Pages

Tuesday 25 December 2012

எங்க ஊர் காட்வெயர் எஞ்சினியர்...

யாழ்ப்பாணத்துக்கு கணணி பரவலாக அறிமுகமான நேரத்தில் எத்தினை பேர் ஊரில் இருந்தீர்களோ தெரியாது..அப்படி இருந்திருந்தால் அந்த நேரம் புதிது புதிதாக முளைத்த பல கணணி திருத்தும் கடைகளையும் பார்த்திருப்பீர்கள்..அந்த நேரம் கணணி யாழ்ப்பாணத்துக்கு புதிது என்பதால் பிள்ளைகளுக்கு கணணி வாங்கிகொடுத்த பெற்றொர் பலருக்கு அதைப்பற்றி பெரிதாக விளக்கம் ஏதும் தெரியாது..அப்படியான பெற்றொர்கள் கணணி பிழைத்துவிட்டது என்று இந்த திருத்துபவர்களிடம் போனால் அவர்கள் செய்யும் சுத்துமாத்துக்கள் பல..(எல்லாரும் அல்ல)..இந்த நிலமை புலம்பெயர்ந்த பின்னும் பல தமிழ் வீடுகளில் கணணி பற்றிய பெரிய அறிமுகம் இல்லாத பெற்றோரை பல கண்ணணி திருத்துபவர்கள் ஏய்ப்பது நடக்கிறது..இப்படிப்பட்ட ஊர் காட்வெயர் எஞ்சினியர்களை வைத்து ஒரு பதிவு....



அண்ணணிண் சிங்கிள் பாத்ரூம் சைஸ் காட்வெயர் திருத்தும் கடை...

இரண்டு மேசை..இதுக்குள்ளைதான் நீட்டவும் முடியாமல்..மடக்கவும் முடியாமல் அண்ணை பழைய கொம்பியூட்டருகளோட(அதுக்குள்ளை ஒண்டும் கிடவாது..வெறும் கோதுகள்..நான் ஒரு பெரிய வேலைக்காறன் எண்டு காட்ட பம்மாத்துக்கு வைச்சிருக்கிற பழைய இரும்புக்கடை அயிற்றங்கள்...)சண்டை பிடிச்சுக்கொண்டு இருப்பார்...

ஆராவது கொம்பியூட்டர் திருத்த வந்தால் அண்ணை வாங்கோ...இருங்கோ...(இருக்கிறதுக்கு அங்கை இடமுமில்ல கதிரையுமில்ல...கொம்பியூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலத்தில வந்த கொம்பியூட்டர் ஒண்டை கவிட்டு வைச்சிட்டு அதிலதான் இருங்கோ எண்டு வாறவையிட்ட சொல்லுறவர்..வாறவை அதைப்பாத்த உடனையே இருக்கிற எண்ணத்தை கைவிட்டிட்டு நேர கொம்பியூட்டரில இருக்கிற பிரச்சினையை சொல்ல வெளிக்கிட்டுவிடுவினம்..அண்ணனின் விருப்பமும் அதுவே...சும்மா இருந்து அந்த நாலுக்கு நாலு கடைக்குள்ளை இடத்தை நிரப்புறதைவிட பக்கெண்டு அலுவலைச்சொன்னால் எவ்வளவுதேறும் எண்டு ஒரு மனக்கணக்கு போடலாம் எண்டுறதை விட அங்கிருக்கிற சாமானுகள் எல்லாம் டம்மி எண்டதை ஆரும் பாத்திடக்குடாது எண்டதுதான் அண்ணைக்கு முக்கியம்...

அண்ணை உங்கை ரவுனுக்க இருக்கிற மூண்டு கொம்பியூட்டர் திருத்துற கடைக்காரரிட்டையும் குடுத்துகேட்டுப்பாருங்கோ..அவங்களுக்கு அரைவாசிச் சாமானுகளின்ர பேரே தெரியாது..இந்த விசித்திரத்திலை வாடகை கட்டி கடை எடுத்து வச்சிருக்கிறாங்கள்...அதில ஒருத்தன் சீதனக்காசிலை போட்ட கடை..மானங்கெட்டவங்கள்..இஞ்சை கொண்டாங்கோ..என்னட்டை வந்திட்டியள் எல்லோ..இனி உங்கடை கொம்பியூட்டர் புதுக்கொம்பியூட்டாராய்தான் வரும்..என்ரவேலை கிளீன் வேலை அண்ணை..உவங்களை மாதிரி சொறியிறேல்ல நான்...ஊரான் எல்லே...கண்ணத்தைப் பொத்தி அடிச்சமாதிரி காசெல்லாம் கேக்கமாட்டன்..என்னடை ரேட் நியாய ரேட்தான் எப்பவும்...

வந்தவர் அண்ணன்ர கதையிலை மயங்கி சுடச்சுட வீட்டுக்குப்போய் கொம்பியூட்டர் குலுங்கிப்போகும் எண்டு பொடியையும் பின்னுக்கு ஏத்தி அவன்ரை மடியிலை அலுங்காமல் குலுங்காமல் புதுமணப்பொம்பிளை மாதிரி கொம்பியூட்டரை கொண்டு வந்து இறக்குவார்...

நம்பிக்கெடப்போகும் அந்த வெங்காயமும் கொம்பியூட்டரை கொண்டுவந்தவுடன இவர் இருக்கிற ஸ்கூட்றைவர் எல்லாத்தையும் போட்டுபாத்து அதிலை எது பொருந்துதோ அதாலை மளமளவெண்டு கவறைக் கழட்டுவார்..உள்ளுக்கை வடிவாய் உத்துப்பாத்திட்டு வெளியாலை தள்ளிக்கொண்டு நிக்கிற ஏதாலும் ரண்டு வயறை குத்துமதிப்பாய் இழுத்துக் கழட்டுறது..பிறகு தலையை சொறிஞ்சுகொண்டு முகட்டு வளையைப்பார்த்து யோசிக்கிறது...அண்ண்ண்ண்ண்ணை....எண்டு இழுத்துப்போட்டு...உள்ளை கனக்க வேலை கிடக்கண்ணை திருத்த...இதுக்குள்ளை இப்ப கையை வைச்சால் மினக்கெடும் அண்ணை..பங்க பாருங்கோ எத்தினை கொம்பியூட்டர் கழட்டினபடி கிடக்கெண்டு...உள்ள இருக்கிற மூடின கோதுவளைக்காட்டுவார்...

வந்தவரும் அண்ணை ரொம்ப பிஸிபோல பாவம் அந்தாள்..முன்னம் கொடுத்தவங்களும் அந்தாலை ஆக்கினைப்படுத்துவங்கள்தனை எண்டு கழிவிரக்கப்பட...ஒரு ரெண்டு நாளையாலை வாங்கோ..எல்லாம் அந்தமாதிரி கிளீனாய் முடிச்சு வைக்கிறன்...ஒருக்கா உங்கடை மொபைல் நம்பரை தந்திட்டு போங்கோ...நான் எதுக்கும் இன்னுமொருக்கா வடிவாய் செக் பண்ணீட்டு என்ன பிரச்சினை எவ்வளவு சிலவு வரும் எண்டு கோல் பண்ணி சொல்லுறன் எண்டு எங்கடை காட்வெயார் என்ஞினியரும் பீலாவிடுவார்...

வந்தவர் போனவுடன் எங்கடை எஞ்சினியர் கடைக்குள்ள இருக்கிற சுத்தியல்,ஸ்பெனர்,குறடு எண்டு அகப்படுற எல்லாத்தையும் பாவிச்சு அங்கினை இங்கினை கொம்பியூட்டரில ஒரு தட்டு ரண்டு சுறண்டல் சுறண்டுவார்..ஏதாவது வயர் கியர் ஆடுப்பட்டிருந்தால் இல்லாட்டி கறல்கிறல் ஏதேனும் கொட்டுப்பட்டால் ஒன் பண்ண குருட்டுவாக்கிலை கொம்பியூட்டர் வேலை செய்யும்..அப்பிடியும் வேலை செய்யாட்டி சயிற்றாபிடிச்சுக்கொண்டு கவறிலை ரெண்டு அடி அடிப்பார்..முந்தி பொருளாதார தடையுக்கை ரீவி பாக்க யூஸ் பண்ணிண வாட்டர்பம் இன்ஞின்மாதிரி திடீரெண்டு கொம்பியூட்டர் வேலை செய்யும்...

அப்ப இவர் உடனை போனைபோட்டு அண்ணை எல்லாம் ரெடி வந்து சாமானை பிக் அப் பண்ணிக்கொண்டுபோங்கோ எண்டுவார்...கொம்பியூட்டரைக்குடுத்தது உடனை அண்ணை என்னமாதிரி பீஸ் எல்லாம்..எவளவு வரும் எண்டு இழுக்க..இவர் உடனை அண்ணை காசென்ன காசு மனிசர்தான் முக்கியம்..அதுகும் நீங்கள் எங்கடை ஊர்க்காரர்..உங்களிட்டை கேப்பனே..நான் கூலிகீலி ஒண்டும் வைக்கேல்லை அண்ணை..சாமானுவள்தான் கொஞ்சம் மாத்தவேண்டி வந்திட்டு...இஞ்சை யாழ்ப்பாணத்திலை ஒறிஜினல் சாமனுவள் எடுக்கிறதே கஸ்ரம்..எல்லாம் சைனிஸ் டூப்ளிக்கேற்றுவள்தான் விக்கிறாங்கள்..ஆனால் நான் உங்களுக்கு கொம்பனியாலை இறக்கின திறம் சாமானுவளாய்தான் போட்டிருக்கிறன் எண்டிட்டு...நாலைஞ்சு இங்கிலிஸ் எழுத்துக்களை குத்துமதிப்பாய் கோத்து  Pso,MGT,MMS எண்டு நாலைஞ்சு பேரை மாத்தின பாட்ஸ்களின் பேரெண்டுவர்..இப்ப கொன்டுபோய் போட்டுபாருங்க சும்மா தண்ணிமாதிரி உங்கட கொம்பியூட்டர் வேலை செய்யும் எண்டவும்..இதுவும் நம்பி கேட்ட காசை குடுத்திட்டு வீட்டுக்கு எடுத்திட்டுபோகும்..

இந்த குறளிவித்தைக்கெல்லாம் மசியாத கொம்பியூட்டரை இவர் திருத்தேலாது எண்டு சொல்லமாட்டர்..கவுரவம் என்ன ஆகிறது..அதுக்குதான் இன்னொரு கதை வைச்சிருக்கிறார்..அண்ணை இதுக்குள்ளை நிறைய சாமானுவள் மாத்தவேணும்..புரொசெசர் இத்துப்போச்சு...மதர்போட் உக்கிப்போச்சு..றம் செத்துப்போச்சு...உவ்வளவும் மாத்திறதை விட நீங்கள் ஒரு புதுக்கொம்பியூட்டர் வாங்கலாம் எண்டவும் வந்த அப்பாவி அதை நம்பி கொண்டந்த கொம்பியூட்டரை இனி ஆர் திருப்பி கொண்டு போறதெண்டு இவரிட்டையே விட்டிட்டு இவர் சொல்லுற கடையிலை புதுக்கொம்பியூட்டர் வாங்கும்..அந்தக்கடையிலை கிடைக்கிற கொமிசனையும் வாங்கிகொண்டு வந்த வெங்காயம் விட்டிட்டுபோன கொம்பியூட்டரை ஆரேனும் இன்னும் நல்லாய் திருத்துற ஆக்களிட்டை குடுத்து திருத்துவிச்சு இன்னொரு வெங்காயத்தின்ர தலையிலை கட்டிவிடுவார் எங்கடை என்சினியர்... ஆனால் அவற்றை இந்தளவு வண்டவாளங்களுக்கு நடுவிலும் கடைக்கை ரைகட்டிக்கொண்டு நிக்க ஒரு நாளும் மறக்க மாட்டார்...இப்பிடிதான் எங்கடை காட்வெயர் எஞ்சினியர் மார் பலற்ற பிழைப்பு யாழ்ப்பாணத்திலை அந்த நேரம் ஓடிச்சு.. :lol:

Monday 19 November 2012

தரைக்குவரும் நட்சந்திரங்கள்..


கண்ணீரை ஆவியாக்கியபடி
ஒரு காலம்
வறண்டுபோய் கிடக்கிறது..


ஊரெல்லாம்
ஒருபாட்டம் மழைவராதா என்று
மண்ணை இறுகப்பிடித்தபடி
ஈரப்பதன் தேடி
வேர்கள் மூச்சுவிடத்துடிக்கின்றன 


திசைகளை மூடி
வீசும் அணல்காற்றில்
தீய்ந்து தீய்ந்து
ஒவ்வொரு இலைகளாக 
கருகி உதிர்கின்றன


அணலாய் கொதித்துருகும்
எல்லாக்கடல்களில் இருந்தும்
ஆவியாகின்றன
கண்ணீர்த்துளிகள்


இனி முட்டி முடியாமல்
ஒரு திசையில்
விரைவில் இருட்டும்


அப்போ பெய்யும்..
பெய்யத்தானே வேண்டும்
ஒரு பெரும் மழை
பயிர் பச்சை தழைக்க


உக்கிப்போய் கிடக்கும்
உதிரம் காய்ந்த தேசத்தின்
சருகுகளை உரசியபடி
காற்று சடசடவென்று
உறுமிக்கொண்டு வீசும்


வெட்டி மின்னல் பாயும்போது
வெறும் கோடை என்ன செய்யும்..?
ஒற்றைவானம் என்ன
ஓராயிரம் வானமும்
மொத்தமாய் பிளந்துவந்து
கடலை சொரியும்


பார்
உள்ளே ஊமையாய்
எரிந்துகொண்டிருப்பது
பெருந்தீ..


ஒரு புள்ளியில்
வெடித்துப் பிழந்து
விண்ணோக்கிப்
பாயும்போது
மின்னல் தொடங்கும்..


முக்கி முக்கி
இடிமுழக்கத்தை
ஈனாமல் போக
எம்முன்னே இருப்பது
மலட்டு வானமல்ல
கண்ணீர்களால்
கருக்கொண்ட
கருவானம்..


எனக்கு தெரியும்
ஒருகாலத்தை
கடந்துபோவது
அவ்வளவு இலகுவல்ல


நாங்கள்
ஒரு கொடிய
கோடையைக் கடக்கிறோம்


மாரி கருக்கட்டுகிறது
வா குடையைத்தேடுவோம்..
மழைவரும்போது
கல்லறைகளைத்தேடி
தரைக்குவரும் நட்சத்திரங்களை
தரிசிக்க செல்லவேண்டும்... 

Saturday 25 August 2012

பேனாவில் இருந்து வடியும் இரத்தத்துளிகள்...


அண்மையில் பிரான்சின் வெயில்நாளொன்றில் பாரிஸின் மையப்பகுதியில் வெள்ளையினத்தவர்களின் நடுவே உலகெங்கும் சிதறி இருக்கும் என் இனத்தில் இருந்து தெறித்த ஒரு துளியாக இலக்குகள் எதுவுமின்றி நான் அலைந்துகொண்டிருந்தேன்....என் மொழியின் சுவடுகளே இல்லாத சனசந்தடிமிக்க அந்த நகரத்தில் புள்ளிகளுடன் புள்ளியாய் வெள்ளைகளின் நடுவே நாடிழந்த ஒரு அகதித்தமிழனாய் நான் நின்றுகொண்டிருந்தேன்....நடமாடும் பொம்மைகள்போல் விளையாடிக்கொண்டிருந்த வெள்ளையினக் குழந்தைகளின் புன்னகையில் மனதைப் பறிகொடுத்தபடி பொன்னிறத்தில் அமைந்த அந்த அற்புதமான மாலைப்பொழுதை நான் அனுபவித்துக்கொண்டிருந்தபொழுது விளையாட்டில் தன்னைமறந்த குழந்தை ஒன்று திடீரெனத் தவறி அங்கிருந்த சிமெண்ட் நிலத்தில் விழுந்துவிட்டது.காலில் சிறிதாக அடிபட்டுவிட்டிருந்தது.வெயில் நாளென்பதால் இரத்தம் நிற்காது வழிந்தோடிக்கொண்டிருந்தது.கணப்பொழுதில் அந்தக்குழந்தையை பலர் மொய்த்துவிட்டனர்.சில நிமிடங்களில் அம்புலன்ஸ் வண்டி ஒன்று அவ்விடத்திற்க்கு வந்து சேர்ந்துவிட்டது.ஒரு பெருந்துயர்க் காட்சி அப்பொழுது என்மனதில் விரிகிறது.2009 ஆம் ஆண்டின் ஆரம்பகாலங்களில் இப்படி எத்தனை எத்தனை ஆயிரம் எங்கள் குழந்தைகள் இரத்தம் சிந்தியபடி நிலத்தில் கிடந்தார்கள்.எந்தத்தப்பும் செய்யாத அந்தக் குழந்தைகளின் கண்ணீருடன் கூடவே கசிந்த நீதியினதும்,மனச்சாட்ச்சியினதும் ஓலங்களில் தோய்ந்து மூச்சடைத்துப்போய்க் கிடந்தது பூமி..வீரிட்டுக் கதறி அழுத எம் குழந்தைகளின் ஓலங்கள் உலகின் காதுகளை அடையும் முன்னரே வீரியமிழந்து காற்றுடன் கரைந்துபோயின...எங்கள் குழந்தைகளை அரவணைக்கவோ,அவர்களின் காயங்களுக்கு கட்டுப்போடவோ இந்தக் குழந்தைக்கு இருந்ததுபோல் அப்பொழுது யாரும் அங்கிருக்கவில்லை.அநாதையாகத் தெருக்களில் வீசியெறியப்பட்டு இரத்தம் சிந்தியபடி எங்கள் குழந்தைகள் கிடந்தனர்.இரக்கமற்று கண்களை இறுகமூடிக்கிடந்தது உலகம்.

பிஞ்சுக்குழந்தை மலர்விழி.....அண்ணா என்றழைக்கும் அழகிய மழலைக்குரலுக்கு சொந்தக்காறி.இனிய ஒரு சங்கீதம்போல அலைபேசியினூடு ஒலிக்கும் அவள் குரலில் மயங்கி மணித்துளிகளை மறந்து நான் பேசிக்கொண்டிருப்பேன்...அவளின் குழைவான சொற்கள் என் செவிகளில் விழும்போதெல்லாம் சிறகடித்துப்பறக்கும் பல்லாயிரம் வண்ணாத்துப்பூச்சிகளின் நடுவே என் மனம் மிதந்துகொண்டிருக்கும்...தெறித்து விழும் அவள் மழலைமொழியில் என் பால்ய காலங்களின் பிம்பங்களை நான் தரிசிப்பேன்...பின்னொருநாளில் உயிரை நடுங்கவைக்கும் குண்டொலிகளின் நடுவே மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துப் பார்க்கும்போது செல்பட்ட தன் கால்களில் ஒன்று துண்டாடப்பட்டு வெற்றிடமாக இருப்பதைப்பார்த்து எப்படித் துடித்திருப்பாள் அந்தப் பிஞ்சுமகள்...ஒற்றைக்காலுடன் அவள் உயிர்வாழ்வதைக்கூடப் பொறுக்கமுடியாத சிங்களம் அவள் கால்காயம் ஆறமுன்னரே கொத்துக்குண்டால் தலைசிதற சாகடித்தது....எத்தனைதடவை வெடித்துச் சிதறி இருக்கும் புத்தனின் இதயம்...இப்பொழுதெல்லாம் அண்ணா என்ற வார்த்தையை எந்தக்குழந்தையிடமிருந்து கேட்டாலும் சொற்களில் அடங்கா வலியுடனும் தவிப்புடனும் துண்டாடப்பட்ட தன்கால்களைப் பார்த்த மலர்விழியின் முகமே மனதில் விரிந்து என் இதயத்தை சாகடிக்கிறது....

சர்மிலா அம்மம்மாவின் மடியில் தூங்காமல் ஒருபோதும் உறங்கிப்போனதில்லை..கண்களில் வியப்பும்,புதினமும் விரிய விரிய அம்மம்மாவின் கதைகளைக் கேட்டபடி ஆனந்தமாய் உறங்கிப்போகும் குட்டி உலகம் அவளுடையது.அவள் புன்னகையிலும்,குறும்புத்தனங்களிலும் சிங்களம் என்ன குற்றத்தைக் கண்டதோ...வயிறு பிளந்து குடல் வெளித்தள்ள செத்துக்கிடந்த அம்மம்மாவின் பிணத்திற்க்குப் பக்கத்திலேயே தனியாகக் கிடந்த அவள் தலை என் கண்ணெதிரே தெரிகிறது...இனிக்கதை கேட்க முடியாதே என்று தனியே கிடந்த அந்த முகத்தில் தெரிந்த ஏக்கத்தையும்,தவிப்பையும் எந்த ஒரு இதயமுள்ள மனிதனாலும் இலகுவில் கடந்து சென்றுவிடமுடியாது...

கந்தக நெடி நிரம்பிய ஒரு மாலைப்பொழுதில் முள்ளிவாய்க்காலில் பங்கர் ஒன்றின் அவிச்சலுக்குள் பசிமயக்கத்தில் நினைவிழந்துகொண்டிருந்தால் சின்னஞ்சிறுமி ப்ரியா..பசியோடு துடித்துத்துவண்டு விழுந்துகொண்டிருந்த பிஞ்சுக்குழந்தையின் முகத்தைப் பார்க்கமுடியாமல் மழைபோலப் பொழிந்துகொண்டிருந்த கொத்துக்குண்டுகளின் நடுவே கால்வயிற்றுக் கஞ்சியாவது காய்ச்சலாம் என அரிசி தேடிப்போன தந்தையின் தலையை நெஞ்சில்துளி ஈரமில்லா சிங்கள அரசு அனுப்பிய சிப்பாய் ஒருவனின் தோட்ட துளைத்த செய்திகூடத்தெரியாமல் அப்பாவந்துவிடுவார் என்று பிஞ்சின் பசிபோக்க சொல்லிக்கொண்டிருந்த குடும்பத்தின் பசியை அவர்கள் இருந்த பங்கரின் மேல் எரிகுண்டைப்போட்டு மொத்தமாகவே அணைத்துவிட்டிருந்தது சிங்களம்...இப்பொழுதெல்லாம் கொதிக்கும் உலையில் பசியால் சோர்ந்து சோர்ந்துபோகும் ப்ரியாவின் பிஞ்சுமுகத்தின் பிம்பமே ஆடி ஆடி மேலெழுந்துவந்து அடங்கிப் போகிறது...என் உணவுக்கோப்பை முழுவதும் அவளின் நிறைவேறாத பசியே நிறைந்து போய்க்கிடக்கிறது...

சின்னஞ்சிறுமி அகிலா சிங்கள ராணுவத்திடம் தன் தந்தைக்காக மன்றாடிக்கொண்டிருந்தபோது நாங்கள் உலகின் வீதிகளில் கதறி அழுது கையாலாகதவர்களாக திகைத்துப்போய் நின்றுகொண்டிருந்தோம்...வல்லரசுகளின் பாதங்களை எங்கள் எல்லோரது கண்ணீரையும் ஒன்றாக்கி கழுவினோம்...வீதிகளை மறித்து எம் தேசத்து சேதிகளை கத்திக்கதறி உரைத்தோம்...எம் கண்ணீர்தான் காய்ந்துபோனது...எம் குரல்வளைதான் தேய்ந்துபோனது...சோர்ந்துபோய் நாங்கள் நின்றபோது எங்கள் குழந்தைகளின் உடல்களின்மேல் சிங்களத்தின் ஊர்திகள் ஊர்ந்துகொண்டிருந்தன...ஒரு தலைமுறை புதைக்கப்படுவதை மெளனமாய்,இயலாதவர்களாய் நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்....நாங்கள் சக்தியற்றவர்களாக நின்றோம்...எங்கள் பலம் ஒரு எல்லைவரைதான் இருந்தது..அதைத்தாண்டி எதையும் செய்ய முடியாத இயலாதவர்களாக இருந்ததுதான் எம் வாழ்நாட்களில் இனி எப்பொழுதும் மறக்கமுடியாத ஒரே ஒரு குற்றவுணர்ச்சியாக வரலாறு முழுக்க எம்மை வதைத்துக் கொண்டிருக்கும்..

ஒற்றைவரியைக்கூட எழுதமுடியாமல் எம் கவிஞ்ஞர்கள் பலரின் பேனாக்களின் வழியே இன்றும் ஓலங்களே இறங்குகின்றன....அவலமாக செத்துப்போன எம் குழந்தைகளின் கண்ணீர்த்துளிகள் பேனாமையாய்க் கரைந்தோடுகின்றன....இன்னும்கூட இரக்கமின்றி,எந்தவிதக்குற்றவுணர்வுமின்றி,கொஞ்சம்கூட வெட்கமின்றி எங்கள் எழுத்தாளர்கள் பலரின் பேனாக்கள் தங்கள் குழந்தைகளின் குரல்வளையை நெரித்த கொலைகாரர்களின்குரலாய்ப் பேசுகின்றன...தம் உறவுகளின் மேல் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் இனப்படுகொலையை,தம் சகோதரிகளின் மேல் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளை,எமதுமக்கள் சொல்லவே வாய்கூசும் எத்தனையோ உண்மைகளை தங்கள் குழந்தைகளின் புதைகுளிகளின்மேல் நின்றபடி நியாயப்படுத்துகின்றன....வெட்கமற்ற உங்கள் எழுத்துக்கள் இந்த உலகில் இன்னும் விற்றுத்தீர்ந்துகொண்டிருப்பதுதான் செத்துப்போன எம் குழந்தைகளை இன்னுமொருமுறை சாகடிக்கிறது,புதைக்கப்பட்ட என்னினத்தை மீண்டுமொருமுறை புதைக்கிறது....பாடல்களையும்,ஆடல்களையும்,திரைப்படங்களையும் எட்டுக்கோடி தமிழர்களின் ஊடகங்கள் ஒளிபரப்பிக்கொண்டிருக்க தெருக்கோடிகளில் நின்றபடி எங்கள் கண்ணீரைப் பதிவுசெய்ய நாங்கள் எப்பொழுதும் சில வெள்ளைமனிதர்களின் ஊடகங்களை தேடிப்போகவேண்டியிருக்கிறது....எங்கள் குழந்தைகளின் ஓலங்கள்,எங்கள் சகோதரிகளின் கண்ணீர்கள்,எங்கள் அண்ணண்களின் கண்களில் தெரிந்த இயலாமைகள்,ஏக்கம்கள்,மரணத்தின் நிழல்கள் என எங்கள் அவலம்கள் எல்லாம் நல்லிதயம் படைத்த பல வெள்ளையின மனிதர்களின் பேனாக்களில் இருந்து இன்றும் இரத்தமாய்க் கசிந்துகொண்டிருக்கின்றன...எங்கள் குழந்தைகள் சிந்திய இரத்தத்தை சுவைத்தபடி இரக்கமின்றி எழுதிக்கொண்டிருக்கும் என் இனத்தில் தவறிப்பிறந்தவர்களே...உங்கள் மரணம் எழுதப்படும் கடைசி நாளில்,நீங்கள் எழுதியவைகள் மரணவேதனையாக உங்களை சூழ்ந்துகொள்ளும் ஒரு நாளில்,எங்கள் குழந்தைகளின் கண்ணீரை எதிர்கொள்ளமுடியாமல் கூனிக்குறுகிப்போய் நிற்பீர்கள்...ஒரு பெரும் தரித்திரமாகவே வரலாற்றில் உங்கள் இருப்பு எழுதப்படும்...

முள்ளிவாய்க்காலுடன் என் இனம் நிம்மதியான தூக்கம் இழந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன...எப்பொழுதும் காதோரங்களில் கேட்டுக்கொண்டிருக்கும் ஓலங்களுடனேயே ஆரம்பிக்கின்றன எங்கள் நாட்கள்..தலையணையின் அடியில் தலையை இழந்த சர்மிலா எப்பொழுதும் என்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறாள்...அகிலாவின் அழுகை ஒலி என் படுக்கை எங்கும் நிரம்பிக்கிடக்கிறது...காணாமல்போன தன் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் அகிலாவின் முகத்தைப் பார்க்கும் தைரியம்கூட எனக்கில்லை...ஒருகாலம் புன்னகையும்,கலகலப்பும்,உறவுகளும் நிரம்பிக்கிடந்த அவள் வாழ்க்கையில் இப்பொழுது ஆத்திரமும்,அழுகையும்,தனிமையுமே நிறைந்துகிடக்கிறது...அகிலாவைப்போல் ஆயிரம் ஆயிரம் அகிலாக்களின் புன்னகைகள் முள்ளிவாய்க்காலுடன் பறிக்கப்பட்டுவிட்டன...எம் தங்கைகளின் கண்ணீரால் எழுதப்படுகின்றன இலங்கைத்தீவின் சாபங்கள்...அணைக்கமுடியாத விடுதலை நெருப்பை அணைக்கத்துடித்த ஆக்கிரமிப்புக்கரங்கள் ஒரு இனத்தின் குரல்வளையை நெரித்துக்கொன்றுவிட்டுக் கொக்கரிக்கிறது...பேசமுடியாத ஊமையாய் ஆக்கப்படிருக்கிறது ஈழத்தில் என் இனம்...

எங்களுக்கென்றொரு தேசம் இருந்தது....எங்களுக்கென்றொரு கூடிருந்தது...படுத்துறங்க மரநிழல் இருந்தது...நிம்மதி என் தேசத்து நிழலில் படுத்துறங்கியது...இன்று வெறுமையும்,களைப்பும்,துயரமுமாய் என் தேசத்து வீதிகள் வெறித்துக்கிடக்கின்றன....வன்னியின் பொட்டல்வெளிகளில் அணலாய் எரிக்கும் துயரங்களிலும்,அடக்குமுறைகளிலும் இருந்து ஆவியாகின்றன எம்மக்களின் கண்ணீர்த்துளிகள்...பள்ளிபுத்தகங்களுக்குப் பதிலாக எங்கள் குழந்தைகள் வாழ்க்கைச் சுமைகளை சுமந்தபடி தள்ளாடுகிறார்கள்...அடுத்தவேளை உணவிற்க்கு வழிதேடுவதைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்கமுடியாதபடி அவர்களின் எதிர்காலங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன...எரித்துக்கொண்டிருக்கும் வேதனைகளுடனும் ஆற்றுப்படுத்தவே முடியாத குற்றவுணர்வுகளுடனும் உடல்கூட்டுக்குள் அடைந்துகிடக்கிறது என் உயிர் வாழ்க்கை...

இப்பொழுது எங்கள் குழந்தைகளுக்குத்தேவை வெறும் அரசியல்க்கோசம்களும் வெற்று வசனம்களும் அல்ல...ஏக்கத்துடன் இருக்கும் அந்தக்குழந்தைகளின் கண்களில் நம்பிக்கை ஒளியை விதைக்கும் எதிர்காலத் திட்டங்கள்,தூக்கிவிட ஒரு தோளுக்காக ஏங்கும் அந்தப் பிஞ்சுகளின் கைகளைப் பிடித்து அழைத்துச்செல்லும் இதயங்களின் உதவிகள்,அவர்களின் வாழ்க்கை நேர்கோட்டில் செல்லும் வகையில் அவர்களை தாங்கிப் பிடிக்கக்கூடிய ஒரு கட்டமைப்பைக் கட்டி எழுப்புதல்,இன்னமும் போரின் எச்சங்களில் இருந்து மீளாமல் இருக்கும் எங்கள் பிஞ்சுகளின் விழிகளில் இருக்கும் அச்சத்தைப் போக்கி அவர்களை ஆற்றுப்படுத்தி மீண்டும் கல்வியில் இணைத்து எல்லாக்குழந்தைகளைப் போலவும் ஒரு அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும் திட்டங்கள்,ஏற்கனவே இவற்றைச் செய்துகொண்டிருக்கும் நேர்மையான அமைப்புகளை இனங்கண்டு தனிப்பட்ட வகையில் இவற்றைச் செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்களையும் ஒன்றாக்கி தாயகத்துக்கு உதவும் ஒரு வலிமையான அமைப்பாக புலம்பெயர்ந்தவர்கள் உருவாகுதல் போன்றனவே தற்போது எங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற முக்கியமாகவும்,உடனடியாகவும் நாம் செய்யவேண்டியவைகளாக இருக்கிறது...

எனதருமை உறவுகளே..! எங்கள் குழந்தைகள் பசியால் வாடியபோது,பாலுக்கு ஏங்கியபோது,பங்கர்களின் இருட்டுக்குள் இருந்து வெளிச்சத்தைதேடியபோது,பிணங்களின் நடுவே அனாதையாக நின்றுகொண்டு மனங்களைத்தேடியபோது மனச்சாட்ச்சியே இல்லாத உங்கள் சிலரின் இதயங்கள் காட்சி ஊடகங்களின் முன்னே கால்களை நீட்டியவாறு உணவுக்கோப்பைகளை ருசிபார்த்துக்கொண்டிருந்தன..எந்தவித சலனுமுமின்றி உங்கள் உலகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது....எந்தக்காரணமும் இன்றிக் கொல்லப்பட்ட எம்மக்களைக் காக்க மறந்து எப்படித்தான் வீழ்ந்துகிடந்தீர்களோ..? உறவுகளே...!செத்துப்போனவர்கள் உங்கள் ரத்தம்கள் என்ற சுயநினைவுகூட இன்றி எப்படி இயங்குகிறது உங்கள் உலகம்...இரக்கமில்லாதவர்களே...!சினிமாக்கதாநாயகர்களின் அழுகை ஒலி விழுந்த உங்கள் காதுகளில் எங்கள் பிஞ்சுக்குழந்தைகளின் இதயத்துடிப்பு கடைசிவரை விழவே இல்லையே...ஏன் என்று கேட்கக்கூட விருப்பமில்லாது உங்கள் கண்களையும்,காதுகளையும் இறுக மூடிவைத்திருந்தீர்கள்...இன்றுவரை திறக்கவிலையே உங்கள் பலரின் இரும்பு இதயங்கள்..

எங்கள் குழந்தைகளின் கண்ணீரை கைகளில் ஏந்தியபடி வீதிகளில் நீதிகேட்க இன்னும் சில இளைஞ்ஞர்கள் இருக்கிறார்கள்...நீறுபூத்த நெருப்பாக கணன்றுகொண்டிருக்கும் இதயத்துடன் நீதிக்காக போராடும் ஓர்மத்துடன் அவர்கள் என்றும் இருப்பார்கள்...அவர்களில் ஒருவனாய் நானுமிருப்பேன்....மலர்விழியினது அண்ணா எனும் மெல்லிய அதிர்வு,அகிலாவின் கதறல்,சர்மிளாவின் ஏக்கம்,ப்ரியாவின் பசியால் வாடிச்சோர்ந்த முகம் இவை எவையும் எம்மைத்தூங்கவிடாது...எங்கள் வீடுகள் முழுவதும் நிறைந்துகிடக்கும் இந்தப்பிஞ்சுகளின் ஏக்கம்களும்,புன்னகைகளும்,கதறல்களும் எங்களை வீதிகளில் நிக்கவைத்துக்கொண்டே இருக்கும்....மரணம் வரைக்கும் எங்களை அது ஓயவிடாது...நாங்கள் கைகளில் ஏந்திவைத்திருப்பது வெறும் பதாதைகளும் கொடிகளும் அல்ல...அவை எங்கள் ஆன்மாவின் வெளிப்படுத்தமுடியாத பெரும் வலி,கதறல்..எப்படியாவது உலகின் காதுகளுக்கு கொண்டுசேர்த்துவிடவேண்டும் என்ற பெரும் துடிப்பு...

செத்துப்போன எங்கள் தங்கைகளின் ஆன்மாக்கள் எங்கள் உடலை கடைசிவரைவழிநடத்தும்...மரணம் வரைக்கும் எம் இனத்தின் விடிவிற்க்கு உழைத்துக்கொண்டே இருப்போம்...என் இனத்தின் துயரங்களை தீர்க்கமுடியாத ஏக்கத்துடனேயே என் உயிர் ஒரு நாள் நின்றுபோகலாம்...அப்பொழுதும் தூங்காத என் ஆன்மா என் தாய்மண்ணில் அலைந்துகொண்டிருக்கும்....என் கல்லறையைத்தாண்டிச்செல்லும் காற்று ஒரு நாள் என் காதில் என் இனத்துக்கு நீதிகிடைத்த சேதி உரைத்துச்செல்லும்...அகிலாவின் அழுகை ஒலி ஓய்ந்ததாகவும்,எம் குழந்தைகள் மரணத்தின் வாடையைச் சுவாசிக்காமல் வாழும் ஒரு புதிய தேசம் உருவாகி இருப்பதாகவும் அது உரத்துச் சொல்லிவிட்டுப் போகும்...அப்பொழுது நான் நிமதியாகத் தூங்கிப்போவேன்...

எதிர்காலம் சிதைந்த தேசத்தின் தெருவழியே......


வேர்களை நினைந்தழுதபடியே
தூங்கிப்போன
நீண்ட ஒரு துயரநாளின்
நடு நிசியில்
தூக்கம்களுக்கிடையே
கனவுகளின் வீதியில்
கோபத்துடன் கணன்றுகொண்டிருந்த
ஊரை எரிக்கும்
நினைவுகளை பின்தொடர்ந்தேன்...

கழுகளுக்கஞ்சிய
கண்களில் மிரட்சியுடன்
சேதி சொல்லி அழைத்துச்சென்ற
நினைவுகளின் கரங்கள்
எல்லாவற்றிலும்
தழும்புகள் நிறைந்து கிடந்தன...
ஒவ்வொரு தழும்புகளில் இருந்தும்
சொட்டிக்கொண்டிருந்த ஆன்மாக்கள்
வீதிகளில் அலைந்து கொண்டிருந்தன...

உற்றுப்பார்க்கிறேன்..
ஈழத்து இதிகாசங்களில்
எழுத்தப்பட்ட பெயர்கள்
எச்சங்களைத் தேடியவாறு..

முகவரி கொடுத்தவர்களின்
எச்சங்களின் முகங்கள் எல்லாம்
வறுமைக் குழிகளுக்குள்
அடித்த சுழிகளுக்கிடையே
செத்தழிந்துகொண்டிருந்தன..

தெருக்களில் பெருகியோடும்
கண்ணீர்த்துளிகளுக்கிடையேயும்
வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும்
நடுவில் தொங்கிக்கொண்டிருக்கும்
நாட்களுக்குள் புதையுண்டும்
இனத்தின் அடையாளங்கள்
எல்லாமே தொலைந்துபோய்
இனங்காண முடியாதபடி..

ஈழத்துக் கருவறைகளின்
பாடல்களை எல்லாம்
காலம் அடித்துக்கொண்டுபோக
வறட்சிகளின் ஆடைபோர்த்தி
வற்றிக் கிடக்கின்றன
தாலாட்டுக்கள்...

காலப்பாடல்களுக்கெல்லாம்
பாட்டெழுதிய மண்ணை இப்போ
கண்ணீர் எரிப்பதால்
கவிதை வற்ற
ஈழம் அகாலத்தில்
இழவுக்காடாகி
நிழல் சிதைய தனித்து
நெருப்பில் கிடக்கிறது

ஊரின் முகப்பிலே
ஒளியேறி இருந்தாலும்
ஊமையாய் இருக்கும்
உட்காயம்
ஊதி ஊதிப் பெரிதாகிறது..

ஊழ் விளையாடிய
ஈழமுற்றத்தில்
உதிர்ந்து கிடக்கின்றன சருகுகள்
இத்துப்போனாலும்
ஈழமண்ணுக்கே உரமாவோமென்று....

தலைமுறிந்த ஒற்றைப்பனைகளின்
தனிமைகளுடன் குந்தியிருக்கின்றன
இடித்தழிக்கப்பட்ட
கல்லறைகளில் இருந்து
துயருடன் இடம்பெயர்ந்த
ஆன்மாக்கள்..

பூக்கள் தொலைத்த மரங்களையும்
முற்றங்கள் தொலைத்த வீடுகளையும்
தேற்றியபடி வீசும் காற்றிடமிருந்து
தென்றல் தொலைந்து
காலங்கள் ஆண்டுகளாய்
கரைந்து போகிறது....

கரைகளில் நின்று பார்க்கிறேன்
ஈழ நிலவாடிய கடலொடிந்து
தாழம்பூக்களிடையே
தன் முகம்புதைத்துக் கிடக்கிறது...
நீலம்பரவிய அதன் முற்றத்தில்
நிறமிழந்து
முன்பொருகாலம் பெருகி இசைபொழிந்த
பாடல் இழந்து
தலைமுறைகள்
அலைகளின்மேல் விளையாடிய
தடமிழந்து
தன் கோலமழிந்துகிடக்கிறது..

நிலவும் பரிதியும்
மறைந்தொழிந்து விளையாடிய
ஈழ வானம்
தன் எல்லைகள் தொலைந்ததால்
ஈழக்குழந்தைகளின் கண்ணீரில்
கருக்கொண்ட
துயரமுகில்களின் பின்னே
முகம்புதைத்து
மெளனமாய் அழுகிறது...

பிதாமகர்கள்,பீஷ்மர்கள்
கதநாயகர்கள்,கண்ணகிகள் எனக்
கெளரவிக்கப்பட்ட வாய்களால்
துரியோதனர்கள் எனத்
துகிலுரியப்பட்டுக் கிடக்கிறது
கர்ணர்களாய்க் கடைசிவரை
களமாடிய சந்ததி..

இற்றுப்போகிறது ஈழத்தின்
நிமிடங்கள் சொட்டுச்சொட்டாய்..
இனி ஒரு விதி செய்வோமென்று
குற்றுயிராய்க் கிடக்கும்
எம் குழந்தைகளை தூக்கிவிட
நீண்ட கைகளை சில
ஒற்றைகளுக்குள் எழுதிவிடலாம்

வெற்றுப்பேச்சுக்கள் அலங்கரிக்க
வெறுமனே
போலித்தேரில் ஈழம்பூட்டி
வெளிநாடுகளில் பவனிவருகிறது
செத்துப்போனவர்களின் குருதி குடித்து
மெத்தப் பெருத்த
சுயநலப் புரவி...

இழவு வீடான ஈழம் பார்த்து
தலைகுனிந்து
இந்த இரவுஇனி விடியாமலே போகட்டுமென
சாபமிட்டபடி விழித்துப்பார்க்கிறேன்....
ஈழத்தை
மீளமுடியா இருள் வெளிக்குள்
தள்ளிவிட்டு
நன்றாகத்தான் விடிந்திருக்கிறது
எதிர்காலம் எங்களுக்கு 
பெரு வெளிச்சத்துடன்... 

Saturday 21 July 2012

பிரிந்து பறக்கும் வலி...






அன்பே
உனக்கும் எனக்குமான
உறவுகள்
எந்தக் கவிஞ்ஞனும்
இதுவரை புனைந்துவிடாத
வார்த்தைகளின்
வனப்புகளைத் தாண்டி
வரையப்பட்ட கவிதைகளடி...
நாம் பழகிய
அழகிய நாட்களின்
நினைவுகள்
எந்த ஓவியனது
தூரிகையிலும்
இதுவரை சிக்கிவிடாத
அற்புதமான ஓவியங்களடி...

உன் வார்த்தைகள்
என் செவிகளில் விழுந்த
அந்த மிகமெல்லிய
முதலாவது குளிர்நாளில்
நீ பேசிய ஒவ்வொரு
வரிகளையும்
என் நினைவுப் பெட்டகத்தில்
எடுத்துச் செல்கிறேன்..

பழைய சில
முத்திரைகளையும்
பட்டாம்பூச்சிகளின்
இறகுகளையும்
பொன் வண்டு
முட்டைகளையும்
எல்லைகளற்ற மகிழ்ச்சியுடன்
சேகரித்து வைத்திருக்கும்
சிறுவனைப்போலவே
உன் மேலான
என் அன்பின் நினைவுகளையும்
என்னுடனே எடுத்துச் செல்கிறேன்..

என் கனவுகளில்
அலைந்து திரிந்த வெண்மேகமே - உன்
எல்லைகள் பரந்தவை என்பதை
உணர்ந்து கொண்ட பொழுதில்
உன் பறத்தலுக்காக
உன் பாதைகளில் இருந்து தூர விலகி
என்காதலுடன் நான்
ஒடுங்கிக் கொள்கிறேன்..

சிகரங்கள் தொடவேண்டிய
உன் சிறகடிப்புக்காக
சுய நலங்களுடன்
உன்னைச் சுற்றிய
என் கனவுகளுக்கு நானே
தீ மூட்டிக் கொள்கிறேன்..

எல்லையற்ற வானத்தில்
கட்டற்றுப் பறக்கும்
பட்டாம் பூச்சி
உன் கனவுகளுக்கு நான்
வட்டமிட்டுவிடக் கூடாதென்பதால்
உன் எண்ணங்களில் இருந்து விலகி
எட்ட நின்றுகொள்கிறேன்..

கால நதியின்
நீள் பாய்ச்சலில்
கண்ணீராய் கரைந்து.....
தூரங்கள் பிரிந்து......
நீயொரு திசையிலும்
நானொரு திசையிலுமாகக்
கனவுகளைச் சுமந்துகொண்டு
அலைந்து திரிந்தாலும்
ஒன்றாகும் உணர்வுகளிலும்
சிந்தனைகளிலும்
எம்மிரண்டு இதயங்களினதும்
இயங்கு புள்ளிகள்
சுற்றிக்கொண்டிருக்கும்..
நீ உயரப் பறந்து கொண்டே இரு..
உன் கனவுகளை யாருக்காகவும்
விற்றுவிடாதே..

பிரிந்தும் பிரியாத
உன் நினைவுகள்
மனதின் ஆழத்தில்
பூக்கும் பொழுதெல்லாம்
உன் வெற்றிகள் - என்னை
உற்சாகப் படுத்தும் அன்பே..

பிரிவதற்கென்றே
சேர்ந்த உறவா நாம்..?
புரியாத மெளனங்களே
விடைகளாக
உனை விட்டுப்போவதை
நினைத்து
செத்துப்போகும்
என் விழிகளில்
எட்டிப்பார்க்கின்றன
உன் நினைவுகள்
கண்ணீராய்...

உருகி வழியும்
கண்ணீர்த்துளிகளுடன்
யாரும் காணாமலே
கரைத்துவிடுகிறேன்
என் இதய வலிகளை...
நாளை இவை உன்
கனவுகளின் சிறகுகளில்
பாரமாக இருந்து விடக் கூடாதென்பதால்....

Monday 21 May 2012

எப்படி நான் தாங்கிடுவேன்...

அப்பன் அடித்தாலே
ஆவென்று அலறுபவன்
எப்பன் நோவெனிலும்
ஏலாமல் கிடந்தமவன்
முற்றம் முழுதும்-பிணமாகிச்
சுற்றங்கள் செத்
த கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே...

கோழி அடைகிடக்க
குஞ்சுக்காய் தவித்தமகன்
கேவி அழமுதலே ஊரை
கூவி அழைத்த மகன்
கத்தி அழ யாருமற்று-சொந்தங்கள்
கொத்துக்கொத்தாய் செத்தகதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

விக்கல் எடுத்தாலே
கெக்கலித்து நின்றமவன்
முள்ளுத் தைத்தாலே பாயில்
மூன்று நாள் படுத்த மவன்
செல்லுக்குத் துண்டுகளாய்-என்னினம்
சிதறிப் பிளந்த கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

நெருப்புச் சுட்டாலே
நேர்த்திக்கடன் வைச்ச மவன்
கறுப்பு காத்தென்று
திருஸ்டி சுத்திப் போட்டமவன்
கருகிப் பொஸ்பரஸில்-என்னினம்
பொசுங்கிக் கிடந்த கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

பெத்தவளைக் கணநேரம்
பிரிஞ்சு செத்த மவன்
புத்தி பேதலித்துப் போகுமிடம்
புரியாமல் நின்றமவன்
செத்ததாய் மார்பினிலே-எம் குழந்தை
ரத்தம் குடித்த கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

பட்டினியாய் நோன்பிருக்கும்
தாய்க்காய்ப் பரிதவித்துப்போன மவன்
பசியறியா நாய் வளர்ந்த வீட்டுப்
பாசத்தில் வளர்ந்த மவன்
ஒட்டிய வயிற்றுடன் பிஞ்சுகள் - உணவுக்காய்
ஓலமிட்டு அழுத கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

பொன்வண்டு செத்தற்காய்
பொங்கிப்பொங்கி அழுத மவன்
தும்பிச் செட்டை உடைந்ததற்க்காய்
துடிதுடித்துப் போன மவன்
சொந்தங்கள் சிதறிப்போக - ரத்தத்தால்
நந்திக்கடல் சிவந்த கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே...

செம்பருத்தி பட்டதிற்கு
சேதி சொல்லித் திரிஞ்ச மவன்
புங்கை மரம் முறிந்து விழ
புதுக் கன்று நட்டமவன்
எங்கள் குலம் அழிந்துபோக - உலகம்
செங்கம்பளம் விரித்தகதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே...

தொலைந்துபோன பூனைக்காய்
அலைந்தலைந்து திரிந்த மவன்
கலைந்து போன குளவிக்கூட்டுக்கு
காவல் இருந்த மவன்
கூட்டமாய் வந்தவர்கள் - கடற்கரையில்
குடும்பமாய் தொலைந்த கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே..

கொத்துக்கொத்தாய்ச் செத்துப்போக
பித்துப்பிடிச்சு நின்ற மவன்
செத்துச் செத்துப் பிழைத்தபடி
உலகின் சேதிக்காய் தவித்த மவன்
பரிதவித்து நாம் கிடக்க - நீதியின்றி
பாதி உயிர் போயிடுச்சே...
மே மா
ம் வந்திடுச்சே
மீதி உயிர் தின்றிடவே...
 

Tuesday 24 April 2012

சபிக்கப்பட்ட சந்ததி...

தன்னைக் கடந்து போன 
தலைமுறைகளின் இளமைகள் 
தொலைந்து போன கதைகளை சுமந்தபடி 
தொடர்ந்தும் இருக்கிறது அந்த நகரம்...

என் பாட்டி தன் பருவ காலங்களை 
என் பாட்டன் தன் இளமைகளை 
என் தந்தை தன் பால்யகாலங்களை
தொலைத்துக் கொண்டது அந்த நகரத்தின் நிழலில்தான்..

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது 
அது சிறுவயதுகளில் இருந்தது..
நாங்கள் இளைஞர்களாக இருக்கிறபோது 
அது இளமை ததும்ப புன்னைகை வடிக்கிறது..
நாங்கள் முதுமையை அணைக்கும்போது 
அது எங்கள் கண்களுக்கு முதிர்ந்திருக்கும்..

யுத்த நாட்களில் தலைவிரி கோலமாகவும்
பண்டிகை நாட்களில் மயக்கும் கன்னியைப் போலவும் 
அது தன்னை அலங்கரித்துக்கொள்கிறது...
நகரத்துக்கு வரும் இளம் பெண்களின்புன்னகைகளில் 
அது தன்னை உயிர்ப்பாக வைத்திருக்கிறது.....

யுத்தங்கள் தின்ற அந்த சரித்திர நகரத்தில் இருந்து
தந்திரமாக தப்பிய செல்வந்தத் தலைமுறை ஒன்று
நாகரீகங்களின் தலைநகரங்களைநோக்கி
நகர்ந்து கொண்டது...
மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை
மாற்றிக்கொண்டது...
தங்கள் குழந்தைகளுக்காக
மொழியைக் கூட மறக்கக் கற்றுக் கொண்டது...

விடுதைலையைப் பற்றி பாடியவாறு
விடுமுறைகளை அனுபவித்தது..
புரட்சியைப் போதித்துக் கொண்டு
புகலிடங்களில் அடிமையாய் வாழக் கற்றுகொண்டது..
ஏழைத்தலை முறையை 
எரிமலையாய் இரு என்று சொல்லி விட்டு 
சுதந்திர நெருப்பில்
சுகமாய்க் குளிர்காய்ந்தது..

அந்த நகரம் தன்னை மாற்றிக் கொண்டதைப் பார்த்து 
மகிழ்ந்து கொண்டது அந்தத் தலைமுறை...
யுத்தத்தின் பின்னால் அது தன்னைப் புதுப்பித்த போது
பூரித்தது....
விடுமுறைகளுக்கு வந்து
விருந்துண்டு சென்றது...
திருவிழாக்களுக்கு வந்து
தேரிழுத்துப் போனது 
நாகரீக உடைகளுடன்
அந்த நகரத்து வீதிகளில்
அலைந்து திரிந்தது..
அந்நகரத்து ஏழைகளின் பெருமூச்சை 
பணத்தின் பின்னால் இருந்து 
பார்த்து ரசித்தது.....

எல்லாக் காலங்களுக்கும் ஏற்ப 
எல்லா நாகரீகங்களுக்கும் ஏற்ப 
எல்லா சந்தர்ப்பவாதங்களுக்கும் ஏற்ப
அந்த தலைமுறையும் 
அந்த நகரமும் 
தம்மை மாற்றி வாழக் கற்றுக்கொண்டன...

ஆனால்..
அந்த நகரத்தின் ஏழைத் தலைமுறை
தன்னை மாற்றிக்கொள்ளும் பொழுதெல்லாம்...
கலாச்சாரத்தின் பெயரால்
கல்லெறியப்படுகிறது ......
யுத்தத்தில் இருந்து மீண்டு 
புன்னகைக்கும் போதெல்லாம்
துரோகி ஆக்கப்படுகிறது ......
வாழ்வதற்காக ஆசைப்பட்டபோதெல்லாம்
வரலாற்றின் பெயரால் தூற்றப்படுகிறது...

அழுவதற்காக மட்டும் வாய்திறப்பதே 
அவர்களுக்கு அழகெனச் சொல்லப்படுகிறது...
மரணச் சடங்குகள் மட்டுமே அவர்களின்
திருவிழாக்கள் ஆக்கப்படுகிறது...
சேலைகளைத் தாண்டி அந்த ஏழைப் பெண்கள்
மேலே போவது எதிர்க்கப்படுகிறது......

எல்லாவித கனவுகளையும் புதைத்துக்கொண்டு 
எல்லாவித ஆசைகளையும் அடக்கிக்கொண்டு 
எல்லாவித விருப்புக்களையும் எரித்துக்கொண்டு 
தியாகிப் பட்டங்களை மட்டும் அணிந்தபடி 
புலம்பெயர்ந்தவர்களின் பாவங்களை கழுவும்
பரம பிதாக்களாகவும் 
சுய நலக்காரர்களின் சிலுவைகளைச் சுமக்கும்
இயேசு நாதர்களாகவும் 
ஆக்கப்பட்டிருக்கிறது 
அந்த நகரத்தின் ஏழைத் தலைமுறை.....