Pages

Monday 21 October 2013

பெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று..


இப்போதெல்லாம்
நாம் சந்தித்த இடங்களில்
யாருமே இருப்பதில்லை...
சிந்திக்கிடக்கின்றன
காய்ந்துபோன
சில மஞ்சள் பூக்களும்
நம் நினைவுகளும்....

காதலும் கவிதைகளுமாய்
மாறி மாறி துலங்கிய அந்நாட்கள்
தொலைந்துவிட்டன..

மாலை வெய்யில் தன் மஞ்சள்
நிறமிழந்த ஒரு கோடையில்தான்
நேசிப்பை விற்று
காய்ந்துபோனது உன் இதயம்...

நினைத்துப்பார்க்கையில்
நெஞ்சத்தின் ஆழத்துள்
மெல்ல இறங்குமொரு முள்..

அந்தரவெளியும்
கலவர நிழலுமாய்
நூறாயிரம் கதைகளை
சுமந்தலையும் இதயத்தை
உடைத்துவிடுகிறது
ஒற்றைக்கண்ணீர்த்துளி..

பொழுதில்லை அழுவதற்கும்..

நினைத்துக் கவலையுற்று
துன்புற்றுவிட்டு பனிக்குளிரில்
வேலைக்கு இறங்கிச்செல்லவே
போய்விடுகிறது நாள்...

என் கவலை எல்லாம்
பறவைகள் காதல் செய்ய
படர்ந்துகிடந்த
அவ்வீதியோர மரங்களுக்கு
இலையுதிர்காலத்தைக் கூட்டிவந்த
முதல் பறவை
நாமாக இருக்கக்கூடாதென்பதுதான்...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவிலும் ரசிக்க வைக்கும் சிந்தனை வரிகள்... தொடர வாழ்த்துக்கள்...

நிலாமதி said...

சோகத்தை வர்ணிக்கும் லாவகம் உங்களிடம் உண்டு.. சோகம் மீண்டு வாழ வாழ்த்துக்கள்.

Post a Comment