Pages

Friday 29 January 2016

காட்டுப்பூவாயினும்
தடவித் தடவி
தன் பிரியத்தை உரைக்கிறது
காற்று...

அணிலொன்றின் வருகையில்
மலர்கிறது மரம்..

துளித்துளியாய் பொழிகிறது
வானம்
காற்றுடன் கைகொட்டி ரசிக்கிறது
வனம்...

நிலவு அணைக்கிறது
நதிகள் பூமியை நனைக்கின்றன
மூங்கில்கள்
இன்னமும் இசைக்கின்றன..

யார் சொன்னார் அன்பற்றது
இவ்வுலகென்று.. <3
வீடுகள் உறங்கிய தெருக்களின் இருக்கைகளில் மீதமாய்
இருக்கிறது காதலர்கள் விட்டுச்சென்ற முத்தங்கள்
இரவின் இசையை காதலுடன் மீட்டுகின்றன
மரங்கள்
வானத்தைக் காட்டிலும் பரிசுத்த நிர்வாணமாய் இருக்கிறது இந்த இரவு
என் கனவை தொட்டுணரும் பட்டாம் பூச்சியே
உன்னைக்கனவுற்றபடி அசையாத இரவின் போதையில் மிதக்கிறேன்

உன் கனவுகளின் வண்ணங்களிலும் தோய்ந்துகிடப்பது
பாதி ஒளிந்துள்ள நிலவைப்போல
பரிதவிப்பது
வசந்தமாய்ப் பூப்பது
வாழ்வின் கணங்களை ரசிப்பது
பின் அதனுள் உருகிக்கிடப்பது
காதல் அல்லவா.

ஓய்வற்ற வாழ்வென்பது சலிப்புற்று
நீண்டுகிடக்கும் நெடு வானம்
அதை நீந்திக் கடந்திட ஓடும் ஒற்றை மேகம் நான்
வாழ்வை நிறுத்திவைத்து நனைக்கவரும் மழைமேகம் நீ
என் பெருமூச்சின் தீப்பிழம்பை
கண்ணாடியில் படியும் சுவாசத்தைப்போல
நீ மூடி அணைக்கிறாய்
என் தூக்கங்களுக்கெல்லாம் உன் பாடலை தலயணையாக்குகிறாய்
துயரறியா வீட்டில் பரவும் நேசம் நான்
காதல் நிரம்பிய காற்றை தழுவும் ரோஜாச்செடி நீ..

பறவைகளின் குரலிசைப்பொழிவில்தான் உனக்கான என் பாடலும் ஒளிந்திருக்கிறது
தேடிக்கண்டடையும் தீராத்தாகத்தோடு நீ வருகிறாய்
இறகிலும் இலேசான உன் விழிகளின் வருடலினால்
எனை பரசவத்திற்குள் நகர்த்துகிறாய்
இனி யுகத்துக்குமாய் நான் தனிமையுறமாட்டேன்..

ஓ..என் தோழியே..
நேசிப்பதென்பதும்
நேசிக்கப்படுவதென்பதும்
காதல் ததும்பும் ஓர் கவிதையைப்போல
எத்துணை இனிமையானது..

மரித்துப்போகாத மீட்பர்கள்.. ---

தனித்த பயணத்தின் நெடுவழியில்
தொலைந்துபோகமுடியாமல்
அவர்கள் திரும்பி வந்திருக்கிறார்கள்..

அவர் பயண நெடுகிலும்
பூக்களை சொரிந்த
கரங்களும்
அவர் சுவடுகள் அறிந்தபோது
தடங்களை பாடிய மனிதர்களும்
பார்க்க விரும்பா திசையொன்றிலிருந்து
அவர்கள் திரும்பி வந்திருக்கிறார்கள்..

வெறிச்சோடிய அவர் தெருக்களில்
நெருப்பை அள்ளிக்கொண்டலைகிறது
காலம்..
எறிந்துகொண்டிருக்கிறார்கள்
திசைகளின் மீது தம் துயரை
மீதமிருக்கும் வாழ்வும்
ஒவ்வொரு சொல்லாக
வற்றிப்போகிறது..

மரணத்தின் கரைகைள் முடிவின்றி நீண்ட
காலமொன்றில்
கண்ணீர் பெருகி ஓடிய தடயங்களில்
ஏதோ ஒன்றில்
அவர் பயணத்தின் எச்சமும்
மிச்சமிருக்கக்கூடும்

ஊர் எரித்த சிதைகளிலிருந்து
உயிர்த்து நடந்தது அவர் நெடும்பயணம்
வாலிபத்தின் பெரும்பொழுதுகள்
அவ்வழி நீளக்கடந்த காலங்களோடே
தேய்ந்தழிந்தன

மீதமிருக்கும் நாட்களோடு
ஓரமாய் ஒரு இருப்பு
கூனிக் குறுகிக் குனிந்து
காணச்சகியாத வாழ்வொன்று
கடந்து வந்த தெருக்களில்
சிந்திய உதிரத்தின் வாடையோடு

கருணையற்ற வெளியொன்றின் நடுவே
தாகம் வாட்டிய மனிதர்களின்
கொடுந்துயரை ஏந்தி அவர்கள் நடந்தார்கள்

தெருக்களில் உறைந்த கண்ணீரை
நதிகளில் மிதந்த துயரை
வனங்களில் அலைந்த தேம்பல்களை
தனித்தே தோள்களில் சுமந்தார்கள்..

தமக்காய் பாடமறுக்கும் மனிதர்களின் சிலுவையையும்
முட்கள் போர்த்திய விரிப்புகளின் மேல்
முன்னொரு பொழுது விரும்பியே சுமந்தார்கள்..

இப்போ
திரும்பி வருவார்கள் என
யாரும் நினைத்திருக்கவே முடியாத்
திசை ஒன்றில் இருந்து
அவர்கள் திரும்பிவந்திருக்கிறார்கள்

தெருக்களில் வதைபடும்
தம் துயரை சுமக்கக்கூடுமென
நம்பிய பலரும்
தெருவுக்கு வரவேயில்லை..

காற்றின் குரலும்
கடலின் கண்ணீரும்
முடிந்துபோகிறது..

கையறு நிலையின் காலமொன்றில்
கடைசித்துளி கண்ணீரும் காய்ந்தபின்பு
வெள்ளிகள் வற்றிய வனத்திடையே
தனித்து நிற்கிறார்கள்..

எல்லாத்திசைகளும் சுடுகின்ற தெருவில்
எந்தத்திசையில் இனி அவர் நடப்பார்..?

#மீள் #தேர்தல் :(

துயர்க்கதை...

பசியாறி அறிந்திராக் கடலொன்றின்
ஆழத்தோடு சூழ்ந்தது துயரம்..
எறும்புகளின் புற்றின் மேல்
வெறுப்புடனும் வன்மத்துடனும்
பொழிந்தது அமிலமழை..
கொடுக்குடன் போராடின
எளிய எறும்புகள்..
கூடி எதிர்த்தன
கொடுமையின் பிரதிகள்..

போர் காலப்புழுதியாய் விரட்ட
கொட்டியது தணற்சாம்பல்..
ஓலச்சட்டையை அணிந்தன
ஊர்கள்..
தெருக்களை எரித்தது கொடிய
பசிவெயில்..
தீரா வஞ்சத்தோடு
எழுந்து கருக்கொண்டு
ஒளியை விழுங்கி
இருளைப்பரவி
முளைத்துப் புடைத்து
வீங்கிப் பருத்தது விதிரேகை..

கடைசி எறும்பும்
குத்திய கொடுக்கோடு
வீழ்ந்து மடிய
வீரம் புதைந்தது காட்டில்
விதையாய் போன
எறும்புகளுக்காய்
முள்ளாய்க் கனத்தது
வரலாறு..

இரவும் அழிய பகழும் அழிய
ஓடிக்களைத்த இரத்த ஆறு
காய்ந்து கறுத்து
காலவடுவாய்
வாழ்வு நெடுகிலும்..

தடங்களில் ஒழிந்திருக்கிறது
பயணங்களின் கதைகள்..
செரிக்கையில் முள்ளாய்
நினைக்கையில் நீறாய்
வார்த்தைகள் முடிவில்லா வானத்தில்
மோதித்திரும்பிட துடிக்கும் பந்தாய்
முடிந்தது பிரளயகாலம்..
முடியாமல் நீள்கிறது
காலங்களின் பேரடுக்கில்
சீழ்பிடித்த புண்ணாய்
துயரம்..

தெருப்படலை திறந்தே இருக்க
போர்ப்புரவி கிளறிய புழுதிக்காட்டில்
தொலைந்தும் தொலைத்தும்
தொலைக்கப்பட்டும்
திரும்பிவராதவருக்காய்
காத்திருந்த கண்கள் தூர
காய்ந்து உப்பாய்ப்போனது
காலக் கிழவியின் கண்ணீர்..

துயர நிலவின் ஒளியில்
நிலமும் நீரும் கலங்கி அழ
காற்றும் வானும்
காலம் புதைத்த
எறும்புகளின்
கண்ணீராய் ஒலிக்கிறது..

இரத்தமும் சதையும் சூழ
முற்றுறாத கதையில்
நீதி
எறும்புகளின்
நூற்றாண்டு அழுகை வாங்கி
முள்ளடர்ந்து மண்டிய
தோலாசனத்தின் மேல்..
மெளனம் ஒரு கடன் காறனைப்போல சொற்களை சேகரிக்க
கவிதைகளை உதிர்த்தபடி மஞ்சல் இலைகள் வீழ்கின்றன...
பூமி வீழ்ந்த பூக்களினால் மணக்கிறது..
கிளைகளில் முடிந்துபோன வசந்த காலங்களை
உதிர்ந்த இலைகள் உக்கிப்போன நரம்பிகளிலிருந்து ஒழுகும் மழைத்துளிகளில் ஒவ்வொன்றாய் மீட்ட
ஏகாந்த வனத்தில் யுகங்கள் அலைகின்றன...
நினைவுகளை விழுங்கியும் செரிக்கமுடியாமல்
விரைகிறது காலம் தன் வழியில்...
நீண்ட வானில் எவருமற்று இருளுக்குள் கரையும்
ஆட்காட்டிக் குருவியின் குரலைப் போன்று இத்தனிமை...
ஏந்திச் செல்லவியலாது அத்துனை சோகத்தையும்
கரைத்துவிடும் எத்தனத்துடன் பகலும் இரவும்...
தங்கிவிடுகின்ற தவிப்புடன் தேய்கிறது மாலைகள்...
மெளனக்குளத்தை பாசிபிடித்த நினைவுகள் காலிடறிக்கலைக்க
தரையுமின்றிக் கடலுமின்றி அலையும்
கடல்மணலில் புதையுன்ட படகுபோல்
மரணத்திற்கும் வாழ்தலிற்கும் இடையில்
துருப்பிடித்துக்கிடக்கிறது இலையுதிர் காலம்...
வாழ்வு ஓர் பனிமலையாய் கரைந்து தீர்கிறது...
எல்லோர்க்குமாய் ஒழுகும் வானத்தின் கீழ்
மழை இப்பொழுதெல்லாம் குழந்தைகளை மட்டுமே நனைப்பதாய்க் காண்கிறேன்...