Pages

Thursday 6 October 2011

எனது உலகம்...



போரில் தொலைந்த
நகரத்தைச் சுற்றிலும்
சிதறிக்கிடக்கும் ஓலங்களால்
என் உலகத்தை வனைந்துகொண்டு
கண்ணீராய் அருவிகளில் வழிந்தோடும்
எம் மக்களின் துயரங்களில்
மூழ்கிக்கிடக்கிறது
என் ஆன்மா

என் மன நிலத்தில் சுழன்றடிக்கும்
துயர்க்காற்றின் அணல்
உடலெங்கும் பெருநெருப்பாய்
எரிக்கிறது

பசியால் வாடுமெங்கள்
குழந்தைகளை நினைத்து
முகில் உரசும் முகடுகளில்
பெருங்குரலில் காற்று
மோதி இரைகிறது

வயல் நிலங்கள் நீளவும்
எம் இனத்தின்
துயரங்களை உதிர்த்தபடி
பெயர் தெரியாத பறவைகள்
பிணங்களைக் கட்டி இழுத்துக்கொண்டு
கழுகுகளைச் சபித்தபடி செல்கின்றன

மேகங்கள்
எம் மக்களின் அவலங்களைக்
காவிக்கொண்டு
கோபமாய் அலைகின்றன

நாய்கள் ஊளையிட்டுக் கொள்ளும்
இரவுகளில்
எங்கள் பெண்களின்
துயரங்களைச் சுமந்துகொண்டு
நீதி தேவதைகள்
அலைந்து திரிகின்றன

காற்றுக் காவிவரும்
எம் இனத்தின்
கண்ணீர்க்கதை கேட்டு
வனங்களும் சோலைகளும்
இரைந்தழுவது
ஒப்பாரிகளாகுகிறது

வற்றிக் கொண்டுபோகும்
என் வாழ்க்கைப் பாத்திரம்
முழுவதையும்
எங்கள் குழந்தைகளின்
கண்ணீர் நிறைக்கிறது

திமிறிக்கொண்டோடிப்போக முடியாதபடி
என் உலகத்தைச் சுற்றி
அழுகைகள் நிறைந்த
குழந்தைகளின் ஆன்மாக்கள்
அலைந்து திரிகின்றன

என் இருப்பு முழுவதையும்
பிடித்துக்கொண்ட
பெருந்துயர்ச் சர்ப்பம் ஒன்று
என் கழுத்துக்களை
தன் உடலால்
நெரித்துக் கொண்டிருக்கிறது

உறைந்த காலத்தின்
நினைவுக்குமிழ்கள் உடைந்தொழுக
வெளியேற மனமின்றி
வழியெங்கும் சிதறிக்கிடக்கும்
எதிர்பார்ப்புக்களுடன்
வலி நிரம்பிய வாழ்க்கையைச்
சுமந்துகொண்டு
இருண்ட மனக்குகையின்
அடர் பள்ளத்தில்
என் உலகம் சுழல்கிறது..

No comments:

Post a Comment