Pages

Tuesday 6 January 2015

ஒட்டாத வாழ்வு...


------------
யாருமற்ற நதியோரம்
நானும் 
நாலைந்து இருக்கைகளில்
தனிமையும்..
நான் முற்றிலும் தீர்ந்துவிட்டதாய்
நதியிலும் நதிக்கரையில்
உதிர்ந்த சருகுகளிலும்
மிதந்தபடி உரைக்கிறது
மனது
காலம் கடந்து செல்கிறது
நான் மட்டும்
நகரமுடியாமல்
ஏதோ ஓர்சந்தியில்..
பழைய வாழ்க்கை
இழையோடக்
கண்கள் பனிக்கிறது..
வந்தமர்ந்த கிளையில்
வாழ்ந்ததற்கான அடையாளங்களோ
ஞாபகங்களோ எதுவுமில்லை..
கட்டிடக் காட்டிடையில்
தொலைந்தே போயின
காலடித்தடங்கள் யாவும்..
நிலமோ என் நிழலை
வெறுக்கிறது
நதிகளோ என் பாடலை
மறுக்கின்றன
தெருக்களிலோ என்
சுவடுகள் பதியவில்லை
ஒட்டிக்கொள்ளும்படியாக
இந்தமண்ணிண் வாசனைகளில்
எதுவுமேயில்லை..
பனிமூடிய நாட்களெல்லாம்
பட்டுக்கொள்ளாமலே கடக்கின்றன..
எருக்கலைக்கும்
நாயுன்னிக்கும்
புரிந்த என் மொழியோ
பைன் மரத்திற்கும்
செயின் நதிக்கும்
புரியப்போவதே இல்லை..
மனமும் உடலும்
பிரிந்தேகிடக்க
சலிக்காமல் வீசும்
குளிர்காற்றிலோ
சலனங்கள் எதுவுமில்லை
விலகித்தூரமாய்
வாழ்விருக்க
நொருங்கிய பாத்திரமாய்ச்
சிதறிக்கிடக்கிறேன்
முகமற்ற அந்நியனுக்கு
அடையாளங்களேது
உயிர் எரிக்கும் துயரெழ
வானத்தின் கீழே பிரமாண்டமாகிறது
வெயில்காட்டின்
ஞாபகச் சுமை...

No comments:

Post a Comment