Pages

Tuesday 6 January 2015



நினைவு நனைத்த சிறகை உலர்த்தும்போதெல்லாம்
கோதுண்டும் கொத்துண்டும் விடுகின்றன
யாதேனும் சில அழுத்தமான காயங்கள்..
பச்சையங்களைக்குடித்தபின் பட்டமரத்தின் செதில்களையும்
தட்டிப்பார்க்கும் தீவிரத்துடன் காலம்..
இலைகளற்ற காலவெளிக்குள் வதைபடுகிறது தனிமை..
வழிப்போக்கனின் புன்னகைகூட அற்ற தெருவில்
பாதங்கள் முழைத்து நடக்கின்றன
வசந்தம் பூத்திருக்கக்கூடிய காட்டுக்கு..
ஓராயிரம் கவிதைகளில்
அன்பு நழுவி ஓடிக்கொண்டிருக்கிறது..
ஆயினும் எரியும் நாட்களில் பிரியத்தின்
ஒற்றை நீர்த்துளிகூடக்கிடைக்கா வாழ்வு..
நேசிப்பின் தேம்பல்களைக் கவனியாது
நேரமுட்களில் முளைத்து நடக்கும் நாட்களின்
குதியில் மிதிபடுகிறது வாழ்க்கை..
கவனிக்கத்தவறிய காயம் இளைப்பாறத்துடிக்கும் இருக்கையில்
அலட்சியத்தின் முட்கள்..
கடந்துபோகும் காற்றில் வலுக்கத்தொடங்கி
வெளிக்குள் பரவுகின்றன பழைய முகங்கள்..
கடைசித்துளி நம்பிக்கையும் தீர்ந்த
யெளனம் தழைத்த பூங்காவில்
பேச்சை அலங்கரித்துப் பின் பலியிட்டபோதெல்லாம்
சிவப்பாய்க் கசிந்த தீவிரத்தின் சூட்டில்
அன்பு சாம்பலாயானது..
ஒழுகியோடி அலசிய சொற்களில் கழுவுண்டன
அவரவர்க்கான சாய முகங்கள்..
மிச்சமிருக்கும் சொற்களைத்தூவி முகங்களைக்கடந்து
மீண்டுமொருமுறை மெளனத்தின் ஆற்றில் மிதக்கையில்
துயரம் படகாகிவிடுகிறது..
வலித்த கைகளிலோ வந்தமர்ந்து முழைத்துவிடுகிறது
துடுப்பாய் ஓர் கவிதை..

No comments:

Post a Comment