Pages

Monday 19 December 2011

புதிய தலைமுறை...(சிறுகதை)

நான் குடியிருக்கும் மாடிப்பகுதியில் எங்கள் வீட்டிற்க்குப் பக்கத்து வீட்டில் புதியதாக ஒரு தமிழ் ஜயர்க் குடும்பம் வந்திருப்பதாக றூமில் இருந்த நண்பர்கள் கதைத்தது கட்டிலில் படுத்திருந்த எனது காதில் விழுந்தது. ஜயர் என்ற வார்த்தையைக் கேட்டதும் எனக்கு எப்பொழுதும் ஜோசப்பினதும் சுமதியினதும் நினைவுதான் வரும்.ஜோசப்பினது திருமணத்தின்போது என்னைச் சோகமாகப் பார்த்த அவனது பார்வை இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.சுமதியைப் பற்றிய கவலை இன்றுவரைக்கும் என் மனதில் ஒரு ஆறாத காயமாக இருக்கிறது. அதனால்தான் இன்றும் அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறேன்.எங்கு போகப் போகிறார்கள் பக்கத்து வீட்டில்தானே இருக்கிறார்கள் ஆறுதலாக சந்திக்கும்போது விசாரிப்போம் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.அடுத்த நாள் மாலை நான் வேலை முடித்து வந்துகொண்டிருந்தேன்.எங்களது வீடு மூன்றாவது தளத்தில் உள்ளது. லிப்ற் இருந்தாலும் உடம்ப்பிற்க்கு நல்லதென்று நான் படியால் ஏறிச்செல்வதுதான் வழக்கம்.அன்று சற்றுக் களைப்பாக இருந்ததால் லிப்ற்றில் ஏறினேன்.மூன்றாவது தளத்திற்க்கு வந்து லிப்ற் கதவு திறந்து கொண்டபோது என் கண்களையே நம்ப முடியாதபடி வெளியே சுமதி நின்று கொண்டிருந்தாள்.என்னைக்கண்டதும் அவளும் தடுமாறிப்போனால்.கொஞ்சம் உடம்பு போட்டிருந்தாள்.ஆனாலும் அதே இளமைக்கால அழகின் கோடுகள் அப்படியே இருந்தன அவள் முகத்தில்.படிக்கும் காலம் வரைக்கும் எதுவுமே மாறாததுபோல் அப்படியே இருப்பதாகத் தோன்றும் உலகமும் உறவுகளும் நண்பர்களும் அதன் பின்னர் ஏற்படும் பிரிவுகளின் பின் சந்திக்கும்போதுதான் அவை எல்லாவற்றையும் ஒரு கனவுபோல் இழந்துவிட்டிருப்பதை நினைவுபடுத்துகின்றன.மனிதர்களையும் இழுத்துக்கொண்டுசெல்லும் தன் பயணத்தில் காலம் எவ்வளவு மாற்றங்களை மனித உடம்பிலும் உள்ளத்திலும் நிகழ்த்திவிடுகிறது.சுமதியைக் கண்டவுடன் பல நினைவுகள் மனதில் எழுந்து என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தன.எவ்வளவு காலத்திற்க்குப் பின்னர் சந்திக்கிறோம்.எங்கள் மூவராலும் மறக்கக்கூடிய நினைவுகளா அவை.

***

எனக்கும்,ஜோசப்பிற்க்கும்,சுமதிக்கும் ஒரே வயது,ஒரே ஊர்,ஒன்றாகத்தான் மூவரும் படித்தோம்.நானும் ஜோசப்பும் பட்டாம் பூச்சிகள் பிடிக்கும் காலத்திலிருந்தே ஒன்றாகத்தான் ஊரில் சுற்றித்திரிந்தோம்.நான் கொஞ்சம் பயந்தவன்.பிரச்சனைகளுக்குப் போவதில்லை.ஜோசப் எனக்கு நேரெதிர்.பிரச்சனை என்றால் பின்னிற்க்க மாட்டான்.மூக்கின் நுனியில் கோபத்தை வைத்துக்கொண்டு அலைந்தான்.எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் பேசாமல் இருந்தாலும் அவன் விடமாட்டான்.அதற்க்கு ஒரு முடிவைக்கண்டுவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பான்.எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் பிரச்சனைப்பட்ட பக்கத்து வகுப்புப் பெடியனுக்கு பென்சில்க்கூரால் ஆழமாகக் குத்திவிட்டான். விடயம் அதிபர்வரைபோய் பெற்றோர் அழைக்கப்பட்டு எச்சரித்து வகுப்பிற்க்கு அனுமதிக்கப்பட்டிருந்தான்.இப்படி நிறையக் கதைகள் எங்களிருவரினதும் சிறுவயதில் உள்ளன.சுமதி ஜயர்ப் பெட்டை.எங்கள் ஊரிலேயே மிகவும் அழகானவள்.சுமதியை சைற் அடிப்பதற்காகவே எங்கள் ஊர் வீதியால் பக்கத்து ஊர்ப்பொடியள் அலுவலாக எங்கோ போவதுபோல் அக்ற் பண்ணிக்கொண்டு போவதுண்டு.கொஞ்சப்பொடியள் எங்கட ஊர்ப்பொடியளுடன் நட்ப்புப்பாராட்டி அந்தச்சாட்டில் சுமதியைப் பார்க்க வருவதுண்டு.ஜோசப்பிற்க்கு சிறுவயதிலிருந்தே சுமதிமேல் ஒருகண்.அதிஸ்டமும் அவன் பக்கமிருந்தது.சுமதியும் எங்களுடன் தான் சிறுவயதில் பாடசாலைக்கு வருவாள்.நாங்கள் மூன்றுபேரும் வாத்திமாரை நக்கலடித்தபடியும்,கோயில் திருவிழாவைப்பற்றியும் வீட்டுப்பாடங்களைப்பற்றியும் கதைத்த படியும் ஒன்றாகவே நடையில் பள்ளிக்கூடம் போவோம்.இதனால் மற்றவர்களை விட சிறுவயதிலிருந்தே சுமதியுடன் பழகும் வாய்ப்பு இலவசமாக ஜோசப்பிற்க்கு கிடைத்தது.சுமதிக்கும் நாளடைவில் சேவலுடன் திரியும் பெட்டைக் கோழிபோல் அவன்மேல் ஒரு இது வந்திருந்தது.இது எனக்கு அப்பொழுதே சாடைமாடையாய் விளங்கியிருந்தது.சுமதி இவனுடன் சிரித்துப் பேசுவதால் ஊரில் நிறையப் பொடியளின் வயித்தெரிச்சலை ஜோசப் சம்பாதிச்சிருந்தான்.பின்னாளில் கால ஓட்டத்தில் நாங்கள் மூவரும் சைக்கிலிற்க்கு மாறியிருந்தோம்.எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைக்கிறேன்,எங்களுக்கு கொஞ்சம் வெக்கம் வரத்தொடங்கியபோது நானும் ஜோசப்பும் சுமதியைப் பள்ளிக்கூடம் போகவிட்டு அவள் போனபின்னர் சற்றுத் தாமதமாகத்தான் போவோம்.அவளுக்கும் அது விளங்கியிருந்தது.அவளும் அதற்கேற்றாற்போல் கொஞ்சம் ஏளியாகவே போவாள்.பத்தாம் வகுப்பு படிக்கும்போது பருவம் எங்களுக்குள் பல மாற்றங்களைச் செய்திருந்தது.மெல்ல மெல்ல முகத்தில் மீசை மயிர்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தன எங்களிருவருக்கும்.சுமதியும் வயதுக்கு வந்து வீடியோ போட்டோவுடன் அமோகமாக அவளின் சாமத்தியவீட்டுச்சடங்கும் முடிந்துவிட்டிருந்தது.நாங்கள் சுமதியுடன் இப்பொழுது அதிகம் பேசுவதில்லை.ஆனால் முன்னரைவிட அதிகமாகவே ஜோசப்பும் சுமதியும் கண்களால் பேசுவதாக எனக்கு விளங்கியது.விரைவிலேயே ஜோசப்பும் விடயத்துடன் என்னிடம் வந்து நின்றான்."மச்சான் நீ தான் சுமதியிட்ட முடிவு கேட்டுச்சொல்லவேணும்" என்று என் முடியைப் பிடுங்காத குறையாக காலைச்சுற்றிக்கொண்டு திரிந்தான்.இவனின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் விசப்பரீட்ச்சையில் இறங்கிப்பார்ப்போம் என்று தீர்மானித்தேன்.வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளே உடல் முழுவதும் உதறலெடுத்துக் கொண்டிருந்தது.ஒருவேளை சுமதி வீட்டில் சொல்லிவிட்டால் என் நிலமை..?என்றாலும் நண்பனுக்காக கேட்டுவிடுவோம் என்று முடிவெடுத்து ஒரு வெள்ளிக்கிழமை மாலை தயாரானேன்.

***

ஜோசப்பின் முழுப்பெயர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ஜோசப்.ஜோசப் வீடு பரம்பரை ரோமன் கத்தோலிக்கக் குடும்பம்.அப்பா பெயர் அந்தோணிப்பிள்ளை.அம்மா பெயர் சகாயமேரி.ஜோசப் வீட்டில் ஒரே ஒரு பிள்ளை.ஜோசப் எது கேட்டாலும் உடனே வாங்கிக்கொடுத்துவிடுவார் அவன் தந்தை.ஜோசப்பைப் பார்ப்பதற்காக நான் அவர்கள் வீட்டிற்க்கு அடிக்கடி செல்வேன்.என்னையும் தங்கள் பிள்ளைபோலவே ஜோசப் வீட்டார் நடத்தினர்.ஜோசப்பின் தந்தையும் தாயும் என்னைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை.தம்பி என்றுதான் கூப்பிடுவார்கள்.தீபாவளி,தைப்பொங்கல் போன்ற விசேசம்கள் வந்தால் அவர்கள் கிறிஸ்த்தவர்களாக இருந்தாலும் எனக்கு காசு அல்லது புது உடுப்பு எடுத்துத் தருவார்கள்.நான் வேண்டாமென்றாலும் அவர்கள் விடமாட்டார்கள்.நானும் எங்கள் வீட்டுப் பண்டிகைக்கால உணவுவகைகளை எடுத்துச்சென்று கொடுப்பேன்.ஜோசப்பிற்க்கு எந்தவித மத நம்பிக்கையும் இல்லை.சுமதியை லவ் பண்ணத்தொடங்கிய நாளிலிருந்து"மச்சான் நான் ஜயர் வீட்டில் பிறக்காமல் வேதக்கார வீட்டில் பிறந்தது நான் செய்த தவறாடா"என்று என்னை அடிக்கடி கேட்பான்.எனக்கு அப்பொழுது அவனைப்பார்க்க பாவமாக இருக்கும்.ஜோசப் எங்கள் ஊர்க்கோவில் திருவிழாக்களுக்கெல்லாம் தவறாமல் வருவான்.வில்லுப்பாட்டு,மேளக்கச்சேரி,இசைக்குழு என்று விடிய விடிய எங்களுடனேயே திரிவான்.எனக்கு இந்தக் கோவில்,திருவிழாக்கள் இவற்றில் எல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இல்லை.ஆனாலும் ஜோசப்பைப்போல ஒட்டாமல் நின்று புதினம் பார்க்கப் போவேன்.ஜோசப்பும் சுமதியும் இரு வேறு உலகங்களில் இருந்தார்கள்.இவர்களுக்குள் காதல் வருமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.ஆனால் அதுதான் நடந்தது.

***

சுமதியின் அம்மாபெயர் காயத்ரி.அப்பா பெயர் வெங்கடேச ஜயர்.சுமதிக்கு இரண்டு அண்ணண்மார் இருந்தார்கள்.அவர்கள் இருவர் பெயரும் வெங்கடேச என்று தொடங்கி இடையில் என்னவோ வந்து கடைசியில் ஜயர் என்று முடியும்.அது எனக்கு நினைவில்லை.சுமதியின் பெயர் மட்டும் அந்த சுற்று வட்டாரத்தில் எல்லாப் பொடியளுக்கும் நன்கு தெரிந்த ஒன்றாக இருந்தது.சுமதி இயல்பிலேயே மிகவும் அமைதியானவள்.அவள் பாடசாலை தவிர்த்து மற்றைய நேரங்களில் வெளியே போய் நான் பார்த்ததில்லை.ஏதாவது நோட்டுப் புத்தகங்கள் தேவையென்றால் தோழிகள் அவளைத்தேடி வருவதுண்டு.அவர்களுடனும் அவள் அதிக நேரம் உரையாடி நான் பார்த்ததில்லை.பாடசாலையிலும் அவள் தேவையற்றுக் கதைத்து நான் கண்டதில்லை.அவளுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை.வகுப்பில் அவள்தான் படிப்பில் முதலிடம்.நான் நடுத்தரக் குடும்பங்கள்போல் கடைசியுமின்றி முதலுமின்றி எப்பவும் நடுவிலதான் நிற்பன்.ஜோசப் அப்பப்ப மேலேபோய்க் கீழே வந்து கொண்டிருப்பான்.ஆனால் சுமதி மட்டும் தளம்பாமல் ஒவ்வொரு தவணையும் முதலாம் பிள்ளையாகவே வருவாள்.நன்றாகப் படிக்கிற பிள்ளைகள் எல்லாம் இப்படித்தான் சுமதியைப்போல் இருப்பார்கள்போலும் என்று நான் மனதிற்குள் நினைப்பதுண்டு.சுமதியைப்போல நானும் ஆக்களுடன் அதிகம் பேசாமலும் பொடியளுடன் சுத்தித்திரியாமலும் ஒருதவணை அவளைப்போலவே இருந்து முயற்ச்சி செய்து பார்த்தேன்.ஆனால் என்னால் பாடசாலை ரிப்போட்டில் வழமைபோல வரும் நடுப்பொசிசனில் இருந்து இம்மியும் முன்னேற முடியவில்லை.சலிப்படைந்த நான் அந்தத்தவணையுடன் அந்த முயற்ச்சியைக் கைவிட்டுவிட்டேன்.எங்களுடைய படிப்பும் காலமும் இப்படிப் போய்க்கொண்டிருந்தபோதுதான் ஜோசப் தன் காதலுக்கு உதவிகேட்டு என்னிடம் வந்திருந்தான்.சுமதி மீது நான் நிறைய மதிப்பு வைத்திருந்தும் ஜோசப் என் நெருங்கிய நண்பன் என்பதால் ஜோசப்பின் காதலிற்கு தூதுவனாகச் செல்ல முடிவெடுத்தேன்.

***

அந்த வெள்ளிக்கிழமையும் வந்து சுமதியின் காதில் நான் ஜோசப்பின் லவ் மேற்றரைப் போட்டபோது சுமதி ஒரு சிரிப்புடன் சென்றுவிட்டாள்.எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை.குழம்பியவனாக ஜோசப்பிடம் வந்து நடந்ததைக் கூறினேன்.அவன் கையில் ஒரு தேங்காயுடனும் சில கற்பூரங்களுடனும் நின்றுகொண்டிருந்தான்.நான் சொன்னதைக் கேட்டதும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காத குறையாக என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.சுமதி அவனைக் காதலிப்பதாலேயே அவள் சிரித்துவிட்டுச் சென்றதாக உறுதியாகக் கூறினான்.கூறிவிட்டு நில்லாது பிள்ளையாருக்கு நேர்த்தியை முடிக்க தேங்காய் மற்றும் கற்பூரத்தூடன் விரைந்தான்.எனக்குச் சிரிப்பாக இருந்தது.கடவுள் நம்பிக்கை இல்லாதவனை பிள்ளையாருக்கு நேர்த்திவைக்க வைத்த காதலை நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது.ஜோசப்பால் பிள்ளையாருக்கு ஒரு தேங்காயும் சில கற்பூரங்களும் இலாபம் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.இது நடந்து மூண்றாவது நாள் ஜோசப் கையில் ஒரு என்வலப்புடன் என்னைத்தேடி வந்திருந்தான்.என்வலப்பிற்க்குள் சுமதி அவனுக்கு எழுதிய காதல் கடிதம் இருந்தது.ஜோசப்பின் முகத்தில் ஒரு வெற்றிப்பெருமிதம் தெரிந்தது.இவ்வளவு விரைவாக இந்த விடயம் சுபமாக ஆனதில் எனக்கு நிம்மதியாக இருந்தது.ஏனெனில் சுமதியிடம் ஜோசப்பின் காதலை சொல்லிய நாளிலிருந்து நான் நிம்மதியாகத் தூங்கவில்லை.ஜயர் மனைவியுடன் எங்கள் வீட்டுப் பக்கம் வருகிறாரா என்று பயத்துடன் எட்டி எட்டிப் பார்ப்பதிலேயே அந்த மூன்று நாட்களும் போயிருந்தது.இது சுபமாக முடிந்ததில் ஜோசப்பைவிட எனக்குத்தான் பெரும் நிம்மதியாக இருந்தது.காலமும் வளர அவர்கள் காதலும் வளர்ந்துகொண்டிருந்தது.பள்ளியில் படிக்கும் வரைக்கும் அவர்களை யாரும் சந்தேகிக்கவில்லை.வழமைபோலக் கதைப்பதாகவே ஊரவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.ஆனால் பள்ளிப் படிப்பு முடிந்ததும்தான் பிரச்சனை ஆரம்பமானது.

***

உயர்தரப் பரீட்ச்சை முடிந்து முடிவு வருவதற்காக நாங்கள் எல்லோரும் ஒருவருடம் வீட்டில் காத்திருக்க வேண்டியிருந்தது.எப்பொழுதும் பாடசாலையைத் தவிர்த்து வேறு அலுவல்களுக்கு அவ்வளவாக வெளியேபோகாத சுமதி இப்பொழுதெல்லாம் நூலகத்திற்க்கென்றும்,கடைக்கென்றும்,தோழிகளைப் பார்க்கவென்றும் புதிதுபுதிதாக காரணங்களைக்கூறி அடிக்கடி வெளியேபோய்க்கொண்டிருந்தாள்.ஜோசப்பும் எங்களுடன் சுற்றிக்கொண்டு திரியும்போது திடீர் திடீர் என்று காணாமல்ப் போனான்.எனக்குத் தெரியும் சுமதியைப் பார்க்கத்தான் போகிறான் என்று."மச்சான் பாத்துச் சூதானமாகப் போட்டுவாடா ஊராக்களின் கண்ணில் பட்டிடாதையடா" என்று காதுக்குள் இரகசியமாகச் சொல்லி அனுப்புவேன்.அவனும் ஒரு புன்னகையுடன் சென்றுவிடுவான்.அன்றும் அப்படித்தான் போனவன் போய்ச் சற்று நேரத்திற்க்கெல்லாம் கண்ணில் கலவரத்துடன் வேகமாகத் திரும்பிவந்தான்."மச்சான் சுமதியின் அண்ணண் நாங்கள் வயல்க்கரை றோட்டில் கதைத்துக்கொண்டு நின்றதைக் கண்டுவிட்டானடா.சுமதியைப் பார்த்து பல்லை நெருமிக்கொண்டு போனவன்.சுமதி அழுது கொண்டே வீட்டுக்குப் போய்விட்டாளடா.என்ன பிரச்சனை வரப்போகுதோ" என்று கவலையுடன் கூறினான்.கவலைப் படாதே என்ன பிரச்சனை வந்தாலும் நாங்கள் இருக்கிறம் என்று அவனுக்குத் தைரியம்கூறினேன். ஆனால் எனக்கு உள்ளூரப் பயத்தில் நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது.அடுத்து வந்த நாட்கள் அமைதியாகவே போய்க்கொண்டிருந்தது.ஜோசப்தான் ரென்சனுடன் என்னிடம் வருவதும் போவதுமாக இருந்தான்.சுமதி வீட்டிலிருந்து எந்த சப்தத்தையும் காணவில்லை.சுமதியின் தந்தை பூசை செய்யும் பிள்ளையார் கோவிலும் பூசையின்றிப் பூட்டப்பட்டுக் கிடந்தது.கோவில் தருமகர்த்தாவிடம் விசாரித்தபோது ஜயர் வீடு சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ போய் விட்டதாகவும் கோவிலை இப்படியே பூசையின்றி விடமுடியாதென்றும் இன்னும் இரண்டு நாட்கள் பார்த்துவிட்டு வேறு ஜயரைப் போடப்போவதாகவும் தனது கவலையைச் சொல்லிக்கொண்டிருந்தார் தர்மகர்த்தா.நாங்கள் பல இடமும் தேடிப்பார்த்தும்,பலரிடம் விசாரித்துப்பார்த்தும் எந்தத்தகவலும் கிடைக்கவில்லை.தர்மகர்த்தாவை தூண்டிவிட்டு ஜயரின் மனைவியின் ஊரில் இருந்த உறவினர்களிடம் விசாரித்தபோது ஜயர் குடும்பத்துடன் வெளிநாடு போவதற்காக கொழும்பு போய்விட்டதாகவும் ஆனால் கொழும்பில் எங்கிருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லையென்றும் தர்மகர்த்தா மூலம் தகவல் கிடைத்தது.நானும் ஜோசப்பும் கொழும்புபோய் லொட்ஜில் தங்கியிருந்து எல்லா இடத்திலும் தேடிப்பார்த்தும் எந்தத்தகவலும் கிடைக்கவில்லை.ஒரு மாதம் தங்கியிருந்தும் கண்டுபிடிக்க முடியாததால் திரும்பி ஊருக்கே வந்துவிட்டோம்.பின்னர் கொஞ்சக்காலத்தில் நானும் ஜோசப்பும் ஊரில் அநேகமான இளம்பொடியள் வெளிநாடுபோவதையும் திடீர்ப் பணக்காறரான அவங்கட வீட்டுக்காரற்றை நெளிப்புச்சுழிப்புவளையும் பாத்திட்டு ஏஜென்சிக்குக் காசு கட்டி பிரான்ஸ் வந்து சேர்ந்திட்டம்.சுமதியை நினைத்துக் கலியாணம் கட்டமாட்டன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த ஜோசப்பின் மனதை மாற்றி திருமணம் செய்து வைத்தனர் வீட்டுக்காறர்.ஜோசப் இப்பொழுது பிள்ளைகுட்டிகளுடன் இருக்கிறான்.

***

அவர்களேதான்.நான் இவ்வளவு காலமும் தேடிக்கொண்டிருந்த சுமதி வீடுதான் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் குடிவந்திருந்தார்கள்.அவள் திருமணம் செய்து இரண்டு பெரிய பெண்பிள்ளைகள் இருந்தார்கள்.அவள் கணவன் அவர்கள் உறவுக்காறனாம்.பிரெஞ்சு சிற்றிசனாம்.அவள் திருமணம் செய்து வந்தபின் தந்தையையும் தாயையும் இங்கு கூப்பிட்டதாகவும் பின்னர் இரண்டு தம்பிகளும் இங்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தாள்.என்னை வீட்டுக்கு வாவென்று சுமதி அடம்பிடித்ததாலேயே அங்கு போயிருந்தேன்.சுமதியின் தந்தையை சந்திப்பதை நினைத்துப் பயமாக இருந்தது.சுமதி பழைய கதைகளையும் பள்ளிக்கால நினைவுகளையும் திரும்பத்திரும்ப நிறுத்தாமல் பெரும் ஆர்வத்தோடு சொல்லிக்கொண்டிருந்தாள்.சுமதியின் தந்தையும் உட்கார்ந்திருந்ததால் கவனமாக ஜோசப்பை தவிர்த்துவந்தாள்.ஜயர் கதைகளிற்கிடையில் என்னை தனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் ஒரே ஒரு விடயம்தான் பிடிக்கவில்லை என்றார்.நான் என்னவென்று கேட்டபோது அந்த வேதக்காற வீட்டை போய்வாறதுதான் என்னிடம் தனக்குப் பிடிக்காத விடயம் என்று கூறினார்.நான் அதற்கு சிரித்தபடியே வேறுவிடயத்தைப் பற்றிப் பேச்சைமாற்றினேன். அன்று நீண்டநேரம் ஊரைப்பற்றியும் பழைய கதைகளையும் கதைத்து முடித்து புறப்பட்டபோது வழியனுப்ப வெளியே வந்த சுமதி காதுக்குள் ரகசியமாக ஜோசப் சுகமாக இருக்கிறானாஎன்று விசாரித்தாள்.அந்தக்கணத்தில் அவள் கண்கள் கலங்கியிருந்தது.நான் ஜோசப் திருமணம் செய்து பிள்ளைகுட்டிகளுடன் சுகமாக இருக்கிறான் அரை மணித்தியாலப் பயணத்தூரத்தில்தான் இருக்கிறான் என்பதை தெரிவித்தேன்.அன்றிலிருந்து நான் நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் சுமதி வீட்டுக்குச் சென்றுவருவேன்.தனியே அடைந்து கிடக்கும் ஜயர் முகத்திலும் என்னைக்கண்டால் ஆயிரம்வோல்ற் மின்சாரம் எரியும்.தனது தனிமையை விரட்டவும் ஊர்க்கதைகளை கதைக்கவும் நான் துணையாக இருப்பதால்தான் ஜயருக்கு என்னைக்கண்டால் அவ்வளவு சந்தோசம்.

***

அன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் வழமைபோல் ஜயர் வீட்டை ஒரு எட்டுப் பார்த்துவிட்டு வருவோம் என்று போயிருந்தேன்.வெங்கடேச ஜயர் சோபாவில் சரிந்திருந்து தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டிருந்தார்.என்னைக் கண்டதும் வாடாதம்பி என்று அழைத்து உட்காரவைத்து நாட்டு நடப்புக்களைப் பற்றிப் பேசத்தொடங்கினார்.சுமதி கிச்சினில் எனக்குத் தேநீர் தயார் படித்திக்கொண்டிருந்தாள்.ஒரு பத்து நிமிடம் போயிருக்கும் ஜயரின் மூத்தவன் மனைவியையும் இழுத்துக்கொண்டு மூச்சிரைக்க மூன்று மாடிகளையும் ஓடியபடியே கடந்து வந்திருந்தான்.வந்தவன் "ஜயா தலையில் இடியைப் போட்டிட்டுப்போட்டாள்" என்று ஒப்பாரி வைக்காத குறையாக என்னையும் ஒருமாதிரி முறைத்துப் பார்த்தபடி கத்தினான்.பக்கத்தில் அவன் மனைவி கணவனுடன் சேர்ந்து தானும் மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தாள்."என்னடா விசயத்தை வடிவாச் சொல்லனெடா" என்று நடந்தது புரியாமல் ஜயர் எரிந்து விழுந்தார்."ஜயா இவள் சுமதீட மூத்தவள் உவன் ஜோசப்பின்ர பொடியனோட ரெஜிஸ்றர் மரேஜ் பண்ணிப்போட்டு அந்த வேதக்காறனையும் கூட்டிக்கொண்டு வீட்டை வந்து அம்மா அப்பாட்டை நீங்கள்தான் பக்குவமா எடுத்துச்சொல்ல வேணுமெண்டதுமில்லாம என்னையெல்லே ஆசீர்வாதிக்கட்டாம்.ஊரெண்டாக் காதோடைகாது வச்சாப்போல ஆள்வச்சுப் பிரிச்சுக்கொண்டு வந்திருப்பன்...இஞ்சை பதினெட்டு வயசுக்குமேல இருக்கிறதுகளை ஒண்டும் செய்யேலாதே..நான் என்ன செய்ய எந்தக் கிணத்துக்கை போய் விழ..எங்கட மானம் மரியாதையை கப்பலேற வச்சிட்டாளே சனியன் பிடிப்பாள்..என்ன துணிவிருந்தா உந்த வேதக்காறன் வீட்டில கலியாணம் கட்டுவாள்..எங்கட குலமென்ன..கோத்திரமென்ன.." என்று நீட்டி முழக்கி ஒப்பாரி வைத்தான்.ஜயர் இடிந்துபோய் சோபாவில் உட்காந்திருந்தார்.எனக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலையாகிவிட்டது.வரக்கூடாத நேரத்தில வரக்கூடாத இடத்துக்கு வந்துதுலைச்சிட்டியேடா என்று என்னை நானே திட்டிக்கொண்டு மெதுவாக வெளியேறத் தயரானபோதுதான் அவதானித்தேன் கதவருகே சுமதி தேநீருடன் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்.அவள் முகத்தில் ஏதோவொரு நிம்மதி தெரிந்தது.தொலைக்காட்சியில் புலம்பெயர் தமிழ் இளையவர்கள் சார்பாக இளைஞ்ஞர் ஒருவர் வேறுபாடுகளை மறந்து எல்லோரையும் ஒன்று பட்டு ஓரணியில் போராட அழைப்புவிடுத்துக்கொண்டிருந்தார்.வெளியே வீசிய வெளிநாட்டுக் காற்று எனக்கு இப்பொழுதுதான் முதன்முறையாக இதத்தைத்தந்தது......

1 comment:

நிலாமதி said...

புதிய தலை முறை மாற்றங்களோடு வித்தியாசமாக் தான் போய் கொண்டு இருக்கிறது. வளைந்து கொடுத்தே ஆகவேண்டிய நிலை...கால ஓட்டத்தில் இதுவும் சகஜம்.

Post a Comment