Pages

Wednesday 28 December 2011

காலத்துடன் தொலைந்துபோன பயணத்தோழன்...


(லண்டன் ஒரு பேப்பருக்காக எழுதியது.....)

மிதிவண்டியைப்பற்றி பலரும் பலநூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியிருப்பார்கள் ஆனாலும் மிதிவண்டியுடனான எனது நினைவுகளை என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை.அன்று ஞாயிற்றுக்கிழமை வார நாட்கள் முழுவதும் கலகலத்துக்கொண்டிருந்த பாரிஸ் புறநகரின் ஆரவாரம் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டிருந்தது.அந்த நகரின் ஓயாத இரைச்சலை விழுங்கிவிட்டு அமைதி எங்கும் படர்ந்திருந்தது.தெருக்களில் வேலைநாளின் அவசரமின்றி அங்கங்கு ஆறுதலாகப் போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு மோட்டார் வண்டிகளைத்தவிர தார்வீதியின் கருமையும் அமைதியுமே வழிநெடுக நிறைந்திருந்தது.யாழ்ப்பாணத்து வீதிகளில் மாலைப்பொழுதுகளில் முகத்திலடிக்கும் அதே மெல்லிய மஞ்சள் நிறவெய்யில் அன்று பாரிஸிலும் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது.ஊரில் இருந்திருந்தால் இந்நேரம் ஒரு பிளேன்ரியும் வடையும் கடிக்க மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டிருப்பேன்.உலையில் கொதித்துக்கொண்டிருக்கும் சுடுநீரில் இருந்து மேலெழும் நீர்க்குமிழிகள்போல மனக்குளத்தில் நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக குமிழியிட்டுக்கொண்டிருந்தன. என்னால் வீட்டிற்க்குள் இருக்க முடியவில்லை.காலணியை மாட்டிக்கொண்டு பக்கத்திலிருக்கும் பூங்காவிற்கு காலாற நடந்துவரக் கிளம்பினேன்.

எனது வீட்டில் இருந்து வெளிப்பட்டுப் பிரதான வீதியில் இணைந்தபோது இப்படியொரு காட்ச்சி.ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி பின்புறம் இருக்கை பொருத்தப்பட்ட மிதிவண்டி ஒன்றை மிதித்துக்கொண்டிருந்தாள்.பின்னிருக்கையில் பாதுகாப்புப் பட்டி பொருத்தப்பட்ட அவரின் சின்னக்குழந்தை.அவர்களின் பின்னே அந்தப்பெண்மணியின் மற்றைய இரண்டு குழந்தைகள் ஆளுக்கு ஒரு சிறிய மிதிவண்டியில். எல்லோருக்கும் பின்னால் கடைசியாக அந்தப்பெண்மணியின் கணவர் மிதிவண்டியில் அவர்களைத்தொடர்ந்து கொண்டிருந்தார்.எல்லோர் தலைகளிலும் தலைக்கவசமும் உடலில் பச்சை நிற பாதுகாப்பு ஜக்கெற்றும் மாடியிருந்தார்கள்.அந்தப் பெண்மணியின் துவிச்சக்கரவண்டியின் பின்னிருக்கையில் இருந்த குழந்தையின் தலையிலும் தலைக்கவசம் மாட்டிவிட்டிருந்தார்கள்.அந்தக்குழந்தை தலைக்கவசத்துடன் அழகாக அங்குமிங்கும் பார்த்தபடி போய்க்கொண்டிருந்தது. ஒரு அழகிய ஊர்வலம்போல் மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.அவர்களிடம் நகரத்தின் அவசரம் எதுவுமிருக்கவில்லை.சூழலின் அமைதியைக் குலைக்கும் இரைச்சல் மிகுந்த,புகை கக்கும் ஊர்திகள் எதுவுமிருக்கவில்லை.அவர்கள் முகத்தில் குதூகலமும் புன்னகையும் குடிகொண்டிருந்தது.வெள்ளைக்க்காரர் மத்தியிலும் இப்படிக்கூட்டுக் குடும்பங்களை காணும்போது எனக்கு நிறைவாக இருக்கும் அதேவேளை ஊரின் நினைவுகளையும் அது கிளறிவிட்டுப் போய்விடும்.எனக்கும் இப்படி ஒரு மிதிவண்டி வாங்கி ஓடவேண்டும் என்று பலநாள் ஆசை.ஆனாலும் பாரிஸ் நகரத்தின் வீதிகளில் யாரைப்பற்றியும் கவலையின்றி விரையும் வாகனங்களுக்குப் பயந்து எனது ஆசையை கிடப்பில் போட்டிருந்தேன்.இவ்வளவு நெருக்கடி மிகுந்த இயந்திரத்தனமான வீதிகளிலும் பயமின்றி மிதிவண்டிகளில் செல்பவர்களைப்பார்த்தால் எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும்.அதிலும் குடும்பமாக மிதிவண்டியில் செல்பவர்கள் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள்.அவர்கள்தான் எத்தனை நெருக்கமாக வாழ்க்கையை உணர்கிறார்கள்.இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருக்கும் இறுக்கம்களையும் மன அழுத்தம்களையும் கரைத்து விடுகின்றன மிதிவண்டிப் பயணங்கள்.

கவலைகளைப்பற்றிய வாசனைகள் எதுவுமறியா என் சிறுவயதுக்காலங்களில் அமைந்த ஒரு மென்மையான நாளில்தான் என் முதல் மிதிவண்டி ஓட்டிய அனுபவம் கிடைத்திருந்தது.முழுமை பெறாத ஒரு மிதிவண்டி ஓட்டலாக அது அமைந்திருந்தாலும் என் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்து என் மனக்குளத்தில் தேங்கிவிட்டிருக்கிறது அந்த நாளின் வாசனைகள்.எனது தந்தையிடம் ஒரு கறுப்பு நிற றலி சைக்கிள் நின்றது.அதன் உயரமும்,நீண்டு அகன்ற அதன் இருக்கையும் மரச்சட்டம் போட்ட பின் இருக்கைகளும் எனக்குப் பயத்தை உண்டுபண்ணி அதை ஓட்டிப்பார்க்க நினைக்கும் என் ஆசையைத் தடுத்துக்கொண்டிருந்தன.எனது தந்தை பாடசாலை விடுமுறை நாட்களில் கிடைக்கும் சில நேரம்களில் ஒரு துணியும் சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெயும்தந்து அந்த மிதிவண்டியை துடைக்கச்சொல்வார்.எங்கள் வீட்டு முற்றத்தில் சிமெண்ட் மேடை ஒன்று இருந்தது.அந்த மேடையின் மேல் மிதிவண்டியை கவிழ்த்து தலைகீழாக நிறுத்தி ஒவ்வொரு கம்பியாகத்துடைத்து றிம் மக்காட் என்று முழுச்சைக்கிலையும் துடைத்து முடிக்கும்போது அது பளபளவென்று அப்பொழுது பிறந்த கன்றுக்குட்டிபோல் மினுங்கிக்கொண்டிருக்கும்.அப்பொழுதிலிருந்தே மிதிவண்டி ஓட்டுவது குறித்த கனவுகள் என்னுள் முகிழ்விடத்தொடங்கியிருந்தன.மிதிவண்டியின் பின்னிருக்கையில் புத்தகப்பையை செருகியபடி எல்லோரும் பார்க்க நான் மிதிவண்டியில் போயிறங்குவதாக கற்பனை செய்து கொள்வேன்.கொஞ்சம் கொஞ்சமாக மிதிவண்டியோடு நான் நெருக்கமாக உணர ஆரம்பித்திருந்தேன்.காலத்தின் சக்கரங்களில் நாட்கள் தேய்பட மிதிவண்டியின் உயரத்துடன் என் உயரமும் சமனாக இருப்பதாக உணர்ந்த நாளொன்றில்தான் மிதிவண்டியை ஓட்டிப்பார்ப்பதற்கான முதல் முயற்சியை செய்து பார்த்தேன்.ஜந்து நிமிடங்களுக்குமேல் நீடிக்காத அந்த பரிசோதனை முயற்ச்சியில் நான் தோற்றுப்போய் விட்டிருந்தேன்.ஒற்றைக்காலால் பெடலை மிதித்தபடி மற்றைய காலை நிலத்தில் ஊன்றி ஊன்றிக் கொஞ்சத்தூரம் நகர்ந்தாலும் துவிச்சக்கரவண்டியின் "கான்ரிலை"எனது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவர முடியவில்லை.அங்குமிங்கும் ஆட்டம் காட்டியபடி என்னைச்சிறிது தூரம் இழுத்துச்சென்ற மிதிவண்டி அந்தக்கல்லு வீதியின் நடுவில் பொத்தென்று என்னையும் இழுத்து விழுத்திவிட்டு முன்சில்லு சுற்ற சிரித்தபடி கிடந்தது. எழுந்து மிதிவண்டியை நிமிர்த்திய எனக்கு காதுப்பக்கம் ஏதோ ஊர்வதுபோல் இருந்தது.கைவைத்து பார்த்தபொழுது ரத்தம் உச்சம்தலையில் இருந்து சொட்டுச்சொட்டாக வடிந்து கொண்டிருந்தது.அப்படியே வீட்டிற்க்குவர ரத்தத்தைப் பார்த்த அம்மா அழுதபடி நாலு வீடு தள்ளி இருந்த முருகேசு ஜயாவிடம்  என்னைக் கூட்டிப்போனார்.முருகேசு ஜயா தமிழ்ப் பரியாரி.காயம்பட்ட இடத்தில் இருந்த தலைமுடியை வட்டமாக வெட்டியகற்றி அந்த இடத்தில் சுண்ணாம்புபோல் வெள்ளை நிறத்தில் இருந்த ஏதோ ஒரு மருந்தைப்பூசி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.தலைக்காயம் மாற மறுபடியும் துவிச்சக்கரவண்டி ஆசை என்னுள் வந்திருந்தது.இந்தமுறை அப்பாவினதும் அம்மாவினதும் உதவியுடன் ஒரே நாளில் துவிச்சக்கரவண்டி ஓடக்கற்றிருந்தேன்.ஆனாலும் என்னால் அந்த முதல்நாள் ஜந்து நிமிட ஓட்டத்தை மறக்கமுடியவில்லை.அன்றிலிருந்து ஏறத்தாழ பதின்நான்கு வருடங்கள் நானும் மிதிவண்டியும் இணைபிரியாத நண்பர்களாகிவிட்டிருந்தோம்.என்னுடைய எல்லாப் பயணங்களிலும் கூடவே வரும் நண்பனாக என்னை அது சுமந்துகொண்டிருந்தது.

நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அப்பா எனக்கு கறுப்பு நிற "லுமாலா" சைக்கில் ஒன்றை வாங்கித்தந்திருந்தார்.என் மகிழ்ச்சி முழுவதையும் உருக்கிச்செய்த கறுப்பு நிற இரும்புத்தோழனாக முற்றத்தில் நெஞ்சை நிமிர்த்தி நின்றுகொண்டிருந்தது அந்த மிதிவண்டி.அன்றைய நாள் முழுவதும் வானத்திலிருந்து தேவதைகள் இறங்கிவந்து என்பாதங்களை தரையில் தங்கிவிடாமல் தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்தார்கள்.அன்றைய பகலும் இரவும் என் தோழ்களில் மலர்களைத்தூவிக்கொண்டிருந்தன.பறந்து பறந்து நண்பர்கள் வீடுகளுக்குச்சென்று என் புதிய மிதிவண்டியைக்காட்டி அவர்களின் கருத்துக்களைச் சேகரித்துக்கொண்டேன்.அழகிய "ஸ்டிக்கர்"களை வாங்கி ஒட்டி அலங்கரிப்பது,கலர்கலரான நூல்களை வாங்கி சக்கரங்களின் கம்பிகளில் கட்டுவது,மக்காட்கல்லு வேண்டிப்பூட்டியது என்று அந்த விடுமுறை முழுவதும் அந்த மிதிவண்டியே என் நாட்க்களை ஆக்கிரமித்திருந்தது.விடுமுறையும் முடிந்து நானும் மிதிவண்டியும் ஓடிஓடிக் களைத்துப்போயிருந்த ஒரு நாளில்தான் அந்த இடப்பெயர்வும் வந்தது.ஊர்கூடித்தெருவிலே மூட்டைமுடிச்சுக்களுடன் ஊர்ந்துகொண்டிருந்தபொழுதொன்றிலே என் தோழனும் எங்கள்வீட்டுப் பொருட்களில் கொஞ்சத்தை சுமந்துகொண்டு என்னுடன் கூட நகர்ந்துகொண்டிருந்தான்.கிளாலிக்கரையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் எனது மிதிவண்டியையும் விடாப்பிடியாக படகேற்றி வன்னிகொண்டுபோய்ச் சேர்த்திருந்தேன்.வன்னி வீதிகளின் புழுதியையும் செம்மண்ணையும் குடித்தபடி சலிக்காமல் அந்த ஒருவருடம் முழுவதும் என் எல்லாப் பயணங்களிலும் என்னைச் சுமந்துகொண்டு திரிந்தது என் மிதிவண்டி.வன்னியில் என் மிதிவண்டிக்குப் பல சோதனைகள்.குடமுடைந்தது,செயின் அறுந்தது,ரியூப் வெடித்தது என்று அந்த ஒருவருடமும் அதற்க்கு சோதனைமேல் சோதனைகள்.பல நூறுமுறை பஞ்சராகி உடம்பு முழுவதும் பல காயங்களை வாங்கியிருந்தன இரண்டு "ரியூப்களும்".வன்னியில் ஒரு வருடத்திற்க்குமேல் தாக்குப் பிடிக்க முடியாமல் நாங்கள் எல்லோரும் யாழ்ப்பாணம் நகர்ந்தபோது எனது மிதிவண்டியும் எங்களுடன் இழுபட்டுக்கொண்டு யாழ்ப்பாணம் வந்துசேர்ந்துவிட்டிருந்தது.

வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் திரும்ப முடிவெடுத்தபொழுதொன்றில் வயதாகிப்போய் மூலையில்கிடந்த அப்பாவின் றலிச்சைக்கிலை பெரிய சுமையாக உணர்ந்த வீட்டார் அதை வன்னியிலேயே விற்றுவிட்டு யாழ்ப்பாணம்போகத் தீர்மானித்தனர்.றலிச்சைக்கிள் எங்களைவிட்டுப் பிரியப்போவதை நினைத்து எரிந்துகொண்டிருந்த என் மனதைப்போலவே எரித்துக்கொண்டிருந்த வெயில் நாளொன்றில் வன்னி விவசாயி ஒருவருக்கு நல்லவிலைக்கு அந்தச்சைக்கிலை விற்றுவிட்டு பயணச்செலவுக்காக அப்பா அந்தப் பணத்தை எண்ணிப் பத்திரப்படுத்திக்கொண்டார்.யாழ்ப்பாணம் போகப்போவதை  எண்ணி வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியோடும்,திளைப்போடும் இருந்தபோது ஏனோ எனக்கு மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.வீட்டின் ஒரு மிகமூத்த உறுப்பினரை இழந்துவிட்டது போன்ற உணர்வு என் உடலெங்கும் பரவி இருந்தது.அந்தச் சைக்கிலுடன் சேர்த்து மிதிவண்டியுடன் ஒட்டிக்கிடந்த எனது சிறுவயது ஞாபகங்களையும் யாரோ பறித்துச்சென்றுவிட்டதைப்போலவே உணர்ந்தேன். துருதுருவென்று நீட்டிக்கொண்டிருந்து சிறுவயதுகளில் என்னைப் பயமுறுத்திய அதன் இருக்கை,சட்டம்போட்ட பின்னிருக்கை,சக்கரக்கம்பிகளில் சுற்றிக்கட்டியிருந்த கலர்கலரான நூல்கள்,சைக்கிலை துடைக்க செயின்கவறை ஒட்டிச் செருகியிருந்த எண்ணெய் தோய்த்த அழுக்குப்படிந்த துணி,புழுதி படிந்த வீதிகள்,மிதிவண்டியின் பின்னால் ஓடிவரும் நண்பர்கள் என்று அந்த மிதிவண்டியோடு சேர்த்து காலம் பலவற்றை அள்ளிச்சென்றுவிட்டாலும் புதிய நினைவுகளை உள்வாங்கிக்கொண்டு வாழ்க்கை நின்றுவிடாமல் வயதான அந்த மிதிவண்டியின் சக்கரங்களைப்போல இன்னமும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் காலத்துடன் சேர்ந்து நானும் என் மிதிவண்டியும் வளர்ந்து தேய்ந்துகொண்டிருந்ததோம்.முதுமையின் அடையாளங்களைச் சுமந்துதிரியும் மனிதர்களைப்போலவே காலத்தின் நீட்ச்சியில் என் கறுப்பு நிற மிதிவண்டியும் மெல்லமெல்ல தன் நிறம்மங்கி கொஞ்சம்கொஞ்சமாக அதன் ஆரம்பகால களையை இழந்துவிட்டிருந்தாலும் என் எல்லாவற்றிலும் அது என்னுடன்கூடவே இருந்தது.இடப்பெயர்வுகளின்போது சுமைகளைப் பகிர்ந்துகொண்டதில்,இழப்புகளில் துவண்டு கிடந்த நேரம்களில் தனிமையைத்தேடிப் பயணிக்கையில்,பந்துவிளையாடும் மைதானத்தில்,கோவில் வீதியில் நண்பர்களுடனான அரட்டைகளில்,மதவடியில் வெட்டியாக நிற்கையில்,நண்பணிண் காதலுக்கு தூதாகப்போகையில்,போரில் இறந்த தோழனின் மரணச்செய்தியை சுமந்து செல்கையில் என்று எல்லாவற்றிலும் கூடவே வந்தது என் மிதிவண்டி. பாடசாலை செல்லும்போதும்,முடிவடைந்து வரும்போதும் வெள்ளைக்கொக்குகளைப்போல் வீதி நீளத்திற்க்குப்போகும் பள்ளித்தோழர்கள்,அழகான பள்ளிக்கூடத்தோழிகளின் புன்னகைகள்,மெதுமெதுவாகப் பின்னேபோகும் கிழுவை வேலிகள்,பூவரசுகள்,மதில்கள்,தண்டவாளமின்றி மொட்டையாகக்கிடந்த யாழ்தேவி பயணித்த புகைவண்டித்தடங்கள் என்று என் மிதிவண்டியுடனான பயணங்கள் அத்தனையும் எத்தனை அழகானவைகள்.இளவயது நண்பர்கள்,பாடசாலை சென்றநாட்கள்,கவலையற்று நண்பர்களுடன் சுற்றித்திரிந்த மாலைப்பொழுதுகள்,அம்மாவின் குளையல் சோறு,அப்பாதரும் சில்லறைக்காசுகள்,நாவல்ப்பழங்கள்,மைக்கறை படிந்த பாடசாலைச்சீருடைகள்,எங்கள் இளவயதுப் புன்னகைகள் என்று காலம் எல்லாவற்றையும் பறித்துவிட்டதைப்போலவே என் பயணத்தோழனையும் எங்கோ பறித்துச்சென்றுவிட்டது.இழந்துஇழந்து இழப்பதற்க்கு எதுவுமின்றி வெளிநாடுகளுக்கு ஓடிவந்த ஈழத்தமிழர்களைப்போலவே நானும் மிதிவண்டியுடன் சேர்த்து எல்லாவற்றையும் இழந்து நாடுகடந்து ஒற்றையாக நின்றாலும் என் நினைவுகளில் நீங்காது நின்று புன்னகைத்துக்கொண்டிருக்கிறான் என் பயணத்தோழன். வெளிநாட்டு நகரங்களின் சிமெண்ட் வீதிகளில் விலையுயர்ந்த துவிச்சக்கர வண்டிகளில் உடம்பு நோகாமல் சவாரி செய்தாலும் எம்பிஎம்பி மிதித்தபடி கால்களிலும் மட்காட்டிலும் புழுதியடிக்க வாழ்க்கையின் மிக அழகிய நாட்களைச் சுழற்றியபடி பயணிக்கும் மண்ணுக்கும் எங்களுக்குமான உணர்வுச்சங்கிலியை இணைத்துவைத்திருக்கும் எம்மூரின் மிதிவண்டிப்பயணங்களுக்கு அவை ஒருபோதும் இணையாக முடியுமா....?

Tuesday 27 December 2011

கார்த்திகைப்பொழுதுகளில் ஆவியாகும் கண்ணீர்த்துளிகள்....

மெல்லக்கடந்து போகும்
கார்த்திகைப்பொழுதுகளின் துடிப்பில்
எழுந்து அடங்கிப்போகின்றன
மாவீரர்களின் ஞாபகங்கள்

சூரியத்துளிகளில் ஒளிரும்
போராளித்தோழர்களின் நினைவுகளில் ஊறிப்போய்
பாரமாய்க்கனக்கின்றன
இந்த மாலைப்பொழுதுகள்

இடிந்து தூர்ந்துபோய்க்கிடக்கும்
கல்லறைகளின் நடுவே
பூத்திருக்கும் புற்களின் இடையே
பறந்து திரியும் வண்ணாத்திப்பூச்சிகளின் சிறகடிப்பில்
சிலிர்த்துக்கொள்கின்றன கார்த்திகைமேகங்கள்

வரலாற்றை எழுதிவிட்டு நிரையாகப்போய்விட்ட
தோழர்தோழியரின் ஞாபகங்களில் 
தோய்ந்தொழுகும் கண்ணீர்த்துளிகளில் இருந்து
ஆவியாகின்றன பல கதைகள்

பறவைகளின் சிறகுகளில் இருந்து
உதிர்ந்துவிழும் இறகுகளில்
இன்னமும் ஒட்டியிருக்கும் சிறு சூட்டைப்போல
தோற்கடிக்கப்பட்ட கோபத்தின் வெம்மைகள்
நினைவுகளில் இன்னமும்
நீறாக உறங்கிக் கிடக்கின்றன

கல்லறைகளில் தவம்கிடக்கும்
காலப்புதல்வர்களின் தியாகங்களை
நெஞ்சறைகளில் சுமந்தபடி
விக்கித்திருக்கிறோம்
இன்னமும் விடியாத இரவுகளில் திசைகளைத்தேடியபடி...

Tuesday 20 December 2011

புதுச்சப்பாத்து.. (சிறுகதை)

(லண்டன் ஒருபேப்பரிற்காக எழுதியது)


தீ,பெருந்தீ,விண்ணைமுட்டும் வேட்கையுடன் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்தது,மனிதர்களை எரித்துஎரித்து எஞ்சிய கரித்துண்டுகள் குவிந்து அந்த இடம் மேடாகி இருந்தது.அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் அந்த சிதையைத்தான் தீ விரைவாகத் தின்றுதீர்த்துவிடவேண்டும் என்ற பெருஞ்சங்கல்ப்பத்துடன் எரித்துக்கொண்டிருந்தது.மாலை நேரத்து மெல்லிருளில் அந்த மயானப் பிரதேசமெங்கினும் அத்தீயின் ஒளியில் கரைந்து செந்நிறமாக உருகிக்கொண்டிருந்தது.சனசந்தடியற்ற அந்தச்சுடலை ஏரியாவில் பினமெரியும் சிதையை சற்றுத்தொலைவில் இருந்து வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் கோபி.தீ எழுந்து வானத்தை தொட்டுவிட எத்தனித்துக்கொண்டிருந்தது.சுடலையை அடுத்திருந்த வயல்வெளியும் வானமும் சந்திக்கும் புள்ளியில் செந்நிற நெருப்புக்கோழமாக கதிரவன் கீழிறங்கிக்கொண்டிருந்தான்.அங்கும் நெருப்பு இங்கும் நெருப்பு.இந்த உலகமே இந்த நெருப்பில்தானே தொடங்கியது.இந்த நெருப்புத்தானே இப்பொழுதும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது.கடைசியில் அந்த நெருப்பே தின்றுவிடுகிறது. ஆடிக்கொண்டிருக்கும் அந்த தீ நாக்குகளின் இடையே அவன் தன்னைப்பார்த்து நடனமாடுவதைப்போல ஒரு பிரமையாக இருந்தது கோபிக்கு.கண்களை கசக்கிவிட்டு மீண்டும் பார்க்கிறான்.இன்னமும் இன்னமும் வேகமாக அவன் தன்னைப்பார்த்து ஆடுவதுபோல இருந்தது கோபிக்கு.நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது அவனுக்கு.இருள் இன்னமும் வேகமாக இறங்கத்தொடங்கியிருந்தது.யாரும் அற்ற அந்த இடத்தில் அவனும் தானும் மட்டுமே இருப்பதுபோல் இருந்தது கோபிக்கு.மெல்லக்கால்களை பின்னோக்கி எடுத்து வைத்து அந்த இடத்தை விட்டு அகலத்தொடங்கினான்.நினைவுக்குமிழிகள் மெல்லமெல்ல மேலெழுந்து வந்து உடைந்துவழியத்தொடங்கின.

***

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்கள்.இறுதித்தவணை,இதைத்தாண்டிவிட்டால் பதினோராம் வகுப்பு.அது முடிந்தால் அவர்கள் பெரியவர்கள்.ஜீன்ஸ் போடத்தொடங்கிவிடுவார்கள்.அதை நினைத்து இப்பொழுதே மனதளவில் அரைவாசி பெரியவர்களாக தங்களைக்கற்பனை செய்துகொண்டு திரிந்தார்கள். அன்று வியாழக்கிழமை.காலைப் பிரார்த்தனை முடிந்ததும் வகுப்புக்கள் ஆரம்பமாகிவிட்டிருந்தன.இந்தத் தவணை கோபி தான் வகுப்புத் தலைவன்.ஒவ்வொரு நாளும் முதல்ப்பாடம் கரும்பலகையின் வலதுபக்க மேல்மூலையில் வகுப்புமாணவர்களின் மொத்த எண்ணிக்கையையும் வரவையும் வகுப்புத்தலைவர் எழுதவேண்டும்.கோபி மாணவர்களை எண்ணி வரவை எழுதிக்கொண்டிருந்தபோது சமூக்கக்கல்வி ஆசிரியர் வகுப்பிற்க்குள் நுழைந்து கொண்டிருந்தார். வியாழக்கிழமைகளில் சமூகக்கல்வி வாத்தியின் பாடம்தான் முதலாவது.இவருக்கு வகுப்பு பொடியள் வைத்த பெயர் "கோல்புறுக் சீர்திருத்தம்".பத்தாம் வகுப்புத்தொடங்கியபோது இவர் ஆரம்பித்த "கோல்புறுக் சீர்திருத்தம்"பற்றிய பாடம்.இப்பொழுது மூன்றாவது தவணை முடிவிலும் தொடர்ந்து கொண்டிருந்தது.இவரின் பாடத்திற்கென்று பிரத்தியேகமாக கோபி ஒரு மைமுடிந்த பேனையையும் நாற்பது ஒற்ரைக்கொப்பி ஒன்றையும் கொண்டுசெல்வான்.அவர் வாசிக்கத்தொடங்கியதும் அவன் மை முடிந்த பேனையால் எழுதிக்கொண்டிருப்பேன்.அன்றும் அப்படித்தான் எழுதுவதுபோல் எழுதாமல் இருந்தபோது வாத்தியார் மேசையில் இருந்த "டஸ்றரை"எடுத்து கோபியை நோக்கி குறிபார்த்துக்கொண்டிருந்தார்.கோபி இருந்தது கடைசிக்கு முதல்மேசை.எந்தவிதத்திலும் அவனின் திருகுதாளத்தை கரும்பலகைக்குப் பக்கத்தில் நிற்கும் வாத்தியார் காண்பதற்க்கு சாத்தியமில்லை.அவனுக்கு குழப்பமாக இருந்தது. வாத்தியார் வீசிய "டஸ்ற்றர்" அவனைத்தாக்கவில்லை.பக்கத்தில் சிவா புத்தகப்பையை மேசையில் வைத்து அதன்மேல் இரு கைகளையும் அணையாக வைத்து பாதி முகத்தை கைகளுக்குள் புதைத்தும் பாதி முகத்தை வெளிக்காட்டியும் சயனத்தில் இருந்தான்.அவன் பாதிமுகம் முழுவதும் சோக்குத்துகள்களால் வெண்ணிறமாக மாறி இருந்தது.அவன் மடியில் வாத்தியார் எறிந்த "டஸ்றர்"கிடந்தது.வகுப்பு ஒருமுறை கொல்லென்று சிரித்து பின்னர் வாத்தியாரின் முறைப்பில் அடங்கியது.சிவா எதுவும் நடக்காததுபோல் முகத்தில் இருந்த சோக்குத்துகள்களை தட்டிவிட்டவாறு எழுந்தான்.அவன் கண்கள் இரண்டும் நித்திரைத்தூக்கத்தில் செங்கட்டிபோல் சிவந்திருந்தன.அவன் சமூகக்கல்வி வாத்தியாரிடம் எறிவாங்குவது இத்துடன் நான்காவது அல்லது ஜந்தாவது தடவையாக இருக்கவேண்டும்.வழமையாக சமூகக்கல்வி வாத்தியாரின் பாடம் என்றால் அவனுக்குத்தூக்கம் வந்துவிடும்.அவரின் வாசிப்பு அவனுக்கு நல்ல தாலாட்டு.அதனால்தான் அன்று முதல்ப்பாடமே அவன் தன்னையறியாமல் தூக்கிப்போய்விட்டிருந்தான்.

***

"நாளைக்குத்தான் கடைசிநாள்,எல்லாருக்கும் ஞாபகமிருக்குத்தான..?"நித்திரை கொண்டதிற்க்கு தண்டனையாக சிவாவை எழுந்து நிற்க்க வைத்துவிட்டு வாசிக்கத்தொடங்கிய வாத்தியார் இடையில் நிறுத்தி எல்லோரையும் பார்த்துக்கேட்டவாறு ஒரு வன்மப்புன்னகையை வீசிவிட்டு தன் "கோல்புறுக் சீர்திருத்தத்தை" தொடர்ந்துகொண்டிருந்தார்.ஒரு கிழமைக்கு முன்னர் கடைசித்திகதியும் கொடுத்து மாணவர்கள் எல்லோரும் சப்பாத்து அணிந்துதான் இனிமேல் வகுப்புக்கு வரவேண்டும் என்று வாத்தியார் அறிவித்திருந்தார்.கோபியும் வீட்டில் சண்டைபிடித்து கறுப்பு நிறத்தில் ஒரு சோடி சப்பாத்துக்களும் அதை பராமரிக்க "பொலிஸிங்கும்" வாங்கியிருந்தான்.மற்றையவர்களும் அப்படித்தான்.வீட்டில் நச்சரிப்புக்கொடுத்து வாங்கிவைத்திருந்தார்கள்.ஒரு சிலர் இப்பொழுதே போடத்தொடங்கியிருந்தார்கள்.சிலர் கடைசித்திகதி முடியட்டும் அதுவரை காத்தோட்டமாகத்திரிவம் என்று செருப்புடன் வந்திருந்தார்கள். பாவம் சிவாமட்டும்தான் இன்னமும் வாங்கியிருக்கவில்லை.அவன் வீட்டில் மிகவும் கஸ்ரம்.தந்தையின் தோட்டத்தை நம்பித்தான் அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது."இன்னும் ஒரு இரண்டு நாள் பொறு,பூசனிக்காய்கள் முற்றிவிடும் வித்துச்சப்பாத்துக்கள் வாங்கித்தருவதாக தந்தைகூறியதாகவும் அதற்கிடையில் வாத்தி சொன்ன காலக்கெடு முடிந்துவிடும் என்ன தண்டனை தரப்போகிறார்களோ தெரியவில்லை என்றும் அன்றுகாலையில்தான் கோபியிடம் சொல்லிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தான்.வாத்தியார் திரும்பவும் அதை நினைவூட்டியபோது கவலைக்கோடுகள் படர்ந்து சிவாவின் முகம் வாடிப்போய் விட்டிருந்ததை கோபி அவதானித்திருந்தான்.

***

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை என்பதால் பிரார்த்தனை மண்டபத்திற்க்குப் போவதற்க்காக அனைவரும் வகுப்பிற்க்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்கள்.வாத்தியார் ஒன்றன்பின் ஒன்றாக லைனில் நின்ற எல்லோரது கால்களையும் பார்த்தவாறு வந்துகொண்டிருந்தார்.கையில் கோபி நேற்றுமாலை வெட்டிக்காயவைத்து கொண்டுவந்திருந்த பூவரசந்தடிப் பிரம்பு பயமுறுத்திக்கொண்டிருந்தது.புதிய சப்பாத்துக்களைப்போட்டிருந்த மகிழ்ச்சியில் எல்லோரும் மிடுக்காக நின்றுகொண்டிருந்தார்கள்.பாவம் சிவாமட்டும் வரிசையில் கடைசியில் காலில் செருப்புடன் எல்லோருக்கும் பின்னால் மறைந்துமறைந்து பயத்திலும் வெட்க்கத்திலும் நெளிந்துகொண்டிருந்தான்.கோபியின் வகுப்பு மட்டுமன்றி பக்கத்து வகுப்புக்களும் பிரார்த்தனை மண்டபத்திற்க்குப் போவதற்க்காக வெளியில் வந்து வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.அத்தனைபேரின் கால்களிலும் புதிய சப்பாத்துக்கள் பளபளத்துக்கொண்டிருந்தன.எல்லோரின் சப்பாத்துக்களும் சிவாவின் செருப்பை ஏளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தன வாத்தியார் கடைசி வரிசையை நெருங்கநெருங்க எல்லோரின் கண்களும் கேள்விக்குறியுடன் சிவாமேல் நிலைகுத்தியிருந்தன."பள்ளிக்கூட மானத்தை வாங்கிறதுக்கெண்டே வாச்சிருக்குதுவள்,படிப்பறிவும் ஏறாது நித்திரை கொள்ளுறதுக்கெண்டே இஞ்ச வாறதுவள்,உன்னையெல்லாம் ஆர் இந்தப்பள்ளிக்கூடத்திலை சேத்தது..?"வாத்தி கத்திக்கொண்டே சிவாவின் கையைப்பிடித்து தரதரவென்று இழுத்துகொண்டுபோய் மைதானத்தில வைத்து அடிஅடியென்று அடித்துத்துவைத்துக்கொண்டிருந்தார்.பூவரசந்தடி பிய்ந்து தும்பாகிக்கொண்டிருந்தது.பாடசாலை முழுவதும் அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.கோபிக்கு தான் கொண்டுவந்திருந்த பூவரசந்தடியால் சிவாவுக்கு விழுந்த ஒவ்வொரு அடியும் தன்மேல் விழுந்து அவன் உடலெங்கும் வலிப்பதுபோலிருந்தது. நடு மைதானத்தில் அவனை நிற்க்கவைத்துவிட்டு மற்றவர்களையெல்லாம் பிராத்தனை மண்டபத்திற்க்கு அனுப்பிவிட்டனர்.அன்று மதிய இடைவேளை வரை அவனை மைதானத்தில் நிற்க்கவைத்துவிட்டு வீட்டுக்குப்போய் சப்பாத்து வாங்கிப்போட்டுக்கொண்டு பாடசாலைக்கு வரும்படி பாதியிலேயே வீட்டிற்க்கு அனுப்பிவிட்டார் வாத்தியார்.கோபிக்கு எந்தப்பாடமும் மனதில் ஏறவில்லை.சிவாவின் சிவந்து வீங்கியிருந்த கால்தழும்புகளும் வெட்கத்திலும் அவமானத்திலும் கூனிப்போயிருந்த அவன் முகமுமே அன்று முழுவதும் அவன் மனத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.

***

ஞாயிற்றுக்கிழமை சனநடமாட்டம் குறைந்து அந்த பிரதான வீதி வெறித்துப்போயிருந்தது."டேய் ரெடியாகுடா" றோட்டைப் பார்த்துக்கொண்டிருந்த சுஜீவன் கத்தினான்.அந்த வெறுங்காணிக்குள் வளர்ந்திருந்த குட்டைப்பற்றைக்குப் பின்னால் கையில் றிமோல்ட்டுடன் வீதியை அவதானித்துக் கொண்டிருந்த கோபி சுஜிவனின் எச்சரிக்கையுடன் தயார் நிலைக்கு வந்தான்.ஆமியின் துருப்புக்காவி ஒன்று ஆனையிறவுப்பக்கமாக வேகமாக வந்து கொண்டிருந்தது."ஒன்று,இரண்டு,மூன்று" கோபி மனதிற்க்குள் என்னவும் துருப்புக்காவி அவனைக்கடக்கவும் சரியாக இருந்தது.தன் விரல்கள் றிமோல்ட்கொன்றோலின் பட்டன்களை அழுத்திவிட்டன என்பதை கோபியின் மூளை உணர்வதற்க்கிடையில் அவன் பொருத்தியிருந்த கிளைமோர் பெருஞ்சத்தத்துடன் வெடித்தது.மகே அம்மே சத்தங்களுடன் ஜயோ அம்மா என்ற ஒரு சத்தமும் கேட்டது.அப்பொழுதுதான் கிளைவீதியால் மெயின் றோட்டுக்கேறிய யாரோ ஒருத்தரை சைக்கிலுடன் தூக்கி வேலிக்குள் எறிந்துவிட்டிருந்தது கிளைமோர். துருப்புக்காவி எரிந்தபடி றெயில்றோட்டைக் கடந்து தாறுமாறாக ஓடி அந்தப்பக்கம் இருந்த வீட்டு மதில் ஒன்றில் மோதி ஓய்வுக்கு வந்தது.தயாராக நின்ற சுஜிவன் மிதிவண்டியை எடுக்க எதையும் பார்க்க நேரமின்றி திரும்பிப்பார்க்காமல் வேகமாக ஓடிவந்த கோபி மிதிவண்டியின் பின் இருக்கையில் ஏறிக்கொண்டான்.சுஜிவன் மிதிவண்டியை கண்ணண் இருந்த வீட்டுப்பக்கமாக வேகமாகச்செலுத்தினான்.கண்ணண் ஆமிக்கட்டுப்பாட்டுக்குள் செயற்பட்டுக்கொண்டிருந்த இயக்க உறுப்பினன்.அவனுக்கு தானே நேராகக் கொண்டுசென்று குண்டுகளை வைப்பதைவிட நம்பிக்கையான பள்ளிக்கூடப்பொடியளிடம் கொடுத்துவிட்டுச் செய்விப்பது இலகுவானதாக இருந்தது.ஆமியின் சோதனைச் சாவடிகளில் கண்ணண் அகப்படுவதற்க்கு சந்தர்ப்பம் அதிகமிருந்தது.அதனாலேயே கண்ணண் நம்பிக்கையான பள்ளிக்கூடப் பொடியளைக்கொண்டு ஆமிக்கட்டுப்பாட்டுக்குள் பலதாக்குதல்களைச் செய்வித்துக்கொண்டிருந்தான்.பொடியளும் பிஸ்ரல்,குண்டுகளை இடுப்பில கட்டிக்கொண்டுபோய் சகபொடியளையும் பிடிக்காத ஆட்க்களையும் வெருட்டலாம் எண்ட புழுகில கண்ணணின் காலைச்சுற்றிக்கொண்டு திரிந்தார்கள். அப்படிக் கண்ணனிடம் நட்பானவர்கள்தான் கோபியும்,சுஜிவனும்.கண்ணனுக்கு யார் எறிகிறார்கள்,யார் வெடிக்க வெடிக்க வைக்கிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் கவலையில்லை.ராணுவத்திற்க்கு இழப்பேற்படவேண்டும் என்பதே அவனது குறிக்கோளாக இருந்தது.ஒவ்வொரு தாக்குதலுக்கும் கண்ணணுக்குத்தான் வன்னியில் றாங் கூடிக்கொண்டிருந்தது.கண்ணணிடம் தாக்குதலைப்பற்றிய தகவலைச் சொல்லிவிட்டு மூச்சிரைக்க வீடுவந்த கோபிக்கு கிளைமோர் அடி எப்படி என்று அறியவேணும் எண்ட ஆவலே மண்டையைக்குடைந்துகொண்டிருந்தது.யாரிடமும் விசாரிக்கப் பயமாக இருந்தது.றேடியோவை முறுக்கிமுறுக்கி எல்லா ஸ்ரேசனையும் பிடித்துப்பார்த்தான்.எதிலுமே சம்பவத்தைப்பற்றி எந்தவித தகவலும் வரவில்லை.சரி விடியட்டும் நியூஸ்பேப்பர் பாத்து அறிவம் என்று நினைத்தபடி தூங்கிப்போனான்.

***

அடுத்தநாள் கோபி பாடசாலை வந்தபோது அந்தச்செய்தி பாடசாலை எங்கும் தீ போல் பரவி இருந்தது.நேற்றைய சம்பவத்தில் அகப்பட்டு இறந்த பொதுமகன் நம்ம சிவாதானாம்.யார் சொன்னதென்று கூடப்பார்க்கவில்லை காதில்க் கேட்டதும் கோபிக்கு தலை விறைத்து கால்கள் தள்ளாடுவதுபோல் இருந்தது.புத்தகப்பையை வகுப்பில் எறிந்துவிட்டு சிவா வீடு நோக்கி விரைந்தான்.ஏற்கனவே வகுப்புப் பொடியளால் சிவா வீடு நிறைந்திருந்தது.அவன் அண்ணண்தான் வாசலில் நின்றுகொண்டிருந்தான்.சிவா நேற்று மதியம் முற்றிப்பழுத்த பூசனிக்காய்களை ஒரு சாக்கில்போட்டுக் கட்டி எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போயிருந்தானாம்.அந்தச் சீசன் சந்தையில் பூசணிக்காய் நல்ல விலைக்குப் போய்க்கொண்டிருந்தது."இண்டைக்கு நல்ல விலைக்கு பூசணிக்காய்களை வித்துப்போட்டு சப்பாத்தும் வாங்கிக்கொண்டு மிச்சக்காசுக்கு வீட்டுக்குத்தேவையான சாமான்களும் கொஞ்சம் வாங்கிக்கொண்டு வாறன் எண்டு அம்மாவிடம் சொல்லிப்போட்டுப்போனவன் அந்தா கிடக்கிறான் போய்ப்பாராடா என்று அவனைக்கிடத்தியிருந்த பக்கமாக கைகளைக்காட்டி அழுதுகொண்டிருந்தான் அண்ணன்.குளிப்பாட்டி சிவாவைக் கிடத்தியிருந்தார்கள்.சமூகக்கல்வி வாத்தியார் கால்மாட்டில் நின்று குலுங்கிக்குலுங்கி அழுதுகொண்டிருந்தார்.சிவாவின் கால்களில் அவன் வாங்கிவந்திருந்த புதிய சப்பாத்துக்கள் பளபளத்துக்கொண்டிருந்தன.

***

சிவா எரிந்துகொண்டிருந்தான்.நேற்றுவரைக்கும் அவனுடன் பயணம்செய்த பள்ளித்தோழனை சிதை எரித்துக்கொண்டிருந்தது.எரிந்துகொண்டிருக்கும் தீ நாக்குகளிடையே அவன் எழுந்துவந்து தன்சாவிற்க்கு நீதிகேட்பதுபோலிருந்தது கோபிக்கு.தொடர்ந்து அங்கு நிற்க்க முடியாமல் வீடுநோக்கி நடந்தான்."ஆமிக்குச் செம அடியாம்,நல்ல இழப்பாம்,வாகனத்தில் வந்த ஒருத்தரும் மிஞ்சவில்லையாம்"ஊருக்குள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் நேற்றைய கிளைமோர் அடியைப்பற்றியே பேசிக்கொண்டனர்.சிவாவை எல்லோரும் மறந்துபோய் விட்டிருந்தனர். "சண்டையெண்டால் சனம் சாகிறது சகஜம்தான" தன்னைத்தானே சமாதானம் செய்தபடி வீட்டிற்க்குள் நுழைந்த கோபியை வாசலில் அவன் வாங்கிவைத்திருந்த புதுச்சப்பாத்துக்கள் வரவேற்றன...

Monday 19 December 2011

புதிய தலைமுறை...(சிறுகதை)

நான் குடியிருக்கும் மாடிப்பகுதியில் எங்கள் வீட்டிற்க்குப் பக்கத்து வீட்டில் புதியதாக ஒரு தமிழ் ஜயர்க் குடும்பம் வந்திருப்பதாக றூமில் இருந்த நண்பர்கள் கதைத்தது கட்டிலில் படுத்திருந்த எனது காதில் விழுந்தது. ஜயர் என்ற வார்த்தையைக் கேட்டதும் எனக்கு எப்பொழுதும் ஜோசப்பினதும் சுமதியினதும் நினைவுதான் வரும்.ஜோசப்பினது திருமணத்தின்போது என்னைச் சோகமாகப் பார்த்த அவனது பார்வை இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.சுமதியைப் பற்றிய கவலை இன்றுவரைக்கும் என் மனதில் ஒரு ஆறாத காயமாக இருக்கிறது. அதனால்தான் இன்றும் அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறேன்.எங்கு போகப் போகிறார்கள் பக்கத்து வீட்டில்தானே இருக்கிறார்கள் ஆறுதலாக சந்திக்கும்போது விசாரிப்போம் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.அடுத்த நாள் மாலை நான் வேலை முடித்து வந்துகொண்டிருந்தேன்.எங்களது வீடு மூன்றாவது தளத்தில் உள்ளது. லிப்ற் இருந்தாலும் உடம்ப்பிற்க்கு நல்லதென்று நான் படியால் ஏறிச்செல்வதுதான் வழக்கம்.அன்று சற்றுக் களைப்பாக இருந்ததால் லிப்ற்றில் ஏறினேன்.மூன்றாவது தளத்திற்க்கு வந்து லிப்ற் கதவு திறந்து கொண்டபோது என் கண்களையே நம்ப முடியாதபடி வெளியே சுமதி நின்று கொண்டிருந்தாள்.என்னைக்கண்டதும் அவளும் தடுமாறிப்போனால்.கொஞ்சம் உடம்பு போட்டிருந்தாள்.ஆனாலும் அதே இளமைக்கால அழகின் கோடுகள் அப்படியே இருந்தன அவள் முகத்தில்.படிக்கும் காலம் வரைக்கும் எதுவுமே மாறாததுபோல் அப்படியே இருப்பதாகத் தோன்றும் உலகமும் உறவுகளும் நண்பர்களும் அதன் பின்னர் ஏற்படும் பிரிவுகளின் பின் சந்திக்கும்போதுதான் அவை எல்லாவற்றையும் ஒரு கனவுபோல் இழந்துவிட்டிருப்பதை நினைவுபடுத்துகின்றன.மனிதர்களையும் இழுத்துக்கொண்டுசெல்லும் தன் பயணத்தில் காலம் எவ்வளவு மாற்றங்களை மனித உடம்பிலும் உள்ளத்திலும் நிகழ்த்திவிடுகிறது.சுமதியைக் கண்டவுடன் பல நினைவுகள் மனதில் எழுந்து என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தன.எவ்வளவு காலத்திற்க்குப் பின்னர் சந்திக்கிறோம்.எங்கள் மூவராலும் மறக்கக்கூடிய நினைவுகளா அவை.

***

எனக்கும்,ஜோசப்பிற்க்கும்,சுமதிக்கும் ஒரே வயது,ஒரே ஊர்,ஒன்றாகத்தான் மூவரும் படித்தோம்.நானும் ஜோசப்பும் பட்டாம் பூச்சிகள் பிடிக்கும் காலத்திலிருந்தே ஒன்றாகத்தான் ஊரில் சுற்றித்திரிந்தோம்.நான் கொஞ்சம் பயந்தவன்.பிரச்சனைகளுக்குப் போவதில்லை.ஜோசப் எனக்கு நேரெதிர்.பிரச்சனை என்றால் பின்னிற்க்க மாட்டான்.மூக்கின் நுனியில் கோபத்தை வைத்துக்கொண்டு அலைந்தான்.எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் பேசாமல் இருந்தாலும் அவன் விடமாட்டான்.அதற்க்கு ஒரு முடிவைக்கண்டுவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பான்.எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் பிரச்சனைப்பட்ட பக்கத்து வகுப்புப் பெடியனுக்கு பென்சில்க்கூரால் ஆழமாகக் குத்திவிட்டான். விடயம் அதிபர்வரைபோய் பெற்றோர் அழைக்கப்பட்டு எச்சரித்து வகுப்பிற்க்கு அனுமதிக்கப்பட்டிருந்தான்.இப்படி நிறையக் கதைகள் எங்களிருவரினதும் சிறுவயதில் உள்ளன.சுமதி ஜயர்ப் பெட்டை.எங்கள் ஊரிலேயே மிகவும் அழகானவள்.சுமதியை சைற் அடிப்பதற்காகவே எங்கள் ஊர் வீதியால் பக்கத்து ஊர்ப்பொடியள் அலுவலாக எங்கோ போவதுபோல் அக்ற் பண்ணிக்கொண்டு போவதுண்டு.கொஞ்சப்பொடியள் எங்கட ஊர்ப்பொடியளுடன் நட்ப்புப்பாராட்டி அந்தச்சாட்டில் சுமதியைப் பார்க்க வருவதுண்டு.ஜோசப்பிற்க்கு சிறுவயதிலிருந்தே சுமதிமேல் ஒருகண்.அதிஸ்டமும் அவன் பக்கமிருந்தது.சுமதியும் எங்களுடன் தான் சிறுவயதில் பாடசாலைக்கு வருவாள்.நாங்கள் மூன்றுபேரும் வாத்திமாரை நக்கலடித்தபடியும்,கோயில் திருவிழாவைப்பற்றியும் வீட்டுப்பாடங்களைப்பற்றியும் கதைத்த படியும் ஒன்றாகவே நடையில் பள்ளிக்கூடம் போவோம்.இதனால் மற்றவர்களை விட சிறுவயதிலிருந்தே சுமதியுடன் பழகும் வாய்ப்பு இலவசமாக ஜோசப்பிற்க்கு கிடைத்தது.சுமதிக்கும் நாளடைவில் சேவலுடன் திரியும் பெட்டைக் கோழிபோல் அவன்மேல் ஒரு இது வந்திருந்தது.இது எனக்கு அப்பொழுதே சாடைமாடையாய் விளங்கியிருந்தது.சுமதி இவனுடன் சிரித்துப் பேசுவதால் ஊரில் நிறையப் பொடியளின் வயித்தெரிச்சலை ஜோசப் சம்பாதிச்சிருந்தான்.பின்னாளில் கால ஓட்டத்தில் நாங்கள் மூவரும் சைக்கிலிற்க்கு மாறியிருந்தோம்.எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைக்கிறேன்,எங்களுக்கு கொஞ்சம் வெக்கம் வரத்தொடங்கியபோது நானும் ஜோசப்பும் சுமதியைப் பள்ளிக்கூடம் போகவிட்டு அவள் போனபின்னர் சற்றுத் தாமதமாகத்தான் போவோம்.அவளுக்கும் அது விளங்கியிருந்தது.அவளும் அதற்கேற்றாற்போல் கொஞ்சம் ஏளியாகவே போவாள்.பத்தாம் வகுப்பு படிக்கும்போது பருவம் எங்களுக்குள் பல மாற்றங்களைச் செய்திருந்தது.மெல்ல மெல்ல முகத்தில் மீசை மயிர்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தன எங்களிருவருக்கும்.சுமதியும் வயதுக்கு வந்து வீடியோ போட்டோவுடன் அமோகமாக அவளின் சாமத்தியவீட்டுச்சடங்கும் முடிந்துவிட்டிருந்தது.நாங்கள் சுமதியுடன் இப்பொழுது அதிகம் பேசுவதில்லை.ஆனால் முன்னரைவிட அதிகமாகவே ஜோசப்பும் சுமதியும் கண்களால் பேசுவதாக எனக்கு விளங்கியது.விரைவிலேயே ஜோசப்பும் விடயத்துடன் என்னிடம் வந்து நின்றான்."மச்சான் நீ தான் சுமதியிட்ட முடிவு கேட்டுச்சொல்லவேணும்" என்று என் முடியைப் பிடுங்காத குறையாக காலைச்சுற்றிக்கொண்டு திரிந்தான்.இவனின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் விசப்பரீட்ச்சையில் இறங்கிப்பார்ப்போம் என்று தீர்மானித்தேன்.வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளே உடல் முழுவதும் உதறலெடுத்துக் கொண்டிருந்தது.ஒருவேளை சுமதி வீட்டில் சொல்லிவிட்டால் என் நிலமை..?என்றாலும் நண்பனுக்காக கேட்டுவிடுவோம் என்று முடிவெடுத்து ஒரு வெள்ளிக்கிழமை மாலை தயாரானேன்.

***

ஜோசப்பின் முழுப்பெயர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ஜோசப்.ஜோசப் வீடு பரம்பரை ரோமன் கத்தோலிக்கக் குடும்பம்.அப்பா பெயர் அந்தோணிப்பிள்ளை.அம்மா பெயர் சகாயமேரி.ஜோசப் வீட்டில் ஒரே ஒரு பிள்ளை.ஜோசப் எது கேட்டாலும் உடனே வாங்கிக்கொடுத்துவிடுவார் அவன் தந்தை.ஜோசப்பைப் பார்ப்பதற்காக நான் அவர்கள் வீட்டிற்க்கு அடிக்கடி செல்வேன்.என்னையும் தங்கள் பிள்ளைபோலவே ஜோசப் வீட்டார் நடத்தினர்.ஜோசப்பின் தந்தையும் தாயும் என்னைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை.தம்பி என்றுதான் கூப்பிடுவார்கள்.தீபாவளி,தைப்பொங்கல் போன்ற விசேசம்கள் வந்தால் அவர்கள் கிறிஸ்த்தவர்களாக இருந்தாலும் எனக்கு காசு அல்லது புது உடுப்பு எடுத்துத் தருவார்கள்.நான் வேண்டாமென்றாலும் அவர்கள் விடமாட்டார்கள்.நானும் எங்கள் வீட்டுப் பண்டிகைக்கால உணவுவகைகளை எடுத்துச்சென்று கொடுப்பேன்.ஜோசப்பிற்க்கு எந்தவித மத நம்பிக்கையும் இல்லை.சுமதியை லவ் பண்ணத்தொடங்கிய நாளிலிருந்து"மச்சான் நான் ஜயர் வீட்டில் பிறக்காமல் வேதக்கார வீட்டில் பிறந்தது நான் செய்த தவறாடா"என்று என்னை அடிக்கடி கேட்பான்.எனக்கு அப்பொழுது அவனைப்பார்க்க பாவமாக இருக்கும்.ஜோசப் எங்கள் ஊர்க்கோவில் திருவிழாக்களுக்கெல்லாம் தவறாமல் வருவான்.வில்லுப்பாட்டு,மேளக்கச்சேரி,இசைக்குழு என்று விடிய விடிய எங்களுடனேயே திரிவான்.எனக்கு இந்தக் கோவில்,திருவிழாக்கள் இவற்றில் எல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இல்லை.ஆனாலும் ஜோசப்பைப்போல ஒட்டாமல் நின்று புதினம் பார்க்கப் போவேன்.ஜோசப்பும் சுமதியும் இரு வேறு உலகங்களில் இருந்தார்கள்.இவர்களுக்குள் காதல் வருமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.ஆனால் அதுதான் நடந்தது.

***

சுமதியின் அம்மாபெயர் காயத்ரி.அப்பா பெயர் வெங்கடேச ஜயர்.சுமதிக்கு இரண்டு அண்ணண்மார் இருந்தார்கள்.அவர்கள் இருவர் பெயரும் வெங்கடேச என்று தொடங்கி இடையில் என்னவோ வந்து கடைசியில் ஜயர் என்று முடியும்.அது எனக்கு நினைவில்லை.சுமதியின் பெயர் மட்டும் அந்த சுற்று வட்டாரத்தில் எல்லாப் பொடியளுக்கும் நன்கு தெரிந்த ஒன்றாக இருந்தது.சுமதி இயல்பிலேயே மிகவும் அமைதியானவள்.அவள் பாடசாலை தவிர்த்து மற்றைய நேரங்களில் வெளியே போய் நான் பார்த்ததில்லை.ஏதாவது நோட்டுப் புத்தகங்கள் தேவையென்றால் தோழிகள் அவளைத்தேடி வருவதுண்டு.அவர்களுடனும் அவள் அதிக நேரம் உரையாடி நான் பார்த்ததில்லை.பாடசாலையிலும் அவள் தேவையற்றுக் கதைத்து நான் கண்டதில்லை.அவளுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை.வகுப்பில் அவள்தான் படிப்பில் முதலிடம்.நான் நடுத்தரக் குடும்பங்கள்போல் கடைசியுமின்றி முதலுமின்றி எப்பவும் நடுவிலதான் நிற்பன்.ஜோசப் அப்பப்ப மேலேபோய்க் கீழே வந்து கொண்டிருப்பான்.ஆனால் சுமதி மட்டும் தளம்பாமல் ஒவ்வொரு தவணையும் முதலாம் பிள்ளையாகவே வருவாள்.நன்றாகப் படிக்கிற பிள்ளைகள் எல்லாம் இப்படித்தான் சுமதியைப்போல் இருப்பார்கள்போலும் என்று நான் மனதிற்குள் நினைப்பதுண்டு.சுமதியைப்போல நானும் ஆக்களுடன் அதிகம் பேசாமலும் பொடியளுடன் சுத்தித்திரியாமலும் ஒருதவணை அவளைப்போலவே இருந்து முயற்ச்சி செய்து பார்த்தேன்.ஆனால் என்னால் பாடசாலை ரிப்போட்டில் வழமைபோல வரும் நடுப்பொசிசனில் இருந்து இம்மியும் முன்னேற முடியவில்லை.சலிப்படைந்த நான் அந்தத்தவணையுடன் அந்த முயற்ச்சியைக் கைவிட்டுவிட்டேன்.எங்களுடைய படிப்பும் காலமும் இப்படிப் போய்க்கொண்டிருந்தபோதுதான் ஜோசப் தன் காதலுக்கு உதவிகேட்டு என்னிடம் வந்திருந்தான்.சுமதி மீது நான் நிறைய மதிப்பு வைத்திருந்தும் ஜோசப் என் நெருங்கிய நண்பன் என்பதால் ஜோசப்பின் காதலிற்கு தூதுவனாகச் செல்ல முடிவெடுத்தேன்.

***

அந்த வெள்ளிக்கிழமையும் வந்து சுமதியின் காதில் நான் ஜோசப்பின் லவ் மேற்றரைப் போட்டபோது சுமதி ஒரு சிரிப்புடன் சென்றுவிட்டாள்.எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை.குழம்பியவனாக ஜோசப்பிடம் வந்து நடந்ததைக் கூறினேன்.அவன் கையில் ஒரு தேங்காயுடனும் சில கற்பூரங்களுடனும் நின்றுகொண்டிருந்தான்.நான் சொன்னதைக் கேட்டதும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காத குறையாக என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.சுமதி அவனைக் காதலிப்பதாலேயே அவள் சிரித்துவிட்டுச் சென்றதாக உறுதியாகக் கூறினான்.கூறிவிட்டு நில்லாது பிள்ளையாருக்கு நேர்த்தியை முடிக்க தேங்காய் மற்றும் கற்பூரத்தூடன் விரைந்தான்.எனக்குச் சிரிப்பாக இருந்தது.கடவுள் நம்பிக்கை இல்லாதவனை பிள்ளையாருக்கு நேர்த்திவைக்க வைத்த காதலை நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது.ஜோசப்பால் பிள்ளையாருக்கு ஒரு தேங்காயும் சில கற்பூரங்களும் இலாபம் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.இது நடந்து மூண்றாவது நாள் ஜோசப் கையில் ஒரு என்வலப்புடன் என்னைத்தேடி வந்திருந்தான்.என்வலப்பிற்க்குள் சுமதி அவனுக்கு எழுதிய காதல் கடிதம் இருந்தது.ஜோசப்பின் முகத்தில் ஒரு வெற்றிப்பெருமிதம் தெரிந்தது.இவ்வளவு விரைவாக இந்த விடயம் சுபமாக ஆனதில் எனக்கு நிம்மதியாக இருந்தது.ஏனெனில் சுமதியிடம் ஜோசப்பின் காதலை சொல்லிய நாளிலிருந்து நான் நிம்மதியாகத் தூங்கவில்லை.ஜயர் மனைவியுடன் எங்கள் வீட்டுப் பக்கம் வருகிறாரா என்று பயத்துடன் எட்டி எட்டிப் பார்ப்பதிலேயே அந்த மூன்று நாட்களும் போயிருந்தது.இது சுபமாக முடிந்ததில் ஜோசப்பைவிட எனக்குத்தான் பெரும் நிம்மதியாக இருந்தது.காலமும் வளர அவர்கள் காதலும் வளர்ந்துகொண்டிருந்தது.பள்ளியில் படிக்கும் வரைக்கும் அவர்களை யாரும் சந்தேகிக்கவில்லை.வழமைபோலக் கதைப்பதாகவே ஊரவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.ஆனால் பள்ளிப் படிப்பு முடிந்ததும்தான் பிரச்சனை ஆரம்பமானது.

***

உயர்தரப் பரீட்ச்சை முடிந்து முடிவு வருவதற்காக நாங்கள் எல்லோரும் ஒருவருடம் வீட்டில் காத்திருக்க வேண்டியிருந்தது.எப்பொழுதும் பாடசாலையைத் தவிர்த்து வேறு அலுவல்களுக்கு அவ்வளவாக வெளியேபோகாத சுமதி இப்பொழுதெல்லாம் நூலகத்திற்க்கென்றும்,கடைக்கென்றும்,தோழிகளைப் பார்க்கவென்றும் புதிதுபுதிதாக காரணங்களைக்கூறி அடிக்கடி வெளியேபோய்க்கொண்டிருந்தாள்.ஜோசப்பும் எங்களுடன் சுற்றிக்கொண்டு திரியும்போது திடீர் திடீர் என்று காணாமல்ப் போனான்.எனக்குத் தெரியும் சுமதியைப் பார்க்கத்தான் போகிறான் என்று."மச்சான் பாத்துச் சூதானமாகப் போட்டுவாடா ஊராக்களின் கண்ணில் பட்டிடாதையடா" என்று காதுக்குள் இரகசியமாகச் சொல்லி அனுப்புவேன்.அவனும் ஒரு புன்னகையுடன் சென்றுவிடுவான்.அன்றும் அப்படித்தான் போனவன் போய்ச் சற்று நேரத்திற்க்கெல்லாம் கண்ணில் கலவரத்துடன் வேகமாகத் திரும்பிவந்தான்."மச்சான் சுமதியின் அண்ணண் நாங்கள் வயல்க்கரை றோட்டில் கதைத்துக்கொண்டு நின்றதைக் கண்டுவிட்டானடா.சுமதியைப் பார்த்து பல்லை நெருமிக்கொண்டு போனவன்.சுமதி அழுது கொண்டே வீட்டுக்குப் போய்விட்டாளடா.என்ன பிரச்சனை வரப்போகுதோ" என்று கவலையுடன் கூறினான்.கவலைப் படாதே என்ன பிரச்சனை வந்தாலும் நாங்கள் இருக்கிறம் என்று அவனுக்குத் தைரியம்கூறினேன். ஆனால் எனக்கு உள்ளூரப் பயத்தில் நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது.அடுத்து வந்த நாட்கள் அமைதியாகவே போய்க்கொண்டிருந்தது.ஜோசப்தான் ரென்சனுடன் என்னிடம் வருவதும் போவதுமாக இருந்தான்.சுமதி வீட்டிலிருந்து எந்த சப்தத்தையும் காணவில்லை.சுமதியின் தந்தை பூசை செய்யும் பிள்ளையார் கோவிலும் பூசையின்றிப் பூட்டப்பட்டுக் கிடந்தது.கோவில் தருமகர்த்தாவிடம் விசாரித்தபோது ஜயர் வீடு சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ போய் விட்டதாகவும் கோவிலை இப்படியே பூசையின்றி விடமுடியாதென்றும் இன்னும் இரண்டு நாட்கள் பார்த்துவிட்டு வேறு ஜயரைப் போடப்போவதாகவும் தனது கவலையைச் சொல்லிக்கொண்டிருந்தார் தர்மகர்த்தா.நாங்கள் பல இடமும் தேடிப்பார்த்தும்,பலரிடம் விசாரித்துப்பார்த்தும் எந்தத்தகவலும் கிடைக்கவில்லை.தர்மகர்த்தாவை தூண்டிவிட்டு ஜயரின் மனைவியின் ஊரில் இருந்த உறவினர்களிடம் விசாரித்தபோது ஜயர் குடும்பத்துடன் வெளிநாடு போவதற்காக கொழும்பு போய்விட்டதாகவும் ஆனால் கொழும்பில் எங்கிருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லையென்றும் தர்மகர்த்தா மூலம் தகவல் கிடைத்தது.நானும் ஜோசப்பும் கொழும்புபோய் லொட்ஜில் தங்கியிருந்து எல்லா இடத்திலும் தேடிப்பார்த்தும் எந்தத்தகவலும் கிடைக்கவில்லை.ஒரு மாதம் தங்கியிருந்தும் கண்டுபிடிக்க முடியாததால் திரும்பி ஊருக்கே வந்துவிட்டோம்.பின்னர் கொஞ்சக்காலத்தில் நானும் ஜோசப்பும் ஊரில் அநேகமான இளம்பொடியள் வெளிநாடுபோவதையும் திடீர்ப் பணக்காறரான அவங்கட வீட்டுக்காரற்றை நெளிப்புச்சுழிப்புவளையும் பாத்திட்டு ஏஜென்சிக்குக் காசு கட்டி பிரான்ஸ் வந்து சேர்ந்திட்டம்.சுமதியை நினைத்துக் கலியாணம் கட்டமாட்டன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த ஜோசப்பின் மனதை மாற்றி திருமணம் செய்து வைத்தனர் வீட்டுக்காறர்.ஜோசப் இப்பொழுது பிள்ளைகுட்டிகளுடன் இருக்கிறான்.

***

அவர்களேதான்.நான் இவ்வளவு காலமும் தேடிக்கொண்டிருந்த சுமதி வீடுதான் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் குடிவந்திருந்தார்கள்.அவள் திருமணம் செய்து இரண்டு பெரிய பெண்பிள்ளைகள் இருந்தார்கள்.அவள் கணவன் அவர்கள் உறவுக்காறனாம்.பிரெஞ்சு சிற்றிசனாம்.அவள் திருமணம் செய்து வந்தபின் தந்தையையும் தாயையும் இங்கு கூப்பிட்டதாகவும் பின்னர் இரண்டு தம்பிகளும் இங்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தாள்.என்னை வீட்டுக்கு வாவென்று சுமதி அடம்பிடித்ததாலேயே அங்கு போயிருந்தேன்.சுமதியின் தந்தையை சந்திப்பதை நினைத்துப் பயமாக இருந்தது.சுமதி பழைய கதைகளையும் பள்ளிக்கால நினைவுகளையும் திரும்பத்திரும்ப நிறுத்தாமல் பெரும் ஆர்வத்தோடு சொல்லிக்கொண்டிருந்தாள்.சுமதியின் தந்தையும் உட்கார்ந்திருந்ததால் கவனமாக ஜோசப்பை தவிர்த்துவந்தாள்.ஜயர் கதைகளிற்கிடையில் என்னை தனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் ஒரே ஒரு விடயம்தான் பிடிக்கவில்லை என்றார்.நான் என்னவென்று கேட்டபோது அந்த வேதக்காற வீட்டை போய்வாறதுதான் என்னிடம் தனக்குப் பிடிக்காத விடயம் என்று கூறினார்.நான் அதற்கு சிரித்தபடியே வேறுவிடயத்தைப் பற்றிப் பேச்சைமாற்றினேன். அன்று நீண்டநேரம் ஊரைப்பற்றியும் பழைய கதைகளையும் கதைத்து முடித்து புறப்பட்டபோது வழியனுப்ப வெளியே வந்த சுமதி காதுக்குள் ரகசியமாக ஜோசப் சுகமாக இருக்கிறானாஎன்று விசாரித்தாள்.அந்தக்கணத்தில் அவள் கண்கள் கலங்கியிருந்தது.நான் ஜோசப் திருமணம் செய்து பிள்ளைகுட்டிகளுடன் சுகமாக இருக்கிறான் அரை மணித்தியாலப் பயணத்தூரத்தில்தான் இருக்கிறான் என்பதை தெரிவித்தேன்.அன்றிலிருந்து நான் நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் சுமதி வீட்டுக்குச் சென்றுவருவேன்.தனியே அடைந்து கிடக்கும் ஜயர் முகத்திலும் என்னைக்கண்டால் ஆயிரம்வோல்ற் மின்சாரம் எரியும்.தனது தனிமையை விரட்டவும் ஊர்க்கதைகளை கதைக்கவும் நான் துணையாக இருப்பதால்தான் ஜயருக்கு என்னைக்கண்டால் அவ்வளவு சந்தோசம்.

***

அன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் வழமைபோல் ஜயர் வீட்டை ஒரு எட்டுப் பார்த்துவிட்டு வருவோம் என்று போயிருந்தேன்.வெங்கடேச ஜயர் சோபாவில் சரிந்திருந்து தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டிருந்தார்.என்னைக் கண்டதும் வாடாதம்பி என்று அழைத்து உட்காரவைத்து நாட்டு நடப்புக்களைப் பற்றிப் பேசத்தொடங்கினார்.சுமதி கிச்சினில் எனக்குத் தேநீர் தயார் படித்திக்கொண்டிருந்தாள்.ஒரு பத்து நிமிடம் போயிருக்கும் ஜயரின் மூத்தவன் மனைவியையும் இழுத்துக்கொண்டு மூச்சிரைக்க மூன்று மாடிகளையும் ஓடியபடியே கடந்து வந்திருந்தான்.வந்தவன் "ஜயா தலையில் இடியைப் போட்டிட்டுப்போட்டாள்" என்று ஒப்பாரி வைக்காத குறையாக என்னையும் ஒருமாதிரி முறைத்துப் பார்த்தபடி கத்தினான்.பக்கத்தில் அவன் மனைவி கணவனுடன் சேர்ந்து தானும் மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தாள்."என்னடா விசயத்தை வடிவாச் சொல்லனெடா" என்று நடந்தது புரியாமல் ஜயர் எரிந்து விழுந்தார்."ஜயா இவள் சுமதீட மூத்தவள் உவன் ஜோசப்பின்ர பொடியனோட ரெஜிஸ்றர் மரேஜ் பண்ணிப்போட்டு அந்த வேதக்காறனையும் கூட்டிக்கொண்டு வீட்டை வந்து அம்மா அப்பாட்டை நீங்கள்தான் பக்குவமா எடுத்துச்சொல்ல வேணுமெண்டதுமில்லாம என்னையெல்லே ஆசீர்வாதிக்கட்டாம்.ஊரெண்டாக் காதோடைகாது வச்சாப்போல ஆள்வச்சுப் பிரிச்சுக்கொண்டு வந்திருப்பன்...இஞ்சை பதினெட்டு வயசுக்குமேல இருக்கிறதுகளை ஒண்டும் செய்யேலாதே..நான் என்ன செய்ய எந்தக் கிணத்துக்கை போய் விழ..எங்கட மானம் மரியாதையை கப்பலேற வச்சிட்டாளே சனியன் பிடிப்பாள்..என்ன துணிவிருந்தா உந்த வேதக்காறன் வீட்டில கலியாணம் கட்டுவாள்..எங்கட குலமென்ன..கோத்திரமென்ன.." என்று நீட்டி முழக்கி ஒப்பாரி வைத்தான்.ஜயர் இடிந்துபோய் சோபாவில் உட்காந்திருந்தார்.எனக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலையாகிவிட்டது.வரக்கூடாத நேரத்தில வரக்கூடாத இடத்துக்கு வந்துதுலைச்சிட்டியேடா என்று என்னை நானே திட்டிக்கொண்டு மெதுவாக வெளியேறத் தயரானபோதுதான் அவதானித்தேன் கதவருகே சுமதி தேநீருடன் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்.அவள் முகத்தில் ஏதோவொரு நிம்மதி தெரிந்தது.தொலைக்காட்சியில் புலம்பெயர் தமிழ் இளையவர்கள் சார்பாக இளைஞ்ஞர் ஒருவர் வேறுபாடுகளை மறந்து எல்லோரையும் ஒன்று பட்டு ஓரணியில் போராட அழைப்புவிடுத்துக்கொண்டிருந்தார்.வெளியே வீசிய வெளிநாட்டுக் காற்று எனக்கு இப்பொழுதுதான் முதன்முறையாக இதத்தைத்தந்தது......

Saturday 17 December 2011

காவல் நாய்...(சிறுகதை...)

முருகனின் வீட்டைக் கடக்கும்போது டாம்போவின் இடிபோன்ற குரல் அந்த வீதியே அதிரும்படி கேட்டது.என்னடா சத்தம் பசிக்கிறதா என்று வீட்டுக்குள் இருந்து டாம்போவை அதட்டிக் கொண்டு முருகன் வேகமாக வெளியில் வந்தான். டாம்போ இபொழுது நன்றாக வளர்ந்து ஒரு பெரிய நாயாகி விட்டிருக்கிறது. டாம்போ முருகன் வீட்டிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியிருக்கவேண்டும். முருகன் வீட்டுச் சாப்பாடோ இல்லை டாம்போவின் பரம்பரை ஜீனோ தெரியவில்லை ஒன்றரை வருடங்களுக்குள் அது புசு புசுவென்று வளர்ந்து அந்த ஏரியாவிலேயே பெரிய அடிக் கடியன் நாயாக நெடுத்திருந்தது. அதன் கரிய மூஞ்சையும் நெடிய கால்களும் பார்ப்பதற்கு ஊர் நாயொன்றிற்கு ஓநாய்க் கால்களும் மூஞ்சையும் முளைத்தது போலிருந்தது.

முருகன் தகப்பனார் ரத்தினம் அண்ணையுடன் சண்டைபிடித்து ஓடர் கொடுத்து சின்ன ஒரு வீடு போன்ற எல்லா வசதிகளுடனும் கூடிய ஒரு பெரிய நாய்க்கூடு ஒன்றைச் செய்வித்து டாம்போவிற்க்கு கொடுத்திருந்தான். டாம்போ அதற்குள் ஒரு ராஜாவைப்போல சாப்பிட்டு விட்டு நித்திரை கொள்ளும். ஓரளவு வளர்ந்தவுடன் டாம்போவிற்க்கு அந்த மரவீட்டில் அவ்வளவாக நாட்டமிருக்கவில்லை.அனேகமாக வெளியில் சுத்தித்திரிவதே அதற்க்கு அதிக சந்தோசமான விடயமாக இருந்தது. எப்பொழுதாவது நல்ல மழை பெய்தால் ஓடிப்போய் அதற்குள் ஏறிச்சுருண்டு கொள்ளும். டாம்போ முருகன் வீட்டிற்கு வந்ததிற்கு சில காரணங்கள் இருந்தன.

***

காரணம் ஒன்று ராசம்மாவின் புள்ளடியான் சேவல். ரத்தினம் அண்ணை வீட்டுப் பதினைந்து பேடைகளுக்கு ராசம்மாவின் புள்ளடியான்தான் பட்டத்து ராஜா. ராசம்மா வளவு ரத்தினம் அண்ணை வீட்டு இடதுபக்க வேலியுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. முழுவதுமாக விடிவதற்குள் புள்ளடியான் பொட்டைப் பிரிச்சுக்கொண்டு வந்து ரத்தினமண்ணை வீட்டுப் பதினைந்து பேடைகளையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு போய்விடும். இந்தப் பேடைகள் இரவு கூட்டுக்கு வருவதைத் தவிர மேய்ச்சல் சாப்பாடு முட்டையிடுவது என்று அத்தனையும் ராசம்மா வீட்டில்தான். ரத்தினமண்ணை பொட்டுக்களை அடைத்துப் பார்த்தார். புள்ளடியான் மசிவதாக இல்லை. ஒன்றில் புதுப்பொட்டு துளைத்து வந்தது இல்லையெனில் வேலிக்கு மேலால் பறந்து வந்து பேடைகளையும் வேலிக்கு மேலால் டைவடிச்சே கூட்டிக்கொண்டு போனது. வளவுக்குள் வரவிடாமல் விடியவெள்ளனவே வேலிக்கை நிண்டு கலைச்சுப் பார்த்தார். எவ்வளவு நேரம் ரத்தினமண்ணையும் வேலிக்குப் பக்கத்திலேயே நிற்க முடியும்...? அவர் கொஞ்சம் நகர அந்த இடைவெளியில் புள்ளடியான் உச்சிக்கொண்டு உள்ளவந்து பேடைகளை இழுத்துக்கொண்டு போனது.


ரத்தினமண்ணைக்கு கோபம் வெறியாகத் தலை உச்சிவரை வந்துநின்றது. எடுத்து விளாசிவிட்டார் விறகுத்தடியால் புள்ளடியானுக்கு. அந்த ஊரே அதிரும்படி பெருங்குரலெடுத்துக் கத்தியவாறு நொண்டி நொண்டி ஓடிப்போனது புள்ளடியான். தங்கள் ராஜ கம்பீரன் கத்திக்கொண்டோடுவதைப் பார்த்த பேடைகள் குழப்பத்தில் வேறு பக்கமாக ஓடித்தப்பின.ராசம்மா அந்த ஊரிலேயே பொல்லாத வாய்க்காறி. அவளின் வசவுச் சொற்களுக்குப் பயந்து யாருமே அவளுடன் பிரச்சினைக்குப் போவதில்லை. புள்ளடியான் கூக்குரலிட்டவாறு காலை நொண்டிக்கொண்டு ரத்தினமண்ணை வீட்டிலிருந்து ஓடிவருவதைப் பார்த்த ராசம்மாவிற்கு உரு வந்திட்டுது. சேலைத்தலைப்பை இழுத்துச் சொருகிவிட்டு குடுமியை அவிழ்த்து விட்டுக்கொண்டு சண்டைக்கு தயாரானாள். என்ர ஒற்றைச் சேவல் ஒரு நேரம் வந்ததுக்கு கால் அடிச்சு முறிச்சுப் போட்டாய் உன்ரை பதினைந்து பேடையளும் முழு நேரமாய் என்ர வீட்டில் திண்டு கொளுக்குதுவள்.

இண்டைக்கு ஒவ்வொண்டாய்க் காலடிச்சு முறிச்சு அனுப்புறன் பாரென்று வேலியால் எட்டி எட்டிக் கத்தி ஊரைக் கூட்டினாள். ரத்தினமண்ணை வெட்க்கத்தில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ரத்தினமண்ணை வீடு மானம் மரியாதைக்குப் பயந்த சனங்கள். ராசம்மா பெருங்குரலெடுத்துக் கத்துவதும் ஊர் அதை வேடிக்கை பார்ப்பதும் பெருத்த அவமானமாகப் பட்டது ரத்தினமண்ணைக்கு. அன்றிலிருந்து ஒரு முன்று நாட்கள் பேடைகளை கூட்டைவிட்டு திறந்து விடவேயில்லை ரத்தினமண்ணை. சாப்பாடு தண்ணி எல்லாம் கூட்டுக்குள்ளேயே. புள்ளடியானுக்கு ராசம்மா மஞ்சள் அரைத்துக் காலில் கட்டியிருந்தாள். நொண்டி நொண்டிக் கொண்டும் பெண்சுகம் தேடித் புள்ளடியான் ரத்தினமண்ணை வீட்டுக் கோழிக்கூட்டை முன்று நாளும் சுற்றிச் சுற்றி வந்தது. ரத்தினமண்ணை இந்தத் தடவை புள்ளடியானைக் கலைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மாறாக மாற்றுவழி ஒன்றைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தார்.நாலாம் நாள் விடிய வெள்ளனவே சந்தைக்குப்போய் கோழிச்சந்தையை ஒரு நோட்டம் விட்டார். கால்கள் பிணைத்துக் கட்டப்பட்டு என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒன்றையொன்று பார்த்து முளித்துக்கொண்டிருந்தன கலர் கலராகப் பேடைகளும் சேவல்களும் சந்தைத் தரை முழுவதும். ரத்தினமண்ணையின் பார்வை புள்ளடியானுக்குப் போட்டியாக ஒரு கம்பீரமான சேவலைத் தேடிக்கொண்டிருந்தது. கடைசியில் ஆகக் கிளட்டுச் சேவலுமில்லாமல் ஆகப்பிஞ்ச்சுச் சேவலுமில்லாமல் அரைப்பருவத்தில் ஒரு சேவல் ரத்தினமண்ணையின் கண்ணில் தட்டுப்பட்டது.


அதன் நிறமும் பொன்னிறத்தில் இடைக்கிடை இறக்கைகளில் கறுப்புக் கலந்திருந்தது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அருவாள் போல் நீண்டு வளைந்திருந்த கொண்டை, கழுத்தடியில் விரிந்து சடைத்த இறகுகள், பூங்கொத்துப்போல தூங்கிக்கொண்டிருந்த அகன்று பரந்த வால், தாடையில் தெறித்துக் கொண்டிருந்த சூடுகள் என்று பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக இருந்தது. பார்த்தவுடனேயே பிடித்துப்போக பேரம்பேசி அரைவிலைக்கு வாங்கி வந்துவிட்டார். "ஆம்பிளைச்சுகம் வேண்டித்தான ராசம்மா வீட்டை படுகிடையாகக் கிடக்கிறியள் வீட்டோட மாப்பிளையொண்டைக் கொண்டு வந்திருக்கிறன் இனிப்பாப்பம் உந்தப்புள்ளடியான்ரையும் உவள் ராசம்மாவின்ரையும் ஆட்டத்தை" சேவலை வீட்டிற்கு கொண்டு வந்து கட்டுக்களை அவிழ்த்து விட்டவாறு மனதிற்குள் கறுவிக்கொண்டார் ரத்தினமண்ணை .


சேவல் வந்து அரைக்கிழமையானது, ஒரு கிழமையானது, ஒரு மாதமானது. இந்தா சேரும் அந்தா சேரும் என்று காத்திருந்த ரத்தினமண்ணைக்குப் பெரும் ஏமாற்றமாகவிருந்தது. பேடைகள் எவையும் புதுச்சேவலை ஏறெடுத்துப் பார்ப்பதாகவும் காணப்படவில்லை. வழமை போலவே அவை புள்ளடியானுடன் ஆட்டம்போடக் கிளம்பிவிடுகின்றன. புதுச்சேவலும் பேடைகளைக் கணக்குப் பண்ணுவதை விட்டு கோழித் தீனிலே குறியாக இருந்தது. போடும் கோழித் தீன்கள் போதாதென்று களவாக குசினிக்குள் நுழைந்து இருப்பவற்றை எல்லாம் தட்டிக் கொட்டி பெரும் ரகளை செய்து வந்தது புதுச் சேவல். சரியான சாப்பாட்டு ராமனை வாங்கி வந்து விட்டதாக மனைவியிடம் ஒவ்வொரு நாளும் திட்டு வாங்கிக்கொண்டிருந்தார் ரத்தினமண்ணை.இப்பொழுது புள்ளடியானைவிட புதுச்சேவல்தான் பெரும் தலையிடியகப் போனது ரத்தினமண்ணைக்கு.

***

காரணம் இரண்டு தேவன் வீட்டுப் பூனைகள். ஒன்றல்ல இரண்டல்ல நான்கு பொட்டைப் பூனைகள். ஒவ்வொரு நாளும் ரத்தினமண்ணையின் பிறசர் ஏறுவதற்குப் பிரதான காரணம் இந்தப் பூனைகள். விடிய ரத்தினமண்ணையின் மனைவி கழுவிக் காயவிடவேண்டிய சட்டி பானைகளை இரவே இந்தப் பூனைகள் வளித்துக் காயவிட்டு வந்தன. ஒட்டி விலா எலும்பு தெரியத் திரிந்த பூனைகள் ரத்தினமண்ணை வீட்டில் களவெடுக்கத் தொடங்கிய நாளிலிருந்து குட்டிப் பன்றிகள் போல் கொழுத்து வலம் வந்தன. எல்லா வழிகளையும் அடைத்துப்பார்த்தும் எல்லாவித முயற்ச்சிகளை செய்து பார்த்தும் எதுவுமே அந்தப் பூனைளிடம் பலிக்கவில்லை. எப்படி வருகின்றன எப்படிப் போகின்றன என்று தெரியாமல் களவு ஒவ்வொரு இரவும் சில நேரங்களில் பட்டப் பகலிலும் நிகழ்ந்து கொண்டிருந்தது.

இவைகளின் தொல்லை பொறுக்கமுடியாமல் இந்தப் பூனைகளை விஷம் வைத்துக் கொல்லக்கூட ஒரு முறை முடிவெடுத்திருந்தார் ரத்தினமண்ணை. ஆனால் தேவனின் அந்தப் பயங்கர முகம் நினைவில் வந்தவுடன் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார். தேவன் முழு முரடன். ஒவ்வொரு நாளும் அவன் முகம் கழுவுவதே சாராயத்தில்தான்.

எது சரி எது பிழை என்று சிந்திக்கக்கூட இடைவெளியின்றி எந்நேரமும் போதையிலே மிதந்து கொண்டிருப்பான். அவனுடன் பிரச்சினைக்குப் போனால் கொலையிலும்  போய் முடியலாம். அதனால்தான் ரத்தினமண்ணை அந்தப் பூனைகளுக்கு எதிராக ஏதாவது செய்ய நினைத்தால் ஒன்றுக்குப் பலமுறை சிந்திக்க வேண்டியிருந்தது.

தேவன் வீடு ரத்தினமண்ணை வீட்டுக்கு எதிரே இருந்தது. வீட்டை விட்டு வெளியே போகும் ஒவ்வொரு தடவையும் தேவன் வீட்டு முற்றத்தில் படுத்திருக்கும் அந்தப் பூனைகள் தன்னை ஏளனமாகப் பார்த்து தன் கையாலாகாத்தனத்தை நையாண்டி செய்வது போலத் தோன்றியது ரத்தினமண்ணைக்கு. போயும் போயும் இந்த ஜந்தறிவு ஜீவனிற்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் ஆகிவிட்டதே என்று நினைத்து நினைத்து பெருங்கோபத்துடன் இருந்தார் ரத்தினமண்ணை.

***

மேலே கூறிய இரண்டு விடயங்களும்தான் ரத்தினமண்ணைக்கு நாய் ஒன்று வளர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வர காரணமாயிருந்தன. முடிவெடுத்தவுடன் முருகனையும் கூட்டிக் கொண்டு வந்து நாய்க்குட்டி ஒன்றை கொண்டுவரும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அண்ணா ரோசா அக்காவீட்டு நாய்க்குட்டி போல நல்ல வடிவான குண்டு நாய்க்குட்டியாகப் புடிச்சுத்தாங்கோ என்று என் கையைப் பிடித்துக்கொண்டு ஆர்வமாகக் கூறினான் முருகன். முருகன் அந்த வீட்டில் கடைக்குட்டி. மிகவும் துடிப்பானவன். நேரங்கிடைக்கும் பொழுதெல்லாம் அவனை எங்கள் வீட்டிற்கு கூட்டி வந்துவிடுவேன் நான். அன்றைய பள்ளியில் நடந்த சம்பவங்களிலிருந்து வீட்டில் கோழி அடைகிடப்பது, கிரிக்கற் மச், தந்தை கோவில் திருவிழாவில் வாங்கித்தந்த ரிமோல்ட் கொன்றோலில் இயங்கும் கார்வரை எல்லாவற்றைப் பற்றியும் ஒன்று விடாமல் என்னிடம் கூறுவான்.

நானும் பொறுமையாக இருந்து எல்லாவற்றையும் கேட்பேன். அதனாலேயே அவனுக்கு என் மீது மிகவும் பிரியம். முருகனுக்காக அவன் ஆசையாகக் கேட்டதனால் அந்தவாரம் முழுவதும் நாய்க்குட்டி தேடும் படலத்தில் தீவிரமாக இறங்கியிருந்தேன். அதை விட முக்கியமாக நாங்கள் முருகன் வீட்டிற்கு சொந்தமான சிறிய வீடொன்றிலேயே வாடகைக்குத் தங்கியிருந்தோம். எங்களையும் தங்கள் உறவினர்களைப் போலவே அவர்கள் நடத்தினர். எனவேதான் எப்படியாவது ஒரு நல்ல நாய்க்குட்டி ஒன்றை முருகன் வீட்டிற்குப் பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன்.

எங்கெங்கோ எல்லாம் அலைந்து கடைசியில் ஊருக்கு வெளியே வயல்க்கரையில் ஒரு பனை மரத்தின் அடியில் யாரோ கொண்டுவந்து எறிந்து விட்டுப் போயிருந்த டாம்போவைத் தூக்கி வந்தோம். வரும்போது யாரும் கவனிப்பாரற்று நோஞ்சான் குட்டியாக வந்தது டாம்போ. பின் நாளில் ரத்தினமண்ணை வீட்டுச்சாப்பாட்டில் அழகான பஞ்சு மெத்தைபோல புசு புசுவென்று வளர்ந்தது.

***

டாம்போ வளர்ந்து பெரிய நாயாகியதும் அதன் இடிபோன்ற குரலும் பெருந்தோற்றமும் புள்ளடியான் மனதில் பெருங்கலக்கத்தை உண்டுபண்ணியிருந்தது. இப்பொழுதெல்லாம் அது வேலியிலிருந்து சில அடி துரம் தள்ளியிருந்து ரத்தினமண்ணை வீட்டுக் கோழிக் கூட்டை பெருமூச்சுடன் எட்டிப்பார்த்துவிட்டுச் சென்றுவிடுகிறது. வேலிகடந்து ஒரு அடி எடுத்து வைத்தால் டாம்போ பெருங்கோபத்துடன் கண்களில் பொறி பறக்க இடிபோல் பாய்ந்து வந்துவிடுகிறது. டாம்போவை நினைத்தாலே புள்ளடியான் உடல் முழுவதும் பயத்தில் நடுங்குகிறது.

நாளாக நாளாக ரத்தினமண்ணை வீட்டுப் பேடைகளும் புள்ளடியானை மறந்து புதுச் சேவலுடன் சேர்ந்து திரியத்தொடங்கியிருந்தன. புள்ளடியான் இபொழுது வேறு பேடைகளை தேடும் முயற்ச்சியில் இறங்கியிருந்தது. தேவன் வீட்டுப் பூனைகளும் இப்பொழுது டாம்போவிற்க்குப்
 பயந்து களவைக் கைவிட்டு சொந்தமாக எலிகளையும் பூச்சிகளையும் பிடித்துச் சாப்பிடத்தொடங்கியிருந்தன. இப்பொழுதெல்லாம் வீதியைக் கடந்து ரத்தினமண்ணை வீட்டுப்பக்கம் அவை வருவதேயில்லை. ரத்தினமண்ணை எல்லாப் பிரச்சனைகளையும் ஒரே கல்லில் தீர்த்துவிட்ட நின்மதியில் இருந்தபோதுதான் அந்தச்சம்பவம் நடந்தது.

***

வேலை முடிந்து வந்து அன்று மாலை நான் வெளியில் எங்கும் செல்லாததால் முருகனை அழைத்து வருவோம் என்று ரத்தினமண்ணை வீட்டிற்கு சென்றபோது வீடே சோகமாக இருந்தது. முருகன் என்னைக் கண்டதும் அழத்தொடங்கிவிட்டான். அவன் தலையைத்தடவியவாறு அழாதேடா என்ன நடந்தது சொல்லடா என்று கேட்டேன்..

அண்ணா டாம்போவை போன கிழமையில் இருந்து காணவில்லை...!

தம்பி! டாம்போ காலமைச் சாப்பாடு சாப்பிட்டது.அதுக்குப் பிறகு மத்தியானச்சாப்பாட்டிற்கு வரவேயில்லை. சரி உங்கினேக்கதான நிக்கும் வரட்டும் என்று நானும் தேடாமல் விட்டுட்டன். இரவாகியும் வரேல்ல. அடுத்தநாள் ஊர் முழுக்கத்தேடியும் எங்கயும் இல்லை. எங்க போச்சு என்ன நடந்தது எண்டு ஒரு தடயம்கூடக் கிடைக்கேல்லை. ரத்தினமண்ணை சோகத்துடன் சொல்லி முடித்தார். எனக்கு முருகனைப் பார்க்கமிகவும் கவலையாக இருந்தது. எப்படியாவது டாம்போவைக் கண்டுபிடித்து விடவேண்டும் என்று நானும் எல்லா இடமும் தேடிப்பார்த்தேன். எல்லோரையும் விசாரிச்சுப் பார்த்தேன்.

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கதைசொன்னார்கள். சிலர் தேவனும் ராசாத்தியும்தான் ரத்தினமண்ணை மேலுள்ள கோபத்தில் யாருக்கும் தெரியாமல் எங்கேயாவது நாயைக் கொன்று புதைத்து விட்டிருக்கலாம் என்று கூறினர். சிலரோ எங்காவது மாறிப்போயிருக்கும் கட்டாயம் திரும்பி வரும் என்று உறுதியாக அடித்துக் கூறினர்.நாய்க்கு எத்தினை கட்டை போனாலும் தன் வீடறிஞ்சு திரும்பி வரும் என்று சாதித்தனர். சிலரோ நாய்பிடிக்காரரிட்டை அம்பிட்டிருக்கும் இது நல்ல வடிவான நோயில்லாத நாய் எண்டதால எங்கயாவது
மிருகக் காப்பகங்களில் குடுத்திருப்பினம் எண்டும் கதைத்தனர்.

ரத்தினமண்ணை வீட்டில் பழையபடி டாம்போ இல்லாத தைரியத்தில் பயம் மறந்து புள்ளடியனும் தேவன் வீட்டுப் பூனைகளும் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தன. ரத்தினமண்ணைக்கு பழையபடி பிறசர் ஏறவைத்தன தேவன் வீட்டுப் பூனைகள். என்றைக்காவது ஒருநாள் டாம்போ திரும்பி வரும் இந்த நாச மறுப்பாற்றை அட்டகாசத்தை அடக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தது ரத்தினமண்ணை வீடு.

நாளாக நாளாக டாம்போ திரும்பி வரும் என்ற நம்பிக்கை எனக்குக் குறையத்தொடங்கவே ரத்தினமண்ணை வீட்டைச்சமாதானப் படுத்த வேறு ஒரு நாய்க்குட்டி ஒன்றை நண்பன் ஒருவனிடம் இருந்து வாங்கி வந்து கொடுத்துப்பார்த்தேன். வந்த முதலாவது நாளே அது வலிவந்து உயிரை விட்டது. என்முயற்ச்சியில் சற்றும் தளராமல் அடுத்த வாரமே அயலூரில் தேடிப்பிடித்து இன்னுமொரு நாய்க்குட்டியைக் கொண்டுவந்தேன்.

வந்த நாளில் இருந்து அதுவோ பச்சை தண்ணி தானும் குடிக்க மறுத்துவிட்டது. மூன்றாவது நாள் ரத்தினமண்ணையே நாய்க்குட்டியைக் கொண்டுவந்து தந்து இப்படியே போனால் தண்ணி வென்னி குடியாமல் இதுவும் செத்துப்போகும் இன்னொரு பாவத்தை உத்தரிக்க நாங்கள் தயாரில்லை பிடித்த இடத்தில் உடனடியாக கொண்டுபோய் விடவும் என்றும் அத்துடன் இனிமேல் டாம்போ வந்தாலொழிய வேறெந்த நாயையும் தாங்கள் வளர்க்கத் தயாரில்லை என்றும் புதிய நாய்க்குட்டி எதையும் இனிமேல் கொண்டுவரவேண்டாம் என்றும் கறாராகக் கூறி விட்டுச் சென்று விட்டார். டாம்போவின் இடத்தில் இப்பொழுது அவர்கள் வேறெந்த நாயையும் வைத்துப் பார்க்கத் தயாராக இருக்கவில்லை.

டாம்போ இல்லாமல் போய் இப்பொழுது சில வருடங்கள் ஆகி விட்டது. ஆனாலும் முருகன் வீடு நம்பிக்கையுடன் டாம்போ ஒருநாள் பழைய ஆக்ரோசத்தோடு திரும்பி வரும் என்று காத்திருக்கின்றார்கள். இப்பொழுதெல்லாம் முருகனைக் கூட்டிவர நான் போவதில்லை. டாம்போ பற்றிய அவன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முடிந்த வரை அவன் கண்ணில் படாமல் ஒளித்துத்திரிந்தேன். என்னிடம் டாம்போ வந்ததா டாம்போவைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா என்று கேட்க்கும் ஒவ்வொருவருக்கும் "இல்லை" "இல்லை" என்று சலிக்காமல் சொல்லியபடியே அடுத்த வருடத்தை எதிர் கொள்ளத்தயாராகிறேன்...