Pages

Tuesday 6 January 2015

ஒளிமிகக்கொண்ட காலம்...


நீதியின் கரங்களை
சிலுவையில் அறைந்தபோது
எழுந்த குரல்களையும் கொன்றனர்
சாத்தான்களின் பிரதிநிதிகள்
சாட்சி சொல்ல அஞ்சும் நிலவும்
ஊமையான நட்சத்திரங்களும்
நாய்கள் குரைக்கும்
நாட்களின் அச்சத்தில்
பகைமையின் வாள்களோடு
வேட்டையாடுகிறது காடு
வீடும் கூடும்
விலைமதிப்பற்ற சுதந்திரமும் போயின
கரையவோ கடக்கவோ முடியாத துயரம்
தீப்படாமலே எரியும் வலி
வேலிகள் அரிக்கப்பட்ட தசாப்தங்கள் கடந்து
வேலிகளே அற்ற நூற்றாண்டில்
வெறுப்புமிழ சொல்லித்தரப்படுகிறது
மிதிபட்டபடியே சேர்ந்து வாழும் ஜனநாயகம்
எந்தவீதியிலும் பயணமில்லை
தொலைந்துபோயினர் வழிப்போக்கர்கள்
இறுகிப்படிந்திருக்கிறது தெருவெங்கும் மெளனம்
இரண்டொரு எறும்புகள் மட்டும்
சுமக்கமுடியாமல் சுமந்து செல்கின்றன
தெருவின் துயரை
வனப்புமிக்கதொரு வம்சம்
வாழ்ந்துபட்ட ஊர்களின்
வீரத்தின் தொல்லெச்சங்களை
உண்டு செரித்திடுமோ காலம்..?
பெருகும் கோடை ஒன்றின்
தகிக்கும் தீராவெக்கையை
கடக்க முடியாமல் தவிக்கும் இனத்தை
கவ்வியிருக்கின்றன
வறுமையின் வேட்டைப்பற்கள்
பசியுமுழும் கண்கள் வழியோடி
இருள் குவிந்த கன்னங்களில் தேங்கும்
கண்ணீரில் பிரதிபலிக்கிறது
இழப்புகளின் நினைவுகளும்
இயலாமையின் சிதறல்களும்
பிள்ளைகளை தொலைத்த தாயொருத்தியின்
குலுங்கும் மார்பிலிருந்து கொட்டும் சோகத்தை
அண்ணணை சுட்டுக்கொன்ற வீதியைக் கடக்கும்
தம்பியின் வலியை
வன்புணர்ந்து கொல்லப்பட்ட மகளின்
புதைகுளியை தாண்டும் தந்தையின்
வெடித்துக்கிளம்பும் துயரை
இனி எந்த மொழியிலும் சொற்கள்
விஞ்சப்போவதில்லை.
மேசைகள் நிறைய
ஈரமூறிய வார்த்தைகளை தூவும் உலகே
தூரமாய்
கோடை விளைந்த வயல்களில் இருந்து
காற்றள்ளி வரும் குரல் கேட்கிறதா..?
துளி ஈரத்தை உன் கொல்லையில் இன்னும்
மிச்சம் வைத்திருப்பாயானால் சொல்
எம் ஒளி மிகக் கொண்ட காலத்தை ஏன் கொன்றாய்..?
மழை இரவொன்றில்
காணாமல்போன நிலவைப்போல
நெருப்புத்தூள்களை உமிழ்ந்துவிட்டு
உறங்கிப்போன எரிமலை ஒன்றைப்போல
எம் ஒளி மிகக்கொண்ட காலம்
இறைமை பேசும் உன் தேசங்களின் தீயில்
இறந்ததெமக்கொரு கனவைப்போல
கருணையின் நிறத்தையும்
அன்பின் வர்ணத்தையும்
அறிவுக்கும் உலகே
மக்களை கொன்ற மன்னனையும்
பிணங்களைப் புணர்ந்த சேனைகளையும்
கண்டுகொள்ளாமல் விட்டபோது
பிணியெல்லாம் பரவிய தேசத்தை மறந்தபோது
இன அழிப்பின் துயர்க்குரலை மறைத்தபோது
ஒரு ஒளி நிறைந்த காலத்தைக் கொன்ற
பழி நிரம்பி உறைந்துபோனது
உன் பாதைகள் எங்கும்..

No comments:

Post a Comment