Pages

Friday 29 January 2016

துயர்க்கதை...

பசியாறி அறிந்திராக் கடலொன்றின்
ஆழத்தோடு சூழ்ந்தது துயரம்..
எறும்புகளின் புற்றின் மேல்
வெறுப்புடனும் வன்மத்துடனும்
பொழிந்தது அமிலமழை..
கொடுக்குடன் போராடின
எளிய எறும்புகள்..
கூடி எதிர்த்தன
கொடுமையின் பிரதிகள்..

போர் காலப்புழுதியாய் விரட்ட
கொட்டியது தணற்சாம்பல்..
ஓலச்சட்டையை அணிந்தன
ஊர்கள்..
தெருக்களை எரித்தது கொடிய
பசிவெயில்..
தீரா வஞ்சத்தோடு
எழுந்து கருக்கொண்டு
ஒளியை விழுங்கி
இருளைப்பரவி
முளைத்துப் புடைத்து
வீங்கிப் பருத்தது விதிரேகை..

கடைசி எறும்பும்
குத்திய கொடுக்கோடு
வீழ்ந்து மடிய
வீரம் புதைந்தது காட்டில்
விதையாய் போன
எறும்புகளுக்காய்
முள்ளாய்க் கனத்தது
வரலாறு..

இரவும் அழிய பகழும் அழிய
ஓடிக்களைத்த இரத்த ஆறு
காய்ந்து கறுத்து
காலவடுவாய்
வாழ்வு நெடுகிலும்..

தடங்களில் ஒழிந்திருக்கிறது
பயணங்களின் கதைகள்..
செரிக்கையில் முள்ளாய்
நினைக்கையில் நீறாய்
வார்த்தைகள் முடிவில்லா வானத்தில்
மோதித்திரும்பிட துடிக்கும் பந்தாய்
முடிந்தது பிரளயகாலம்..
முடியாமல் நீள்கிறது
காலங்களின் பேரடுக்கில்
சீழ்பிடித்த புண்ணாய்
துயரம்..

தெருப்படலை திறந்தே இருக்க
போர்ப்புரவி கிளறிய புழுதிக்காட்டில்
தொலைந்தும் தொலைத்தும்
தொலைக்கப்பட்டும்
திரும்பிவராதவருக்காய்
காத்திருந்த கண்கள் தூர
காய்ந்து உப்பாய்ப்போனது
காலக் கிழவியின் கண்ணீர்..

துயர நிலவின் ஒளியில்
நிலமும் நீரும் கலங்கி அழ
காற்றும் வானும்
காலம் புதைத்த
எறும்புகளின்
கண்ணீராய் ஒலிக்கிறது..

இரத்தமும் சதையும் சூழ
முற்றுறாத கதையில்
நீதி
எறும்புகளின்
நூற்றாண்டு அழுகை வாங்கி
முள்ளடர்ந்து மண்டிய
தோலாசனத்தின் மேல்..

No comments:

Post a Comment