Pages

Tuesday 29 April 2014

பொக்கிசங்கள்...

கண்டங்களை தாண்டி வந்தாலும் ஊரில் விட்டு விந்த எங்கள் பால்யகால கனவுகளையும் நினைவுகளையும் தம்முள் பதிவு செய்து வைத்து கேட்கும்போதெல்லாம் பொக்கிசமாய் திருப்பி தருகின்றன 80களின் பாடல்கள்...

சின்னவயதில் அம்மா மதியம் கிணற்றடியில் குளிக்கவார்க்கும்போது வீதியால் போகும் ஜஸ்கிறீம்வானில் கேட்டு கேட்டு மனதில் பதிந்த பாடல்கள் இவை..நாங்கள் வளர்ந்துவிட்டோம்..ஆனால் இந்தப்பாடல்களும் அந்த நினைவுகளும் இன்னமும் இளமையாக பசுமையாக...






வாட்டர் பம்மில் இணைத்து இயக்கிய மோட்டரில் இந்தப் பாடல்வரும் படம் பார்த்திருக்கிறேன்...படம் தொடங்கமுன்னர் ரீ.வி யில் புள்ளியாக புள்ளியாக வரும்போது நமக்குள் ஏற்படும் சந்தோசத்துக்கு அளவே இல்லை..இப்பொழுது மனதுள் புள்ளி புள்ளியாக வந்து போகும் அந்த நினைவுகளும் அவ்வளவு இனிமையாக இருக்கின்றன...



அப்ப எமக்குத்தெரிஞ்ச விஞ்ஞானத்தில் ஏழு கலரும் வந்தால்தான் படம் வரும் எண்டு நம்பிக்கை... ரீவியில புள்ளிகளைக்கண்டதும் நமக்கு ஏற்படும் எல்லைகடந்த சந்தோசம் இருக்கே அப்பப்பா...எந்தவார்த்தைகளுக்குள்ளும் அடக்கிவிடமுடியாது அதை விபரித்து...

படம் போடப்போகினமாம் எண்ட செய்தியை ஒருகிழமைக்குமுன்னமே அறிஞ்சு அந்த ஒரு கிழமை முழுக்க ஒரு யுகமாக தவிச்சிருந்து படம்போடும் அந்தநாளும் வந்து அடிச்சுபிடிச்சுமுன் வரிசையில போய் இருந்தால்  சாமத்தியவீட்டுக்கொப்பியை முதல் போட்டு கடுப்பாக்குவாங்க இந்த பெரிசுகள்...செம காண்டாய் இருக்கும்..

படம் போட எழுப்புங்க எண்டு பெரிசுகளிட்ட சொல்லீட்டு தூங்கிடுவம்..எழுப்புவாங்கள் எண்ட நம்பிக்கையில..நம்பிக்கைதான வாழ்க்கை... அதை விட கீரோ வில்லனுக்கு எப்படா அடிப்பான் என்று பெரிய எதிர்பார்ப்புடன் முழிச்சு கொண்டிருப்பம் கடசியா வில்லன் அடி வாங்கும் போது நாங்கள் நித்திரையா போயிடுவம்..கமல் படம் தொடங்கும்போது நித்தா கொண்டு ரஜனி படத்துக்கு எழும்புவம் பாருங்க என்ன படம் எண்டு பள்ளிகூடத்தில சொல்லும்போது குழப்பம் வந்திடும்...

இரவு தொடங்கினால் விடியிறவரைக்கும் போடக்கூடிய ஆகக்கூடிய அந்த நாலு படமும் பார்க்கணும் எண்டு நினைச்சுட்டு போவம்... அங்க போன பிறகு ஒரு படம் அரைவாசி போகும் போதே நித்திரயாகிடுவம்.........விடியக்காலமை வீட்டுக்காறன் அடிச்சுக்கலைக்கும்போதுதான் தெரியும் படம் முடிஞ்சுது எண்டு..

அதை விட வீட்டுக்காரனுக்கு வரும் கோவம் பாருங்க ........அந்த வீட்டுகார அம்மா சாணத்தை கரைச்சு தெளிச்சு கொண்டு திரியும் போது தான் அவையளுக்கு விளங்கும் ஏண்டா படம் போட்டம் என்டு.......இரவு படம் பார்க்க வரும் எல்லா பக்கிகளும் சேர்ந்து அவங்க வீட்டை மூத்திரம் பெஞ்சு நாறடிச்சு போட்டு போயிருக்குங்கள்..

பொறுத்த நேரம் கிளைமாக்ஸாய் பாத்து இஞ்சின் நிக்கும் பாருங்க...ரீ.வி டெக் வாடகைக்கு குடுக்கிறவர் அப்பதான் கீறோவாய் தெரிவார்..சிங்கர் ஓயில் வார ரின்னுக்குள்ல இருக்கிற கொஞ்ச பெற்றோல வாட்டர் பம்முக்கு காட்டிபோட்டு கயித்தைபுடிச்சு இழுப்பார்..பொறுத்த நேரம் பாத்து கயிறும் அறுந்துபோகும்..அதுக்கும் தப்பி இஞ்சின் ஸ்டாட் பண்ணிணால் பலகையில அடிச்சிருக்கிற பல்ப் எரியும் பாருங்க..அதுதான் கரண்ட் வருதா என்டு பாக்கிற ரெஸ்டர்..அது எரியும்போது மனசுக்குள்ள ஆயிரம் பட்டாம் பூச்சி பறக்கும் பாருங்க..அப்பப்பா..

இதைவிட இடையில குறுப்பாய் பிரிஞ்சு சண்டையும் வந்திடும்..ரப்பர் பாண்டால் பின்னால் இருந்து முன்னாலை இருக்கிறவனுக்கு அடிச்சிட்டு இல்லாட்டி கச்சான் கோதால் எறிஞ்சுபோட்டு கம்முண்ணு இருப்பதால் பெரிய கலவரமே உண்டாகிடும்...

ரப்பர் பாண்டில அடிக்கும் போது சிலதுகள் ஈய கம்பிய வளைச்சு வைச்சு அடிக்கும் போது வரும் கோவம்.. அவனை அப்படியே பிடிச்சு அடிச்சு அவனை கடிச்சு அந்த இடமே பெரிய ரண களமாகிடும்... பிறகு தம்பிக்கு உதவியா அண்ணனும் அண்ணனுக்கு உதவியா தம்பியும் சேர்ந்து அடிச்சவனுக்கு பதில் தாக்குதல்.. இதில் ஒரு அண்ணன் தம்பி பாசம் ....இப்படியான சந்தர்ப்பம் இனி எப்ப வருமோ..

அழகான உறவுகள்...இனிமையான தருணங்கள் அவை...அவ்வளவு கஸ்டத்திலும் வாழ்க்கை எவ்வளவு கலகலப்பாக இருந்தது...அந்த வாழ்க்கையில் ஒரு ஜீவன் இருந்தது..அழகியல் இருந்தது...பொருளாதாரம் தேடிய இந்த புலம்பெயர் வாழ்வில் தொலைந்தத்துவிட்டோம் அந்த கலகலப்பை...

எப்ப நாங்கள் எங்களுடைய குடும்ப சுமைகளை சுமந்து கொண்டு வெளிநாடு என்ற பாலைவனத்துக்கு புறப்பட்டு வந்தமோ அன்றுடன் முடிந்து விட்டது எங்களின் பாச பிணைப்புகள் எல்லாம்..

அர்த்தம் தெரியாவிட்டாலும் இந்தப்பாடல்களை அடிக்கடி முனுமுனுக்கும் அந்த சின்ன வயதிற்கு மீண்டும் திரும்பி போகலாம் என்று இருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்..

நினைவுப்பரண்களில் பொக்கிசங்களாய் புதைந்திருக்கும் காலங்கள் அவை..இவைபோன்ற பாடல்கள் அவற்றை தூசிதட்டிக்கொண்டே இருக்கும் எம் வாழும் காலங்கள் முழுமைக்கும்...










சதா ரணமாமாகும் நினைவுகளும் சாகா நம்பிக்கைகளும்...




தமிழீழதேசத்தின் கண்ணீர்தோய்ந்த மாதத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறோம்.... நந்திக்கடலோரம் ஒரு ராஜ்ஜியத்தின் கனவு சிதைக்கப்பட்டு காற்றில் எழுதிய கடைசிச்சொல்லாகிப்போனது அந்தராஜ்ஜியம்.... முள்ளைச்செதுக்கிய சிற்பிகள் காற்றோடு போய்விட்டனர்... சிற்பிகளைப்பற்றிய கதைகளும் கனவுகளுமே ஒரு இனத்தின் மொழியாகிப்போனது...

எல்லாத்துன்பங்களையும் யாரின் நினைவுகளுடன் சுமந்தார்களோ அவர்களுக்கு எல்லாமே பொய்யென்று ஆகிப்போயின..

உறவுகளையும்,உடன்பிறப்புக்களையும் அழிவின் பேய் தின்றுவிட்டது...

எல்லாமே காலத்துடன் அள்ளுண்டுபோன நினைவுகள் ஆகிவிட்டன...

ஏன் இப்படி நடந்தது..? எத்தனை நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் இருந்தோம்..

காண்ணீரால்,வெறும் வார்த்தைகளால் அழித்துவிடமுடியாத துயரம் நெஞ்சில் தீயாகிறது..

எங்கள் மனிதர்கள் எல்லோரும் அனுபவித்த,அனுபவிக்கின்ற துயரங்களுக்கான பதிலை,நாங்கள் இழந்தவைகள் எல்லாவற்றுக்குமான பதிலை எப்படிச்சொல்லபோகிறோம்..? எல்லாவற்றையும் சமன் செய்யக்கூடியதாக எல்லாவற்றையும் அர்த்தப்படுத்தக்கூடியதாக எல்லாவற்றையும் புதிதாக்கக்கூடியதாக பொருள் நிறைந்த பதிலொன்றுக்காகவே எங்கள் காத்திருப்புக்களுடன் நாட்கள் நகர்கின்றன எமக்கு..

மாற்றமென்பது எளிதில் நிகழக்கூடியதல்ல...அது நீண்ட பிரயத்தனத்திலும்,முயற்சியிலும்தானே தங்கி இருக்கிறது..

போராட்டாத்தால் நிறைந்த ஈழத்தமிழர்களின் கடந்துபோன காலங்களின் ஒவ்வொரு துளியும் எவ்வளவு நம்பிக்கைகளை,நினைவுகளை பதிந்துவிட்டு போயிருக்கின்றன எமக்குள்..அந்த நம்பிக்கைகள் எம்மினத்திடம் இன்னும் மிச்சம் இருக்கிறது..

எங்கள் துயரங்கள் தீர்ந்தபொழுதொன்றில் நந்திக்கடலின் மணற்பரப்பில் இருந்து அவர்களின் ஆன்மாவுடன் எங்களின் சந்ததிகள் பேசுவார்கள்...மேகங்கள் அற்ற அந்தநிர்மலமான கோடை வானத்தில்பட்டங்கள் ஏற்றி எங்கள் குழந்தைகள் குதூகலிப்பார்கள்...அவை எங்கள் காலங்களின் வாசனைகளோடிருக்கும்..

முடிந்துபோன பிரியத்தின் துயரப்பாடல்....




தனித்தலையும் ஒரு
பறவையைப்போல நான்
என் இருப்பின்
வேர்களாய்
உன் ஞாபகங்கள்

விலகிப் போன பின்னும்
விட்டுப் பிரியா
துயரத்தின் வாசத்தில்
ஒட்டியிருக்கிறது
நம் ஆதிக்காதல்

நியாபகச்சூட்டிடமிருந்து
ஒளிந்து கொள்வது
அத்தனை சுலபமில்லையெனும் போது
உன் பிரிவின் கூரலகால்
கிழிகிறது என் இதயம்

காத்திருப்பின் ஆடை சுமந்து
நீயும் நானும்
அமர்ந்துபேசும்
மஞ்சல் நிறபூக்கள் உதிர்ந்துகிடக்கும்
யாருமற்ற இருக்கைகளிடம் கேள்..

அவை
உன்னிடம் கொடுப்பதற்காக
மழை நேர தேனீர்போல
எப்போதும் என்னிடம் இருக்கும்
எல்லையற்று நீண்ட அன்பையும்
ஆகாயத்தையும்
சொல்ல சில கதைகளையும்
முடிந்துவிட்ட பிரியத்தின்
கடைசி சொட்டில்
அடைகாத்து வைத்திருக்கும்...

நமக்கான பயணங்களில்
இசையொழுகிய தருணங்களை
லயித்தபடி
மழைக்காற்றின் ஈரம்போல
நான் சுமந்திருப்பேன் காதலை
மழையை
முற்றும் உறிஞ்சிய நிலம்போல
நீ வெடித்துக்கிட
அன்பின் வறட்சியில்...