Pages

Monday 17 October 2011

அகதியானவர்கள்..

சுதந்திரமடையா இந்தியாவின்
தண்டகாரன்யக்காடுகளிலும்
பாலஸ்த்தீனத்தின் 
இடிந்தகட்டிடங்களிலும்
குர்தீஸின் குக்கிராமங்களிலும்
ஈராக்கின் வீதிகளிலும்
விடுதலைக்காக வீழ்ந்தவர்களின்
ஆன்மாக்கள்
வீடுகளை விட்டு
புழுதித்தெருக்களை விட்டு
சுதந்திரமாக ஊளையிடும்
தெருநாய்களை விட்டு
ஞாபகங்களை மட்டும்
எடுத்துச்செல்லும்படி
விரட்டப்பட்டவர்களின்
முகாம்களில் தங்கியிருக்கின்றன

ஈராக்கின் எண்ணெய் ஊற்றுக்கள்
இல்லாதுபோகும்படியும்
வன்னியின் வனங்கள்
வாடிப்போகும்படியும்
ஆப்கானின் மலைகள்
பொடியாகும்படியும்
காக்ஷ்மீரின் வீதிகள்
பிளந்துபோகும்படியும்
ஆகியிருக்கிறது
அகதியாக்கப்பட்டவர்களின்
துயர்ச்சுமையால்

விரட்டப்பட்டவர்களின்
வீட்டுமுற்றத்தில்
விட்டுச்செல்லப்பட்ட
சாய்வுநாற்காலியில்
உட்க்காந்திருக்கிறது
பள்ளியிலிருந்துவரும்
குழந்தைகளைத்தேடும்
தாத்தாவின் மனசு
வாசத்தை தொலைத்து
வாடிப்போயிருக்கும்
வளவுப்பூக்கள்
அகதியாக்கப்பட்ட
வீட்டுக்காரனின்
வாசத்தை தேடுகின்றன

வெறுமை
துப்பாக்கிகளின்
துணையுடன்
ஊரை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது
யாரையும் நெருங்கவிடாமல்
அணல்காற்றடித்து
எழுந்த தீயில்
எரிந்த வெளியில்
எதிர்காலத்தை தேடும்படி
சபிக்கப்பட்டிருக்கிறது
ஒரு சந்ததி...

Saturday 15 October 2011

எனது நாள்...

வடதுருவத்து 
நடு நிசியில்
விழித்துக் கொள்ளும்
என் உயிர்ப்பறவை
மனவறையின்
சுவர்களைப் 
பிளந்து வெளியேறுகிறது
கண்டங்களைத் தாண்டி
என் ஊரின்
வீதிகளில்
காலாற
உலாவித் தீர்ப்பதற்காய்...

வழிமறிப்புச் சாவடிகள்
கொழுத்தப்பட்ட வீதிகளில்
பாரதியின் கனவுகளும்
புதுவையின் கனவுகளும்
கூட
தூரத்தே
பயணிக்கின்றன...

பச்சை அரக்கர்கள்
விரட்டி அடிக்கப்பட்டதாக
எல்லோரும்
மகிழ்வுடன் பேசிக்கொள்கிறார்கள்
முன்னரைப் போல
மனிதர்கள் யாரும்
தங்கள் அடையாளங்களை
சட்டைப்பைகளில்
சரிபார்த்துக் கொள்ளாத
வீதிகளில்...

என் மனக்கப்பல்
அசைந்தலைந்த தொடுவானம்
பால் வீதிகளில்
என் 
கற்பனைச் சிறகடிப்பின்
பயணங்களைச் சேமித்துவைத்த
விண்மீண்கள்
நிலாத் தோழன்
எல்லாமும் 
தொடர்கின்றன
கூடவே
என்
பயணம் முழுமையும்...

வடமேற்
பருவக் காற்றின்
சிராய்ப்பில் கிறங்கும்
பொருக்குப் பூவரசின்
பழுப்பு இலைகளின்
சலசலப்பில்
ஊரெல்லையில்
சிலிர்த்துக்கொள்கிறது
என் உயிர்ப்பறவை....

சுவாசத்தினூடு
எனக்கும்
அதற்குமான
பிணைப்பு வலையை
பிண்ணிக் கொண்டு
தன் மலர்களால்
பூரித்துக் கொள்கிறது
துறுதுறு வயதில்
சிறுகால் எடுத்துக்
குறுநடை பயின்ற
என்
வீட்டு முற்றம்...

உயிரின் ஆழம்வரை
ஊடுருவிச் செல்லும்
இனம்புரியா
ஈர்ப்பைச் சுமந்து
சாளரத்தினூடு
துப்பாக்கி முனைகளின்
துரத்துதல் இன்றி
ஊர் மடியின்
முற்றத்தில்
உறங்கிக் கிடக்கும்
என் முகத்தில்
இறங்குகிறது
முற்றத்து வாசம்....

விழித்துப் பார்க்கிறேன்...
நாடற்று அலையும்
என்
முடிவற்ற கனவுகளின்
பயணங்களிற்கு
மூன்று தசாப்தங்கள்
முடிந்து போய்
விட்டிருக்கிறது...

வழமை போலவே
வட துருவத்தில்
சுமந்து வந்த
என் வீட்டின்
நினைவுக் கனத்துடன்
இன்றும்
எனது நாள்
தொடங்குகிறது... 

Tuesday 11 October 2011

எங்கு போனீர்கள் இங்கு நாம் சாகையிலே....

மூச்செடுத்து விட்டதுபோல்-வருசங்கள்
முடிந்தோடி விட்டாலும்
நேற்றுப்போல் இருக்கிறது-நெஞ்சில்
நெருப்பெரிக்கும் நினைவுகள்

ஊற்றுப்போல் மனதில்தோன்றி-ஓயாது
உள்ளத்தைக் குடைந்தெடுக்கும்
தோற்றுப்போன நாட்களின் -மாறாத்
தொடரும் உயிர்வலிகள்

மண்ணிண் காவலர்கள்-விடுதலைக்காய்
மரணித்த தேசத்தில்
இன்னும் புல்பூண்டு-முளைத்து
இயற்கை சிரிக்கவில்லை

கண்ணில் நெருப்பெடுத்து-மதுரையைக்
கண்ணகி எரித்தகதை
இன்னும் சரித்திரத்தில்-படிக்க
இலக்கியப் புத்தகத்தில்

எண்ணுக் கணக்கற்று-கண்ணகிகள்
எங்கள் தேசத்தில்
மண்ணுக்கு இரையானார்-மதுரைகள்
இன்னும் எரியவில்லை

வருசம் விழாஎடுத்து-நேர்த்திக்கு
வளர்த்த கடாவெட்டி
புருசனுக்காய் நோன்பிருந்த-பெண்கள்
பூவிழந்து போயினரே

கொழுத்த அரக்கர்கள்-எங்களை
கொன்று புதைக்கையிலே
பழுத்த தேவர்கள்-ஞானப்
பால் குடிக்கப்போயினரோ

கற்பூரச் சட்டிகளை-கைகளில்
கடவுளர்க்காய் ஏந்தியோர்கள்
கற்பழித்துக் கொல்லப்பட- சாமிகள்
கண்மூடிச் சயனத்திலோ

சூரனை வதம்செய்ய-தேவர்களைச்
சூழ்ந்த துயர்துடைக்க
கையில் வேலெடுத்த-காக்கும்
கதிகாமக் கந்தனே

வற்றாப்பளை அம்மனே-நல்லூரில்
வரம்தரும் முருகனே
நற்தாயே நம்பினோரின் - தீவமர்ந்த
நயினை நாகபூஷனியே

இன்னும் பெயர்தெரியாத-எண்ணிக்கையில்
பல்கிப் பெருகிநிற்கும்
எங்கள் தமிழர்கள்-நம்பிய
ஏராளம் சாமிகளே

செத்துக் கிடக்கையிலே-எம்முடல்
தீயில் எரிகையிலே
வன்னியின் வானம்விட்டு-நீங்கள்
வனவாசம் சென்றீரோ

செல்விழுந்து பிளக்கையிலே- சிதறி
செங்குருதி தெறிக்கையிலே
கத்திய கூக்குரல்கள்-உங்கள்
காதில் விழவில்லையோ

தாயை இழந்ததினால்-காட்டில்
தவித்த குட்டிகட்காய்
பன்றி வடிவெடுத்து-அன்றொருநாள்
பாலூட்ட வந்தசிவன்

செத்த தாய்முலையில்-எம்குழந்தை
ரத்தம் குடிக்கையிலே
முக்திப் பரவசத்தில்- சக்தியுடன்
மூழ்கிக் கிடந்தீரோ

இங்குநாம் இறக்கையிலே-உயிர்க்காய்
இரந்து கிடக்கையிலே
எங்குநீர் போனீரோ-இன்று
பொங்கலுக்கு வந்தீரோ

கொலுவுற்று எதற்காக-இன்னும்
கோவிலில் வீற்றிருந்து...?
வலுவற்ற கற்களுக்கு-யாரும்
வாழ்வு கொடுக்காதீர்

இன்னும் எதற்காக-கோவிலில்
பென்னம் பெருஞ்சிலைகள்
எல்லாம் மண்ணாக-எம்
சாபம் பலிக்கட்டும்

சிவனுமில்லை சக்தியில்லை-எங்களுக்குச்
சீரழிவு இனியுமில்லை
கண்ணில் தெளிவுகொண்டோம்-எங்களுக்குக்
கடவுள் எவனுமில்லை
***

Sunday 9 October 2011

எது ஈடு இதற்கு...?

மனதைத் தாலாட்டும்
மாலைத் தென்றல்
சுள்ளென எரிக்கா
மெல்லிய வெயில்
சில்லெனப் பரவும்
இரவுக் குளிர்
கதகதப்பாக்கும்
போர்வைத் துணி

இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?

இரவில் நிலவு
இரையும் மழை
பருகத்தேநீர்
பாயில் தூக்கம்
கனவில் சுகம்
கவலையற்ற மனம்

இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?

கலையும் இருள்
காலை நிசப்தம்
கண்ணைக் குத்தா
கதிரவன் ஒளி
விழித்தபடி
தூங்கும் சுகம்

இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?

குளையல் சோறு
குளிக்க வெந்நீர்
துவட்ட முந்தானை
தூங்க உன் மடி

இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?

ஒழுகும் மழை
ஒற்றைக் குடை
புழுதி வீசும்
பூமி வாசம்
ரசித்தபடியே
கரையும் மனம்
நனைந்தபடியே
நடக்கும் சுகம்

இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?

சாய்வு நாற்காலி
சாளர ஒளி
தூரத்துக் குயில்
கூவிடும் குரல்
ஓய்வாய் மனம்
ஓரிரு புத்தகம்
படித்து முடிக்க
நீ தரும் தேநீர்

இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?

நல்ல கவிதையை
ரசிக்கும் மனம்
நாட்டுக்காக
துடிக்கும் குணம்
கூட நீ
குறையாத அன்பு

இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?

ஓலைக் குடிசை
ஒற்றைக் கதிரை
காலைச் சுற்றும்
மீசைப் பூனை
பேசிக்கொள்ள
பரணில் பல்லி
நிறைந்த மௌனம்
நிலைத்த நின்மதி
நீயும் நானும்
நிறைந்த வாழ்க்கை

இருந்தாலே போதும்
வேறெது வேண்டும் எனக்கு?

Friday 7 October 2011

தோழர்களும் தொலைந்துபோன விடுதலையும்

விடுதலையை நேசித்த
எத்தனையோ
விருட்ச்சங்களை
தின்றுவிட்டது அநீதி

ஆயினும் இன்னமும்
விடுதலைக்கான வேட்கையை
சுமந்து கொண்டு
வீச்சுடன் எரிகிறது
விடுதலைத்தீ

சுதந்திரத்திற்கான கனவுகள்
பொய்த்துப்போன கணங்களில் இருந்து
கணன்று கொண்டேயிருக்கிறது
எங்களின் இதயம்

விடுதலை பெறும் நாளில்
வீடுவருவோம் என்று சொல்லிச்சென்ற
தோழர்களின் வருகைக்காய்
எங்களின் வாழ்க்கையைப்போலவே
இருண்டு கிடக்கும் வீட்டினை
சுத்தம் செய்து வைத்திருப்பாள் தங்கை

இப்பொழுதும்
எப்பொழுதும்போல்
தோழர்களுக்காய்
இயலாமையில்
எங்கள் இதயங்களைப்போலவே
கொதித்துக்கொண்டிருக்கும் அடுப்பில்
சமைத்துக்கொண்டிருப்பாள் என் தாய்

நேற்றையைய்ப்போலவே
இன்றைக்கும் தேடுகிறேன்
இன்னமும்
தோழர்களும்
தொலைந்துபோன விடுதலையும்
கிடைக்கவே இல்லை

(முள்ளிவாய்க்காலுடன் காணமல் போன உறவுகளின் நினைவுடன் எழுதியது)

Thursday 6 October 2011

எனது உலகம்...



போரில் தொலைந்த
நகரத்தைச் சுற்றிலும்
சிதறிக்கிடக்கும் ஓலங்களால்
என் உலகத்தை வனைந்துகொண்டு
கண்ணீராய் அருவிகளில் வழிந்தோடும்
எம் மக்களின் துயரங்களில்
மூழ்கிக்கிடக்கிறது
என் ஆன்மா

என் மன நிலத்தில் சுழன்றடிக்கும்
துயர்க்காற்றின் அணல்
உடலெங்கும் பெருநெருப்பாய்
எரிக்கிறது

பசியால் வாடுமெங்கள்
குழந்தைகளை நினைத்து
முகில் உரசும் முகடுகளில்
பெருங்குரலில் காற்று
மோதி இரைகிறது

வயல் நிலங்கள் நீளவும்
எம் இனத்தின்
துயரங்களை உதிர்த்தபடி
பெயர் தெரியாத பறவைகள்
பிணங்களைக் கட்டி இழுத்துக்கொண்டு
கழுகுகளைச் சபித்தபடி செல்கின்றன

மேகங்கள்
எம் மக்களின் அவலங்களைக்
காவிக்கொண்டு
கோபமாய் அலைகின்றன

நாய்கள் ஊளையிட்டுக் கொள்ளும்
இரவுகளில்
எங்கள் பெண்களின்
துயரங்களைச் சுமந்துகொண்டு
நீதி தேவதைகள்
அலைந்து திரிகின்றன

காற்றுக் காவிவரும்
எம் இனத்தின்
கண்ணீர்க்கதை கேட்டு
வனங்களும் சோலைகளும்
இரைந்தழுவது
ஒப்பாரிகளாகுகிறது

வற்றிக் கொண்டுபோகும்
என் வாழ்க்கைப் பாத்திரம்
முழுவதையும்
எங்கள் குழந்தைகளின்
கண்ணீர் நிறைக்கிறது

திமிறிக்கொண்டோடிப்போக முடியாதபடி
என் உலகத்தைச் சுற்றி
அழுகைகள் நிறைந்த
குழந்தைகளின் ஆன்மாக்கள்
அலைந்து திரிகின்றன

என் இருப்பு முழுவதையும்
பிடித்துக்கொண்ட
பெருந்துயர்ச் சர்ப்பம் ஒன்று
என் கழுத்துக்களை
தன் உடலால்
நெரித்துக் கொண்டிருக்கிறது

உறைந்த காலத்தின்
நினைவுக்குமிழ்கள் உடைந்தொழுக
வெளியேற மனமின்றி
வழியெங்கும் சிதறிக்கிடக்கும்
எதிர்பார்ப்புக்களுடன்
வலி நிரம்பிய வாழ்க்கையைச்
சுமந்துகொண்டு
இருண்ட மனக்குகையின்
அடர் பள்ளத்தில்
என் உலகம் சுழல்கிறது..