Pages

Wednesday 6 April 2011

அகதிப்பொன்னியும்..தனித்துப்போன அவளின் கனவுகளும்....

தனிச்சு ஒருத்தியாய்க்
காடுவெட்டிக் கல்லுடைத்து
வேலிபோட்டுக் கூடுகட்டி
கோழிவளர்த்து ஆடுவளர்த்து
சிறுகச்சிறுகச் சேமித்துக்
கட்டிய அந்தவீட்டில்த்தான்
ஊர்விட்டுப்போயும் போகாமல்
வேர்விட்டுக் கிளைபரப்பி
எங்கும் வியாபித்திருக்கின்றன
போரிற்கு இடம்பெயர்ந்த
பொன்னியின் கனவுகள்....

புழுதிவாசம் காற்றிலெழப்
புழுங்கிக்கிடக்கும் முற்றத்தில்தான்
அகதியாக்கப்பட்ட பொன்னியின்
வியர்வைகள் ஆவியாகின..

புழுங்கலும் ஒடியலுமாய்க்காய்ந்த
புழுதி முற்றத்தில்தான்
சுழிப்பும் முனுமுனுப்புமெனக்
கலைக்கும் பொன்னிக்கு
அலைத்துத் தண்ணிகாட்டிப்
புன்னகையும் சிரிப்புமெனப்
புறாக்கள் மேய்ந்துசெல்லும்...

ஊற்றியபாசத்தை உறிஞ்சி
முளைதள்ளி வேர்பரப்பிக்
காயும் பூவுமாய்க்
கலகலத்த முருங்குக்கு
வீடுதிரும்பும் பொன்னிக்காய்க்
காத்திருந்து காத்திருந்து
இப்போ வயதாகிவிட்டிருக்கிறது

நிறையக்கதைகளை சுமந்துகொண்டு
நிசப்தமாய்ப் பேசுவதற்காய்
கலகலப்பை இழந்து
காலங்கள் கரைய
முதிர்ந்து காத்திருக்கிறது
முற்றத்து மாமரம்
மீண்டும் அவள்வந்து
உயிர்தரும் ஒருமாலைக்காய்...

இலைகளையும் கிளைகளையும்
இழந்து மொட்டையாகிக்
காலம் வாட்டக்
கருகிக் கொண்டிருந்தாலும்
வேர்களால் மண்ணை
இன்னும் வீம்புடன்
இறுகப் பிடித்துக்கொண்டு
பொன்னியைப் போலவே
போராடிக் கொண்டிருக்கிறது
அவளின் வருகைக்காய்
அவள்நட்ட கூழன்பிலா...

அவளுடன் விரதமிருக்கும்
ஆறேழு அண்டங்காகம்கள்
அடித்து விரட்டப்பட்டு
அவள் அகதியானதுதெரியாமல்
இப்போதும் தவறாமல்
சனிக்கிழமைகளில்
எப்போதும்போல அவளின்
அழைப்பிற்காய் வருகின்றன...

ஊளையிடும் நாய்களுடன்
ஊரில் யாருமற்று
விடியும் நாட்களில்
வீட்டு முற்றத்தில்
பொன்னியின் செம்பருத்தியும்
பொழுதுடன் மகரந்தத்திற்காய்
சிரிக்கமறந்த இதழ்களுடன்
சில ஊமைப்பூக்களைப்பூக்கிறது...

வீசிச்செல்லும் நிலவொளியில்
பேசிச்செல்ல இரவுகளில்
காலாற முற்றத்தில்
களைப்பாறிச் சாய்ந்திருக்கும்
பொன்னியின் நிழலின்றியே
வெறுமையான ஊரைக்கடந்து
வேதனையுடன் நிலவு
வழமைபோலப் போகிறது.....

வேலியிலும் முற்றத்திலும்
வேம்பிலும் நாவலிலும்
பூவரசிலும் கிணற்றடியிலும்
புங்கமர நிழலிலும்
சலனமற்ற வீட்டின்
இருண்ட மூலைகளிலுமெனக்
காற்றைப்போலப் பரவி
அந்தப்பூமி எங்கும்
அவளின் கனவுகளே
நிறைந்து கிடக்கின்றன...

கும்மியும் கிளித்தட்டுமெனக்
குழந்தைகளால்க் குவிந்துபோய்க்கிடந்த
பொன்னியின் முற்றத்தில்-இப்போ
வெய்யிலும் தனிமையுமென
வெறுமை குடிகொண்டிருந்து-அவளின்
கனவுகளை எரிக்கிறது...
***

No comments:

Post a Comment