Pages

Tuesday 6 January 2015



எந்த நதியை நான் குடித்தேன்..
எந்தக் கடலை நீ அருந்தினாய்..
வாழ்வு முடியாமல் நீண்டதே ஓர் கனவொன்றில்..
ஆயிரம் சூரியன்கள் உதித்த அவ்விரவில்தான்
உன் பால் முகத்தை நான் முழுதும் பார்த்தேன்..
என் இரவெல்லாம் அன்று தீர்ந்தன..
நதியொன்றில் நான் கரைந்து கடலொன்றில் மிதந்தேன்..
என் கரையெங்கும் நீயிருந்தாய்..
கொஞ்சம் கவிதைகள் கைகள் நிறையக் கூட இருந்தன..
அள்ளிப்பருகிய கடல் சிந்திய துளிகளில்
நான் பருகி எஞ்சிய உன் முத்தம் வழிந்தது..
ஒருகோப்பை வைனும்
உன் ஒரு துளி புன்னகையும்
என் வாழ்வை நிரப்புமென்று
என் வழிகள் எங்கிலும் நான் அறிந்திராப் புதினம் நிகழ்த்தினாய்..
கால்கள் தொடாத நிலமொன்றை
ஒரு கனவைப்போல நான் பார்த்தேன்..
நீயிருந்தாய் நானிருந்தேன்..
எஞ்சிய யாவும் ஒரு மாயம்போல் தெரிந்தகாட்டில்
உன் காதல் நிறைந்து தழும்பிய கோப்பை என் கைகளில்..
காலமது எங்கோ கரைந்து போனது காற்றில்..
அண்ணார்ந்து பார்த்தேன்
ஓடிக்கொண்டிருந்தன மேகங்கள்..
ஒழுகி வழிந்துகொண்டிருந்தன காலங்கள்..
குனிந்தபோது அத்தனை வேகமாய்
உருகிபோய்விட்டிருந்தன எல்லாப்பனியும்..
நீயில்லை.. முன்பொருகாலம் நாம் குடித்த நேசிப்பின் கடல் இல்லை..
காலியாகிக்கிடக்கிறது உன் முத்தங்களை நிறைத்து
என் கைகளில் வழிந்த கோப்பை...
ஊசியிலை மரங்களின் இலைகள் எல்லாம் இப்போ உதிர்ந்துவிட்டன..
அவற்றின் புன்னகையை பறித்த
துயர்ச்சாம்பல் படிந்த காலத்தைக் கூடவே நானும் கடக்கிறேன்..
பாசி பிடித்துக்கிடக்கிறது உன் கைகளில் வழிந்த
காதலை ஏந்திய வீதிகள்..
வெறுப்பின் பாடலை உரைத்துப் பூத்த மலரில்
உனைப் பார்த்து நானறியேன்..
யாதொன்றின் துயராயும் உனைப்பார்த்து நானறியேன்..
பின் யார் நம் காதலைப் பறித்தது..
நாமருந்திய தேனீரில் கசப்பின் விதைகளை யாரிட்டார்..
வாழ்வை ஒரு இசையைப்போல,
காலங்களை எதிரொலிக்கும் ஓவியத்தைப்போல,
ஊசியிலை மரமொன்றின் துயரறியாப் புன்னகையைப்போல
பருகிக்கொண்டிருக்கையில்
எம் தேனீரில் கசப்பின் விதைகளைப்போட்டவர் யாரோ..
உன் வேரின் அடியில் இருந்து என் காதலைப்பாடிய குயில்
எங்கோ தொலைந்துவிட்டது..
பூக்களில் சிரித்த உன் காதல் உதிர்ந்துவிட்டது..
வானம் மறைத்து நிறைத்த உன் அன்பு வற்றிவிட்டது..
என் நதியின் கரைகளில் இப்போ நீயில்லை,
என் படகின் துடுப்பில் இப்போ உன் விசை இல்லை..
வழ்வு ஒரு சமுத்திரமாய் என் நதியைக் கலக்கையில்
மெதுமெதுவாய் மூழ்கத்தொடங்குகிறேன்..
உன்னைப்போலவே இனியிரு கைகள் வந்தணைத்தால்
நானும் தன் கரைகளில் விட்டுச்செல்லக்கூடும்
என் தடங்களை என்கிறது இரக்கமில்லாக் கடல்..
கரைகளில் உனை ஒழித்துக்
கண்ணீரை நிரப்பிய விதியைச் சபிக்கின்றன
கடலிடையில் போராடும் என் துயர்க்குமிழிகள்..

No comments:

Post a Comment