Pages

Wednesday 28 December 2011

காலத்துடன் தொலைந்துபோன பயணத்தோழன்...


(லண்டன் ஒரு பேப்பருக்காக எழுதியது.....)

மிதிவண்டியைப்பற்றி பலரும் பலநூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியிருப்பார்கள் ஆனாலும் மிதிவண்டியுடனான எனது நினைவுகளை என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை.அன்று ஞாயிற்றுக்கிழமை வார நாட்கள் முழுவதும் கலகலத்துக்கொண்டிருந்த பாரிஸ் புறநகரின் ஆரவாரம் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டிருந்தது.அந்த நகரின் ஓயாத இரைச்சலை விழுங்கிவிட்டு அமைதி எங்கும் படர்ந்திருந்தது.தெருக்களில் வேலைநாளின் அவசரமின்றி அங்கங்கு ஆறுதலாகப் போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு மோட்டார் வண்டிகளைத்தவிர தார்வீதியின் கருமையும் அமைதியுமே வழிநெடுக நிறைந்திருந்தது.யாழ்ப்பாணத்து வீதிகளில் மாலைப்பொழுதுகளில் முகத்திலடிக்கும் அதே மெல்லிய மஞ்சள் நிறவெய்யில் அன்று பாரிஸிலும் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது.ஊரில் இருந்திருந்தால் இந்நேரம் ஒரு பிளேன்ரியும் வடையும் கடிக்க மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டிருப்பேன்.உலையில் கொதித்துக்கொண்டிருக்கும் சுடுநீரில் இருந்து மேலெழும் நீர்க்குமிழிகள்போல மனக்குளத்தில் நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக குமிழியிட்டுக்கொண்டிருந்தன. என்னால் வீட்டிற்க்குள் இருக்க முடியவில்லை.காலணியை மாட்டிக்கொண்டு பக்கத்திலிருக்கும் பூங்காவிற்கு காலாற நடந்துவரக் கிளம்பினேன்.

எனது வீட்டில் இருந்து வெளிப்பட்டுப் பிரதான வீதியில் இணைந்தபோது இப்படியொரு காட்ச்சி.ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி பின்புறம் இருக்கை பொருத்தப்பட்ட மிதிவண்டி ஒன்றை மிதித்துக்கொண்டிருந்தாள்.பின்னிருக்கையில் பாதுகாப்புப் பட்டி பொருத்தப்பட்ட அவரின் சின்னக்குழந்தை.அவர்களின் பின்னே அந்தப்பெண்மணியின் மற்றைய இரண்டு குழந்தைகள் ஆளுக்கு ஒரு சிறிய மிதிவண்டியில். எல்லோருக்கும் பின்னால் கடைசியாக அந்தப்பெண்மணியின் கணவர் மிதிவண்டியில் அவர்களைத்தொடர்ந்து கொண்டிருந்தார்.எல்லோர் தலைகளிலும் தலைக்கவசமும் உடலில் பச்சை நிற பாதுகாப்பு ஜக்கெற்றும் மாடியிருந்தார்கள்.அந்தப் பெண்மணியின் துவிச்சக்கரவண்டியின் பின்னிருக்கையில் இருந்த குழந்தையின் தலையிலும் தலைக்கவசம் மாட்டிவிட்டிருந்தார்கள்.அந்தக்குழந்தை தலைக்கவசத்துடன் அழகாக அங்குமிங்கும் பார்த்தபடி போய்க்கொண்டிருந்தது. ஒரு அழகிய ஊர்வலம்போல் மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.அவர்களிடம் நகரத்தின் அவசரம் எதுவுமிருக்கவில்லை.சூழலின் அமைதியைக் குலைக்கும் இரைச்சல் மிகுந்த,புகை கக்கும் ஊர்திகள் எதுவுமிருக்கவில்லை.அவர்கள் முகத்தில் குதூகலமும் புன்னகையும் குடிகொண்டிருந்தது.வெள்ளைக்க்காரர் மத்தியிலும் இப்படிக்கூட்டுக் குடும்பங்களை காணும்போது எனக்கு நிறைவாக இருக்கும் அதேவேளை ஊரின் நினைவுகளையும் அது கிளறிவிட்டுப் போய்விடும்.எனக்கும் இப்படி ஒரு மிதிவண்டி வாங்கி ஓடவேண்டும் என்று பலநாள் ஆசை.ஆனாலும் பாரிஸ் நகரத்தின் வீதிகளில் யாரைப்பற்றியும் கவலையின்றி விரையும் வாகனங்களுக்குப் பயந்து எனது ஆசையை கிடப்பில் போட்டிருந்தேன்.இவ்வளவு நெருக்கடி மிகுந்த இயந்திரத்தனமான வீதிகளிலும் பயமின்றி மிதிவண்டிகளில் செல்பவர்களைப்பார்த்தால் எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும்.அதிலும் குடும்பமாக மிதிவண்டியில் செல்பவர்கள் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள்.அவர்கள்தான் எத்தனை நெருக்கமாக வாழ்க்கையை உணர்கிறார்கள்.இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருக்கும் இறுக்கம்களையும் மன அழுத்தம்களையும் கரைத்து விடுகின்றன மிதிவண்டிப் பயணங்கள்.

கவலைகளைப்பற்றிய வாசனைகள் எதுவுமறியா என் சிறுவயதுக்காலங்களில் அமைந்த ஒரு மென்மையான நாளில்தான் என் முதல் மிதிவண்டி ஓட்டிய அனுபவம் கிடைத்திருந்தது.முழுமை பெறாத ஒரு மிதிவண்டி ஓட்டலாக அது அமைந்திருந்தாலும் என் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்து என் மனக்குளத்தில் தேங்கிவிட்டிருக்கிறது அந்த நாளின் வாசனைகள்.எனது தந்தையிடம் ஒரு கறுப்பு நிற றலி சைக்கிள் நின்றது.அதன் உயரமும்,நீண்டு அகன்ற அதன் இருக்கையும் மரச்சட்டம் போட்ட பின் இருக்கைகளும் எனக்குப் பயத்தை உண்டுபண்ணி அதை ஓட்டிப்பார்க்க நினைக்கும் என் ஆசையைத் தடுத்துக்கொண்டிருந்தன.எனது தந்தை பாடசாலை விடுமுறை நாட்களில் கிடைக்கும் சில நேரம்களில் ஒரு துணியும் சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெயும்தந்து அந்த மிதிவண்டியை துடைக்கச்சொல்வார்.எங்கள் வீட்டு முற்றத்தில் சிமெண்ட் மேடை ஒன்று இருந்தது.அந்த மேடையின் மேல் மிதிவண்டியை கவிழ்த்து தலைகீழாக நிறுத்தி ஒவ்வொரு கம்பியாகத்துடைத்து றிம் மக்காட் என்று முழுச்சைக்கிலையும் துடைத்து முடிக்கும்போது அது பளபளவென்று அப்பொழுது பிறந்த கன்றுக்குட்டிபோல் மினுங்கிக்கொண்டிருக்கும்.அப்பொழுதிலிருந்தே மிதிவண்டி ஓட்டுவது குறித்த கனவுகள் என்னுள் முகிழ்விடத்தொடங்கியிருந்தன.மிதிவண்டியின் பின்னிருக்கையில் புத்தகப்பையை செருகியபடி எல்லோரும் பார்க்க நான் மிதிவண்டியில் போயிறங்குவதாக கற்பனை செய்து கொள்வேன்.கொஞ்சம் கொஞ்சமாக மிதிவண்டியோடு நான் நெருக்கமாக உணர ஆரம்பித்திருந்தேன்.காலத்தின் சக்கரங்களில் நாட்கள் தேய்பட மிதிவண்டியின் உயரத்துடன் என் உயரமும் சமனாக இருப்பதாக உணர்ந்த நாளொன்றில்தான் மிதிவண்டியை ஓட்டிப்பார்ப்பதற்கான முதல் முயற்சியை செய்து பார்த்தேன்.ஜந்து நிமிடங்களுக்குமேல் நீடிக்காத அந்த பரிசோதனை முயற்ச்சியில் நான் தோற்றுப்போய் விட்டிருந்தேன்.ஒற்றைக்காலால் பெடலை மிதித்தபடி மற்றைய காலை நிலத்தில் ஊன்றி ஊன்றிக் கொஞ்சத்தூரம் நகர்ந்தாலும் துவிச்சக்கரவண்டியின் "கான்ரிலை"எனது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவர முடியவில்லை.அங்குமிங்கும் ஆட்டம் காட்டியபடி என்னைச்சிறிது தூரம் இழுத்துச்சென்ற மிதிவண்டி அந்தக்கல்லு வீதியின் நடுவில் பொத்தென்று என்னையும் இழுத்து விழுத்திவிட்டு முன்சில்லு சுற்ற சிரித்தபடி கிடந்தது. எழுந்து மிதிவண்டியை நிமிர்த்திய எனக்கு காதுப்பக்கம் ஏதோ ஊர்வதுபோல் இருந்தது.கைவைத்து பார்த்தபொழுது ரத்தம் உச்சம்தலையில் இருந்து சொட்டுச்சொட்டாக வடிந்து கொண்டிருந்தது.அப்படியே வீட்டிற்க்குவர ரத்தத்தைப் பார்த்த அம்மா அழுதபடி நாலு வீடு தள்ளி இருந்த முருகேசு ஜயாவிடம்  என்னைக் கூட்டிப்போனார்.முருகேசு ஜயா தமிழ்ப் பரியாரி.காயம்பட்ட இடத்தில் இருந்த தலைமுடியை வட்டமாக வெட்டியகற்றி அந்த இடத்தில் சுண்ணாம்புபோல் வெள்ளை நிறத்தில் இருந்த ஏதோ ஒரு மருந்தைப்பூசி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.தலைக்காயம் மாற மறுபடியும் துவிச்சக்கரவண்டி ஆசை என்னுள் வந்திருந்தது.இந்தமுறை அப்பாவினதும் அம்மாவினதும் உதவியுடன் ஒரே நாளில் துவிச்சக்கரவண்டி ஓடக்கற்றிருந்தேன்.ஆனாலும் என்னால் அந்த முதல்நாள் ஜந்து நிமிட ஓட்டத்தை மறக்கமுடியவில்லை.அன்றிலிருந்து ஏறத்தாழ பதின்நான்கு வருடங்கள் நானும் மிதிவண்டியும் இணைபிரியாத நண்பர்களாகிவிட்டிருந்தோம்.என்னுடைய எல்லாப் பயணங்களிலும் கூடவே வரும் நண்பனாக என்னை அது சுமந்துகொண்டிருந்தது.

நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அப்பா எனக்கு கறுப்பு நிற "லுமாலா" சைக்கில் ஒன்றை வாங்கித்தந்திருந்தார்.என் மகிழ்ச்சி முழுவதையும் உருக்கிச்செய்த கறுப்பு நிற இரும்புத்தோழனாக முற்றத்தில் நெஞ்சை நிமிர்த்தி நின்றுகொண்டிருந்தது அந்த மிதிவண்டி.அன்றைய நாள் முழுவதும் வானத்திலிருந்து தேவதைகள் இறங்கிவந்து என்பாதங்களை தரையில் தங்கிவிடாமல் தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்தார்கள்.அன்றைய பகலும் இரவும் என் தோழ்களில் மலர்களைத்தூவிக்கொண்டிருந்தன.பறந்து பறந்து நண்பர்கள் வீடுகளுக்குச்சென்று என் புதிய மிதிவண்டியைக்காட்டி அவர்களின் கருத்துக்களைச் சேகரித்துக்கொண்டேன்.அழகிய "ஸ்டிக்கர்"களை வாங்கி ஒட்டி அலங்கரிப்பது,கலர்கலரான நூல்களை வாங்கி சக்கரங்களின் கம்பிகளில் கட்டுவது,மக்காட்கல்லு வேண்டிப்பூட்டியது என்று அந்த விடுமுறை முழுவதும் அந்த மிதிவண்டியே என் நாட்க்களை ஆக்கிரமித்திருந்தது.விடுமுறையும் முடிந்து நானும் மிதிவண்டியும் ஓடிஓடிக் களைத்துப்போயிருந்த ஒரு நாளில்தான் அந்த இடப்பெயர்வும் வந்தது.ஊர்கூடித்தெருவிலே மூட்டைமுடிச்சுக்களுடன் ஊர்ந்துகொண்டிருந்தபொழுதொன்றிலே என் தோழனும் எங்கள்வீட்டுப் பொருட்களில் கொஞ்சத்தை சுமந்துகொண்டு என்னுடன் கூட நகர்ந்துகொண்டிருந்தான்.கிளாலிக்கரையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் எனது மிதிவண்டியையும் விடாப்பிடியாக படகேற்றி வன்னிகொண்டுபோய்ச் சேர்த்திருந்தேன்.வன்னி வீதிகளின் புழுதியையும் செம்மண்ணையும் குடித்தபடி சலிக்காமல் அந்த ஒருவருடம் முழுவதும் என் எல்லாப் பயணங்களிலும் என்னைச் சுமந்துகொண்டு திரிந்தது என் மிதிவண்டி.வன்னியில் என் மிதிவண்டிக்குப் பல சோதனைகள்.குடமுடைந்தது,செயின் அறுந்தது,ரியூப் வெடித்தது என்று அந்த ஒருவருடமும் அதற்க்கு சோதனைமேல் சோதனைகள்.பல நூறுமுறை பஞ்சராகி உடம்பு முழுவதும் பல காயங்களை வாங்கியிருந்தன இரண்டு "ரியூப்களும்".வன்னியில் ஒரு வருடத்திற்க்குமேல் தாக்குப் பிடிக்க முடியாமல் நாங்கள் எல்லோரும் யாழ்ப்பாணம் நகர்ந்தபோது எனது மிதிவண்டியும் எங்களுடன் இழுபட்டுக்கொண்டு யாழ்ப்பாணம் வந்துசேர்ந்துவிட்டிருந்தது.

வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் திரும்ப முடிவெடுத்தபொழுதொன்றில் வயதாகிப்போய் மூலையில்கிடந்த அப்பாவின் றலிச்சைக்கிலை பெரிய சுமையாக உணர்ந்த வீட்டார் அதை வன்னியிலேயே விற்றுவிட்டு யாழ்ப்பாணம்போகத் தீர்மானித்தனர்.றலிச்சைக்கிள் எங்களைவிட்டுப் பிரியப்போவதை நினைத்து எரிந்துகொண்டிருந்த என் மனதைப்போலவே எரித்துக்கொண்டிருந்த வெயில் நாளொன்றில் வன்னி விவசாயி ஒருவருக்கு நல்லவிலைக்கு அந்தச்சைக்கிலை விற்றுவிட்டு பயணச்செலவுக்காக அப்பா அந்தப் பணத்தை எண்ணிப் பத்திரப்படுத்திக்கொண்டார்.யாழ்ப்பாணம் போகப்போவதை  எண்ணி வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியோடும்,திளைப்போடும் இருந்தபோது ஏனோ எனக்கு மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.வீட்டின் ஒரு மிகமூத்த உறுப்பினரை இழந்துவிட்டது போன்ற உணர்வு என் உடலெங்கும் பரவி இருந்தது.அந்தச் சைக்கிலுடன் சேர்த்து மிதிவண்டியுடன் ஒட்டிக்கிடந்த எனது சிறுவயது ஞாபகங்களையும் யாரோ பறித்துச்சென்றுவிட்டதைப்போலவே உணர்ந்தேன். துருதுருவென்று நீட்டிக்கொண்டிருந்து சிறுவயதுகளில் என்னைப் பயமுறுத்திய அதன் இருக்கை,சட்டம்போட்ட பின்னிருக்கை,சக்கரக்கம்பிகளில் சுற்றிக்கட்டியிருந்த கலர்கலரான நூல்கள்,சைக்கிலை துடைக்க செயின்கவறை ஒட்டிச் செருகியிருந்த எண்ணெய் தோய்த்த அழுக்குப்படிந்த துணி,புழுதி படிந்த வீதிகள்,மிதிவண்டியின் பின்னால் ஓடிவரும் நண்பர்கள் என்று அந்த மிதிவண்டியோடு சேர்த்து காலம் பலவற்றை அள்ளிச்சென்றுவிட்டாலும் புதிய நினைவுகளை உள்வாங்கிக்கொண்டு வாழ்க்கை நின்றுவிடாமல் வயதான அந்த மிதிவண்டியின் சக்கரங்களைப்போல இன்னமும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் காலத்துடன் சேர்ந்து நானும் என் மிதிவண்டியும் வளர்ந்து தேய்ந்துகொண்டிருந்ததோம்.முதுமையின் அடையாளங்களைச் சுமந்துதிரியும் மனிதர்களைப்போலவே காலத்தின் நீட்ச்சியில் என் கறுப்பு நிற மிதிவண்டியும் மெல்லமெல்ல தன் நிறம்மங்கி கொஞ்சம்கொஞ்சமாக அதன் ஆரம்பகால களையை இழந்துவிட்டிருந்தாலும் என் எல்லாவற்றிலும் அது என்னுடன்கூடவே இருந்தது.இடப்பெயர்வுகளின்போது சுமைகளைப் பகிர்ந்துகொண்டதில்,இழப்புகளில் துவண்டு கிடந்த நேரம்களில் தனிமையைத்தேடிப் பயணிக்கையில்,பந்துவிளையாடும் மைதானத்தில்,கோவில் வீதியில் நண்பர்களுடனான அரட்டைகளில்,மதவடியில் வெட்டியாக நிற்கையில்,நண்பணிண் காதலுக்கு தூதாகப்போகையில்,போரில் இறந்த தோழனின் மரணச்செய்தியை சுமந்து செல்கையில் என்று எல்லாவற்றிலும் கூடவே வந்தது என் மிதிவண்டி. பாடசாலை செல்லும்போதும்,முடிவடைந்து வரும்போதும் வெள்ளைக்கொக்குகளைப்போல் வீதி நீளத்திற்க்குப்போகும் பள்ளித்தோழர்கள்,அழகான பள்ளிக்கூடத்தோழிகளின் புன்னகைகள்,மெதுமெதுவாகப் பின்னேபோகும் கிழுவை வேலிகள்,பூவரசுகள்,மதில்கள்,தண்டவாளமின்றி மொட்டையாகக்கிடந்த யாழ்தேவி பயணித்த புகைவண்டித்தடங்கள் என்று என் மிதிவண்டியுடனான பயணங்கள் அத்தனையும் எத்தனை அழகானவைகள்.இளவயது நண்பர்கள்,பாடசாலை சென்றநாட்கள்,கவலையற்று நண்பர்களுடன் சுற்றித்திரிந்த மாலைப்பொழுதுகள்,அம்மாவின் குளையல் சோறு,அப்பாதரும் சில்லறைக்காசுகள்,நாவல்ப்பழங்கள்,மைக்கறை படிந்த பாடசாலைச்சீருடைகள்,எங்கள் இளவயதுப் புன்னகைகள் என்று காலம் எல்லாவற்றையும் பறித்துவிட்டதைப்போலவே என் பயணத்தோழனையும் எங்கோ பறித்துச்சென்றுவிட்டது.இழந்துஇழந்து இழப்பதற்க்கு எதுவுமின்றி வெளிநாடுகளுக்கு ஓடிவந்த ஈழத்தமிழர்களைப்போலவே நானும் மிதிவண்டியுடன் சேர்த்து எல்லாவற்றையும் இழந்து நாடுகடந்து ஒற்றையாக நின்றாலும் என் நினைவுகளில் நீங்காது நின்று புன்னகைத்துக்கொண்டிருக்கிறான் என் பயணத்தோழன். வெளிநாட்டு நகரங்களின் சிமெண்ட் வீதிகளில் விலையுயர்ந்த துவிச்சக்கர வண்டிகளில் உடம்பு நோகாமல் சவாரி செய்தாலும் எம்பிஎம்பி மிதித்தபடி கால்களிலும் மட்காட்டிலும் புழுதியடிக்க வாழ்க்கையின் மிக அழகிய நாட்களைச் சுழற்றியபடி பயணிக்கும் மண்ணுக்கும் எங்களுக்குமான உணர்வுச்சங்கிலியை இணைத்துவைத்திருக்கும் எம்மூரின் மிதிவண்டிப்பயணங்களுக்கு அவை ஒருபோதும் இணையாக முடியுமா....?

1 comment:

சசிகலா said...

எங்களுக்குமான உணர்வுச்சங்கிலியை இணைத்துவைத்திருக்கும் எம்மூரின் மிதிவண்டிப்பயணங்களுக்கு அவை ஒருபோதும் இணையாக முடியுமா....?
அருமை

Post a Comment