Pages

Sunday 1 January 2012

பிரியம் சமைக்கும் கூடு...

உலகின் மிகத்தொன்மையான முதலாவது மனித நாகரீகத்தில் இருந்து இன்றுவரை வீடென்பது மனிதர்களிடமிருந்து இணைபிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் மூத்த நாகரீகங்களில் தழைத்திருந்த மனிதர்களிடமும் சொந்தமாக வீடுகள் இருந்திருக்கின்றன.அந்தவீடுகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பாற்றுவதற்க்காக அவர்களில் பலர் போர்க்களங்களில் போராடி வீழ்ந்திருக்கிறார்கள்.வீடுகளுக்காக உயிர்களைக்கூடக் கொடுக்குமளவிற்க்கு வீடுகள் மனிதர்களின் வாழ்வுடன் மிகமுக்கியமானவையாகப் பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. அப்படித்தான் அவர்களின் உயிரோடும் உணர்வோடும் பின்னிப்பிணைந்திருந்தது அவர்களின் அந்த வீடு… பல ஆண்டுகளின் பின்னர் இப்பொழுதுதான் முதன்முதலாக அவர்களின் வீட்டிற்க்குபோக அவனுக்கு அனுமதி கிடைத்திருந்தது.அது அவர்களின் பரம்பரை வீடு..தலைமுறை தலைமுறையாக அவர்கள் வாழ்ந்த வீடு..மிக ஆவலோடு தன் வீட்டைப்பார்க்க வந்தவனைக் கற்குவியல்கள்தான் கண்ணீருடன் வரவேற்றுக்கொண்டிருந்தன..அழிந்து போன ஒரு நாகரீகத்தின் எஞ்சியிருக்கும் சுவடுகளைப்போலவே அந்த வீட்டில் வாழ்ந்து மடிந்த சில தலை முறைகளின் ஞாபகங்களைக் காற்றில் பரவவிட்டபடி சில சுவர்களையும் இடிந்து சிதிலங்களாகக் கிடக்கும் கற்க்குவியல்களையும் காட்ச்சிப்படுத்தியவாறு வெற்றிடமாகக் கிடந்தது அவன் வாழ்ந்துகளித்த அவனது முன்னைய காலத்து வாழ்விடம்.வீட்டைப் பார்ப்பதற்க்காக புறப்பட்டபோது அவனுக்கிருந்த ஆர்வமும்,மகிழ்ச்சியும்,எதிர்பார்ப்பும் அங்கு வந்து சேர்ந்தபொழுது கற்க்குவியல்களாகச் சிதறிப்போய்க்கிடக்கும் அந்த வீட்டைப்போலவே சுக்குநூறாய் உடைய்ந்துபோய்...நெஞ்சம் கனத்துக்கிடந்தது. காரணமேயின்றி அழிக்கப்பட்ட அவனது வீட்டை நினைத்து பெருமூச்சொன்றை எறிந்துகொண்டான். அவனின் பால்யகால ஆசைகளை அடைத்து வைத்திருந்த அவனது அறைக்கு இப்பொழுது வலது பக்கச்சுவர் மட்டுமே எஞ்சியிருந்தது.அந்த அறைக்குள் இருந்து அலை அலையாக எண்ணங்கள் புறப்பட்டு வந்து அவன் மனதில் மோதித் தெறித்துக்கொண்டிருந்தன.ஒவ்வொரு இரவும் அந்த வீடு கொடுக்கும் ஒருவித பாதுகாப்புணர்வில்தான் அவன் நிம்மதியாகத் தூங்கிப்போயிருக்கிறான்.அந்த அறையின் கதகதப்பில் சொக்கிக்கிடந்தபடி அவன் பல கனவுகளில் மிதந்திருக்கிறான்.உடைந்து கொட்டிப்போய்க் கிடக்கும் அந்த அறையின் இடிபாடுகளுக்கிடையேதான் அவனது அனேகமான கனவுகள் பலவந்தமாகப் புதைக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வீட்டின் உருவாக்கத்தின் பின்னால் புதைந்து கிடக்கும் பல கனதியான கதைகளைப்போல அந்த வீட்டின் அழிப்பின் பின்னால் இருக்காது.எல்லாமே சில மணித்தியாலங்களில் அல்லது சில நொடிகளில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆக்கத்தின் பின்னால் இருக்கும் உழைப்பும்,மனித வலுவும் இப்பொழுதெல்லாம் அழிவின் பின்னால் இருப்பதில்லை.அழிவு மட்டும் இப்பொழுது மிக இலகுவாக நடந்து முடிகிறது.இயற்க்கையில் மாற்றம் என்பது நிகழ்வதற்க்கு பலநூறாண்டுகள் சிலவேளைகளில் பல்லாயிரம் ஆண்டுகள் எடுக்கின்றன. ஆனால் இப்பொழுதெல்லாம் ஒரு துப்பாக்கிக் குண்டு தன் இலக்கை அடையும் பொழுதொன்றில் அல்லது ஒரு எறிகணை வெடித்துப் பிழக்கும் நொடியில் மாற்றம் மிக வேகமாக இடம்பெற்று முடிந்துவிடுகிறது. அப்படித்தான் அவனது வீடும் கற்க்குவியல்களாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.அதற்க்குச் சாட்ச்சியாக எஞ்சியிருக்கும் இரண்டு சுவர்களும், மோதிச் சிதறிய குண்டுத் துகள்களின் வீச்சுக்களை வடுக்களாகத் தாங்கியவாறு, அவை சொல்லமறந்த ஏதோ ஒரு கதையின் மிச்சத்தை அவனுக்கு நினைவு படுத்திக்கொண்டிருந்தன.அந்த வீட்டின் வயதை எஞ்சியிருந்த பழுப்பேறிய அத்திவாரங்கள் சுமந்துகொண்டு ஏதுமறியாதவைபோல் மெளனமாக நின்றுகொண்டிருந்தன. அந்த மெளனம் அங்கு வாழ்ந்த ஒரு குடும்பத்தின் ஆசைகளைப் புதைத்துக் கொண்ட ஒரு வீட்டின் கதை.அவர்களின் எண்ணங்கள்,அவர்களின் கனவுகள்,அவர்களின் ஆசைகள் எல்லாம் அந்த வீட்டைச் சுற்றிக்கொண்டே இருந்தன.அந்த வீட்டு முற்றத்தில் அவன் பாட்டனின் வியர்வைகள் ஆவியாகி இருந்திருக்கும்.கற்க்குவியல்களாகக் கிடக்கும் அந்த வீட்டினுள்ளேதான் அவன் தலைமுறைகள் முத்தங்களைப் பரிமாறியிருப்பார்கள்.ஒருகாலத்தில் மூன்று தலைமுறைகளின் சிரிப்பும்,உரையாடல்களும் அந்த வீட்டினுளே வாழ்ந்து கொண்டிருந்தன.

கிடைத்த இடைவெளிகளுக்குள்ளாலெல்லாம் வேர்விட்டு வளர்ந்து வீடிருந்த இடமெங்கும் பற்றைக்காடாய் சடைத்திருக்கின்றன புற்க்கள்.மனிதர்கள் வாழ்வதற்க்கு தகுதியற்ற இடமாக மாறிவிட்டிருந்தது அவன் வீடிருந்த வளவு.அவன் வீட்டிலிருந்து இரண்டு மூன்று காணிகள் தள்ளித்தான் முன்னரங்க நிலை ஒன்று இருந்தமைக்கான அடையாளங்களுடன் மண் அணை ஒன்று பாம்புபோல் வளைந்து வளைந்து முடிவு தெரியாமல் நீண்டு கிடந்தது.மண் அரனில் இருந்து கிட்டத்தட்ட அவன் வீட்டு வேலிவரைக்கும் முட்க்கம்பி அடித்த தடயங்களும் சில முட்க்கம்பிச் சுருள்களும் எஞ்சியிருந்தன. வீட்டு வேலியை ஒட்டியவாறு "மிதிவெடி அபாயம்" மண்டை ஓட்டுடன் அச்சுறுத்திக்கொண்டிருந்தது.கால்கள் இரண்டும் ஒருமுறை கூசுவதுபோல் இருந்தது அவனுக்கு. தெரிந்த காலில்லாத பலர் அவனுக்கு வரிசையாக நினைவுக்கு வந்துகொண்டிருந்தனர்.கண்முன்னால் எமனைப் பார்த்தபடிதான் இனிமேல் அங்கு அவர்கள் வாழ்ந்தாக வேண்டும்.சிறு வயதுகளில் ஓடியாடிய பூமியில் இனி அவதானமாகத்தான் தன் ஒவ்வொரு அடிகளையும் அவன் எடுத்து வைக்க வேண்டும்.நெஞ்சு வெடித்து விடும்போல் இருந்தது அவனுக்கு.

எப்பவோ பதிந்த ராணுவச் சப்பாத்தின் அடையாளங்கள் மனித இடையூறுகளின்றி ஆக்கிரமிப்பின் அடையாளங்களாக இன்னமும் அந்த வளவெங்கும் அங்குமிங்குமாகக் கிடந்தன. அவன் வாழ்ந்த வீடு அழிந்து போயிருந்தது.ஆயினும் அழிவின் சுவடுகளில் ஆக்கிரமிப்பின் அடையாளங்களை அது சுமந்து கொண்டிருந்தது.ஆக்கிரமிப்பாளர்களின் கொடிய மனங்களின் இருண்ட பக்கம்களை அது உலகிற்க்குக் காட்டிக்கொண்டிருந்தது.அவனது வீடும் வீட்டைச் சுற்றி இருந்தவைகளும் நாசமாவதை ரசித்தபடிதான் அவர்கள் கவச வாகனத்தை ஓட்டியிருக்க வேண்டும்.அந்த வளவை அழித்தவர்கள் மிகக் கரிசனையுடன் இயலுமான அளவு ஆகக்கூடிய சேதங்கள் உருவாகும்படிதான் அழித்திருக்கிறார்கள்.முதலில் குண்டுகளால் தாக்கியிருக்க வேண்டும்.பின்னர் புல்டோசர்களையும்,கவசவாகனங்களையும் அனுபவித்து அனுபவித்து அந்த வளவினூடாக ஓட்டியிருக்க வேண்டும். அவர்கள் அழிப்பதைப்பற்றி மிகக்கடினமான பயிற்ச்சியுடன் நன்கு கற்றிருக்கவேண்டும்.மிக நேர்த்தியாக செய்திருந்தார்கள்.மிக நெகிழ்வான அந்த மண்ணிண் மீது கவசவாகனங்கள் ஓடிய தடங்கள் நீளத்திற்க்கு ஒழுங்கின்றி இருந்தன.அவன்,அவனது அம்மா,அம்மாவின் அப்பா என்று அவர்கள் எல்லோரும் குழந்தையாக இருந்தபோது அந்த மண்ணில் விளையாடி இருக்கிறார்கள்.புல்டோசர்கள் துவைத்திருக்கும் இதே மண்ணைத்தான் குழந்தையாக இருக்கும்போது அவர்கள் தங்கள் கைகளால் அள்ளித்திண்ண முயன்றிருப்பார்கள்.இந்த மண்ணில்தான் அவனது தாத்தாவும்,அவனது அம்மாவும் பூஞ்செடிகளை வளர்த்து அழகு பார்த்தார்கள்.வாழ்க்கை ஒரு ஆறுபோல் அந்த வீட்டில் வழிந்தோடியது.அந்த ஆறு இப்பொழுது திசைமாறி விட்டிருக்கிறது.அடக்கி ஆழவேண்டும் என்ற ஒரு இனத்தின் வெறி அந்த வீட்டைப்போல் பல வீடுகளின் இயக்கத்தை நிறுத்திவிட்டிருக்கிறது.

எஞ்சியிருந்த இரண்டு சுவர்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர்கள் மொழியில் ஏதோ கிறுக்கி இருந்தார்கள்.அவர்களின் மனங்களைப்போலன்றி அவர்கள் மொழியின் எழுத்துக்கள் வளையம் வளையமாக மிக அழகாக இருந்தன.இவ்வளவு அழகான மொழியையும்,கலாச்சாரத்தையும் கொண்டிருக்கும் இனம் ஏன் இன்னொரு இனத்தை அடக்கி ஆழ நினைக்கிறது... ?தங்கள் வீடுகளை எல்லாம் அழகாகப் பார்த்துப் பார்த்துச் செதுக்குபவர்கள் எதற்க்காக இன்னொரு இனத்தினுடையதை அழிக்க நினைக்கிறார்கள்...?வீடும்,நாடும் அவர்களால் மட்டும் இழக்க முடியாததாம்...பிறகெதற்க்கு எங்களுடையதை ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள்...?அவன் கேள்விகளுக்குப் பதிலளிக்க அப்பொழுது அங்கு யாரும் இருக்கவில்லை.

முதன்முதல் வீட்டைப் பிரிந்து இடம்பெயர்ந்தபோது அவர்கள் யாரும் நினைக்கவில்லை அது இவ்வளவு நீண்ட ஒரு பிரிவாக இருக்கப்போகிறதென்று.ஒரு மாதம் இரண்டுமாதமாகி ஒருவருடமாகி...இடம்பெயர்ந்து இருந்த இடத்தைவிட்டு இடம்பெயர்ந்து...மீண்டும் மீண்டும் புதிதுபுதிதாக எங்கெங்கோவெல்லாம் இடப்பெயர்வு என்றானபோது வருடங்கள் பலவாகி விட்டிருந்தது.வீட்டிற்க்குத் திரும்பிப்போவோம் என்று அவர்களிடமிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கைகளும் முற்றாக உதிர்ந்துபோய் விட்டிருந்தன.எங்கெங்கோவெல்லாம் இடம்பெயர்ந்து யார்யாரோ வீட்டுத் தாழ்வாரங்கலிலே ஒதுங்கும்போதெல்லாம் அவமானங்களும்,வேதனைகளுமே அவர்களிடம் மிச்சமாக இருந்தன. விடிய விடிய விழித்திருந்து வீட்டின் நினைவுகளில் கழிந்துபோயின பல நீண்ட இரவுகள். பொழுதுகள் ஒவ்வொன்றும் விடியாதவைகளாகவே போய்க்கொண்டிருந்தன அவர்களுக்கு.வாழ்க்கை பெருஞ்சுமையாகக் கனத்துக்கொண்டிருந்தது.மனங்கள் வெறுமையாக அலைந்துகொண்டிருந்தன.

எத்தனையாவதென்று தெரியாத ஏதொவொரு இடப்பெயர்வில் அவன் அம்மம்மா இறந்துபோய்விட அம்மா முழுமையாக உடைந்து போய்விட்டிருந்தார்.அம்மம்மாதான் ஒரே பிடியாக நின்று அம்மாவுக்கு அந்த வீட்டைச் சீதனமாக எழுதிக்கொடுத்திருந்தாவாம்.இரண்டு ஆம்பிளைச் சகோதரங்களுடன் ஒரே ஒரு பொம்பிளைப்பிள்ளையாக அம்மா பிறந்திருந்ததால் வீடு அம்மாவுக்குத்தான் சேர வேண்டும் என்று அம்மம்மா, அம்மாவின் சின்னவயதிலேயே வீட்டில் எல்லோரிடமும் முடிவாகச் சொல்லி வைத்திருந்தாராம்.சொன்னதுபோலவே அம்மாவின் திருமணத்துடன் வீட்டைச் சீதனமாக எழுதி அவன் அம்மாவிற்க்கே கொடுத்துவிட்டாவாம்.அம்மப்பாதான் அந்த வீட்டைக் கட்டினாராம். வீட்டைக்கட்டினார் என்று சொல்வதை விட ஒவ்வொன்றாகப் பார்த்துப்பார்த்துச் செதுக்கினார் என்றுதான் சொல்லவேண்டும்.வீடுகட்டி முடியும் வரையும் நேரகாலம் பார்க்காமல் சாப்பாடு தண்ணியும் ஒழுங்காயில்லாமல் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு கூலியாக்களோட தானும் ஓராளா நிண்டு செயற்பட்டாராம்.அடிக்கடி அம்மம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறான்.அதைச் சொல்லும்போது அம்மம்மாவின் முகத்தில் ஒருவித பிரகாசம் தெரியும்.அம்மப்பா அடிக்கடி சொல்வாராம் நான் செத்தாலும் என்ர இந்தவீட்டிலதான் சாகவேணும் எண்டு..அதுபோல அந்த வீட்டிலேதான் அவர் உயிர் பிரிந்ததாம்...இது நடந்தது அவன் பிறப்பதற்க்கு முன்னர். எனக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லாமல் போகப்போகுதுபோல...இடப்பெயர்வின் பின்னர் அடிக்கடி அம்மம்மா புலம்பிக்கொள்வார்...கடைசிவரை அவரின் அந்த ஆசை நிராசையாகவே போய்விட்டது...

வீடுகட்டி முடிந்தபோது அந்த வீட்டின் அழகைப்பற்றி கதைக்காத ஊர்ச்சனமே இல்லையாம்.அப்படி ஒரு அழகான வீடு அந்த ஏரியாவிலேயே அப்பொழுது இருக்கவில்லையாம்.வீடுகட்டி முடிந்த களையோடகளையாய் புதுவீட்டையும் பெரிய அளவில நடத்திவைச்சாராம் அம்மப்பா.அம்மப்பா அந்தக்காலத்தில வி.சியில(கிராம சபை) இருந்தவராம்.அதால எம்.பிமார் எல்லாம் பழக்கமாம்.புது வீட்டுக்கு தனக்குத் தெரிஞ்ச சில எம்.பிமாரையும் கூட்டிவந்து கிறான்டாத்தான் நடத்தினவராம்.இரண்டு நாளைக்கு முன்னமே பெரிய திருவிழாமாதிரி றோட்டெல்லாம் அலங்கரிச்சு பந்தல்போட்டு வாழைக்குலைகட்டி விடியவிடிய சோடிச்சவையாம்.புது வீட்டு நேரம் பாக்கவேணும் வீட்டை,என்ன பெற்றனா இருந்திச்சு...வீட்டைப்பாத்து ஆசைப்படாத சனம் அயலட்டையில ஆருமே இல்லையாம்..அம்மம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறான்...அதற்க்குப் பிறகு அம்மாவின் கலியாண வீட்டிற்க்குப் பெயின்ற் அடித்துப் புதுச்சாமான் எல்லாம் வாங்கிப்போட்டு வீட்டைப் புதுப்பிச்சவையாம்.. பிறகு தங்கச்சியின் சாமத்தியவீடு...இப்படி வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விசேசத்திற்க்கும் வீடும் புதுக்கோலம் கொண்டு நிற்க்கும்.

அவனும்,மற்றையவர்களும் வீட்டை எப்படிப்போவது என்றும் எப்பொழுது வீட்டைப் பார்க்கப்போகிறம் என்றும் கவலைப்பட்டுக்கொண்டிருக்க அவன் தம்பி மட்டும் அதற்க்குச் செயல்வடிவம் கொடுக்கப்போய்விட்டிருந்தான்.அம்மம்மாவின் மரணத்தில் இடிந்து போயிருந்த அம்மாவிற்க்கு தம்பியின் முடிவு பேரிடியாக இருந்தது.தன் கனவுகளை,ஆசைகளை எல்லாம் தோழர்களிடம் சுமத்திவிட்டு அவன் தம்பி வெகு விரைவிலேயே போர்க்களத்திலிருந்து வித்துடலாக வீடு வந்து சேர்ந்திருந்தான்... மெதுமெதுவாக வீட்டிலிருந்தவர்களின் எண்ணிக்கை இறங்குவரிசையில் போய்க்கொண்டிருந்தது.இடப்பெயர்வுகள் மட்டும் இன்னமும் நின்றபாடாக இல்லை...

கற்க்குவியலாகக் கிடந்த வீட்டைப் பார்க்க அவனுக்கு கண்களிலிருந்து கண்ணீர் திரண்டு வழிந்து கொண்டிருந்தது.ஓவென்று ஒப்பாரி வைத்து அழவேண்டும் போலிருந்தது அவனுக்கு.அப்பா பார்த்துப்பார்த்து தன் பிள்ளைபோல் பராமரித்தவீடு இப்படிச்சிதைந்து போய்க்கிடக்கிறதே...அப்பா இருந்திருந்தால் இதைப்பார்த்து எப்படி உடைந்துபோயிருப்பார்...வீட்டையும் தம்பியையும் நினைத்து நினைத்தே அப்பா பாதி இறந்துபோய்விட்டிருந்தார்.எல்லைப்படைக்கும்,மக்கள் படைக்கும் எல்லோரும் போகவேண்டும் என்றானபோது அவனை வீட்டில் இருத்திவிட்டு அப்பாதான் எல்லைக்குப் போனவர்...எல்லைக்குப் போனவரை எமன் கூட்டிப்போவான் என்று எவருமே நினைக்கவில்லை...விதி அவர்கள் வீட்டில் மட்டுமல்ல அந்த மண்ணில் இருந்த எல்லோரது வீட்டிலும் விளையாடிக்கொண்டிருந்தது...அப்பாவின் இழப்புடன் அம்மா நடைப்பிணமாகிவிட்டா..அவளது வாழ்வு ஒடுங்கிப்போய் விட்டிருந்தது...அவன் தான் வீட்டில் எல்லாமாக இருக்க வேண்டியிருந்தது...வயதான ஒரு தங்கச்சி..அவளை எப்படியாவது ஒரு நல்ல இடத்தில் கரைசேர்க்கவேண்டும் என்ற பெரும் பொறுப்பு...அவர்களுக்காக வாழ்ந்தாகவேண்டும் என்ற வேட்கை மட்டும்தான் அவனை இன்னமும் உயிருடன் வைத்துக்கொண்டிருந்தது...

அவள் வாழ்வதற்க்காகக் கனவுகண்டுகொண்டிருந்த வீடு கற்க்குவியலாகக் கிடக்கிறது...இதை எப்படித் தங்கச்சியிடம் சொல்லப்போகிறேன்...?அவள் எப்படி இதை எடுத்துக் கொள்ளுவாள்...? அவனுக்கு அழுகைஅழுகையாக வந்தது…தங்கச்சிக்கு அந்த வீடு தனக்குரியதென்ற பெருமை எப்பொழுதும்...அம்மா தனக்குப் பிறகு தங்கச்சிக்குத்தான் வீடென்பதை வீட்டில் யாருடனாவது கதைபடும்போது சாடைமாடையாகக் கேட்டுக்கொண்டிருப்பாள்.அந்த வீடு தனக்கே உரித்தாகப் போகிறதான சந்தோசத்தில் வீட்டில் ஒவ்வொன்றாகப் பர்த்துப்பார்த்துச் செய்வாள்.சமைப்பதிலிருந்து,வீட்டைப் பெருக்குவதிலிருந்து,பூங்கன்றுகளைப் பராமரிப்பதென்று எல்லாவற்றையும் தானே ரசித்துரசித்துச் செய்வாள்.அந்த வீட்டை அலங்கரிப்பதில் அவள் எப்பொழுதுமே திருப்தி கண்டதில்லை.புதிதுபுதிதாக விதம்விதமாக எதையாவதுகொண்டு அலங்கரித்துக்கொண்டேயிருப்பாள். திருமணம் செய்து தன் கணவன் குழந்தைகளுடன் அந்த வீட்டில் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று அவள் கற்பனை செய்து வைத்திருப்பாள்...?எல்லாமே அந்த வீட்டைப்போல் இனிக் கனவாகிப்போய்விடும்...

வலதுபக்க வேலியோடு ஒட்டியிருக்கும் சறோஸா வீடு சில வாரங்களுக்கு முன்னரே அங்கு வந்திருக்க வேண்டும்.இடிந்து போன அவர்களின் வீட்டில் எஞ்சியிருந்த அத்திவாரத்தையும் சில சுவர்களையும் இணைத்து தென்னோலைகளால் இணக்கிய தட்டிகளை வைத்து அடைத்து வீடென்று சொல்லும்படியாகக் கூடொன்று செய்திருந்தார்கள்.சறோஸா ஒரு காலத்தில் அந்த ஊரில் பெரும் பணக்காரியாக இருந்தவள்.யுத்தம் இப்பொழுது அவளையும் ஒரு அடிமட்ட நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது.பகல் முழுவதும் வேலை செய்துவிட்டுவந்த களைப்பில் சறோஸாவின் கணவன் முற்றத்தில் நின்ற மாமரத்தின் கீழிருந்த வாங்கில் றேடியோப் பெட்டியை பெரிதாக அலறவிட்டுப் படுத்துக்கிடந்தான்.உந்த றேடியோவிலதான் திரும்பத்திரும்ப வடக்கின் வசந்தமும் இந்தியாவின் ஜம்பதாயிரம் வீடுகளும் தமிழர்களுக்குச் சுபீட்ச்சத்தையும் நிம்மதியான வாழ்வையும் கொண்டுவந்துள்ளதாக சொல்லிக்கொண்டிருப்பார்கள்…அந்தக்கவலையிலும் அவனுக்குச் சிரிப்பாக இருந்தது.

அம்மம்மாவைப்போல,அப்பாவைப்போல,தம்பியைப்போல அந்த வீடும் இப்பொழுது உயிரற்றதாகிவிட்டது.அது இனிமேல் வெறும் ஜடம்.அதற்க்குள் இருந்த உயிரோட்டம் போய் விட்டது.எஞ்சியிருக்கும் குப்பைகளை எல்லாம் அகற்றி தற்கலிகமாக ஒரு வீடுபோட்டு அம்மாவையும் தங்கச்சியையும் கூட்டிவரவேணும்...நாலு மூலைக்கும் நிலைக்கு நடுவதற்க்கு நல்ல மரமாகப் பாத்து வெட்டிவரவேணும்...செல்லம்மாவிடம் மட்டைக்கும்,கிடுகிற்க்கும் சொல்லவேணும்...மழைகாலம் வரமுன்னம் கெதியெண்டு கொட்டில் போட்டு முடிக்கவேணும்...எல்லாத்துக்கும் முதல் ஆரும் போகாதமாதிரி உந்த மிதிவெடிப்பக்கம் குறுக்கு வேலி போட்டு மறைக்க வேணும்..மெதுமெதுவாக வீட்டைப் பெருப்பிக்க வேணும்..தங்கச்சிக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேணும்..மீண்டும் பழைய உயிரோட்டத்தை அந்த வீட்டிற்க்குள் கொண்டு வரவேணும்...மனதில் கவலைகள் கனத்து முடிந்து பொறுப்புக்கள் கனக்கத் தொடங்கியிருந்தன அவனுக்கு...

No comments:

Post a Comment