கண்டியில் இருந்த தன் வீட்டில் லால் கட்டைக்காற்சட்டையும் அரைக்கை ரீ சேட்டும் போட்டு கதிரையில் சாய்ந்திருந்தபடி தொலைக்காட்ச்சிப்பெட்டியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.அருகிலிருந்த சோபாவில் சஞ்சையும் துசியும் சதீஸும் எதுவும் பேசாது அமைதியாக தொலைக்காட்ச்சியை அவதானித்துக்கொண்டிருந்தனர்.மூவர் முகத்திலும் கவலையுடன் கூடிய அமைதி குடிகொண்டிருந்தது.தெரணை ரீவியில் செய்தியறிக்கையில் படையினர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறந்த உடலை கைப்பற்றிவிட்டதாகக்கூறி ஒரு வீடியோவை ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர்.எதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் பயத்துடன் உட்கார்ந்திருந்தாலும் பொடியங்கள் மூவர் முகத்திலும் சோகம் அப்பியிருந்தது.லாலிற்க்குப் பயந்து லாலின் முன்னால் அவர்கள் யாரும் அரசியல் கதைப்பதில்லை.இயக்கம் சண்டையில் வெற்றிபெற்று ஆமிக்குப் பெரிய இழப்பென்றால் றூமைப்பூட்டி விட்டுத்தான் புழுகத்துடன் சம்பவத்தைப்பற்றி தாங்கள் அறிந்த செய்திகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வார்கள்.அண்மைக்காலமாக அப்படி மகிழக்கூடிய எந்தச் செய்திகளும் வராமையால் எல்லோர் முகங்களிலும் ஒருவித சோகம் அப்பியிருந்தது.இந்த நிலையில்தான் எல்லாம் முடிந்துவிட்டதாக பிரபாகரனின் உடலைக்காட்டி தெரணையில் செய்தி போய்க்கொண்டிருந்தது.தொடர்ந்த செய்தியில் விடுதலைப்புலிகளின் அத்தியாயம் முடிந்துவிட்டதாகவும் நாடு முழுவதும் எஞ்சியிருக்கும் புலி உறுப்பினர்களை சரணடையும்படியும் கைது செய்யப்பட்டால் தண்டிக்கப்படுவீர்கள் என்றும் அவர்களைக்காட்டித்தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தல் போய்க்கொண்டிருந்தது.
***
லாலின் முழுப்பெயர் லால் பொல்கஸ்த்தெனிய.லால் ஆமிக் கப்டனாகப் பணியாற்றியவன்.அவன் வலது கையில் மணிக்கட்டுக்கும் உள்ளங்கைக்கும் இடையே குண்டுபட்ட தழும்பு பெரிய ஒரு பள்ளமாக இருந்தது.லால் கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தின் எல்லாப்பகுதிகளிலும் பணியாற்றி இருந்தான்.ஆகாய கடல்வெளிச் சண்டை ஆனையிறவில் நடைபெற்றபோது லால் ஆனையிறவில்தான் பணியாற்றிக்கொண்டிருந்தான்.அப்பொழுது நடைபெற்ற சண்டை ஒன்றில்தான் லாலின் வலது கையில் குண்டுபட்டது.லால் பலாலியில் இருந்து ராணுவம் யாழ்ப்பாணத்திற்க்கு முன்னேறியபோது தான் எடுத்த படங்களை எல்லாம் இப்பொழுதும் பத்திரமாகச் சேகரித்துவைத்திருந்தான்.அவனிடம் நல்லூர்கோவில் வீதியில் ராணுவத்தினர் ராங்கியுடன் நுழைந்தபோது எடுத்தபடம்,அரியாலையில்,தனங்களப்பில்,வல்வெட்டித்துறையில்,ஆனையிறவில் என்று யாழ்ப்பாணத்தின் அநேகமான பகுதிகளில் எடுத்த படங்கள் இருந்தன.ஏனெனில் அவன் யாழ்ப்பணத்தின் ஏறக்குறைய அனைத்து இடங்களிலுமே பணியாற்றியிருந்தான்.அவனிடமிருந்த படங்களின் மூலம் யாழ்ப்பாணத்தின் அப்போதைய இடங்களை மீட்டிப்பார்க்கக்கூடியதாக இருந்தது.சஞ்சய் அடிக்கடி அந்தப்படங்களைக்கேட்டு வாங்கிப்பர்த்துக்கொள்வான்.பார்த்து முடியும்வரை எங்கும் போகாமல் கூடவே இருந்து அத்தனை படங்களையும் திருப்பி எடுத்துச்செல்வான் லால்.ஒரு படம்கூடத் தவறவிடமாட்டான்.லால் ஒரு தீவிர ஜக்கியதேசியக் கட்ச்சி ஆதரவாளன்.கண்டியில் கிட்டத்தட்ட முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் தீவிர ஜக்கியதேசியக்கட்ச்சி ஆதரவாளர்களாகவே இருந்தனர்.லாலிற்க்கு தமிழர்கள்மேல் மிகவும் அன்பு இருந்தது.அப்பாவித் தமிழர்கள் வகைதொகையின்றி கைது செய்யப்படும் செய்தி தொலைக்காட்ச்சியில் வரும்போதெல்லாம் அரசாங்கத்தை திட்டுவான்.கொட்டியாவை விட்டுவிட்டு அலுவல் நிமித்தம் வந்த அப்பாவியளைக் கைது செய்கிறார்கள் என்று ஏசுவான்.லாலின் வீடு மூன்று தளங்களைக் கொண்டிருந்தது.கீழ் தளத்தை ஒரு மலையகத் தமிழ்க்குடும்பத்திற்க்கு வாடகைக்கு விட்டிருந்தான்.இரண்டாவது தளத்திலேயே அவனிருந்தான்.அந்தத் தளத்தில் இருந்த ஒரு அறையை கண்டியில் படிக்கவரும் தமிழ் முஸ்லீம் மாணவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தான்.அந்தத் தளத்தில் மாணவர்களை மட்டுமே வாடகைக்கு அமர்த்துவான்.இந்த இரண்டாவது தளத்திலேயே சிலவருடங்களாக துசி,சஞ்சய்,சதீஸ் மூவரும் வாடகைக்கு தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தனர்.மூவரையும் தனது பிள்ளைகள் போலவே நடத்தினான்.அவர்களில் யாராவது பொலீஸ் அல்லது ஆமியிடம் பிடிபட்டால் அடுத்த நிமிடம் லால் ஆஜராகி அவர்களை மீட்டுக்கொண்டுவருவான்.மூன்றாவது தளத்தை இந்தியாவில் இருந்து வந்த தமிழ் புடைவை வியாபாரிகளுக்கு வாடகைக்கு கொடுத்திருந்தான். லாலின் தற்போதைய மனைவி ஒரு மலையகத் தமிழ்ப்பெண்.லாலை அங்கிள் என்றும் லாலின் தமிழ் மனைவியை அன்ரி என்றுமே மூவரும் அழைப்பார்கள்.லால் ஆமியை விட்டு விலகியதற்கும் இரண்டாவது திருமணமாக தமிழ்ப்பெண் ஒருவரை மணம் முடித்ததிற்கும் சம்பந்தமிருந்தது.
***
லாலின் மூத்த மனைவி ஒரு சிங்களப்பெண்.லாலின் உறவுக்காறப் பெண்ணும்கூட.அவளை லால் காதலித்துத்தான் திருமணம் செய்திருந்தான்.அவள் மிகவும் அழகானவள்.ரீவி நடிகையைப்போல் இருப்பாள்.லால் திருமணம் செய்து கொஞ்ச நாளிலேயே பணி நிமித்தம் யாழ்ப்பாணம் போகவேண்டியிருந்தது.அவன் ஒவ்வொரு வருடமும் சில மாதங்களே வீட்டில் தங்கியிருக்கக்கூடியதாக இருக்கும்.மற்றைய நாட்களில் பணி நிமித்தம் யாழ்ப்பாணத்திலேயே தங்கி நிற்கவேண்டியிருந்தது.இந்தக்காலப்பகுதியிலேயே லாலின் சிங்கள மனைவிக்கும் பக்கத்து வீட்டு சிங்கள இளைஞ்ஞனுக்கும் தொடர்பு ஏற்பட்டிருந்தது.இதை ஊரில் இருந்த லாலின் நண்பர்கள் அவனுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தனர்.முதலில் இதை நம்ப மறுத்தவன் பின்னர் அவனது சகோதரர்களும் உறுதிப்படுத்தியபொழுது பெருங்கோபத்தில் இருந்தான்.வீட்டிற்க்குப்போய் தனது துப்பாக்கியால் இருவரையும் சுட்டுக்கொல்ல முடிவெடுத்து லீவு கேட்டு விண்ணப்பித்திருந்தான்.இவன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்த நேரம் வடபகுதியில் மிகமோசமான யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது.எல்லா இராணுவத்தினரது விடுமுறையும் இரத்துச்செய்யப்பட்டிருந்தது.இவனுக்கும் விடுமுறை கிடைக்கவில்லை.கடுப்பான லால் உடனடியாக தன் உடல் நிலைகாரணமாக ராணுவத்தை விட்டு விலகுவதாக கைக்காயத்திற்குரிய மெடிக்கலையும் இணைத்து விண்ணப்பக்கடிதம் அனுப்பியிருந்தான்.பலவருடங்களாக லால் இராணுவத்தில் இருக்கின்றமையாலும் அவனுடைய சிறந்த சேவையின் அடிப்படையிலும் அவனுக்கு ராணுவத்தில் இருந்து விலக அனுமதி கிடைத்தது.லால் இராணுவத்தை விட்டு விலகிய செய்தியை லாலின் சிங்கள மனைவி எப்படியோ அறிந்துவிட்டாள்.உடனடியாகவே தனது சிங்களக் காதலனுடன் கொழும்பில் எங்கோ தலைமறைவாகிவிட்டிருந்தாள் அவள்.வீட்டில் தனித்திருந்த லால் சமையலுக்கும் வீட்டுவேலைகளைக் கவனிக்கவும் மலையகத் தமிழ்ப்பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருந்தான்.பின்னாளில் அவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டான்.
***
சஞ்சய் மிகவும் அமைதியானவன்.எந்நேரமும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பான்.அவனின் நடவடிக்கைகள் எப்பொழுதும் மர்மமானதாகவே இருக்கும்.அவன் தனது சொந்த இடம் யாழ்ப்பாணம் என்று சொல்லியிருந்தான்.ஆனால் அவனிடம் கொழும்பு முகவரியுடைய அடையாள அட்டை ஒன்றும் யாழ்ப்பாண முகவரியுடைய அடையாள அட்டை ஒன்றும் இருந்தது.சஞ்சய் நன்றாகச் சிங்களம் கதைப்பான்.கண்டியில் இருக்கும்போது திடீர் திடீரென்று காணாமல்ப் போவான் சஞ்சய். போகும்போது கொழும்பு போவதாக சொல்லிவிட்டுப்போவான்.கொழும்பில் தனக்கு கடையிருப்பதாகச் சொல்லியிருந்தான்.இரண்டுமாதம் கண்டியில் என்றால் ஒரு மாதம் கொழும்புக்குச் சென்றுவிடுவான்.லால் அவனை ஒரு இடத்தில் ஒழுங்காக இருந்து படிக்கும்படியும் இப்படி அலைந்து திரிவதால் அவனது படிப்புக் கெட்டுவிடப்போகிறதென்றும் அடிக்கடி அறிவுரை சொல்லுவான்.ஆனாலும் சஞ்சய் நிறுத்தாமல் கொழும்பு போய் வந்து கொண்டிருந்தான்.
***
துசி மன்னார்ப்பொடியன்.நன்றாகத்தண்ணியடிப்பான்.படிப்பு சுத்தமாக அவனுக்கு ஏறாது.இரண்டு வசனம் பாடமாக்க அவனுக்கு இரண்டு கிழமை எடுக்கும்.துசியின் புண்ணியத்தில் ரூமில் இருந்த மற்ற இருவருக்கும் யாழ்ப்பாண பலகாரங்கள் தொடர்ச்சியாக கிடைத்துக்கொண்டிருந்தன.மன்னாரில் இருந்து கொழும்புவரை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.வவுனியாவில் இருந்து கண்டிக்கு நேரடி பஸ் இருந்தது.கிழமைக்கு ஒருமுறை துசியின் அம்மா மன்னாரில் இருந்து வவுனியாவிற்க்கு வந்து வவுனியாவில் இருந்து கண்டிபோகும் பஸ் டிறைவருக்கு பணம் கொடுத்து பார்சல் அனுப்பி விடுவார்.இவர்கள் மூவரும் கண்டி பஸ்ராண்டில் காவலிருந்து பார்சல் பைக்கற்றுடன் ரூமிற்க்கு வருவார்கள்.பார்சலுக்குள் வித விதமான சாப்பாடுகள் செய்து அனுப்பியிருப்பார் துசியின் அம்மா.இவர்களுடன் சேர்ந்து லாலும் பார்சலில் பங்கெடுத்துக்கொள்வான்.ஒருமுறை துசி நன்றாகத்தண்ணியடித்துவிட்டு நல்ல போதையில் வந்திருந்தான்.இரண்டாவது தளத்திற்க்கு வரும் படிக்கட்டை அவனால் ஏறமுடியாமல்போகவே கீழ்தளத்திலேயே படிக்கட்டுக்குப் பக்கத்தில் தூங்கிவிட்டான். நல்லவேளை வெளியே போயிருந்த சஞ்சய் திரும்பிவந்தபோது துசியைக்கண்டு கைத்தாங்கலாக மேலே கூட்டிவந்திருந்தான். லாலினதும் அன்ரியினதும் கண்ணில் படாமல் துசியை அழைத்துச்செல்ல மேற்கொண்ட சஞ்சயின் முயற்ச்சி பாதிதான் வெற்றியளித்திருந்தது.லால் காணவில்லை ஆனால் அன்ரி பார்த்துவிட்டார்.அன்று முழுவதும் அன்ரி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.துசி சத்தி எடுத்துக்கொண்டிருந்தான்.துசிக்கு தலையில் தேசிக்காய் தடவி முழுகவைத்து தூங்கவைத்திருந்தனர்.அடுத்தநாள் விடியத்தான் அன்ரியின் அர்ச்சனையுடன் துசி கண்விழித்தான்.அன்ரியின் காலில் விழாத குறையாக துசி மன்னிப்புக்கேட்டான்.இனிமேல் தான் குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்தான்.அன்ரி நல்லவர்.லாலிடம் இதைப்பற்றிச் சொல்லவில்லை.இப்படித்தான் ஏடாகூடமாக ஏதாவது செய்து அடிக்கடி அன்ரியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருப்பான் துசி.
***
சதீஸ் மட்டக்களப்பு பொடியன்.மட்டக்களப்பில் இயக்கம் பிளவுபட்டு பிரச்சனை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதுதான் அந்த ரூமிற்க்கு வந்திருந்தான்.மலை நாட்டில் எங்கேயோ ஒரு வீட்டில் தங்கியிருந்த மட்டக்களப்புப்பொடியளை கூட இருந்தவர்கள் சுட்டுக்கொன்றுவிட்டுப் போனதாக செய்திகள் வெளிவந்த சிலநாட்களிலேயே சதீஸ் அந்த ரூமிற்க்கு வந்திருந்தான்.துசிக்கு சதீஸ் வந்த நிமிடத்தில் இருந்து நிம்மதியாகத் தூங்கமுடியவில்லை.மட்டக்களப்பு பொடியளை சுட்ட செய்தியே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.பயத்தில் அவனுக்கு காய்ச்சல் வந்திருந்தது.தானோ வடக்கு சதீஸோ மட்டக்களப்பு.ஒருவேளை அவர்களின் ஆட்களோ..?என்னையும் பழிவாங்கும் முகமாகப் போட்டுவிடுவார்களோ..?இரவுகளில் பலபல கற்பனைகள் ஒட்டிக்கொண்டிருந்தன துசிக்கு.அந்தக் கிழமை முழுவதும் அவன் தூங்கவேயில்லை.தூங்குவதுபோல் பாசாங்கு செய்துகொண்டு போர்வைக்குள்ளால் சதீஸையே பார்த்துக்கொண்டிருப்பான்.அவனோ நிம்மதியாகக் குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருப்பான்.அந்தக்கிழமை முழுவதும் துசி குழப்பத்திலேயே இருந்தான்.அந்தமாதம் பார்த்து சஞ்சய் வேறு கொழும்புக்கு போய்விட்டான்."மோடன் லாலுக்கு என்ன தெரியும்..?விசரன் இந்தப் பிரச்சினை நடந்து கொண்டிருக்கேக்கையே ஒரு மட்டக்களப்புபொடியனை ரூமில போடுவான்?அவனுக்கென்ன மாதம் முடியக்காசுவரும் நானெல்லோ பயத்திலை செத்துக்கொண்டிருக்கிறன்" மனதிற்க்குள் திட்டிக்கொண்டான் துசி.அந்த மாதம் முடிய துசிக்கு சதீஸ்மேல் கொஞ்ச நம்பிகை வந்திருந்தது.ஒருமுறை சதீஸின் அம்மா வந்துபோனபோதுதான் துசிக்கு சதீஸின்மேல் முழு நம்பிக்கை வந்தது அவன் ஒரு பிரச்சனையுமில்லாத பொடியன் என்று.பின்னர் சதீஸும் அவர்களில் ஒருவன் ஆகிவிட்டிருந்தான்.
***
அன்றுமுழுவதும் தெரணை செய்தியைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தனர் எல்லோரும்.அன்ரி கோழிக்கறியுடன் சோறு சமைத்திருந்தார்.துசியைத்தவிர யாரும் சாப்பிடவில்லை.லாலும் சாப்பிடவில்லை.எல்லோரும் ஒருவித சோகத்துடன் இருந்தனர்.துசி மட்டும் அவசராவசரமாக சாப்பிட்டுவிட்டு எங்கோ போகத்தயாராகிக்கொண்டிருந்தான்.மாலை இரண்டு ஜீப் நிறைய பொலிஸாரும் சி.ஜ டியினரும் லாலின் வீட்டின் முன்னால் வந்திறங்கியிருந்தனர்.தொபுதொபுவென உள்நுழைந்த பொலிஸார் லாலினதும் சஞ்சயினதும் சதீஸினதும் கையில் விலங்குமாட்டி பொலிஸ்நிலையத்திற்க்கு இழுத்துச்சென்றனர்.லாலுக்கு குழப்பமாக இருந்தது.தான் ஒரு ஓய்வுபெற்ற ஆமிக்கப்டன் என்று சொல்லியும் பொலிஸார் எதையும் கேட்பதாக இல்லை.உன்னைப்போன்ற ஓய்வு பெற்ற ஆமிக்காரர்கள்தான் சிங்களப்புலியாகி புலிக்கு வேலை செய்தனியள் என்று முறாய்த்தபடி இழுத்துச்சென்றனர்.பொலிஸ் நிலையத்தில் துசி சாராய்ப்போத்தலுடனும் கையில் ஒரு பையுடனும் உட்கார்ந்திருந்தான்.இவர்களைக்கண்டதும் தலையைக் குனிந்துகொண்டான்.பின்னர் லாலை நீதிமன்றம் அழைத்துச்சென்றனர்.மற்றவர்களின் நிலை லாலுக்குத்தெரியவில்லை.நடந்த வழக்கில் கொட்டியாவை இவ்வளவுகாலமும் வீட்டில் வைத்திருந்ததிற்கும் ராணுவத்திற்க்கு தகவல் சொல்லாததிற்க்கும் சேர்த்து ஒரு ஓய்வுபெற்ற ராணுவ கப்டனாக இருந்தும் நாட்டிற்க்கு துரோகம் செய்ததற்க்காக லாலிற்க்கு ஜந்துவருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம்.
***
சிறைக்கம்பிகளின் பின்னால் நின்றுகொண்டிருந்தான் லால்.பல செய்திகளுடன் லாலைப்பார்க்க வந்திருந்தார் அன்ரி.பணத்துக்கு ஆசைப்பட்டு எல்லோரையும் துசிதான் காட்டிக்கொடுத்திருந்தான்.துசி இப்பொழுது மன்னாரில் இன்னுமொரு வீடு கட்டிக்கொண்டிருக்கிறானாம்.சஞ்சய் இயக்கத்தின் ஒரு கொழும்பு முகவராம்.பலரைக் காட்டிக்கொடுத்ததுடன் பல இடங்களில் இருந்த இயக்கப்பணத்தையும் எடுத்துக்கொண்டு சுவிஸிற்க்குப்போய் அசைலமடித்திருக்கிறான்.சதீஸ் லால்தான் தங்களை எல்லாம் வைத்துப்பராமரித்ததாகவும் லாலிற்க்கும் இயக்கத்திற்க்கும் ஸ்றோங்க் தொடர்பு இருந்ததாகவும் வாக்குமூலம் கொடுத்திருந்தான்.அவன் வாக்குமூலப்படியே லாலிற்க்கு ஜந்துவருடத் தண்டணை கிடைத்தது.சதீஸும் இப்ப சுவிசில் நிற்கிறான்.லால் மட்டும்தான் சிறைக்கம்பிக்குப் பின்னால் நிற்கிறானாம்.கேட்கக்கேட்க லாலுக்கு கடைசியாக தெரணை செய்தியில் பார்த்த காட்ச்சிகள் கண்முன் விரிந்தன.வீடியோவில் தெரிந்த பிரபாகரன் எழுந்து உட்காந்திருந்தார்.பிரபாகரன் உடலைச் சுற்றி நின்ற சிங்கள ராணுவத்தினர் மறைந்து தமிழர்களாக மாறியிருந்தனர்.சுற்றி நின்ற எல்லோரும் எப்படிக் குழிபறிக்கலாம் என்று சிந்திப்பதுபோல் இருந்தது லாலுக்கு.ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு சுயநலச்சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.பாவம் இவை எவற்றையும் சிந்திக்காது பிரபாகரன் முகத்தில் மட்டும் தமிழினத்தைப்பற்றிய சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது."நன்றிகெட்ட தமிழன்"லால் சிங்களத்தில் முணுமுணுத்தபடி தன் சிறைக்கூண்டை நோக்கி நடந்தான்..
Thursday, 17 November 2011
Thursday, 10 November 2011
நாங்கள் புலம்பெயராத தமிழர்கள்.......
பிணங்களின்
ஓலங்களையும்
இழப்புக்களின்
வலிகளையும்
சகித்தபடி
சிந்தனைகளைப்
புதைத்து விட்டு
தூங்கப் பழகியிருக்குறோம்
வீட்டின்
கோடியில்
இற்றுப்போன
உடல்களின்
எஞ்சிய
எலும்புகளின்
நடுவே
அமைதியாக இருந்து
உணவருந்திக்கொள்கிறோம்
கோப்பையில்
இருந்து எழும்
சொந்தங்களின்
இரத்த வாடையை
நினைவுபடுத்தாது
தேநீரை
சுவைத்துக்கொள்கிறோம்
விடுதலைக்காய்
வீழ்ந்தவர்களின்
நினைவுகளை
சுமந்த நாட்களில்
கொடிகளைப்
பிடித்தவாறு
ஆக்கிரமிப்பாளர்களின்
தேசிய கீதங்களைப்
பாடிக்கொள்கிறோம்
ஏசிய வாய்களால்
யூதாஸ்களைப்பாடி
எங்களின்
மீட்பராய்
துதித்துக்கொள்கிறோம்
இடித்துக்
கொட்டப்பட்ட
கல்லறைகளையும்
மறைக்கப்பட்ட
புதைகுழிகளையும்
தாண்டி
சிரித்துக்கொண்டே
காவலரண்களைக்
கடந்து
பயணித்துக்கொள்கிறோம்
எப்போதும்
காதுகளில்
கேட்டுக்கொண்டிருக்கும்
ஒப்பாரிகளின்
நடுவே
இசைக்குழுக்களில்
கரைந்து
குதூகலித்துக்கொள்கிறோம்
உள்ளே
இற்றுப்போன
வீடுகளையும்
அரித்துப்போன
கூரைகளையும்
வைத்துக்கொண்டு
தெருக்களை
மட்டும்
அலங்கரித்துக்கொள்கிறோம்
எல்லாவற்றையும்
மறந்துபோகும்படி
எப்பொழுதும்
எங்களை நாங்களே
நினைவுபடுத்திக்கொள்கிறோம்
எதிர்காலமே
புதைக்கப்பட்ட
தேசத்தில்
எதிர்காலத்திற்காய்
நாங்களே
மாறிக்கொண்டு
எங்களை
ஏமாற்றிக்கொள்கிறோம்...........
Monday, 17 October 2011
அகதியானவர்கள்..
சுதந்திரமடையா இந்தியாவின்
தண்டகாரன்யக்காடுகளிலும்
பாலஸ்த்தீனத்தின்
இடிந்தகட்டிடங்களிலும்
குர்தீஸின் குக்கிராமங்களிலும்
ஈராக்கின் வீதிகளிலும்
விடுதலைக்காக வீழ்ந்தவர்களின்
ஆன்மாக்கள்
வீடுகளை விட்டு
புழுதித்தெருக்களை விட்டு
சுதந்திரமாக ஊளையிடும்
தெருநாய்களை விட்டு
ஞாபகங்களை மட்டும்
எடுத்துச்செல்லும்படி
விரட்டப்பட்டவர்களின்
முகாம்களில் தங்கியிருக்கின்றன
ஈராக்கின் எண்ணெய் ஊற்றுக்கள்
இல்லாதுபோகும்படியும்
வன்னியின் வனங்கள்
வாடிப்போகும்படியும்
ஆப்கானின் மலைகள்
பொடியாகும்படியும்
காக்ஷ்மீரின் வீதிகள்
பிளந்துபோகும்படியும்
ஆகியிருக்கிறது
அகதியாக்கப்பட்டவர்களின்
துயர்ச்சுமையால்
விரட்டப்பட்டவர்களின்
வீட்டுமுற்றத்தில்
விட்டுச்செல்லப்பட்ட
சாய்வுநாற்காலியில்
உட்க்காந்திருக்கிறது
பள்ளியிலிருந்துவரும்
குழந்தைகளைத்தேடும்
தாத்தாவின் மனசு
வாசத்தை தொலைத்து
வாடிப்போயிருக்கும்
வளவுப்பூக்கள்
அகதியாக்கப்பட்ட
வீட்டுக்காரனின்
வாசத்தை தேடுகின்றன
வெறுமை
துப்பாக்கிகளின்
துணையுடன்
ஊரை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது
யாரையும் நெருங்கவிடாமல்
அணல்காற்றடித்து
எழுந்த தீயில்
எரிந்த வெளியில்
எதிர்காலத்தை தேடும்படி
சபிக்கப்பட்டிருக்கிறது
ஒரு சந்ததி...
Saturday, 15 October 2011
எனது நாள்...
வடதுருவத்து
நடு நிசியில்
விழித்துக் கொள்ளும்
என் உயிர்ப்பறவை
மனவறையின்
சுவர்களைப்
பிளந்து வெளியேறுகிறது
கண்டங்களைத் தாண்டி
என் ஊரின்
வீதிகளில்
காலாற
உலாவித் தீர்ப்பதற்காய்...
வழிமறிப்புச் சாவடிகள்
கொழுத்தப்பட்ட வீதிகளில்
பாரதியின் கனவுகளும்
புதுவையின் கனவுகளும்
கூட
தூரத்தே
பயணிக்கின்றன...
பச்சை அரக்கர்கள்
விரட்டி அடிக்கப்பட்டதாக
எல்லோரும்
மகிழ்வுடன் பேசிக்கொள்கிறார்கள்
முன்னரைப் போல
மனிதர்கள் யாரும்
தங்கள் அடையாளங்களை
சட்டைப்பைகளில்
சரிபார்த்துக் கொள்ளாத
வீதிகளில்...
என் மனக்கப்பல்
அசைந்தலைந்த தொடுவானம்
பால் வீதிகளில்
என்
கற்பனைச் சிறகடிப்பின்
பயணங்களைச் சேமித்துவைத்த
விண்மீண்கள்
நிலாத் தோழன்
எல்லாமும்
தொடர்கின்றன
கூடவே
என்
பயணம் முழுமையும்...
வடமேற்
பருவக் காற்றின்
சிராய்ப்பில் கிறங்கும்
பொருக்குப் பூவரசின்
பழுப்பு இலைகளின்
சலசலப்பில்
ஊரெல்லையில்
சிலிர்த்துக்கொள்கிறது
என் உயிர்ப்பறவை....
சுவாசத்தினூடு
எனக்கும்
அதற்குமான
பிணைப்பு வலையை
பிண்ணிக் கொண்டு
தன் மலர்களால்
பூரித்துக் கொள்கிறது
துறுதுறு வயதில்
சிறுகால் எடுத்துக்
குறுநடை பயின்ற
என்
வீட்டு முற்றம்...
உயிரின் ஆழம்வரை
ஊடுருவிச் செல்லும்
இனம்புரியா
ஈர்ப்பைச் சுமந்து
சாளரத்தினூடு
துப்பாக்கி முனைகளின்
துரத்துதல் இன்றி
ஊர் மடியின்
முற்றத்தில்
உறங்கிக் கிடக்கும்
என் முகத்தில்
இறங்குகிறது
முற்றத்து வாசம்....
விழித்துப் பார்க்கிறேன்...
நாடற்று அலையும்
என்
முடிவற்ற கனவுகளின்
பயணங்களிற்கு
மூன்று தசாப்தங்கள்
முடிந்து போய்
விட்டிருக்கிறது...
வழமை போலவே
வட துருவத்தில்
சுமந்து வந்த
என் வீட்டின்
நினைவுக் கனத்துடன்
இன்றும்
எனது நாள்
தொடங்குகிறது...
நடு நிசியில்
விழித்துக் கொள்ளும்
என் உயிர்ப்பறவை
மனவறையின்
சுவர்களைப்
பிளந்து வெளியேறுகிறது
கண்டங்களைத் தாண்டி
என் ஊரின்
வீதிகளில்
காலாற
உலாவித் தீர்ப்பதற்காய்...
வழிமறிப்புச் சாவடிகள்
கொழுத்தப்பட்ட வீதிகளில்
பாரதியின் கனவுகளும்
புதுவையின் கனவுகளும்
கூட
தூரத்தே
பயணிக்கின்றன...
பச்சை அரக்கர்கள்
விரட்டி அடிக்கப்பட்டதாக
எல்லோரும்
மகிழ்வுடன் பேசிக்கொள்கிறார்கள்
முன்னரைப் போல
மனிதர்கள் யாரும்
தங்கள் அடையாளங்களை
சட்டைப்பைகளில்
சரிபார்த்துக் கொள்ளாத
வீதிகளில்...
என் மனக்கப்பல்
அசைந்தலைந்த தொடுவானம்
பால் வீதிகளில்
என்
கற்பனைச் சிறகடிப்பின்
பயணங்களைச் சேமித்துவைத்த
விண்மீண்கள்
நிலாத் தோழன்
எல்லாமும்
தொடர்கின்றன
கூடவே
என்
பயணம் முழுமையும்...
வடமேற்
பருவக் காற்றின்
சிராய்ப்பில் கிறங்கும்
பொருக்குப் பூவரசின்
பழுப்பு இலைகளின்
சலசலப்பில்
ஊரெல்லையில்
சிலிர்த்துக்கொள்கிறது
என் உயிர்ப்பறவை....
சுவாசத்தினூடு
எனக்கும்
அதற்குமான
பிணைப்பு வலையை
பிண்ணிக் கொண்டு
தன் மலர்களால்
பூரித்துக் கொள்கிறது
துறுதுறு வயதில்
சிறுகால் எடுத்துக்
குறுநடை பயின்ற
என்
வீட்டு முற்றம்...
உயிரின் ஆழம்வரை
ஊடுருவிச் செல்லும்
இனம்புரியா
ஈர்ப்பைச் சுமந்து
சாளரத்தினூடு
துப்பாக்கி முனைகளின்
துரத்துதல் இன்றி
ஊர் மடியின்
முற்றத்தில்
உறங்கிக் கிடக்கும்
என் முகத்தில்
இறங்குகிறது
முற்றத்து வாசம்....
விழித்துப் பார்க்கிறேன்...
நாடற்று அலையும்
என்
முடிவற்ற கனவுகளின்
பயணங்களிற்கு
மூன்று தசாப்தங்கள்
முடிந்து போய்
விட்டிருக்கிறது...
வழமை போலவே
வட துருவத்தில்
சுமந்து வந்த
என் வீட்டின்
நினைவுக் கனத்துடன்
இன்றும்
எனது நாள்
தொடங்குகிறது...
Tuesday, 11 October 2011
எங்கு போனீர்கள் இங்கு நாம் சாகையிலே....
மூச்செடுத்து விட்டதுபோல்-வருசங்கள்
முடிந்தோடி விட்டாலும்
நேற்றுப்போல் இருக்கிறது-நெஞ்சில்
நெருப்பெரிக்கும் நினைவுகள்
ஊற்றுப்போல் மனதில்தோன்றி-ஓயாது
உள்ளத்தைக் குடைந்தெடுக்கும்
தோற்றுப்போன நாட்களின் -மாறாத்
தொடரும் உயிர்வலிகள்
மண்ணிண் காவலர்கள்-விடுதலைக்காய்
மரணித்த தேசத்தில்
இன்னும் புல்பூண்டு-முளைத்து
இயற்கை சிரிக்கவில்லை
கண்ணில் நெருப்பெடுத்து-மதுரையைக்
கண்ணகி எரித்தகதை
இன்னும் சரித்திரத்தில்-படிக்க
இலக்கியப் புத்தகத்தில்
எண்ணுக் கணக்கற்று-கண்ணகிகள்
எங்கள் தேசத்தில்
மண்ணுக்கு இரையானார்-மதுரைகள்
இன்னும் எரியவில்லை
வருசம் விழாஎடுத்து-நேர்த்திக்கு
வளர்த்த கடாவெட்டி
புருசனுக்காய் நோன்பிருந்த-பெண்கள்
பூவிழந்து போயினரே
கொழுத்த அரக்கர்கள்-எங்களை
கொன்று புதைக்கையிலே
பழுத்த தேவர்கள்-ஞானப்
பால் குடிக்கப்போயினரோ
கற்பூரச் சட்டிகளை-கைகளில்
கடவுளர்க்காய் ஏந்தியோர்கள்
கற்பழித்துக் கொல்லப்பட- சாமிகள்
கண்மூடிச் சயனத்திலோ
சூரனை வதம்செய்ய-தேவர்களைச்
சூழ்ந்த துயர்துடைக்க
கையில் வேலெடுத்த-காக்கும்
கதிகாமக் கந்தனே
வற்றாப்பளை அம்மனே-நல்லூரில்
வரம்தரும் முருகனே
நற்தாயே நம்பினோரின் - தீவமர்ந்த
நயினை நாகபூஷனியே
இன்னும் பெயர்தெரியாத-எண்ணிக்கையில்
பல்கிப் பெருகிநிற்கும்
எங்கள் தமிழர்கள்-நம்பிய
ஏராளம் சாமிகளே
செத்துக் கிடக்கையிலே-எம்முடல்
தீயில் எரிகையிலே
வன்னியின் வானம்விட்டு-நீங்கள்
வனவாசம் சென்றீரோ
செல்விழுந்து பிளக்கையிலே- சிதறி
செங்குருதி தெறிக்கையிலே
கத்திய கூக்குரல்கள்-உங்கள்
காதில் விழவில்லையோ
தாயை இழந்ததினால்-காட்டில்
தவித்த குட்டிகட்காய்
பன்றி வடிவெடுத்து-அன்றொருநாள்
பாலூட்ட வந்தசிவன்
செத்த தாய்முலையில்-எம்குழந்தை
ரத்தம் குடிக்கையிலே
முக்திப் பரவசத்தில்- சக்தியுடன்
மூழ்கிக் கிடந்தீரோ
இங்குநாம் இறக்கையிலே-உயிர்க்காய்
இரந்து கிடக்கையிலே
எங்குநீர் போனீரோ-இன்று
பொங்கலுக்கு வந்தீரோ
கொலுவுற்று எதற்காக-இன்னும்
கோவிலில் வீற்றிருந்து...?
வலுவற்ற கற்களுக்கு-யாரும்
வாழ்வு கொடுக்காதீர்
இன்னும் எதற்காக-கோவிலில்
பென்னம் பெருஞ்சிலைகள்
எல்லாம் மண்ணாக-எம்
சாபம் பலிக்கட்டும்
சிவனுமில்லை சக்தியில்லை-எங்களுக்குச்
சீரழிவு இனியுமில்லை
கண்ணில் தெளிவுகொண்டோம்-எங்களுக்குக்
கடவுள் எவனுமில்லை
***
Sunday, 9 October 2011
எது ஈடு இதற்கு...?
மனதைத் தாலாட்டும்
மாலைத் தென்றல்
சுள்ளென எரிக்கா
மெல்லிய வெயில்
சில்லெனப் பரவும்
இரவுக் குளிர்
கதகதப்பாக்கும்
போர்வைத் துணி
இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?
இரவில் நிலவு
இரையும் மழை
பருகத்தேநீர்
பாயில் தூக்கம்
கனவில் சுகம்
கவலையற்ற மனம்
இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?
கலையும் இருள்
காலை நிசப்தம்
கண்ணைக் குத்தா
கதிரவன் ஒளி
விழித்தபடி
தூங்கும் சுகம்
இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?
குளையல் சோறு
குளிக்க வெந்நீர்
துவட்ட முந்தானை
தூங்க உன் மடி
இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?
ஒழுகும் மழை
ஒற்றைக் குடை
புழுதி வீசும்
பூமி வாசம்
ரசித்தபடியே
கரையும் மனம்
நனைந்தபடியே
நடக்கும் சுகம்
இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?
சாய்வு நாற்காலி
சாளர ஒளி
தூரத்துக் குயில்
கூவிடும் குரல்
ஓய்வாய் மனம்
ஓரிரு புத்தகம்
படித்து முடிக்க
நீ தரும் தேநீர்
இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?
நல்ல கவிதையை
ரசிக்கும் மனம்
நாட்டுக்காக
துடிக்கும் குணம்
கூட நீ
குறையாத அன்பு
இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?
ஓலைக் குடிசை
ஒற்றைக் கதிரை
காலைச் சுற்றும்
மீசைப் பூனை
பேசிக்கொள்ள
பரணில் பல்லி
நிறைந்த மௌனம்
நிலைத்த நின்மதி
நீயும் நானும்
நிறைந்த வாழ்க்கை
இருந்தாலே போதும்
வேறெது வேண்டும் எனக்கு?
Friday, 7 October 2011
தோழர்களும் தொலைந்துபோன விடுதலையும்
விடுதலையை நேசித்த
எத்தனையோ
விருட்ச்சங்களை
தின்றுவிட்டது அநீதி
ஆயினும் இன்னமும்
விடுதலைக்கான வேட்கையை
சுமந்து கொண்டு
வீச்சுடன் எரிகிறது
விடுதலைத்தீ
சுதந்திரத்திற்கான கனவுகள்
பொய்த்துப்போன கணங்களில் இருந்து
கணன்று கொண்டேயிருக்கிறது
எங்களின் இதயம்
விடுதலை பெறும் நாளில்
வீடுவருவோம் என்று சொல்லிச்சென்ற
தோழர்களின் வருகைக்காய்
எங்களின் வாழ்க்கையைப்போலவே
இருண்டு கிடக்கும் வீட்டினை
சுத்தம் செய்து வைத்திருப்பாள் தங்கை
இப்பொழுதும்
எப்பொழுதும்போல்
தோழர்களுக்காய்
இயலாமையில்
எங்கள் இதயங்களைப்போலவே
கொதித்துக்கொண்டிருக்கும் அடுப்பில்
சமைத்துக்கொண்டிருப்பாள் என் தாய்
நேற்றையைய்ப்போலவே
இன்றைக்கும் தேடுகிறேன்
இன்னமும்
தோழர்களும்
தொலைந்துபோன விடுதலையும்
கிடைக்கவே இல்லை
(முள்ளிவாய்க்காலுடன் காணமல் போன உறவுகளின் நினைவுடன் எழுதியது)
எத்தனையோ
விருட்ச்சங்களை
தின்றுவிட்டது அநீதி
ஆயினும் இன்னமும்
விடுதலைக்கான வேட்கையை
சுமந்து கொண்டு
வீச்சுடன் எரிகிறது
விடுதலைத்தீ
சுதந்திரத்திற்கான கனவுகள்
பொய்த்துப்போன கணங்களில் இருந்து
கணன்று கொண்டேயிருக்கிறது
எங்களின் இதயம்
விடுதலை பெறும் நாளில்
வீடுவருவோம் என்று சொல்லிச்சென்ற
தோழர்களின் வருகைக்காய்
எங்களின் வாழ்க்கையைப்போலவே
இருண்டு கிடக்கும் வீட்டினை
சுத்தம் செய்து வைத்திருப்பாள் தங்கை
இப்பொழுதும்
எப்பொழுதும்போல்
தோழர்களுக்காய்
இயலாமையில்
எங்கள் இதயங்களைப்போலவே
கொதித்துக்கொண்டிருக்கும் அடுப்பில்
சமைத்துக்கொண்டிருப்பாள் என் தாய்
நேற்றையைய்ப்போலவே
இன்றைக்கும் தேடுகிறேன்
இன்னமும்
தோழர்களும்
தொலைந்துபோன விடுதலையும்
கிடைக்கவே இல்லை
(முள்ளிவாய்க்காலுடன் காணமல் போன உறவுகளின் நினைவுடன் எழுதியது)
Thursday, 6 October 2011
எனது உலகம்...
போரில் தொலைந்த
நகரத்தைச் சுற்றிலும்
சிதறிக்கிடக்கும் ஓலங்களால்
என் உலகத்தை வனைந்துகொண்டு
கண்ணீராய் அருவிகளில் வழிந்தோடும்
எம் மக்களின் துயரங்களில்
மூழ்கிக்கிடக்கிறது
என் ஆன்மா
என் மன நிலத்தில் சுழன்றடிக்கும்
துயர்க்காற்றின் அணல்
உடலெங்கும் பெருநெருப்பாய்
எரிக்கிறது
பசியால் வாடுமெங்கள்
குழந்தைகளை நினைத்து
முகில் உரசும் முகடுகளில்
பெருங்குரலில் காற்று
மோதி இரைகிறது
வயல் நிலங்கள் நீளவும்
எம் இனத்தின்
துயரங்களை உதிர்த்தபடி
பெயர் தெரியாத பறவைகள்
பிணங்களைக் கட்டி இழுத்துக்கொண்டு
கழுகுகளைச் சபித்தபடி செல்கின்றன
மேகங்கள்
எம் மக்களின் அவலங்களைக்
காவிக்கொண்டு
கோபமாய் அலைகின்றன
நாய்கள் ஊளையிட்டுக் கொள்ளும்
இரவுகளில்
எங்கள் பெண்களின்
துயரங்களைச் சுமந்துகொண்டு
நீதி தேவதைகள்
அலைந்து திரிகின்றன
காற்றுக் காவிவரும்
எம் இனத்தின்
கண்ணீர்க்கதை கேட்டு
வனங்களும் சோலைகளும்
இரைந்தழுவது
ஒப்பாரிகளாகுகிறது
வற்றிக் கொண்டுபோகும்
என் வாழ்க்கைப் பாத்திரம்
முழுவதையும்
எங்கள் குழந்தைகளின்
கண்ணீர் நிறைக்கிறது
திமிறிக்கொண்டோடிப்போக முடியாதபடி
என் உலகத்தைச் சுற்றி
அழுகைகள் நிறைந்த
குழந்தைகளின் ஆன்மாக்கள்
அலைந்து திரிகின்றன
என் இருப்பு முழுவதையும்
பிடித்துக்கொண்ட
பெருந்துயர்ச் சர்ப்பம் ஒன்று
என் கழுத்துக்களை
தன் உடலால்
நெரித்துக் கொண்டிருக்கிறது
உறைந்த காலத்தின்
நினைவுக்குமிழ்கள் உடைந்தொழுக
வெளியேற மனமின்றி
வழியெங்கும் சிதறிக்கிடக்கும்
எதிர்பார்ப்புக்களுடன்
வலி நிரம்பிய வாழ்க்கையைச்
சுமந்துகொண்டு
இருண்ட மனக்குகையின்
அடர் பள்ளத்தில்
என் உலகம் சுழல்கிறது..
Subscribe to:
Posts (Atom)