Pages

Thursday 10 November 2011

நாங்கள் புலம்பெயராத தமிழர்கள்.......

பிணங்களின்
ஓலங்களையும்
இழப்புக்களின்
வலிகளையும்
சகித்தபடி
சிந்தனைகளைப்
புதைத்து விட்டு
தூங்கப் பழகியிருக்குறோம்

வீட்டின்
கோடியில்
இற்றுப்போன
உடல்களின்
எஞ்சிய
எலும்புகளின்
நடுவே
அமைதியாக இருந்து
உணவருந்திக்கொள்கிறோம்

கோப்பையில்
இருந்து எழும்
சொந்தங்களின்
இரத்த வாடையை
நினைவுபடுத்தாது
தேநீரை
சுவைத்துக்கொள்கிறோம்

விடுதலைக்காய்
வீழ்ந்தவர்களின்
நினைவுகளை
சுமந்த நாட்களில்
கொடிகளைப்
பிடித்தவாறு
ஆக்கிரமிப்பாளர்களின்
தேசிய கீதங்களைப்
பாடிக்கொள்கிறோம்

ஏசிய வாய்களால்
யூதாஸ்களைப்பாடி
எங்களின்
மீட்பராய்
துதித்துக்கொள்கிறோம்

இடித்துக்
கொட்டப்பட்ட
கல்லறைகளையும்
மறைக்கப்பட்ட
புதைகுழிகளையும்
தாண்டி
சிரித்துக்கொண்டே
காவலரண்களைக்
கடந்து
பயணித்துக்கொள்கிறோம்

எப்போதும்
காதுகளில்
கேட்டுக்கொண்டிருக்கும்
ஒப்பாரிகளின்
நடுவே
இசைக்குழுக்களில்
கரைந்து
குதூகலித்துக்கொள்கிறோம்

உள்ளே
இற்றுப்போன
வீடுகளையும்
அரித்துப்போன
கூரைகளையும்
வைத்துக்கொண்டு
தெருக்களை
மட்டும்
அலங்கரித்துக்கொள்கிறோம்

எல்லாவற்றையும்
மறந்துபோகும்படி
எப்பொழுதும்
எங்களை நாங்களே
நினைவுபடுத்திக்கொள்கிறோம்

எதிர்காலமே
புதைக்கப்பட்ட
தேசத்தில்
எதிர்காலத்திற்காய்
நாங்களே
மாறிக்கொண்டு
எங்களை
ஏமாற்றிக்கொள்கிறோம்...........

No comments:

Post a Comment