Pages

Tuesday 29 April 2014

சதா ரணமாமாகும் நினைவுகளும் சாகா நம்பிக்கைகளும்...




தமிழீழதேசத்தின் கண்ணீர்தோய்ந்த மாதத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறோம்.... நந்திக்கடலோரம் ஒரு ராஜ்ஜியத்தின் கனவு சிதைக்கப்பட்டு காற்றில் எழுதிய கடைசிச்சொல்லாகிப்போனது அந்தராஜ்ஜியம்.... முள்ளைச்செதுக்கிய சிற்பிகள் காற்றோடு போய்விட்டனர்... சிற்பிகளைப்பற்றிய கதைகளும் கனவுகளுமே ஒரு இனத்தின் மொழியாகிப்போனது...

எல்லாத்துன்பங்களையும் யாரின் நினைவுகளுடன் சுமந்தார்களோ அவர்களுக்கு எல்லாமே பொய்யென்று ஆகிப்போயின..

உறவுகளையும்,உடன்பிறப்புக்களையும் அழிவின் பேய் தின்றுவிட்டது...

எல்லாமே காலத்துடன் அள்ளுண்டுபோன நினைவுகள் ஆகிவிட்டன...

ஏன் இப்படி நடந்தது..? எத்தனை நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் இருந்தோம்..

காண்ணீரால்,வெறும் வார்த்தைகளால் அழித்துவிடமுடியாத துயரம் நெஞ்சில் தீயாகிறது..

எங்கள் மனிதர்கள் எல்லோரும் அனுபவித்த,அனுபவிக்கின்ற துயரங்களுக்கான பதிலை,நாங்கள் இழந்தவைகள் எல்லாவற்றுக்குமான பதிலை எப்படிச்சொல்லபோகிறோம்..? எல்லாவற்றையும் சமன் செய்யக்கூடியதாக எல்லாவற்றையும் அர்த்தப்படுத்தக்கூடியதாக எல்லாவற்றையும் புதிதாக்கக்கூடியதாக பொருள் நிறைந்த பதிலொன்றுக்காகவே எங்கள் காத்திருப்புக்களுடன் நாட்கள் நகர்கின்றன எமக்கு..

மாற்றமென்பது எளிதில் நிகழக்கூடியதல்ல...அது நீண்ட பிரயத்தனத்திலும்,முயற்சியிலும்தானே தங்கி இருக்கிறது..

போராட்டாத்தால் நிறைந்த ஈழத்தமிழர்களின் கடந்துபோன காலங்களின் ஒவ்வொரு துளியும் எவ்வளவு நம்பிக்கைகளை,நினைவுகளை பதிந்துவிட்டு போயிருக்கின்றன எமக்குள்..அந்த நம்பிக்கைகள் எம்மினத்திடம் இன்னும் மிச்சம் இருக்கிறது..

எங்கள் துயரங்கள் தீர்ந்தபொழுதொன்றில் நந்திக்கடலின் மணற்பரப்பில் இருந்து அவர்களின் ஆன்மாவுடன் எங்களின் சந்ததிகள் பேசுவார்கள்...மேகங்கள் அற்ற அந்தநிர்மலமான கோடை வானத்தில்பட்டங்கள் ஏற்றி எங்கள் குழந்தைகள் குதூகலிப்பார்கள்...அவை எங்கள் காலங்களின் வாசனைகளோடிருக்கும்..

No comments:

Post a Comment