Pages

Monday 22 August 2016

சிதைந்தும் சிதறுண்டும் போனபின்
தூங்காத நிலவின் கீழ் கையேந்தா
மனிதரின் யுகக்கதைகள்.....
முதிர்ந்த மரத்தின் பொருக்குத்தோலில்
காலரேகை படர்ந்து விரிந்து
உலர்ந்த காலத்தின் சாட்சியாய்.....
காட்டுப்பறவையின் ஏகாந்தம் சூழ
பிரபஞ்சவெளியில் குரலெடுத்தழுகிறது
முதிர் மரம்...
சலனமின்றி மரத்தடி இருக்கையும் நானும்...
நெடுமரமடியில் நனையா மனத்தோடு நானிருந்தும்
சத்தியநதியை தம் குரலாய் சுமந்து வரும் ஒவ்வொன்றும் அலைக்கிறது
மௌனத்தின் மீது மனம் கொண்ட  தீராக்காதலை....
இயலாமை
பாழ் மௌனத்தின் பார்வைபிடுங்கி
ஓங்கி அறைகிறது ஒடுங்கிய சாளரத்துள் தனைப்பூட்டிக்கொண்ட
இவ்வாழ்வின் மீது...
தேவனே....!
சிலுவையில் நீர் சிந்திய ரத்தம்
எனக்குமானதெனில்,
காலமென்று நீண்டு வானத்தின் கீழெரியும்
இவ்வாழ்வின் மீதொரு கருணை கொள்ளும்...,
முட்களை சிரசேற்றி
நாட்கள் கிடந்துழலும் வெளியில்
சிலுவைகள் மரித்துப்போகட்டும்...