Pages

Tuesday 6 January 2015



ஓர் குளிர் நாளில் வெயிற்சுமையுடன் 
மெளனமுறங்கும் அக்கடற்கரைப்பூங்காவில் வந்தமர்ந்தேன்.. 
என் கைகளில் கனக்கின்ற ஞாபகங்களில் சிறிதை
காற்றில் மெதுவாய் இறக்கிவைத்தேன்..
எம் கதைகளை காற்று இரைந்து பேசத்தொடங்கியது..
மரங்களுடனும் செடிகளுடனும்
முத்தங்களைப்பரிமாறிக்கொண்டிருந்த மாலையுடனும்
அது கண்ணீருடன் பேசத்தொடங்கியது..
வெள்ளையின மனிதர்களின் கதவுகளை மோதி
அலைந்துவந்த காற்று பேசிக்கொண்டே இருந்தது..
யூகலிப்ஸ் மரத்தின் கீழ் நடுத்துண்டு உடைந்த இருக்கையும்
நரம்பு மட்டும் எஞ்சிய பழைய வசந்தம் ஏதோ ஒன்றின் முடிவில்
உதிர்ந்த மஞ்சல் இலைகளும்
சலிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தன..
கடலின் பின்னால் புதைந்த என் சந்ததியோடு உதிர்ந்த இலைகளுக்கு இப்போ நரம்புகளும் உக்கத்தொடங்கியிருக்கும்..
நெஞ்சடைத்தது துயரெழுந்து..
என் கைகளில் கனக்கின்ற ஞாபகங்களில் மிகுதியை கொந்தளித்துக்கொண்டிருந்த கடலலைகளின் மேல் நீந்தவிட்டேன்..
அலைகளின் மேல் மிதந்த அந்திச்சூரியனும் கடலும் காயம் மிகுந்து இரத்தச்சிவப்பாயின..
மேகங்கள் உடைந்துபோய் அழுதன
நான் என்ன செய்வேன்..
இந்த ஞாபகங்களைத்தானே என் மண்ணிலிருந்து எடுத்து வந்தேன்..
பிறந்தபொழுதும் தவழ்ந்தபொழுதும் நடந்தபொழுதும்,
பின் வளைந்த முதுகுகளில் வாழ்வை சுமந்துகொண்டு அகதியாய் அலைந்த போதும்
எம் தலைமுறையுடன் கூடவே வந்தது போர்..
எம் பாடல்கள் வாளொன்று கிழித்த உடலொன்றிலிருந்து ஒழுகிய இரத்தம்போல் அல்லாமல்
திராட்சையின் சுவையோடு இசைந்திருக்கவும் முடியுமோ..?
நாங்கள் காவி வந்தவற்றை உங்கள் தாழ்வாரங்களில் விரிப்பதாக முறைக்காதீர்கள்..
அவை நீங்கள் எங்கள் வனங்களில் தூவிய முட்செடிகளின் கனிகள்தானே..
காலம் ஓர் திருப்பத்தில் கவிழ்த்தது எம் இனத்தை..
அதன் ஊழிக்கிடையில் மூழ்கிப்போனது எம் மூன்று தசாப்தப் பெருங்கனவு..
மிச்சமிருக்கும் தலைமுறைக்கோ மிதிபட்டபடி ஓர் கனவு..
முட்களில் இருந்து தனை மீட்க
வனாந்தரங்களைக் கடந்து
ஓர் தேவதூதன் வருவான் என்று சொன்னது
என் வாசங்களில் இடறிய ஏதோ ஓர் றோசாப்பூ..
காலங்களை எண்ணிக்கொண்டிருந்தபோது மாலை வந்துவிட்டது உதிர்வதற்கு..
பாவம் அந்த றோசாப்பூ..
காற்று என் தலைமுறையின் கனவிற்காய்
துயருடனே இரைந்துபாடுகிறது..
கடல் அழுதுவடிகின்றது..
நான் உதிர்ந்து கிடக்கும் அந்த மஞ்சல் நிற இலைகளின் நரம்புகளுக்கிடையே
அலையும் என் புதைந்த சந்ததியிடம் மண்டியிட்டுக்கொண்டிருக்கிறேன்..
தொலைவாய் ஓர் பேருந்தின் இரைச்சலில்
என் நிகழ்காலம் விழிக்கிறது..
எழுந்து நடக்கிறேன்..
முகத்திலும் மார்பிலும் துரத்தி வந்தமர்ந்து அந்நியன் என்கிறது துருவக்குளிர்..
நானோ அத்தெருவில் அனாதையாய் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறேன்...

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கற்பனைத்திறன் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment