Pages

Friday 29 January 2016

வீடுகள் உறங்கிய தெருக்களின் இருக்கைகளில் மீதமாய்
இருக்கிறது காதலர்கள் விட்டுச்சென்ற முத்தங்கள்
இரவின் இசையை காதலுடன் மீட்டுகின்றன
மரங்கள்
வானத்தைக் காட்டிலும் பரிசுத்த நிர்வாணமாய் இருக்கிறது இந்த இரவு
என் கனவை தொட்டுணரும் பட்டாம் பூச்சியே
உன்னைக்கனவுற்றபடி அசையாத இரவின் போதையில் மிதக்கிறேன்

உன் கனவுகளின் வண்ணங்களிலும் தோய்ந்துகிடப்பது
பாதி ஒளிந்துள்ள நிலவைப்போல
பரிதவிப்பது
வசந்தமாய்ப் பூப்பது
வாழ்வின் கணங்களை ரசிப்பது
பின் அதனுள் உருகிக்கிடப்பது
காதல் அல்லவா.

ஓய்வற்ற வாழ்வென்பது சலிப்புற்று
நீண்டுகிடக்கும் நெடு வானம்
அதை நீந்திக் கடந்திட ஓடும் ஒற்றை மேகம் நான்
வாழ்வை நிறுத்திவைத்து நனைக்கவரும் மழைமேகம் நீ
என் பெருமூச்சின் தீப்பிழம்பை
கண்ணாடியில் படியும் சுவாசத்தைப்போல
நீ மூடி அணைக்கிறாய்
என் தூக்கங்களுக்கெல்லாம் உன் பாடலை தலயணையாக்குகிறாய்
துயரறியா வீட்டில் பரவும் நேசம் நான்
காதல் நிரம்பிய காற்றை தழுவும் ரோஜாச்செடி நீ..

பறவைகளின் குரலிசைப்பொழிவில்தான் உனக்கான என் பாடலும் ஒளிந்திருக்கிறது
தேடிக்கண்டடையும் தீராத்தாகத்தோடு நீ வருகிறாய்
இறகிலும் இலேசான உன் விழிகளின் வருடலினால்
எனை பரசவத்திற்குள் நகர்த்துகிறாய்
இனி யுகத்துக்குமாய் நான் தனிமையுறமாட்டேன்..

ஓ..என் தோழியே..
நேசிப்பதென்பதும்
நேசிக்கப்படுவதென்பதும்
காதல் ததும்பும் ஓர் கவிதையைப்போல
எத்துணை இனிமையானது..

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மிக அருமையான கற்பனை கலந்த வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment