Pages

Saturday 2 April 2011

ஈரம்....

 வவுனியா முகாமிலிருந்து விடுதலையான லட்ச்சுமி அத்தையையும் மகள் கவிதாவையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் முருகனின் அம்மா. பிடிவாதமாக யாழ்ப்பாணத்திற்கு வரமறுத்து பாலியாத்திற்க்குப் பக்கத்தில் இருந்த அவர்கள் வீட்டிற்க்குப்போக இருந்தவர்களை முருகனின் அம்மாதான் மிகுந்த வாக்குவாதத்தின் பின்னர் மனதை மாற்றிக் கூட்டிவந்திருந்தார். முருகனின் அம்மாவின் ஆக்கினையால்தான் லட்ச்சுமி அத்தை அந்த ஊரிற்க்கே வருவதில்லை என்ற தனது கொள்கையை விட்டுக் கொடுக்கவேண்டியிருந்தது. எவ்வளவோ துன்பங்களைச் சந்தித்தும் நம்பிக்கையை இழந்துவிடாமல் வந்த துன்பங்கள் எல்லாவற்றையும் சவால்களாக எடுத்து துடைத்தெறிந்துவிட்டு நிமிர்ந்த லட்ச்சுமி அத்தைக்கு இன்னுமொருமுறை தனியாகத் தன் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்வது ஒன்றும் சவால்மிகுந்ததாக இருக்கப்போவதில்லை. சுயம்பு லிங்கம்களையும் சாமிகளையும் கோவில்களையும் பற்றி அவன் புத்தகம்களில் படித்திருக்கிறான். ஆனால் சுயம்பு மனுசியை அவன் அத்தையில் நேரிலேயே பார்த்தான்.

முருகனின் அம்மா லட்ச்சுமி அத்தையால் எப்பொழுதுமே மறக்கப்பட முடியாதவராக இருந்தார். யாருமே இல்லாத லட்ச்சுமி அத்தையின் உலகத்தில் அவன் அம்மா மட்டுமே எப்பொழுதும் துணையாக இருந்திருக்கிறார். ஊராலே ஒதுக்கப்பட்டு சொந்த உறவுகளாலும் துரத்தப்பட்டபொழுது முருகனின் அம்மாதான் ஆலமரம்போல் நின்று லட்ச்சுமி அத்தையை அரவணைத்தார். அந்த நன்றியை லட்ச்சுமி அத்தை தன் ஆயுள் முழுவதும் சுமந்துகொண்டே இருப்பாள். பாலியாத்துக்குப் பக்கத்தில் இருந்த அந்தக்குக்கிராமத்தில் இரண்டு பெண்கள் தனியாகப்போய் இடிஞ்சு தூர்ந்துபோய் அடையாளமே தெரியாமல் ஆகிப்போயிருக்கிற காணித்துண்டைக் கண்டுபிடித்து வீடுகட்டி சனநடமாட்டம் குறைந்த அந்த ஆற்றங்கரையில் அவ்வளவு ஆமிக்கு மத்தியில் தனியாகச் சீவியம் நடத்துவதை முருகனின் அம்மாவால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.முருகனின் ஊரில் லட்ச்சுமி அத்தைபட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் ஆயுசு முழுவதும் கிடந்து அறுத்துக்கொண்டிருக்கும் ரணங்களை அந்த ஊர் அவருக்குக் கொடுத்திருந்தது. அப்படி ஒரு ஊர் இருக்கிறது என்பதையே தன் நினைவுகளில் இருந்து துடைத்தளித்து விட்டிருந்தார் லட்ச்சுமி அத்தை. முருகனின் அம்மாவிற்க்குத் தெரியும் அவர்கள் எந்த ஒரு நிலையிலும் அந்த ஊருக்கு வரமாட்டார்கள் என்று. அதனால்தான் அவர்கள் விடுதலையாகிறார்கள் என்று தெரிந்ததும் முதல் நாளே வவுனியாபோய் தங்கி நின்று லட்ச்சுமி அத்தையுடன் சண்டைபிடித்து மனதை மற்றி வீட்டிற்க்கு கூட்டிவந்திருந்தார்.

லட்ச்சுமி அத்தை முருகன் வீட்டிற்க்கு உறவினர் அல்ல. தந்தையற்ற லட்ச்சுமி அத்தை தனது தாய்,தமக்கையுடன் சிறுவயதிலேயே தீவுப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து அந்த ஊரில் குடியேறிவிட்டதாக அவன் அம்மா சொல்வார். அந்தக்காலத்தில் சிறுவயதிலிருந்தே அவன் அம்மாவும் லட்ச்சுமி அத்தையும் நல்ல நண்பிகளாம். லட்ச்சுமி அத்தை முருகனுக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து அவன் குடும்பத்திற்க்கு நெருங்கியவராக இருந்திருக்கிறார். லட்ச்சுமி அத்தையின் வருகை முருகன் வீட்டில் எப்பொழுதும் இனிமையையும் குதூகலத்தையும் கொண்டுவரும் ஒன்றாக இருந்தது. லட்ச்சுமி அத்தை வரும் பொழுதெல்லாம் அம்மாவின் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சியை அவன் பார்த்திருக்கிறான். அதனாலேயே லட்ச்சுமி அத்தை வரும்பொழுதெல்லாம் அவனும் சந்தோசப்படுவான். பொதுவாக அம்மாவுக்கு நெருக்கமானவைகள் எப்பொழுதும் குழந்தைகளுக்கும் நெருக்கமானவை ஆகிவிடுகின்றன. இப்படித்தான் லட்ச்சுமி அத்தையும் அவனையறியாமலே அவன் பிரியத்திற்க்குரியவர் ஆகியிருந்தார்.

அம்மாதான் அவரை அத்தை என்று அழைக்கும்படி அவனுக்குச் சிறுவயதில் சொல்லிக்கொடுத்திருந்தார். லட்ச்சுமி அத்தை அவனை எப்பொழுதும் "மருமோன்" என்றுதான் செல்லமாகக் கூப்பிடுவார். அவர் வரும்பொழுதெல்லாம் அவனுக்கு இனிப்பு,சோடா,மிக்சர் என்று ஏதாவதொன்று வாங்கிவருவார். அவர் போகும் வரையும் அவருடனேயே ஒட்டிக்கொண்டு திரிவான் முருகன். முருகனுக்கு ஒரு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும்போது லட்ச்சுமி அத்தை அவரின் உறவினராலும் ஊரவராலும் வஞ்சிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட கொடுமையால் அந்த ஊரில் இருந்து கண்காணா தூரத்தில் வன்னிக்குப் போயிருந்தார். லட்ச்சுமி அத்தைக்கு அன்றைக்கு நேர்ந்த அநியாயத்தைப்பற்றி அம்மா வீட்டில் அடிக்கடி கவலையோடு பேசுவதைக் கேட்டிருக்கிறான் முருகன்.

லட்ச்சுமி அத்தையின் சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டார். அக்காவின் திருமணம் நடந்து கொஞ்சக்காலங்களில் லட்ச்சுமி அத்தைக்கு தாயும் இறந்து விட்டிருந்தார்.அதன் பின்னர் அநாதையான லட்ச்சுமி அத்தை தனது தமக்கையுடன்தான் தங்கியிருந்தார். லட்ச்சுமி அத்தையின் அக்காவின் கணவன் முருகனின் ஊர்க்காறன். ஊரில் முக்கால்வாசிக்குமேல் அவனின் உறவுக்காறர்கள். லட்ச்சுமி அத்தையின் யாருமற்ற நிலையையும் அவனின் வீட்டில் தங்கியிருந்ததையும் பயன்படுத்தி பாலியல் ரீதியாக லட்ச்சுமி அத்தைக்கு தொல்லை கொடுத்துவந்தான். அக்காவிடம் சொன்னால் அக்கா குடும்பம் குலைந்துவிடும் என்று தனக்குள்ளேயே இந்தத் தொல்லைகளை பொறுத்துக்கொண்டிருந்தார் லட்ச்சுமி அத்தை. இதன் உச்சக் கட்டமாக ஒருநாள் வீட்டில் யாருமில்லாத நேரமாகப் பார்த்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டது அந்த மிருகம். கேட்க யாருமில்லை என்ற துணிவில் அவரின் வாழ்க்கையை சிதைத்து விட்டிருந்தது அந்த மனித மிருகம்.

அக்கா புரிசனின் கொடுமையை வெளியிலும் சொல்ல முடியாமல் அந்த நரகத்தில் இருந்து தப்பவும் முடியாமல் வெம்மிக்கொண்டிருந்திருக்கிறார் லட்ச்சுமி அத்தை. இந்த வன் கொடுமையின் அடையாளத்தை அவர் விரைவிலேயே வயிற்றில் சுமக்க வேண்டி வந்தது. இதற்க்கு மேலும் மறைக்க முடியாமல் விடயம் வெளியே தெரிய வந்தபோது ஊர் மட்டுமன்றி சொந்த சகோதரியும் சேர்ந்து வேசைப்பட்டம் கட்டி உடுத்த உடுப்புடன் அவரை நடுத்தெருவிற்க்கு விட்டிருந்தனர். எங்கு போவதென்று தெரியாமல் யாருமின்றி நடுத்தெருவில் நின்ற லட்ச்சுமி அத்தையை ஊரில் முருகன் வீட்டைத்தவிர யாருமே அண்டவில்லை. முருகனின் அம்மாதான் லட்ச்சுமி அத்தைக்கு துணையாக நின்றவர். பின்னர் கொஞ்ச நாளில் லட்ச்சுமி அத்தை அந்த ஊரைவிட்டு தனியே வன்னிக்குப்போய் அங்கு பாலியாத்திற்குப்பக்கத்தில் அரசாங்கம் கொடுத்த நூறேக்கர் திட்டத்தில் கிடைத்த ஜந்து ஏக்கறில் வீடுகட்டி அங்கேயே பெண் குழந்தையும் பெற்று தனி மனிசியாய்ப் போராடி நிமிர்ந்தார்.
கடைசிவரையும் தன் குழந்தைக்காக திருமணம் செய்யாமல் தனியாளாகவே விதியை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தார்.

லட்ச்சுமி அத்தை தனியாளாக வன்னிக்குப் போகும்போது முருகன் சிறுவன். அதற்க்குப்பிறகு நாட்டில் ஏற்பட்ட நிலைமைகளால் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்குப்போக முடியாமல் போகவே லட்ச்சுமி அத்தையையும் பலவருடங்கள் பார்க்க முடியாமல் போய்விட்டது. பின் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வால் கிளாலியால் அத்தை வீட்டுக்குப் போயிருந்தனர் முருகன் குடும்பம். லட்ச்சுமி அத்தை தனியாளாகவே போராடி நல்ல வீடும் ஒன்று கட்டி அந்த ஊரில் ஓரளவு வசதிகளோடு இருந்தார். தென்னை,பலா,எலுமிச்சை,கீரைப்பலா,தோடை என்று அந்த ஜந்தேக்கர் முழுவதும் சோலையாக மாற்றிவைத்திருந்தார். அந்தப் பூமியும் வஞ்சகமின்றி அத்தையின் உழைப்பிற்க்கு அள்ளிக் கொடுத்துக்கொண்டிருந்தது. வாழை,பயற்றம் கொடி,வத்தாளை,மரவள்ளி,மிளகாய்,பூசணி,டுபாய்ப் பூசணி என்று அந்தக்காணி முழுவதும் பயிர்களால் செழித்திருந்தது. அத்தை பாலியாத்தம் கரையில் சொந்தமாக வயலும் வாங்கி விதைத்திருந்தார். லட்ச்சுமி அத்தையின் மகள் கவிதாவும் வளர்ந்து பெரியவளாகி விட்டிருந்தாள்.

இவ்வளவு காலமும் சேர்த்து வைத்த நன்றிகளை மொத்தமாகத்திருப்பி தந்துவிடவேண்டும் என்ற பெரு விருப்பில் அவர்கள் தங்கியிருந்த பத்து மாதமும் அவர்களுக்கு ஒரு குறைவிடாமல் பார்த்துக்கொண்டார் லட்ச்சுமி அத்தை. பின்னர் வன்னிக்காலநிலை ஒத்துவராததாலும் மலேரியாவால் அவதிப்பட்டதாலும் முருகன் வீடு கப்பல் ஏறி யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து விட்டனர். அதற்க்குப்பிறகு நாட்டில் ஏற்பட்ட போர்களால் லட்ச்சுமி அத்தை வீடும் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து கடைசியில் முள்ளிவாய்க்காலில் இருந்து வவுனியா முகாமிற்க்குப் போயிருந்தனர்.

                                                                லட்ச்சுமி அத்தை முருகன் வீட்டிற்க்கு வந்து பல நாட்கள் போய்விட்டிருந்தாலும் ஊரில் யாரும் அத்தையுடன் முகம் கொடுத்துப்பேசுவதில்லை. இன்னமும் பழைய கதைகளைப் பேசி ஏதோ விநோத விலங்கைப் பார்ப்பதைப்போல அவர்களை ஒதுக்கிக் கொண்டிருந்தது ஊர். கவிதாவைக்கூட வேசைக்குப் பிறந்தது என்று முதுகிற்க்குப்பின்னால் கதைத்தும் நக்கலடித்துக்கொண்டும் இருந்தார்கள். அம்மாவைப்போல மகளும் இருப்பாள் அவளிடம் தங்கள் இச்சைகளைத் தீர்க்கலாம் என்று அலைந்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். ஒருமுறை கடையில் பொருட்கள் வங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்த கவிதாவிடம் அத்துமீறி நடக்க முற்பட்ட ஊரவர் ஒருவருடன் முருகன் வாக்குவாதப்பட்டு அது கைகலப்பில் முடிந்திருந்தது. இந்தச்சம்பவத்திற்க்குப் பிறகு ஊரில் முருகனுக்கும் கவிதாவிற்க்கும் முடிச்சுப்போட்டு கதை பரப்பி விட்டிருந்தனர். தாய் வேசை அதைப்போல மகளும் முருகனை மயக்கி வைத்திருப்பதாக கவிதாவிடம் தங்கள் விளையாட்டுக்கள் பலிக்காதவர்கள் கதை கட்டி விட்டிருந்தார்கள். இவை எவற்றைப்பற்றியும் கவலைப்படாது தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருந்தனர் முருகன் வீடு. இதைப்போல பல பொய்க்கதைகளை உருவாக்கிய அந்த ஊரைப்பற்றி நன்றாகவே அளந்து வைத்திருந்தனர் அவர்கள். அதனால் இதுபோன்ற அற்பச் சிறுகற்கள் எல்லாம் அவர்கள் வாழ்க்கைக் குளத்தில் எந்தச்சலனங்களையும் ஏற்படுத்துவதில்லை.

                       லட்ச்சுமி அத்தை அவன் வீட்டிற்க்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு மாங்கள் முடிவடைந்து விட்டிருந்தபோது ஒருநாள். வானம் கறுத்துக்கொண்டு வந்து சிறுசிறு துளிகளாகத் தூவத்தொடங்கியிருந்தது. பெருமழையிடமிருந்து தப்புவதற்க்காக முருகன் அன்று வேலையிலிருந்து நேரத்திற்க்கே வீட்டுக்கு வந்திருந்தான். வீட்டிற்க்குள் நுழைந்தபோது வீட்டில் யாருமில்லை. கொல்லைப்புறத்தில் இருந்து யாரோ வாந்தி எடுக்கும் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. யாரென்று பார்ப்பதற்க்காக கொல்லைப்புறம் போவதற்க்கு முருகன் சமையலறையைத்தாண்டியபோது பாதி அரைக்கப்பட்ட நிலையில் விடப்பட்ட அலரி விதைகள் சில அம்மியில் கிடந்தன. ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று நினைத்தபடி கொல்லைப்புறம் விரைந்தபோது கவிதா வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள். சாக முடிவெடுக்குமளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை என்று முருகன் அதட்டியபோது அவள் முகாமில் இருந்து விடுதலையாவதற்க்குச் சில தினங்களிற்க்கு முன்னர் விசாரணைக்கெனக் கூட்டிச்செல்லப்பட்டு பாலியல் வல்லுறவிற்க்கு உட்படுத்தப்பட்டதாகச் சொல்லிக்கதறினாள். இன்று அவள் வயிற்றில் ஒரு குழந்தை வளர்ந்துகொண்டிருந்தது. அதனால்தான் அவள் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள். ஏற்கனவே இடப்பெயர்வுகளால் தான் கஸ்ரப்பட்டுச் சேர்த்த எல்லாவற்றையும் இழந்து நொந்து உடைந்துபோயிருக்கும் தாய்க்கு இன்னமும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடாது என்றுதான் எதையும் அவள் தாயிடம் சொல்லியிருக்கவில்லை. இனிமேல் தான் சாவதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும் என்று அழுதுகொண்டிருந்தாள்.

முருகனுக்குத் தலை விறைத்துவிடும்போல் இருந்தது. இந்தக்குடும்பத்தையே சுற்றிச் சுற்றி துன்பக்கணைகளை எய்துவிடும் விதியைத் திட்டித்தீர்த்தது அவன் மனம். மனதால் எந்தக்களங்கமுமற்ற குழந்தையாக எதிர்காலமே தெரியாமல் கேள்விக்குறியாகக் கவிதா அவன் முன்னால் நின்றுகொண்டிருந்தாள். அவன் மனத்திரையில் வஞ்சிக்கப்பட்ட லட்ச்சுமி அத்தையும் பழைய சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழுகின்றன. தன் கொடிய வேட்டைப் பற்களிடையே நாக்கைத்தொங்கவிட்டபடி காத்திருக்கும் அந்த ஊர் அவன் நினைவுக்கு வருகிறது. வேடையாடப்பட்ட தன் இனத்தையே வேடையாடத்திரியும் தன் சமூகத்தின் மேல் பெருங்கோபத்தீ மூழ்கிறது அவனுக்கு. காலங்காலமாக இந்த இனத்தை இழுத்துப்பிடித்து முன்னேற விடாமல் ஒரு இருட்டு வட்டத்துள் வைத்திருக்கும் சாதி,பெண்ணடிமைத்தனம்,கற்பு,சமய மூட நம்பிக்கைகளிடமிருந்து தானாவது வெளியேறித்தப்பிவிட வேண்டும் என்று எப்பொழுதும் அவன் சிந்தித்துக்கொண்டேயிருந்தான். படிக்கும் காலத்தில் அவன் பெரியாரையும் அம்பேத்கரையும் தேடித்தேடிப் படித்திருக்கிறான். அவர்கள் கண்ட கனவுகளை அவனும் கண்டிருக்கிறான்.

மாறிமாறிச் சிந்தனைகளால் அவன் மனம் அலைக்கழிந்து கொண்டிருந்தது.கொஞ்ச நேரம் உட்கார்ந்து சிந்தித்த முருகன் ஒரு தீர்மானத்திற்க்கு வந்திருந்தான். இவ்வளவு நேரமும் மனக்கலக்கத்தால் குளம்பிப்போயிருந்த அவன் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது. அமைதியாகத் தெளிவாகப் பேசத்தொடங்கியிருந்தான் முருகன்.

கவி உனக்கு என்னைப்பிடிக்குமா.......?

இதென்ன கேள்வி முருகன, எங்கள் குடும்பமே உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது உங்களை எனக்குப் பிடிக்காமல் போகுமா.....?

அப்படியென்றால் நீ இந்தவிடயத்தை யாருக்கும் சொல்லமாட்டேன் என்று எனக்குச்சத்தியம் செய்து தரவேண்டும் அத்துடன் நீ என்னை திருமணம் செய்வாயா.......?

மெளனமாக இருந்தாள் கவிதா.....

சரி ஒன்று மட்டும் சொல் என்னை உனக்குப்பிடிக்குமா....?

ஓம்...

ஓ.கே அது போதும்....

வீட்டிற்க்கு அம்மா வந்து சேர்ந்தபோது அம்மாவையும் கவிதாவையும் தனியாக அழைத்து தான் கவிதாவை விரும்புவதை தெரிவித்தான் முருகன். அவனுக்கும் அவளுக்கும் தொடர்பு ஏற்பட்டு இன்று அவள் வயிற்றில் குழந்தை வளர்கிறது. இது வெளியில் யாருக்கும் தெரியமுன்னர் தமக்குத் திருமணம் செய்து வைக்கும்படி தாயிடம் வேண்டினான். முருகனுக்கு ஏற்கனவே வெளிநாட்டில் இருந்த அவன் மைத்துனிக்கு திருமணம் செய்து வைக்க முற்றாகி இருந்தது. தன் மகன் அண்ணண் மகளை திருமணம் செய்து வெளி நாட்டிற்க்குப்போய் நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்று கனவுகண்டு கொண்டிருந்தது அந்தத்தாய்மனம்.இதனால் அம்மா முடியாது என்று சொல்லிவிடுவாரோ என்று அவன் உள் மனம் படபடத்துக்கொண்டிருந்தது. முருகனின் அம்மா எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தார். ஏற்கனவே லட்ச்சுமிக்கு ஏற்பட்ட நிலை கவிதாவுக்கும் வரக்கூடாது என்று அவர் தெளிவாக முடிவெடுத்திருந்தார்.
அன்று மாலையே பெரியவர்கள் சிலரையும் வீட்டுக்கழைத்து லட்ச்சுமியிடம் பெண்கேட்டார் முருகனின் அம்மா. உன் வீட்டில் என் பிள்ளை மருமகளாக வருவதற்க்கு நான் தான் கொடுத்து வைக்கவேண்டும் என்று உணர்ச்சி மேலிட முருகனின் அம்மாவின் கைகளைப்பிடித்து கண்ணீர் விட்டழுதார் லட்ச்சுமி அத்தை. தந்தையில்லாத என் பிள்ளைக்கு முகவரி கொடுத்த உனக்கு நான் என்னத்தைச்செய்து நன்றிக்கடனை தீர்க்கப்போகிறேனோ என்று விம்மிக்கொண்டிருந்தார். அடுத்த கிழமையே நல்ல நாள் இருக்கிறதென்று பஞ்சாங்கம் பார்த்து திருமணத்திற்க்கு நாள் குறித்தார்கள் வந்திருந்த பெரிசுகள்.இன்னொரு லட்ச்சுமியும் கமலாவும் உருவாகுவதை தடுத்த நின்மதி முருகனின் நெஞ்சில் இறங்குகிறது. அவன் வாழ்க்கை முழுவதும் அவனுக்கு உதாரணமாக இருக்கும் தன் தாயை நினைத்து இன்னுமொருமுறை பெருமைப்பட்டுக்கொண்டான் முருகன். சுவரில் சாய்ந்திருந்த கவிதாவின் கண்களில் இருந்து வளிந்தோடும் கண்ணீர் கோடி நன்றிகளைச் சொல்லிக் கொண்டிருந்தது முருகனுக்கு. வெளியே சோவெனப் பெய்யத்தொடங்கிய மழை எதையும் எதிர்பாராது பூமியை ஈரமாக்கிக் கொண்டிருந்தது....

No comments:

Post a Comment