Pages

Tuesday 6 January 2015

இடிபாடுகளினுள் கூடுகட்டும் பறவை..


-----------------------
காலம் இருள்கவிழ்ந்து
ஒரு யுக நீட்சியாய் நகர்கையில்
மூடுண்ட பிசாசு வெளியொன்றினுள்
வாழ்வு வியாபித்திருந்த பொழுதுகளை
ஒருதொகை நினைவுகளை
சுமக்க இயலாமல்
சுமந்திருந்திருக்கிறது
இடிபாடுகளினுள் கூடுகட்டும்
பறவை
சிதைக்கப்பட்ட நிலமொன்றின்
மறக்கப்பட்ட பிரதிநிதி அது
வாழ்வின் மீதான ஆசை
ஏதுமில்லை அதற்கு
ஆயினும் வாழ்தல்
மரணத்தால்
விதிக்கப்பட்டிருக்கிறது..
தோப்பிலிருந்த
பறவைகளை எல்லாம்
பிடுங்கி வீசி எறிந்துவிட்டது
போர் கொட்டிய பாழ்மரணம்
எஞ்சியவையும் சுயம் சிதற
தூரப்பறந்துவிட்டன
கலங்கித்ததும்பும் விழிகளில்
துயரத்தை விரித்து
வாழ்வை தனியான வயலொன்றில்
விதைக்கும்
ராட்சதக்கவலைகளோடிருக்கிறது
அப்பறவை
யாருமில்லாப் பறவைக்கு
கைவிளக்கு வெளிச்சங்களையும்
அணைத்துவிடுகின்றன
மழைக்கால ஒழுக்குகள்
நதியில் விழுந்த துளிகளாய்
கண்ணீரெல்லாம்
வாழ்வு முடியும் திசையின்
தொலைவு வரை
சலிக்காமல் துரத்துகிறது
காலங்களை மீறியதோர் சாபம்
இறுகிப்போன பறவையின்
மெளனம் கலைத்து
மரணம் கைவிட்டுச்சென்ற
காலத்தின் கடைசியிடம்
பேச்சிடைப்பொருளானபோது
கோபக் கவளங்கள் நெஞ்சிறங்க,
அழிவின் அலறல் தெறித்துச்சிதறிய
தோப்பில்
விசமுட்கள் துளைத்த தாய்ப்பறவை
தன்மடியில் இருத்திவைத்து
இறக்குமுன் இட்ட முத்தம்
இரத்தச்சிவப்பென ஒளிர்ந்தது
அதன் அலகுகளில்
கேட்க மட்டுமே பழக்கப்பட்ட நானும்
செவிகளாக மட்டுமாயினேன்
பறவையின் துயரிற்கு...

No comments:

Post a Comment