Pages

Tuesday 24 April 2012

சபிக்கப்பட்ட சந்ததி...

தன்னைக் கடந்து போன 
தலைமுறைகளின் இளமைகள் 
தொலைந்து போன கதைகளை சுமந்தபடி 
தொடர்ந்தும் இருக்கிறது அந்த நகரம்...

என் பாட்டி தன் பருவ காலங்களை 
என் பாட்டன் தன் இளமைகளை 
என் தந்தை தன் பால்யகாலங்களை
தொலைத்துக் கொண்டது அந்த நகரத்தின் நிழலில்தான்..

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது 
அது சிறுவயதுகளில் இருந்தது..
நாங்கள் இளைஞர்களாக இருக்கிறபோது 
அது இளமை ததும்ப புன்னைகை வடிக்கிறது..
நாங்கள் முதுமையை அணைக்கும்போது 
அது எங்கள் கண்களுக்கு முதிர்ந்திருக்கும்..

யுத்த நாட்களில் தலைவிரி கோலமாகவும்
பண்டிகை நாட்களில் மயக்கும் கன்னியைப் போலவும் 
அது தன்னை அலங்கரித்துக்கொள்கிறது...
நகரத்துக்கு வரும் இளம் பெண்களின்புன்னகைகளில் 
அது தன்னை உயிர்ப்பாக வைத்திருக்கிறது.....

யுத்தங்கள் தின்ற அந்த சரித்திர நகரத்தில் இருந்து
தந்திரமாக தப்பிய செல்வந்தத் தலைமுறை ஒன்று
நாகரீகங்களின் தலைநகரங்களைநோக்கி
நகர்ந்து கொண்டது...
மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை
மாற்றிக்கொண்டது...
தங்கள் குழந்தைகளுக்காக
மொழியைக் கூட மறக்கக் கற்றுக் கொண்டது...

விடுதைலையைப் பற்றி பாடியவாறு
விடுமுறைகளை அனுபவித்தது..
புரட்சியைப் போதித்துக் கொண்டு
புகலிடங்களில் அடிமையாய் வாழக் கற்றுகொண்டது..
ஏழைத்தலை முறையை 
எரிமலையாய் இரு என்று சொல்லி விட்டு 
சுதந்திர நெருப்பில்
சுகமாய்க் குளிர்காய்ந்தது..

அந்த நகரம் தன்னை மாற்றிக் கொண்டதைப் பார்த்து 
மகிழ்ந்து கொண்டது அந்தத் தலைமுறை...
யுத்தத்தின் பின்னால் அது தன்னைப் புதுப்பித்த போது
பூரித்தது....
விடுமுறைகளுக்கு வந்து
விருந்துண்டு சென்றது...
திருவிழாக்களுக்கு வந்து
தேரிழுத்துப் போனது 
நாகரீக உடைகளுடன்
அந்த நகரத்து வீதிகளில்
அலைந்து திரிந்தது..
அந்நகரத்து ஏழைகளின் பெருமூச்சை 
பணத்தின் பின்னால் இருந்து 
பார்த்து ரசித்தது.....

எல்லாக் காலங்களுக்கும் ஏற்ப 
எல்லா நாகரீகங்களுக்கும் ஏற்ப 
எல்லா சந்தர்ப்பவாதங்களுக்கும் ஏற்ப
அந்த தலைமுறையும் 
அந்த நகரமும் 
தம்மை மாற்றி வாழக் கற்றுக்கொண்டன...

ஆனால்..
அந்த நகரத்தின் ஏழைத் தலைமுறை
தன்னை மாற்றிக்கொள்ளும் பொழுதெல்லாம்...
கலாச்சாரத்தின் பெயரால்
கல்லெறியப்படுகிறது ......
யுத்தத்தில் இருந்து மீண்டு 
புன்னகைக்கும் போதெல்லாம்
துரோகி ஆக்கப்படுகிறது ......
வாழ்வதற்காக ஆசைப்பட்டபோதெல்லாம்
வரலாற்றின் பெயரால் தூற்றப்படுகிறது...

அழுவதற்காக மட்டும் வாய்திறப்பதே 
அவர்களுக்கு அழகெனச் சொல்லப்படுகிறது...
மரணச் சடங்குகள் மட்டுமே அவர்களின்
திருவிழாக்கள் ஆக்கப்படுகிறது...
சேலைகளைத் தாண்டி அந்த ஏழைப் பெண்கள்
மேலே போவது எதிர்க்கப்படுகிறது......

எல்லாவித கனவுகளையும் புதைத்துக்கொண்டு 
எல்லாவித ஆசைகளையும் அடக்கிக்கொண்டு 
எல்லாவித விருப்புக்களையும் எரித்துக்கொண்டு 
தியாகிப் பட்டங்களை மட்டும் அணிந்தபடி 
புலம்பெயர்ந்தவர்களின் பாவங்களை கழுவும்
பரம பிதாக்களாகவும் 
சுய நலக்காரர்களின் சிலுவைகளைச் சுமக்கும்
இயேசு நாதர்களாகவும் 
ஆக்கப்பட்டிருக்கிறது 
அந்த நகரத்தின் ஏழைத் தலைமுறை.....