Pages

Friday 29 January 2016

மரித்துப்போகாத மீட்பர்கள்.. ---

தனித்த பயணத்தின் நெடுவழியில்
தொலைந்துபோகமுடியாமல்
அவர்கள் திரும்பி வந்திருக்கிறார்கள்..

அவர் பயண நெடுகிலும்
பூக்களை சொரிந்த
கரங்களும்
அவர் சுவடுகள் அறிந்தபோது
தடங்களை பாடிய மனிதர்களும்
பார்க்க விரும்பா திசையொன்றிலிருந்து
அவர்கள் திரும்பி வந்திருக்கிறார்கள்..

வெறிச்சோடிய அவர் தெருக்களில்
நெருப்பை அள்ளிக்கொண்டலைகிறது
காலம்..
எறிந்துகொண்டிருக்கிறார்கள்
திசைகளின் மீது தம் துயரை
மீதமிருக்கும் வாழ்வும்
ஒவ்வொரு சொல்லாக
வற்றிப்போகிறது..

மரணத்தின் கரைகைள் முடிவின்றி நீண்ட
காலமொன்றில்
கண்ணீர் பெருகி ஓடிய தடயங்களில்
ஏதோ ஒன்றில்
அவர் பயணத்தின் எச்சமும்
மிச்சமிருக்கக்கூடும்

ஊர் எரித்த சிதைகளிலிருந்து
உயிர்த்து நடந்தது அவர் நெடும்பயணம்
வாலிபத்தின் பெரும்பொழுதுகள்
அவ்வழி நீளக்கடந்த காலங்களோடே
தேய்ந்தழிந்தன

மீதமிருக்கும் நாட்களோடு
ஓரமாய் ஒரு இருப்பு
கூனிக் குறுகிக் குனிந்து
காணச்சகியாத வாழ்வொன்று
கடந்து வந்த தெருக்களில்
சிந்திய உதிரத்தின் வாடையோடு

கருணையற்ற வெளியொன்றின் நடுவே
தாகம் வாட்டிய மனிதர்களின்
கொடுந்துயரை ஏந்தி அவர்கள் நடந்தார்கள்

தெருக்களில் உறைந்த கண்ணீரை
நதிகளில் மிதந்த துயரை
வனங்களில் அலைந்த தேம்பல்களை
தனித்தே தோள்களில் சுமந்தார்கள்..

தமக்காய் பாடமறுக்கும் மனிதர்களின் சிலுவையையும்
முட்கள் போர்த்திய விரிப்புகளின் மேல்
முன்னொரு பொழுது விரும்பியே சுமந்தார்கள்..

இப்போ
திரும்பி வருவார்கள் என
யாரும் நினைத்திருக்கவே முடியாத்
திசை ஒன்றில் இருந்து
அவர்கள் திரும்பிவந்திருக்கிறார்கள்

தெருக்களில் வதைபடும்
தம் துயரை சுமக்கக்கூடுமென
நம்பிய பலரும்
தெருவுக்கு வரவேயில்லை..

காற்றின் குரலும்
கடலின் கண்ணீரும்
முடிந்துபோகிறது..

கையறு நிலையின் காலமொன்றில்
கடைசித்துளி கண்ணீரும் காய்ந்தபின்பு
வெள்ளிகள் வற்றிய வனத்திடையே
தனித்து நிற்கிறார்கள்..

எல்லாத்திசைகளும் சுடுகின்ற தெருவில்
எந்தத்திசையில் இனி அவர் நடப்பார்..?

#மீள் #தேர்தல் :(

No comments:

Post a Comment