Pages

Sunday 26 December 2010

உணர்வடங்கும் நினைவுகள்

ஆழிப்பேரலையே - எங்கள் 
ஆன்மாக்களை புரட்டிப்போட்ட சுனாமியே 
ஆசியாவையே அழித்தொழித்து 
அகிலத்தையே அதிரவைத்த 
ஊளித்தாண்டவமே 
ஆண்டுகள் ஆயிரமானாலும் 
ஆறுதல் கோடிகள் சொன்னாலும் 
அடங்குமோ எங்கள் மனத்துயர்?
அணையுமோ எங்கள் துயர் நெருப்பு?
நினைவுகளை அழிக்கமுடியாமல் 
நித்தமும் கலங்கி நிற்கிறோமே....

மரங்களை அடுக்குவது போல் 
பிணங்களை அடுக்கிவைத்த காட்சிகள் 
மனக்கண்களில் விரிகிறதே - உடல்
அணுக்கள் அனைத்தையும் உலுப்புகிறதே
இறுதிக்கடன் செய்வதற்குகூட 
இனசனத்தை விட்டுவைக்காமல்
குடும்பத்தோடும் குடியிருப்புக்களோடும்
கூடிவாழ்ந்த ஊரோடும் 
உற்றார் உறவினரோடும் 
கொத்தொடும் குலையோடும் 
மொத்தமாகக்கொன்றொழித்த
உன் கொடுமைதனை 
கோரத்தாண்டவத்தை
எண்ணுகையில் 
உள்ளம் வெடித்தெங்கள்
உணர்வடங்கிப்போகிறதே........

கட்டிப்பிடித்த குழந்தைகள் 
கைநழுவிப்போகையிலும்
தொட்டு தாலிகட்டிய மனைவி - கை 
எட்டும் தொலைவிலே துடிதுடித்து மூழ்கையிலும் 
பெற்றெடுத்த அன்னையை - கண்முன்னே
கடல் கொண்டு போகையிலும்
காப்பாற்ற முடியாமல் 
இயலாமையில் துடிதுடிக்கையிலும்
அத்தனை பேரையும் இரக்கமின்றி 
உன் கொலைக்கரத்தால் வெட்டிச்சாய்த்துவிட்டு
இன்றெமக்கு வெறுமையை மட்டும் தந்ததேனோ?

அமைதியாய் இருந்தாய்
கடல்தாயே! ஆர் நினைத்தோம் 
நீ வந்து எங்கள் ஆவி பறிப்பாய் என்று?
பொறுமையாய் இருந்தாய் 
கடலம்மா! ஆர் நினைத்தோம் 
நீ வந்து பொல்லாத சுனாமியாய் கொல்வாய் என்று?  
பசிக்கு உணவு தந்தாய் 
கடல்தாயே! ஆர் நினைத்தோம் 
நீ வந்து உன் பசியை தீர்ப்பாய் என்று?

எங்களை அழிப்பதற்கு கடல்தாயே 
ஏன் இந்த வடிவெடுத்தாய்?
என்ன கொடுமை செய்தோம் நாம்? 
ஏன் இந்தக்கோலம் கொண்டாய்?
கொடுமை பல செய்த கொடியவர்கள் - உலகில்
இன்னமும் கொட்டமடிக்கையில் 
வஞ்சமேதறியா பிஞ்சுகளும்
உனக்கு வஞ்சகராய் தோன்றினாரோ?
கொஞ்சமும் இரக்கமின்றி
கொன்றொளித்த கொடுமையை - எண்ணி
ஆண்டுகள் ஆறு ஆனாலும் - இந்த
அகிலமே கலங்கி நிற்கிறது 
மீளவே முடியாத பெரும்
மாளாத்துயருடன்.................