Pages

Tuesday 19 July 2016

பரணில் கிடக்கும் பழைய நாட்குறிப்புகள்...


யுத்தம் யுத்தம்...கொடும் யுத்தம்...  சுற்றிவளைப்புகள்..சுட்டுப்படுகொலைகள்...கைது செய்யப்படுதல்...காணமல் போதல்...இடப்பெயர்வு..செல்லடி...

பத்திரிகளில் படிக்காமலும் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அயலவர்களுடன் இவைகளைப்பற்றி கதைக்காமலும் இவைகளில் ஏதோ ஒன்றை ஒவ்வொருவரும் எதிர்கொள்ளாமலும் அன்று எமக்கு நாட்களும் மாதங்களும் நகர்ந்ததில்லை..

96க்கு பிறகு இரவில் ஊர்வீதி எப்பிடி இருக்கும் என்று பார்த்ததே இல்லை.. இரவிரவா கடையடி கோயிலடி வாசிகசாலை மதகுகளில் நின்று நண்பர்களுடன் அரடையடித்துவிட்டு பத்து பதினொரு மணிக்கு கொத்துக்கடைக்கு போய் சுடச்சுட கொத்து சாப்பிடுவதை வெறும் கற்பனையில் மட்டுமே நினைத்து பார்க்க முடியும்...

பிரசவ வலியில் துடிக்கும் பிள்ளைதாச்சியை கூட முன்னால் லாம்புடனும் வெள்ளைக்கொடியுடனும் ஒருத்தர் போக வைத்தியசாலையில் கொண்டுசேர்த்த வரலாறு யாழ்ப்பாணத்தில் 90களின் இறுதியில்..

இரண்டாயிரத்தின் ஆரம்பகாலம்... சமாதானம்... பலநூறு யுகங்களாக அடக்கி வைத்திருந்த ஆசைகளை ஒருத்தன் ஒரே நாளில் அநுபவிக்க கிடைத்தால்... இரவிராக தூங்காமல் வீதிகளில் அலைந்தோம்... மதகுகளில் குந்தி இருந்து குதுகலித்தோம்... கொத்துக்கடை இரவிரவாக திறந்திருந்தது... வீட்டில் அம்மாக்கள் பிள்ளையை இன்னும் காணவில்லை எண்டு பதைத்து துடித்து தேடவில்லை.கைகளை விரித்து காற்றில் பறந்தோம்...

சேவ் எடுக்க ஆரம்பித்த கட்டற்ற இளம்பருவத்தில் சமதானம் வந்தது...

நான் மற்றும் நண்பன்... ஏலெவல் முடிஞ்சுது... வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டலைந்தபடி...

பிள்ளையார் கோயில் பின்வளவில் கிறிக்கற்... எனக்கும் கிறிக்கற்றுக்கும் எட்டாப்பொருத்தம்... வில்லங்கத்துக்கு வீட்டுக்கு வந்து ஏத்திக்கொண்டு போகும் நண்பன்... வீட்ட சும்மா இருக்கிற விசரிலையும் பெட்டையளப்பாக்கலாம் எண்ட புழுகிலையும் ஏறிப்போயிடுறது..

கிரவுண்டுக்கு போனா கிறிக்கட் எனக்கு ஒட்டாது.. அங்காலை இன்னொரு குறுப் கிளித்தட்டு இல்லா வொலிபோல் பாடிவந்தேன் இப்பிடி ஏதும் நமக்கு விளங்குறமாதிரி விளையாடிக்கொண்டிருப்பாங்கள்.. நேரபோய் அவங்களோட ஒட்டிக்கொள்ளுறது..

கிரிக்கட்டும் கிளித்தட்டும் முடிய சாதுவா மம்மல் இருட்டாகிடும்..பிறகு கோயிலடி வாசிகசாலையில் போயிருந்து மேளமடிச்சு பாட்டு பாடுறது... பாட்டுக்கு பாட்டு இசைக்குழு எண்டு வாயில வாற நிகழ்ச்சி எல்லாம் செய்யுறது.. இயக்கப்பாட்டு இடைக்காலப்பாட்டு எண்டு பலதும் வடிவேலு சொன்னதுபோல ஒரு புலோவில போகும்... கத்தி களைச்சு பொட்டையள பத்தி கதச்சு நக்கலடிச்சு முடிய பத்து பதினொரு மணியாகிடும்..

நல்ல பசி பசிக்கும்.. சந்தியில இருந்த சாப்பாட்டுக்கடை பூட்டுற நேரமாகிடும்.. கடைக்காறருக்கு தெரியும் எப்பிடியும் இந்த ரீம் சாப்பிட வருமெண்டு...

பெரிய ஒரு கொக்ககோலா போத்தில் எடுப்பம்...கடையில பூட்டுற நேரத்து மிச்சம் மீதி எல்லாம் மேசைக்கு வரும்...  எழுதாத உடன் படிக்கை போல ஒரு ரேனில எல்லாரும் பில் கட்டுவம்..

இப்பிடி வெட்டி சீன் போட்டு வீட்டு காசில வயிறு வளர்த்தபடி நாட்கள் அளிகின்றன.. சும்மா இருந்து வீட்டுக்காசிலை திண்டா உடம்பு தினவெடுக்கதான் செய்யும்.. மனக்குரங்கு அடுத்த கட்ட சந்தோசத்த தேடித்தாவும்..

நண்பனுக்கும் வவுனியாவில் இருந்து ஏலெவல் எழுதிப்போட்டு அம்மம்மாக்காறிவீட்ட வந்து நிண்ட பக்கத்து வீட்டு பெட்டைக்கும் லவ் ஆகுது..

வாசிகசாலையும் தெருவும் சந்திக்கின்றன... பெட்டை தெருவால போறது நண்பன் வாசிகசாலையில இதுக்கெண்டே வலோக்காரமா பேப்பர மணித்தியாலக் கணக்கா பாத்துக்கொண்டு இருக்கிறது..

கண்ணும் கண்ணும் கலந்து காதலாகி கதைக்க வெளிக்கிட்டு முதலில ஊருக்கு ஒளிச்சு ஒளிச்சு கதச்சு பிறகு பெட்டையின்ர அண்ணண்காறனுக்கு தெரிய பெட்டை வீட்டை விட்டு வெளிய போறது நிறுத்த படுகிறது...

காதலிய காணாத மனம் பதைபதைக்கிறது...துடி துடிக்கிறது..ஒருவேலிதான் இருவீட்டுக்கும்..காதலி பிரிவில் வாடும் மனது வேலியே கதியென கிடந்து அங்கிருந்து காதலியின் சிக்னலை பெறுகிறது..

நண்பன் வேலியே தவமெனக்கிடப்பது நண்பனின் தாய்க்கு மெதுவாக சந்தேகத்தை உண்டாக்குகிறது.. ஒருநாள் நண்பன் வேலிக்கு அருகில் நின்று தன் காதலியை பார்த்து இண்டைக்கு நீ வெளிய வந்து என்னோட எப்பிடி எண்டாலும் கதைக்காட்டி என்ர மண்டையை உடைப்பன் எண்டு சைகையால் சத்தியம் செய்ய நண்பனின் காதலியோ அண்ணா நிக்கிறான் இண்டைக்கு வரேலா எண்டு கெஞ்சி மன்றாட முடியாது எண்டு நண்பன் ஓட்டினால் தன் மண்டையை உடைத்ததை கண்டதில் இருந்து நண்பனின் தாய்க்கு விடயம் உறுதியாகியதால் அன்றிலிருந்து சிலநாட்களாக நண்பன் வீட்டில் அழுகையும் ஒப்பாரியும் தான்..

இருவீட்டிலும் பிரச்சினை கொஞ்சம் அடங்கட்டும் எண்டு இருவரும் சைகையால் பேசி உடன்பாட்டுக்கு வந்துவிட்டு இருவரும் சில மாதங்கள் நல்ல பிள்ளைகள் போல் வீடுகளுக்கு நடித்ததால் இரு வீட்டிலும் இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்கிறது...

நண்பன் பழையபடி வாசிகசாலை கோயிலடி எண்டு நம்முடன் உலாவ ஆரம்பிக்கிறான்..

நண்பனின் காதலியும் சீனிதேயிலை வாங்கவெண்டு மெதுமெதுவாக ரோட்டில் உலாவத்தொடங்குகிறார்...

இப்பொழுது ரெண்டுபேரும் ரொம்ப உசார்... நேரில் சந்திச்சு பேசிக்கொள்வதில்லை.. சீசாபோத்திலுக்க கடிதத்த வச்சு நண்பனின் காதலி எறிவா.. நண்பன் படிச்சிட்டு பதில் கடிதத்தை அதே சிசா போத்திலுக்க வச்சு எறிஞ்சுவிடுவான்..தெருவில விலத்தேக்க யாரும் காணாமல் நைசா கடிதத்த போடுறது..என்னட்ட குடுத்துவிடுறது எண்டு பல வழிகளில் கடிதம் பரிமாறி காதல் வளர்கிறது..

நிறையக்கடிதங்கள்...எங்கட வீட்டதான் எல்லாக்கடிதத்தையும் என்ர சூட்கேசு ஒண்டுக்குள்ள அடியில மறச்சு வச்சிருந்தம்..நண்பன் தன் வீட்டில் வைத்திருந்தால் தகப்பனிடம் பிடிபட்டுவிடும் எண்ட பயம்..

காலம் பறந்தோடுகிறது...

2005 களின் இறுதி மற்றும் 2006 களின் ஆரம்ப காலங்கள்...  யுத்தம் மெதுமெதுவாக நெடுந்தூக்கம் கலைத்து பசியுடன் இரைதேட புறப்படும் பாம்பொன்றைப்போல மெதுமெதுவாக ஊரெங்கும் தன் சீற்றத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நேரம்..

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.பற்றற்ற முனிவனைப்போல அது சலனமற்றுக் கடந்து கொண்டிருக்கிறது.உலகத்தில் நிகழும் எந்த நிகழ்ச்சிகளாலும் அது சலனப் படுவதில்லை.ஒருவரை விட்டு ஒருவர் பிரிய வேண்டிய கணங்களை காலம் விரைவாகச் சுமந்து வந்து கொண்டிருந்தது.யுத்தம் நிலங்களைத்துண்டாடி உயிர்களை மட்டுமா பலி எடுக்கிறது..?பல்வேறு உணர்ச்சிப்போராட்டங்களுக்கும் அல்லவா காரணமாகிறது.பலகாதலர்களைப் பிரித்துப்போட்டுச் சிரித்துப்பார்க்கிறது யுத்தம்..

தேடல்கள் கைதுகள் படுகொலைகள் காலை மாலை மதிய உணவு போல யாழ்ப்பானத்தில் மனிதர்களை வேட்டையாட... சொல்ல முடியாப்பிரச்சினைகள்.. எல்லாரும் நாட்டை விட்டு திசைக்கொன்றாய்...

நண்பனின் காதலும் கனவுபோல முடிந்து போனது தொடர்புகள் இல்லாமல்...

இந்த முறை ஊருக்கு போன போது எனது சூட்கேசில் ஒளிச்சு வச்சிருந்த நண்பனின் அந்த நாட்களின் கடிதங்களை வாசிக்க கிடைத்தது...

நண்பனின் கடிதங்களில் பல அனல் கக்கும் கவிதைவரிகள் இருந்தன..இது அதிலொன்று

"கண்கள் தீண்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது, பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலையவைப்பது"

எமது அரும்பு மீசைக்கால பல மலரும் நினைவுகளை அந்தக்கடிதங்கள் கிழறிவிட்டன...

கடிதங்கள் என்பவை காலங்கடந்து படிக்கும்போது உயிரும் உணர்வும் கலந்தவையாகவே எப்போதும்...இப்படி உயிரும் உணர்வும் கலந்த கடிதக் கதைகள் பலநூறு எம்மில் பலரிடமும் இருக்கும்..

நானும் ஊரிலை கடிதத்தை எதிர்பார்த்து தபால்காரனுக்காக ஒரு காலத்திலை காத்திருந்தவன் தான்..அப்பொழுது அப்பா வெளிநாட்டில் இருந்தார் நான் உள்ளூரிலதான் இருந்தன்..காற்சட்டை போட்டிருக்கும் வயசு..ஒரு பதினொரு பன்னிரண்டு மணியளவிலதான் எங்க ஊரு தபால்காறன் வருவார்.மூன்று வீடுதள்ளி அவர் கடிதம் கொடுக்கும்போது எழும் அவரின் சைக்கில் பெல் ஒலி கேட்டதும் நான் கேற்றுக்கை போயிடுவன்.பள்ளிக்கூடம் விடுமுறை என்றால் எங்கட வீட்டுக்கு தபால் கொடுக்க அந்தாள் பெல் அடிக்கத்தேவையில்லை..அதுக்கு அநாவசியம் இல்லாமல் நான் பத்து மணிக்கே கேற்றில போய் நிப்பன்.நல்ல மனுசன்..கடிதம் வந்துதோ வரேல்லையோ இறங்கிக் கதைத்து விட்டுத்தான் போகும். ஒரு 48/50 வயசிருக்கும். கடைசி வரைக்கும் அந்தாளின்ரை பெயரைக்கேக்க மறந்து போனன். அந்த வயசில அது எனக்கு முக்கியமாய்த்தெரியவில்லை.இப்பிடி இடம்பெயர்ந்து வந்து அந்தக்காலத்தை நினைச்சு மாய்வன் எண்டு ஆர் நினைச்சது..தபால்காற மாமா தபால்காற மாமா என்றுதான் கூப்பிடுறனான்.வெள்ளை என்வலப்பில கரையில சிவப்புக்கோடு போட்டு வந்தா உடைக்காமலே அப்பாவின் கடிதம் ஒண்டு வந்திருக்கு என்று அம்மாவிடம் சொல்லிவிடுவன்..மண்ணிற என்வலப்பு என்றால் உள்ளூர்கடிதம்.90க்கும் 95க்கும் இடைப்பட்ட காலம்,யாழ்ப்பாணம் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம். தொலைபேசி எல்லாம் எப்படி இருக்கும் என்றே தெரியாது..கடிதமும் கப்பலிலதான் வரும்..கப்பலும் மாசத்தில ஒருக்காத்தான் வரும்..மாசமும் முப்பது நாளைக்கு ஒருக்காத்தான் வரும்..அந்த முப்பது நாளும் அப்பாவின் கடிதம் பார்க்காமல் ஒரே விசராக இருக்கும்...கப்பல் வந்திட்டுது என்றால் உதயனில் தடித்த எழுத்தில் செய்தி வரும் கொழும்பில் இருந்து ஜயாயிரம் தபால் பொதிகளுடன் கப்பல் காங்கேசன் துறைக்கு வந்திருக்கு என்று..அந்தச்செய்தியைப்படித்து விட்டு ஒவ்வொரு விரலா எண்ணிக்கொண்டிருப்பம் எப்ப தபால்காற மாமா வருவார் என்று..இப்பிடியே காலம்போக அப்பாவின் குரலைக்கேக்கவேணுமெண்ட ஆசையில் ஊரில் உள்ள வெளிநாட்டுக்காரர் எல்லாம் போய் ரெலிபோன் கதைச்சிட்டு வரேக்கை கொழும்பு ஒரேஞ்சும் அப்பிளும் கொண்டு வாறதைப்பாத்திட்டு உசிரைக்கையில புடிச்சுக்கொண்டு கிளாளியால வவுனியாவுக்கு நானும் அம்மாவும் ரெலிபோன் கதைக்கப்போனது ஒரு தனி அனுபவம்..அதை எழுத வெளிக்கிட்டால் தனி பதிவு எழுதோணும்..

ஆரம்ப காலத்திலை வெளிநாட்டுக்கு வெளிக்கிட்ட ஆட்கள் சொல்லுவினம் ஒவ்வொரு முறை கடிதம் வரும் போதும் இதிலாவது கலியாணத்தைப்பற்றி ஏதாவது வரும் என்று நினைச்சுக்கொண்டு திறக்கிறது.ஆனால் கலியானத்துக்கு பதிலா காசைப்பற்றிதான் இருக்கும்... செம கடுப்பா இருக்கும் எண்டு சொல்லி பம்பலடிக்க கேட்டிருக்கிறன்...

சிலவேளைகளில் நேரடியாக கதைக்கமுடியாத விடயங்களை கடிதங்களில் இலகுவாக எழுதிவிடலாம்!

ஆனால் இப்போது யாரும் யாருக்கும் கடிதம் எழுதுவதில்லை!

இப்போது பலரும் பழைய கடிதங்களை பொக்கிஷமாகப் போகும் இடங்கள் எல்லாம் காவிக்கொண்டிருக்கக்கூடும்... சிலர் ஞாபகங்களிலும்...

இப்படி இரத்தமும் சதையுமாக இக்கடிதங்கள் எங்களின் வாழ்க்கையோட ஒருகாலத்தில் இரண்டரக்கலந்திருந்தன.. அவை வெறும் கடிதங்கள் அல்ல பேசும் உணர்வுகள்..கடிதங்களினதும் தபால்காரனதும் வாழ்க்கையை பேசும் ஒரு படம்தான் the postman சந்தர்ப்பம் இருந்தால் ஒருமுறை பாருங்கள்....