Pages

Wednesday 15 October 2014

மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள்....

[தாய் மண்ணைப் பிரிந்து வந்த ஏக்கம் எல்லா உயிர்களிடத்தும் இருப்பது.பறவைகள் விலங்குகள் கூட தங்கள் கூடுகளையும் இருப்பிடங்களையும் தேடிப்போகவே எப்பொழுதும் முனைகின்றன.மண்ணைப்பற்றிய ஏக்கமானது ஒவ்வொரு புலம்பெய்ர்ந்த மனிதனது ஆன்மாவையும் ஓயாத தீயாக எரித்துக் கொண்டே இருக்கும்.சிதறிக்கிடந்த யூதர்களின் மனங்களில் எல்லாம் எரிந்த அந்தத்தீயே இன்று ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழர்களின் மனங்களிலும் கணல்கிறது, என்னுள்ளும் இருக்கும் அணைந்து போகாத அந்ததத் தீயில் உருகிய சில கவித்துளிகள்....தொடரும்]


பெருங்கூட்டமாய் நெடிதுயர்ந்து நிற்கும் ஓக் மரங்களின் கீழ்
நான் தனிமையைத்தேடி வந்தமர்ந்தபோது
காற்று துருவப்பாறைகளிலிருந்து பனித்திவலைகளைக் காவிக்கொண்டு
விரட்டிவரும் வெளிச்சத் துண்டுகளிடமிருந்து விலகிப்பறக்கிறது
நீள் கழுத்துப் பறவைகள் சில மேகங்களின் கீழே
ஆழக்கடலலைகளின் ஆர்ப்பரிப்பை இரசித்தப்படி
விரைந்து கொண்டிருக்கும் பகல்ப்பொழுதின் தடங்களைத் தொடர்கின்றன
சாளரத்தினூடு தெரியும் உலகத்தில் மிதந்து கொண்டிருக்கும்
குழந்தையை தாலாட்டிய படி மெல்ல வந்து சேர்கிறது மாலை 
காலப்படுக்கைகளில் புதைந்துள்ள மனித இனத்தின் யுகக்கனவுகளில்
சிலிர்த்தபடி இருள் மெல்ல உயிர்க்கிறது
ஒரு பகலின் முடிவிலும்,ஒரு மாலையின் நிகழ்காலத்திலும்
ஒரு இரவின் வருகையிலும்
தாய் மண்ணைத்தரிசித்தபடி என் தனிமை கரைகிறது...




துருவ மலரொன்றின் வாசனை நாசித்துவாரங்கள் வழியே பயணித்து 
பனிக்காற்றில் உறைந்த என் உயிர்ப்பூவை எழுப்பிய போதும்
பனிப்பறவை துப்பிய நீர்த்துளி ஒன்று 
ஊசியிலை மரமொன்றின் முனைகளிலிருந்து வழிந்து 
என் உடலில் மோதிச்சிதறிய போதும்
சிதறிய துளிகளிலிருந்து விடுதலை பெற்று 
குளிர்ச் சிலந்தி என்னுடலெங்கும் பரவிய போதும்
மனக்கூட்டின் ஆழத்தில் தேங்கியிருந்தபடி சலசலக்கிறது
என் தாய்மண் தந்த கதகதப்பின் ஞாபகத்துளிகள்...


என் மொழியின் சுவடுகளே அற்ற தெருவொன்றில் அந்நியப்பட்டு அழிகிறது இம்மாலை.....

பெயர்தெரியாத சில பறவைகளின் பாடல்களிலும்
துருவ‌க்காற்று சுமந்துவரும் காட்டுப்பூக்களின் வாசனைகளிலுமிருந்து பெருகி வழிகிற‌து
புழுதிக்கூட்டிலிருந்து தவறி வீழ்ந்த ஆன்மா ஒன்றின் நீள்துயர்...

பனைமரக்காட்டிடையே கொதிக்கும் நினைவுத்துயரின் வெம்மையில் மூழ்கித் தகிப்பிழந்து சாள‌ரமரங்க‌ளின் பின்னே மறைகிறது இம்மாலைச்சூரியன்...

இந்த இரவின் தனிமை முழுவதற்குமாய் தாய் மண்ணின் நினைவுகளைத் தூவ வரும் நிலவை இனி எதைக்கொண்டு மறைப்பேன் நான்....


உதிர்ந்து போகும் சருகுகளில்
சிரிக்கும் நேற்றைய இளமைகள்
அழுக்கடைந்த மரத்தின் பழுப்பு நிறங்களில்
மறைந்துகிடக்கும் முதுமை
அடங்கிப்போகும் பெருநகரின் இரைச்சலில்
விழித்தெழும் தனிமை
மறைந்துபோகும் சூரியனுடன்
நிறைவுபெறும் நாள்
மரணம் எனும் இலக்குடன் திரியும்
காலம் எனும் பறவையின் சிறகில் ஏறிப்பறக்கிறது இன்றைய மாலை
நாளை இலக்கற்று விடியப்போகும் ஒரு நாடற்ற நாளிற்காய்...


வெட்டவெளிகளில் படர்ந்திருக்கும்
வெயிலை விரட்டிவிட்டு
சாளரங்களின் இடுக்குகளினூடு நுழைந்து
கண்களை வருடி விடும் தென்றலையும்
விண்மீன்களையும் அழைத்துக்கொண்டு
ஒளிக்கற்றை விழுதுகளின் வழியே கீழிறங்கி
இருளுடன் போராடும் நிலவையும்
மாலையின் போதையில் மயங்கிச் சிவந்துபோய்
காற்றுப்பறவையின் முதுகிலேறி
இலக்கற்றுத்திரியும் மேகங்களையும்
என்னை வழியனுப்பிய கடைசி நாளில்
இதுவரை உணரப்படாத மொழிகளில் பேசிய
செடிகளின் வார்த்தைகளையும்
ஒரு மழை நாளில் நீ சிதறவிட்ட புன்னகையில்
சேகரித்த முத்துக்களையும்
தொலைத்து விட்டுப்
பனிமர தேசத்து நகரங்களில் தேடுகிறேன்
யாரேனும் பார்த்தீர்களா...?


இயந்திரங்களின் இரைச்சல்கள் ஓய்ந்து போன ஓர் இரவில்
பூமியைப் புதைத்துவிட்டுக் கட்டடங்கள் விதைக்கப்பட்ட
பெருநகரொன்றின் பின்னால்
தொலைவில் தெரியும் சதுர வயல்களின் மடியில்
ஒரு நாளை அனுப்புவதற்கான நீண்ட பறப்பொன்றின் முடிவில்
இளைப்பாறுகிறது என் மனம்
மழை ஒழுகும் நாளொன்றில் நனைந்தபடியே
நான் சேகரித்த பெயர்தெரியாத சில பறவைகளின் பாடல்களையும்
கடற்கரையில் கொட்டிக்கிடக்கும் காலடித்தடங்களின் நடுவே
கண்டெடுத்த குழந்தை ஒன்றின் புன்னகையையும்
நெடிய பனைமரங்களின் இடையில்விழுந்துகிடந்த
நிலவின் சிதறல்களையும்
முன்பொருநாள் நீ கொடுத்த முத்தங்களில்
உமிழ்ந்த நினைவு மொட்டுக்களையும்
என் மண்ணில் இருந்து எடுத்துவந்த
ஞாபகப்புத்தகத்தில் விரித்துப்பார்க்கிறேன்
பகலின் இரைச்சலில் நான் கரைந்துபோகுமுன்
படித்து முடிக்கவேண்டும்...



மெல்ல மெல்ல இல்லாது போகும்
பகலொன்றின் பின்னாலிருந்து வரும்
இரவின் விழுதுகளைப் பற்றிக்கொண்டு
மன நிலத்தின் பெரு வெளியெங்கும்
இறங்கிப்பரவுகிறது உன் பிரிவுத்துயர்
பகல் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவதற்க்காய்
உன் புன்னகைத்துளிகள் நிரம்பிய முத்தம்களைக்
காவி வருகிறது என் நினைவுக்குதிரை
மண்ணிண் நினைவுகளை மீட்டியபடி
ஒழுகிய மழைத்துளி ஒன்றின் சிதறலில் இருந்து
மெல்ல ஒலிக்கிறது பெரு நகரத்தின் நீள் மெளனம்
என்றோ ஒரு நாள் இறந்துபோன வண்ணாத்துப்பூச்சி ஒன்றின்
உடைந்துபோன சிறகொன்றிலேறிப்பறக்கிறது
தாய் நிலம் நோக்கிய என் கனவுகள்.....




பகல் விட்டுச் சென்ற நினைவுகளைச் சுமந்தபடி
உறங்கிப் போய்க் கிடக்கிறது பூமி...
என்னூரையும் எங்கோ தொலைவிலிருக்கும் என்னையும்
அவதானித்தபடி விழித்திருக்கின்றன
நிலவும் சில விண்மீன்களும்..
மேகங்களுக்கு அப்பால் 
நட்ச்சந்திரக்களுக்கிடையே ஒளித்துவைத்த
என் இரவுக்கனவுகளை அணைத்தபடி
காற்றும் மரங்களும் புன்னகை செய்ய
நான் புரண்டு படுக்கிறேன்
இரவின் நிசப்தத்தைக் கிழித்தபடி
எங்கோ தொலைவில் கேட்க்கும் தெருநாயின் சப்தத்தில்
விழித்துக் கொள்கின்றன என் ஊரின் நினைவுகள்.. 


கிளைகளின் வழியே இறங்கி வரும் இரவை அணைத்தபடி
இலைகளில் அடைந்திருக்கும் மாலைக்கு விடைகொடுக்கின்றன மரங்கள்
சுற்றிவர உன் புன்னகைகள் நிறைந்திருந்த பொழுதொன்றில்
என் நினைவுகளில் வரையப்பட்ட உன் ஓவியத்தை ரசித்தபடி
மெல்லக் கடந்து செல்கிறது இன்னொரு மாலை
ஊரின் புழுதிகளில் ஆடிக்களித்துவிட்டு
இன்றும் அழுக்காகி வருகிறது நிலவு
என் தனிமைகளுடன் பேசிவிட்டுக் காற்று
என் தேசத்தின் கரைகளைத்தேடி இரைந்தபடி விரைகிறது..
ஒரு கனவின் வெளிச்சத்தில் தாய்மண்ணைத்தரிசிக்கும்
விருப்புடன் நான் உறங்கச்செல்கிறேன்...



பிரிவின் துயரில் தோய்ந்தொழுகியபடி
தாய் நிலம் பற்றிய கனவுகள் மனதில் மெல்ல எழுந்து விரிகையில்
நான் தனித்திருக்கிறேன்
என்னைச் சுற்றி இருக்கும் உலகம் 
எரிந்துகொண்டிருப்பதாக கண்டுகொள்கிறேன்
மினுமினுக்கும் வீதி விளக்குகள்
எரிந்து முடிந்த என் தேசத்தின் காயங்களாய்த்தெரிகின்றன
தென்றல் காவிவரும் பனித்துளிகள்
எம் குழந்தைகளின் கண்ணீர்த்துளிகளில் இருந்து ஆவியானதாக உணர்கிறேன்
அழகாய் வழிந்தோடும் அருவிகள்
எம் மக்களின் கண்ணீரை அள்ளிச்சுருட்டி வருவதாய் அழுகிறேன்
உதிரும் சருகளின் வழி நிலமெங்கும்
இறங்கிப் பரவுகிறது என் இனத்தின் நீள்துயரம்
வழியெங்கும் எம் துயரை எச்சமிட்டபடி
கடந்துபோகின்றன சில மாலைப் பறவைகள்
விழிகளைமூடி வழியும் கண்ணீர்த்துளிகளில் மோதி
உடைந்து சிதறுகிறது நிலவு
எழுதுகோலை எறிந்தாவது என் தனிமையை 
விரட்டிவிடத் துடிக்கிறது மனது
தாய் மண்ணே..!
கடக்கவே முடியாத உன் நினைவுகளுடன்
கரைந்துபோகிறது இன்னொரு இரவு...



இயந்திரங்களின் ஓசைகளால் நிரப்பப்பட்ட அடர்ந்த பகல்.....
என்றோ ஒரு நாள் உதிர்த்த உன் புன்னகையை நினைவுபடுத்திய ஓய்வான மாலை.....
காதலர்களின் முத்தங்களில் நனைந்து கிடக்கும் கடற்கரை.....
நாளையைப் பற்றிய கவலைகள் அற்று நடக்கும் 
ஒரு சிறுவனின் நிழல்.....
உன் நினைவுகளால் நிரப்பப்பட்ட கணங்களை விரட்டியபடி பறக்கும் சில வண்ணாத்துப்பூச்சிகள்....  
வீடு திரும்பும் ஒரு விவசாயின் களைத்துப் போன காலடித்தடங்கள்..... 
என அத்தனையும் எளிதில் கடந்து 
மெல்ல வருகிறது ஒரு இரவு
இனி கடக்கவே முடியாத என் மண்ணின் 
நினைவுகளில் நான் கரைந்து கிடக்க...



நேற்றைய நினைவுகளை 
நெருப்புக்குள் புதைத்துவிட்டுக் காத்திருக்கிறோம்...
புலுனிகளும் செம்பகங்களும் தாவிய கிழுவை வேலி 
துளிர்த்தளுக்காய் தவித்திருக்கிறது... 
அணில்கள் கோதிப்போட்ட
வேப்பம்பூக்கள் தூவிய கிணற்றடி 
வெம்மையில் தவிக்கிறது..
தரவையும் தரிசு நிலங்களும் 
ஆள்காட்டி வயல் வெளியும் 
ஆலமர நிழல் உறங்கும் வாய்க்கால்தெருவும்
அம்மாச்சிகள் வளர்த்த 
சாறங்கட்டிய பொடியங்களின் கனவுகளும் 
விடுதலையை தொலைத்த சூனியத்துள் 
தனித்தலைகின்றன..
ராஜகுமாரனைப் பற்றிய கதைகள் 
ஒரு சரித்திரத் துயரமாக நீள்கின்றன...
யாவுமறிந்த நிலவு 
ஊர் முற்றம்தாண்டி 
ஊமையாகப் போகிறது.. 
ஒரு சரித்திரம் உக்கிப்போவதைப் பார்த்து 
இனம் அதிர்ந்து நிற்கிறது...
வெளியே போர் இல்லாமல் ஊர் இருக்கிறது 
உள்ளே வழியில் தேர் அறுந்த வலியை மறைத்தபடி.. 
காலம் யாருக்காவும் காத்திராமல் 
கடந்துபோகிறது என் இனத்திற்கு 
தெருநாயொன்றின் ஊளையைப்போல..
இப்பொழுதெல்லாம் 
முற்றுப்பெறாத ஈழக்கனவுகளுடனேயே 
முடிந்துபோகுமோ என் வாழ்க்கை என்கின்ற பயமே 
கரிய இருளூடு அந்தரித்தலையும் 
மெல்லிய வெண்மையொன்றை போல 
அலைந்தழியும் என் 
ஆன்மாவின் தவிப்பின் காரணமாய்... 
எனக்கான அடையளங்களை தேடியபடி 
பனிதேசத்து வீதிகளில் தனித்தலைகிறது எனதான்மா....
என் ஆன்மா அலையும் ஞாபக வீதிகளில் 
உங்கள் ஆன்மாவும் பயணித்தால் 
ஒரு தேசம் தொலைத்த நாடோடி ஆன்மாவாக 
முடிவில் உணர்த்தப்படப்போவது 
எதுவென்று புரியப்படாமல் போகலாம் 
உங்களுக்கும் 
எனது பயணத்தைப்போல.......



முற்றத்து மலரொன்றின் 
ஒற்றை இதழில் குவிந்து கிடக்கும் 
இளமைக்காலப் புன்னகையை ரசித்தபடி
உதிர்கின்றன பகலின் சருகுகள்

எங்கோ கசியும் இசைத்துளி ஒன்றில்
உயிர்த்து எழுகிறது
என் தேசத்தின் புழுதி வாசமும்
வாழ்க்கையும்

காலத்தைக் கடந்து காற்றில் மிதந்து வந்து
என் சாளரங்களை அடைகிறது
முற்றத்து மரநிழலில் நெடிதுறங்கும்
அம்மாவின் பேரன்பு...

ஆட்காட்டிகளும் வயல்க்கரைகளும்
ஆலமர நிழல்களுமாய்
நிரம்பியிருந்த பால்யங்களின்
துளிகள் சிந்திக்கிடக்க
இனி ஒளித்து வைத்துக்கொள்ளவே முடியாத
எண்ணை வைத்துப் படியத் தலை சீவிய
என் பால்யகால சிறுவனின்
கரம் பற்றிப் பயணிக்கிறது இந்த மாலை.....




மனக்குளம் உடைந்து
உயிர்க்கடல் நிறைகிறது
தாய்மண்ணின்
நினைவுகளால்.....

சமுத்திரத்தின் பின்னால்
தாயகத்தை நோக்கிப் பறக்கும்
பகலின் சுவடுகளை விரட்டியபடி
இருள்ப் பறவையை முந்திக்கொண்டு
என் நினைவுகளும் விரைகின்றன...

1 comment:

தனிமரம் said...

KAVITHAIKAl ellam innum pala ninaivai asaipodukinrathu!

Post a Comment