Pages

Tuesday 5 April 2011

வயல்காட்டில் ஒருநாள்....

ஊரின் ஒதுக்குப்புறம்-அமைதி
உறங்கிக் கிடக்குமிடம்
தென்றல் தழுவிச்செல்ல-பூக்கள்
தெம்மாங்கு பாடுமிடம்

ஆசை நோய்பிடித்த-உலகின்
அசிங்கங்கள் தீண்டாமல்
இயந்திர இரைச்சல்விட்டு-அமைதியாய்
இயற்கை உறையுமிடம்

போலி மனிதர்களின் -பெருமை
போற்றும் உலகைவிட்டு
நாடி நின்மதியை-ஒருநாள்
தேடி இங்குவந்தேன்

ஓடிக் கவலையெல்லாம்-எனைவிட்டு
ஒருநொடியில் போகக்கண்டேன்
மனிதர் தேடும்நின்மதியோ-இங்கே
மலைபோல்க் குவிந்துகண்டேன்

கானம் இசைத்தபடி-வண்டுகள்
கவிதை படிக்கக்கண்டு
நானும் ஒருவனாகி-இயற்கை
நதியில் கரைந்துவிட்டேன்

வானம் இறங்கிவந்து-இந்த
வயற்காட்டில் நடக்கக்கண்டு
ஞானம் பெற்றதைப்போல்-எனக்குள்
மோனநிலை அடையக்கண்டேன்
***
தரையைக் கோதிநிற்கும்-மரத்தின்
உயரக் கிளையொன்றில்
தாவும் கிளியொன்று-எனைப்பார்த்து
தலையை அசைத்ததுகாண்

உலகம் சுருங்கிவந்து-முன்னால்
ஊர்ந்து செல்வதுபோல்
சிலையாய் மாறிப்போய்-அந்தச்
சிறுகிளியை ரசித்திருந்தேன்

கீச்சுக் குரலினிலே-அக்கிளி
கிட்டவா என்றழைக்க
மூச்சைப் பிடித்தபிடி-நான்
முழுதும் மறந்திருந்தேன்

காற்றைக் கிளித்துக்கொண்டு-வானில்
கலந்து மறைகையிலே
கவலை எதுவுமற்ற-அதன்
கண்ணில் நிறைவுகண்டேன்

ஆயிரம் கோடிகொட்டி-மனிதன்
ஆகாயத்தில் பறந்தாலும்
சொந்தச் சிறகுகளில்-பறக்கும்
சுதந்திரத்தைப் போல்வருமா

நூறு கவலைகளில்-தன்
நிறத்தை இழந்தமனிதன்
ஏறி வானளக்கும்-இக்கிளிக்கு
எங்கணம் ஈடாவான்
***
நாளிகை கரைந்துபோக-நானந்த
நாடகத்தில் லயித்திருந்தேன்
காரிருள் கவிழ்ந்ததனால்-வீடேக
கால்கள் நடந்ததுகாண்

நினைவில் அக்கிளியே-இன்னும்
நிறைந்து போயிருக்க
தரிசு வயல்காட்டில்-எம்மனசு
தனியே தங்கிருச்சு

பிரிய மனமின்றி-காட்டைப்
பிரிந்து வீடுவர
பெரிய மழைஒன்று-மண்ணில்
இறங்கி வந்ததுகாண்
***
வானம் வாய்பிளந்து-மழையை
மண்ணில் கொட்டிவிட
காணும் இடமெல்லாம்-வெள்ளக்
காடாகிப் போனதுகாண்

கண்ணைப் பறிக்கும்படி-மின்னல்
கறுத்த வானில்எழ
என்னை அறியாமல்-கால்கள்
என்வீட்டுள் நுழைந்ததுகாண்

எங்கு ஒதுங்கிடுமோ-மழையை
எப்படித் தாங்கிடுமோ
ஓடிவரும் வெள்ளத்தில்-கிளிக்கு
ஒதுங்கஇடம் கிடைத்திடுமோ

கண்ணை மூடிக்கொண்டு-நான்
கட்டிலில் சாய்கையிலே
எண்ணம் முழுதும்-அந்தச்
சின்னஞ் சிறுகிளியே
***
உண்ண இம்மழையில்-அதற்கு
உணவேதும் கிடைத்திடுமோ
இல்லை எதிரிகட்கு-அது
இரையாகிப் போயிடுமோ

ஒழுகும் மழைக்கொதுங்க-அதற்கோர்
ஓலைக் குடிசையில்லை
விறைக்கும் குளிரிற்கு-அதனிடம்
விதவிதமாய்ப் போர்வையில்லை

வெம்மி மனமுடைந்து-அக்கிளி
வேதனையில் விம்மிடுமோ
கண்ணில் நீர்வளிய-அக்கிளி
கானகத்தில் அலைந்திடுமோ
***
எல்லாம் தழைகீளாய்-என்
எண்ணம் பொய்யாக
ஆருமற்ற அக்காட்டில்-ஓர்
அதிசயம் நிகழ்ந்ததுகாண்

எல்லையற்ற ஆனந்ததில்-அக்கிளி
எங்கெங்கோ பறந்ததுகாண்
அள்ளிக்கொட்டும் வான்மழையில்-அக்கிளி
ஆனந்தமாய் நனைந்ததுகாண்

இயந்திர வாழ்க்கையினை-எமக்களித்த
இறவனின் வஞ்சனையை
எண்ணி நொந்தபடி-அக்கிளி
எனக்காய் அழுததுகாண்
***

No comments:

Post a Comment