Pages

Wednesday 3 April 2013

முற்றுப் பெறாத கனவுகளின் கதை...

பாட்டி கனவுகளின் ராணி...பாட்டியிடமிருந்துதான் நான் கனவுகளுக்கு வர்ணம் தீட்டக் கற்றுக்கொண்டேன்...பாட்டி வெற்றிலைகளை மென்றவாறு வியப்பும்,சுவாரஸ்யமும்,புதிரும் பூத்துக்கிடக்கும் அவளின் அனுபவங்களை வார்த்தைகளாக அசை போட்டுக்கொண்டிருப்பாள்... பாட்டியின் வர்ணனைகளில் மயங்கி நின்றபடி அவள் வார்த்தைகளில் இருந்து தெறிக்கும் தலைமுறைகளின் கதைகளை நான் சேகரித்துக்கொண்டிருப்பேன்... எங்கள் கிராமம் தலைமுறைகள் கூடிக் கூடி விளைந்த முற்றம்...அவர்களின் பேச்சும்,சிரிப்பும்,அழுகையும்,சந்தோசம்களும் ,துக்கம்களும் கால நிழல்களாக அந்தக் கிராமத்தின் முற்றங்கள் முழுவதும் படிந்திருக்கின்றன...மனிதர்களின் காலடித்தடங்களும்,பிம்பங்களும்,பேச்சொலிகளும் படிந்துபடிந்து தலைமுறைக் கனவுகளின் பூமியாக விளைந்திருந்தது அந்தக் கிராமம்... அது தலைமுறைகளின் பல கதைகளை தன் கால அடுக்குகளில் பவுத்திரமாக்கி வைத்திருக்கிறது...பாட்டி எப்பொழுதாவது அந்தக் கதைகளில் இருந்து சில முடிச்சுக்களை அவிழ்த்து சந்ததிகளின் உணர்வுகளை என்னுள்ளும் மெதுவாகக் கடத்திவிட்டிருப்பாள்...அந்தக் கதைகளில் இருந்து ஓராயிரம் காலங்கள் விரிந்து காட்சிகள் பெருகும்...காட்சிகளின் பின்னால் நான் கட்டுண்டு நடப்பேன்..நினைவுகளின் பள்ளத்தாக்கில் விழுந்தெழுந்து செம்மண் படிந்த வீதிகளில் அலைந்துதிரிந்து ஓலைகளால் வேயப்பட்ட வீட்டு முற்றங்களைக் கடந்து அம்மணமாக புழுதிகளை தங்கள் கைகளால் அள்ளித்தின்று கொண்டிருக்கும் குழந்தைகளுடன் ஆடிக்களைத்து எங்காவது ஒரு மூலையில் சந்ததிகளின் நிழலைப் பரப்பிக்கொண்டிருக்கும் வேப்பமரம் ஒன்றின்கீழ் கனவுகளின் அரவணைப்பில் நான் இளைப்பாறிக் கொண்டிருப்பேன்...

பாட்டியின் பாதத்தடங்களை மிதித்துப் போய்த்தான் நான் அந்தக் கிராமத்தை தாண்டி இருந்த உலகத்திற்கு அறிமுகமாகி இருந்தேன்..பாட்டி கைகளை நீட்டி தன் விரல்களைப் பிடித்துக்கொள்ள சொல்வாள்..நான் அவள் விரல்களை இறுக அணைத்தபடி புற்களையும்,புழுதியையும்,கற்களையும் மிதித்து மிதித்து நடந்து கொண்டிருப்பேன்..பாட்டியின் காலடிகள் பட்டுப்பட்டு காணிகளினூடு பாதைகள் முளைத்திருந்தன...அந்தப் பாதைககளில் என் பாதங்கள் தவழ்ந்து நடை பழகியிருந்தன.....பாட்டியின் கனவுகளில் இருந்து முளைத்ததுதான் நாங்கள் இருந்த வளவு...அவள் கனவுகள் முளைத்து,தழைத்து,விழைந்து அந்த வளவெங்கும் விரிந்து பரந்து நிழல் பரப்பிக் கொண்டிருக்கின்றன...அந்த நிழலின் கீழ்தான் நாங்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தோம்...

கால்களை மட்டும் நம்பியே எம்மூரில் பிரயாணங்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருந்த காலமது..எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டி நிகழ்ந்த ஒவ்வொரு பிரயாணத்திலும் பாட்டியின் கால்களே எங்களுக்காய் தேய்ந்து கொண்டிருந்தன..பாட்டியின் காலடியில் இருந்தே என் பயணங்களும் ஆரம்பமாகி இருந்தன... காலடியில் அகண்டும்,தொலைவில் ஒடுங்கியும் பாம்புபோல வளைந்துவளைந்து செல்லும் வீதிகளையும், தேவைகள் துரத்த முகங்களில் எதிர்பார்ப்புக்களை சுமந்தவாறு பயணித்துக்கொண்டிருக்கும் மனிதர்களையும் கண்களில் வியப்பும்,புதினமும் விரிந்து மலர அவதானித்தவாறு பாட்டியின் நிழலில் மிதந்து மிதந்து உலகங்களைத் தரிசித்தவாறு நான் நடந்து கொண்டிருப்பேன்...

பாட்டியுடன் நிகழ்ந்த எனது அநேக பயணங்கள் சந்தையை நோக்கியதாகவே அமைந்தன...சந்தை எனக்கு பல்லாயிரம் மனித உணர்வுகள் மோதிப் புரளும் புதிரான இடமாக இருந்தது..அது எப்பொழுதும் மனிதர்களால் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது...அங்கே கனவுகள் தேங்கிய விழிகளுடன் மனிதர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்..மனித வெள்ளத்தில் மோதிப் புரண்டு சந்தை இரைந்து கொண்டிருந்தது...சந்தையில் இருந்து சற்று வெளித்தள்ளி மீன் சந்தை இருந்தது..அது சந்தையை விட இன்னும் அதிகமாக இரைந்து கொண்டிருந்தது..அங்கு நிலத்திலும் சுவரிலும் கடல் ஒட்டிக் கிடந்தது...அங்கிருந்து கடல் சுவாசப்பைகளில் புகுந்து நிறைந்து வீடுவரை வந்திருக்கும்...

சந்தையில் மனதை மயக்கும் மந்திர வார்த்தைகளை வீசியபடி வணிகர்கள் கூவிக் கொண்டிருந்தார்கள்..அவர்களின் மந்திரச் சொற்களில் மனதைப் பறிகொடுத்தவர்கள் தாண்டிப் போக முடியாதபடி தடுமாறினார்கள்...மனிதர்கள் இடைவிடாது சொற்களை உதிர்த்துக் கொண்டிருக்க சொற்கள் வார்த்தைகளாகிக் கொண்டிருந்தன..வார்த்தைகளைச் சேர்த்து சந்தை பெரும் இரைச்சலாகப் பேசிக்கொண்டிருந்தது..வினோதமான செய்கைகளுடன் ஒவ்வொருவரும் சந்தையில் அசைந்து கொண்டிருந்தார்கள்..நான் அவர்களின் செய்கைகளில் கட்டுண்டு மயங்கி நிற்பேன்..சந்தையின் வியப்புக்கள் என்னுள் பெரும் புதிர்வனமாய் வளர்ந்தன..

பாட்டி சாகசக்காறி...கொண்டுவந்தவற்றை பேசிவிற்கும் மாயவித்தையும் வணிகர்களின் மந்திர வார்த்தைகளுடன் போட்டியிட்டு பொருட்களை வாங்கும் தந்திரமும் தெரிந்திருந்தது...பாட்டி சந்தையில் பொருட்களை வாங்கி பைகளை நிறைத்துக்கொள்ள நான் காட்சிகளில் மயங்கிமயங்கி களைத்து நிற்பேன்..வெயில் நெருப்பாக எரிக்கும் மதியப் பொழுதுகளில் கானல் நீர் கண்களை ஏமாற்றும் சுடு வீதியில் பாட்டி ஒரு பாரம் தூக்கியாய் முன் நடக்க உருகும் தாரில் அழுத்தமாக என் பாதங்களைப் பதித்தபடி சந்தையில் சேகரித்த நினைவுகளை அசை போட்டவாறு பாட்டியின் நிழலில் நான் தள்ளாடித்தள்ளாடி நடந்துகொண்டிருப்பேன்..

ஊரின் பொழுதுகள் வேப்பமரக் குயிலின் பாட்டுடன் மலரும்..சேவல்கள் இன்னொரு சேர்க்கையை நினைத்துச் சிலிர்த்தபடி ஊரை எழுப்பும்...உண்டகளைப்பில் துங்கிய பறவைகள் மரங்களில் சோம்பல் முறித்துச் சிறகசைக்கும்... அணில்கள் விழித்துக்கொள்ளும்...பனியில் தோய்ந்து மண் மணத்தில் பயிர்கள் கிறங்கி ஆடும்...மல்லிகைப் பூவில் நனைந்து முற்றம் மணக்கும்...கோயில் மணி ஓசையில் ஊர் விளிக்கும்...இரவெல்லாம் கண்விழித்துக் காவலிருந்த பன்னோலைப் பாய்கள் சுருண்டு மூலையில் தூங்கப் போகும்...சந்தைக்குப் போகும் பயிற்றங்காய்களில் இருந்தொழுகும் நீரில் வீதி நனையும்...கிணற்றடிகளில் காப்பிகளும் வாளிகளும் சண்டை பிடிக்கும்...வேப்பங்காற்றில் தோய்ந்துறங்கிய ஊர் சுறுசுறுப்பாகும்...பாட்டி மூட்டிய அடுப்பில் பொங்கிக்கொண்டிருக்கும் பால் மணத்துடன் நான் கண்விழிப்பேன்.....பாட்டி எப்பொழுது தூங்கி எப்பொழுது எழும்புகிறாள் என்பதை நான் ஒருபோதும் அறிந்ததில்லை.கடவாயில் ஒழுகும் பால் மணத்துடன் தொடங்கும் ஊரின் காலைப் பொழுதுகள்...ஊரை விரட்டியபடி பகல் மெல்ல வீங்கும்...நிலச்சூடு ஏறும்...சூரியன் நடுவானை நெருங்கும்போது நானும் பாட்டியும் குளக்கரையில் நின்றுகொண்டிருப்போம்...

மனிதர்களின் தடங்கள் பட்டுப் பட்டு தாமரைகள் விலகியிருக்கும் இடமாகப் பார்த்து பாட்டி குளத்தில் இறங்குவாள்...நான் பாட்டியின் பின்னே கூட்டமாக வரும் மீன் குஞ்சுகளை விரட்டிப் பிடிக்க முயற்சித்து தோற்றுக் களைத்து நிற்க பாட்டி குளித்து முடித்துக் கரை ஏறுவாள்...குளத்தில் பொழுதழியும்...குளக்கரையில் நாவல் மரங்கள் வீங்கிப் பருத்து நிற்கும்...நாவல்ப் பழங்களை நான் சேகரித்துக் கொண்டிருக்க பாட்டி ஈரத் துணிகளை துவைத்து உலர்த்தி விட்டிருப்பாள்...சூரியன் நடுவானில் நிற்கும்போது நானும் பாட்டியும் நீரில் ஊறிய உடல் காற்றில் கொடுக நிழலுடன் நடப்போம்...வெயில்ச் சூட்டில் வீதிகள் வெறித்துக் கிடக்கும்....நாவல்ப் பழங்களை ஒவ்வொன்றாக உமிழ்ந்தபடி நீரில் ஊறி இழகிய பாதங்களில் சுடு புழுதி ஓட்டிவர நானும் பாட்டியும் வீடு வந்து சேர்ந்திருப்போம்....

வெளியே அடிக்கும் மதிய வெயிலுக்கு ஒதுங்கி தாத்தா திண்ணையில் சாய்மனைக் கட்டிலைப் போட்டு அதில் கால்களை அகலப் பரப்பி துங்குவார்...சடையன் நாய் தாத்தாவுக்குப் பக்கத்தில் சுருண்டு படுத்திருக்கும்...தாத்தாவுக்கு ஒடியல்ப் பிட்டு மதிய உணவில் இருக்க வேண்டும்...பாட்டி ஒடியல் பிட்டை தாத்தாவுக்கு புழுங்கலரிசிச் சோற்றுடன் சுடச்சுட ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொடுப்பார்....குளித்து முடித்து தாத்தா சாப்பிடும்போது ஒடியல் வாசம் காற்றில் பரவும்...சடையன் நாயும் நாலைந்து கோழிகளும் தாத்தாவுக்காகக் காவலிருக்கும்...தாத்தாவின் உடம்பு இரும்பு போலிருக்கும்...காற்று அதில் மோதித் தெறித்து முடியாமல் நாணிப் பின்வாங்கும்...தாத்தா தன் மீசையை அடிக்கடி பெருமையாகத் தடவிக்கொடுப்பார்...அதை அவர் எப்பொழுதும் தன் வம்சப் பெருமையின் அடையாளமாகக் கருதுவார்...சுருட்டுப் புகைக்கும்போது மட்டும்தான் அது அவருக்கு இடையூறாக இருக்கும்...ஓய்வாக இருக்கும்போது தாத்தா கட்டில் இருந்து பெரிய புகையிலையாக எடுத்து விரிப்பார்...தாத்தாவின் முகத்தைப் போலவே அது அகல மலர்ந்திருக்கும்...தாத்தா பாக்குவெட்டியால் புகையிலையை குறுக்காக வெட்டி அழகாகச் சுற்றி வளையம் வளையமாக புகைவிடுவார்...புகை மணம் எனக்கு தலையிடிப்பது போலிருந்தாலும் அது தாத்தாவின் வாசத்துடன் வருவதால் அவரின் மடியில் படுத்துக் கிடந்தபடியே அவர் புகைவிடும் அழகை விரும்பி ரசிப்பேன்...

புழுதி வீதிகள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் மாலைப் பொழுதுகளில் நிலச்சூடு கால்களை விரட்டவிரட்ட நானும் பாட்டியும் வயல்கரைகளில் அலைந்து திரிவோம்...வயலோரம் காலப் பாடல்கள் போல நெல்மணிகள் களைக்காமல் காற்றில் கலகலக்கும்..தென்றல் இயற்கையை இரசித்தபடி மெல்லக் கடந்துபோகும்...வயல்களில் தேங்கியிருக்கும் மழை நீரில் விவசாயிகளின் கனவுகள் சலசலக்கும்...ஆட்காட்டிகள் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் வயலோர மாலைப் பொழுதுகளை நானும் பாட்டியும் வெற்றுக் கால்களால் நடந்து கடப்போம்...பெண்கள் விறகுச் சுள்ளிகளை சுமந்தவாறு தங்கள் நிழலுடன் நடந்து கொண்டிருப்பார்கள்...பாட்டி கதைகளைப் பரப்பியவாறு தன் தோழிகளுடன் சுள்ளிகளை சேகரித்துக் கொண்டிருப்பாள்...நான் வயல்களினுடு நீண்டு நெடுத்திருக்கும் ஒற்றையடிப் பாதைகளின் முதுகில் தங்கிவிட்டிருக்கும் புற்களின் மீதும புழுதியின் மீதும் நினைவுகளைப் படரவிட்டபடி கற்பனைகளுடன் பேசிக்கொண்டிருப்பேன்.....காற்றில் இருக்கும் ஈரப்பதன் பார்த்து பாட்டி தென்திசையால் மழை வருமென்பாள்...அதுகேட்டுப் பூமிப் பெண் முகம் நாணுவாள்..பாயில் காய்ந்துகொண்டிருக்கும் ஓடியல்களின் சிந்தனையில் பாட்டியின் நடையில் வேகம் கூடும்...பகல் உழைத்துக் களைத்து மயங்கிச் சிவந்திருக்கும் மாலைப் பொழுதுகளில் வயல்கரை முழுவதும் கனவுகளில் அலைந்து திரிந்தும் களைத்துப் போகாத மனதைச் சுமந்தவாறு புழுதி வீதிகளில் புதைந்து புதைந்து எழும் என் பாதங்களை விரட்டியபடி பாரத்துடன் நடந்து கொண்டிருக்கும் பாட்டியின் தடங்களைப் பிடிக்க விரைந்து கொண்டிருப்பேன்...நிழல் உறங்கும் புழுதி வீதிகளில் நாங்கள் ஒருபோதும் நடந்து களைத்ததில்லை...

அறுவடை காலங்களில் முற்றிச்சரியும் நெற்கதிர்களில் இருந்து பெருகி வழியும் ஓசை வெள்ளத்தை காற்று அள்ளிக்கொண்டிருக்கும்...காயும் வைக்கோல் வாசனையின் பின்னால் அலையும் கால்நடைகளின் நாவில் எச்சிலூறும்...வீடுகள் நிரம்ப நெல்மணம் பூக்கும்...அறுவடையும்,சூடடிப்பும்,உழவுமாக ஊரின் முற்றத்தில் உழைப்பு தூங்காதிருக்கும்...நிலம் தேகங்களின் வியர்வைகளில் குளிக்கும்..அவியலும் பரிமாறலும் என அடுப்படிகள் கமகமக்கும்... அறுவடையின் பின் கால்நடைகள் ஊர்முழுதும் சுதந்திரத்தை அனுபவிக்கும்...வயல்கரை முழுவதும் அலைந்தலைந்து களைத்துப்போய் இருள் சரசரக்கும் மாலைக் கருக்கல்களில் வாய்களில் நுரை தள்ள அவை பட்டி திரும்பும்...பாட்டி நிலவொளியில் அருவாளில் உட்கார்ந்திருந்தவாறு காலைக்கருக்கலில் நான் சேகரித்த நுங்குகளை மாடுகளுக்காக சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கடகத்தை நிரப்பிக் கொண்டிருப்பாள்..வழிந்தோடும் நுங்குத் தண்ணியில் குளித்தபடி நான் பாட்டி வெட்டித் தரும் நுங்குகளை வாங்கி ஒவ்வொன்றாக நாவில் நனைத்துக் கொண்டிருப்பேன்...பாட்டியின் நுங்குக் கயர்களை அசை போட்டபடி பசுக்கள் அந்த எளிமையான கிழவிக்கு பாலை அன்பாய்ச் சொரியும்...அவற்றின் அன்பில் பாட்டியின் மனமும் அவள் ஏந்திப் பிடித்திருக்கும் பாத்திரமும் நிறைந்து வழிந்து கொண்டிருக்கும்....பாட்டி புதுச் சட்டியில் பாலை நிறைத்து அடுப்பை மூட்டுவாள்...நான் சட்டியில் பொங்கி நுரைக்கும் பாலை ரசித்தபடி பாட்டியின் அருகே குந்தியிருப்பேன்...

பாட்டியிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைகளில் எப்பொழுதும் நிழலின் குளிர்மையையும்,நிலவின் தண்மையையும்,வசந்த காலத்தின் இனிமையையும் ஒருங்கே உணர்கிறேன்...நெருப்பாய் எரிக்கும் வாழ்க்கைப் பயணத்தில் பாட்டி ஒரு பெரு விருட்சமாய் நின்றுதாங்க அவளின் நிழலில் என் காலடிகள் இளைப்பாறிக் கொண்டிருந்தன...என் பால்ய காலங்கள் பாட்டியுடன் வளர்ந்து கொண்டிருந்தன...எனது நாட்கள் பாட்டியின் நிழலில் நகர்ந்தன... மாலை நேரத்து புல்லாங்குழல் இசைபோல,மனதை மயக்கும் சித்திரம் போல வாழ்க்கை மெதுமெதுவாக உருவாகிக் கொண்டிருந்தது...நிறைவும்,நிம்மதியும் தூண்களாக அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன...

வாழ்க்கை ஒரு ஆறாக வழிந்தோடிக் கொண்டிருந்தது...காலப் பாத்திரத்தில் நினைவுகள் தேங்கின...பழைய முகங்களின் பிரிவில் வாடியும் புதிய முகங்களின் துளிர்ப்பில் பூத்தும் கிடந்தது ஊர்...காட்சிகள் உதிர்ந்து காலச்சுழலில் அள்ளுண்டு போக புதியன துளிர்த்தன...தென்றலும்,புயலும்,கோடையுமாக மாறிமாறிக் காலச்சுழல் அடித்தது...காட்சிகள் மாறின...சுதந்திரத்தின் முதுகில் தீ மூட்டப்பட்டபோது ஊரின் முற்றத்திலும் அணல் அடித்தது...ஊரின் முகத்தில் புன்னகை தொலைந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது...எட்டுத்திசைகளிலும் இருந்து விரட்டப்பட்ட சந்ததிகளின் துயரத்தில் ஊர் வாடிக் கிடந்தது...வீட்டு நாய்கள் வீதிகளில் அலைந்தன...ஒப்பாரிகள் ஊரை நிறைத்தன...சுதந்திரம் தொலைத்த கால்நடைகள் கட்டைகளில் ஒட்டிக் கிடந்தன....கன்றுகள் பால்மணம் தேய்ந்து பசியுடன் அலைந்தன....

காற்று உஷ்ணமாக வீசிக் கொண்டிருந்தது...வயல்கள் விளைச்சலின்றிக் கிடந்தன...தோட்டக்காறன் வாழ்க்கை வெயிலில் கிடந்ததால் தோட்டங்கள் காய்ந்து துரவுகள் வற்றிப்போயின... ஊர் எரிந்து கொண்டிருந்தது...ஊர்க்காரர்கள் நிழலின்றித் தவித்தார்கள்...வழிபோக்கர்கள் தொலைந்து போனதால் வீதிகள் காடாகின...சந்தை முகங்களற்று வெறுமையாகக் கிடந்தது...சந்தையில் கடல் மணக்கவில்லை...மனிதத் தொடுப்புக்களற்று கடல் நிலத்திலிருந்து தனியாக ஒடுங்கிப் போனது...கடலில் வேட்டைக்காரர்கள் அலைந்ததால் கடற்கரைகள் சுவடுகளற்று வெறுமையாகக் கிடந்தன... வேட்டைக்காரர்கள் கைகளில் ஆயுதங்களுடன் அலைந்து கொண்டிருந்ததால் பறவைகள் குஞ்சுகளுடன் புலம்பெயர்ந்தன...அவற்றின் கூடுகள் வெறுமையாகக் கிடந்தன...ஊரில் எல்லோரின் மீசைகளும் வேட்டைக்காரர்கள் மேல் ஆத்திரத்துடன் துடித்தன...தாத்தா தோட்டத்தை மறந்து போய்விட்டிருந்தார்...வேட்டைக் காரர்களை துரத்துவதைப் பற்றியே அவர் எப்பொழுதும் திண்ணையில் உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார்....

எல்லைகளில் இருந்து வெட்டுக்காயங்களுடன் துரத்தப்பட்ட சந்ததிகளின் முகங்கள் கோபத்துடன் அலைந்தன...எல்லைக்கற்கள் இடம்மாற்ரப் பட்டதால் ராஜகுமாரன் ஒருவன் வாளேந்தி போயிருப்பதாக பாட்டி சொல்லுவாள்..அதைச் சொல்லும்போது அவள் கண்களில் ஆவேசம் மின்னும்..ஊரிலிருந்து பல அண்ணண்மார்கள் ராஜகுமாரனின் தடங்களைத் தேடிப் போயிருந்தார்கள்...ஊர் இறுகிப் போனது..எங்கும் பேய் மெளனம் உறைந்து போய்க் கிடந்தது... முகங்கள் பயத்துடன் அலைந்தன...ராஜகுமாரனிடம் போனவர்களைத் தேடி வேட்டைக்காரர்கள் ஊருக்குள் புகுந்தார்கள்...ஊர் எரிந்தது...அவலக்குரல்கள் ஊரை நிறைத்தன...ராஜகுமாரனிடம் போனவர்களின் சுவடுகளை மிதித்து இன்னுமின்னும் பலர் கோபத்துடன் புறப்பட்டார்கள்...தாத்தா தன இயலாமையை நினைத்து பற்களை நெருமிக்கொண்டார்...

பாட்டி ராஜகுமாரனைப் பற்றி பெருமையாகப் பேசியபடி வெற்றிலைகளை மெல்லுவாள்...அவள் கனவில் ஒரு ராஜ்ஜியம் விரிந்திருந்தது...அங்கு வீரர்கள் வாளுடன் வேட்டைக்காரர்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்கள்...வேட்டைக்காரர்கள் அஞ்சி நடுங்கிப் போயிருந்தார்கள்..செழித்து வளர்ந்த பாட்டியின் ராஜ்ஜியத்தில் களைகளும் முளைத்தன...பாட்டியின் வெற்றிலைத் துப்பலில் தோய்ந்து களைகள் அழுக்காகிக் கிடந்தன...பாட்டி நட்ட தென்னைகள் வானத்தை நோக்கி ராஜகுமாரனின் வெற்றிக்காக வேண்டிக்கொண்டிருந்தன...பாட்டியின் கனவு பற்றி எரிந்து ஊர்முழுதும் பரவி விட்டிருந்தது...வீரர்களின் வெற்றிக்காக கோவில் முற்றத்தில் மனங்கள் தவங்கிடந்தன...தாத்தா தானறிந்த ராஜகுமாரனின் கதைகளை ரகசியமாக வீட்டில் பரிமாரிக்கொள்ளுவார்...

மெதுமெதுவாகப் பாட்டி தன கனவுகளை என்னுள் கடத்தி விட்டிவிட்டிருந்தால்...ராஜகுமாரனிடம் போன வீரர்களை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தபோது நான் நன்றாக வளர்ந்து விட்டிருந்தேன்...வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்புவதற்காக வேருடன் பிடுங்கி என்னை வெளிநாடுகளில் நட்டுக்கொண்டபோது பாட்டி எனக்குள் கடத்திவிட்ட கனவுகளை பொக்கிசமாகப் பாதுகாத்துக் கொண்டேன்...காலத்தின் இரும்புத்திரைகளின் பின்னால் பாட்டியின் ராஜகுமாரன் வீழ்த்தப்பட்டானாம் என்ற கதைகள் காற்றில் பரவின...ஊர் தேம்பி அழுதது...ராஜகுமாரனைப் பற்றிய கதைகள் ஒரு சரித்திரத் துயரமாக நீள்கின்றன...யாவுமறிந்த நிலவு ஊர் முற்றம்தாண்டி ஊமையாகப் போகிறது..ஒரு சரித்திரம் உக்கிப்போவதைப் பார்த்து இனம் அதிர்ந்து நிற்கிறது...பாட்டி கலங்கவில்லை...அவள் கனவுகள் முடிவின்றி வளர்ந்து கொண்டேயிருக்கின்றன...அவளைப் போலவே ஆயிரம் ஆயிரம் பாட்டிகளின் கனவுகள் ஊரைத்தாண்டி,தேசம்தாண்டி,கனட்ங்களைத் தாண்டி பல்லாயிரம் பேரன்களின் கனவுகளில் பெரு விருட்சமாக வளர்கின்றன...ஒரு ராஜ்ஜியத்தின் கனவு அவற்றில் புதைந்து கிடக்கின்றது... 

No comments:

Post a Comment