Pages

Monday 6 January 2014

முகவரிகள் இழந்தவன்...

சாவும் வாழ்வும் நிறைந்திருந்த
தேசத்திலிருந்து
நேரமும் தூரமும் காலமும் யுத்தமும்
வீசி எறிந்தவருள் நானும் ஒருவன்..

திரும்பிவரும் கனவுகள்
தொலைந்துபோக
வந்துசேர்ந்த வழியும்
மறந்துபோனது...

யுகம் யுகமாய் பனிபடிந்த
தேசத்தில்
மனிதர்களைக்கடந்து பகல்கள்
சென்றபின்
மனதை நிறைக்கின்றன
ஞாபகங்கள்...

பெருங்குளிரில் காற்று உறைந்தாலும்
உறைய மறுக்கின்றன
இறவாத உம் நினைவுகள்...

புழுதிமண்ணில் விட்டு வந்த
வேர்களுக்காய் உடைந்து விழும்
ஒற்றைக்கண்ணீர்
நிலயற்றுத்தவித்து
ஆன்மாவைத்தூக்கி
வெளியே வீசுகிறது...

முகமழிந்த என் விம்பத்துடன்
இந்த இரவும் முகவரி அற்றதாய்...