Pages

Saturday 25 August 2012

எதிர்காலம் சிதைந்த தேசத்தின் தெருவழியே......


வேர்களை நினைந்தழுதபடியே
தூங்கிப்போன
நீண்ட ஒரு துயரநாளின்
நடு நிசியில்
தூக்கம்களுக்கிடையே
கனவுகளின் வீதியில்
கோபத்துடன் கணன்றுகொண்டிருந்த
ஊரை எரிக்கும்
நினைவுகளை பின்தொடர்ந்தேன்...

கழுகளுக்கஞ்சிய
கண்களில் மிரட்சியுடன்
சேதி சொல்லி அழைத்துச்சென்ற
நினைவுகளின் கரங்கள்
எல்லாவற்றிலும்
தழும்புகள் நிறைந்து கிடந்தன...
ஒவ்வொரு தழும்புகளில் இருந்தும்
சொட்டிக்கொண்டிருந்த ஆன்மாக்கள்
வீதிகளில் அலைந்து கொண்டிருந்தன...

உற்றுப்பார்க்கிறேன்..
ஈழத்து இதிகாசங்களில்
எழுத்தப்பட்ட பெயர்கள்
எச்சங்களைத் தேடியவாறு..

முகவரி கொடுத்தவர்களின்
எச்சங்களின் முகங்கள் எல்லாம்
வறுமைக் குழிகளுக்குள்
அடித்த சுழிகளுக்கிடையே
செத்தழிந்துகொண்டிருந்தன..

தெருக்களில் பெருகியோடும்
கண்ணீர்த்துளிகளுக்கிடையேயும்
வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும்
நடுவில் தொங்கிக்கொண்டிருக்கும்
நாட்களுக்குள் புதையுண்டும்
இனத்தின் அடையாளங்கள்
எல்லாமே தொலைந்துபோய்
இனங்காண முடியாதபடி..

ஈழத்துக் கருவறைகளின்
பாடல்களை எல்லாம்
காலம் அடித்துக்கொண்டுபோக
வறட்சிகளின் ஆடைபோர்த்தி
வற்றிக் கிடக்கின்றன
தாலாட்டுக்கள்...

காலப்பாடல்களுக்கெல்லாம்
பாட்டெழுதிய மண்ணை இப்போ
கண்ணீர் எரிப்பதால்
கவிதை வற்ற
ஈழம் அகாலத்தில்
இழவுக்காடாகி
நிழல் சிதைய தனித்து
நெருப்பில் கிடக்கிறது

ஊரின் முகப்பிலே
ஒளியேறி இருந்தாலும்
ஊமையாய் இருக்கும்
உட்காயம்
ஊதி ஊதிப் பெரிதாகிறது..

ஊழ் விளையாடிய
ஈழமுற்றத்தில்
உதிர்ந்து கிடக்கின்றன சருகுகள்
இத்துப்போனாலும்
ஈழமண்ணுக்கே உரமாவோமென்று....

தலைமுறிந்த ஒற்றைப்பனைகளின்
தனிமைகளுடன் குந்தியிருக்கின்றன
இடித்தழிக்கப்பட்ட
கல்லறைகளில் இருந்து
துயருடன் இடம்பெயர்ந்த
ஆன்மாக்கள்..

பூக்கள் தொலைத்த மரங்களையும்
முற்றங்கள் தொலைத்த வீடுகளையும்
தேற்றியபடி வீசும் காற்றிடமிருந்து
தென்றல் தொலைந்து
காலங்கள் ஆண்டுகளாய்
கரைந்து போகிறது....

கரைகளில் நின்று பார்க்கிறேன்
ஈழ நிலவாடிய கடலொடிந்து
தாழம்பூக்களிடையே
தன் முகம்புதைத்துக் கிடக்கிறது...
நீலம்பரவிய அதன் முற்றத்தில்
நிறமிழந்து
முன்பொருகாலம் பெருகி இசைபொழிந்த
பாடல் இழந்து
தலைமுறைகள்
அலைகளின்மேல் விளையாடிய
தடமிழந்து
தன் கோலமழிந்துகிடக்கிறது..

நிலவும் பரிதியும்
மறைந்தொழிந்து விளையாடிய
ஈழ வானம்
தன் எல்லைகள் தொலைந்ததால்
ஈழக்குழந்தைகளின் கண்ணீரில்
கருக்கொண்ட
துயரமுகில்களின் பின்னே
முகம்புதைத்து
மெளனமாய் அழுகிறது...

பிதாமகர்கள்,பீஷ்மர்கள்
கதநாயகர்கள்,கண்ணகிகள் எனக்
கெளரவிக்கப்பட்ட வாய்களால்
துரியோதனர்கள் எனத்
துகிலுரியப்பட்டுக் கிடக்கிறது
கர்ணர்களாய்க் கடைசிவரை
களமாடிய சந்ததி..

இற்றுப்போகிறது ஈழத்தின்
நிமிடங்கள் சொட்டுச்சொட்டாய்..
இனி ஒரு விதி செய்வோமென்று
குற்றுயிராய்க் கிடக்கும்
எம் குழந்தைகளை தூக்கிவிட
நீண்ட கைகளை சில
ஒற்றைகளுக்குள் எழுதிவிடலாம்

வெற்றுப்பேச்சுக்கள் அலங்கரிக்க
வெறுமனே
போலித்தேரில் ஈழம்பூட்டி
வெளிநாடுகளில் பவனிவருகிறது
செத்துப்போனவர்களின் குருதி குடித்து
மெத்தப் பெருத்த
சுயநலப் புரவி...

இழவு வீடான ஈழம் பார்த்து
தலைகுனிந்து
இந்த இரவுஇனி விடியாமலே போகட்டுமென
சாபமிட்டபடி விழித்துப்பார்க்கிறேன்....
ஈழத்தை
மீளமுடியா இருள் வெளிக்குள்
தள்ளிவிட்டு
நன்றாகத்தான் விடிந்திருக்கிறது
எதிர்காலம் எங்களுக்கு 
பெரு வெளிச்சத்துடன்... 

No comments:

Post a Comment