Pages

Sunday 2 January 2011

வருக புத்தாண்டே....

வரும் புத்தாண்டே 
வசந்தங்களோடு 
வாழ்த்துக்களையும் சுமந்துவரும்-உன் 
வரக்கரங்கள் 
தாய்மொழியை மறந்து 
தன்மானம் இழந்து 
வரலாற்றைத்தொலைத்து 
வளைந்து போன எம் மக்களின் 
கூன் விழுந்த முதுகுகளை 
நிமிர்த்திப்போடட்டும் 

சந்திகளில் நின்று 
சதிராட்டம் போடும் 
எங்கள் இளைஞர்களின்
மூளைகளில் 
தன்மானச்சுடரெழுப்பும் 
தாய்நிலப்பற்றமைக்கும்
அக்கினி விதைகளை 
அள்ளித்தூவி-அந்த 
உக்கிர வெம்மையிலே
உன்கரங்கள் 
உலகைப்புடம்போடட்டும்    

கஞ்சிக்காய் கையேந்தும் 
ஏழைகளின் கரம்பற்றி 
அஞ்சக என்றழைத்து 
அவர்களுக்கோர் வழியமைத்து 
உன்கரங்கள் 
வஞ்சனையற்ற அவர் 
வயிறுகளில் சிறிதமிழ்தத்தை 
வார்த்துச்செல்லட்டும்  

உறவுகளின் நல்வாழ்விற்காய் 
பிள்ளைகளின் சந்தோசத்திற்காய் 
சகோதரர்களின் முன்னேற்றத்திற்காய்
தம்மையே வருத்தி 
தணலிலே உருக்கி 
உடலையே முதலாக்கி 
உழைக்கும் ஏழைகளின் 
துன்பச்சுமைகளை 
உன்கரங்கள் கொஞ்சம் 
துடைத்துப்போடட்டும்-அவர் 
பாதைகளில் தலைகாட்டும் 
முட்களின் முனைகளை 
உன்கரங்கள் 
முறித்துபோடட்டும்

எண்ணத்தில் இனிமை கூட்டி 
கண்களில் கவிதை தேக்கி 
இதயத்தில் ஆவல் கூட்டி 
எதிர்காலக்கனவுகள் சுமந்து 
ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறோம் 
புத்தாண்டே... 
உன்கரங்களின் குளிர்விப்பில் 
உலகமெல்லாம் அன்பு பரவி
உயிர்களெல்லாம் நிறையட்டும்...

No comments:

Post a Comment