Pages

Monday 17 January 2011

காத்திருக்கும் இதயம்....

கனவுகள் பூத்த இரவுகள் எல்லாம் - உன்
நினைவுகளால் வேகுகின்றன
இதயம் துடிக்கும் ஓசைகள் எல்லாம் - எனக்கு மட்டும்
ஒப்பாரிச்சத்தங்களாகின்றன - உன்
நினைவு பூத்த வெம்மை நிலப்பரப்பாய்
என் உள்ளம் தகிக்கிறது
அசைவற்ற வெறு வெளியில்
நினைவற்ற ஜடம்போல - என்
மனவறையின் சுவர்களில்
வெறுமைகளே நிறைந்து கிடக்கின்றன
உன் நினைவு சுமந்த
என் இதயம்
கனத்துப்போன இரும்பாக
மரத்துப்போய்க்கிடக்கின்றது
என் பாலைவனத்தின் வெண்மணலில்
நீர் வார்க்கும் ஊற்றாக
நீ வரும் நாள்பார்த்து - உன்
நினைவுகள் சுமந்து - ஒற்றைக்கால்
தவமியற்றும் பற்றற்ற கொக்காக
உனக்காக
உனக்கேயாக - இன்னும்
உயிர் சுமக்கிறேன் - இந்த
உணர்வற்ற உடலில்....

Thursday 6 January 2011

எனக்கொரு வரமருள் பராபரமே....

புழுதி எழும் ஊரின்
புண்பட்ட வீதிகளில்
விழுது விட்ட ஆலமரத்தின்
பழுது பட்ட திண்ணையில்
தொழுது எழும் கோயிலின்
அழகு மிகு தேரடியில்
உழுது நாற்று நடும்
ஊரின் வயல் வரப்பில்
பொழுது விழும் நேரம்
களித்து மகிழ்ந்து நாங்கள்
கால்பந்து விளையாடும்
கல்லூரித்திடலில்
ஒழுகும் வழி சொன்ன
பள்ளியின் வகுப்பறையில்
ஆழ வேரெடுத்து
அழகாய் கிளைபரப்பி
நீள நெடுத்து நிற்கும்
முற்றத்து மாநிழலில்
வீழமாட்டேனென-திணவெடுத்து
சோளக்காற்றிடையும்
வாழ நிமிர்ந்து நிற்கும்-தென்னஞ்
சோலை மர நிழலில்
வாழ வழி பல தந்து
வளமும் தந்து-எம்
நீள நெடும் பரம்பரையின்
வரலாறு தந்த
வீரம் படுத்துறங்கும்
விடுதலைத்திருநாட்டில்
என் வாழும் நாட்களில்-இன்னும்
வாழும் நாட்களை
காலன் சிங்களவன்
கவர்ந்து கொண்டு போகாமல்
வாழ்ந்து களித்திட எனக்கொரு வரமருள்
பராபரமே! 

Monday 3 January 2011

வெறுமை வாழ்க்கை

கவலை பாதி 
காமம் பாதி 
காலம் மீதி 
என்று முற்றும் 
எரித்த பின் 
மரித்தவன் உடலில் 
இந்த மயான நெருப்பு 
என்னத்தை எரிக்கும்

Sunday 2 January 2011

வருக புத்தாண்டே....

வரும் புத்தாண்டே 
வசந்தங்களோடு 
வாழ்த்துக்களையும் சுமந்துவரும்-உன் 
வரக்கரங்கள் 
தாய்மொழியை மறந்து 
தன்மானம் இழந்து 
வரலாற்றைத்தொலைத்து 
வளைந்து போன எம் மக்களின் 
கூன் விழுந்த முதுகுகளை 
நிமிர்த்திப்போடட்டும் 

சந்திகளில் நின்று 
சதிராட்டம் போடும் 
எங்கள் இளைஞர்களின்
மூளைகளில் 
தன்மானச்சுடரெழுப்பும் 
தாய்நிலப்பற்றமைக்கும்
அக்கினி விதைகளை 
அள்ளித்தூவி-அந்த 
உக்கிர வெம்மையிலே
உன்கரங்கள் 
உலகைப்புடம்போடட்டும்    

கஞ்சிக்காய் கையேந்தும் 
ஏழைகளின் கரம்பற்றி 
அஞ்சக என்றழைத்து 
அவர்களுக்கோர் வழியமைத்து 
உன்கரங்கள் 
வஞ்சனையற்ற அவர் 
வயிறுகளில் சிறிதமிழ்தத்தை 
வார்த்துச்செல்லட்டும்  

உறவுகளின் நல்வாழ்விற்காய் 
பிள்ளைகளின் சந்தோசத்திற்காய் 
சகோதரர்களின் முன்னேற்றத்திற்காய்
தம்மையே வருத்தி 
தணலிலே உருக்கி 
உடலையே முதலாக்கி 
உழைக்கும் ஏழைகளின் 
துன்பச்சுமைகளை 
உன்கரங்கள் கொஞ்சம் 
துடைத்துப்போடட்டும்-அவர் 
பாதைகளில் தலைகாட்டும் 
முட்களின் முனைகளை 
உன்கரங்கள் 
முறித்துபோடட்டும்

எண்ணத்தில் இனிமை கூட்டி 
கண்களில் கவிதை தேக்கி 
இதயத்தில் ஆவல் கூட்டி 
எதிர்காலக்கனவுகள் சுமந்து 
ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறோம் 
புத்தாண்டே... 
உன்கரங்களின் குளிர்விப்பில் 
உலகமெல்லாம் அன்பு பரவி
உயிர்களெல்லாம் நிறையட்டும்...