Pages

Thursday 3 February 2011

தொலைந்த மனிதனை தேடிக்கொள்...

உன்னுடைய பாதைகளை 
நீயே அமைத்துக்கொள்
அடுத்தவன் பாதைகளில்
ஆசைப்படாதே..

உன்னுடைய சிலுவைகளை
நீயே சுமந்துகொள்
அடுத்தவன் தோளுக்கு
அதிகாரமிடாதே..

உன்னுடைய செடிகளை
நீயே வளர்த்துக்கொள்
அடுத்தவன் தோட்டத்தில்
பூக்களைப்பறிக்காதே..

உன்னுடைய குறைகளை
நீயே சொறிந்துகொள்
அடுத்தவன் குறைகளை சொறிய
நினைக்காதே..

உன்னுடைய மதத்தில்
உண்மைகளை தேடிச்செல்
அடுத்தவன் மதத்தில்
ஓட்டைகளைத்தேடாதே..

உன்னையே நீ தேடி
உண்மைகளைக்கண்டு
உன்னுள் தொலைந்த
மனிதனை மீட்டுக்கொள்

பள்ளி நினைவுகள்

தோழிலே பையுடன்
தோழர்கள் புடைசூழ
பள்ளி சென்ற
பருவ நாட்கள்
சிந்தையில் விரிகையில்-இதயத்தில்
சின்னதாய் ஒரு நெருடல்

நிலவு அல்ல-பள்ளி
நினைவுகள் தேய்வதற்கு
நித்தமும் விழி எதிரே
நிஜங்களாய் மலர்பவை

பருவமழை அல்ல-பள்ளி
நினைவுகள் வந்துபோக
பசுமையாய் பதிந்து
பாதத் தடங்களாய் தொடர்பவை

காலச்சக்கரம் விரிகையில்-வசந்த
காலத்தின் சுவடுகளாய் பதிந்து
காற்றினும் பரந்து விரிந்து
காவியமாய் நெஞ்சிலே ஒளிர்பவை

நேற்றைய நட்புகளே - பள்ளி
நாட்களின் உறவுகளே
இதயச்சுவர்களில் உங்களின்
இனிய நினைவுகள்
அழியாத புத்தகமாய்
ஆண்டாண்டு வாழும்

(காலத்தின் கட்டாயத்தால் இன்று திசைக்கொன்றாக பிரிந்திருக்கும் என் இளைமைக்கால பள்ளி தோழர்களுக்கு சமர்ப்பணம்)