Pages

Monday 21 October 2013

பெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று..


இப்போதெல்லாம்
நாம் சந்தித்த இடங்களில்
யாருமே இருப்பதில்லை...
சிந்திக்கிடக்கின்றன
காய்ந்துபோன
சில மஞ்சள் பூக்களும்
நம் நினைவுகளும்....

காதலும் கவிதைகளுமாய்
மாறி மாறி துலங்கிய அந்நாட்கள்
தொலைந்துவிட்டன..

மாலை வெய்யில் தன் மஞ்சள்
நிறமிழந்த ஒரு கோடையில்தான்
நேசிப்பை விற்று
காய்ந்துபோனது உன் இதயம்...

நினைத்துப்பார்க்கையில்
நெஞ்சத்தின் ஆழத்துள்
மெல்ல இறங்குமொரு முள்..

அந்தரவெளியும்
கலவர நிழலுமாய்
நூறாயிரம் கதைகளை
சுமந்தலையும் இதயத்தை
உடைத்துவிடுகிறது
ஒற்றைக்கண்ணீர்த்துளி..

பொழுதில்லை அழுவதற்கும்..

நினைத்துக் கவலையுற்று
துன்புற்றுவிட்டு பனிக்குளிரில்
வேலைக்கு இறங்கிச்செல்லவே
போய்விடுகிறது நாள்...

என் கவலை எல்லாம்
பறவைகள் காதல் செய்ய
படர்ந்துகிடந்த
அவ்வீதியோர மரங்களுக்கு
இலையுதிர்காலத்தைக் கூட்டிவந்த
முதல் பறவை
நாமாக இருக்கக்கூடாதென்பதுதான்...

கண்ணீரால் முடியும் என் கவிதைகள்...


காதல் வெளியில்
தூக்கம் தொலைத்த
இலையுதிர்கால
இரவொன்று
ஒளிர்கின்றது...

இதயத்தில் இருக்கும் 
பிரிவுத்துயர் தணல்கின்ற
எரிமலைகள்
எரித்துவிடுகின்றன
ஒளிர்கின்ற இரவை..

அறையெங்கும்
நிரம்பிக்கிடக்கும்
விளக்கொளியின் நடுவே
கண்களுக்கு தெரியாமல்
குறுக்கும் மறுக்குமாய்
அலைகின்றன நினைவுகள்...

பாறையெனக் கிடந்த
உன் பொழுதுகளின் மீது
பக்குவமாய் நான் வரைந்த
காதல் ஓவியத்தை
நீ கிழித்தெறிந்த போது
சிதறியவைகளாக இருக்கலாம்..

புன்னகை எழுதிய முகத்தை
கண்ணீர் மூடிமுடிக்கும் முன்
நினைவுச்சிதறல்கள்
சுழன்றெழும் வீச்சில்
சிறைப்பிடிக்க வேண்டும்
கவிதைகளில்...

பாதைகள் எங்கும்
காதலுடன் பரவிக்கிடந்த
பூக்களை
வாரி அணைக்க சேர்த்துவைத்த
அன்பை எல்லாம் மொத்தமாய்
உன் பிரிவு தின்றுவிட்டது..

வலியைத்தவிர
இனி எதைக்கொண்டு நிரப்புவேன்
என் கவிதைகளை..?

வெறும் ஆற்றாமைகளும்
பிரிவும்
வலியுமாய் என் கவிதைகள்
வீங்கிப்பருத்திருப்பதாக
நீங்கள் சொல்லலாம்...

சொல்லுங்கள்..

பறித்தெடுத்த பூக்களால்
நிறைந்திருக்கும்
வரவேற்பறைகள்
அழகும் வண்ணமுமாய்
ஒளிர்ந்திருக்கலாம்

ஆனால்..

பூக்களைத்தொலைத்த
மரங்களின் உணர்வுகள்
ஒருபொழுதும்
பூத்துக்கிடப்பதில்லை..

தன் நிலவைத்தொலைத்த
என் கவிதைகளும்தான்..

உன்மேலான காதலால்
உருகும் இதயத்தின் பாடலின்
துயரத்தில் கரைந்து
துயிலாதிருக்கிறது
இந்த இரவு..

எழுதுகோல் தவிக்கிறது
எல்லாவற்றையும்
சிறைப்பிடிக்க...

முடிவதில்லை..

எப்பொழுதும்
புன்னகை எழுதிய முகத்தை
கண்ணீர் மூடி
முடித்துவைக்கிறது
என் கவிதைகளை...

நிறைவேறாத அன்பு
நீர்ச்சுழியாய்
இப்புறமும் அப்புறமும்
இதயத்தை அலைக்க
நடுவில் இயல்பிழக்கிறேன்..

இவ்வழியா அவ்வழியா
எவ்வழியால்
எழுகின்றன நினவுகள்..?
 

பெய்து கொண்டே இருக்கட்டும் நினைவுகள்..




கனவுகளில்
காய்ந்த நிலத்தில்
விதைகளைதேடுகிறேன்
என் காதலை துளிர்ப்பதற்காய்..

மனவெளியெங்கும்
இன்னும் எழுதாத என் கவிதைகளைப்போல
காய்ந்துகிடக்கிறது
கண்ணீர் வற்றிய காதல் பூக்கள்..

ஆவியாகி
இன்னமும் பொழிவதற்காய்
சிலிர்த்துக்கொண்டே இருக்கின்றன
ஒரு மாலைப்பொழுது
எமை நனைத்த மழைத்துளிகள்..

நாம்தான்
கரைபிரித்துக்கட்டப்பட்ட
துருவ நதிகளாக
திசை பிரிந்து...

எம் காதலுக்கு ஒளியேற்றமுடியாத
சோகத்தில்
அழுதபடி கடந்துபோகிறது
ஒவ்வொரு இரவும் நிலவு..

இப்போதெல்லாம்
நாம்பேசிய வார்த்தைகளில்
சிதறிக்கிடக்கின்றன
அன்பைத்தொலைத்த
கண்ணீர்ப்பூக்கள்...

ஏன் மெளனம்
உன் கரைகளில்..?

உன்
எண்ணங்களை வனையத்தெரியா
வண்ணாத்திப்பூச்சி நீயோ..?

இல்லை
என் சோகங்கள் எழுதியகண்ணீர்த்துளிகள்
இன்னமும் உன் பூமியை சேரவில்லையோ..?

புரியவில்லை....

காதல் வெளியில்
பெய்யாத மழையில் நனைந்த
என் பாடலின் மீது நடந்து
எப்படி உன் நினைவுகள்
என்னுள்ளே நுழைகின்றன..?

காய்ந்த நிலத்தில்
புதைந்திருக்கும் காதலை
சுமந்தபடி
நிராகரிப்பின் ஒற்றைசாட்சியாய்
எப்படி
என் கனவுகள் மட்டும்
இன்னும் செழித்து வளர்ந்துகொண்டே இருகின்றன..?

மடியாத என் கனவுகளை கேட்டேன்..

முடியாத உன் என்றோ ஒரு இரவில
தொடங்கலாம் என் நினைவுகள்

நம்பிக்கைகள் கூச்சலிட்டன...!

Thursday 19 September 2013

நானென்பது யாதென்பேன்..?

நானென்பது யாதெனப் 
புரியவில்லை...

தேடித் தேடிக் களைத்து
முதிர்ந்த மனக்காலத்தின்
ஒரு மூலையில்
பெருங்கேள்விக்குறியுடன்
விழித்துக் கிடக்கிறது அறிவு...

நானென்பது யாதென்பேன்..?

எனை வனைந்த அனுபவங்களா..?
மூளைத்திரட்சிகள் எங்கும்
நீந்திக்கொண்டிருக்கும்
நினைவுகளின் தொகுப்புகளா..?
படித்து முடித்த புத்தகங்களா..?
நம்பும் நம்பிக்கைகளின் சாயைகளா..?
ஜீன்களின் வழி புகுந்த
காலப்படுக்கைகளில் புதைந்துகிடக்கும்
மூதாதைகளின் கனவுகளா..?

சொல்லற்று நிற்கிறேன்...

விளங்க முடியாப் புதிராக
வெளியிலிருந்து பார்க்கையில்
வியப்பாய் விரிகிறது
"நான்"...

ஆயினும்..

விலக்கமுடியாமல்
வழமைபோல்
ஆயிரம் கேள்விகளாய்
மனக்கடலை நிறைக்கின்ற
இன்னுமொரு நாள் துவங்குகிறது..

மலைகளில் இருந்து
இறங்கி
பெருக்கெடுத்தோடும் அருவியாய்
கேள்விகள்...

தேடித்தேடி திரிகிறேன்..

பெருவெளியில்
கழிவிரக்கத்துடன் படர்ந்துகிடக்கும்
காலத்தைப்போலவே
புரிகின்றனவே இல்லை
நள்ளிரவில்
எனை எழுப்பும் கேள்விகள்..

அழகின் வடிவம்
ஒளிரும் இரவே
சொல்...

நானென்பது யாதென்பேன்..?

Thursday 12 September 2013

ஆகையால் உதிர்ந்துகொண்டே இருக்கட்டும்..

பூக்களைப்பிய்த்தெறிந்த
காற்றுக்கு தெரியப்போவதில்லை
பூக்கள் மென்மையானவை
அழகானவை
அன்பை பரப்புபவை என்று...

ஆற்றாமையுடன் 
துவண்டுவிழும்
இதயமொன்றின்
பாடல்களைகேட்கும்
பொறுமையும்
அதற்கு இல்லை..

ஆயினும்...

இதயத்தின்பாடல்களை
கிழிந்து தொங்கும் இதழ்களின்
ஓவியத்தை
ஒடிந்த பல இறக்கைகள்
சுமந்துகொண்டுதான் செல்லும்..

அவற்றில் ஒன்றாய்
என் கவிதைகளும்
பயணிக்கலாம்..

என் நேற்றைவரை
எழுதி முடித்த
விதிக்கிழவன்
மார்பை பார்த்து
என் மலர் மனதை
பிய்த்தெறிய
காற்றை ஏவிவிட்ட
கதைக்கு நீதி கேட்க,
அவன் எழுப்பிய
ஆயிரமாயிரம் சிலுவைகளில்
அறையப்பட்டு
கனவழிந்து
கண்ணீராய் செத்துப்போன
காதல்களின்
மொழியாய் பேச
பூத்திருக்கலாம்
என்கவிதைகள்
உதிர்ந்துபோன
என் மனப்பூவின்
உக்கலில்
கருக்கொண்டு...

யாருக்கு தெரியும்...

ஈரக்காட்டுக்குள்
இடைவழியில் தங்க
ஒரு சிறு குடிசைபோல்
தன் நிலவைத்தொலைத்த
யாராவது ஒரு
ஊமைக்காதலனின்
ஒரு துளி கண்ணீருக்கு
சிறுகூடாய்க்கூட
இருந்துவிட்டும் போகலாம்
என்கவிதைகள்..

ஆகையால்...

கிறுக்கல்களாய்
உதிர்ந்துகிடக்கட்டும்
வெள்ளைத்தாள்களில்
என்காதல்...

வானம் பார்த்து
விதைத்தவை அல்ல
இவை...
உங்கள் வானங்களையே
கண்ணீர் மழையாக்கும்
வசியத்துடன்
விதைக்கப்பட்டவை...

சொல்லுங்கள்..

பசுஞ்சோலையாய் கிடந்த
பொழுதொன்றின் மீதான
பெருவலியோடமைந்த
பாடலொன்றின்
பெருமூச்சின் உஷ்ணம்பட்டும்
ஆவியாகாத
மனக் கடலும் உண்டோ...?

இங்கே...

காதல் மடிந்துபோன
ஆற்றின் கரைகளில்
செத்துக்கிடக்கும்
சிறுமீன்களாய்
அன்பு
வீசி எறியப்படிருக்கிறது

எந்த நினைவும்
அழிய மறுக்கும்
என் இதயத்தின் கவிதைகளை
எழுதி முடிக்க முடியாது..

ஆகையால்...

கிறுக்கல்களாய்
உதிர்ந்துகொண்டே இருக்கும்
வெள்ளைத்தாள்களில்
என்காதல்...

Monday 9 September 2013

பகல்கள் மீதான நினைவுகளால் இறக்கும் இரவின் பாடல்..

காற்றையும்
கடந்துபோகும் நிலவையும்
கரைந்துபோகும் இரவையும்
நினைவுகளால் கழுவிக்கொண்டே
தொலையும் இந்த நாளொன்றில்
கசிந்துகொண்டிருக்கின்றன
கண்ணீர்த்துளிகளாய்
ஞாபகங்கள்...

அன்புச்சிதைவுகளின்
காலப்படுக்கைகளுள்
புதைந்துபோய்விடாமல்
இன்னமும்
என் இமையோரத்தில்
எஞ்சி இருக்கின்றன
உன் மேலான பிரியத்தின் படிமங்கள்..

ஒப்புக்காகவும்
ஒப்பனைக்காகவும்
சிரித்தபடி
உப்புக்கரிக்கும் இமைகளின்
ஓரங்களில்
ஓலமிடும் விசும்பல்களாய்
கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறது
மனது தனியாக...

முன்னொரு நாள்
சேர்ந்து நடந்த
நீயில்லாத
தெருவொன்றில்
துருவக்காற்றில்
ஒடுங்கிப்போகும்
ஓரிரு ஓர்க் மரங்களும்
நடுங்கியபடியே கடந்துபோகும்
நாலைந்து சிறுவர்களும்
விளக்கமுடியாத அந்தரத்தை
விதைத்துவிட்டு
அந்நியமானவொன்றாகவே
போய்விடுகின்றனர்..

தளம்பல்களை வெளிவிடும்
ஒரு நீர்வட்டம் போல
ஏகாந்த பொழுதுகளில்
மனக்குழத்தில் இருந்து
ஏதிலியாய்
எழுகின்றன உன் நினைவுகள்..
உருவமற்ற அவற்றின் கனதிகளால்
இதயத்தில் இருந்து
வழிந்துகொண்டிருக்கிறது
ஆற்றாமையின் நிழல்..

கண்ணீரால் தூக்கழித்து
கவிதைகளினூடான
என் ஒவ்வொரு
தற்கொலையிலும்
நிராதரவான என் நேசிப்பின்
கைகளை நானே பற்றிக்கொள்ள
மீண்டும் கவிதைகளாய்
உயிர்த்தெழவேண்டியதாகிறது.....

காலம் என்
கவிதை மரணங்களில்
திருப்தி அடையாது
இனி நான் ஒருபோதும்
எழுதமுடியாத கவிதை ஒன்றை
எதிர்பார்க்குமானால்
மரணம் வரை காத்திருக்கட்டும்..

அதுவரைக்கும்...

தளர்ந்துகிடக்கும் மனதையும்
தாலாட்டவல்ல பாடல் ஒன்றை
தேவதைகளின் கொலுசுகளாய்
ஓசைலயமிட்டபடி
உங்கள் கவிதைகள் சுமந்துவரும் என்றால்
உங்களுக்கான கல்லறையின்
ஆத்மதிருப்தியின் வாசம்
அலாதியானது...அமைதியானது...
 

Thursday 25 July 2013

எதை எழுதுவேன் நான்...?

தாங்கவியலா 
வெறுமைகளில் அமிழ்ந்து
விழிகளில் நீர்வர
நினைவுகள் கரைந்தழிகிறது...
எழுதுகோலும்
வெற்றுத்தாளுமாய்
என் எதிரிலே...
எதை எழுதுவது...?

முகவரி இழந்து
முகமிழந்து 
முற்றத்து நிழல் இழந்து
ஊர் சுமந்த கனவிழந்து
உள்ளே வலி சுமந்து
அகதியாய்
உருக்குலைந்து கிடக்கும்
கதை எழுதவா..?

ஒளித்து ஒளித்து - தன்
இணையுடன் விளையாடும்
ஒற்றைப்பனை அணிலுக்கும்
விரத விருந்துண்டு
களைத்து
முற்றத்தில் 
துருத்திக்கொண்டு நிற்கும் 
வேம்பில்
கரகரத்த குரலில்
கரையும்
காக்கைக்கும்
கிடைத்த சுதந்திரம்
என் மண்ணில்
என் முற்றத்தில்
எனக்கு மறுக்கப்பட்டதை 
எழுதவா..?

என் பாடு பொருளாய்
பலகாலம் இருந்த
கொலுசொன்றின் ஒலிக்காக
மனசெல்லாம் காத்திருந்து
காலங்கள்
உருக்குலைந்து 
உள்ளே துருப்பிடித்து
மனச்சுவர்களில்
உக்கி உதிர்ந்து போனதை
எழுதவா..?

என் தேசத்தின் 
தெருக்களில் நிற்கும்
எருக்கலைக்கும்
நாயுருவிக்கும் கூட
எல்லாமாய்
எதுவுமாய்
வெளித்தெரியாமல்
உள்ளே ஒட்டி இருப்பவை
வேர்கள்...
ஊட்டி வளர்த்து - என்
உள்ளிருக்கும் ஆன்மாவை
உருவாக்கிய பாட்டியை
எங்கள் வீட்டின் 
வெளித்தெரியா வேரை
விட்டுப்போகும்படி
பிடுங்கி எறிந்த போரை
நீழ்கின்ற இரவினிலே
நினைவுகளினூடே
கொப்பளிக்கும்
அது தந்த வலிகளை
எழுதவா..?

உறவுகள் அறுபட
அகதியாய்
ஊர் விட்டு வந்து
பனி உதிர்ந்த வீதிகளில்
பாதை தெரியாமல்
கனவுகளை பரணில்
காயப்போட்டுவிட்டு
வயிற்றுக்கும்
வாழ்க்கைக்குமாய்
போராடும்போது
செருக்குடன் கடந்துபோகும்
செல்வந்த தமிழர்களின்
இரக்கமற்ற வார்த்தைகளை
இந்நாட்டின் நாசனாலிற்றி
என்ற திமிர்களை
புழுவைப்போல் எமைப்பார்க்கும்
எள்ளல்களை
எழுதவா..?

சுமை அமத்தும்
அகதி வாழ்க்கையில்
ஊற்றெடுக்கும்
விழி நீரை துடைக்க
ஒரு உறவும் இன்றி
உருக்குலைந்து
நிற்கதியாய் நின்றிருக்கும்
பொழுதுகளில் எல்லாம்
நாமிருக்கிறோம் என்று 
தானாடாவிட்டாலும்
தமிழனென்ற தசையாடிய
ஓடி வந்து தூக்கிவிடும்
ஊரில் பார்த்தறியா
உடன்பிறவா இரத்தங்களை
நினைக்கும்பொழுதெல்லாம்
பனி இரவிலும்
கண்கள் பனிக்க
உள்ளம் விம்மி அழும்
கதை எழுதவா..?

நெஞ்சுள் இருக்கும்
கறுத்த பக்கம்கள்
தெரியாமல்
உரித்துள்ள ரத்தங்கள் என்று
உரிமையுடன் எதிர்பார்த்த
உறவுகள் 
கழுத்தறுத்த 
கதை எழுதவா..?

இவை எல்லாம் பார்த்த 
கொதிப்பில்
தொல்லைகளை துடைத்தழித்து
எல்லைகள் வரையப்பட்ட
என் சுதந்திர மண்ணில்
ஒரு நாள் இறப்பேன் என்று
நெஞ்சுக்குள்
நெருப்பாய் வளர்த்த
கனவை
கடைசியாக தின்று முடித்த
முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த
காலமும் 
கண்ணீரும்
எம் வலிகளைப்போக்காத
கதை எழுதவா..?

வானம் பார்த்து
வரும் கண்ணீரில்
வடுக்களைத்
தடவிக்கொள்கிறேன்..
ஓ கடவுளே..
எதை எழுதுவேன் நான்..?
எல்லாக் கண்ணீரும்
என் வேலிகளை 
அரிக்கையில்...

அதுவரைக்கும் சொல்லிக்கொண்டிரு...


நான்
புல்லாங்குழலில் இருந்து கசியும்
ஒரு மெல்லிய இசையாக
உன்னை ரசிக்கிறேன்
நீ
புல்லாங்குழலுள் அடைபட்டு
துளைகளூடு வேளியேறும் காற்றாக்கி
என்னை வதைக்கிறாய்

நான்
பூவிலிருந்து ஒழுகும்
பரவச வாசனையாக
உன்னை நுகர்கிறேன்
நீ
பூக்களை தாங்கி நிற்கும்
ஊமைக் காம்புகளாக்கி
என்னை மறந்துபோகிறாய்

நான்
புத்தகங்களுக்கு நடுவே
பொத்திவைத்த மயிலிறகாக
உன்னை சேகரிக்கிறேன்....
நீ
புத்தகங்களுக்கு உள்ளே
கிழிந்துபோன பக்கங்களாக்கி
என்னை புரட்டிப்போகிறாய்...

நான்
எல்லாவற்றிலும் உன்னை
அழகாக ரசித்துக்கொள்கிறேன்
நீ 
அனைத்திலும் என்னை
அடிமையாக நினைத்துக்கொள்கிறாய்..

நான்
ஓயாத உன் கவனிப்பின்மைகளுக்கு நடுவே
கொடுக்க நிறைய அன்புடன்
காத்திருக்கிறேன்
நீ
பேசாது உன்
வனமங்களுடன்
எடுக்க ஒரு புன்னகையைகூடதர
நேரமின்றி இருக்கிறாய்

நான்
உயிர்பிரிந்தும்
பிரியாத
உன் நிழலாக வருகிறேன்
நீ
அருகிருந்தும்
எனை உணராத
உடலாக
தவிர்க்கிறாய்

நாம்
ஒன்றாய் இருந்தும்
ஒருவர் ஒருவராய்
ஒதுங்கி இருக்கிறோம்..
காலத்தை தின்றேனும்
நமக்கு
போதும் இந்த நாடகம் என்று
பொழுதுரைக்கும் அதுவரை
பொறுத்திருப்பேன்..

ஒடுங்கியும் அகன்றும்
வற்றியும் பெருகியும்
ஓயாமல் ஓடும்
ஆற்றைப்போலவே
விரையும் நம்காலம்
தன்கடலை சேருமுன்னே
நாம்
மீண்டும் ஒருதடவை
மனதால் சந்திப்போம்
காத்திரு..

என் அன்பின் மீது
உன் கூரலகால்
குருதிவடிய
எழுதிச்சென்ற வரிகளெல்லாம்
வலிகளாய் ஊர
உனக்காக உயிர்பிடித்திருப்பேன்
உன் மீதுள்ள பிரியத்தால்
காத்திரு...

காலங்கள் வயதுகளாய்
முதிர்ந்துபோகையில்
எல்லாவற்றையும்
உதாசீனப்படுத்தவைக்கும்
உன் இளமை இலைகள்
ஒரு கனவுபோல
உன்னை தனியே விட்டு 
உதிர்ந்துபோகையில்
எதிர்கொள்ள முடியாத தனிமை
உன்னை எதிர்த்து நிற்கும்...
காத்திரு...

கறுப்பு வெள்ளைகளாய்
உன் கலர்க்கனவுகள்
உடைந்துபோகையிலும்
பசுமையாகவே
என் அன்பின் நினைவுகள்
உன்னைபடர்ந்திருக்க
நாட்கள் தொலைத்திடாத
அந்த நினைவுகளில் நீ
சற்றும் குறையாமல்
இருக்க காண்பாய்
காத்திரு..

உருவங்கள் உதிர்ந்துபோக
பருவங்கள் தொலைத்த
உன் பயணங்களின்
சுமை உணர்ந்து
கால்கள் தள்ளாடும்
கணங்களில்
என் தோள்களின்மேல்
தலைபுதைக்க
தேடிவரும்
உன் ஆன்மாவின்
தலைகோதும் விரல்களாய்
நானிருப்பேன்
காத்திரு..

அதுவரைக்கும்
சொல்லிக்கொண்டிரு
அவரவர் வாழ்க்கை
அவரவர்க்கு..

Wednesday 17 April 2013

இழந்துபோன சிலவற்றின் வாசனைகள்.....




(லண்டன் ஒருபேப்பரிற்க்காக எழுதியது)


பிரான்ஸில் நானிருக்கும் வீட்டிற்க்கு முன்னால் உள்ள குட்டிப்பூங்கவின் நடுவில் ஓர்க் மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்திருந்தது.சுற்றிலும் கட்டடங்கள் நிறைந்த மரங்கள் அற்ற சூழழில் வளர்ந்திருந்த அந்த ஓர்க் மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை அண்ணாந்து பார்த்து தன் தனிமையை நினைத்து அழுவது போலிருக்கும் எனக்கு.அதன் கீழே வட்டவடிவ இருக்கை ஒன்று போட்டிருந்தார்கள்.கோடைகாலங்களில் கிடைக்கும் ஓய்வான நேரங்களில் எனது தனிமையையும் ஊரையும் உறவுகளையும் பிரிந்து வந்த சோகங்களையும் சுமந்து சென்று மனிதர்களின் இடையூறுகள் இல்லாமல் நிறைந்த அமைதியைப் பரப்பிக்கொண்டிருக்கும் அந்தப்பூங்காவில் ஓர்க் மரத்தின் கீழே இருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்து அந்த மரத்துடன் சேர்ந்து நானும் எனது தனிமைகளையும் சோகங்களையும் விரட்டிக்கொண்டிருப்பேன்.வீட்டில் கிடைக்காத அமைதியும்,புத்துணர்வும் அந்த மரத்தின் கீழே வந்து உட்கார்ந்தவுடன் எங்கிருந்தோ வந்து குதித்து என் மனத்தை வானத்தில் மிதக்கும் மேகக்கூட்டங்களைப்போல இலேசாக்கி எல்லையற்ற கற்பனைகளுக்கூடாக எட்டமுடியாத உலகங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்றுவிடும்.கோடைகாலங்களில் அந்த மரத்தின் கீழே வீசும் சூடான காற்றில் எனதூரின் நினைவுகள் மனத்தில் ஒன்றன் பின் ஒன்றாக அலை அலையாக எழுந்து அடங்கிக்கொண்டிருக்கும்.  அன்றும் அப்படித்தான் கிடைத்த கொஞ்ச நேர ஓய்வில் ஓர்க் மரத்தின் அருகாமையை தேடிச்செல்லும்படி நினைவுகள் என்னை உந்தித்தள்ளிக்கொண்டிருந்தன.வீட்டைவிட்டு வெளியே வந்தபோது உயிரை உறையவைப்பதுபோலக் குளிர் கடுமையாக இருந்தது.இந்தக்குளிரில் அந்த ஒர்க் மரத்தின் கீழ் இருப்பதைப்பற்றி நினைத்துக்கூடப்பார்க்க முடியாது.இனிக் குளிர்காலம் முடியும்வரையான ஆறுமாத காலத்திற்க்கு அந்தப்பக்கம் தலைவைத்தும் பார்க்கமுடியாது.என் ஆசையை உறையவைக்கும் பனியுடன் சேர்த்து உறையவைத்துவிட்டு  ஏமாற்றத்துடன் கட்டிலில் சரிந்தபோது ஊரில் எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் கிணற்றடியில் இருந்து சற்றுத்தூரத்தில் கிளைபரப்பி தன் பூக்களின் வாசனைகளினூடு அன்பையும் நேசிப்பையும் நன்றியையும் பரப்பியவாறு என் பால்யகால நினைவுகளைச் சுமந்தபடி என் அருகாமையைத்தேடிக்கொண்டிருக்கும் எனது இளமைக் காலங்களின் தனிமைத்தோழனாய் இருந்த மாமரத்தினைத்தேடி எனக்குள்ளே இருந்த எண்ணெய் வைத்துப் படியத்தலைவாரிய,மீசை அரும்பாத சிறுவன் இறங்கி ஓடிக்கொண்டிருந்தான்.

அப்பாவின் கைகளைப்பிடித்து பூமியில் நான் மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்கத்தொடங்கிய காலங்களில் இருந்தே அந்த மாமரம் அங்கிருந்தவாறு வாழ்க்கையை நோக்கிய எனது ஒவ்வொரு படிமுறை வளர்ச்சியையும் மெளனமாக அவதானித்துக்கொண்டிருந்தது. அந்த மாமரத்தின் கீழிருந்த சய்வுநாற்காலியில் படுத்திருந்தவாறு பெயர்தெரியாத பல பறவைகளுக்கும் பூச்சிகளிற்க்கும் தன் அரவணைப்பால் அகன்று குடைபோல சடைத்திருக்கும் அதன் அடர்ந்த கிளைகளில் மகிழ்ச்சிமிக்க ஒரு சின்ன உலகத்தை வழங்கியவாறு அன்பின் அடையாளமாக நிழல்பரப்பி நிற்க்கும் அந்த மாமரத்தினை வியந்து அவதானித்தவாறு என் சிறுவயதுகளில் அமைந்த அனேகமான மாலைப்பொழுதுகளை அனுப்பிக்கொண்டிருப்பேன்.சின்ன வயதில் நண்பர்களுடன் சேர்ந்து மாபிளடியும்,கிளித்தட்டும்,பந்தடியும் முடித்து ஆடைகளை எல்லாம் அழுக்காக்கி விட்டு வீட்டுக்கு வரும் ஒவ்வொருதடைவையும் என்னை கிணற்றடிக்கு இழுத்துச்சென்று என் ஆடைகளை எல்லாம் கழற்றிவிட்டு அம்மா எனது முதுகைத் தனது கரங்களால் தேய்த்துக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும்போது அந்த மாமரத்தின் ஒவ்வொரு கிளையிலும் தாவிக்கொண்டிருக்கும் கிளிகளையும்,அணில்களையும்,புலுனிகளையும் ரசித்தபடி நான் குளித்து முடித்திருப்பேன்.  நிலத்தோடு சேர்த்து மனதையும் குளிர வைத்துக்கொண்டிருக்கும்,ஒளிக்கற்றைகள் ஒவ்வொன்றும் வெள்ளியாக உருகிப் பூமியை நனைத்துக்கொண்டிருக்கும் நிலாக்காலங்களில் இனிமையும்,நிறைவும்,மகிழ்ச்சியும் கொண்டமைந்த எனது அனேகமான இரவுணவுப்பொழுதுகளை அந்த மாமரத்தின் கீழேயே அனுபவித்திருக்கிறேன். சுயநலமற்ற அன்பையும் நேசிப்பையும் காலம்காலமாக இந்தப்பூமிப்பந்தில் பரப்பிக்கொண்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் ஏழைத்தாய்மார்களைப்போலவே நிலவொளியில் உணவுடன் அன்பையும் நேசிப்பையும் சேர்த்தூட்டிய எனதன்னையின் முகமும் சுட்டித்தனமும்,துடுக்குத்தனமும் நிறைந்த,அர்த்தமற்ற ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கேள்விகளால் துளைத்தெடுத்தபடி மடியில் தூங்கிப்போகும் தன் செல்ல மகனை அந்த மாமரத்தின் அடிவாரத்தில் நீண்ட நெடுங்காலமாக தேடிக்கொண்டிருக்கும்.மாதத்தின் அனேகமான மதியங்களில் அம்மாவின் விரதச்சாதத்தை எதிர்பார்த்து இரண்டு காக்கைகள் அந்த மாமரத்தில் வந்து உட்கார்ந்துகொள்ளும்.வீட்டைவிட்டு அம்மா வெளியே வரும்போதெல்லாம் அந்தக் காக்கைகளின் முகத்தில் தெரியும் சந்தோசத்தையும் எதிர்பார்ப்பையும் நான் அவதானித்திருக்கிறேன்.தங்களின் மிக நெருங்கிய ஒருத்தியாக அம்மாவை அவை நேசித்திருக்கவேண்டும்.அதனால்தான் அம்மாவைக் காணும்போதெல்லாம் அளவற்ற மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் அவற்றின் முகத்தில் பிரகாசிக்கும்.அந்த மாமரத்தின் மீது உட்கார்ந்திருந்து சாதக்காக்கைகள் கரையும்போதெல்லாம் யாராவது உறவினர்கள் வரப்போவதாக அம்மா உறுதியாகச் சொல்லிக்கொள்வார்.அம்மாவின் நம்பிக்கை சில நேரங்களில் மெய்த்து விட்டாலும் அநேகமான நேரங்களில் பொய்த்தே இருந்திருக்கிறது.ஆனலும் அம்மா காக்கைகள் கரையும்போதெல்லாம் தன் எதிர்வு கூறலை நிறுத்துவதேயில்லை.

வயதாக ஆக வாழ்க்கையின் மீதான பிடிமானங்களை ஏற்படுத்தும் ஒவ்வொரு காரணியும் மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்துபோக வெறுமையாக தனித்து நிற்க்கும் மனிதர்களைப்போலவே ஒவ்வொரு இலையுதிர் காலங்களிலும் அந்த மாமரம் உழைத்து ஓய்ந்துபோன தன் இலைகளை ஒவ்வொன்றாக உதிர்த்துவிட்டு இன்னொரு மீள் பிறப்பிற்க்காக நம்பிக்கையுடன் காத்து நிற்க்கும்.இலையுதிர்காலத்தின் பெரும்பாலான நாட்களில் ஒன்றன் பின் ஒன்றாக காய்ந்து உதிர்ந்துகொண்டிருக்கும் தன் இலைகளால் எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தை நிறைத்துவிட்டிருக்கும் அந்த மாமரம்.ஒவ்வொரு நாளும் காலையில் முற்றம் பெருக்கும்பொழுதெல்லாம் அம்மா அந்த மாமரத்தை திட்டியபடி அதன் இலைகளைக் கூட்டி அள்ளினாலும் ஒருபோதும் அம்மாவின் மாமரத்தின் மீதான அந்தக்கோபம் நீண்ட நேரம் நிலைப்பதில்லை.பனி கடுமையாக இருக்கும் மார்கழி மாதத்தில் ஈரலிப்பால் மண்ணுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவிலைகளைக் கூட்டி அள்ளுவது என்பது அம்மாவிற்க்கு மிகக்கடுமையான ஒரு பணியாக இருக்கும். பாடசாலை இல்லாத நாட்களில் மாவிலைகளைக் குத்தி எடுக்கும்படி முனையில் கூரான நீண்டதொரு கம்பியை என்னிடம் தந்துவிட்டுப் போய்விடுவார் அம்மா.நானும் அம்மாவின் காலை நேரக் கட்டாயப் படிப்பில் இருந்து தப்பிய மகிழ்ச்சியில் பனியில் தோய்ந்திருக்கும் மாவிலைகளை ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிக் குத்திச்சேர்த்துக்கொண்டிருப்பேன். வீட்டினுள்ளே இருக்கமுடியாத அளவுக்கு அணல் பறக்கும் வெய்யில் காலங்களில் எல்லாம் அப்பாவின் பெரும்பாலான பகல்ப்பொழுதுகள் தேநீர்க் கோப்பையுடன்  அந்த மாமரத்தின் கீழிருந்த சாய்வுநாற்க்காலியில் சரிந்தபடி நாளிதழ்களை மேய்வதிலேயே கழிந்திருக்கும்.மாமரத்தின் கீழ் வீசும் இதமான தென்றலில்  சொக்கியபடியே அப்பா படிக்கும் நாளிதழின் ஏதாவது ஒரு பக்கத்தை பிரித்தெடுத்து அவரின் அருகே அமர்ந்திருந்தபடி நானும் வாசித்து முடித்திருப்பேன்.வாழ்க்கையின் பல மிக அழகிய தருணங்கள் அந்த மாமரத்தின் கீழ் நிகழ்ந்ததைப்போலவே வாசிப்பின் இனிமையையும் அதன் பின் ஏற்படும் ஒருவித மெளன நிலையையும் அந்த மாமரத்தின் கீழேயே உணரத்தொடங்கியிருந்தேன்.

யுத்தம் கடுமையாக நடக்கும்போதெல்லாம் எங்கும் செல்லாமல் அப்பாவும் நானும் எங்கள் வீட்டிலிருந்த வானொலிப்பெட்டியுடன் அந்த மாமரத்தின் கீழே உட்கார்ந்திருப்போம். கடுமையான யுத்தநாட்களில் எங்களின் பெரும்பாலான பொழுதுகள் அந்த மாமரத்தின் கீழே புலிகளின் குரல்,வெரித்தாஸ்,பிபிஸி என்று மாறிமாறி வானொலிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும்.எங்களவர்களின் ஒவ்வொரு இழப்பிலும்,மரணத்திலும்,தோல்வியிலும் அந்த மாமரத்துடன் சேர்ந்து நானும் மெளனமாக அழுதுகொள்வேன்.வாழ்க்கையின் பல மிக அழகிய கணங்களை அந்த மரநிழலில் அனுபவித்ததைப்போலவே வாழ்க்கையின் மிகப்பாதுகாப்பற்ற தருணங்களையும் அந்த மாமரத்தின் கீழே உணர்ந்திருக்கிறேன்.மக்களின் மரணங்களை வானொலிகள் அறிவிக்கும்போதெல்லாம் உயிர் வாழ்வதற்க்கான உரிமைகள் பலவந்தமாக அறுத்தெறியப்படுவதை எனது மிகச் சிறிய வயதுகளிலேயே உணர்ந்திருக்கிறேன்.உலகமெல்லாம் யுத்தம் குழந்தைகளை அச்சுறுத்தி அவர்களின் கள்ளம் கபடமற்ற புன்னகையைப் பறித்துவிடுவதைப்போலவே யுத்தம் எனது பால்யகாலங்களையும் பயமுறுத்தி எனது இளவயதுப் புன்னகைகளைப் பறித்துச்சென்றுவிட்டிருந்தது.சிறுவயதுகளிலேயே சிங்களத்தின் கொலை விமானங்கள் வானத்தில் வட்டமிடும்போதெல்லாம் அந்த மாமரத்தின் கீழ் ஒளிந்திருந்தபடி மரணத்தின் வாசனையை எனக்கு மிக அருகில் நுகர்ந்திருக்கிறேன்.வாழ்க்கையின் நிலையாமையை,கொஞ்சமாகச் சிந்திக்க ஆரம்பித்திருந்த என் வாழ்வின் மிக ஆரம்ப நாட்களிலேயே அந்த மாமரத்தின் கீழ் உணர்ந்திருக்கிறேன்.மனிதர்களின் சிரிப்பையும்,மகிழ்ச்சியையும் கொள்ளைகொண்டு பிஞ்சுக்குழந்தைகளையும் கொலை செய்யும் பாழாய்ப்போன பகைமையும்,போரும் நிறைந்த உலகம் எங்கிருந்து துவங்குகிறது என்றகேள்வியை எனக்குள்ளே அப்பொழுதிலிருந்தே எதிர்கொண்டேன்.

பிறந்தபோது வெறுமையாக இருந்த நான் எனும் பாத்திரத்தினுள் நினைவுகளை ஊற்றி நிறைத்தபடி மெதுவாக நான் வளர்ந்துகொண்டிருந்தபோது எல்லாப் பருவங்களையும் மாறிமாறி எதிர்கொண்டபடி எங்கள் வீட்டு மாமரமும் என்னுடன் கூடவே வளர்ந்து கொண்டிருந்தது.என் துயரங்களின் போதான அழுகைகள்,என் மகிழ்ச்சிகளின் போதான கொண்டாட்டம்கள்,என் தோல்விகளின் போதான அவமானங்கள்,என் தனிமைகளின் போதான தவிப்புக்கள் என்று என் மனத்தின் எல்லா நிலைகளின் போதும் நான் தேடிச்செல்லும் இடமாக அந்த மாமரத்தின் அடிவாரமே இருந்தது. அதன் ஒரு கிளை நிலத்தை முத்தமிடத் துடிக்கும் வானத்தைப்போல நீண்டு அடர்ந்து பூமியை நோக்கி வளைந்தபடி வளர்ந்து கொண்டிருந்தது.அதிக உயரமில்லாத அந்தக்கிளையில் ஊர்த்தோழர்களுடன் சேர்ந்து பாடசாலை முடிந்த பின்னர் கிடைக்கும் மாலை நேரங்களில் சிலவற்றை ஆனந்தமாக ஆடிப்பாடியபடி வழியனுப்பிக்கொண்டிருப்போம். அப்படி அமைந்த நீண்ட மாலைப் பொழுதொன்றிலேதான் வேகமாக ஆடிக்கொண்டிருந்த மரக்கிளையில் இருந்து தவறி விழுந்து எனது இடது கையில் லேசான முறிவு ஏற்பட்டிருந்தது.அன்றிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்க்கு பண்டேஜ் சுற்றியிருந்த எனது கையில் ஒரு கயிற்றைக்கட்டி கழுத்தில் தொங்கப்போட்டபடி திரியவேண்டியதாகிப்போனது.அன்றிலிருந்து கொஞ்சக்காலத்திற்க்கு ஊஞ்சல் ஆட்டத்தை தள்ளிப்போட்டிருந்த நாங்கள் பண்டேஜ் அவிழ்த்ததும் அம்மாவின் ஏச்சையும் பொருட்படுத்தாது மீண்டும் எங்கள் விளையாட்டைத் தொடங்கியிருந்தொம்.

வெண்ணிறத்தில் கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கும் தன் பூக்களின் உள்ளே மெளனமாக மகரந்தச்சேர்க்கையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் அந்த மாமரம் பருவங்களைப் படைத்துக்கொண்டிருக்கும் இயற்க்கையின் விசித்திரமான அழகைப் பிரதிபலித்துக்கொண்டிருக்கும்.மாம்பூக்களின் வாசனையில் கட்டுண்டுபோய் எங்கோ தொலைவுகளில் இருந்தெல்லாம் வரும் வண்டுகள் அந்த மாமரத்துடன் அதன் பூக்கும் காலம் முழுவதும் ஓய்வின்றி உரையாடிக்கொண்டிருக்கும்.முன்னால் விரிந்து பரந்து கிடக்கும் முதுமைக் காலங்களை தனியாக எதிர்கொள்ளும்படி,வளர்த்து ஆளாக்கப்பட்டபின்னர் சுயநலச்சிறகுகளுடன் பறந்து போய்விட்ட பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களைப்போலவே அதன் இலையுதிர்காலங்களில் வண்டுகளாலும்,பறவைகளாலும் கைவிடப்பட்ட அந்த மாமரமும் வெறுமையாக நின்று தன் தனிமையை நினைத்து அழுவதுபோலிருக்கும் எனக்கு.எனது பெரும்பாலான கோடை விடுமுறைகளை அந்த மாமரத்தின் கீழே அமர்ந்தபடி கசப்பும் இனிப்பும் சேர்ந்த அதன் ஒருவித கிறங்கடிக்கும் பூ மணத்தோடு இலயித்தபடி புத்தகங்கள் படிப்பதிலும்,அடுத்த தவணைக்கு தயாராவதிலும் செலவழித்துக்கொண்டிருப்பேன்.அடுத்த தவணையில் பள்ளியில் புத்தகங்களை விரிக்கும்போது அதனுள்ளே அகப்பட்ட ஒன்றிரண்டு காய்ந்துபோன மாம்பூக்கள் எனக்கும் அந்த மரத்திற்க்குமான வார்த்தைகளால் சொல்லமுடியாத ஏதோ ஒருவித பிணைப்பின் நீட்ச்சியை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்.

எங்களது வீட்டின் ஒரு பகுதியை இடித்து விஸ்தரிக்கும் நீண்டகாலத்திட்டத்தை செயற்படுத்தும் முடிவிற்க்கு வீட்டார் ஒரு நாள் வந்தபோது   கொல்லைப்புறத்தில் துருத்திக்கொண்டிருந்த அந்த மாமரமும் அதன் அடர்ந்த கிளைகளும் அவர்களின் முயற்ச்சிக்கு இடையூறாக இருந்தன.அதைத் தறிப்பதற்க்கான முனைப்புக்களில் வீட்டார் ஈடுபட்டபோது அதுவரையும் அந்த மாமரம் குறித்த பெரிய சிந்தனைகள் எதுவுமில்லாமல் இருந்த எனக்கு அதன் பெறுமதிகள் புரியத்தொடங்கின.அன்று முழுவதும் புரண்டு புரண்டு படுத்தபடியே மாமரம் குறித்த கேள்விகளில் தூக்கமின்றி கழிந்துபோனது எனதிரவு.மாமரம் வெட்டப்பட்டால் மாலைப்பொழுதுகளை நண்பர்களுடன் ஆடிப்பாடியவாறு கழிப்பதற்க்காக இனி நான் எங்குசெல்வேன் என்ற கேள்வி என்னுள் எழுந்திருந்தது.இனிமேல் அப்பாவுடன் உட்கார்ந்திருந்துகொண்டு அந்த மாமரத்தின் கீழே அப்பொழுதுதான் வீசிக்கொண்டிருக்கும் புத்தம் புதிய காற்றை சுவாசித்தபடி பத்திரிகைகள் படிக்கமுடியாது.ஓய்வு நேரங்களில் சாய்வு நாற்க்காலியில் அந்த மாமரத்தை சுற்றி இயங்கிக்கொண்டிருக்கும் உலகத்தை அவதானித்தபடி காணும் கனவுகளை இரசிக்கமுடியாது.எனது ஓய்வு நாட்க்களை உயிர்ப்புடன் வைத்திருந்த அந்த மாமரத்தைப் பற்றிய கவலைகளிலேயே கழிந்துபோயின அடுத்துவந்த நாட்க்கள்.இப்பொழுது இருப்பதைவிட பெரிதாக வீட்டை விஸ்தரிப்பது வாஸ்த்துப்படி நல்லதல்ல என்று யரோ ஒரு சாத்த்ரி சொல்லியதால் வீட்டைப் பெருப்பிப்பதற்க்கான முயற்ச்சிகளுக்கு அப்பா முற்றுப்புள்ளி வைத்துவிட எனது மாமரமும் சாத்திரியின் உதவியால் தப்பித்துக்கொண்டது.நானும் பழைய மாதிரி மாமரத்தின் கீழே எனது ஓய்வுப்பொழுதுகளை அனுபவித்துக்கொண்டிருந்தேன்.இடையில் எதிர்கொண்ட ஒரு வருட வன்னி இடப்பெயர்வின் பின்னர் ஊருக்குத் திரும்பியபோது காய்ந்த மாவிலைகள் நிலமெங்கும் மூடிப்போய்க் கிடக்க நேசித்தவர்களின் மிக நீண்ட பிரிவொன்றை எதிர்கொண்ட அடையளங்களை சுமந்தவாறு எங்களின் வருகைக்காகக் காத்து நின்றது அந்த மாமரம்.

நீண்ட ஒரு சமாதானத்தின் பின்னர் மிகப்பெரிய யுத்தம் ஒன்று ஆரம்பித்தபோது மாமரத்துடன் சேர்ந்து நானும் நன்றாக வளர்ந்து விட்டிருந்தேன்.ஈழத்தின் பெரும்பாலான இளைஞ்ஞர்களைப்போல் இலங்கைப் படைகளின் நெருக்கடிகளை நானும் எதிர்கொண்டபோது எல்லோரையும்போலவே அகதி ஆகப்புலம்பெயரவேண்டிய கட்டாயக் காரணிகள் பல என் முன்னே இருந்தன.மேகம்கள் சூரியனை மறைத்து மழையாக உடைந்து கொட்டிக்கொண்டிருந்த இருண்ட நாளொன்றிலே மண்ணை விட்டுப் பிரிய முடிவெடுத்து என் மூட்டை முடிச்சுக்களினுடன் தயாரானபோது அப்பொழுதுதான் துளிர்த்திருந்த அந்த மாமரத்தின் மெல்லிய இலைகள் என் பிரிவை நினைத்து அழுபவைபோல மழைத்துளிகளைச் சிந்திக்கொண்டிருந்தன.சோகத்தில் உடைந்துபோன மனிதர்களைப்போலவே மழையில் நனைந்து ஒடுங்கிப்போய் அந்த மாமரமும் அப்பொழுது காட்ச்சியளித்துக்கொண்டிருந்தது.மாமரத்தை விட்டு வெகு தொலைவிற்க்குப் போய்க்கொண்டிருந்தேன்.என் துன்பங்களின் போதும்,சந்தோசங்களின் போதும்,தனிமைகளின் போதும், கொண்டாட்டங்களின் போதும் என்னுடன் பேசிக்கொண்டிருந்த எனக்கே எனக்கான அந்த மாமரத்தின் நிழலைவிட்டு வெகுதூரத்திற்க்குப் போய்க்கொண்டிருந்தேன்.அதன் கீழே வெறுமையாக இருந்த சாய்வுநாற்க்காலியில் என் மனதை விட்டு விட்டுப் போய்க்கொண்டிருந்தேன்.இனி அந்த மாமரத்தின் கீழே மாலைப்பொழுதுகளில் புத்தகங்களின் பக்கம்களைப் புரட்டியபடி இருக்கும் எழுத்துக்களைக் காதலிக்கும் சிறுவன் காணாமல் போயிருப்பான்.இனிமேல் தன் ஒவ்வொரு இலைகளையும்,கிளைகளையும் நேசிக்கும் ஒரு உற்ற நண்பனைத் தேடியபடி அந்த மாமரம் நீண்ட நாட்க்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.இப்படித்தான் ஈழத்தின் அனேகமான வீடுகளில் மரங்கள் அகதியான தங்களின் நேசிப்புக்குரியவர்களின் வரவை எதிர்பார்த்து தங்கள் நிழலுடன் பேசியபடி தனிமையை உணர்த்திக்கொண்டிருக்கின்றன...

Wednesday 3 April 2013

முற்றுப் பெறாத கனவுகளின் கதை...

பாட்டி கனவுகளின் ராணி...பாட்டியிடமிருந்துதான் நான் கனவுகளுக்கு வர்ணம் தீட்டக் கற்றுக்கொண்டேன்...பாட்டி வெற்றிலைகளை மென்றவாறு வியப்பும்,சுவாரஸ்யமும்,புதிரும் பூத்துக்கிடக்கும் அவளின் அனுபவங்களை வார்த்தைகளாக அசை போட்டுக்கொண்டிருப்பாள்... பாட்டியின் வர்ணனைகளில் மயங்கி நின்றபடி அவள் வார்த்தைகளில் இருந்து தெறிக்கும் தலைமுறைகளின் கதைகளை நான் சேகரித்துக்கொண்டிருப்பேன்... எங்கள் கிராமம் தலைமுறைகள் கூடிக் கூடி விளைந்த முற்றம்...அவர்களின் பேச்சும்,சிரிப்பும்,அழுகையும்,சந்தோசம்களும் ,துக்கம்களும் கால நிழல்களாக அந்தக் கிராமத்தின் முற்றங்கள் முழுவதும் படிந்திருக்கின்றன...மனிதர்களின் காலடித்தடங்களும்,பிம்பங்களும்,பேச்சொலிகளும் படிந்துபடிந்து தலைமுறைக் கனவுகளின் பூமியாக விளைந்திருந்தது அந்தக் கிராமம்... அது தலைமுறைகளின் பல கதைகளை தன் கால அடுக்குகளில் பவுத்திரமாக்கி வைத்திருக்கிறது...பாட்டி எப்பொழுதாவது அந்தக் கதைகளில் இருந்து சில முடிச்சுக்களை அவிழ்த்து சந்ததிகளின் உணர்வுகளை என்னுள்ளும் மெதுவாகக் கடத்திவிட்டிருப்பாள்...அந்தக் கதைகளில் இருந்து ஓராயிரம் காலங்கள் விரிந்து காட்சிகள் பெருகும்...காட்சிகளின் பின்னால் நான் கட்டுண்டு நடப்பேன்..நினைவுகளின் பள்ளத்தாக்கில் விழுந்தெழுந்து செம்மண் படிந்த வீதிகளில் அலைந்துதிரிந்து ஓலைகளால் வேயப்பட்ட வீட்டு முற்றங்களைக் கடந்து அம்மணமாக புழுதிகளை தங்கள் கைகளால் அள்ளித்தின்று கொண்டிருக்கும் குழந்தைகளுடன் ஆடிக்களைத்து எங்காவது ஒரு மூலையில் சந்ததிகளின் நிழலைப் பரப்பிக்கொண்டிருக்கும் வேப்பமரம் ஒன்றின்கீழ் கனவுகளின் அரவணைப்பில் நான் இளைப்பாறிக் கொண்டிருப்பேன்...

பாட்டியின் பாதத்தடங்களை மிதித்துப் போய்த்தான் நான் அந்தக் கிராமத்தை தாண்டி இருந்த உலகத்திற்கு அறிமுகமாகி இருந்தேன்..பாட்டி கைகளை நீட்டி தன் விரல்களைப் பிடித்துக்கொள்ள சொல்வாள்..நான் அவள் விரல்களை இறுக அணைத்தபடி புற்களையும்,புழுதியையும்,கற்களையும் மிதித்து மிதித்து நடந்து கொண்டிருப்பேன்..பாட்டியின் காலடிகள் பட்டுப்பட்டு காணிகளினூடு பாதைகள் முளைத்திருந்தன...அந்தப் பாதைககளில் என் பாதங்கள் தவழ்ந்து நடை பழகியிருந்தன.....பாட்டியின் கனவுகளில் இருந்து முளைத்ததுதான் நாங்கள் இருந்த வளவு...அவள் கனவுகள் முளைத்து,தழைத்து,விழைந்து அந்த வளவெங்கும் விரிந்து பரந்து நிழல் பரப்பிக் கொண்டிருக்கின்றன...அந்த நிழலின் கீழ்தான் நாங்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தோம்...

கால்களை மட்டும் நம்பியே எம்மூரில் பிரயாணங்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருந்த காலமது..எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டி நிகழ்ந்த ஒவ்வொரு பிரயாணத்திலும் பாட்டியின் கால்களே எங்களுக்காய் தேய்ந்து கொண்டிருந்தன..பாட்டியின் காலடியில் இருந்தே என் பயணங்களும் ஆரம்பமாகி இருந்தன... காலடியில் அகண்டும்,தொலைவில் ஒடுங்கியும் பாம்புபோல வளைந்துவளைந்து செல்லும் வீதிகளையும், தேவைகள் துரத்த முகங்களில் எதிர்பார்ப்புக்களை சுமந்தவாறு பயணித்துக்கொண்டிருக்கும் மனிதர்களையும் கண்களில் வியப்பும்,புதினமும் விரிந்து மலர அவதானித்தவாறு பாட்டியின் நிழலில் மிதந்து மிதந்து உலகங்களைத் தரிசித்தவாறு நான் நடந்து கொண்டிருப்பேன்...

பாட்டியுடன் நிகழ்ந்த எனது அநேக பயணங்கள் சந்தையை நோக்கியதாகவே அமைந்தன...சந்தை எனக்கு பல்லாயிரம் மனித உணர்வுகள் மோதிப் புரளும் புதிரான இடமாக இருந்தது..அது எப்பொழுதும் மனிதர்களால் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது...அங்கே கனவுகள் தேங்கிய விழிகளுடன் மனிதர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்..மனித வெள்ளத்தில் மோதிப் புரண்டு சந்தை இரைந்து கொண்டிருந்தது...சந்தையில் இருந்து சற்று வெளித்தள்ளி மீன் சந்தை இருந்தது..அது சந்தையை விட இன்னும் அதிகமாக இரைந்து கொண்டிருந்தது..அங்கு நிலத்திலும் சுவரிலும் கடல் ஒட்டிக் கிடந்தது...அங்கிருந்து கடல் சுவாசப்பைகளில் புகுந்து நிறைந்து வீடுவரை வந்திருக்கும்...

சந்தையில் மனதை மயக்கும் மந்திர வார்த்தைகளை வீசியபடி வணிகர்கள் கூவிக் கொண்டிருந்தார்கள்..அவர்களின் மந்திரச் சொற்களில் மனதைப் பறிகொடுத்தவர்கள் தாண்டிப் போக முடியாதபடி தடுமாறினார்கள்...மனிதர்கள் இடைவிடாது சொற்களை உதிர்த்துக் கொண்டிருக்க சொற்கள் வார்த்தைகளாகிக் கொண்டிருந்தன..வார்த்தைகளைச் சேர்த்து சந்தை பெரும் இரைச்சலாகப் பேசிக்கொண்டிருந்தது..வினோதமான செய்கைகளுடன் ஒவ்வொருவரும் சந்தையில் அசைந்து கொண்டிருந்தார்கள்..நான் அவர்களின் செய்கைகளில் கட்டுண்டு மயங்கி நிற்பேன்..சந்தையின் வியப்புக்கள் என்னுள் பெரும் புதிர்வனமாய் வளர்ந்தன..

பாட்டி சாகசக்காறி...கொண்டுவந்தவற்றை பேசிவிற்கும் மாயவித்தையும் வணிகர்களின் மந்திர வார்த்தைகளுடன் போட்டியிட்டு பொருட்களை வாங்கும் தந்திரமும் தெரிந்திருந்தது...பாட்டி சந்தையில் பொருட்களை வாங்கி பைகளை நிறைத்துக்கொள்ள நான் காட்சிகளில் மயங்கிமயங்கி களைத்து நிற்பேன்..வெயில் நெருப்பாக எரிக்கும் மதியப் பொழுதுகளில் கானல் நீர் கண்களை ஏமாற்றும் சுடு வீதியில் பாட்டி ஒரு பாரம் தூக்கியாய் முன் நடக்க உருகும் தாரில் அழுத்தமாக என் பாதங்களைப் பதித்தபடி சந்தையில் சேகரித்த நினைவுகளை அசை போட்டவாறு பாட்டியின் நிழலில் நான் தள்ளாடித்தள்ளாடி நடந்துகொண்டிருப்பேன்..

ஊரின் பொழுதுகள் வேப்பமரக் குயிலின் பாட்டுடன் மலரும்..சேவல்கள் இன்னொரு சேர்க்கையை நினைத்துச் சிலிர்த்தபடி ஊரை எழுப்பும்...உண்டகளைப்பில் துங்கிய பறவைகள் மரங்களில் சோம்பல் முறித்துச் சிறகசைக்கும்... அணில்கள் விழித்துக்கொள்ளும்...பனியில் தோய்ந்து மண் மணத்தில் பயிர்கள் கிறங்கி ஆடும்...மல்லிகைப் பூவில் நனைந்து முற்றம் மணக்கும்...கோயில் மணி ஓசையில் ஊர் விளிக்கும்...இரவெல்லாம் கண்விழித்துக் காவலிருந்த பன்னோலைப் பாய்கள் சுருண்டு மூலையில் தூங்கப் போகும்...சந்தைக்குப் போகும் பயிற்றங்காய்களில் இருந்தொழுகும் நீரில் வீதி நனையும்...கிணற்றடிகளில் காப்பிகளும் வாளிகளும் சண்டை பிடிக்கும்...வேப்பங்காற்றில் தோய்ந்துறங்கிய ஊர் சுறுசுறுப்பாகும்...பாட்டி மூட்டிய அடுப்பில் பொங்கிக்கொண்டிருக்கும் பால் மணத்துடன் நான் கண்விழிப்பேன்.....பாட்டி எப்பொழுது தூங்கி எப்பொழுது எழும்புகிறாள் என்பதை நான் ஒருபோதும் அறிந்ததில்லை.கடவாயில் ஒழுகும் பால் மணத்துடன் தொடங்கும் ஊரின் காலைப் பொழுதுகள்...ஊரை விரட்டியபடி பகல் மெல்ல வீங்கும்...நிலச்சூடு ஏறும்...சூரியன் நடுவானை நெருங்கும்போது நானும் பாட்டியும் குளக்கரையில் நின்றுகொண்டிருப்போம்...

மனிதர்களின் தடங்கள் பட்டுப் பட்டு தாமரைகள் விலகியிருக்கும் இடமாகப் பார்த்து பாட்டி குளத்தில் இறங்குவாள்...நான் பாட்டியின் பின்னே கூட்டமாக வரும் மீன் குஞ்சுகளை விரட்டிப் பிடிக்க முயற்சித்து தோற்றுக் களைத்து நிற்க பாட்டி குளித்து முடித்துக் கரை ஏறுவாள்...குளத்தில் பொழுதழியும்...குளக்கரையில் நாவல் மரங்கள் வீங்கிப் பருத்து நிற்கும்...நாவல்ப் பழங்களை நான் சேகரித்துக் கொண்டிருக்க பாட்டி ஈரத் துணிகளை துவைத்து உலர்த்தி விட்டிருப்பாள்...சூரியன் நடுவானில் நிற்கும்போது நானும் பாட்டியும் நீரில் ஊறிய உடல் காற்றில் கொடுக நிழலுடன் நடப்போம்...வெயில்ச் சூட்டில் வீதிகள் வெறித்துக் கிடக்கும்....நாவல்ப் பழங்களை ஒவ்வொன்றாக உமிழ்ந்தபடி நீரில் ஊறி இழகிய பாதங்களில் சுடு புழுதி ஓட்டிவர நானும் பாட்டியும் வீடு வந்து சேர்ந்திருப்போம்....

வெளியே அடிக்கும் மதிய வெயிலுக்கு ஒதுங்கி தாத்தா திண்ணையில் சாய்மனைக் கட்டிலைப் போட்டு அதில் கால்களை அகலப் பரப்பி துங்குவார்...சடையன் நாய் தாத்தாவுக்குப் பக்கத்தில் சுருண்டு படுத்திருக்கும்...தாத்தாவுக்கு ஒடியல்ப் பிட்டு மதிய உணவில் இருக்க வேண்டும்...பாட்டி ஒடியல் பிட்டை தாத்தாவுக்கு புழுங்கலரிசிச் சோற்றுடன் சுடச்சுட ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொடுப்பார்....குளித்து முடித்து தாத்தா சாப்பிடும்போது ஒடியல் வாசம் காற்றில் பரவும்...சடையன் நாயும் நாலைந்து கோழிகளும் தாத்தாவுக்காகக் காவலிருக்கும்...தாத்தாவின் உடம்பு இரும்பு போலிருக்கும்...காற்று அதில் மோதித் தெறித்து முடியாமல் நாணிப் பின்வாங்கும்...தாத்தா தன் மீசையை அடிக்கடி பெருமையாகத் தடவிக்கொடுப்பார்...அதை அவர் எப்பொழுதும் தன் வம்சப் பெருமையின் அடையாளமாகக் கருதுவார்...சுருட்டுப் புகைக்கும்போது மட்டும்தான் அது அவருக்கு இடையூறாக இருக்கும்...ஓய்வாக இருக்கும்போது தாத்தா கட்டில் இருந்து பெரிய புகையிலையாக எடுத்து விரிப்பார்...தாத்தாவின் முகத்தைப் போலவே அது அகல மலர்ந்திருக்கும்...தாத்தா பாக்குவெட்டியால் புகையிலையை குறுக்காக வெட்டி அழகாகச் சுற்றி வளையம் வளையமாக புகைவிடுவார்...புகை மணம் எனக்கு தலையிடிப்பது போலிருந்தாலும் அது தாத்தாவின் வாசத்துடன் வருவதால் அவரின் மடியில் படுத்துக் கிடந்தபடியே அவர் புகைவிடும் அழகை விரும்பி ரசிப்பேன்...

புழுதி வீதிகள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் மாலைப் பொழுதுகளில் நிலச்சூடு கால்களை விரட்டவிரட்ட நானும் பாட்டியும் வயல்கரைகளில் அலைந்து திரிவோம்...வயலோரம் காலப் பாடல்கள் போல நெல்மணிகள் களைக்காமல் காற்றில் கலகலக்கும்..தென்றல் இயற்கையை இரசித்தபடி மெல்லக் கடந்துபோகும்...வயல்களில் தேங்கியிருக்கும் மழை நீரில் விவசாயிகளின் கனவுகள் சலசலக்கும்...ஆட்காட்டிகள் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் வயலோர மாலைப் பொழுதுகளை நானும் பாட்டியும் வெற்றுக் கால்களால் நடந்து கடப்போம்...பெண்கள் விறகுச் சுள்ளிகளை சுமந்தவாறு தங்கள் நிழலுடன் நடந்து கொண்டிருப்பார்கள்...பாட்டி கதைகளைப் பரப்பியவாறு தன் தோழிகளுடன் சுள்ளிகளை சேகரித்துக் கொண்டிருப்பாள்...நான் வயல்களினுடு நீண்டு நெடுத்திருக்கும் ஒற்றையடிப் பாதைகளின் முதுகில் தங்கிவிட்டிருக்கும் புற்களின் மீதும புழுதியின் மீதும் நினைவுகளைப் படரவிட்டபடி கற்பனைகளுடன் பேசிக்கொண்டிருப்பேன்.....காற்றில் இருக்கும் ஈரப்பதன் பார்த்து பாட்டி தென்திசையால் மழை வருமென்பாள்...அதுகேட்டுப் பூமிப் பெண் முகம் நாணுவாள்..பாயில் காய்ந்துகொண்டிருக்கும் ஓடியல்களின் சிந்தனையில் பாட்டியின் நடையில் வேகம் கூடும்...பகல் உழைத்துக் களைத்து மயங்கிச் சிவந்திருக்கும் மாலைப் பொழுதுகளில் வயல்கரை முழுவதும் கனவுகளில் அலைந்து திரிந்தும் களைத்துப் போகாத மனதைச் சுமந்தவாறு புழுதி வீதிகளில் புதைந்து புதைந்து எழும் என் பாதங்களை விரட்டியபடி பாரத்துடன் நடந்து கொண்டிருக்கும் பாட்டியின் தடங்களைப் பிடிக்க விரைந்து கொண்டிருப்பேன்...நிழல் உறங்கும் புழுதி வீதிகளில் நாங்கள் ஒருபோதும் நடந்து களைத்ததில்லை...

அறுவடை காலங்களில் முற்றிச்சரியும் நெற்கதிர்களில் இருந்து பெருகி வழியும் ஓசை வெள்ளத்தை காற்று அள்ளிக்கொண்டிருக்கும்...காயும் வைக்கோல் வாசனையின் பின்னால் அலையும் கால்நடைகளின் நாவில் எச்சிலூறும்...வீடுகள் நிரம்ப நெல்மணம் பூக்கும்...அறுவடையும்,சூடடிப்பும்,உழவுமாக ஊரின் முற்றத்தில் உழைப்பு தூங்காதிருக்கும்...நிலம் தேகங்களின் வியர்வைகளில் குளிக்கும்..அவியலும் பரிமாறலும் என அடுப்படிகள் கமகமக்கும்... அறுவடையின் பின் கால்நடைகள் ஊர்முழுதும் சுதந்திரத்தை அனுபவிக்கும்...வயல்கரை முழுவதும் அலைந்தலைந்து களைத்துப்போய் இருள் சரசரக்கும் மாலைக் கருக்கல்களில் வாய்களில் நுரை தள்ள அவை பட்டி திரும்பும்...பாட்டி நிலவொளியில் அருவாளில் உட்கார்ந்திருந்தவாறு காலைக்கருக்கலில் நான் சேகரித்த நுங்குகளை மாடுகளுக்காக சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கடகத்தை நிரப்பிக் கொண்டிருப்பாள்..வழிந்தோடும் நுங்குத் தண்ணியில் குளித்தபடி நான் பாட்டி வெட்டித் தரும் நுங்குகளை வாங்கி ஒவ்வொன்றாக நாவில் நனைத்துக் கொண்டிருப்பேன்...பாட்டியின் நுங்குக் கயர்களை அசை போட்டபடி பசுக்கள் அந்த எளிமையான கிழவிக்கு பாலை அன்பாய்ச் சொரியும்...அவற்றின் அன்பில் பாட்டியின் மனமும் அவள் ஏந்திப் பிடித்திருக்கும் பாத்திரமும் நிறைந்து வழிந்து கொண்டிருக்கும்....பாட்டி புதுச் சட்டியில் பாலை நிறைத்து அடுப்பை மூட்டுவாள்...நான் சட்டியில் பொங்கி நுரைக்கும் பாலை ரசித்தபடி பாட்டியின் அருகே குந்தியிருப்பேன்...

பாட்டியிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைகளில் எப்பொழுதும் நிழலின் குளிர்மையையும்,நிலவின் தண்மையையும்,வசந்த காலத்தின் இனிமையையும் ஒருங்கே உணர்கிறேன்...நெருப்பாய் எரிக்கும் வாழ்க்கைப் பயணத்தில் பாட்டி ஒரு பெரு விருட்சமாய் நின்றுதாங்க அவளின் நிழலில் என் காலடிகள் இளைப்பாறிக் கொண்டிருந்தன...என் பால்ய காலங்கள் பாட்டியுடன் வளர்ந்து கொண்டிருந்தன...எனது நாட்கள் பாட்டியின் நிழலில் நகர்ந்தன... மாலை நேரத்து புல்லாங்குழல் இசைபோல,மனதை மயக்கும் சித்திரம் போல வாழ்க்கை மெதுமெதுவாக உருவாகிக் கொண்டிருந்தது...நிறைவும்,நிம்மதியும் தூண்களாக அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன...

வாழ்க்கை ஒரு ஆறாக வழிந்தோடிக் கொண்டிருந்தது...காலப் பாத்திரத்தில் நினைவுகள் தேங்கின...பழைய முகங்களின் பிரிவில் வாடியும் புதிய முகங்களின் துளிர்ப்பில் பூத்தும் கிடந்தது ஊர்...காட்சிகள் உதிர்ந்து காலச்சுழலில் அள்ளுண்டு போக புதியன துளிர்த்தன...தென்றலும்,புயலும்,கோடையுமாக மாறிமாறிக் காலச்சுழல் அடித்தது...காட்சிகள் மாறின...சுதந்திரத்தின் முதுகில் தீ மூட்டப்பட்டபோது ஊரின் முற்றத்திலும் அணல் அடித்தது...ஊரின் முகத்தில் புன்னகை தொலைந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது...எட்டுத்திசைகளிலும் இருந்து விரட்டப்பட்ட சந்ததிகளின் துயரத்தில் ஊர் வாடிக் கிடந்தது...வீட்டு நாய்கள் வீதிகளில் அலைந்தன...ஒப்பாரிகள் ஊரை நிறைத்தன...சுதந்திரம் தொலைத்த கால்நடைகள் கட்டைகளில் ஒட்டிக் கிடந்தன....கன்றுகள் பால்மணம் தேய்ந்து பசியுடன் அலைந்தன....

காற்று உஷ்ணமாக வீசிக் கொண்டிருந்தது...வயல்கள் விளைச்சலின்றிக் கிடந்தன...தோட்டக்காறன் வாழ்க்கை வெயிலில் கிடந்ததால் தோட்டங்கள் காய்ந்து துரவுகள் வற்றிப்போயின... ஊர் எரிந்து கொண்டிருந்தது...ஊர்க்காரர்கள் நிழலின்றித் தவித்தார்கள்...வழிபோக்கர்கள் தொலைந்து போனதால் வீதிகள் காடாகின...சந்தை முகங்களற்று வெறுமையாகக் கிடந்தது...சந்தையில் கடல் மணக்கவில்லை...மனிதத் தொடுப்புக்களற்று கடல் நிலத்திலிருந்து தனியாக ஒடுங்கிப் போனது...கடலில் வேட்டைக்காரர்கள் அலைந்ததால் கடற்கரைகள் சுவடுகளற்று வெறுமையாகக் கிடந்தன... வேட்டைக்காரர்கள் கைகளில் ஆயுதங்களுடன் அலைந்து கொண்டிருந்ததால் பறவைகள் குஞ்சுகளுடன் புலம்பெயர்ந்தன...அவற்றின் கூடுகள் வெறுமையாகக் கிடந்தன...ஊரில் எல்லோரின் மீசைகளும் வேட்டைக்காரர்கள் மேல் ஆத்திரத்துடன் துடித்தன...தாத்தா தோட்டத்தை மறந்து போய்விட்டிருந்தார்...வேட்டைக் காரர்களை துரத்துவதைப் பற்றியே அவர் எப்பொழுதும் திண்ணையில் உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார்....

எல்லைகளில் இருந்து வெட்டுக்காயங்களுடன் துரத்தப்பட்ட சந்ததிகளின் முகங்கள் கோபத்துடன் அலைந்தன...எல்லைக்கற்கள் இடம்மாற்ரப் பட்டதால் ராஜகுமாரன் ஒருவன் வாளேந்தி போயிருப்பதாக பாட்டி சொல்லுவாள்..அதைச் சொல்லும்போது அவள் கண்களில் ஆவேசம் மின்னும்..ஊரிலிருந்து பல அண்ணண்மார்கள் ராஜகுமாரனின் தடங்களைத் தேடிப் போயிருந்தார்கள்...ஊர் இறுகிப் போனது..எங்கும் பேய் மெளனம் உறைந்து போய்க் கிடந்தது... முகங்கள் பயத்துடன் அலைந்தன...ராஜகுமாரனிடம் போனவர்களைத் தேடி வேட்டைக்காரர்கள் ஊருக்குள் புகுந்தார்கள்...ஊர் எரிந்தது...அவலக்குரல்கள் ஊரை நிறைத்தன...ராஜகுமாரனிடம் போனவர்களின் சுவடுகளை மிதித்து இன்னுமின்னும் பலர் கோபத்துடன் புறப்பட்டார்கள்...தாத்தா தன இயலாமையை நினைத்து பற்களை நெருமிக்கொண்டார்...

பாட்டி ராஜகுமாரனைப் பற்றி பெருமையாகப் பேசியபடி வெற்றிலைகளை மெல்லுவாள்...அவள் கனவில் ஒரு ராஜ்ஜியம் விரிந்திருந்தது...அங்கு வீரர்கள் வாளுடன் வேட்டைக்காரர்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்கள்...வேட்டைக்காரர்கள் அஞ்சி நடுங்கிப் போயிருந்தார்கள்..செழித்து வளர்ந்த பாட்டியின் ராஜ்ஜியத்தில் களைகளும் முளைத்தன...பாட்டியின் வெற்றிலைத் துப்பலில் தோய்ந்து களைகள் அழுக்காகிக் கிடந்தன...பாட்டி நட்ட தென்னைகள் வானத்தை நோக்கி ராஜகுமாரனின் வெற்றிக்காக வேண்டிக்கொண்டிருந்தன...பாட்டியின் கனவு பற்றி எரிந்து ஊர்முழுதும் பரவி விட்டிருந்தது...வீரர்களின் வெற்றிக்காக கோவில் முற்றத்தில் மனங்கள் தவங்கிடந்தன...தாத்தா தானறிந்த ராஜகுமாரனின் கதைகளை ரகசியமாக வீட்டில் பரிமாரிக்கொள்ளுவார்...

மெதுமெதுவாகப் பாட்டி தன கனவுகளை என்னுள் கடத்தி விட்டிவிட்டிருந்தால்...ராஜகுமாரனிடம் போன வீரர்களை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தபோது நான் நன்றாக வளர்ந்து விட்டிருந்தேன்...வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்புவதற்காக வேருடன் பிடுங்கி என்னை வெளிநாடுகளில் நட்டுக்கொண்டபோது பாட்டி எனக்குள் கடத்திவிட்ட கனவுகளை பொக்கிசமாகப் பாதுகாத்துக் கொண்டேன்...காலத்தின் இரும்புத்திரைகளின் பின்னால் பாட்டியின் ராஜகுமாரன் வீழ்த்தப்பட்டானாம் என்ற கதைகள் காற்றில் பரவின...ஊர் தேம்பி அழுதது...ராஜகுமாரனைப் பற்றிய கதைகள் ஒரு சரித்திரத் துயரமாக நீள்கின்றன...யாவுமறிந்த நிலவு ஊர் முற்றம்தாண்டி ஊமையாகப் போகிறது..ஒரு சரித்திரம் உக்கிப்போவதைப் பார்த்து இனம் அதிர்ந்து நிற்கிறது...பாட்டி கலங்கவில்லை...அவள் கனவுகள் முடிவின்றி வளர்ந்து கொண்டேயிருக்கின்றன...அவளைப் போலவே ஆயிரம் ஆயிரம் பாட்டிகளின் கனவுகள் ஊரைத்தாண்டி,தேசம்தாண்டி,கனட்ங்களைத் தாண்டி பல்லாயிரம் பேரன்களின் கனவுகளில் பெரு விருட்சமாக வளர்கின்றன...ஒரு ராஜ்ஜியத்தின் கனவு அவற்றில் புதைந்து கிடக்கின்றது...