Pages

Tuesday 6 September 2011

பிரிவு..

நீயில்லாத நிமிடங்களில்
ஒவ்வொரு நொடிகளும்
எனைப்பிடித்துப் பெருஞ்சர்ப்பத்தைப்போல
அணுவணுவாக விழுங்கிவிடுகின்றன
காற்றில்லாத வெற்றிடமொன்றில்
அடைத்து விடப்பட்டதுபோல
நீயில்லாத கணங்களில்
என் ஒவ்வொரு சுவாசங்களும்
பெருஞ்ச்சுமையாய் இடம்பெறுகின்றன
அருகேதானே இருக்கிறேன் என்று
தொலைபேசியில் நீ சிணுங்கினாலும்
சுடர் அணையும் சிறுகணத்தில்
கனமாய் இறங்கும் இருளைப்போல
சிலுவைகளாய்க் கனக்கின்றன
நீயற்ற சிறு நொடிகளும்
பிரிவு முடித்து உன் ஒவ்வொரு மீள்கையிலும்
நீயற்ற நிமிடங்களின் வலிகளை அனுப்பிவிட்டு
ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாயைப்போல
ஒவ்வொரு தடவையும்
பூரித்துப்போகிறது எனதுள்ளம்
எல்லாப்பிரிவுகளின் முடிவிலும்
இன்னமும் இன்னமும் பேரன்பைச் சுமந்துகொண்டு
நீ மீண்டுவந்தாலும்
எல்லாப்பிரிவுகளின் முடிவிலும்
இன்னமும் இன்னமும் பேரன்புடன்
உன்னை நான் அணைத்துக்கொண்டாலும்
எல்லாப் பிரிவுகளும்
எனக்கொரு மீள்பிறப்பாக அமைந்துவிடுகிறதடி
எல்லாவித மொழிகளும் மௌனமாகி விட்டதைப்போல
எல்லா மனிதர்களும் ஊமையாகி விட்டதைப்போல
காற்று தன் அசைவை நிறுத்திவிட்டதைப்போல
உன் பிரிவின் சிறு கணங்களின் இடைவெளியில்
இயங்காமல் நின்றுவிடுகிறது எனதுலகம்
கண நேரமென்றாலும் கண்மணியே...!
உன் அருகின்மை
யுகங்களைக் கரைத்துவிட்டுப் போய்விடுகிறதடி
என் காலத்திற்கு...