Pages

Saturday 17 December 2011

காவல் நாய்...(சிறுகதை...)

முருகனின் வீட்டைக் கடக்கும்போது டாம்போவின் இடிபோன்ற குரல் அந்த வீதியே அதிரும்படி கேட்டது.என்னடா சத்தம் பசிக்கிறதா என்று வீட்டுக்குள் இருந்து டாம்போவை அதட்டிக் கொண்டு முருகன் வேகமாக வெளியில் வந்தான். டாம்போ இபொழுது நன்றாக வளர்ந்து ஒரு பெரிய நாயாகி விட்டிருக்கிறது. டாம்போ முருகன் வீட்டிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியிருக்கவேண்டும். முருகன் வீட்டுச் சாப்பாடோ இல்லை டாம்போவின் பரம்பரை ஜீனோ தெரியவில்லை ஒன்றரை வருடங்களுக்குள் அது புசு புசுவென்று வளர்ந்து அந்த ஏரியாவிலேயே பெரிய அடிக் கடியன் நாயாக நெடுத்திருந்தது. அதன் கரிய மூஞ்சையும் நெடிய கால்களும் பார்ப்பதற்கு ஊர் நாயொன்றிற்கு ஓநாய்க் கால்களும் மூஞ்சையும் முளைத்தது போலிருந்தது.

முருகன் தகப்பனார் ரத்தினம் அண்ணையுடன் சண்டைபிடித்து ஓடர் கொடுத்து சின்ன ஒரு வீடு போன்ற எல்லா வசதிகளுடனும் கூடிய ஒரு பெரிய நாய்க்கூடு ஒன்றைச் செய்வித்து டாம்போவிற்க்கு கொடுத்திருந்தான். டாம்போ அதற்குள் ஒரு ராஜாவைப்போல சாப்பிட்டு விட்டு நித்திரை கொள்ளும். ஓரளவு வளர்ந்தவுடன் டாம்போவிற்க்கு அந்த மரவீட்டில் அவ்வளவாக நாட்டமிருக்கவில்லை.அனேகமாக வெளியில் சுத்தித்திரிவதே அதற்க்கு அதிக சந்தோசமான விடயமாக இருந்தது. எப்பொழுதாவது நல்ல மழை பெய்தால் ஓடிப்போய் அதற்குள் ஏறிச்சுருண்டு கொள்ளும். டாம்போ முருகன் வீட்டிற்கு வந்ததிற்கு சில காரணங்கள் இருந்தன.

***

காரணம் ஒன்று ராசம்மாவின் புள்ளடியான் சேவல். ரத்தினம் அண்ணை வீட்டுப் பதினைந்து பேடைகளுக்கு ராசம்மாவின் புள்ளடியான்தான் பட்டத்து ராஜா. ராசம்மா வளவு ரத்தினம் அண்ணை வீட்டு இடதுபக்க வேலியுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. முழுவதுமாக விடிவதற்குள் புள்ளடியான் பொட்டைப் பிரிச்சுக்கொண்டு வந்து ரத்தினமண்ணை வீட்டுப் பதினைந்து பேடைகளையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு போய்விடும். இந்தப் பேடைகள் இரவு கூட்டுக்கு வருவதைத் தவிர மேய்ச்சல் சாப்பாடு முட்டையிடுவது என்று அத்தனையும் ராசம்மா வீட்டில்தான். ரத்தினமண்ணை பொட்டுக்களை அடைத்துப் பார்த்தார். புள்ளடியான் மசிவதாக இல்லை. ஒன்றில் புதுப்பொட்டு துளைத்து வந்தது இல்லையெனில் வேலிக்கு மேலால் பறந்து வந்து பேடைகளையும் வேலிக்கு மேலால் டைவடிச்சே கூட்டிக்கொண்டு போனது. வளவுக்குள் வரவிடாமல் விடியவெள்ளனவே வேலிக்கை நிண்டு கலைச்சுப் பார்த்தார். எவ்வளவு நேரம் ரத்தினமண்ணையும் வேலிக்குப் பக்கத்திலேயே நிற்க முடியும்...? அவர் கொஞ்சம் நகர அந்த இடைவெளியில் புள்ளடியான் உச்சிக்கொண்டு உள்ளவந்து பேடைகளை இழுத்துக்கொண்டு போனது.


ரத்தினமண்ணைக்கு கோபம் வெறியாகத் தலை உச்சிவரை வந்துநின்றது. எடுத்து விளாசிவிட்டார் விறகுத்தடியால் புள்ளடியானுக்கு. அந்த ஊரே அதிரும்படி பெருங்குரலெடுத்துக் கத்தியவாறு நொண்டி நொண்டி ஓடிப்போனது புள்ளடியான். தங்கள் ராஜ கம்பீரன் கத்திக்கொண்டோடுவதைப் பார்த்த பேடைகள் குழப்பத்தில் வேறு பக்கமாக ஓடித்தப்பின.ராசம்மா அந்த ஊரிலேயே பொல்லாத வாய்க்காறி. அவளின் வசவுச் சொற்களுக்குப் பயந்து யாருமே அவளுடன் பிரச்சினைக்குப் போவதில்லை. புள்ளடியான் கூக்குரலிட்டவாறு காலை நொண்டிக்கொண்டு ரத்தினமண்ணை வீட்டிலிருந்து ஓடிவருவதைப் பார்த்த ராசம்மாவிற்கு உரு வந்திட்டுது. சேலைத்தலைப்பை இழுத்துச் சொருகிவிட்டு குடுமியை அவிழ்த்து விட்டுக்கொண்டு சண்டைக்கு தயாரானாள். என்ர ஒற்றைச் சேவல் ஒரு நேரம் வந்ததுக்கு கால் அடிச்சு முறிச்சுப் போட்டாய் உன்ரை பதினைந்து பேடையளும் முழு நேரமாய் என்ர வீட்டில் திண்டு கொளுக்குதுவள்.

இண்டைக்கு ஒவ்வொண்டாய்க் காலடிச்சு முறிச்சு அனுப்புறன் பாரென்று வேலியால் எட்டி எட்டிக் கத்தி ஊரைக் கூட்டினாள். ரத்தினமண்ணை வெட்க்கத்தில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ரத்தினமண்ணை வீடு மானம் மரியாதைக்குப் பயந்த சனங்கள். ராசம்மா பெருங்குரலெடுத்துக் கத்துவதும் ஊர் அதை வேடிக்கை பார்ப்பதும் பெருத்த அவமானமாகப் பட்டது ரத்தினமண்ணைக்கு. அன்றிலிருந்து ஒரு முன்று நாட்கள் பேடைகளை கூட்டைவிட்டு திறந்து விடவேயில்லை ரத்தினமண்ணை. சாப்பாடு தண்ணி எல்லாம் கூட்டுக்குள்ளேயே. புள்ளடியானுக்கு ராசம்மா மஞ்சள் அரைத்துக் காலில் கட்டியிருந்தாள். நொண்டி நொண்டிக் கொண்டும் பெண்சுகம் தேடித் புள்ளடியான் ரத்தினமண்ணை வீட்டுக் கோழிக்கூட்டை முன்று நாளும் சுற்றிச் சுற்றி வந்தது. ரத்தினமண்ணை இந்தத் தடவை புள்ளடியானைக் கலைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மாறாக மாற்றுவழி ஒன்றைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தார்.நாலாம் நாள் விடிய வெள்ளனவே சந்தைக்குப்போய் கோழிச்சந்தையை ஒரு நோட்டம் விட்டார். கால்கள் பிணைத்துக் கட்டப்பட்டு என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒன்றையொன்று பார்த்து முளித்துக்கொண்டிருந்தன கலர் கலராகப் பேடைகளும் சேவல்களும் சந்தைத் தரை முழுவதும். ரத்தினமண்ணையின் பார்வை புள்ளடியானுக்குப் போட்டியாக ஒரு கம்பீரமான சேவலைத் தேடிக்கொண்டிருந்தது. கடைசியில் ஆகக் கிளட்டுச் சேவலுமில்லாமல் ஆகப்பிஞ்ச்சுச் சேவலுமில்லாமல் அரைப்பருவத்தில் ஒரு சேவல் ரத்தினமண்ணையின் கண்ணில் தட்டுப்பட்டது.


அதன் நிறமும் பொன்னிறத்தில் இடைக்கிடை இறக்கைகளில் கறுப்புக் கலந்திருந்தது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அருவாள் போல் நீண்டு வளைந்திருந்த கொண்டை, கழுத்தடியில் விரிந்து சடைத்த இறகுகள், பூங்கொத்துப்போல தூங்கிக்கொண்டிருந்த அகன்று பரந்த வால், தாடையில் தெறித்துக் கொண்டிருந்த சூடுகள் என்று பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக இருந்தது. பார்த்தவுடனேயே பிடித்துப்போக பேரம்பேசி அரைவிலைக்கு வாங்கி வந்துவிட்டார். "ஆம்பிளைச்சுகம் வேண்டித்தான ராசம்மா வீட்டை படுகிடையாகக் கிடக்கிறியள் வீட்டோட மாப்பிளையொண்டைக் கொண்டு வந்திருக்கிறன் இனிப்பாப்பம் உந்தப்புள்ளடியான்ரையும் உவள் ராசம்மாவின்ரையும் ஆட்டத்தை" சேவலை வீட்டிற்கு கொண்டு வந்து கட்டுக்களை அவிழ்த்து விட்டவாறு மனதிற்குள் கறுவிக்கொண்டார் ரத்தினமண்ணை .


சேவல் வந்து அரைக்கிழமையானது, ஒரு கிழமையானது, ஒரு மாதமானது. இந்தா சேரும் அந்தா சேரும் என்று காத்திருந்த ரத்தினமண்ணைக்குப் பெரும் ஏமாற்றமாகவிருந்தது. பேடைகள் எவையும் புதுச்சேவலை ஏறெடுத்துப் பார்ப்பதாகவும் காணப்படவில்லை. வழமை போலவே அவை புள்ளடியானுடன் ஆட்டம்போடக் கிளம்பிவிடுகின்றன. புதுச்சேவலும் பேடைகளைக் கணக்குப் பண்ணுவதை விட்டு கோழித் தீனிலே குறியாக இருந்தது. போடும் கோழித் தீன்கள் போதாதென்று களவாக குசினிக்குள் நுழைந்து இருப்பவற்றை எல்லாம் தட்டிக் கொட்டி பெரும் ரகளை செய்து வந்தது புதுச் சேவல். சரியான சாப்பாட்டு ராமனை வாங்கி வந்து விட்டதாக மனைவியிடம் ஒவ்வொரு நாளும் திட்டு வாங்கிக்கொண்டிருந்தார் ரத்தினமண்ணை.இப்பொழுது புள்ளடியானைவிட புதுச்சேவல்தான் பெரும் தலையிடியகப் போனது ரத்தினமண்ணைக்கு.

***

காரணம் இரண்டு தேவன் வீட்டுப் பூனைகள். ஒன்றல்ல இரண்டல்ல நான்கு பொட்டைப் பூனைகள். ஒவ்வொரு நாளும் ரத்தினமண்ணையின் பிறசர் ஏறுவதற்குப் பிரதான காரணம் இந்தப் பூனைகள். விடிய ரத்தினமண்ணையின் மனைவி கழுவிக் காயவிடவேண்டிய சட்டி பானைகளை இரவே இந்தப் பூனைகள் வளித்துக் காயவிட்டு வந்தன. ஒட்டி விலா எலும்பு தெரியத் திரிந்த பூனைகள் ரத்தினமண்ணை வீட்டில் களவெடுக்கத் தொடங்கிய நாளிலிருந்து குட்டிப் பன்றிகள் போல் கொழுத்து வலம் வந்தன. எல்லா வழிகளையும் அடைத்துப்பார்த்தும் எல்லாவித முயற்ச்சிகளை செய்து பார்த்தும் எதுவுமே அந்தப் பூனைளிடம் பலிக்கவில்லை. எப்படி வருகின்றன எப்படிப் போகின்றன என்று தெரியாமல் களவு ஒவ்வொரு இரவும் சில நேரங்களில் பட்டப் பகலிலும் நிகழ்ந்து கொண்டிருந்தது.

இவைகளின் தொல்லை பொறுக்கமுடியாமல் இந்தப் பூனைகளை விஷம் வைத்துக் கொல்லக்கூட ஒரு முறை முடிவெடுத்திருந்தார் ரத்தினமண்ணை. ஆனால் தேவனின் அந்தப் பயங்கர முகம் நினைவில் வந்தவுடன் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார். தேவன் முழு முரடன். ஒவ்வொரு நாளும் அவன் முகம் கழுவுவதே சாராயத்தில்தான்.

எது சரி எது பிழை என்று சிந்திக்கக்கூட இடைவெளியின்றி எந்நேரமும் போதையிலே மிதந்து கொண்டிருப்பான். அவனுடன் பிரச்சினைக்குப் போனால் கொலையிலும்  போய் முடியலாம். அதனால்தான் ரத்தினமண்ணை அந்தப் பூனைகளுக்கு எதிராக ஏதாவது செய்ய நினைத்தால் ஒன்றுக்குப் பலமுறை சிந்திக்க வேண்டியிருந்தது.

தேவன் வீடு ரத்தினமண்ணை வீட்டுக்கு எதிரே இருந்தது. வீட்டை விட்டு வெளியே போகும் ஒவ்வொரு தடவையும் தேவன் வீட்டு முற்றத்தில் படுத்திருக்கும் அந்தப் பூனைகள் தன்னை ஏளனமாகப் பார்த்து தன் கையாலாகாத்தனத்தை நையாண்டி செய்வது போலத் தோன்றியது ரத்தினமண்ணைக்கு. போயும் போயும் இந்த ஜந்தறிவு ஜீவனிற்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் ஆகிவிட்டதே என்று நினைத்து நினைத்து பெருங்கோபத்துடன் இருந்தார் ரத்தினமண்ணை.

***

மேலே கூறிய இரண்டு விடயங்களும்தான் ரத்தினமண்ணைக்கு நாய் ஒன்று வளர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வர காரணமாயிருந்தன. முடிவெடுத்தவுடன் முருகனையும் கூட்டிக் கொண்டு வந்து நாய்க்குட்டி ஒன்றை கொண்டுவரும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அண்ணா ரோசா அக்காவீட்டு நாய்க்குட்டி போல நல்ல வடிவான குண்டு நாய்க்குட்டியாகப் புடிச்சுத்தாங்கோ என்று என் கையைப் பிடித்துக்கொண்டு ஆர்வமாகக் கூறினான் முருகன். முருகன் அந்த வீட்டில் கடைக்குட்டி. மிகவும் துடிப்பானவன். நேரங்கிடைக்கும் பொழுதெல்லாம் அவனை எங்கள் வீட்டிற்கு கூட்டி வந்துவிடுவேன் நான். அன்றைய பள்ளியில் நடந்த சம்பவங்களிலிருந்து வீட்டில் கோழி அடைகிடப்பது, கிரிக்கற் மச், தந்தை கோவில் திருவிழாவில் வாங்கித்தந்த ரிமோல்ட் கொன்றோலில் இயங்கும் கார்வரை எல்லாவற்றைப் பற்றியும் ஒன்று விடாமல் என்னிடம் கூறுவான்.

நானும் பொறுமையாக இருந்து எல்லாவற்றையும் கேட்பேன். அதனாலேயே அவனுக்கு என் மீது மிகவும் பிரியம். முருகனுக்காக அவன் ஆசையாகக் கேட்டதனால் அந்தவாரம் முழுவதும் நாய்க்குட்டி தேடும் படலத்தில் தீவிரமாக இறங்கியிருந்தேன். அதை விட முக்கியமாக நாங்கள் முருகன் வீட்டிற்கு சொந்தமான சிறிய வீடொன்றிலேயே வாடகைக்குத் தங்கியிருந்தோம். எங்களையும் தங்கள் உறவினர்களைப் போலவே அவர்கள் நடத்தினர். எனவேதான் எப்படியாவது ஒரு நல்ல நாய்க்குட்டி ஒன்றை முருகன் வீட்டிற்குப் பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன்.

எங்கெங்கோ எல்லாம் அலைந்து கடைசியில் ஊருக்கு வெளியே வயல்க்கரையில் ஒரு பனை மரத்தின் அடியில் யாரோ கொண்டுவந்து எறிந்து விட்டுப் போயிருந்த டாம்போவைத் தூக்கி வந்தோம். வரும்போது யாரும் கவனிப்பாரற்று நோஞ்சான் குட்டியாக வந்தது டாம்போ. பின் நாளில் ரத்தினமண்ணை வீட்டுச்சாப்பாட்டில் அழகான பஞ்சு மெத்தைபோல புசு புசுவென்று வளர்ந்தது.

***

டாம்போ வளர்ந்து பெரிய நாயாகியதும் அதன் இடிபோன்ற குரலும் பெருந்தோற்றமும் புள்ளடியான் மனதில் பெருங்கலக்கத்தை உண்டுபண்ணியிருந்தது. இப்பொழுதெல்லாம் அது வேலியிலிருந்து சில அடி துரம் தள்ளியிருந்து ரத்தினமண்ணை வீட்டுக் கோழிக் கூட்டை பெருமூச்சுடன் எட்டிப்பார்த்துவிட்டுச் சென்றுவிடுகிறது. வேலிகடந்து ஒரு அடி எடுத்து வைத்தால் டாம்போ பெருங்கோபத்துடன் கண்களில் பொறி பறக்க இடிபோல் பாய்ந்து வந்துவிடுகிறது. டாம்போவை நினைத்தாலே புள்ளடியான் உடல் முழுவதும் பயத்தில் நடுங்குகிறது.

நாளாக நாளாக ரத்தினமண்ணை வீட்டுப் பேடைகளும் புள்ளடியானை மறந்து புதுச் சேவலுடன் சேர்ந்து திரியத்தொடங்கியிருந்தன. புள்ளடியான் இபொழுது வேறு பேடைகளை தேடும் முயற்ச்சியில் இறங்கியிருந்தது. தேவன் வீட்டுப் பூனைகளும் இப்பொழுது டாம்போவிற்க்குப்
 பயந்து களவைக் கைவிட்டு சொந்தமாக எலிகளையும் பூச்சிகளையும் பிடித்துச் சாப்பிடத்தொடங்கியிருந்தன. இப்பொழுதெல்லாம் வீதியைக் கடந்து ரத்தினமண்ணை வீட்டுப்பக்கம் அவை வருவதேயில்லை. ரத்தினமண்ணை எல்லாப் பிரச்சனைகளையும் ஒரே கல்லில் தீர்த்துவிட்ட நின்மதியில் இருந்தபோதுதான் அந்தச்சம்பவம் நடந்தது.

***

வேலை முடிந்து வந்து அன்று மாலை நான் வெளியில் எங்கும் செல்லாததால் முருகனை அழைத்து வருவோம் என்று ரத்தினமண்ணை வீட்டிற்கு சென்றபோது வீடே சோகமாக இருந்தது. முருகன் என்னைக் கண்டதும் அழத்தொடங்கிவிட்டான். அவன் தலையைத்தடவியவாறு அழாதேடா என்ன நடந்தது சொல்லடா என்று கேட்டேன்..

அண்ணா டாம்போவை போன கிழமையில் இருந்து காணவில்லை...!

தம்பி! டாம்போ காலமைச் சாப்பாடு சாப்பிட்டது.அதுக்குப் பிறகு மத்தியானச்சாப்பாட்டிற்கு வரவேயில்லை. சரி உங்கினேக்கதான நிக்கும் வரட்டும் என்று நானும் தேடாமல் விட்டுட்டன். இரவாகியும் வரேல்ல. அடுத்தநாள் ஊர் முழுக்கத்தேடியும் எங்கயும் இல்லை. எங்க போச்சு என்ன நடந்தது எண்டு ஒரு தடயம்கூடக் கிடைக்கேல்லை. ரத்தினமண்ணை சோகத்துடன் சொல்லி முடித்தார். எனக்கு முருகனைப் பார்க்கமிகவும் கவலையாக இருந்தது. எப்படியாவது டாம்போவைக் கண்டுபிடித்து விடவேண்டும் என்று நானும் எல்லா இடமும் தேடிப்பார்த்தேன். எல்லோரையும் விசாரிச்சுப் பார்த்தேன்.

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கதைசொன்னார்கள். சிலர் தேவனும் ராசாத்தியும்தான் ரத்தினமண்ணை மேலுள்ள கோபத்தில் யாருக்கும் தெரியாமல் எங்கேயாவது நாயைக் கொன்று புதைத்து விட்டிருக்கலாம் என்று கூறினர். சிலரோ எங்காவது மாறிப்போயிருக்கும் கட்டாயம் திரும்பி வரும் என்று உறுதியாக அடித்துக் கூறினர்.நாய்க்கு எத்தினை கட்டை போனாலும் தன் வீடறிஞ்சு திரும்பி வரும் என்று சாதித்தனர். சிலரோ நாய்பிடிக்காரரிட்டை அம்பிட்டிருக்கும் இது நல்ல வடிவான நோயில்லாத நாய் எண்டதால எங்கயாவது
மிருகக் காப்பகங்களில் குடுத்திருப்பினம் எண்டும் கதைத்தனர்.

ரத்தினமண்ணை வீட்டில் பழையபடி டாம்போ இல்லாத தைரியத்தில் பயம் மறந்து புள்ளடியனும் தேவன் வீட்டுப் பூனைகளும் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தன. ரத்தினமண்ணைக்கு பழையபடி பிறசர் ஏறவைத்தன தேவன் வீட்டுப் பூனைகள். என்றைக்காவது ஒருநாள் டாம்போ திரும்பி வரும் இந்த நாச மறுப்பாற்றை அட்டகாசத்தை அடக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தது ரத்தினமண்ணை வீடு.

நாளாக நாளாக டாம்போ திரும்பி வரும் என்ற நம்பிக்கை எனக்குக் குறையத்தொடங்கவே ரத்தினமண்ணை வீட்டைச்சமாதானப் படுத்த வேறு ஒரு நாய்க்குட்டி ஒன்றை நண்பன் ஒருவனிடம் இருந்து வாங்கி வந்து கொடுத்துப்பார்த்தேன். வந்த முதலாவது நாளே அது வலிவந்து உயிரை விட்டது. என்முயற்ச்சியில் சற்றும் தளராமல் அடுத்த வாரமே அயலூரில் தேடிப்பிடித்து இன்னுமொரு நாய்க்குட்டியைக் கொண்டுவந்தேன்.

வந்த நாளில் இருந்து அதுவோ பச்சை தண்ணி தானும் குடிக்க மறுத்துவிட்டது. மூன்றாவது நாள் ரத்தினமண்ணையே நாய்க்குட்டியைக் கொண்டுவந்து தந்து இப்படியே போனால் தண்ணி வென்னி குடியாமல் இதுவும் செத்துப்போகும் இன்னொரு பாவத்தை உத்தரிக்க நாங்கள் தயாரில்லை பிடித்த இடத்தில் உடனடியாக கொண்டுபோய் விடவும் என்றும் அத்துடன் இனிமேல் டாம்போ வந்தாலொழிய வேறெந்த நாயையும் தாங்கள் வளர்க்கத் தயாரில்லை என்றும் புதிய நாய்க்குட்டி எதையும் இனிமேல் கொண்டுவரவேண்டாம் என்றும் கறாராகக் கூறி விட்டுச் சென்று விட்டார். டாம்போவின் இடத்தில் இப்பொழுது அவர்கள் வேறெந்த நாயையும் வைத்துப் பார்க்கத் தயாராக இருக்கவில்லை.

டாம்போ இல்லாமல் போய் இப்பொழுது சில வருடங்கள் ஆகி விட்டது. ஆனாலும் முருகன் வீடு நம்பிக்கையுடன் டாம்போ ஒருநாள் பழைய ஆக்ரோசத்தோடு திரும்பி வரும் என்று காத்திருக்கின்றார்கள். இப்பொழுதெல்லாம் முருகனைக் கூட்டிவர நான் போவதில்லை. டாம்போ பற்றிய அவன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முடிந்த வரை அவன் கண்ணில் படாமல் ஒளித்துத்திரிந்தேன். என்னிடம் டாம்போ வந்ததா டாம்போவைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா என்று கேட்க்கும் ஒவ்வொருவருக்கும் "இல்லை" "இல்லை" என்று சலிக்காமல் சொல்லியபடியே அடுத்த வருடத்தை எதிர் கொள்ளத்தயாராகிறேன்...

No comments:

Post a Comment