Pages

Wednesday 15 February 2012

நான் தொலைத்து விட்டவைகளின் நினைவுகளில் வாழும் மனிதன்...

சிறுவயதுகளில்
வாழ்க்கையின்
வழிகளில்
காலம் ஒரு
கவிதையாக
வழிந்தோடிக்கொண்டிருந்தது

கனவில் தோன்றும்
கவிதைவரிகளைப்போல
வாழ்தலின்
இனிமைகளைமட்டுமே
கண்களைத்திறந்தபடி
ரசித்துத் திரிந்தேன்

உடலின் ஒவ்வொரு
நுண்ணிய
அணுக்களிலும் புகுந்து
இயற்க்கை
நான் என்னும்
ஆன்மாவை
வனைந்து கொண்டிருக்க
காலமடியில்
இளமை
வழிந்தோடிக்கொண்டிருந்தது..

அணல் எறிக்கும்
புழுதி வீதிகளில்
உலாவித்திரியும்
என் பாதங்களை
பூமித்தாய்
வாஞ்சையுடன்
நீவிக் கொடுப்பாள்
அப்பொழுதெல்லாம்
பூமிக்கு நான்
பாரமாக இருப்பதாக
உணர்ந்ததில்லை...

அம்மாதரும் முத்தங்களை
வாங்கியவாறே
எதற்க்கிந்த வாழ்தலென்ற
புரிதல் இல்லாவிட்டாலும்
நிறைவாக
அறிதல் குறித்த தீராப்பசியுடன்
நான் வளர்ந்து கொண்டிருந்தேன்..

என் பால்யகாலங்கள்
மெதுமெதுவாக
ஒரு கவிதையாக
வளர்ந்து கொண்டிருந்தன..
எப்பொழுதுமே
கடைசி வரியை
எழுத விரும்பாத
அந்தக் கவிதைக்கு
காலம் எப்பொழுதோ
முற்றுப்புள்ளியை
வைத்துவிட்டது என்பதை
என் கன்னத்தில் அரும்பிய
மீசைகள்தான் நினைவுபடுத்தின..

முகத்தில் அரும்பியிருக்கும்
மீசை முடிகளைத்
தடவிவிட்டவாறே
திரும்பிப்பார்க்கிறேன்..
இறந்த காலங்கள்
நினைவுகளின்
ஏதோ ஒரு மூலையின்
நிறுத்தத்தில் இருந்தபடி
கண்சிமிட்டிக் கொண்டிருக்கின்றன...

இழந்துவிட்டவைகளை
மீட்டிப்பார்த்து
இதயம்
வலியுடன் கதறினாலும்
இரக்கமே
இல்லாதவனைப்போலக்
காலம் என்னை
இன்னமும் வேகமாக
இழுத்துக்கொண்டுபோகிறது

உதிர்ந்து விழுந்த
உலர்ந்த
இதழ்களைப்போல
வாழ்க்கை
இப்பொழுதெல்லாம்
வறண்ட நிலத்தில்க்
கிடைத்த
என் சிறுவயதுப்
பசுமைகளைத்
தொலைத்து விட்டுக்
குளிர் நாட்டிலும்
வெறுமையாகக் கிடக்கிறது

என் இளயதுகளை
இழந்து விட்டு
சுதந்திரமாகச் சிறகடித்த
ஏதோ ஒரு பறவையின்
சிறகுகளில் இருந்து
தவறி விழுந்த
இறகாகத்
தனிமையை உணர்கிறேன்..

காலம் என் தோழ்களில்
வாழ்க்கைச் சிலுவையை
இறக்கி வைத்திருக்கிறது
இப்பொழுதெல்லாம்
வலிகளின் அழுத்தங்களில்
தலை நசுங்கிப்போகிறது
எனதான்மா..

வாழ்க்கைப் போராட்டங்களே
இப்பொழுது
இருத்தலைத்
தீர்மானிப்பவையாக
மாறிப்போயிருக்கின்றன
வெற்றிகளுக்கும்
தோல்விகளுக்கும்
இடையில்
நிம்மதியைத்
தொலைத்துவிட்டு
விடாது ஓடிக்கொண்டிருக்க
வேண்டியதாகிவிட்டிருக்கிறது..

ஆயினும்
எல்லாவற்றையும் மீறி
அடிக்கடி மனம்
வெகு இயல்பாய்
என் பால்யகாலங்களை
நோக்கிப் பறந்து கொண்டேயிருக்கிறது..

என் ஊரின்
மழைப்பாடல்களும்
மெல்லிய அதிகாலையின்
குயில்ச் சங்கீதங்களும்
செவிக்குள் இன்னமும்
ரீங்காரமிட்டுக்கொண்டேயிருக்கின்றன..

தாலாட்ட யாருமற்ற
பின்னிரவுகளில்
என் அம்மாதந்த
முத்தத்தின் ஈரங்கள்
கனவுகளில் பிசுபிசுக்கின்றன..

நான் பிடித்துவிட்ட
பட்டாம்பூச்சிகள்
இன்னமும்
சிறகடித்துக் கொண்டிருக்கின்றன..
என் நினைவுகளின்
எச்சங்களில்

காலத்தை ஏய்த்துவிட்டு
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
நினைவுகளில்
இன்னமும் குழந்தையாக...

7 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான படைப்பு
உணர்வுகளும் வார்த்தைகளும்
மாட்டு வண்டியின் இரட்டைக் காளைகள் போல்
கருவை இழுத்துச் செல்லும் விதம் அருமை
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

சுபேஸ் said...

நன்றிகள் ரமணி விமர்சனத்திற்க்கு..

நிலாமதி said...

மிகவும் அருமை . அசை போடும் நினைவுகள் . தீராத நதி தாகமுடன் ஓடிகொண்டே இருக்கவேணும் வாழ்த்துக்கள்

Learn said...

ரொம்ப நல்லா இருக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

சுபேஸ் said...

நன்றி நிலா அக்கா மற்றும் தமிழ்த்தோட்டம் கருத்துக்களுக்கு...

சசிகலா said...

அம்மாதரும் முத்தங்களை
வாங்கியவாறே
எதற்க்கிந்த வாழ்தலென்ற
புரிதல் இல்லாவிட்டாலும்
நிறைவாக
அறிதல் குறித்த தீராப்பசியுடன்
நான் வளர்ந்து கொண்டிருந்தேன்..
அருமையான வரிகள் குழந்தையாய் வாழ குடுத்து வைத்திருக்க வேண்டுமே .

சுபேஸ் said...

நன்றி sasikala அக்கா

Post a Comment