சுதந்திரத்தை யாருக்கும் வழங்கவில்லை.இதனால் ஒவ்வொருவரும் ஒருவித சமூக மனநோயுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.சமூகச் சூழலே ஒரு மனிதனை உருவாக்குவதில் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றன.இப்படிப் பட்ட சிந்தனைகளைக் கற்றுக்கொடுக்கும் சமூகம் எப்படிப்பட்ட மனிதர்களை உற்பத்திசெய்துகொண்டிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.இவ்வித சமூகக் கற்பிதங்களைக் கற்று வளர்ந்தவர்கள் போராடப் புறப்பட்டால் எப்படி ஆகும் என்பதைத்தான் நாங்களே சாட்ச்சியாகவும் குற்றவாளிகளாகவும் நின்று பர்த்துக்கொண்டிருக்கிறோம்..

இதற்கெல்லாம் காரணமான இந்த சமூகத்தினை,இந்த சமூகத்தில் இழை ஓடி இருக்கும் நச்சுக் குணங்களை விமர்சிக்காமல் உலகை விமர்சனம் செய்து என்னபயன்..? சிங்கள இனத்திடம் இருந்து தப்பி உயிர் வாழ நடந்த இவ்வளவு போராட்டத்துக்கு நடுவிலும் தனக்குள் அடிபட்டு,பிரிபட்டு,யாரிடம் இருந்து தப்பப் போராடியதோ அவர்களிடம் சரணடைந்து இழிவான இனமாக உலகின் முன் அடையாளமே இழந்து போய்க் கிடந்தும் தனக்குள்ளே பல சாதிகளாலும்,ஊர்களின் பெயராலும் அடையாளம் வைத்துத் தங்களுக்குள்ளேயே தங்களைப் பிரித்துக்காட்டி தனக்குத்தானே பெருமைப் பட்டுக்கொள்ளும் இந்தக் குறுட்டுச் சைக்கோ இனத்தை விமர்சிக்காமல் யாரை விமர்சிக்க...? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியமும்,பிரதேச வாதமும்தான் தமிழின உணர்வின் முதல் எதிரி. தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடையாது என்ற நிலை இருக்கும் போது தமிழன் என்ற ஒற்றுமையுணர்வு,ஒரு மையச் சிந்தனை எப்படி தமிழனது ஆழ்மனதில் உருவாகும்.தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், தாமும் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண்டும்.அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும்.வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களையும் அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை.அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் சாதிய ஆளும் வர்க்க மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சிந்தனை மாற்றம்,பிற்போக்குத் தனங்களை உடைத்தெறியும் துணிவு இவ்வளவு விலைகொடுத்துப் போராடிய மூன்று தசாப்தங்களுக்கும் மேலாய் நீடித்த போராட்டத்தின் பின்னாவது இந்த இனத்தில் ஏற்பட்டிருக்கவேண்டும்..ஆனால் ஈழத்தின் ஒவ்வொரு கிராமத்திலும்,நகரத்திலும் பிற்போக்குத்தனங்களும் சாதியமும் இப்பொழுதெல்லாம் முன்னரை விட இன்னமும் வேகமாகத் தலை விரித்தாடத்தொடங்கியிருக்கின்றன...தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம்,பிரதேச மற்றும் ஊர் வெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழ் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாமல் விடுதலிப் புலிகளையோ இல்லை எந்த ஒரு அமைப்பையோ விமர்சித்துப் பயன் இல்லை..ஏனெனில் அவைகளும் இந்த இனத்தின் மனங்களில் சாதியைப் போல அவர்கள் பெருமை பேசும் ஒன்றாக ஆகிவிட்டது..இது ஒரு மன நோய்...

அநேகமான ஈழத்து எழுத்தாளர்கள் இந்த சமூகப் புண்களைப் பற்றி வெளிப்படையாக எழுதவோ விமர்சிக்கவோ தாயாரில்லாதா பயந்தாங்கொள்ளிகளாக,இப்படி ஒன்று இப்பொழுது இல்லை என்பதை நிரூபிப்பதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள்..போராளிகளின் காலத்தில் ஒன்றுமே இலாததுபோல் வெளியே அமைதியாக இருந்தாலும் உள்ளே இந்தச் சமூகப்புண்கள் அவிந்து குமைந்து கொண்டிருந்தன..போராளிக்குழுக்கள் ஆரம்பகாலங்களில் இதய சுத்தியுடன் போராடப் புறப்பட்டாலும் அதில் இணைந்தவர்கள் இந்த சமூகத்தால் தயார்ப் படுத்தி அனுப்பபப் பட்டவர்களே..இந்தவிதமான மன நோயுடன் இருந்தவர்களால்தான் கொஞ்சம் கூடத்தாக்குப் பிடிக்க முடியாமல் போராட்டத்தின் முளையிலேயே குத்து வெட்டுடன் பிரிவினைகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது..மாற்றங்கள் இந்த இனத்தின் அடிப்படை மனநிலையில் ஒருபோதும் உருவாகப் போவதில்லை..அது மிகவும் ஒரு பின் தங்கிய வர்க்க சமூக அமைப்பை தனது அடிப்படை இருப்பாக வனைந்து வைத்திருக்கிறது..எப்படி இஸ்லாம் என்னும் மதவாதத்தில் இருந்து ஒரு போதும் முஸ்லீம்களால் மீண்டு வரமுடியாதோ அப்படியே இந்த இனத்தினாலும் அது போர்த்தியிருக்கும் ஜாதி என்னும் போலி பிம்பத்தை உடைத்துக் கொண்டு வெளியே வர முடியாது..அந்த போலி விம்பம் உடையாத வரைக்கும் தமிழ் இனம் என்ற ஒற்றை உணர்வு ஒருபோதும் இதயத்தின் ஆழத்தில் இருந்து வரவே வராது...வெறும் வார்த்தை ஜாலங்களிலேயே தமிழ்த்தேசியம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்...நடைமுறையில் ஊர்ப் பற்றும் ஜாதிஉணர்வுமே இன உணர்வை மேவித் தமிழர்களின் உடலில் ஓடி இன்னும் இன்னும் பின் தங்க வைத்து சமூகப்பிளவுகளையும் அதைத் தொடர்ந்து இன அழிவையும் நோக்கி அவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும்...இது தமிழகத் தமிழனுக்கும் நிகழும்...நிகழ்ந்து கொண்டிருக்கிறது..

இப்படியான எமக்குள்ளே உயிர்வாழும் சமூகப் பிளவுகளே போராட்டத்தின் மிகமிக ஆரம்பகாலங்களில் போராட்டத்தின் தோல்விக்குரிய அத்திவாரங்களைப் பலமாகப் போட்டுவைத்தன.இவைதான் புலிகளினது மட்டுமல்ல தமிழர்களது எல்லாப் போராட்டமும் தோற்றுப் போனமைக்கான காரணங்களுக்கெல்லாம் தாய்க் காரணங்களாகப் புதைந்து போய் வெளித்தெரியாமல் கிடக்கின்றன..ஆனால் துரதிஸ்ட வசமாகத் தமிழ்த் தேசியம் பேசும் யாரும் இவை பற்றி ஒரு போதும் பேசத்தயாரில்லை...இவை சமூகத்தில் நிலவவில்லை என்பதை சாதிப்பதிலேயே அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்..இதேவித இன ஒற்றுமையற்ற சமூகவேறுபாடுகளால் நமது சமூகம் நிறைந்திருக்கும் நிலையில் இந்தவித சமூக நோய்களுடன் இப்படியே இன்னொரு போராட்டத்தை ஆரம்பித்தால் அங்கேயும் முன்னர் எமக்குள் நிகழ்ந்த பிரிவுகள்,பிடுங்குப்பாடுகள்,குழுமோதல்கள் முளையிலேயே நிகழ்ந்து மீண்டும் மீண்டும் போராட்டத்தின் பெயரால் எங்களுக்குள்ளேயே மோதி அழிந்து கொண்டிருப்போம்.இறுதியில் இந்த இனம் இருந்த அடையாளமே இன்றி முற்றாக அழிந்து போய்விடுவோம்...

பெற்ற தோல்விக்கான காரணிகளாக புலிகளையோ,போராட்டக் குழுக்களையோ அல்லது உலகையோ வெறுமனே ஒரு வரியில் குற்றம் என்று சொல்ல முடியாது மாறாக குற்றத்திற்கான உளவியல் பின்னணியில் ஒட்டுமொத்த சமூகமே குற்றவாளியாக இருக்கின்றது. திருத்தம் உரிய இடத்தில் அவசியம். ஆரோக்கியமான ஒரு சமூகக் கட்டமைப்பே அடிப்படையில் போராடுவதற்கான தகுதியை பெறும். அதை நோக்கி அடுத்த சந்ததியை வாளர்க்க முற்படின் சில பலன்கள் அவர்கள் காலத்தில் ஏற்படும். தற்போதுள்ள சமூகத்தளத்தில் இனவிடுதலைக்கான போராட்டம் என்பது இனத்தை துரிதமாக அழிப்பதற்கான போராட்டமாகவே இருக்கும்..இந்த சமூக விலங்குகள் உடைபடாமல் ஒரு வெற்றிகரமான ஒன்றுபட்ட போராட்டத்தை இந்த இனத்தால் ஒரு போதும் நிகழ்த்த முடியாது....

Wednesday 15 February 2012

நான் தொலைத்து விட்டவைகளின் நினைவுகளில் வாழும் மனிதன்...

சிறுவயதுகளில்
வாழ்க்கையின்
வழிகளில்
காலம் ஒரு
கவிதையாக
வழிந்தோடிக்கொண்டிருந்தது

கனவில் தோன்றும்
கவிதைவரிகளைப்போல
வாழ்தலின்
இனிமைகளைமட்டுமே
கண்களைத்திறந்தபடி
ரசித்துத் திரிந்தேன்

உடலின் ஒவ்வொரு
நுண்ணிய
அணுக்களிலும் புகுந்து
இயற்க்கை
நான் என்னும்
ஆன்மாவை
வனைந்து கொண்டிருக்க
காலமடியில்
இளமை
வழிந்தோடிக்கொண்டிருந்தது..

அணல் எறிக்கும்
புழுதி வீதிகளில்
உலாவித்திரியும்
என் பாதங்களை
பூமித்தாய்
வாஞ்சையுடன்
நீவிக் கொடுப்பாள்
அப்பொழுதெல்லாம்
பூமிக்கு நான்
பாரமாக இருப்பதாக
உணர்ந்ததில்லை...

அம்மாதரும் முத்தங்களை
வாங்கியவாறே
எதற்க்கிந்த வாழ்தலென்ற
புரிதல் இல்லாவிட்டாலும்
நிறைவாக
அறிதல் குறித்த தீராப்பசியுடன்
நான் வளர்ந்து கொண்டிருந்தேன்..

என் பால்யகாலங்கள்
மெதுமெதுவாக
ஒரு கவிதையாக
வளர்ந்து கொண்டிருந்தன..
எப்பொழுதுமே
கடைசி வரியை
எழுத விரும்பாத
அந்தக் கவிதைக்கு
காலம் எப்பொழுதோ
முற்றுப்புள்ளியை
வைத்துவிட்டது என்பதை
என் கன்னத்தில் அரும்பிய
மீசைகள்தான் நினைவுபடுத்தின..

முகத்தில் அரும்பியிருக்கும்
மீசை முடிகளைத்
தடவிவிட்டவாறே
திரும்பிப்பார்க்கிறேன்..
இறந்த காலங்கள்
நினைவுகளின்
ஏதோ ஒரு மூலையின்
நிறுத்தத்தில் இருந்தபடி
கண்சிமிட்டிக் கொண்டிருக்கின்றன...

இழந்துவிட்டவைகளை
மீட்டிப்பார்த்து
இதயம்
வலியுடன் கதறினாலும்
இரக்கமே
இல்லாதவனைப்போலக்
காலம் என்னை
இன்னமும் வேகமாக
இழுத்துக்கொண்டுபோகிறது

உதிர்ந்து விழுந்த
உலர்ந்த
இதழ்களைப்போல
வாழ்க்கை
இப்பொழுதெல்லாம்
வறண்ட நிலத்தில்க்
கிடைத்த
என் சிறுவயதுப்
பசுமைகளைத்
தொலைத்து விட்டுக்
குளிர் நாட்டிலும்
வெறுமையாகக் கிடக்கிறது

என் இளயதுகளை
இழந்து விட்டு
சுதந்திரமாகச் சிறகடித்த
ஏதோ ஒரு பறவையின்
சிறகுகளில் இருந்து
தவறி விழுந்த
இறகாகத்
தனிமையை உணர்கிறேன்..

காலம் என் தோழ்களில்
வாழ்க்கைச் சிலுவையை
இறக்கி வைத்திருக்கிறது
இப்பொழுதெல்லாம்
வலிகளின் அழுத்தங்களில்
தலை நசுங்கிப்போகிறது
எனதான்மா..

வாழ்க்கைப் போராட்டங்களே
இப்பொழுது
இருத்தலைத்
தீர்மானிப்பவையாக
மாறிப்போயிருக்கின்றன
வெற்றிகளுக்கும்
தோல்விகளுக்கும்
இடையில்
நிம்மதியைத்
தொலைத்துவிட்டு
விடாது ஓடிக்கொண்டிருக்க
வேண்டியதாகிவிட்டிருக்கிறது..

ஆயினும்
எல்லாவற்றையும் மீறி
அடிக்கடி மனம்
வெகு இயல்பாய்
என் பால்யகாலங்களை
நோக்கிப் பறந்து கொண்டேயிருக்கிறது..

என் ஊரின்
மழைப்பாடல்களும்
மெல்லிய அதிகாலையின்
குயில்ச் சங்கீதங்களும்
செவிக்குள் இன்னமும்
ரீங்காரமிட்டுக்கொண்டேயிருக்கின்றன..

தாலாட்ட யாருமற்ற
பின்னிரவுகளில்
என் அம்மாதந்த
முத்தத்தின் ஈரங்கள்
கனவுகளில் பிசுபிசுக்கின்றன..

நான் பிடித்துவிட்ட
பட்டாம்பூச்சிகள்
இன்னமும்
சிறகடித்துக் கொண்டிருக்கின்றன..
என் நினைவுகளின்
எச்சங்களில்

காலத்தை ஏய்த்துவிட்டு
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
நினைவுகளில்
இன்னமும் குழந்தையாக...

Friday 10 February 2012

அமைதிப் பேய்கள்....

ஆறுமுகத்தார் வலுவேகமாகச் சந்தையால வந்துகொண்டிருந்தார்.ஆளுக்கு மூச்சிரைத்துக்கொண்டிருந்தது.சைக்கிளின்ர வலதுகால்ப் பெடல்க் கட்டையின்ர மிதியிலை இருந்த இறப்பர்க் கட்டையிலை ஒண்டு எங்கையோ கழண்டு விழுந்துபோய்விட ஒரு கட்டையும் நடுவில இருந்த அச்சுக் கம்பியிலும்தான் இவ்வளவு நாளும் நிண்டுகொண்டிருந்தது மிதி...போன மாசம் மற்ற இறப்பக் கட்டையும் கழண்டுபோய்விட இப்ப உழண்டியாய் இருந்த நடுக்கம்பி மட்டும்தான் மிதியிலை மிச்சமாக இருந்தது...போள்சும் தேஞ்சு கிறிஸும் இல்லாமல்க் காஞ்சுபோய்க் கிடந்த அந்தச் சைக்கிளை மிதி இருக்கும்போது ஓடுறதெண்டாலே சந்தைக்குப்போகிற அரை வழியிலேயே சாப்பிட்டது செமிச்சுப்போய் திரும்பப் பசிக்கும்...இப்ப மிதி கழண்டு விழுந்துபோய்விட கப்பிபோல வழுக்கிக்கொண்டிருந்த அச்சிலை மிதிச்சுத்தான் சைக்கிளை ஓடவேணும்..என்ன களைகளைக்கும் எண்டு சொல்லத்தேவையில்லை...இதிலை ஆறுமுகத்தார் அம்புலன்ஸ்மாதிரி அவசரமாக உழக்கு உழக்கெண்டு சைக்கிளை உழக்கி வீட்டைநோக்கிப் பறந்துகொண்டிருந்தார்...செக்கிலை இருந்து எண்ணெய் வடியிறமாதிரி ஆறுமுகத்தாருக்கு மேலாலை வேர்வை ஊத்திக்கொண்டிருந்தது...

கேற்றைத் திறந்து வீட்டுவளவுக்கை உள்ளட்டதும் "எடியே சரசு" எண்டு ஆறுமுகத்தார் வேகமாகக் குரலெடுத்துக் கூப்பிட முயற்ச்சிக்கிறார்..ஆனால் சைக்கிளோடி வந்த களைப்பிலை எடியே எண்டது முழுசா வாய்க்க வருகுது ஆறுமுகத்தாருக்கு ஆனால் சரசு எண்டது முழுசா வருகுதில்லை...முழுங்குப்படுகுது...எங்க துலைஞ்சிட்டாள் இவள்...மனதிற்க்கை திட்டினபடி சைக்கிளை முற்றத்திலை நிண்ட பிலா மரத்தில சாத்திப்போட்டு வேகமாக வீட்டுக்குள்ள நுழைகிறார்...

முருக்கங்காய்க் கறியை அடுப்பில வைச்சுக் கிண்டிக்கொண்டிருந்த சரசுவுக்கு அடுப்பு வெக்கையிலையும்,புகையிலையும் கண்ணுமடைச்சுக் காதுமடைச்சுப் போயிருந்தது..ஆறுமுகத்தார் மட்டுமில்லை அந்த நேரம் வேற யார் கூப்பிட்டாலும் சரசுவின்ரை காதிலை விழப்போறதில்லை...ஆறுமுகத்தாருக்கு முருக்கங்காய்க் கறி நல்ல தடிப்பா இருக்கவேணும்..தண்ணியாய் இருந்தா இரவு தண்ணியைப் போட்டிட்டு வந்து வீட்டிலை சிவதாண்டவம் ஆடும் மனுசன்.."இந்த அடுப்போடை நான் படுகிற அவஸ்த்தைக்கு அவருக்கு வறட்டி வைக்கவேணுமோ கறி" சரசுவுக்கு கடுப்பாக இருந்தது...ஆனால் அடுத்த நிமிசமே ஆறுமுகத்தார் மேல் கழிவிரக்கமாகவும் இருந்தது..பாவம் என்ர மனுசன்...இவளவு காலமும் எங்கடை இந்த உடைஞ்சுபோன வாழ்க்கை வண்டியை அந்தமனிசன்தான் ஒருமாதிரி இழுத்துக்கொண்டு போகுது...இவ்வளவு கஸ்ரத்தையும் அந்தாள்த்தான் தனியச் சுமக்குது...மனதுக்குள் நினைத்துக்கொண்ட சரசுவுக்கு ஆறுமுகத்தார் மேல் அளவற்ற அன்பு பொங்கியது...முருக்கங்காய்க்கு இன்னும் கொஞ்சம் தூள்போட்டுக் கறி உறைப்பாக இருக்கும்படி பார்த்துக்கொண்டாள்..ஆறுமுகத்தாருக்கு உறைப்பெண்டால் நல்லாய்ப் பிடிக்கும்..ஆளின்ர வெறிவாய்க்கு கறி நல்ல உறைப்பாக இருந்தால் கண்ணாலையும் மூக்காலையும் வடியவடியச் சந்தோசமாகச் சாப்பிடுவார்...

ஆறுமுகத்தார் வேர்த்துக்களைச்சுப் பதற்றத்தோட உள்ள வந்ததைப் பார்த்த சரசுக்கு விளங்கீட்டுது ஏதோ வில்லங்கம் எண்டு."என்னப்பா..? என்னாச்சு..? ஏன் இப்பிடி அரக்கப்பரக்க ஓடிவாறியள்...?"கேட்டபடி சரசு கறிகிண்டிய அகப்பையைக் கையிலை பிடிச்சுக்கொண்டு அடிக்கிறமாதிரி ஆறுமுகத்தாரை நோக்கி வந்து கொண்டிருந்தாள்."எடி விசரி உனக்கு நடந்தது தெரியாதே..? உப்பிடியே அடுப்புக்கை முட்டையிட்டுக்கொண்டிருந்தியெண்டா நாட்டு வளப்பு எங்க தெரியப்போகுது..."ஆறுமுகத்தார் வந்த களைப்பிலை பொரிஞ்சுதள்ளினார்.ஏற்கனவே புகையிலையும் அடுப்பு வெக்கையிலையும் அவிஞ்சுபோயிருந்த சரசுவுக்கு ஆறுமுகத்தாரின் ஏளனம் கடுங்கோபத்தைக் கொடுத்தது..மற்றப் பொம்பிளையல் மாதிரி நாட்டு வளப்பம் நான் பாக்கப் போனன் எண்டா வீடு நாறிப்போகும்...வீட்டு வேளையளை ஆர் செய்வாங்கள்..?மூண்டு நேரமும் உங்களுக்குத்தான அவிச்சுப்போட அடுப்புக்கை கிடக்கிறன்...இப்ப சரசிடமிருந்து சரமாரியாக ஏவுகணைகள் ஆறுமுகத்தாரை நோக்கிப் பறந்துகொண்டிருந்தன.

"தொடங்கீட்டாள்...இவள் ஒருத்தியோட கொஞ்சம் சவுண்டை உயத்தினாலும் சண்டைக்கு வாறாள்...வரவர நான் ஆம்பிளை எண்ட நினைப்பே அவளுக்கு மறந்து போச்சு...இவளுக்கு காதைப் பொத்தி ரண்டு போட்டு நான் ஆம்பிளை எண்டதை ஞாபகப்படுத்தவேணும்.."ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்துக்கொண்டார்..வழமையாக சரசுடன் நடக்கும் ஒவ்வொரு சண்டையிலும் ஆறுமுகத்தார் இப்படித்தான் மனதிற்க்குள் நினைப்பதுண்டு..ஆனால் ஒருபோதும் நடைமுறைக்கு வந்ததில்லை..சரிசரி விடடி...இப்ப என்னத்துக்கு கத்துறாய்...? என்னை விசயத்தை சொல்லவிடு..உப்பிடிக் கத்தினியெண்டால் நான் சொல்லவந்ததையும் மறந்து போவன்..சரசுவை ஒருமாதிரி சமாளிச்சுப் போட்டு ஆறுமுகத்தார் விசயத்தை சொல்லத்தொடங்கினார்..

ரவுனுக்குப் பின்னால பொதுக்கிறவுண்டுப் பக்கமா நிண்ட இந்தியன் ஆமியின்ர கண்ணில றோட்டைக் கடந்துகொண்டிருந்த பெடியங்கள் எத்துப்பட சண்டை தொடங்கீட்டுதடி...நாலைஞ்சு ஆமிக்காரர் சரிபோலக் கிடக்கு...பெடியங்களின்ர பக்கச் சேதம் தெரியேல்ல...சுட்டுக்கொண்டு பெடியள் எங்கடை ஊர்ருக்கதானாம் இறங்கினவங்கள்...ஆமி வடக்குப் பக்கத்தாலை சனத்தைச் சாய்ச்சுக்கொண்டு வாறான்...ரவுண்டப்பு போலக்கிடக்கு..நான் உள்ளொழுங்கையளுக்காலை சைக்கிலை விட்டு ஆமியின்ர கண்ணில தட்டுப்படாம ஓடியெல்லே வந்தனான்..ஆறுமுகத்தார் சொல்லி முடிக்க கீழை விழுற காற்சட்டையை ஒரு கையாலை பிடிச்சுக்கொண்டு மற்றக்கையாலை பனையோலைக் காத்தாடியையும் பிடிச்சுக்கொண்டு ஆறுமுகத்தாற்ரை சின்னவன் வேகமாக வந்து பிறேக் அடிச்சு ஆறுமுகத்தாற்ரையும் சரசின்ரையும் மூஞ்சையை மாறிமாறிப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்...

ஆறுமுகத்தாருக்கு சின்னவன்,பெரியவன்,மூத்தவன்,கடைசி,நடுவிலான் எல்லாம் அவன் தான்..ஏனெண்டால் ஆறுமுகத்தாருக்கு அவன் தான் ஒரே ஒரு பெடியன்...வயசு பத்து...என்னடா முழுசுறாய்...?நான் சந்தைக்குப்போக நேற்றுப்போட்ட என்ர சேட்டுப் பொக்கற்றுக்கை காசேதும் களவெடுத்துப் போட்டியோ..? உண்மையைச் சொல்லிப்போடு...ஆறுமுகத்தார் பெடியனை அதட்டுகிறார்...உன்ர பொக்கற்றுக்க ஒரு சல்லிக்காசு இருக்குமே எண்டமாதிரி ஆறுமுகத்தாரை ஒரு நக்கல்ப் பார்வை பார்த்துவிட்டு "இயக்க அண்ணையாக்கள் எங்கட கிணத்தடி வேலிக்கை கொஞ்ச உடுப்பும் ரண்டுமூண்டு குண்டையும் செருகி மறைச்சுப்போட்டு சுந்தரத்தின்ர பத்தைக்காணிப்பக்கமா ஓடிப்போகினம் அம்மா"எண்டு பெரிய குண்டொன்றை ஆறுமுகத்தாற்ரை தலையிலை தூக்கிப் போட்டான் சின்னவன்..ஆறுமுகத்தாருக்கு அஞ்சும்கெட்டு அறிவும்கெட்டு தலைசுத்துற மாதிரி இருக்கு...துலைவார் உவ்வளவு வீடுவளும் இருக்க என்ர வீட்டு வேலியே கிடைச்சுது குண்டுவைக்க...பயத்திலை என்ன செய்யிறதெண்டு தெரியாமல் மனதிற்க்குள் திட்டிக்கொண்டிருந்தார் ஆறுமுகத்தார்...இப்ப ஆறுமுகத்தாருக்கு யமன் கறுப்பு வெள்ளையிலை மங்கலாகக் காட்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தான்...

ஆறுமுகத்தாருக்கு கையும் வேலை செய்யுதில்லைக் காலும் வேலை செய்யுதில்லை...கைகால் வேலை செய்யாட்டிப் பரவாயில்லை...பயத்திலை மூளையும் வேலை செய்யுதில்லை...மண்டை எல்லாம் எம்ப்ரியாக் கிடக்கிறமாதிரி ஒரு பீலிங்...ஆறுமுகத்தார் குண்டு செருகியிருக்கிற வேலியைப்போய் எட்டிப் பாக்கிறதும் குசினிக்குத் திரும்பி வாறதுமாய் நடந்து திரிகிறார்...பெடியனுக்குத் தகப்பனைப் பார்க்கச் சிரிப்பாய்க் கிடக்கு...அம்மா அப்பாவுக்கு ஏதோ ஆக்கிப்போட்டுது போலக்கிடக்கெண்டு தாயின்ர காதுக்கை குசுகுசுக்கிறான்...ஆறுமுகத்தாருக்கு வாற விசருக்கை பெடியனும் தாயும் நிலமை புரியாமல் பகிடிவிட்டுக் கொண்டு இருக்கிறதைப் பார்க்க சரசின்ர மூஞ்சையை பக்கத்திலை கிடக்கிற சருவச்சட்டியாலை அடிச்சு நெளிக்கவேணும் போலக்கிடக்கு...ஆனால் ஆறுமுகத்தாரால் வீட்டில் கோபப்பட மட்டும்தான் முடியும்...உணர்ச்சி வசப்பட்டு சரசின் மேல் கைவைத்து விட்டால் அப்புறம் விளைவு பலமாதங்களாக வீட்டில் நீடிக்கும் என்பது ஆறுமுகத்தாருக்கு நன்கு தெரியும்...அதனால் ஆறுமுகத்தார் தனது கோபத்தை மேய்ந்து கொண்டிருக்கும் கோழியின்மேல் அல்லது எதுவும் புரியாமல் நடக்கிற சண்டையைப் பார்த்து வாலாட்டிக்கொண்டிருக்கும் நாயின்மேல்க் காட்டுவதுண்டு...இந்தமுறை அப்படி வாயில்லாத ஜீவன் எதுவும் கால்கைக்கு எட்டும் தூரத்தில் இல்லாத காரணத்தினால் வந்த கோபத்தை தனக்குள்ளே அடக்கியபடி அடுத்தகட்டத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தார்...

நாய்கள் குரைக்கிற சத்தம் கிட்டவருகுது...ஆனபடியால் ஆமியும் சனத்தைச் சாய்ச்சுக்கொண்டு கிட்டக்கிட்ட வந்து கொண்டிருக்கவேணும்..எடியேய் உப்பிடியே துலாக்கால் மாதிரி நெட்டுக்குத்தி நிக்காமல் தாலிக்கொடி,சங்கிலி,காப்பு எல்லாத்தையும் கழட்டி ஒரு ரின்னிலைபோட்டு மூடித்தாடி எங்கையாவது தாட்டுவைப்பம்...உவங்கள் ரவுண்டப்புக்கு எங்களை அனுப்பிப்போட்டு வீட்டிலை கிடக்கிற எல்லாத்தையும் சுருட்டிக்கொண்டு போயிடுவாங்கள்...சரசு ஆறுமுகத்தாரின் ஆணையைக் கேட்டதும் மின்னலாகச் செயற்ப்பட்டு போனமாதம் முடிஞ்சுபோன நெஸ்ரமோல்ற் ரின்னுக்கை எல்லா நகைகளையும் கழட்டிப்போட்டுவிட்டு பெடியன்ர இடுப்பிலை கட்டியிருந்த அரைஞ்ஞான் கொடியையும் அவிழ்க்கப்போக பெடியன் அவிழ்க்க விடமாட்டன் எண்டு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான்..."சனியன் எனக்கெண்டு வில்லனா வந்து வாய்ச்சிருக்கு...நேரங்காலம் தெரியாமல் திணவெடுத்துக்கொண்டு..."ஆறுமுகத்தார் எரிஞ்சு விழுந்தபடி முற்றத்திலை பாகற்க்கொடிக்கு முட்டுக்கொடுத்திருந்த பெரிய அலம்பல்தடியை எடுத்துக்கொண்டு மகனை நோக்கி ஓடிவர சரசு நிமிர்ந்து ஆறுமுகத்தாரை ஒரு பார்வை பார்த்ததும் நீயும் உன்ர பெடியும் எக்கேடாவது கெட்டுப்போங்கோ எனக்கென்ன எண்டபடி பெடியனுக்கு அடிக்கமுடியாமல் போய்விட்டதே என்ற அவமானத்துடன் அலம்பல்த்தடியை தூர எறிந்துவிட்டு பெடியனின் நக்கல்ப் பார்வையைச் சகிக்க முடியாமல் ஆமி வாறானோ பார்ப்பம் எண்டு படலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்....

அதுசரி எங்கையப்பா சந்தையிலை முருக்கங்காய் வித்தகாசு..? ஒருமாதிரி மகனின் அரைஞ்ஞான் கொடியை அவிழ்த்து ரின்னுக்கை போட்டபடி ஆறுமுகத்தாரை நோக்கி அடுத்த ஏவுகணையை வீசினாள் சரசு...இந்தப் பரபரப்புக்கையும் உவள் உதை மறக்கேல்லை..எந்த நேரத்திலை இவளைத்தாய் பெத்தாளோ...? மனதிற்க்குள் திட்டியபடி"எடியேய் ஆமி ரவுண்டப் பண்ணிக்கொண்டு வாறான் உனக்கு உதே இப்ப அவசரம்...முதலில அவங்களிட்டை இருந்து நாங்கள் உசிரோடை தப்பவேணுமெண்டு முருகனுக்கு நேர்த்திவை...அதைவிட்டிட்டு முருக்கங்காய் அதுஇதெண்டுகொண்டு..விசரி.."ஆறுமுகத்தார் கதையாலை மேவிப்பாய்ஞ்சு சரசை அடக்கப் பார்க்கிறார்...

ஆனால் உந்த மாய்மாலங்களெல்லாம் சரசுவிடம் எடுபடாது...எடுபடாதெண்டு ஆறுமுகத்தாருக்கும் வடிவாய்த்தெரியும்...எண்டாலும் ஆமிப்பயத்திலை மறந்துபோய் விடுவாளெண்டு ஆறுமுகத்தாரிற்க்கு அடிமனதில் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது...அந்த நம்பிக்கையிலைதான் உந்தப் பரபரப்பிலும் முருக்கங்காய் வித்த காசிலை முக்கால்வாசிக்கு வாறவளியிலை நிண்டநிலையிலை தவறணையிலை சில போத்தல்களை வாங்கி மளமளவெண்டு வயிற்றுக்குள் இறக்கிவிட்டு வந்திருந்தார்...ஆறுமுகத்தார் முழிக்கிற முழியிலையும் அவசரப்பட்டு கதையை மாத்திற விதத்திலையும் சரசுவுக்கு விளங்கீட்டுது காத்து கள்ளுக்கடைப் பக்கம் அடிச்சிருக்கெண்டு...உந்த ஆமிப்பிரச்சினைக்கையும் கள்ளின்ர கிளுகிளுப்பு கேக்கிற உங்களையெல்லாம் எந்தச் சீர்திருத்தப் பள்ளியிலையும் விட்டுத்திருத்தேலா..அங்கை இருக்கிறவங்களையும் குடிகாறர் ஆக்கிப்போடுவீங்கள்...சரசு திட்டித்திட்டி வீட்டுக்கோடிக்கை நகைப்பேணியை மண்ணைவெட்டித் தாட்டுக்கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரத்திலை ஆமி ஆறுமுகத்தார் வீட்டுப்பக்கம் வந்து சேர்ந்துவிட்டிருந்தான்..எல்லோரையும் சாய்ச்சுக்கொண்டுபோய் ஊருக்கு வெளியிலை வயல்க்கரையிலை இருந்த பிள்ளையார் கோவிலுக்கை இருத்திவிட்டிருந்தான்...மழைக்குக்கூட கோயில்ப்பக்கம் ஒதுங்காத சனமும் சாய்பட்டு வந்திருந்தது...அரைகுறைத் தமிழ் தெரிஞ்ச கூர்க்கா ஆமிக்காறன் ஒருத்தன் கையிலை கத்தியொண்டை வைச்சுக்கொண்டு புலி உங்கடை ஊருக்கைதான் ஓடிவந்தது...உங்களில யாரோதான் ஒளிச்சு வச்சிருக்கவேணும்...இல்லையெண்டாப் புலி ஓடினதையாவது பாத்திருக்க வேணும்...எங்கபோச்சுதெண்ணு உண்மையைச் சொன்னா உங்களை உசிரோடை விடுவன்..இல்லையெண்டா..மிச்சம் சொல்லாமல் கத்தியை எடுத்து தன்ர கழுத்தடியிலை வைச்சு அக்சனிலை செய்து காட்டிக்கொண்டிருந்தான்...

அவன் சொல்லி முடிக்க கோயிலுக்கை குந்தியிருந்த கூட்டத்துக்கிடையிலை நந்தியிருந்த பக்கமாக ஏதோ சலசலப்பு...அந்தப்பக்கமாய் பெண்களின் லைனில் இருந்த செல்லம்மாக்கிழவிக்கு பயத்திலை கோயிலுக்குள்ளையே யூரின் போய்விட்டிருந்தது...செல்லமாக்கிழவிக்கு வயது எண்பது...கூர்க்காவையும் கத்தியையும் பர்த்ததும் செல்லம்மாக்கிழவிக்கு உடம்பின்ர கொன்றோல் கையைவிட்டுப் போயிருந்தது...அவளது யூரின் நந்தியைக் குளிப்பாட்டும் தண்ணீர் வழிந்தோடுவதற்க்கா
நிலத்தில் கட்டியிருந்த பீலி(வாய்க்கால்)க்குள் கலந்து கடவுளின் தீர்த்தத்தில் சங்கமமாகிக்கொண்டிருந்தது...சிறுநீர் நெடி கோயிலுக்குள் வீசிக்கொண்டிருந்த ஊதுபத்தி,சந்தனம் மற்றும் பன்னீர் வாசங்களையும் ஓவர்ரேக் பண்ணிக்கொண்டிருந்தது...

தாயின்ர மடியிலை இருந்து கூர்க்காவையே வைச்சகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த சரசின்ர மகன் திடீரென்று யாரும் எதிர்பார்க்காமல் "சேர் எனக்குத்தெரியும்,சேர் எனக்குத்தெரியும்" என்று கத்ததொடங்கியிருந்தான்...ஆம்பிளைகளின்ர வரிசையிலை இருந்த ஆறுமுகத்தார் மகன் கத்திறதைப் பார்த்ததும் தங்கடை கதை இண்டைக்கு கோயிலடியிலை முடிஞ்சுதெண்டு முடிவெடுத்திட்டார்...உனக்கொரு கண்டமிருக்கெண்டு சொன்ன சாத்திரி அது உன்ர மகனின்ர வடிவிலை இருக்கெண்டதைச் சொல்லவே இல்லையே...ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்தபடி தான் இருந்த இடத்தில் இருந்து எழும்பி பொம்பிளைகள் இருந்த வரிசைக்குள்ள புகுந்து மகனிருந்த பக்கமா விழுந்தடிச்சு வேகமாய் ஓடத்தொடங்கியிருந்தார்...

இதற்க்கிடையில் சரசு வேகமாகச் செயற்ப்பட்டு இரண்டுதடவைக்குமேல் மகனைக் கத்தவிடாமல் அவன்ர வாயைத் தன்ர கையாலை பொத்தி காதுத்தசை பிய்ந்து விழுகிறமாதிரி பெடியனுக்கு கிள்ளிவிட்டிருந்தாள்... அவன் கத்திறதை மறந்து காது வலியில் துடித்துக்கொண்டிருந்தான்...நல்லவேளை அவன் கத்தினது கூர்க்காவின் காதில் விளவில்லை...கத்தியோடை நிண்ட கூர்க்காவுக்கு இடதுபக்கக் காது செவிடாக இருக்கவேண்டும்...ஏனெண்டால் கூர்க்கா ஒரு சைற்றாகப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான்..கூர்க்காவின் இடதுபக்கக் காதுதான் இவர்கள் பக்கமாக நோக்கிக்கொண்டிருந்தது..இல்லையெண்டால் சனத்தின்ர சத்தத்திற்க்கை பெடியன்ர சத்தம் அடங்கிப்போயிருக்கவேணும்...எது எப்படியோ ஆறுமுகத்தாரின் நல்லகாலத்திற்க்குப் பெடியன் கத்தினது அவன் காதில் விழவில்லை...ஆனால் ஆறுமுகத்தாருக்குக் கண்டம் வேறுவிதமாக வந்திருந்தது..

ஆறுமுகத்தார் தான் இருத்தியிருந்த வரிசையைக் குழப்பி பெண்கள் பக்கமாய் ஓடுவதைப் பார்த்த கூர்க்காவிற்க்கு கோபம் தலை மண்டைக்கு ஏறியிருந்தது...ஆறுமுகத்தாரை தனக்குக்கிட்ட கூப்பிட்ட கூர்க்கா சேர் எண்டு ஏதோ சொல்ல ஆறுமுகத்தார் வாயைத்திறக்க முன்னம் அடிஅடியெண்டு அடிச்சு கோவில் வெளிவீதிக்கு இழுத்துக்கொண்டு போயிருந்தான்...வெளிவீதியில் கோவில் ஜயர் நடுங்கியபடி முழங்காலில் வெயிலுக்கை நின்றுகொண்டிருந்தார்...ஜயருக்குப் பக்கத்திலை இரண்டு ஆமிக்காரர் பூவரசந்தடியுடன் ஜயரை விசாரிச்சுக்கொண்டிருந்தார்கள்..

ஜயர் தான் கும்பிடுகிற பிள்ளையார் சத்தியமாய் யாரும் ஓடினதைக் காணவில்லை என ஒப்பாரி வைச்சு அழுதுகொண்டிருந்தார்...உள்ளே மூலஸ்த்தானத்தில் பிள்ளையார் கையில் மோதகத்துடன் ஜயர் அடிவாங்கிறதைப் பார்த்துக்கொண்டு உட்காந்திருந்தார்...ஆறுமுகத்தாரை ஜயருக்குப் பக்கத்திலை இருத்திவிட்டுப் போயிருந்த கூர்க்கா ஒரு அஞ்சு நிமிசத்திலை யார் வீட்டிலோ இருந்து ஒரு பிக்கான் மண்வெட்டியுடன் வந்திருந்தான்...ஆறுமுகத்தாருக்கு ஜயரைப் புதைக்கக் குழிவெட்டுறதுதான் தண்டணை...ஆறடியிலை ஜயரை முழுசாமூடுகிறமாதிரிக் கிடங்கு வெட்டவேணும்..ஏலாதெண்டு நிமிர்ந்தால் பூவரசந்தடியாலை அடிவிழும்...

ஆறுமுகத்தார் வேர்க்கவேர்க்க கிடங்கு வெட்டிக்கொண்டிருந்தார்...அரைக்குழிதாண்ட அடித்த கள்ளெல்லாம் இறங்கிவிட்டிருந்தது...இடைக்கிடை ஜயரைக் குழிக்குள் இறக்கி அளவு பார்த்துக்கொண்டிருந்தாங்கள் ஆமிக்காறர்...இது முடிய என்னைத்தாக்க என்னைக்கொண்டே இன்னொரு குழி வெட்டச்சொல்லப்போறாங்களோ தெரியாது...ஆறுமுகத்தாருக்குப் பயத்திலையும் களைப்பிலையும் இதயம் படக்குப்படக்கென்று அடித்துக்கொண்டிருந்தது..அருகிலிருந்த ஜயர்,மனைவி பிளைகளின் பெயரைச்சொல்லிப் பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தார்..ஆறுமுகத்தாருக்கு ஜயரைப் பார்க்கப் பாவமாயிருந்தது...ஆனால் அந்த நிலைமையில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது...?

இப்ப குழி வெட்டி முடிச்சாச்சு...ஜயரை உள்ள இறக்கிவிட்டாங்கள்...தலை வெளியே தெரியவில்லை..பயத்திலை நல்ல ஆழமாத்தான் வெட்டியிருக்கிறன்போல...ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்துக்கொண்டார்...இனி மண் அள்ளிப்போட்டு ஜயரை மூடவேணும்...அதையும் ஆறுமுகத்தார்தான் செய்யவேணும்...ஆறுமுகத்தார் மண் அள்ளிப்போடத் தயாரானபோது ஜயரை வெளிவீதியில் புதைக்கிற விடயமறிந்த ஜயரின் மனைவியும் பிள்ளைகளும் கோவிலுக்குள் இருந்து ஒப்பாரிவைத்தவாறு ஓடிவந்து கோவிலடியில் நின்ற ஆமிக்கொமாண்டரின் காலில் விழுந்து ஜயரை விட்டுவிடும்படி கதறி அழுதுகொண்டிருந்தனர்...ஆமிக்கொமாண்டர் கையைக் காட்டியதும் ஜயரைக் கிடங்குக்குள் இருந்து வெளிய தூக்கி ஆமிக்கொமாண்டரிடம் கொண்டுபோனார்கள்...ஜயரைக்கொண்டுபோனதும் ஆறுமுகத்தார் "ஜயர் தப்பீட்டார்..இனி என்னைத்தான் இந்தக்குளிக்குள்ளபோட்டு மூடப்போறாங்கள்போல...இன்னொரு குழிவெட்டுற வேலை மிச்சம்.."பயத்தில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்...

ஜயரை விசாரிச்ச கொமாண்டர் இனிமேல் ஊருக்குள்ளை எல்ரிரி எங்கை வந்தாலும் நீதான் எங்களுக்கு ரெக்கி குடுக்கவேணும்...அதுவரை உந்தக்குழியை நீ மூடக்கூடாது... சொல்லாவிட்டால் உந்தக்குழிக்கைதான் உன்ர கதை முடியும்எண்டு ஜயருக்கு வார்னிங் குடுத்து அனுப்பியிருந்தான்...அதுக்குப் பிறகு ஜயருக்கு கனவிலும் நினைவிலும் அந்தக் குழியின்ர ஞாபகம்தான்...எப்ப வரப்போகிறாய் எண்டு வாயைப் பிளந்து காத்திருக்கும் மலைப்பாம்புபோல் ஜயருக்கு அந்தக்கிடங்கு ஒவ்வொரு நாளும் காட்ச்சிகொடுத்துக்கொண்டிருந்தது...அன்று மாலைவரை சாப்பாடு தண்ணியில்லாமல் சனத்தைக் கோவிலுக்குள் சுற்றிவளைத்து வைத்திருந்துவிட்டு மாலை ஜந்துமணியளவில் எல்லாரையும் அவரவர் வீட்டுக்கு கலைந்து போகும்படி ஆமி அறிவித்திருந்தான்...ஆமி போ எண்டு சொன்னபிறகும் சனம் கோவிலைவிட்டு வெளியே போகத்தயங்கிக்கொண்டிருந்தது...வெளியிலை ஊரெல்லை வரை கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் ஆமி நடமாட்டம்தான் தெரியுது...

சரசுதான் கூட்டத்திலை இருந்து முதல் ஆளா வேகமாய் வெளிக்கிட்டது...சரசுக்கு மண்டைமுழுக்க தாட்டுவைத்த நகைப்பேணியின் ஞாபகமே ஓடிக்கொண்டிருந்தது...அதுதான் சரசு முதல் ஆளாய் விறுவிறெண்டு வீடுநோக்கி கிளம்பி விட்டிருந்தாள்..."உவளுக்கென்ன விசராக்கிப்போட்டுதே...சனத்தோட சேர்ந்து வெளிக்கிடுவமெண்டில்லை...தனிச்சுப் போய்த் தனிப்பிணமாய்க் கட்டையிலை போகப்போறன் எண்டு அடம்பிடிக்கிறாள்..."ஆறுமுகத்தார் பெடியனையும் இழுத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் சரசுவுக்குப் பின்னாலை திட்டித்திட்டிப் போய்க்கொண்டிருந்தார்...சனங்கள் எல்லாம் தயக்கத்தோடை ஒன்றன்பின் ஒன்றாக சரசையும் ஆறுமுகத்தாரையும் பின் தொடர்ந்து மெதுமெதுவாகப் புறப்படத்தொடங்கியிருந்தார்கள்...ஊர்ப்பக்கம் பெரும்புகைமண்டலமாகத் தெரியுது...பிளாஸ்ற்றிக் தீஞ்ச மணம்போல ஒருவித நெடி ஒண்டு காத்தில அடிச்சுக்கொண்டிருக்கு...சரசுவுக்கு ஊருக்கை ஏதோ விபரீதம் நடந்திட்டுதெண்டு விளங்கீட்டுது...

ஊருக்குள்ளை வீடுகள் எல்லாம் எரிஞ்சு கொண்டிருக்கு...ஆமிதான் சனத்தை எல்லாம் கோவிலுக்கை அனுப்பிப்போட்டு புலி பதுங்கி இருக்குமெண்டு தேடுகிற அலுப்பிலை வீடுகளுக்கெல்லாம் நெருப்பு வைச்சிருந்தான்...மாட்டுக்கொட்டிலைக் கூட விட்டுவைக்கவில்லை...சரசு தன்ரை வீட்டுக்கு முன்னாலை வந்து நிண்டதும் "துலைவார் என்ர வீட்டையும் எரிச்சுப்போட்டாங்கள்..போச்சுப் போச்சு...நாங்கள் குறுணிகுறுணியாய்ச் சேர்த்துகட்டினவீடு,சேர்த்த சாமானுகள் எல்லாம் போச்சுதெண்டு நிலத்தில விழுந்து தலையிலை அடிச்சு ஒப்பாரி வைச்சுக்கொண்டிருந்தாள்...ஆறுமுகத்தார் தான் சொன்னபடி செய்ததாலைதான் நகைபேணி தப்பினது எண்டு சொல்லி தன்ர திறமையை மனுசிக்கு முன்னாலை சொல்லிப் பெருமைப்பட ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கெண்டு அந்தச் சோகத்திலையும் கொஞ்சம் சந்தோசத்தோடை நகைப்பேணியை வெட்டி எடுத்துக்கொண்டிருந்தார்...கொஞ்சம் கொஞ்சமாக துலைவார்,நாசமறுப்பார்,குறுக்காலைபோவார் என்கிற ஒப்பாரிகள் அதிகரிச்சு எல்லாப்பக்கத்தாலையும் ஊர்முழுக்கக் கேட்டுக்கொண்டிருந்தது...ஊரை மூடிமறைச்சுக்கொண்டிருந்த புகைக்குள்ள அந்த ஏழைகளின் ஒப்பாரியும் மூடுப்பட்டு உலகின் காதுகளுக்கு எட்டாமல் போய்க்கொண்டிருந்தது...

இது நடந்து பலமாதங்களுக்குப் பிறகு....
1989ம் ஆண்டின் இறுதிக்காலங்களில் அமைந்த ஒரு அமைதியான மாலை..தோட்டத்தில் இருந்து மண்வெட்டியோட வந்துகொண்டிருந்த ஆறுமுகத்தாரின் கண்ணில் முகத்தில் கவலையோடு போய்க்கொண்டிருந்த ஜயர் தென்படுகிறார்..."ஜயா உங்களுக்கு விசயம் தெரியுமே...? உவங்கள் இந்தியன் ஆமியெல்லோ திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறாங்களாம்..."ஆறுமுகத்தார் சொல்லி முடிக்க ஜயருக்குத் இப்பதான் தான் இன்னமும் உயிரோட இருக்கிறன் எண்ட ஞாபகம் வருகுது..."உண்மையாகவே ஆறுமுகத்தார்..? அப்ப உந்த மண்வெட்டியை ஒருக்கா இரவல் தருவீரே..?உமக்குப் பின்னேரம் தாறன்..." ஆறுமுகத்தாரிடம் இருந்து மண்வெட்டியை வாங்கித் தோளில்ப் போட்டுக்கொண்டு முகத்தில் ஒருவித நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் ஆறுமுகத்தார் தனியாளா வெட்டின ஆறடிக்கிடங்கை ஜயர் தனியாளாத்தூர்க்க வெகு வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்...

Thursday 2 February 2012

புரிந்துகொள்ளும் புரியாத மொழிகள்....

யார் சொன்னது
வழிந்தோடும் என் இளமைக்கால
நினைவுகளை மேய்ந்தபடிபோகும்
வயல்க்கரை மாடுகளின் பாசைகளைப்
புரிய முடியாதென்று...?

யார் சொன்னது
நான் தொலைத்துவிட்ட சிறுவன்
நடந்துதிரிந்த வீதிகளில்
எஞ்சியிருக்கும்
புறாக்களினதும் புலுனிகளினதும்
கவலைப் பாட்டினை
விளங்கமுடியாதென்று....?

யார் சொன்னது
வெட்டைக் காணிகளின்
சம்புப் புற்களுக்கிடையே
அங்கொன்றும் இங்கொன்றுமாகக்
குந்தியிருக்கும் தும்பிகளின்
இறக்கைகளில் இருந்துதொடங்கும்
என் பால்யகாலக் கவிதைகளைப்
படிக்க முடியாதென்று...?

அவைகளின் மொழிகள்
உனக்கெப்படித் தெரியுமென்ற
வியாக்கியானங்களை விலத்திவையுங்கள்...
அவைகளின் மொழிகளில்தான்
மீட்டிக்கொள்கிறேன்
கிழித்து வீசப்பட்டதால்
பொருளை இழந்துபோன
கவிதைபோலக்
காலம் கடந்துபோகக்
காலாவதியாகிக்கிடக்கும்
என் மழலைக்காலங்களை...