Pages

Wednesday 15 October 2014

மாலைப்பொழுதும்..வண்ணாத்திப்பூச்சிகளும்..கவிதைகள் நிறைந்த தேனீரும்...சில நினைவுகளும்...

1)
1452280_10151797772029891_714711805_n.jp

மாலைப்பொழுதும்..

வண்ணாத்திப்பூச்சிகளும்..

கவிதைகள் நிறைந்த தேனீரும்...

சில நினைவுகளும்...

நேற்றை பற்றிய கேள்விகள் இல்லை..

நாளை பற்றிய ஆதங்கமும் இல்லை..

வாழ்தல் நிறைந்திருக்கிறது

கனவுகளின் கிண்ணத்தில்...

02/11/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

2)
1453421_10151805001519891_1551760862_n.j

நள்ளிரவு தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கின்றன
நாலைந்து பேருந்துகளும் நம் காதல் நினைவுகளும்...

வெளியே...
மெல்லிய இந்த இரவை அணைத்தபடி 
புல்லின் நுனியில் பூத்த பனிமலர்கள் சிலிர்க்கின்றன...

தாகத்துடன்
குளிர்காலத்தின் கடைசி இலையையும் உதிர்ப்பதற்க்காய் 

காத்திருக்கின்றன ஓர்க் மரங்கள்...

கோடை இன்னும் துலங்கவில்லை...

ஆயினும்..

உள்ளே..
பின்னிரவில் சாளரங்களை ஈரமாக்கும் பனிக்காற்றை
ஆவியாக்குகிறது நம் மூச்சின் வெம்மை...

நள்ளிரவிலும்
நமைக்கண்டு நாணிப்போலும்
மேகங்களைப் போர்க்கத்தொடங்குகின்றன
வெட்கத்துடன நட்ச்சத்திரங்கள்.....

இனியென்ன..
தூங்கிக்கிடக்கும் என் வாலிபங்கள் மீது
துப்பட்டாவாய் உன் வதனங்கள் படரட்டும்...

உன்னையும் என்னையும் சேர்த்த
காதல் வெளியில் பூக்களாய் நம் முத்தங்கள் சொரியட்டும்...

வா..

இந்த இரவின் ஒவ்வொரு நாழிகையிலும்
உன் பெயரையும் என் பெயரையும் எழுதிவைப்போம்...

05/11/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

3)10475516_10152246547864891_6790422822541
துயர்தீராத வெளியில்
என் குரல் அமிழ்ந்துபோகாமல்
தாங்கிச்செல்லும் வண்ணாத்துப்பூச்சி நீ...

என் இரவுப்பாடலின்
சுவடுகள் வழி பாயும் நதி நீ......

என்னிடம் பேசாமலே கிடக்கும்
சொற்களின் தீராத்தாகம் நீ...

என் மெளனத்தின் சுவர்களில்
நேசத்தின் நிறத்தோடு படரும் கவிதை நீ....

நினைவுகள் எழுந்தாடும் பழையதன் தடத்தில்
தட தடக்கும் ரயில் நீ...

எல்லாத்திசைவழியும்
எனை நிறைக்கும் காலத்தின் வெளி நீ...

பகலோடு இரவும் பனிதீரா நகரத்தில்
அன்பும் பாடலும் காற்றாக இசைய
அழகு சிலிர்த்தெழும் இரவுக்கோலத்தில்
நினைவுகளின் வழியாக
நிறுத்தி வைத்திருக்காய்
உனதிருப்பை என்னிடம்...

உன் பெயர் சொல்லி மலரும்
என் இதயத்திடம்
இனித் தீர்வதாயில்லை
பிரியங்களில் சிந்திக்கிடக்கும்
கவிதைப்பக்கங்கள்
...

13/06/2014
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

4)
10290635_10152136961584891_1955618353759
தனித்தலையும் ஒரு
பறவையைப்போல நான்
என் இருப்பின்
வேர்களாய் 
உன் ஞாபகங்கள்

விலகிப் போன பின்னும்
விட்டுப் பிரியா
துயரத்தின் வாசத்தில்
ஒட்டியிருக்கிறது
நம் ஆதிக்காதல்

நியாபகச்சூட்டிடமிருந்து
ஒளிந்து கொள்வது
அத்தனை சுலபமில்லையெனும் போது
உன் பிரிவின் கூரலகால்
கிழிகிறது என் இதயம்

காத்திருப்பின் ஆடை சுமந்து
நீயும் நானும்
அமர்ந்துபேசும்
மஞ்சல் நிறபூக்கள் உதிர்ந்துகிடக்கும்
யாருமற்ற இருக்கைகளிடம் கேள்..

அவை
உன்னிடம் கொடுப்பதற்காக
மழை நேர தேனீர்போல
எப்போதும் என்னிடம் இருக்கும்
எல்லையற்று நீண்ட அன்பையும்
ஆகாயத்தையும்
சொல்ல சில கதைகளையும்
முடிந்துவிட்ட பிரியத்தின்
கடைசி சொட்டில்
அடைகாத்து வைத்திருக்கும்...

நமக்கான பயணங்களில்
இசையொழுகிய தருணங்களை
லயித்தபடி
மழைக்காற்றின் ஈரம்போல
நான் சுமந்திருப்பேன் காதலை
மழையை
முற்றும் உறிஞ்சிய நிலம்போல
நீ வெடித்துக்கிட
அன்பின் வறட்சியில்...

20/02/2014
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

5)
1460129_10151817838499891_1596988061_n.j

முன்பெல்லாம் அவர்களுக்கு ஓவியங்களாய் வனையப்பட்டிருந்தது காலம்....

பின் ஒரு பெருங்கோடையில் எல்லாமே வற்றிப்போனபோது 
மரங்களற்ற வெயில்க்காட்டில் தனித்தார்கள் அவர்கள்.. 

பறக்கத் துடிக்கும் சிறகற்ற பறவை ஒன்றின் இயலாமையுடன் முடங்கிப்போனது வாழ்வு...

நிறைவின் வசீகரமும் குதூகலமுமாய் துலங்கிய நாட்கள் தொலைந்தன..

வாழ்வு வெளியை மூடிக்கவிழ்ந்த இலையுதிர்காலம் முழுவதையும்
நிறைத்தன வலிகள்..

இலைகள் உதிர்த்த சூனியத்தின் தனிமையுடன்
பொழுது புலர்வதும் சாய்வதுமாயானது நாட்களுக்கு..

கனவுகளற்ற நெடுந்தூக்கத்தில் உறைந்துபோனது வாழ்வு...

பின்...

சுய நலம் மிகுந்த கோடை ஒன்றில்
அட்டூழியம் செய்த பெரும் இடியில்
எஞ்சிய வாழ்வும் சிலுவையில் அறையப்பட்டது..

யாரும் கண்டுணராதபடிக்கு
புன்னகையால் வலிந்து இழைக்கப்பட்ட திரைகளின் பின்
புதைக்கப்பட்டது நீதி....

காலமோ விரட்டும்...

எனினும் நீதிக்காய்..

அச்சிறு இதயங்களின் கண்ணீரை உறிஞ்சி..
அவர்களின் இருள்விலகாத விழிகள் வாங்கி..
பெருமரங்களின் ஆழ ஓடிய வேர்கள் ஊடாக
மலைமுகடுகளின் பொறுமையுடன் காத்திருக்கிறது....

ஒரு இன அழிப்பின் துயர்க்கதை...

09/09/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

6)


கண்ணீரை உடைத்துக்கொண்டு மெளனம் வெளியேறுகிறது...
இரவில் தொடங்கி இரவில் முடிந்த நாட்களைப்பற்றிப்பேச...
இழப்பையும் துயரத்தையும் எங்கு குவிப்பது என்று தெரியாமல்
விக்கித்திருக்கும் சனங்களைப்பற்றிப்பேச...
முகத்திலும் மார்பிலும் வண்ணங்களைத் தீட்டிக்கொண்டு 
வெட்டரிவாளுடன் சூழ்ந்த மானுடத்தின் சிறுமைபற்றிப்பேச...
ஆட்காட்டிகள் தொலைந்த வயலோரங்களைப்பற்றிப்பேச..
தலைமுறைகள் தொலைந்த வீடுகளைப்பற்றிப்பேச...
கடவுளர்களும் பிசாசுகளும் இணைந்து செய்த 
இனப்படுகொலையைப்பற்றிப்பேச...
கண்ணீரை உடைத்துக்கொண்டு மெளனம் வெளியேறுகிறது...
கவிதைகளாய்...
02/11/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

7)

















உன் காதலோடு இருந்த கணமொன்றில் உதிர்ந்த 
கண்ணீர்த் துளியின் ஸ்பரிசங்கள் உறைந்த கன்னங்கள்....
உன் நினைவுகளால் நிறைந்த இதயம்... 
உதடுகளை அழுத்தும் என்றோ ஒருநாள் நீ கொடுத்த முத்தங்களின் 
ஈரம் ....
என்று 
வாழ்தல் முழுதும் நிறைந்து கிடக்கின்றன 
உதிர்ந்து போன நம் காதல் கணங்கள்...
காயங்கள் தாங்கிய பிறை நிலாவுடன் 
கடந்து செல்கிறது உன் அருகற்ற இன்னுமொரு நீள இரவு....

31/10/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

8)
நாசித்துவாரங்களை நனைத்த 
மரணத்தின்வாசனை இன்னும் நீங்கவில்லை...
காவுகொடுத்த குட்டித்தீவு 
காய்ந்து கிடக்கிறது 
குருதிச்சுவடுகள் அழிக்கப்பட்டு...
வெறிகொண்ட காற்றை சாடுவதற்கு 
நட்பின் வாசத்தை தம் வேரிலும்
துயரத்தின் கதையை தம் ஆன்மாவிலும் 
சுமந்து நிற்கின்றன சிறுமரங்கள்..
நண்பர்கள்
கேள்விகள் அற்று 
பெருந்தெருவில் சுடப்பட்ட வண்ணாத்துப்பூச்சிகள்...
31/10/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

9)
1424461_10151823820824891_1120948777_n.j

விழித்துக்கிடக்கும் இரவுப்பொழுதுகளில் நினைவுகளின் சாளரங்களூடு புகுந்துவிடுகின்றன நம்காதல் ஞாபகங்கள்...

உயிர் உயிர் உயிர்க்க எத்தனை தடவைகள் காதல் செய்திருப்போம்....

உன்னுடன் சேர்ந்து நடந்த வீதிகள் சுமந்திருக்கின்றன நீயும் நானும் பேசிய நூறாயிரம் கதைகளை....

ஏந்த யாருமற்று கன்னங்களை தாண்டி உதிர்ந்து விழும் கண்ணீரை எடுத்துசெல்கிறது காற்று....

மழைபொழியாமலே நீர்கசியும் இரவுகளில் கன்னங்களில் பிசுபிசுக்கின்றன முன்னர் நீ கொடுத்த முத்தத்தின் ஈரங்கள்...

அறைமுழுவதும் பெருமூச்சையும் விசும்பல்களையும் உண்டு பசியாறிக்கிடக்கிறது தனிமை....

கண்ணீரும் கவிதைகளும் அடிக்கடி ஒன்று கலக்கும் மை கரைந்த காகிதத்தாள்களில் சிந்தி இருக்கின்றன உன் பிரிவின் வலிகள்...

எல்லாமே கடந்து சென்ற பின்னாலும் மனதை நிறைக்கின்றது எனக்காய் நீ தந்த இறுதிப்புன்னகையின் ஓலம்...

மழைவிட்டும் காற்றுடன் எஞ்சியிருக்கும் ஈரலிப்பாய் வாழ்க்கை முழுதும் ஓட்டிக்கிடக்கின்றன கடந்துபோன காதலின் வாசனைகள்...

வெளியெங்கும் பரவிக்கிடங்கும் நீ சிந்திய முத்தங்களுடன்
கலைய மறுத்துத் தொடர்கின்றன எப்போதும் உன் நினைவுகள்...

12/11/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

10)
1383800_10151829466994891_829389266_n.jp


ஆவியாகி இன்னமும் பொழிவதற்காய் சிலிர்த்துக்கொண்டே இருக்கும்
ஒரு மாலைப்பொழுது எமை நனைத்த மழைத்துளிகள்..

காதலுடன் உன்னையும் என்னையும் நனைத்த அப்பெரு மழையை
ஈரம் சொட்டச்சொட்ட வாழ்த்திப்பாடிக்கொண்டிருந்தன பெயர் தெரியாத சில பறவைகள்..

இமைகளை மூடி வழிந்த மழை நீரை ஒதுக்கக்கூட
இணைந்திருந்த கரங்களைப்பிரிக்க மனமின்றி நெடுந்தூரம் நடந்தோம்...

மழைத்துளிகளை சிந்திக்கொண்டிருந்த மஞ்சல்ப்பூக்களில்
பெருகி வழிந்துகொண்டிருந்தது உன் வெள்ளைப் புன்னகை..

அப்பெருமழையை ஏந்திக்கொண்டிருந்த தெருமரங்கள் எல்லாம்
நம் பேரன்பின் கதகதப்பில் லயித்துக்கிடந்தன..

வெளியே கசிந்துகொண்டிருக்கும் சின்ன மழைச்சத்தத்தில்
நினைவுகள் அதிர்கின்றன..

ஒரு வசந்த
காலத்தில் பொழிந்த அப்பழைய மழையின் 
ஈரம் உலராத நினைவுகள் காயவே இல்லை.

15/11/2012
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

11)10410552_747864788597091_451994679875871
தீர்ந்து போகாத இந்த எழுதுகோல் முழுவதும் 
எரிமலைகுழம்பாய் இருக்கிறது 

உன் மீதான நேசிப்பின் கவிதைகள்...
நம் காதல்ப்புரவி கடந்த 
காலடிச்சத்தங்க்களும் 
கிளறிச் சென்ற நினைவுகளுமாய் 
மனதின் எல்லாப்பக்கங்களும் 
எதிரொலிகளால் நிரம்பியிருக்கிறது ...
பிரிய மனமின்றி -உன் 
பிரியம் விட்டுச்சென்ற 
ஈரலிப்பில் மூழ்கிக்கிடக்கையில் 
ஊதிப்பெருத்த நினைவுகளுடன் 
கடந்துபோனது நீ மட்டுமா 
காலமும்தான்...


19/10/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

12)156199_10150715389144891_33325168_n.jpg?
நிலாக்கரையும் பொழுதொன்றில் 
நீ உதிர்த்த வார்த்தைகளை
அடித்துச்சென்றுவிட்டது 
காலவெள்ளம்..
எத்தனை மழைப்பொழுதுகள்
கடந்தனவென்று நினைவிலில்லை!
ஆயினும்
நிராகரிப்பின் வலியொன்றில்
ஒரு பகல் நிலவைப்போல
இன்னமும் மீதமிருக்கிறது
காதல்..

13/08/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

13)
10371687_10152203432209891_6446617695855
இந்த இரவின் மௌனத்திலும்
வெளியே இலை துடிக்கும் ஓசையிலும்
இன்னமும் அருந்தி முடிக்காத 
மேசை மேலிருக்கும் தேநீரிலுமாய் 
சிதறுகின்றன உன் ஞாபகங்கள்....

27/05/2014
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨
14)
10153816_10152120348379891_6797527607073
கால நதியில்
மிதக்கும் சோடி இறகுகளாய்
காதலை நிலமெங்கும்
விதைத்தபடி

பூத்திருக்கும் மலர்களுடனும்
வண்ணாத்திப்பூச்சிகளுடனும்
நெடுந்தூரம் நடப்போம்
தெருவோர‌ மரங்கள் எல்லாம்
நம் பேரன்பின் கதகதகதப்பில் லயித்துக்கிடக்கட்டும்.....

27/05/2014
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨
15)

10398092_10152208992789891_2568790225581
கோடை தின்ற ஈர உரையாடலின் 
மீதம் கசியும் துளிகளிலிருந்து
வேர் பிடிக்கிறாய் நீ..
முன்னொருபொழுது ஒட்டிகொண்ட‌
உன் மஞ்சல்ப்புன்னகையுடன்
நினைவுத் துண்டுகள் தங்கி விட்ட
நிலமெங்கும்
சிதறிப் பூக்கிறது உன் வாசனை....

27/05/2014
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

No comments:

Post a Comment