Pages

Tuesday 6 January 2015


வாழ்வின் பெருமழையே..
என் முற்றத்தில்
என்றைக்குமாய் என் காதலைச் சொரியப் பொழியும் மழையே...
இவ்வாழ்வின் பசுந்தரையை பார்த்தேயிராத மனிதரையும் நனைக்கும் மழையே,
கரைந்தும் கதறியும் நனைந்தும் சிதறியும் துளிகளாய் உருமாறியும் உயிரோடு உயிர் பேசுவோம் வா மழையே..
என் கரையெல்லாம் நிறைத்து நிறைந்திருக்கும் ஆதிக்காதல் சுமக்கும் வானமும் சாகுமோ சொல் மழையே..
அவளற்ற பொழுதுகளில் நீ பெய்த துளிகளில் நான் நனைந்தே அறியேன் என்று
முன்பொரு நாள் உன்தோழியாய் இருந்த என் தோழியின் காதல் அறியுமோ சொல் மழையே..
வாழ்வை ஒரு கவிதையாய் கடக்கும் மனிதர்களைப்பாட வந்த மழையே,
உன் கானமெல்லாம் கசிந்துருகுகிறது பூமி..
அப்பாடலில் என் கூரை நனைந்து அன்றொரு நாள்
நீ நனைத்த என் காதல் ஊரும்போதெல்லாம் உடுத்தியிருக்கும் துயர ஆடைகள் நனைந்தழுகின்றன..
யாரறிவார் உன் துளியுள் கலந்து கரைந்த என் துயரை யாரறிவார்..
என்னையும் அவளையும் நனைத்த உன் பழைய மழை கரைந்து மறைந்து ஏதோ ஒர் பெருங்கடலில் இன்று மிதக்கக்கூடுமோ என் நினைவுகளைப்போல..
நம் மோனத்தில் கலந்து கசிந்து காற்றாய் மிதந்த அந்த வானத்தை இன்று தொலைத்துவிட்டோம்..
யாரும் கேட்டுணராப்பாடலை நீயும் அவளும் நானும் நிலவும் ரசித்திருக்கப்
பூத்திருந்த மலரொன்றின் புன்னகை மெல்ல இறங்கி அவள் கரங்களில் தவழ்ந்து என் தலை தடவிய நொடியில்
சிலிர்த்த இரவும் பூங்காவின் இருக்கையும்
இன்றும் ஏந்தியிருக்கக்கூடும் அப்பூவின் புன்னகையை..
என்னையும் உன்னையும் அவளையும் தழுவிப்
பின் வெட்கத்தில்
வானத்தில் துணையின்றி அலைந்துகொண்டிருந்த
ஒற்றை வெண்மேகத்தையும் சுமந்துகொண்டு
நழுவி ஓடிய தென்றல் இன்று அவள் குழந்தையை தழுவிக்கொண்டிருக்கக்கூடும்..
யாரறிவார் அந்த ஒற்றைமேகம் இன்று என் தோழில் கனப்பதை..
யாரறிவார் அப்பழைய பூங்காவின் இருக்கையில் என் தனிமையை..
கோடை ஒன்றில் மழையை பொழிந்த அந்தக் காதல் எங்கென்று நீயறிவாயா..
என் சோலை முழுதும் வேர்களை நனைத்த நேசிப்பின் நதி ஊற்று எங்கென்று நீயறிவாயா..
என் தோப்பில் இன்று குயில்கள் இல்லை..
கூவி அழைக்கக் குரல்களும் இல்லை..
காதல் வற்றிய நதி செத்துக் கோடை பாய்கிறது அதன் தடமெங்கும்..
மழையே..வாசம் கொண்டு வந்து முன்பொருநாள் பூத்திருந்த என் வசந்தத்தில் நனைத்து நனைத்து நனைந்த மழையே..
என் தேகம் எங்கும் நுழைந்து
ஆன்மாவின் அருகிருந்து
காதலைப்பொழிந்த அப்பழைய வசந்தத்தைக்
கண்டால்
இக்கவிதையை பொழிந்துவிடு என் பிரிய மழையே..

No comments:

Post a Comment