Pages

Sunday, 26 February 2012

ஈழவிடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியில் சமூகப்பிளவுகளின் செல்வாக்கு....

தமிழர்களின் இனவிடுதலைப்போராட்டம் ஏன் தோல்விகண்டது என்பதற்கான பதிலாக உலக நாடுகளின் எதிர்ப்பே காரணம் என்று எமது ஊடகங்களிலும் எங்களிக்கிடையேயும் சொல்லிக்கொள்கிறோம்.இதில் உண்மை இருக்கின்றது. ஆனால் இந்த உலகத்துக்கு முன் நாம் எப்படி இருந்தோம் என்பதையும், உலக நாடுகள் ஏன் எம்மை எதிரியாகப் பார்க்கத்தொடங்கின என்பதற்கான காரணங்களையும் நாம் யாரும் ஆராய்ந்துபார்க்க விரும்புவதில்லை..அவற்றைப் பேச வெளிக்கிட்டால் அவற்றின் பின்னே மறைந்துள்ள எமது ஊத்தைகளும் வெளிப்பட்டுவிடுமே என்ற பதற்றத்தில் தெரிந்துகொண்டே காரியத்துடன் நாம் யாரும் அவற்றைப் பற்றி பேசுவதில்லை..இங்கு தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டம் என்பதற்க்குள் புலிகளினது மட்டுமின்றி இனவிடுதலைய வேண்டி நிகழ்த்தப்பட்ட தமிழர்களது எல்லாப் போராட்டங்களும் அடக்கம்...

உலகம் எமது போராட்டத்தை தீண்டத்தகாத ஒன்றாக எப்பொழுது பார்க்க ஆரம்பிக்கிறது? எமக்குள் பல இயக்கம்களாகப் பிரிந்து நின்று எங்களுக்குள்ளேயே உயிர் வாழப் போராடுகிறோம்..ஆளையாள் போட்டுத்தள்ளி கொலைகளை செய்கின்றோம். இந்த அடிபிடிகளின் விளைவாக முக்கால் வாசிக் குழுக்கள் காவிவந்த கொள்கையை மறந்துவிட்டு யாரிடம் இருந்து விடுதலை வேண்டிப் புறப்பட்டதோ அவர்களிடமே போய் இணைந்துகொள்கிறன. மக்கள் நம்பிக்கை இழக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விரக்தியடைகின்றது. மதப்பிளவுவருகின்றது. இது இனப்பிரச்சனையா மதப்பிரச்சனையா என்ற கேள்வி வருகின்றது. பிரதேசவாதம் வருகின்றது. அரசியல் படுகொலைகள். பெருவாரி மக்கள் போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு நிற்கின்றார்கள். இது குழு மோதல். பயங்கரவாதம் என்று உலகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு சிங்களப் பேரினவாதம் என்ற புறநிலைக் காரணத்தை தவிர என்ன அகநிலை பதில் எம்மிடம் இருந்தது??

சாதியால்,பிரதேச வாதத்தால்,எம்மிடையே உள்ள உட்பிரிவுகளால்(வர்க்கம் மதம் போன்றன) தமிழர்களிடையே இன ஒற்றுமை நிகழவில்லை..இவைகள் இனம் என்ற ஐக்கியப்பாட்டுக்கு ஏதிரான சக்திகள். இந்த சக்திகளை அழிக்காமல் இன ஐக்கியப்பாடு இல்லை. இன ஐக்கியப்பாடு இன்றி இனவிடுதலை இல்லை.பிரிவினை,மேலான்மை கொள்ளும் மற்றும் போட்டி மனப்பான்மை,சமூக வேறுபாடுகளால் நிகழாமல் இருந்த இன ஒற்றுமை என்பவற்றால் இந்த சமூகத்தின் பிரதிநிதிகளாகப் போராடப் புறப்பட்ட போராளிக்குழுக்கள் மிகச்சரியாகப் போராட்டத்திலும் தாங்கள் இந்த சமூகத்தின் பிரதிநிதிகள்தான் என்பதை குத்துப்பாடுகள்,தங்களுக்குள்ளேயே அடிபாடுகள்,பிரிவினைகளின் மூலம் நிரூபித்தனர்.இன ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட பிரிவினைகளைத் தொடர்ந்து சிங்களவர்களுடன் ஒட்டிக்கொண்டு தமிழர்கள் தமது இனவிடுதலைக்கு எதிராகச் செய்த துரோகங்கள்,அதைத்தொடர்ந்து அவர்கள் மேல் நடத்தப்பட்ட கொலைகள்,பொறாமை மற்றும் காழ்ப்புணர்வில் தமிழர்களே தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் மேற்கொண்ட பரப்புரைகள் என்பவற்ரைத்தொடர்ந்து எமது போராட்டத்தை இனவிடுதலைப் போராட்டமாகக் கருதாமல் குழுமோதலாக உலகின் மனதில் ஏற்பட்ட தப்பான அதிர்வலைகள்,இவற்றின் நீண்டகால விளைவுகளே மூன்றுதசாப்தங்களுக்குப் பின்னர் எம்மை நோக்கிய சர்வதேச எதிர்ப்பை அந்த நேரத்தில் இருந்தே சிறுகச்சிறுகக் கட்டிவந்து இறுதி அழிவிற்கு இட்டுச்சென்றன.

ஒரு போதும் நோய்க்கு நிரந்தரத்தீர்வு தேடுவதாக எம்மவர்களின் அரசியல் நடவடிக்கைகள் அமைவதில்லை..இது காலங்காலமாக எம்மவர்களிடையே உள்ள ஒரு மிகத்தவறான அணுகுமுறை ஆத்திரத்தில் தனி நபர்கள் மேல் மேற்கொள்ளும் வசைபாடல்களிலும் அவர்களைப் போட்டுத்தள்ளுவதிலுமே எங்களது போராட்ட காலங்களில் அமைந்த பெரும்பான்மையான நாட்கள் ஓடிப் பறந்து விட்டன...இது உலகத்தின் அதிர்ப்த்தியை எம்மேல் கட்டி வளர்க்க உதவியதே அன்றி எமது போராட்டத்திற்க்கு எந்த விதத்திலும் உதவவில்லை..ஒவ்வொரு தனிமனிதனையும் எச்சில் பொறுக்கி நாயாக திட்டும்போது அவன் இன்னுமின்னும் வேகமாக எதிரிக்கோ அல்லது தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு விசுவாசமாகவோ தனது துரோகப் பந்தை எம்மை நோக்கி எறிந்து கொண்டிருந்தான்..அதே போல் ஒவ்வொரு தனிமனித அரசியல்க் கொலைகளின் பின்பும் இன்னொருவன் அதே கொள்கைகளைக் காவிக்கொண்டு இன்னும் வேகமாக முன்னையவன் செய்தவற்றை செய்துகொண்டிருந்தான்...இந்தப் படுகொலைகள்,வசைபாடல்கள்,சீண்டல்கள்,துரோக முத்திரைகள் ஒரு சதவீதம் தன்னும் எமது போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த உதவவில்லை..மாறாக பல மடங்கு பின்னோக்கி விழவே உதவியது..சிங்கள அரசியல் வாதிகள் மேல் நிகழ்த்த்தப் பட்ட கொலைகள் கொல்லப்பட்டவனின் கொள்கைகளைக் காவி வந்த அரசியலில் செல்லாக் காசாயிருந்த பின்னையவனுக்கு சும்மாயிருந்த மக்களின் ஆதரவையும் பெருக வைத்து முன்னையவனின் இன அழிப்புக் கொளகைகளை போருக்கு ஆதரவான நிலைப் பாட்டை இன்னமும் தீவிரமாக மேற்கொள்ள ஊக்குவித்தது..இந்தியாவின் மேலும் இதே கொள்கையையே நாம் கொண்டிருந்தோம்..தனி நபர்கள் ஏறி நிற்கும் அரசியல் தளங்களைப் பற்றி நாம் விமர்சிப்பதில்லை..அரசியல் வாதியையும் அவன் பொண்டாட்டியையும் விமர்சித்து விசிலடிப்பதில் எங்கள் சக்தியை விரயமாக்குகிறோம்..வெறுமனே சுப்பிரமணிய சுவாமியும்,சோ வும்,சோனியாவும் அழிந்து போய்விடுவதால் இந்த அரசியல் தளம் ஆட்டம் கண்டுவிடப் போவதில்லை..ராஜீவ் காந்தி இறந்ததால் இன்னொரு சோனியாகாந்தி வந்து ராஜிவ் நினைத்ததை செய்து முடித்தாள்...அடிப்படை பார்ப்பனிய சாதி அரசியலை இந்தியாவில் இருந்து ஒளித்துக்கட்டுவதாகவே எமது எதிர்ப்புகள் அமையவேண்டும்...அவைதான்,அந்தக் கொள்கைகளைக் காவிவருபவர்கள்தான் எமது ஈழப் போராட்ட நலன்களுக்கும் எதிரானதாக இந்தியாவில் மிகப்பெரும் தடையாக தொடர்ந்து இருக்கின்றன/ர்..இந்துத்துவ பார்ப்பன மேலாதிக்க சாதி அரசியலை எதிர்த்து ஈழத்தமிழர்களோ ஈழத்தமிழ் ஊடகங்களோ வாயைத்துறந்ததே மிகமிகக் குறைவு அல்லது இல்லையென்றே கூறலாம்..ஆனால் இந்தியாவில் இந்த பார்ப்பன,சாதிய அரசியல் தளத்திற்க்கு எதிராகப் போராடுபவர்களே ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

எங்களிடையே இருக்கும் ஜாதி,மத,பிரதேச,ஊர் வெறி இன ஒற்றுமைக்குத் தடையாக இருந்தது,இருக்கிறது..இன ஒற்றுமை இல்லாத தமிழனால் வியட்னாமியனைப்போல் ஒன்று பட முடியவில்லை..ஜாதிகள்,ஊர்கள் அல்லது மதங்களின் அடையாளத்தால் தமிழன் என்ற அடையாளத்தின் மூலம் பெறும் இன்பத்தை விட மிக அதிக சுய இன்பத்தை உணர்கிறது இந்த இனம்..இது நேரடியாகத் தாக்காமல் புலிகளின் போராட்டத்தை வெளித்தெரியாமல் மிக மோசமாக சுற்றிவளைத்துத் தாக்கிக்கொண்டிருந்தது....ஒரு கொஞ்சப் பேர் போராடிக்கொண்டிருந்தார்கள்..ஒட்டு மொத்த சமூகமும் போராடவில்லை..மிகுதிப் பேர் தங்கள் சமூக அந்தஸ்த்தைப் பாதுகாப்பதில் குறியாக இருந்தனர்..அகதியாக இடம்பெயரும் போதும் கூட தங்கள் ஜாதி அந்தஸ்த்தைக் காப்பாற்றிக் கொள்வதில் மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டனர்..பொருளாதார இருப்பின் மூலம் தங்கள் அந்தஸ்த்தைத் தக்க வைப்பதற்க்காகப் போராடப் புறப்பட்ட பிள்ளைகளைக் கூட மனத்தை மாற்றி வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்..இன்னும் கொஞ்ச மேல்தட்டு வகுப்பினர் தங்கள் பிள்ளைகளை கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி போராட்டத்தின் நிழல் கூட அவர்கள் மேல் படாமல் பார்த்துக்கொண்டனர்..ஆரம்பகாலங்களில் ஒரு மீனவன் தலைமை தாங்கும் அமைப்பில் இணைவதோ என்று கணிசமானது ஜாதி விசருடன் வேறு அமைப்புக்களில் இணைந்து கொண்டது(கவனிக்க - இங்கு இப்படிப்பட்ட மன நிலையுடன் இயக்கங்களுக்குப் போனவர்கள் போராடப் புறப்பட்டது இனவிடுதலைக்கு அல்ல..தாங்கள் மட்டும் சிங்களவனிடம் இருந்து விடுதலை பெறவேண்டும்..இனத்துக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களிடமிருந்து சமூக விடுதலை பெறக்கூடாது..தொடர்ந்தும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும்..அவர்களை ஆள்வதற்க்கும் சிங்களவர்களின் இடையூறுகள் இன்றி தாம் வாழ்வதற்க்குமே இவர்கள் போராடப் போனது..இப்படிப்பட்ட மனநிலையுடன் இருந்த,இருக்கும் சமூகத்தால் எப்படி இனவிடுதலையை தமிழன் என்ற அடையாளத்தின் கீழ் ஒற்றுமையாகப் பெற்றெடுக்க முடியும்..?)

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிளவுகள் பிரதேச வாதத்திற்க்கு மிகச்சிறந்த உதாரணம்... யாழ்ப்பாணியம் மற்றையவர்களை ஏதோ புழுக்களைப் போல் பார்க்கும் மெண்டாலிற்றி(பிரதேச வெறி யாழ்ப்பாணத்துக்குள்ளே சுருங்கும்போது அது ஊர் வெறியாக மாறுகிறதென்பது தமிழினத்தின் இன்னொரு வித பைத்தியக்காற மனநிலை)...இது மற்றைய பிரதேச மக்களின் மனங்களின் உள்ளே அவிந்து குமைந்து கொண்டிருந்த சமூகவலி.. ஒரு சிறு பொறி கிடைத்ததும் குப்பெனப் பற்றிக்கொண்டது...இன ஜக்கியம்,தமிழின விடுதலை என்பவை எல்லாம் இங்கே பின் தள்ளப்பட்டு பிரதேசவாதம் முன்வருகிறது...பிரதேச வெறி என்னும் மனநிலை இந்த சமூகம் அவர்களுக்கு ஏற்படுத்திய அவமானங்கள்,அழுத்தங்களின் மூலமும்,இந்த சமூகத்தில் இருந்து அவர்கள் காலம்காலமாக கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்துமே அவர்களிடம் உருவாகியது..இது தமிழின விடுதலைப் போரை மழுங்கடித்துவிடும் என்ற சிந்தனையை விட பிரதேசப் பற்றே அவர்களுக்கு முதன்மையாகத் தெரிந்தது...இப்படிப்பட்ட தாழ்த்தப்பட்டதும் உயர்த்தப்பட்டதுமான இருவேறு மனநிலையில் உள்ள ஒரு இனத்தினால் ஒற்றுமையாகப் பொதுத் தேசியத்திற்க்காக ஒன்றுபட்டுக் கூட்டாகப் போரிட முடியுமா..? எங்களுக்குள் நிகழ்ந்த குத்துப்பாடுகளும் பிளவுகளுமே இது சாத்தியமற்றது என்பத்ற்க்குப் போதும்போதும் என்கிற அளவுக்கு காரணங்களை கொண்டிருக்கின்றன..

தேசிய அளவில் பிரதேச வாதம் என்னும் மனநிலையுடன் தன் இனத்தையே பிரித்துப் பார்க்கும் இந்தச்சமூகம் பிரதேசத்துக்குள் ஊர் ரீதியாகவும் ஊருக்குள் சாதி ரீதியாகவும் குடும்பத்துக்குள் ஆண் ஆதிக்கத்தின் மூலமும் பிரிவினைகளின் வெவேறு வடிவங்களை கட்டமைத்து தனிமனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.எட்டுப்பேர் இருக்கும் சபையில் இருந்து எட்டுக்கோடி பேர் இருக்கும் சமூகம் வரைக்கும் தன்னை உயர்த்திப் பேசுவதற்க்காக மேலானவனாகக் காட்டுவதற்க்காக ஜாதி,மத,ஊர்,பிரதேச பிரிவினைகளை இந்தச்சமூகம் ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறது.வீட்டுக்குள்ளே இது ஆண் என்ற மேலாதிக்க செருக்கு மனநிலையையும் பெண்களை இயலாதவர்களாக ஆண்களுக்குக் கீழ்ப்படிவானவர்கள் என்ற கருத்தையும்,ஊருக்குள்ளே ஜாதிப் பிரிவுகளையும்,பிரதேசத்துக்குள் ஊர்ப்பிரிவினைகளையும்,தேசத்துக்குள் பிரதேசப் பிரிவினைகளையும் கற்றுக்கொடுத்து சமூகப்பிளவுகளை உருவாக்கி இன ஒற்றுமை என்ற ஒன்றை தமிழர்களுக்கு எட்டாக் கனியாக்கி வைத்திருக்கிறது இந்த சமூகக் கட்டமைப்பு.இந்த சமூகம் காலம் காலமாகக் கற்றுக்கொடுத்த பாடங்களே போராட்டம் என்று வந்த போது போராளிக் குழுக்களுக்கிடையேயும் தங்கள் மேலாதிக்கம் மட்டுமே இருக்க வேண்டும் மற்றையவைகள் தங்களுக்குக் கீழானவையாக இருக்கவேண்டும் என்ற மேலாதிக்க மனப்பான்மையை அடக்கி ஆழும் எண்ணத்தை,போட்டி மனப்பானமையை ஏற்படுத்தி அழிவை,பிளவுகளை நோக்கி அவற்றை வழிநடத்தியது.

இதேவித சமுகப் பிளவுகள்தான் தமிழகத்திலும் இன ஒற்றுமை நிகழாமல் இருக்கக் காரணமாக இருக்கின்றன..ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்து முடியும் வரை தமிழகத்தைச் சேர்ந்த திராவிடக் கட்சிகளும் சரி இதர கட்சிகளும் சரி ஈழப்போராட்டம் என்ற ஒரு விடயத்துக்காகவேனும் கடசிவரை ஒரு அணியில் நிற்கவில்லை.அழிவின் உச்சக் கட்டத்திலும் நிற்கவில்லை.ஒரு சின்ன உதாரணம்..தமிழ் நாட்டின் எத்தனை கிராமங்களில் மேல்சாதி என்று தம்மைக் கூறிக்கொள்ளும் தமிழர்கள் தன் சக தமிழனை கீழ் சாதி என்று சொல்லி தன் சொந்த இனத்திற்க்கே தண்ணீர் தராமல் தடுத்து வைத்திருக்கிறார்கள்...ஏரியாக்களைப் பிரித்தும்..சாதிக்கொரு ஏரியாவை ஒதுக்கியும்..சுவர்களைப் போட்டுப் பிரித்துத் தடுத்து உள்ளே வரவிடாமலும் தன் இனத்திற்க்குள்ளேயே நிறையத் தனி நாடுகளைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்..மலையாளி தண்ணி தரமாட்டேன் என்கிறான் என்பதற்க்கு எதிராகப் போராட ஒவ்வொரு தமிழனையும் ஒற்றுமையாக வரும்படி கூறும்போது ஒற்றுமை அங்கு எப்படி நிகழமுடியும்..?இப்படித்தான் ஈழப்போராட்டத்துக்கு ஆதாரவாகவும் அவர்களால் ஒன்றுபடமுடியவில்லை..பார்ப்பணியம் அதற்க்கு மிகப்பெரும் தடையாக இருந்தது..இங்கேதான் சமூக விடுதலை இல்லாமல் இனவிடுதலை சாத்தியமற்றதென்பது நடைமுறச் சம்பவங்களுடன் விளக்கம் பெறுகிறது.

ஒவ்வொரு தனி மனிதன் மேலும் இந்த சமூகம் கடுமையான அழுத்தங்களையும்,கட்டுப்பாடுகளையும் பிரயோகித்துக்கொண்டிருக்கிறது.இந்த அழுத்தமே சமூகம் மீதான இந்தப் பயமே இந்த இனத்தில் இருக்கும் ஒவ்வொரு தனிமனிதனையும் புரட்ச்சிகரமாகச் சிந்திக்க விடாமல் தடுத்துவைத்திருக்கின்றன.இந்த சமூகத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட சதவீதமான இளைஞ்ஞர்களே போராடப் புறப்பட்டார்கள்.அவர்களுக்குள்ளும் மிகச்சிறுவீதமானவர்களே சமூக அடக்குமுறைகளை உடைத்துக்கொண்டு புரட்ச்சிகரமான சிந்தனைகளுடன் போராடப் புறப்பட்டவர்கள்.ஏனையோர் அந்தந்த நேரங்களில் அவர்களின் வீடுகளில் நிலவிய குடும்பச்சூழல்,தனி மனித பிரச்சினைகள்,விரக்திகளில் இருந்து தப்புவதற்க்காகப் போராட்டத்தை ஒரு வழியாகத் தெரிவு செய்தவர்கள்.ஒரு மிகச் சிறு வீதத்தினரைத் தவிர மற்றையவர்களை புரட்ச்சிகரமாகச் சிந்திக்க முடியாதபடி,அப்படிச் சிந்தித்தாலும் அதை நடை முறைப் படுத்த முடியாதபடி அவர்கள் மேல் வெவேறு வடிவங்களில் இந்த சமூகம் மறைமுக அழுத்தங்களை வழங்கிக்கொண்டிருந்தது(உதாரணம் - சாதி மாற்றத்தை எதிர்க்கும் ஒருவன் சாதி குறைந்த பெண்ணைத் திருமணம் செய்தால் சமூகம் எப்படிப் பட்ட அழுத்தங்களை அந்தத் தம்பதிகளுக்கு வழங்கும் என்பது).எமது சமூகம் தனி மனித சுதந்திரத்தை,சுயமாகச் சிந்திப்பதை நடைமுறைப் படுத்தும் சுதந்திரத்தை யாருக்கும் வழங்கவில்லை.இதனால் ஒவ்வொருவரும் ஒருவித சமூக மனநோயுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.சமூகச் சூழலே ஒரு மனிதனை உருவாக்குவதில் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றன.இப்படிப் பட்ட சிந்தனைகளைக் கற்றுக்கொடுக்கும் சமூகம் எப்படிப்பட்ட மனிதர்களை உற்பத்திசெய்துகொண்டிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.இவ்வித சமூகக் கற்பிதங்களைக் கற்று வளர்ந்தவர்கள் போராடப் புறப்பட்டால் எப்படி ஆகும் என்பதைத்தான் நாங்களே சாட்ச்சியாகவும் குற்றவாளிகளாகவும் நின்று பர்த்துக்கொண்டிருக்கிறோம்..

இதற்கெல்லாம் காரணமான இந்த சமூகத்தினை,இந்த சமூகத்தில் இழை ஓடி இருக்கும் நச்சுக் குணங்களை விமர்சிக்காமல் உலகை விமர்சனம் செய்து என்னபயன்..? சிங்கள இனத்திடம் இருந்து தப்பி உயிர் வாழ நடந்த இவ்வளவு போராட்டத்துக்கு நடுவிலும் தனக்குள் அடிபட்டு,பிரிபட்டு,யாரிடம் இருந்து தப்பப் போராடியதோ அவர்களிடம் சரணடைந்து இழிவான இனமாக உலகின் முன் அடையாளமே இழந்து போய்க் கிடந்தும் தனக்குள்ளே பல சாதிகளாலும்,ஊர்களின் பெயராலும் அடையாளம் வைத்துத் தங்களுக்குள்ளேயே தங்களைப் பிரித்துக்காட்டி தனக்குத்தானே பெருமைப் பட்டுக்கொள்ளும் இந்தக் குறுட்டுச் சைக்கோ இனத்தை விமர்சிக்காமல் யாரை விமர்சிக்க...? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியமும்,பிரதேச வாதமும்தான் தமிழின உணர்வின் முதல் எதிரி. தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடையாது என்ற நிலை இருக்கும் போது தமிழன் என்ற ஒற்றுமையுணர்வு,ஒரு மையச் சிந்தனை எப்படி தமிழனது ஆழ்மனதில் உருவாகும்.தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், தாமும் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண்டும்.அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும்.வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களையும் அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை.அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் சாதிய ஆளும் வர்க்க மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சிந்தனை மாற்றம்,பிற்போக்குத் தனங்களை உடைத்தெறியும் துணிவு இவ்வளவு விலைகொடுத்துப் போராடிய மூன்று தசாப்தங்களுக்கும் மேலாய் நீடித்த போராட்டத்தின் பின்னாவது இந்த இனத்தில் ஏற்பட்டிருக்கவேண்டும்..ஆனால் ஈழத்தின் ஒவ்வொரு கிராமத்திலும்,நகரத்திலும் பிற்போக்குத்தனங்களும் சாதியமும் இப்பொழுதெல்லாம் முன்னரை விட இன்னமும் வேகமாகத் தலை விரித்தாடத்தொடங்கியிருக்கின்றன...தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம்,பிரதேச மற்றும் ஊர் வெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழ் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாமல் விடுதலிப் புலிகளையோ இல்லை எந்த ஒரு அமைப்பையோ விமர்சித்துப் பயன் இல்லை..ஏனெனில் அவைகளும் இந்த இனத்தின் மனங்களில் சாதியைப் போல அவர்கள் பெருமை பேசும் ஒன்றாக ஆகிவிட்டது..இது ஒரு மன நோய்...

அநேகமான ஈழத்து எழுத்தாளர்கள் இந்த சமூகப் புண்களைப் பற்றி வெளிப்படையாக எழுதவோ விமர்சிக்கவோ தாயாரில்லாதா பயந்தாங்கொள்ளிகளாக,இப்படி ஒன்று இப்பொழுது இல்லை என்பதை நிரூபிப்பதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள்..போராளிகளின் காலத்தில் ஒன்றுமே இலாததுபோல் வெளியே அமைதியாக இருந்தாலும் உள்ளே இந்தச் சமூகப்புண்கள் அவிந்து குமைந்து கொண்டிருந்தன..போராளிக்குழுக்கள் ஆரம்பகாலங்களில் இதய சுத்தியுடன் போராடப் புறப்பட்டாலும் அதில் இணைந்தவர்கள் இந்த சமூகத்தால் தயார்ப் படுத்தி அனுப்பபப் பட்டவர்களே..இந்தவிதமான மன நோயுடன் இருந்தவர்களால்தான் கொஞ்சம் கூடத்தாக்குப் பிடிக்க முடியாமல் போராட்டத்தின் முளையிலேயே குத்து வெட்டுடன் பிரிவினைகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது..மாற்றங்கள் இந்த இனத்தின் அடிப்படை மனநிலையில் ஒருபோதும் உருவாகப் போவதில்லை..அது மிகவும் ஒரு பின் தங்கிய வர்க்க சமூக அமைப்பை தனது அடிப்படை இருப்பாக வனைந்து வைத்திருக்கிறது..எப்படி இஸ்லாம் என்னும் மதவாதத்தில் இருந்து ஒரு போதும் முஸ்லீம்களால் மீண்டு வரமுடியாதோ அப்படியே இந்த இனத்தினாலும் அது போர்த்தியிருக்கும் ஜாதி என்னும் போலி பிம்பத்தை உடைத்துக் கொண்டு வெளியே வர முடியாது..அந்த போலி விம்பம் உடையாத வரைக்கும் தமிழ் இனம் என்ற ஒற்றை உணர்வு ஒருபோதும் இதயத்தின் ஆழத்தில் இருந்து வரவே வராது...வெறும் வார்த்தை ஜாலங்களிலேயே தமிழ்த்தேசியம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்...நடைமுறையில் ஊர்ப் பற்றும் ஜாதிஉணர்வுமே இன உணர்வை மேவித் தமிழர்களின் உடலில் ஓடி இன்னும் இன்னும் பின் தங்க வைத்து சமூகப்பிளவுகளையும் அதைத் தொடர்ந்து இன அழிவையும் நோக்கி அவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும்...இது தமிழகத் தமிழனுக்கும் நிகழும்...நிகழ்ந்து கொண்டிருக்கிறது..

இப்படியான எமக்குள்ளே உயிர்வாழும் சமூகப் பிளவுகளே போராட்டத்தின் மிகமிக ஆரம்பகாலங்களில் போராட்டத்தின் தோல்விக்குரிய அத்திவாரங்களைப் பலமாகப் போட்டுவைத்தன.இவைதான் புலிகளினது மட்டுமல்ல தமிழர்களது எல்லாப் போராட்டமும் தோற்றுப் போனமைக்கான காரணங்களுக்கெல்லாம் தாய்க் காரணங்களாகப் புதைந்து போய் வெளித்தெரியாமல் கிடக்கின்றன..ஆனால் துரதிஸ்ட வசமாகத் தமிழ்த் தேசியம் பேசும் யாரும் இவை பற்றி ஒரு போதும் பேசத்தயாரில்லை...இவை சமூகத்தில் நிலவவில்லை என்பதை சாதிப்பதிலேயே அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்..இதேவித இன ஒற்றுமையற்ற சமூகவேறுபாடுகளால் நமது சமூகம் நிறைந்திருக்கும் நிலையில் இந்தவித சமூக நோய்களுடன் இப்படியே இன்னொரு போராட்டத்தை ஆரம்பித்தால் அங்கேயும் முன்னர் எமக்குள் நிகழ்ந்த பிரிவுகள்,பிடுங்குப்பாடுகள்,குழுமோதல்கள் முளையிலேயே நிகழ்ந்து மீண்டும் மீண்டும் போராட்டத்தின் பெயரால் எங்களுக்குள்ளேயே மோதி அழிந்து கொண்டிருப்போம்.இறுதியில் இந்த இனம் இருந்த அடையாளமே இன்றி முற்றாக அழிந்து போய்விடுவோம்...

பெற்ற தோல்விக்கான காரணிகளாக புலிகளையோ,போராட்டக் குழுக்களையோ அல்லது உலகையோ வெறுமனே ஒரு வரியில் குற்றம் என்று சொல்ல முடியாது மாறாக குற்றத்திற்கான உளவியல் பின்னணியில் ஒட்டுமொத்த சமூகமே குற்றவாளியாக இருக்கின்றது. திருத்தம் உரிய இடத்தில் அவசியம். ஆரோக்கியமான ஒரு சமூகக் கட்டமைப்பே அடிப்படையில் போராடுவதற்கான தகுதியை பெறும். அதை நோக்கி அடுத்த சந்ததியை வாளர்க்க முற்படின் சில பலன்கள் அவர்கள் காலத்தில் ஏற்படும். தற்போதுள்ள சமூகத்தளத்தில் இனவிடுதலைக்கான போராட்டம் என்பது இனத்தை துரிதமாக அழிப்பதற்கான போராட்டமாகவே இருக்கும்..இந்த சமூக விலங்குகள் உடைபடாமல் ஒரு வெற்றிகரமான ஒன்றுபட்ட போராட்டத்தை இந்த இனத்தால் ஒரு போதும் நிகழ்த்த முடியாது....

Wednesday, 15 February 2012

நான் தொலைத்து விட்டவைகளின் நினைவுகளில் வாழும் மனிதன்...

சிறுவயதுகளில்
வாழ்க்கையின்
வழிகளில்
காலம் ஒரு
கவிதையாக
வழிந்தோடிக்கொண்டிருந்தது

கனவில் தோன்றும்
கவிதைவரிகளைப்போல
வாழ்தலின்
இனிமைகளைமட்டுமே
கண்களைத்திறந்தபடி
ரசித்துத் திரிந்தேன்

உடலின் ஒவ்வொரு
நுண்ணிய
அணுக்களிலும் புகுந்து
இயற்க்கை
நான் என்னும்
ஆன்மாவை
வனைந்து கொண்டிருக்க
காலமடியில்
இளமை
வழிந்தோடிக்கொண்டிருந்தது..

அணல் எறிக்கும்
புழுதி வீதிகளில்
உலாவித்திரியும்
என் பாதங்களை
பூமித்தாய்
வாஞ்சையுடன்
நீவிக் கொடுப்பாள்
அப்பொழுதெல்லாம்
பூமிக்கு நான்
பாரமாக இருப்பதாக
உணர்ந்ததில்லை...

அம்மாதரும் முத்தங்களை
வாங்கியவாறே
எதற்க்கிந்த வாழ்தலென்ற
புரிதல் இல்லாவிட்டாலும்
நிறைவாக
அறிதல் குறித்த தீராப்பசியுடன்
நான் வளர்ந்து கொண்டிருந்தேன்..

என் பால்யகாலங்கள்
மெதுமெதுவாக
ஒரு கவிதையாக
வளர்ந்து கொண்டிருந்தன..
எப்பொழுதுமே
கடைசி வரியை
எழுத விரும்பாத
அந்தக் கவிதைக்கு
காலம் எப்பொழுதோ
முற்றுப்புள்ளியை
வைத்துவிட்டது என்பதை
என் கன்னத்தில் அரும்பிய
மீசைகள்தான் நினைவுபடுத்தின..

முகத்தில் அரும்பியிருக்கும்
மீசை முடிகளைத்
தடவிவிட்டவாறே
திரும்பிப்பார்க்கிறேன்..
இறந்த காலங்கள்
நினைவுகளின்
ஏதோ ஒரு மூலையின்
நிறுத்தத்தில் இருந்தபடி
கண்சிமிட்டிக் கொண்டிருக்கின்றன...

இழந்துவிட்டவைகளை
மீட்டிப்பார்த்து
இதயம்
வலியுடன் கதறினாலும்
இரக்கமே
இல்லாதவனைப்போலக்
காலம் என்னை
இன்னமும் வேகமாக
இழுத்துக்கொண்டுபோகிறது

உதிர்ந்து விழுந்த
உலர்ந்த
இதழ்களைப்போல
வாழ்க்கை
இப்பொழுதெல்லாம்
வறண்ட நிலத்தில்க்
கிடைத்த
என் சிறுவயதுப்
பசுமைகளைத்
தொலைத்து விட்டுக்
குளிர் நாட்டிலும்
வெறுமையாகக் கிடக்கிறது

என் இளயதுகளை
இழந்து விட்டு
சுதந்திரமாகச் சிறகடித்த
ஏதோ ஒரு பறவையின்
சிறகுகளில் இருந்து
தவறி விழுந்த
இறகாகத்
தனிமையை உணர்கிறேன்..

காலம் என் தோழ்களில்
வாழ்க்கைச் சிலுவையை
இறக்கி வைத்திருக்கிறது
இப்பொழுதெல்லாம்
வலிகளின் அழுத்தங்களில்
தலை நசுங்கிப்போகிறது
எனதான்மா..

வாழ்க்கைப் போராட்டங்களே
இப்பொழுது
இருத்தலைத்
தீர்மானிப்பவையாக
மாறிப்போயிருக்கின்றன
வெற்றிகளுக்கும்
தோல்விகளுக்கும்
இடையில்
நிம்மதியைத்
தொலைத்துவிட்டு
விடாது ஓடிக்கொண்டிருக்க
வேண்டியதாகிவிட்டிருக்கிறது..

ஆயினும்
எல்லாவற்றையும் மீறி
அடிக்கடி மனம்
வெகு இயல்பாய்
என் பால்யகாலங்களை
நோக்கிப் பறந்து கொண்டேயிருக்கிறது..

என் ஊரின்
மழைப்பாடல்களும்
மெல்லிய அதிகாலையின்
குயில்ச் சங்கீதங்களும்
செவிக்குள் இன்னமும்
ரீங்காரமிட்டுக்கொண்டேயிருக்கின்றன..

தாலாட்ட யாருமற்ற
பின்னிரவுகளில்
என் அம்மாதந்த
முத்தத்தின் ஈரங்கள்
கனவுகளில் பிசுபிசுக்கின்றன..

நான் பிடித்துவிட்ட
பட்டாம்பூச்சிகள்
இன்னமும்
சிறகடித்துக் கொண்டிருக்கின்றன..
என் நினைவுகளின்
எச்சங்களில்

காலத்தை ஏய்த்துவிட்டு
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
நினைவுகளில்
இன்னமும் குழந்தையாக...

Friday, 10 February 2012

அமைதிப் பேய்கள்....

ஆறுமுகத்தார் வலுவேகமாகச் சந்தையால வந்துகொண்டிருந்தார்.ஆளுக்கு மூச்சிரைத்துக்கொண்டிருந்தது.சைக்கிளின்ர வலதுகால்ப் பெடல்க் கட்டையின்ர மிதியிலை இருந்த இறப்பர்க் கட்டையிலை ஒண்டு எங்கையோ கழண்டு விழுந்துபோய்விட ஒரு கட்டையும் நடுவில இருந்த அச்சுக் கம்பியிலும்தான் இவ்வளவு நாளும் நிண்டுகொண்டிருந்தது மிதி...போன மாசம் மற்ற இறப்பக் கட்டையும் கழண்டுபோய்விட இப்ப உழண்டியாய் இருந்த நடுக்கம்பி மட்டும்தான் மிதியிலை மிச்சமாக இருந்தது...போள்சும் தேஞ்சு கிறிஸும் இல்லாமல்க் காஞ்சுபோய்க் கிடந்த அந்தச் சைக்கிளை மிதி இருக்கும்போது ஓடுறதெண்டாலே சந்தைக்குப்போகிற அரை வழியிலேயே சாப்பிட்டது செமிச்சுப்போய் திரும்பப் பசிக்கும்...இப்ப மிதி கழண்டு விழுந்துபோய்விட கப்பிபோல வழுக்கிக்கொண்டிருந்த அச்சிலை மிதிச்சுத்தான் சைக்கிளை ஓடவேணும்..என்ன களைகளைக்கும் எண்டு சொல்லத்தேவையில்லை...இதிலை ஆறுமுகத்தார் அம்புலன்ஸ்மாதிரி அவசரமாக உழக்கு உழக்கெண்டு சைக்கிளை உழக்கி வீட்டைநோக்கிப் பறந்துகொண்டிருந்தார்...செக்கிலை இருந்து எண்ணெய் வடியிறமாதிரி ஆறுமுகத்தாருக்கு மேலாலை வேர்வை ஊத்திக்கொண்டிருந்தது...

கேற்றைத் திறந்து வீட்டுவளவுக்கை உள்ளட்டதும் "எடியே சரசு" எண்டு ஆறுமுகத்தார் வேகமாகக் குரலெடுத்துக் கூப்பிட முயற்ச்சிக்கிறார்..ஆனால் சைக்கிளோடி வந்த களைப்பிலை எடியே எண்டது முழுசா வாய்க்க வருகுது ஆறுமுகத்தாருக்கு ஆனால் சரசு எண்டது முழுசா வருகுதில்லை...முழுங்குப்படுகுது...எங்க துலைஞ்சிட்டாள் இவள்...மனதிற்க்கை திட்டினபடி சைக்கிளை முற்றத்திலை நிண்ட பிலா மரத்தில சாத்திப்போட்டு வேகமாக வீட்டுக்குள்ள நுழைகிறார்...

முருக்கங்காய்க் கறியை அடுப்பில வைச்சுக் கிண்டிக்கொண்டிருந்த சரசுவுக்கு அடுப்பு வெக்கையிலையும்,புகையிலையும் கண்ணுமடைச்சுக் காதுமடைச்சுப் போயிருந்தது..ஆறுமுகத்தார் மட்டுமில்லை அந்த நேரம் வேற யார் கூப்பிட்டாலும் சரசுவின்ரை காதிலை விழப்போறதில்லை...ஆறுமுகத்தாருக்கு முருக்கங்காய்க் கறி நல்ல தடிப்பா இருக்கவேணும்..தண்ணியாய் இருந்தா இரவு தண்ணியைப் போட்டிட்டு வந்து வீட்டிலை சிவதாண்டவம் ஆடும் மனுசன்.."இந்த அடுப்போடை நான் படுகிற அவஸ்த்தைக்கு அவருக்கு வறட்டி வைக்கவேணுமோ கறி" சரசுவுக்கு கடுப்பாக இருந்தது...ஆனால் அடுத்த நிமிசமே ஆறுமுகத்தார் மேல் கழிவிரக்கமாகவும் இருந்தது..பாவம் என்ர மனுசன்...இவளவு காலமும் எங்கடை இந்த உடைஞ்சுபோன வாழ்க்கை வண்டியை அந்தமனிசன்தான் ஒருமாதிரி இழுத்துக்கொண்டு போகுது...இவ்வளவு கஸ்ரத்தையும் அந்தாள்த்தான் தனியச் சுமக்குது...மனதுக்குள் நினைத்துக்கொண்ட சரசுவுக்கு ஆறுமுகத்தார் மேல் அளவற்ற அன்பு பொங்கியது...முருக்கங்காய்க்கு இன்னும் கொஞ்சம் தூள்போட்டுக் கறி உறைப்பாக இருக்கும்படி பார்த்துக்கொண்டாள்..ஆறுமுகத்தாருக்கு உறைப்பெண்டால் நல்லாய்ப் பிடிக்கும்..ஆளின்ர வெறிவாய்க்கு கறி நல்ல உறைப்பாக இருந்தால் கண்ணாலையும் மூக்காலையும் வடியவடியச் சந்தோசமாகச் சாப்பிடுவார்...

ஆறுமுகத்தார் வேர்த்துக்களைச்சுப் பதற்றத்தோட உள்ள வந்ததைப் பார்த்த சரசுக்கு விளங்கீட்டுது ஏதோ வில்லங்கம் எண்டு."என்னப்பா..? என்னாச்சு..? ஏன் இப்பிடி அரக்கப்பரக்க ஓடிவாறியள்...?"கேட்டபடி சரசு கறிகிண்டிய அகப்பையைக் கையிலை பிடிச்சுக்கொண்டு அடிக்கிறமாதிரி ஆறுமுகத்தாரை நோக்கி வந்து கொண்டிருந்தாள்."எடி விசரி உனக்கு நடந்தது தெரியாதே..? உப்பிடியே அடுப்புக்கை முட்டையிட்டுக்கொண்டிருந்தியெண்டா நாட்டு வளப்பு எங்க தெரியப்போகுது..."ஆறுமுகத்தார் வந்த களைப்பிலை பொரிஞ்சுதள்ளினார்.ஏற்கனவே புகையிலையும் அடுப்பு வெக்கையிலையும் அவிஞ்சுபோயிருந்த சரசுவுக்கு ஆறுமுகத்தாரின் ஏளனம் கடுங்கோபத்தைக் கொடுத்தது..மற்றப் பொம்பிளையல் மாதிரி நாட்டு வளப்பம் நான் பாக்கப் போனன் எண்டா வீடு நாறிப்போகும்...வீட்டு வேளையளை ஆர் செய்வாங்கள்..?மூண்டு நேரமும் உங்களுக்குத்தான அவிச்சுப்போட அடுப்புக்கை கிடக்கிறன்...இப்ப சரசிடமிருந்து சரமாரியாக ஏவுகணைகள் ஆறுமுகத்தாரை நோக்கிப் பறந்துகொண்டிருந்தன.

"தொடங்கீட்டாள்...இவள் ஒருத்தியோட கொஞ்சம் சவுண்டை உயத்தினாலும் சண்டைக்கு வாறாள்...வரவர நான் ஆம்பிளை எண்ட நினைப்பே அவளுக்கு மறந்து போச்சு...இவளுக்கு காதைப் பொத்தி ரண்டு போட்டு நான் ஆம்பிளை எண்டதை ஞாபகப்படுத்தவேணும்.."ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்துக்கொண்டார்..வழமையாக சரசுடன் நடக்கும் ஒவ்வொரு சண்டையிலும் ஆறுமுகத்தார் இப்படித்தான் மனதிற்க்குள் நினைப்பதுண்டு..ஆனால் ஒருபோதும் நடைமுறைக்கு வந்ததில்லை..சரிசரி விடடி...இப்ப என்னத்துக்கு கத்துறாய்...? என்னை விசயத்தை சொல்லவிடு..உப்பிடிக் கத்தினியெண்டால் நான் சொல்லவந்ததையும் மறந்து போவன்..சரசுவை ஒருமாதிரி சமாளிச்சுப் போட்டு ஆறுமுகத்தார் விசயத்தை சொல்லத்தொடங்கினார்..

ரவுனுக்குப் பின்னால பொதுக்கிறவுண்டுப் பக்கமா நிண்ட இந்தியன் ஆமியின்ர கண்ணில றோட்டைக் கடந்துகொண்டிருந்த பெடியங்கள் எத்துப்பட சண்டை தொடங்கீட்டுதடி...நாலைஞ்சு ஆமிக்காரர் சரிபோலக் கிடக்கு...பெடியங்களின்ர பக்கச் சேதம் தெரியேல்ல...சுட்டுக்கொண்டு பெடியள் எங்கடை ஊர்ருக்கதானாம் இறங்கினவங்கள்...ஆமி வடக்குப் பக்கத்தாலை சனத்தைச் சாய்ச்சுக்கொண்டு வாறான்...ரவுண்டப்பு போலக்கிடக்கு..நான் உள்ளொழுங்கையளுக்காலை சைக்கிலை விட்டு ஆமியின்ர கண்ணில தட்டுப்படாம ஓடியெல்லே வந்தனான்..ஆறுமுகத்தார் சொல்லி முடிக்க கீழை விழுற காற்சட்டையை ஒரு கையாலை பிடிச்சுக்கொண்டு மற்றக்கையாலை பனையோலைக் காத்தாடியையும் பிடிச்சுக்கொண்டு ஆறுமுகத்தாற்ரை சின்னவன் வேகமாக வந்து பிறேக் அடிச்சு ஆறுமுகத்தாற்ரையும் சரசின்ரையும் மூஞ்சையை மாறிமாறிப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்...

ஆறுமுகத்தாருக்கு சின்னவன்,பெரியவன்,மூத்தவன்,கடைசி,நடுவிலான் எல்லாம் அவன் தான்..ஏனெண்டால் ஆறுமுகத்தாருக்கு அவன் தான் ஒரே ஒரு பெடியன்...வயசு பத்து...என்னடா முழுசுறாய்...?நான் சந்தைக்குப்போக நேற்றுப்போட்ட என்ர சேட்டுப் பொக்கற்றுக்கை காசேதும் களவெடுத்துப் போட்டியோ..? உண்மையைச் சொல்லிப்போடு...ஆறுமுகத்தார் பெடியனை அதட்டுகிறார்...உன்ர பொக்கற்றுக்க ஒரு சல்லிக்காசு இருக்குமே எண்டமாதிரி ஆறுமுகத்தாரை ஒரு நக்கல்ப் பார்வை பார்த்துவிட்டு "இயக்க அண்ணையாக்கள் எங்கட கிணத்தடி வேலிக்கை கொஞ்ச உடுப்பும் ரண்டுமூண்டு குண்டையும் செருகி மறைச்சுப்போட்டு சுந்தரத்தின்ர பத்தைக்காணிப்பக்கமா ஓடிப்போகினம் அம்மா"எண்டு பெரிய குண்டொன்றை ஆறுமுகத்தாற்ரை தலையிலை தூக்கிப் போட்டான் சின்னவன்..ஆறுமுகத்தாருக்கு அஞ்சும்கெட்டு அறிவும்கெட்டு தலைசுத்துற மாதிரி இருக்கு...துலைவார் உவ்வளவு வீடுவளும் இருக்க என்ர வீட்டு வேலியே கிடைச்சுது குண்டுவைக்க...பயத்திலை என்ன செய்யிறதெண்டு தெரியாமல் மனதிற்க்குள் திட்டிக்கொண்டிருந்தார் ஆறுமுகத்தார்...இப்ப ஆறுமுகத்தாருக்கு யமன் கறுப்பு வெள்ளையிலை மங்கலாகக் காட்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தான்...

ஆறுமுகத்தாருக்கு கையும் வேலை செய்யுதில்லைக் காலும் வேலை செய்யுதில்லை...கைகால் வேலை செய்யாட்டிப் பரவாயில்லை...பயத்திலை மூளையும் வேலை செய்யுதில்லை...மண்டை எல்லாம் எம்ப்ரியாக் கிடக்கிறமாதிரி ஒரு பீலிங்...ஆறுமுகத்தார் குண்டு செருகியிருக்கிற வேலியைப்போய் எட்டிப் பாக்கிறதும் குசினிக்குத் திரும்பி வாறதுமாய் நடந்து திரிகிறார்...பெடியனுக்குத் தகப்பனைப் பார்க்கச் சிரிப்பாய்க் கிடக்கு...அம்மா அப்பாவுக்கு ஏதோ ஆக்கிப்போட்டுது போலக்கிடக்கெண்டு தாயின்ர காதுக்கை குசுகுசுக்கிறான்...ஆறுமுகத்தாருக்கு வாற விசருக்கை பெடியனும் தாயும் நிலமை புரியாமல் பகிடிவிட்டுக் கொண்டு இருக்கிறதைப் பார்க்க சரசின்ர மூஞ்சையை பக்கத்திலை கிடக்கிற சருவச்சட்டியாலை அடிச்சு நெளிக்கவேணும் போலக்கிடக்கு...ஆனால் ஆறுமுகத்தாரால் வீட்டில் கோபப்பட மட்டும்தான் முடியும்...உணர்ச்சி வசப்பட்டு சரசின் மேல் கைவைத்து விட்டால் அப்புறம் விளைவு பலமாதங்களாக வீட்டில் நீடிக்கும் என்பது ஆறுமுகத்தாருக்கு நன்கு தெரியும்...அதனால் ஆறுமுகத்தார் தனது கோபத்தை மேய்ந்து கொண்டிருக்கும் கோழியின்மேல் அல்லது எதுவும் புரியாமல் நடக்கிற சண்டையைப் பார்த்து வாலாட்டிக்கொண்டிருக்கும் நாயின்மேல்க் காட்டுவதுண்டு...இந்தமுறை அப்படி வாயில்லாத ஜீவன் எதுவும் கால்கைக்கு எட்டும் தூரத்தில் இல்லாத காரணத்தினால் வந்த கோபத்தை தனக்குள்ளே அடக்கியபடி அடுத்தகட்டத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தார்...

நாய்கள் குரைக்கிற சத்தம் கிட்டவருகுது...ஆனபடியால் ஆமியும் சனத்தைச் சாய்ச்சுக்கொண்டு கிட்டக்கிட்ட வந்து கொண்டிருக்கவேணும்..எடியேய் உப்பிடியே துலாக்கால் மாதிரி நெட்டுக்குத்தி நிக்காமல் தாலிக்கொடி,சங்கிலி,காப்பு எல்லாத்தையும் கழட்டி ஒரு ரின்னிலைபோட்டு மூடித்தாடி எங்கையாவது தாட்டுவைப்பம்...உவங்கள் ரவுண்டப்புக்கு எங்களை அனுப்பிப்போட்டு வீட்டிலை கிடக்கிற எல்லாத்தையும் சுருட்டிக்கொண்டு போயிடுவாங்கள்...சரசு ஆறுமுகத்தாரின் ஆணையைக் கேட்டதும் மின்னலாகச் செயற்ப்பட்டு போனமாதம் முடிஞ்சுபோன நெஸ்ரமோல்ற் ரின்னுக்கை எல்லா நகைகளையும் கழட்டிப்போட்டுவிட்டு பெடியன்ர இடுப்பிலை கட்டியிருந்த அரைஞ்ஞான் கொடியையும் அவிழ்க்கப்போக பெடியன் அவிழ்க்க விடமாட்டன் எண்டு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான்..."சனியன் எனக்கெண்டு வில்லனா வந்து வாய்ச்சிருக்கு...நேரங்காலம் தெரியாமல் திணவெடுத்துக்கொண்டு..."ஆறுமுகத்தார் எரிஞ்சு விழுந்தபடி முற்றத்திலை பாகற்க்கொடிக்கு முட்டுக்கொடுத்திருந்த பெரிய அலம்பல்தடியை எடுத்துக்கொண்டு மகனை நோக்கி ஓடிவர சரசு நிமிர்ந்து ஆறுமுகத்தாரை ஒரு பார்வை பார்த்ததும் நீயும் உன்ர பெடியும் எக்கேடாவது கெட்டுப்போங்கோ எனக்கென்ன எண்டபடி பெடியனுக்கு அடிக்கமுடியாமல் போய்விட்டதே என்ற அவமானத்துடன் அலம்பல்த்தடியை தூர எறிந்துவிட்டு பெடியனின் நக்கல்ப் பார்வையைச் சகிக்க முடியாமல் ஆமி வாறானோ பார்ப்பம் எண்டு படலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்....

அதுசரி எங்கையப்பா சந்தையிலை முருக்கங்காய் வித்தகாசு..? ஒருமாதிரி மகனின் அரைஞ்ஞான் கொடியை அவிழ்த்து ரின்னுக்கை போட்டபடி ஆறுமுகத்தாரை நோக்கி அடுத்த ஏவுகணையை வீசினாள் சரசு...இந்தப் பரபரப்புக்கையும் உவள் உதை மறக்கேல்லை..எந்த நேரத்திலை இவளைத்தாய் பெத்தாளோ...? மனதிற்க்குள் திட்டியபடி"எடியேய் ஆமி ரவுண்டப் பண்ணிக்கொண்டு வாறான் உனக்கு உதே இப்ப அவசரம்...முதலில அவங்களிட்டை இருந்து நாங்கள் உசிரோடை தப்பவேணுமெண்டு முருகனுக்கு நேர்த்திவை...அதைவிட்டிட்டு முருக்கங்காய் அதுஇதெண்டுகொண்டு..விசரி.."ஆறுமுகத்தார் கதையாலை மேவிப்பாய்ஞ்சு சரசை அடக்கப் பார்க்கிறார்...

ஆனால் உந்த மாய்மாலங்களெல்லாம் சரசுவிடம் எடுபடாது...எடுபடாதெண்டு ஆறுமுகத்தாருக்கும் வடிவாய்த்தெரியும்...எண்டாலும் ஆமிப்பயத்திலை மறந்துபோய் விடுவாளெண்டு ஆறுமுகத்தாரிற்க்கு அடிமனதில் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது...அந்த நம்பிக்கையிலைதான் உந்தப் பரபரப்பிலும் முருக்கங்காய் வித்த காசிலை முக்கால்வாசிக்கு வாறவளியிலை நிண்டநிலையிலை தவறணையிலை சில போத்தல்களை வாங்கி மளமளவெண்டு வயிற்றுக்குள் இறக்கிவிட்டு வந்திருந்தார்...ஆறுமுகத்தார் முழிக்கிற முழியிலையும் அவசரப்பட்டு கதையை மாத்திற விதத்திலையும் சரசுவுக்கு விளங்கீட்டுது காத்து கள்ளுக்கடைப் பக்கம் அடிச்சிருக்கெண்டு...உந்த ஆமிப்பிரச்சினைக்கையும் கள்ளின்ர கிளுகிளுப்பு கேக்கிற உங்களையெல்லாம் எந்தச் சீர்திருத்தப் பள்ளியிலையும் விட்டுத்திருத்தேலா..அங்கை இருக்கிறவங்களையும் குடிகாறர் ஆக்கிப்போடுவீங்கள்...சரசு திட்டித்திட்டி வீட்டுக்கோடிக்கை நகைப்பேணியை மண்ணைவெட்டித் தாட்டுக்கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரத்திலை ஆமி ஆறுமுகத்தார் வீட்டுப்பக்கம் வந்து சேர்ந்துவிட்டிருந்தான்..எல்லோரையும் சாய்ச்சுக்கொண்டுபோய் ஊருக்கு வெளியிலை வயல்க்கரையிலை இருந்த பிள்ளையார் கோவிலுக்கை இருத்திவிட்டிருந்தான்...மழைக்குக்கூட கோயில்ப்பக்கம் ஒதுங்காத சனமும் சாய்பட்டு வந்திருந்தது...அரைகுறைத் தமிழ் தெரிஞ்ச கூர்க்கா ஆமிக்காறன் ஒருத்தன் கையிலை கத்தியொண்டை வைச்சுக்கொண்டு புலி உங்கடை ஊருக்கைதான் ஓடிவந்தது...உங்களில யாரோதான் ஒளிச்சு வச்சிருக்கவேணும்...இல்லையெண்டாப் புலி ஓடினதையாவது பாத்திருக்க வேணும்...எங்கபோச்சுதெண்ணு உண்மையைச் சொன்னா உங்களை உசிரோடை விடுவன்..இல்லையெண்டா..மிச்சம் சொல்லாமல் கத்தியை எடுத்து தன்ர கழுத்தடியிலை வைச்சு அக்சனிலை செய்து காட்டிக்கொண்டிருந்தான்...

அவன் சொல்லி முடிக்க கோயிலுக்கை குந்தியிருந்த கூட்டத்துக்கிடையிலை நந்தியிருந்த பக்கமாக ஏதோ சலசலப்பு...அந்தப்பக்கமாய் பெண்களின் லைனில் இருந்த செல்லம்மாக்கிழவிக்கு பயத்திலை கோயிலுக்குள்ளையே யூரின் போய்விட்டிருந்தது...செல்லமாக்கிழவிக்கு வயது எண்பது...கூர்க்காவையும் கத்தியையும் பர்த்ததும் செல்லம்மாக்கிழவிக்கு உடம்பின்ர கொன்றோல் கையைவிட்டுப் போயிருந்தது...அவளது யூரின் நந்தியைக் குளிப்பாட்டும் தண்ணீர் வழிந்தோடுவதற்க்கா
நிலத்தில் கட்டியிருந்த பீலி(வாய்க்கால்)க்குள் கலந்து கடவுளின் தீர்த்தத்தில் சங்கமமாகிக்கொண்டிருந்தது...சிறுநீர் நெடி கோயிலுக்குள் வீசிக்கொண்டிருந்த ஊதுபத்தி,சந்தனம் மற்றும் பன்னீர் வாசங்களையும் ஓவர்ரேக் பண்ணிக்கொண்டிருந்தது...

தாயின்ர மடியிலை இருந்து கூர்க்காவையே வைச்சகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த சரசின்ர மகன் திடீரென்று யாரும் எதிர்பார்க்காமல் "சேர் எனக்குத்தெரியும்,சேர் எனக்குத்தெரியும்" என்று கத்ததொடங்கியிருந்தான்...ஆம்பிளைகளின்ர வரிசையிலை இருந்த ஆறுமுகத்தார் மகன் கத்திறதைப் பார்த்ததும் தங்கடை கதை இண்டைக்கு கோயிலடியிலை முடிஞ்சுதெண்டு முடிவெடுத்திட்டார்...உனக்கொரு கண்டமிருக்கெண்டு சொன்ன சாத்திரி அது உன்ர மகனின்ர வடிவிலை இருக்கெண்டதைச் சொல்லவே இல்லையே...ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்தபடி தான் இருந்த இடத்தில் இருந்து எழும்பி பொம்பிளைகள் இருந்த வரிசைக்குள்ள புகுந்து மகனிருந்த பக்கமா விழுந்தடிச்சு வேகமாய் ஓடத்தொடங்கியிருந்தார்...

இதற்க்கிடையில் சரசு வேகமாகச் செயற்ப்பட்டு இரண்டுதடவைக்குமேல் மகனைக் கத்தவிடாமல் அவன்ர வாயைத் தன்ர கையாலை பொத்தி காதுத்தசை பிய்ந்து விழுகிறமாதிரி பெடியனுக்கு கிள்ளிவிட்டிருந்தாள்... அவன் கத்திறதை மறந்து காது வலியில் துடித்துக்கொண்டிருந்தான்...நல்லவேளை அவன் கத்தினது கூர்க்காவின் காதில் விளவில்லை...கத்தியோடை நிண்ட கூர்க்காவுக்கு இடதுபக்கக் காது செவிடாக இருக்கவேண்டும்...ஏனெண்டால் கூர்க்கா ஒரு சைற்றாகப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான்..கூர்க்காவின் இடதுபக்கக் காதுதான் இவர்கள் பக்கமாக நோக்கிக்கொண்டிருந்தது..இல்லையெண்டால் சனத்தின்ர சத்தத்திற்க்கை பெடியன்ர சத்தம் அடங்கிப்போயிருக்கவேணும்...எது எப்படியோ ஆறுமுகத்தாரின் நல்லகாலத்திற்க்குப் பெடியன் கத்தினது அவன் காதில் விழவில்லை...ஆனால் ஆறுமுகத்தாருக்குக் கண்டம் வேறுவிதமாக வந்திருந்தது..

ஆறுமுகத்தார் தான் இருத்தியிருந்த வரிசையைக் குழப்பி பெண்கள் பக்கமாய் ஓடுவதைப் பார்த்த கூர்க்காவிற்க்கு கோபம் தலை மண்டைக்கு ஏறியிருந்தது...ஆறுமுகத்தாரை தனக்குக்கிட்ட கூப்பிட்ட கூர்க்கா சேர் எண்டு ஏதோ சொல்ல ஆறுமுகத்தார் வாயைத்திறக்க முன்னம் அடிஅடியெண்டு அடிச்சு கோவில் வெளிவீதிக்கு இழுத்துக்கொண்டு போயிருந்தான்...வெளிவீதியில் கோவில் ஜயர் நடுங்கியபடி முழங்காலில் வெயிலுக்கை நின்றுகொண்டிருந்தார்...ஜயருக்குப் பக்கத்திலை இரண்டு ஆமிக்காரர் பூவரசந்தடியுடன் ஜயரை விசாரிச்சுக்கொண்டிருந்தார்கள்..

ஜயர் தான் கும்பிடுகிற பிள்ளையார் சத்தியமாய் யாரும் ஓடினதைக் காணவில்லை என ஒப்பாரி வைச்சு அழுதுகொண்டிருந்தார்...உள்ளே மூலஸ்த்தானத்தில் பிள்ளையார் கையில் மோதகத்துடன் ஜயர் அடிவாங்கிறதைப் பார்த்துக்கொண்டு உட்காந்திருந்தார்...ஆறுமுகத்தாரை ஜயருக்குப் பக்கத்திலை இருத்திவிட்டுப் போயிருந்த கூர்க்கா ஒரு அஞ்சு நிமிசத்திலை யார் வீட்டிலோ இருந்து ஒரு பிக்கான் மண்வெட்டியுடன் வந்திருந்தான்...ஆறுமுகத்தாருக்கு ஜயரைப் புதைக்கக் குழிவெட்டுறதுதான் தண்டணை...ஆறடியிலை ஜயரை முழுசாமூடுகிறமாதிரிக் கிடங்கு வெட்டவேணும்..ஏலாதெண்டு நிமிர்ந்தால் பூவரசந்தடியாலை அடிவிழும்...

ஆறுமுகத்தார் வேர்க்கவேர்க்க கிடங்கு வெட்டிக்கொண்டிருந்தார்...அரைக்குழிதாண்ட அடித்த கள்ளெல்லாம் இறங்கிவிட்டிருந்தது...இடைக்கிடை ஜயரைக் குழிக்குள் இறக்கி அளவு பார்த்துக்கொண்டிருந்தாங்கள் ஆமிக்காறர்...இது முடிய என்னைத்தாக்க என்னைக்கொண்டே இன்னொரு குழி வெட்டச்சொல்லப்போறாங்களோ தெரியாது...ஆறுமுகத்தாருக்குப் பயத்திலையும் களைப்பிலையும் இதயம் படக்குப்படக்கென்று அடித்துக்கொண்டிருந்தது..அருகிலிருந்த ஜயர்,மனைவி பிளைகளின் பெயரைச்சொல்லிப் பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தார்..ஆறுமுகத்தாருக்கு ஜயரைப் பார்க்கப் பாவமாயிருந்தது...ஆனால் அந்த நிலைமையில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது...?

இப்ப குழி வெட்டி முடிச்சாச்சு...ஜயரை உள்ள இறக்கிவிட்டாங்கள்...தலை வெளியே தெரியவில்லை..பயத்திலை நல்ல ஆழமாத்தான் வெட்டியிருக்கிறன்போல...ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்துக்கொண்டார்...இனி மண் அள்ளிப்போட்டு ஜயரை மூடவேணும்...அதையும் ஆறுமுகத்தார்தான் செய்யவேணும்...ஆறுமுகத்தார் மண் அள்ளிப்போடத் தயாரானபோது ஜயரை வெளிவீதியில் புதைக்கிற விடயமறிந்த ஜயரின் மனைவியும் பிள்ளைகளும் கோவிலுக்குள் இருந்து ஒப்பாரிவைத்தவாறு ஓடிவந்து கோவிலடியில் நின்ற ஆமிக்கொமாண்டரின் காலில் விழுந்து ஜயரை விட்டுவிடும்படி கதறி அழுதுகொண்டிருந்தனர்...ஆமிக்கொமாண்டர் கையைக் காட்டியதும் ஜயரைக் கிடங்குக்குள் இருந்து வெளிய தூக்கி ஆமிக்கொமாண்டரிடம் கொண்டுபோனார்கள்...ஜயரைக்கொண்டுபோனதும் ஆறுமுகத்தார் "ஜயர் தப்பீட்டார்..இனி என்னைத்தான் இந்தக்குளிக்குள்ளபோட்டு மூடப்போறாங்கள்போல...இன்னொரு குழிவெட்டுற வேலை மிச்சம்.."பயத்தில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்...

ஜயரை விசாரிச்ச கொமாண்டர் இனிமேல் ஊருக்குள்ளை எல்ரிரி எங்கை வந்தாலும் நீதான் எங்களுக்கு ரெக்கி குடுக்கவேணும்...அதுவரை உந்தக்குழியை நீ மூடக்கூடாது... சொல்லாவிட்டால் உந்தக்குழிக்கைதான் உன்ர கதை முடியும்எண்டு ஜயருக்கு வார்னிங் குடுத்து அனுப்பியிருந்தான்...அதுக்குப் பிறகு ஜயருக்கு கனவிலும் நினைவிலும் அந்தக் குழியின்ர ஞாபகம்தான்...எப்ப வரப்போகிறாய் எண்டு வாயைப் பிளந்து காத்திருக்கும் மலைப்பாம்புபோல் ஜயருக்கு அந்தக்கிடங்கு ஒவ்வொரு நாளும் காட்ச்சிகொடுத்துக்கொண்டிருந்தது...அன்று மாலைவரை சாப்பாடு தண்ணியில்லாமல் சனத்தைக் கோவிலுக்குள் சுற்றிவளைத்து வைத்திருந்துவிட்டு மாலை ஜந்துமணியளவில் எல்லாரையும் அவரவர் வீட்டுக்கு கலைந்து போகும்படி ஆமி அறிவித்திருந்தான்...ஆமி போ எண்டு சொன்னபிறகும் சனம் கோவிலைவிட்டு வெளியே போகத்தயங்கிக்கொண்டிருந்தது...வெளியிலை ஊரெல்லை வரை கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் ஆமி நடமாட்டம்தான் தெரியுது...

சரசுதான் கூட்டத்திலை இருந்து முதல் ஆளா வேகமாய் வெளிக்கிட்டது...சரசுக்கு மண்டைமுழுக்க தாட்டுவைத்த நகைப்பேணியின் ஞாபகமே ஓடிக்கொண்டிருந்தது...அதுதான் சரசு முதல் ஆளாய் விறுவிறெண்டு வீடுநோக்கி கிளம்பி விட்டிருந்தாள்..."உவளுக்கென்ன விசராக்கிப்போட்டுதே...சனத்தோட சேர்ந்து வெளிக்கிடுவமெண்டில்லை...தனிச்சுப் போய்த் தனிப்பிணமாய்க் கட்டையிலை போகப்போறன் எண்டு அடம்பிடிக்கிறாள்..."ஆறுமுகத்தார் பெடியனையும் இழுத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் சரசுவுக்குப் பின்னாலை திட்டித்திட்டிப் போய்க்கொண்டிருந்தார்...சனங்கள் எல்லாம் தயக்கத்தோடை ஒன்றன்பின் ஒன்றாக சரசையும் ஆறுமுகத்தாரையும் பின் தொடர்ந்து மெதுமெதுவாகப் புறப்படத்தொடங்கியிருந்தார்கள்...ஊர்ப்பக்கம் பெரும்புகைமண்டலமாகத் தெரியுது...பிளாஸ்ற்றிக் தீஞ்ச மணம்போல ஒருவித நெடி ஒண்டு காத்தில அடிச்சுக்கொண்டிருக்கு...சரசுவுக்கு ஊருக்கை ஏதோ விபரீதம் நடந்திட்டுதெண்டு விளங்கீட்டுது...

ஊருக்குள்ளை வீடுகள் எல்லாம் எரிஞ்சு கொண்டிருக்கு...ஆமிதான் சனத்தை எல்லாம் கோவிலுக்கை அனுப்பிப்போட்டு புலி பதுங்கி இருக்குமெண்டு தேடுகிற அலுப்பிலை வீடுகளுக்கெல்லாம் நெருப்பு வைச்சிருந்தான்...மாட்டுக்கொட்டிலைக் கூட விட்டுவைக்கவில்லை...சரசு தன்ரை வீட்டுக்கு முன்னாலை வந்து நிண்டதும் "துலைவார் என்ர வீட்டையும் எரிச்சுப்போட்டாங்கள்..போச்சுப் போச்சு...நாங்கள் குறுணிகுறுணியாய்ச் சேர்த்துகட்டினவீடு,சேர்த்த சாமானுகள் எல்லாம் போச்சுதெண்டு நிலத்தில விழுந்து தலையிலை அடிச்சு ஒப்பாரி வைச்சுக்கொண்டிருந்தாள்...ஆறுமுகத்தார் தான் சொன்னபடி செய்ததாலைதான் நகைபேணி தப்பினது எண்டு சொல்லி தன்ர திறமையை மனுசிக்கு முன்னாலை சொல்லிப் பெருமைப்பட ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கெண்டு அந்தச் சோகத்திலையும் கொஞ்சம் சந்தோசத்தோடை நகைப்பேணியை வெட்டி எடுத்துக்கொண்டிருந்தார்...கொஞ்சம் கொஞ்சமாக துலைவார்,நாசமறுப்பார்,குறுக்காலைபோவார் என்கிற ஒப்பாரிகள் அதிகரிச்சு எல்லாப்பக்கத்தாலையும் ஊர்முழுக்கக் கேட்டுக்கொண்டிருந்தது...ஊரை மூடிமறைச்சுக்கொண்டிருந்த புகைக்குள்ள அந்த ஏழைகளின் ஒப்பாரியும் மூடுப்பட்டு உலகின் காதுகளுக்கு எட்டாமல் போய்க்கொண்டிருந்தது...

இது நடந்து பலமாதங்களுக்குப் பிறகு....
1989ம் ஆண்டின் இறுதிக்காலங்களில் அமைந்த ஒரு அமைதியான மாலை..தோட்டத்தில் இருந்து மண்வெட்டியோட வந்துகொண்டிருந்த ஆறுமுகத்தாரின் கண்ணில் முகத்தில் கவலையோடு போய்க்கொண்டிருந்த ஜயர் தென்படுகிறார்..."ஜயா உங்களுக்கு விசயம் தெரியுமே...? உவங்கள் இந்தியன் ஆமியெல்லோ திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறாங்களாம்..."ஆறுமுகத்தார் சொல்லி முடிக்க ஜயருக்குத் இப்பதான் தான் இன்னமும் உயிரோட இருக்கிறன் எண்ட ஞாபகம் வருகுது..."உண்மையாகவே ஆறுமுகத்தார்..? அப்ப உந்த மண்வெட்டியை ஒருக்கா இரவல் தருவீரே..?உமக்குப் பின்னேரம் தாறன்..." ஆறுமுகத்தாரிடம் இருந்து மண்வெட்டியை வாங்கித் தோளில்ப் போட்டுக்கொண்டு முகத்தில் ஒருவித நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் ஆறுமுகத்தார் தனியாளா வெட்டின ஆறடிக்கிடங்கை ஜயர் தனியாளாத்தூர்க்க வெகு வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்...

Thursday, 2 February 2012

புரிந்துகொள்ளும் புரியாத மொழிகள்....

யார் சொன்னது
வழிந்தோடும் என் இளமைக்கால
நினைவுகளை மேய்ந்தபடிபோகும்
வயல்க்கரை மாடுகளின் பாசைகளைப்
புரிய முடியாதென்று...?

யார் சொன்னது
நான் தொலைத்துவிட்ட சிறுவன்
நடந்துதிரிந்த வீதிகளில்
எஞ்சியிருக்கும்
புறாக்களினதும் புலுனிகளினதும்
கவலைப் பாட்டினை
விளங்கமுடியாதென்று....?

யார் சொன்னது
வெட்டைக் காணிகளின்
சம்புப் புற்களுக்கிடையே
அங்கொன்றும் இங்கொன்றுமாகக்
குந்தியிருக்கும் தும்பிகளின்
இறக்கைகளில் இருந்துதொடங்கும்
என் பால்யகாலக் கவிதைகளைப்
படிக்க முடியாதென்று...?

அவைகளின் மொழிகள்
உனக்கெப்படித் தெரியுமென்ற
வியாக்கியானங்களை விலத்திவையுங்கள்...
அவைகளின் மொழிகளில்தான்
மீட்டிக்கொள்கிறேன்
கிழித்து வீசப்பட்டதால்
பொருளை இழந்துபோன
கவிதைபோலக்
காலம் கடந்துபோகக்
காலாவதியாகிக்கிடக்கும்
என் மழலைக்காலங்களை...

Monday, 2 January 2012

நான் அவனில்லை... (சற்று மாறுதலுக்கு... )

(நெடுகச் சீரியஸாய் வாசிச்சும் எழுதியும் அலுத்துப்போச்சு...அதுதான் சும்மா பம்பலுக்கு எழுதினது... :D)


இருட்டடி எண்டால் என்னெண்டு உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.இருட்டுக்க ஒளிச்சு நிண்டு ஆரிலை கோபமோ அவருக்கு,அடிக்கிறவன் ஆரெண்டு யோசிக்கிறதுக்கு ரைம் குடுக்காமல் அடிச்சிட்டு அடிக்கிறவன் எஸ்க்கேப் ஆகிறதுதான் இருட்டடி.இதில அடிக்கிறவன் யாரெண்டும் அடிவாங்குகிறவன் யாரெண்டும் பாத்துக்கொண்டு நிக்கிறவனுக்கு விளங்காது.ஒருதடைவை ஊரில நானும் உந்த இருட்டடியில இருந்து மயிரிழையில தப்பினனான்.அது சம்பவமல்ல...தரித்திரம்..சா இல்லை..சரித்திரம்... :D  அதைத்தான் நான் இப்ப உங்களுக்குச் சொல்லப்போகிறன்.

சம்பவம் நடந்த அண்டு நல்ல அமாவாசை இருட்டு...நானும் என்ர நண்பனும் இன்னும் கொஞ்சப் பொடியளோட கோயிலடியில இருந்து அரட்டை அடிச்சு முடிஞ்சு வெளிக்கிட நேரம் இரவு 11 ஆச்சு.இண்டைக்கு வீட்டை போனா திட்டு விழும் எங்கை இவ்வளவு நேரமும் போனனி எண்டு.இன்னும் கொஞ்ச நேரம் பிந்திப் போனா வீட்டில எல்லாரும் நித்திரை ஆகிவிடுவினம்...பூனை மாதிரி சத்தப்படாமல் உள்ளட வேண்டியதுதான்...விடிய எழும்பிப் பாக்கிறவைக்கு நான் எப்ப வந்தன் எப்பிடி வந்தன் எண்டு தெரியாது.வீட்டை போய்ச் சாப்பிட்டா சட்டிபானை தட்டுப்படுற சத்தத்தில எல்லாரும் நித்திரையாலை எழும்பிவிடுவார்கள்...பசிவேறு வயித்தைக் கிள்ளுது...ரவுனுக்க இருக்கிற கொத்துக்கடைக்குப் போவமெடா எண்டு நண்பணிடம் சொல்லிப்போட்டு நான் மோட்டார்பைக்கில ஏறி உட்க்காந்திட்டன்.நண்பண்தான் றைவிங்க்(என்ன காறா றைவிங்க் பண்ண எண்டு கேட்க்காதீர்கள்...எங்களுக்கு அந்த நேரம் கார்,பஸ்,ரெயின்,ஏறோப்பிளேன் எல்லாம் மோட்டார்பைக்தான்)ரவுன் கொத்துக்கடையில ஆளுக்கொரு கொத்துரொட்டியை முழுங்கிவிட்டு ஏப்பம் விட்டவாறு வந்துகொண்டிருக்கிறம்...நேரம் அரைச்சாமம் ஆகிவிட்டது.ஊருக்குள்ளை வந்ததும் மச்சான் கெட்லைட்டை நிப்பாட்டெடா ஆரும் பாத்திட்டு காலைமை அப்பரிட்டப் போட்டுக்குடுக்கப்போறாங்கள் எண்டு அவனை அலேட்டாக்கினதும் லைற்றை நிப்பாட்டிட்டு சிக்னல் லைற்றின்ர வெளிச்சத்தக் கொண்டு ஒரு குத்துமதிப்பில அவன் ஓடிக்கொண்டிருக்கிறான்...

முறிகண்டித்துரை வீட்டை நெருங்குகிறம்..."மவனே நீ இண்டைக்குச் செத்தாயடா...வே** மவனே என்ர மகள் கேக்குதாடா உனக்கு" முறிகண்டித்துரை வீட்டிலிருந்து ஒரு உருவம் கத்தியவறு எங்களை நோக்கி வாறது இருட்டுக்கை தெரியுது...கையில ஒரு கொட்டன் சிக்னல் லைற்றில மின்னிமின்னித் தெரியுது... அந்த உருவத்துக்குப் பின்னாலை ஒரு கூட்டமே வருகுது...எல்லாரும் தயாராய் நிண்டிருக்கிறாங்கள் போல...எனக்கு இப்ப என்னோட கூடவந்தவன்,மோட்டார்பைக்,காலில் போட்டிருந்த செருப்பு எதுவுமே ஞாபகமில்லை...எப்படி ஓடிக்கொண்டிருந்த மோட்டார்பைக்கை விட்டு இறங்கினன் எண்டு கூடத்தெரியவில்லை..."அண்ணை நானில்லை,அண்ணை நானில்லை" எண்டு கத்திக்கொண்டு இரவு ஆரோ கேற்றைக்கொழுவ மறந்துபோய் விட்டிருந்த வீடொன்றுக்கை உள்ளட்டு மண்கும்பி ஒண்டுக்குப்பின்னாலை விழுந்து படுத்திட்டன்..படுத்துக் கிடந்து வானத்தைப் பார்த்தபடி யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்...எதுக்குத் துரத்துறாங்கள் எண்டு எனக்குப் பிடிபடுகுதே இல்லை...எனக்குத் தெரிஞ்சு எந்த வம்பு தும்புக்கும் நானும் என்ர நண்பனும் கிட்டடியிலை போனதில்லை...(அப்பிடியெண்டால் முன்னம் போனனியளோ எண்டு கேக்காதேங்கோ..முன்னமும் போனதில்லை :D )

என்னைத் துரத்திவந்தவன் பெரிய சத்தமாய் தூசனங்களால் அர்ச்சனை செய்தபடி வேலிக்கரை எல்லாம் டோச் அடிச்சு என்னைத் தேடுறான்...ரோச் வெளிச்சம் எனக்கு மேலை விழாதபடி மண்கும்பியைச் சுத்திச்சுத்தி குரோலிலை மூவ் பண்ணிக் கவர் எடுத்துக்கொண்டிருக்கிறன்.இந்த அமளிதுமளியிலை நான் ஒளிச்சிருந்த மண்கும்பி வீட்டுக்காறங்களும் எழும்பி கேற்றடிக்கு வந்திட்டாங்கள்...மெதுவாகக் கறட்டி ஓணாண் மாதிரி தலையை நிமிர்த்திப் பாக்கிறன்...நான் ஒளிச்சிருக்கிறது சின்ராசண்ணை வீடு...சின்ராசண்ணைக்கு அஞ்சு பெட்டையள்...ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு மாதிரி வடிவு...எனக்கு அஞ்சிலையும் ஒரு கண் இருந்தது...அவளவையைப் பாத்தவுடன ஆரைச் செலக்ற்பண்ணி லவ் பண்ணுவம் எண்டு நான் குழம்புறதுண்டு.. :icon_mrgreen: (அவளவை உன்னை லவ்பண்ண ஓமெண்டவளவையோ எண்டு நீங்கள் கேக்குறது எனக்கு விளங்குது...ஒரு மாங்காய் எண்டாத்தான் எறிஞ்சு விழுத்துறது கஸ்ரம்...இங்க அஞ்சு மாங்காய் கொத்தாய் இருக்கு...ஒரு கல்லை எறிவம் ஏதாவது ஒண்டு விழும்தான எண்ட நப்பாசைதான் :D )பெரிய மன்மதக் குஞ்சுபோல அவளவையை லுக்கு விடுறனான்...இப்ப எலிக்குஞ்சு மாதிரி அவளவை வீட்டு மண்கும்பிக்குப் பின்னால ஒளிச்சிருக்கிறன்..எனக்கு அவமானமாக இருந்தது...என்னைத்துரத்தி வந்தவன்மேல் ஆத்திரமாகவும் இருந்தது...எப்படி அவளவையின்ர கண்ணில படாமல் போறது...?அதே நேரம் அங்கை ஒருத்தன் ஏன் எதுக்கெண்டு தெரியாமல் டோச் அடிச்சு என்னைத்தேடிக்கொண்டிருக்கிறான் படுபாவி...அவன் கண்ணிலும் படாமல் போகவேணும்...

யோசிச்சுக்கொண்டிருக்க காலடியில் ஏதோ வழுவழுப்பா உழக்குப்படுற மாதிரி இருந்திச்சு...தலையைத் திருப்பிப் பாத்தா ஒரு அஞ்சு இல்லா ஆறடியில் பெரிய பாம்பொண்டு..நான் எங்கை நிக்கிறன் எண்டதையும் மறந்துபோய் வழமையாய் வீட்டை கத்திற மாதிரி "அய்யோ பாம்புபாம்பு" எண்டு கத்திவிட்டன்..பிறகென்ன...அஞ்சு பெட்டையளும் தகப்பன்காறனோட சேர்ந்து என்னைச் சுத்தி வளைச்சிட்டாளவை...லைற்றடிச்சுப் பாத்தா அது சாரைப் பாம்பு...அமாவாசை இருட்டுக்கை தவளை தேடி வந்திருக்கு...அடச்சனியனே உன்னைப்பாத்தா நான் கத்தினனான்...அநியாயமாப் பிடிபட்டுட்டனே...எனக்கு அவமானமும் அதேநேரம் சின்ராசண்ணையைப் பாக்கப் பயமாயும் இருந்துது...அவமானத்தைப் பாக்காமல் நடந்ததைச் சொல்லி சின்ராசண்ணையிட்டைச் சரண்டராயிட்டன்...அவளவையும் பயப்படாதையுங்கோ நாங்கள் இருக்கிறம் எண்டு என்னைச் சுத்தி நிண்டுகொண்டாளவை...அந்தப் பிரச்சினையிலும் எனக்கு அப்ப அவளவையோட இருட்டுக்கை நிக்கிறது கிழுகிழுப்பா இருந்திச்சு... :icon_mrgreen: கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கெண்டு சந்தோசமாயிருந்திச்சு..

என்னைத் துரத்தி வந்தவன் தூசணத்திலயும் என்ர "நான் அவனில்லை" எண்ட ஒப்பாரியிலையும் குரைக்கத் தொடங்கியிருந்த ஊர் நாயின்ர சத்தமெல்லாம் இப்பத்தான் அடங்கிப்போயிருந்தது..எனக்கு அப்பதான் என்கூட வந்த என்ர நண்பனின்ரையும் மோட்டார்பைக்கின்ரையும் ஞாபகம் வந்திச்சு...முறிகண்டித்துரை வீட்டுப்பக்கம் காது குடுத்துக் கேக்கிறன்...சனங்கள் சுத்தி நிண்டு கதைக்கிறது கேக்குது...எனக்கு என்னநடந்ததெண்டு அறியவேணும் எண்டு ரென்சனாக்கிடக்கு..தெம்பாக் கதைச்சுப்போட்டுப் போன சின்ராசண்ணையோ றோட்டுக்கு இறங்கிறார் இல்லை...மனிசன் பயத்தில தன்ர வீட்டுக் கேற்றோட நிண்டு டோச்சை சுத்திச் சுத்தி அடிச்சுப்பாக்குது...கொஞ்ச நேரத்தில ஆரோ ஒருத்தன் என்ர பேரை ஈனஸ்வரத்தில முனகியபடி றோட்டால வாறான்..ஆரெண்டு பாப்பம் எண்டு கேற்றடிக்கு வந்து சின்ராசண்ணைக்குப் பின்னாலை ஒளிஞ்சு நிண்டு பாத்தா என்னோட வந்த என்ர நண்பண் ஒரு கையால மோட்டார்பைக்கை உருட்டியபடி மற்றக் கையில என்ர ஒரு சோடி செருப்பையும் தூக்கிக் கொண்டு என்னை வேலியளுக்க தேடினபடி வந்துகொண்டிருந்தான்...ஆள் ஒரு சேதாரமும் இல்லாமல் முழுசா வந்திருந்தான்.எனக்கு அவனைத் தனியா விட்டிட்டு ஓடிவந்திட்டனே எண்டு கவலையாய் இருந்தது..ஒருமாதிரி அவனைச் சமாளிச்சுப் போட்டு என்ன மச்சான் நடந்தது எண்டு கேக்கத்தான் விளங்கிச்சு..வில்லங்கமான நேரத்தில வில்லங்கமான இடத்துக்கு கெட்லைட்டும் போடாமல் வந்து நாங்கள் வில்லங்கமா அகப்பட்டிருந்திருக்கிறம் எண்டு..

நடந்தது இதுதான்...முறிகண்டித்துரைக்கு ஒருமகள் இருக்கிறாள்...ஒரே ஒருத்திதான்..வேறயாரும் இல்லை...பழைய படங்களில வாற நதியா(இப்ப புதுப்படங்களிலும் வாறா போல) மாதிரிக் களையாய் இருப்பாள்...அவளை ஆரோ ஒரு பெடியன் லவ்வி இருக்கிறான்...அது தெரிஞ்சு ரென்சனான முறிகண்டித்துரை மகளுக்கு அவசரம் அவசரமாக லண்டனில சொந்தக்காறப் பெடியனுக்குப் பேசி முற்றாக்கியிருக்கிறார்...அடுத்த நாள் கலியாணம்..இதை அறிஞ்ச அந்த லவ்வி சினிமாப் படங்களில வாற கீரோ மாதிரி ஆக்களைச் சேத்துக்கொண்டு பெட்டையைத்தூக்க அண்டைக்குப் பகல் வந்திருக்கிறான்...வந்தவங்கள் ஒரு காரிலை இல்லை ஆட்டோவிலை வந்திருக்கலாம்...அதை விட்டிட்டு எல்லாரும் மோட்டார்பைக்கில வந்து துலைச்சிருக்கிறாங்கள்..முறிகண்டித்துரை வீட்டு றோட்டாலை சுத்திச்சுத்தி வந்து நோட்டம் விட்டிருக்கிறாங்கள்...முறிகண்டித்துரை பெட்டையை வீட்டுக்கை வைச்சுப் பூட்டிப்போட்டு வெளியில ஒரு கோடாலியோட காவலிருந்திருக்கு...எவனாவது உள்ள வந்தா தறிக்கிறதெண்டு...பகல் பெட்டையைத் தூக்கேலாமல்ப் போக நாளைக்கு விடியிறதுக்குள்ளை பெட்டையைத் தூக்கிறதாச் சவால் விட்டிட்டுப்போயிருக்கிறாங்கள் வந்தவங்கள்...பயந்துபோன முறிகண்டித்துரை தன்ர இனசனங்கள் எல்லாத்தையும் கூப்பிட்டு தடிதண்டுகளோட காவலிருந்திருக்கு...அவங்கள் வாறதுக்கு முன்னம் கெட்லைட் இல்லாமல் நடுச்சாமத்திலைநாங்கள் வந்திருக்கிறம்...மிச்சக்கதை உங்களுக்குத் தெரியும்தான...

முறிகண்டித்துரை மாதிரி இல்லாமல் முறிகண்டித்துரையின்ர இனசனம் தெளிவா இருந்தபடியால்தான் என்ர நண்பண் தப்பியிருக்கிறான்...பின்னால இருந்து அவசரப்பட்டு நான் இறங்கி ஓட பெரும் ஆத்திரத்தில இருந்த முறிகண்டித்துரை நினைச்சிருக்கு நான் தான் லவ் பண்ணுற பெடியன் எண்டு..இருட்டு வேறு ஆளைஆள்த்தெரியா அமாவாசை இருட்டு.. அதுதான் அந்தாள் ஆள்த்தெரியாமல் என்னைத்துரத்தியிருக்கு...முறிகண்டித்துரை என்னைத்துரத்திக்கொண்டு ஓடிவர என்ர நண்பனை முறிகண்டித்துரையின்ர இனசனம் சுத்திவளைச்சிருக்கு..நல்லவேளை அவங்கள் இவன்ரை முகத்துக்கு டோச் அடிச்சுப் பாத்திருக்கிறாங்கள்...பாத்தா ஊர்ப்பொடியன்...அதுதான் அவன் தப்பின கதை..இல்லாவிட்டால் அடிக்கடி படங்களிலை துணியாலமூடி அடிவாங்குகிற வடிவேலு காமடிபோல ஆகியிருக்கும் என் நண்பன் நிலை.. :o

நண்பன் சொல்லி முடிக்கிறான்...எனக்கு என்னைச் சுத்தி நிக்கிற அஞ்சு பெட்டையள் மட்டும்தான் கண்ணுக்குத்தெரியுறாளவை..இப்ப எனக்கு ரோசம் பொத்துக்கிட்டு வருகிது...வேலியிலை தடி ஒண்டை முறிச்செடுத்துக்கொண்டு என்னை விடுங்கோ உவனை ஒரு கை பாக்கிறன் றோட்டாலை போறவாறவங்களோட உவனுக்கென்ன சொறிச்சேட்டை எண்டு அடம்பிடிக்கிறன்...ஆனால் மனதுக்குள்ள ஆரேனும் மறிக்கவேணும் எண்டு நேந்துகொண்டிருக்கிறன்....நினைச்ச மாதிரி சின்ராசண்ணையின்ர பெட்டையள் என்னை மறிச்சிட்டாளவை...அந்த சமபவத்திற்க்குப் பிறகு வெக்கத்திலை நான் சின்ராசண்ணை வீட்டு றோட்டுப்பக்கம் தலைகாட்டுறதில்லை...ஏலுமானவரை அவளவை அஞ்சுபேற்றை கண்ணிலும் படாமல் ஒளிச்சுத்திரிஞ்சன்..சபதம் விட்டிட்டுப் போனவங்கள் கடைசிவரை வரவும் இல்லை பெட்டையைத்தூக்கவும் இல்லை...அநியாயமாய் நாங்கள்தான் இடையிலை அகப்பட்டு அல்லோலகல்லோலப்பட்டது... :( முறிகண்டித்துரை அடுத்த நாள் சொன்னமாதிரி மகளுக்கு கலியாணவீடு நடத்திவைச்சு இப்ப நிம்மதியா இருக்கு..அதுக்குப் பிறகு முறிகண்டித்துரைமேல இருந்த கடுப்பில, அந்த வயதில் எங்களுக்கிருந்த இருந்த ரத்தச் சூட்டில நானும் நணபனும் முறிகண்டித்துரைக்கு இருட்டுக்கை மண்டையை உடைக்கிறதெண்டு கன நாள் தேடித் திரிஞ்சனாங்கள்...ஆனால் முறிகண்டித்துரைக்கு விசயம் தெரிஞ்சு ஆள் இரவில வெளியில வாறதில்லை...பிறகு காலப்போக்கில கோபம் எல்லாம் ஆறிப்போக அநதச் சம்பவத்தையும் மறந்து போனம்... :D(அதுசரி அந்த அஞ்சு பெட்டையள்ளை ஏதாவது பிறகு அகப்பட்டதா எண்டுதான கேக்குறியள்..?அதுதான் இல்லை..அவளவையள் லண்டன்,கனடா,அவுஸ்த்திறேலியா எண்டு ஆளுக்கொரு நாடாப்பாத்துக் கலியாணம் கட்டிச் செற்றிலாகிட்டாளவை...நானும் விக்கிரமாதித்தன் மாதிரிச் சளைக்காமல் வேற ஏதேனும் மாமரம் அகப்படுமோ எண்டு தேடித்திரியுறன் கல்லெறிய... :D )

Sunday, 1 January 2012

பிரியம் சமைக்கும் கூடு...

உலகின் மிகத்தொன்மையான முதலாவது மனித நாகரீகத்தில் இருந்து இன்றுவரை வீடென்பது மனிதர்களிடமிருந்து இணைபிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் மூத்த நாகரீகங்களில் தழைத்திருந்த மனிதர்களிடமும் சொந்தமாக வீடுகள் இருந்திருக்கின்றன.அந்தவீடுகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பாற்றுவதற்க்காக அவர்களில் பலர் போர்க்களங்களில் போராடி வீழ்ந்திருக்கிறார்கள்.வீடுகளுக்காக உயிர்களைக்கூடக் கொடுக்குமளவிற்க்கு வீடுகள் மனிதர்களின் வாழ்வுடன் மிகமுக்கியமானவையாகப் பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. அப்படித்தான் அவர்களின் உயிரோடும் உணர்வோடும் பின்னிப்பிணைந்திருந்தது அவர்களின் அந்த வீடு… பல ஆண்டுகளின் பின்னர் இப்பொழுதுதான் முதன்முதலாக அவர்களின் வீட்டிற்க்குபோக அவனுக்கு அனுமதி கிடைத்திருந்தது.அது அவர்களின் பரம்பரை வீடு..தலைமுறை தலைமுறையாக அவர்கள் வாழ்ந்த வீடு..மிக ஆவலோடு தன் வீட்டைப்பார்க்க வந்தவனைக் கற்குவியல்கள்தான் கண்ணீருடன் வரவேற்றுக்கொண்டிருந்தன..அழிந்து போன ஒரு நாகரீகத்தின் எஞ்சியிருக்கும் சுவடுகளைப்போலவே அந்த வீட்டில் வாழ்ந்து மடிந்த சில தலை முறைகளின் ஞாபகங்களைக் காற்றில் பரவவிட்டபடி சில சுவர்களையும் இடிந்து சிதிலங்களாகக் கிடக்கும் கற்க்குவியல்களையும் காட்ச்சிப்படுத்தியவாறு வெற்றிடமாகக் கிடந்தது அவன் வாழ்ந்துகளித்த அவனது முன்னைய காலத்து வாழ்விடம்.வீட்டைப் பார்ப்பதற்க்காக புறப்பட்டபோது அவனுக்கிருந்த ஆர்வமும்,மகிழ்ச்சியும்,எதிர்பார்ப்பும் அங்கு வந்து சேர்ந்தபொழுது கற்க்குவியல்களாகச் சிதறிப்போய்க்கிடக்கும் அந்த வீட்டைப்போலவே சுக்குநூறாய் உடைய்ந்துபோய்...நெஞ்சம் கனத்துக்கிடந்தது. காரணமேயின்றி அழிக்கப்பட்ட அவனது வீட்டை நினைத்து பெருமூச்சொன்றை எறிந்துகொண்டான். அவனின் பால்யகால ஆசைகளை அடைத்து வைத்திருந்த அவனது அறைக்கு இப்பொழுது வலது பக்கச்சுவர் மட்டுமே எஞ்சியிருந்தது.அந்த அறைக்குள் இருந்து அலை அலையாக எண்ணங்கள் புறப்பட்டு வந்து அவன் மனதில் மோதித் தெறித்துக்கொண்டிருந்தன.ஒவ்வொரு இரவும் அந்த வீடு கொடுக்கும் ஒருவித பாதுகாப்புணர்வில்தான் அவன் நிம்மதியாகத் தூங்கிப்போயிருக்கிறான்.அந்த அறையின் கதகதப்பில் சொக்கிக்கிடந்தபடி அவன் பல கனவுகளில் மிதந்திருக்கிறான்.உடைந்து கொட்டிப்போய்க் கிடக்கும் அந்த அறையின் இடிபாடுகளுக்கிடையேதான் அவனது அனேகமான கனவுகள் பலவந்தமாகப் புதைக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வீட்டின் உருவாக்கத்தின் பின்னால் புதைந்து கிடக்கும் பல கனதியான கதைகளைப்போல அந்த வீட்டின் அழிப்பின் பின்னால் இருக்காது.எல்லாமே சில மணித்தியாலங்களில் அல்லது சில நொடிகளில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆக்கத்தின் பின்னால் இருக்கும் உழைப்பும்,மனித வலுவும் இப்பொழுதெல்லாம் அழிவின் பின்னால் இருப்பதில்லை.அழிவு மட்டும் இப்பொழுது மிக இலகுவாக நடந்து முடிகிறது.இயற்க்கையில் மாற்றம் என்பது நிகழ்வதற்க்கு பலநூறாண்டுகள் சிலவேளைகளில் பல்லாயிரம் ஆண்டுகள் எடுக்கின்றன. ஆனால் இப்பொழுதெல்லாம் ஒரு துப்பாக்கிக் குண்டு தன் இலக்கை அடையும் பொழுதொன்றில் அல்லது ஒரு எறிகணை வெடித்துப் பிழக்கும் நொடியில் மாற்றம் மிக வேகமாக இடம்பெற்று முடிந்துவிடுகிறது. அப்படித்தான் அவனது வீடும் கற்க்குவியல்களாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.அதற்க்குச் சாட்ச்சியாக எஞ்சியிருக்கும் இரண்டு சுவர்களும், மோதிச் சிதறிய குண்டுத் துகள்களின் வீச்சுக்களை வடுக்களாகத் தாங்கியவாறு, அவை சொல்லமறந்த ஏதோ ஒரு கதையின் மிச்சத்தை அவனுக்கு நினைவு படுத்திக்கொண்டிருந்தன.அந்த வீட்டின் வயதை எஞ்சியிருந்த பழுப்பேறிய அத்திவாரங்கள் சுமந்துகொண்டு ஏதுமறியாதவைபோல் மெளனமாக நின்றுகொண்டிருந்தன. அந்த மெளனம் அங்கு வாழ்ந்த ஒரு குடும்பத்தின் ஆசைகளைப் புதைத்துக் கொண்ட ஒரு வீட்டின் கதை.அவர்களின் எண்ணங்கள்,அவர்களின் கனவுகள்,அவர்களின் ஆசைகள் எல்லாம் அந்த வீட்டைச் சுற்றிக்கொண்டே இருந்தன.அந்த வீட்டு முற்றத்தில் அவன் பாட்டனின் வியர்வைகள் ஆவியாகி இருந்திருக்கும்.கற்க்குவியல்களாகக் கிடக்கும் அந்த வீட்டினுள்ளேதான் அவன் தலைமுறைகள் முத்தங்களைப் பரிமாறியிருப்பார்கள்.ஒருகாலத்தில் மூன்று தலைமுறைகளின் சிரிப்பும்,உரையாடல்களும் அந்த வீட்டினுளே வாழ்ந்து கொண்டிருந்தன.

கிடைத்த இடைவெளிகளுக்குள்ளாலெல்லாம் வேர்விட்டு வளர்ந்து வீடிருந்த இடமெங்கும் பற்றைக்காடாய் சடைத்திருக்கின்றன புற்க்கள்.மனிதர்கள் வாழ்வதற்க்கு தகுதியற்ற இடமாக மாறிவிட்டிருந்தது அவன் வீடிருந்த வளவு.அவன் வீட்டிலிருந்து இரண்டு மூன்று காணிகள் தள்ளித்தான் முன்னரங்க நிலை ஒன்று இருந்தமைக்கான அடையாளங்களுடன் மண் அணை ஒன்று பாம்புபோல் வளைந்து வளைந்து முடிவு தெரியாமல் நீண்டு கிடந்தது.மண் அரனில் இருந்து கிட்டத்தட்ட அவன் வீட்டு வேலிவரைக்கும் முட்க்கம்பி அடித்த தடயங்களும் சில முட்க்கம்பிச் சுருள்களும் எஞ்சியிருந்தன. வீட்டு வேலியை ஒட்டியவாறு "மிதிவெடி அபாயம்" மண்டை ஓட்டுடன் அச்சுறுத்திக்கொண்டிருந்தது.கால்கள் இரண்டும் ஒருமுறை கூசுவதுபோல் இருந்தது அவனுக்கு. தெரிந்த காலில்லாத பலர் அவனுக்கு வரிசையாக நினைவுக்கு வந்துகொண்டிருந்தனர்.கண்முன்னால் எமனைப் பார்த்தபடிதான் இனிமேல் அங்கு அவர்கள் வாழ்ந்தாக வேண்டும்.சிறு வயதுகளில் ஓடியாடிய பூமியில் இனி அவதானமாகத்தான் தன் ஒவ்வொரு அடிகளையும் அவன் எடுத்து வைக்க வேண்டும்.நெஞ்சு வெடித்து விடும்போல் இருந்தது அவனுக்கு.

எப்பவோ பதிந்த ராணுவச் சப்பாத்தின் அடையாளங்கள் மனித இடையூறுகளின்றி ஆக்கிரமிப்பின் அடையாளங்களாக இன்னமும் அந்த வளவெங்கும் அங்குமிங்குமாகக் கிடந்தன. அவன் வாழ்ந்த வீடு அழிந்து போயிருந்தது.ஆயினும் அழிவின் சுவடுகளில் ஆக்கிரமிப்பின் அடையாளங்களை அது சுமந்து கொண்டிருந்தது.ஆக்கிரமிப்பாளர்களின் கொடிய மனங்களின் இருண்ட பக்கம்களை அது உலகிற்க்குக் காட்டிக்கொண்டிருந்தது.அவனது வீடும் வீட்டைச் சுற்றி இருந்தவைகளும் நாசமாவதை ரசித்தபடிதான் அவர்கள் கவச வாகனத்தை ஓட்டியிருக்க வேண்டும்.அந்த வளவை அழித்தவர்கள் மிகக் கரிசனையுடன் இயலுமான அளவு ஆகக்கூடிய சேதங்கள் உருவாகும்படிதான் அழித்திருக்கிறார்கள்.முதலில் குண்டுகளால் தாக்கியிருக்க வேண்டும்.பின்னர் புல்டோசர்களையும்,கவசவாகனங்களையும் அனுபவித்து அனுபவித்து அந்த வளவினூடாக ஓட்டியிருக்க வேண்டும். அவர்கள் அழிப்பதைப்பற்றி மிகக்கடினமான பயிற்ச்சியுடன் நன்கு கற்றிருக்கவேண்டும்.மிக நேர்த்தியாக செய்திருந்தார்கள்.மிக நெகிழ்வான அந்த மண்ணிண் மீது கவசவாகனங்கள் ஓடிய தடங்கள் நீளத்திற்க்கு ஒழுங்கின்றி இருந்தன.அவன்,அவனது அம்மா,அம்மாவின் அப்பா என்று அவர்கள் எல்லோரும் குழந்தையாக இருந்தபோது அந்த மண்ணில் விளையாடி இருக்கிறார்கள்.புல்டோசர்கள் துவைத்திருக்கும் இதே மண்ணைத்தான் குழந்தையாக இருக்கும்போது அவர்கள் தங்கள் கைகளால் அள்ளித்திண்ண முயன்றிருப்பார்கள்.இந்த மண்ணில்தான் அவனது தாத்தாவும்,அவனது அம்மாவும் பூஞ்செடிகளை வளர்த்து அழகு பார்த்தார்கள்.வாழ்க்கை ஒரு ஆறுபோல் அந்த வீட்டில் வழிந்தோடியது.அந்த ஆறு இப்பொழுது திசைமாறி விட்டிருக்கிறது.அடக்கி ஆழவேண்டும் என்ற ஒரு இனத்தின் வெறி அந்த வீட்டைப்போல் பல வீடுகளின் இயக்கத்தை நிறுத்திவிட்டிருக்கிறது.

எஞ்சியிருந்த இரண்டு சுவர்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர்கள் மொழியில் ஏதோ கிறுக்கி இருந்தார்கள்.அவர்களின் மனங்களைப்போலன்றி அவர்கள் மொழியின் எழுத்துக்கள் வளையம் வளையமாக மிக அழகாக இருந்தன.இவ்வளவு அழகான மொழியையும்,கலாச்சாரத்தையும் கொண்டிருக்கும் இனம் ஏன் இன்னொரு இனத்தை அடக்கி ஆழ நினைக்கிறது... ?தங்கள் வீடுகளை எல்லாம் அழகாகப் பார்த்துப் பார்த்துச் செதுக்குபவர்கள் எதற்க்காக இன்னொரு இனத்தினுடையதை அழிக்க நினைக்கிறார்கள்...?வீடும்,நாடும் அவர்களால் மட்டும் இழக்க முடியாததாம்...பிறகெதற்க்கு எங்களுடையதை ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள்...?அவன் கேள்விகளுக்குப் பதிலளிக்க அப்பொழுது அங்கு யாரும் இருக்கவில்லை.

முதன்முதல் வீட்டைப் பிரிந்து இடம்பெயர்ந்தபோது அவர்கள் யாரும் நினைக்கவில்லை அது இவ்வளவு நீண்ட ஒரு பிரிவாக இருக்கப்போகிறதென்று.ஒரு மாதம் இரண்டுமாதமாகி ஒருவருடமாகி...இடம்பெயர்ந்து இருந்த இடத்தைவிட்டு இடம்பெயர்ந்து...மீண்டும் மீண்டும் புதிதுபுதிதாக எங்கெங்கோவெல்லாம் இடப்பெயர்வு என்றானபோது வருடங்கள் பலவாகி விட்டிருந்தது.வீட்டிற்க்குத் திரும்பிப்போவோம் என்று அவர்களிடமிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கைகளும் முற்றாக உதிர்ந்துபோய் விட்டிருந்தன.எங்கெங்கோவெல்லாம் இடம்பெயர்ந்து யார்யாரோ வீட்டுத் தாழ்வாரங்கலிலே ஒதுங்கும்போதெல்லாம் அவமானங்களும்,வேதனைகளுமே அவர்களிடம் மிச்சமாக இருந்தன. விடிய விடிய விழித்திருந்து வீட்டின் நினைவுகளில் கழிந்துபோயின பல நீண்ட இரவுகள். பொழுதுகள் ஒவ்வொன்றும் விடியாதவைகளாகவே போய்க்கொண்டிருந்தன அவர்களுக்கு.வாழ்க்கை பெருஞ்சுமையாகக் கனத்துக்கொண்டிருந்தது.மனங்கள் வெறுமையாக அலைந்துகொண்டிருந்தன.

எத்தனையாவதென்று தெரியாத ஏதொவொரு இடப்பெயர்வில் அவன் அம்மம்மா இறந்துபோய்விட அம்மா முழுமையாக உடைந்து போய்விட்டிருந்தார்.அம்மம்மாதான் ஒரே பிடியாக நின்று அம்மாவுக்கு அந்த வீட்டைச் சீதனமாக எழுதிக்கொடுத்திருந்தாவாம்.இரண்டு ஆம்பிளைச் சகோதரங்களுடன் ஒரே ஒரு பொம்பிளைப்பிள்ளையாக அம்மா பிறந்திருந்ததால் வீடு அம்மாவுக்குத்தான் சேர வேண்டும் என்று அம்மம்மா, அம்மாவின் சின்னவயதிலேயே வீட்டில் எல்லோரிடமும் முடிவாகச் சொல்லி வைத்திருந்தாராம்.சொன்னதுபோலவே அம்மாவின் திருமணத்துடன் வீட்டைச் சீதனமாக எழுதி அவன் அம்மாவிற்க்கே கொடுத்துவிட்டாவாம்.அம்மப்பாதான் அந்த வீட்டைக் கட்டினாராம். வீட்டைக்கட்டினார் என்று சொல்வதை விட ஒவ்வொன்றாகப் பார்த்துப்பார்த்துச் செதுக்கினார் என்றுதான் சொல்லவேண்டும்.வீடுகட்டி முடியும் வரையும் நேரகாலம் பார்க்காமல் சாப்பாடு தண்ணியும் ஒழுங்காயில்லாமல் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு கூலியாக்களோட தானும் ஓராளா நிண்டு செயற்பட்டாராம்.அடிக்கடி அம்மம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறான்.அதைச் சொல்லும்போது அம்மம்மாவின் முகத்தில் ஒருவித பிரகாசம் தெரியும்.அம்மப்பா அடிக்கடி சொல்வாராம் நான் செத்தாலும் என்ர இந்தவீட்டிலதான் சாகவேணும் எண்டு..அதுபோல அந்த வீட்டிலேதான் அவர் உயிர் பிரிந்ததாம்...இது நடந்தது அவன் பிறப்பதற்க்கு முன்னர். எனக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லாமல் போகப்போகுதுபோல...இடப்பெயர்வின் பின்னர் அடிக்கடி அம்மம்மா புலம்பிக்கொள்வார்...கடைசிவரை அவரின் அந்த ஆசை நிராசையாகவே போய்விட்டது...

வீடுகட்டி முடிந்தபோது அந்த வீட்டின் அழகைப்பற்றி கதைக்காத ஊர்ச்சனமே இல்லையாம்.அப்படி ஒரு அழகான வீடு அந்த ஏரியாவிலேயே அப்பொழுது இருக்கவில்லையாம்.வீடுகட்டி முடிந்த களையோடகளையாய் புதுவீட்டையும் பெரிய அளவில நடத்திவைச்சாராம் அம்மப்பா.அம்மப்பா அந்தக்காலத்தில வி.சியில(கிராம சபை) இருந்தவராம்.அதால எம்.பிமார் எல்லாம் பழக்கமாம்.புது வீட்டுக்கு தனக்குத் தெரிஞ்ச சில எம்.பிமாரையும் கூட்டிவந்து கிறான்டாத்தான் நடத்தினவராம்.இரண்டு நாளைக்கு முன்னமே பெரிய திருவிழாமாதிரி றோட்டெல்லாம் அலங்கரிச்சு பந்தல்போட்டு வாழைக்குலைகட்டி விடியவிடிய சோடிச்சவையாம்.புது வீட்டு நேரம் பாக்கவேணும் வீட்டை,என்ன பெற்றனா இருந்திச்சு...வீட்டைப்பாத்து ஆசைப்படாத சனம் அயலட்டையில ஆருமே இல்லையாம்..அம்மம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறான்...அதற்க்குப் பிறகு அம்மாவின் கலியாண வீட்டிற்க்குப் பெயின்ற் அடித்துப் புதுச்சாமான் எல்லாம் வாங்கிப்போட்டு வீட்டைப் புதுப்பிச்சவையாம்.. பிறகு தங்கச்சியின் சாமத்தியவீடு...இப்படி வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விசேசத்திற்க்கும் வீடும் புதுக்கோலம் கொண்டு நிற்க்கும்.

அவனும்,மற்றையவர்களும் வீட்டை எப்படிப்போவது என்றும் எப்பொழுது வீட்டைப் பார்க்கப்போகிறம் என்றும் கவலைப்பட்டுக்கொண்டிருக்க அவன் தம்பி மட்டும் அதற்க்குச் செயல்வடிவம் கொடுக்கப்போய்விட்டிருந்தான்.அம்மம்மாவின் மரணத்தில் இடிந்து போயிருந்த அம்மாவிற்க்கு தம்பியின் முடிவு பேரிடியாக இருந்தது.தன் கனவுகளை,ஆசைகளை எல்லாம் தோழர்களிடம் சுமத்திவிட்டு அவன் தம்பி வெகு விரைவிலேயே போர்க்களத்திலிருந்து வித்துடலாக வீடு வந்து சேர்ந்திருந்தான்... மெதுமெதுவாக வீட்டிலிருந்தவர்களின் எண்ணிக்கை இறங்குவரிசையில் போய்க்கொண்டிருந்தது.இடப்பெயர்வுகள் மட்டும் இன்னமும் நின்றபாடாக இல்லை...

கற்க்குவியலாகக் கிடந்த வீட்டைப் பார்க்க அவனுக்கு கண்களிலிருந்து கண்ணீர் திரண்டு வழிந்து கொண்டிருந்தது.ஓவென்று ஒப்பாரி வைத்து அழவேண்டும் போலிருந்தது அவனுக்கு.அப்பா பார்த்துப்பார்த்து தன் பிள்ளைபோல் பராமரித்தவீடு இப்படிச்சிதைந்து போய்க்கிடக்கிறதே...அப்பா இருந்திருந்தால் இதைப்பார்த்து எப்படி உடைந்துபோயிருப்பார்...வீட்டையும் தம்பியையும் நினைத்து நினைத்தே அப்பா பாதி இறந்துபோய்விட்டிருந்தார்.எல்லைப்படைக்கும்,மக்கள் படைக்கும் எல்லோரும் போகவேண்டும் என்றானபோது அவனை வீட்டில் இருத்திவிட்டு அப்பாதான் எல்லைக்குப் போனவர்...எல்லைக்குப் போனவரை எமன் கூட்டிப்போவான் என்று எவருமே நினைக்கவில்லை...விதி அவர்கள் வீட்டில் மட்டுமல்ல அந்த மண்ணில் இருந்த எல்லோரது வீட்டிலும் விளையாடிக்கொண்டிருந்தது...அப்பாவின் இழப்புடன் அம்மா நடைப்பிணமாகிவிட்டா..அவளது வாழ்வு ஒடுங்கிப்போய் விட்டிருந்தது...அவன் தான் வீட்டில் எல்லாமாக இருக்க வேண்டியிருந்தது...வயதான ஒரு தங்கச்சி..அவளை எப்படியாவது ஒரு நல்ல இடத்தில் கரைசேர்க்கவேண்டும் என்ற பெரும் பொறுப்பு...அவர்களுக்காக வாழ்ந்தாகவேண்டும் என்ற வேட்கை மட்டும்தான் அவனை இன்னமும் உயிருடன் வைத்துக்கொண்டிருந்தது...

அவள் வாழ்வதற்க்காகக் கனவுகண்டுகொண்டிருந்த வீடு கற்க்குவியலாகக் கிடக்கிறது...இதை எப்படித் தங்கச்சியிடம் சொல்லப்போகிறேன்...?அவள் எப்படி இதை எடுத்துக் கொள்ளுவாள்...? அவனுக்கு அழுகைஅழுகையாக வந்தது…தங்கச்சிக்கு அந்த வீடு தனக்குரியதென்ற பெருமை எப்பொழுதும்...அம்மா தனக்குப் பிறகு தங்கச்சிக்குத்தான் வீடென்பதை வீட்டில் யாருடனாவது கதைபடும்போது சாடைமாடையாகக் கேட்டுக்கொண்டிருப்பாள்.அந்த வீடு தனக்கே உரித்தாகப் போகிறதான சந்தோசத்தில் வீட்டில் ஒவ்வொன்றாகப் பர்த்துப்பார்த்துச் செய்வாள்.சமைப்பதிலிருந்து,வீட்டைப் பெருக்குவதிலிருந்து,பூங்கன்றுகளைப் பராமரிப்பதென்று எல்லாவற்றையும் தானே ரசித்துரசித்துச் செய்வாள்.அந்த வீட்டை அலங்கரிப்பதில் அவள் எப்பொழுதுமே திருப்தி கண்டதில்லை.புதிதுபுதிதாக விதம்விதமாக எதையாவதுகொண்டு அலங்கரித்துக்கொண்டேயிருப்பாள். திருமணம் செய்து தன் கணவன் குழந்தைகளுடன் அந்த வீட்டில் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று அவள் கற்பனை செய்து வைத்திருப்பாள்...?எல்லாமே அந்த வீட்டைப்போல் இனிக் கனவாகிப்போய்விடும்...

வலதுபக்க வேலியோடு ஒட்டியிருக்கும் சறோஸா வீடு சில வாரங்களுக்கு முன்னரே அங்கு வந்திருக்க வேண்டும்.இடிந்து போன அவர்களின் வீட்டில் எஞ்சியிருந்த அத்திவாரத்தையும் சில சுவர்களையும் இணைத்து தென்னோலைகளால் இணக்கிய தட்டிகளை வைத்து அடைத்து வீடென்று சொல்லும்படியாகக் கூடொன்று செய்திருந்தார்கள்.சறோஸா ஒரு காலத்தில் அந்த ஊரில் பெரும் பணக்காரியாக இருந்தவள்.யுத்தம் இப்பொழுது அவளையும் ஒரு அடிமட்ட நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது.பகல் முழுவதும் வேலை செய்துவிட்டுவந்த களைப்பில் சறோஸாவின் கணவன் முற்றத்தில் நின்ற மாமரத்தின் கீழிருந்த வாங்கில் றேடியோப் பெட்டியை பெரிதாக அலறவிட்டுப் படுத்துக்கிடந்தான்.உந்த றேடியோவிலதான் திரும்பத்திரும்ப வடக்கின் வசந்தமும் இந்தியாவின் ஜம்பதாயிரம் வீடுகளும் தமிழர்களுக்குச் சுபீட்ச்சத்தையும் நிம்மதியான வாழ்வையும் கொண்டுவந்துள்ளதாக சொல்லிக்கொண்டிருப்பார்கள்…அந்தக்கவலையிலும் அவனுக்குச் சிரிப்பாக இருந்தது.

அம்மம்மாவைப்போல,அப்பாவைப்போல,தம்பியைப்போல அந்த வீடும் இப்பொழுது உயிரற்றதாகிவிட்டது.அது இனிமேல் வெறும் ஜடம்.அதற்க்குள் இருந்த உயிரோட்டம் போய் விட்டது.எஞ்சியிருக்கும் குப்பைகளை எல்லாம் அகற்றி தற்கலிகமாக ஒரு வீடுபோட்டு அம்மாவையும் தங்கச்சியையும் கூட்டிவரவேணும்...நாலு மூலைக்கும் நிலைக்கு நடுவதற்க்கு நல்ல மரமாகப் பாத்து வெட்டிவரவேணும்...செல்லம்மாவிடம் மட்டைக்கும்,கிடுகிற்க்கும் சொல்லவேணும்...மழைகாலம் வரமுன்னம் கெதியெண்டு கொட்டில் போட்டு முடிக்கவேணும்...எல்லாத்துக்கும் முதல் ஆரும் போகாதமாதிரி உந்த மிதிவெடிப்பக்கம் குறுக்கு வேலி போட்டு மறைக்க வேணும்..மெதுமெதுவாக வீட்டைப் பெருப்பிக்க வேணும்..தங்கச்சிக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேணும்..மீண்டும் பழைய உயிரோட்டத்தை அந்த வீட்டிற்க்குள் கொண்டு வரவேணும்...மனதில் கவலைகள் கனத்து முடிந்து பொறுப்புக்கள் கனக்கத் தொடங்கியிருந்தன அவனுக்கு...

Wednesday, 28 December 2011

காலத்துடன் தொலைந்துபோன பயணத்தோழன்...


(லண்டன் ஒரு பேப்பருக்காக எழுதியது.....)

மிதிவண்டியைப்பற்றி பலரும் பலநூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியிருப்பார்கள் ஆனாலும் மிதிவண்டியுடனான எனது நினைவுகளை என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை.அன்று ஞாயிற்றுக்கிழமை வார நாட்கள் முழுவதும் கலகலத்துக்கொண்டிருந்த பாரிஸ் புறநகரின் ஆரவாரம் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டிருந்தது.அந்த நகரின் ஓயாத இரைச்சலை விழுங்கிவிட்டு அமைதி எங்கும் படர்ந்திருந்தது.தெருக்களில் வேலைநாளின் அவசரமின்றி அங்கங்கு ஆறுதலாகப் போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு மோட்டார் வண்டிகளைத்தவிர தார்வீதியின் கருமையும் அமைதியுமே வழிநெடுக நிறைந்திருந்தது.யாழ்ப்பாணத்து வீதிகளில் மாலைப்பொழுதுகளில் முகத்திலடிக்கும் அதே மெல்லிய மஞ்சள் நிறவெய்யில் அன்று பாரிஸிலும் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது.ஊரில் இருந்திருந்தால் இந்நேரம் ஒரு பிளேன்ரியும் வடையும் கடிக்க மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டிருப்பேன்.உலையில் கொதித்துக்கொண்டிருக்கும் சுடுநீரில் இருந்து மேலெழும் நீர்க்குமிழிகள்போல மனக்குளத்தில் நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக குமிழியிட்டுக்கொண்டிருந்தன. என்னால் வீட்டிற்க்குள் இருக்க முடியவில்லை.காலணியை மாட்டிக்கொண்டு பக்கத்திலிருக்கும் பூங்காவிற்கு காலாற நடந்துவரக் கிளம்பினேன்.

எனது வீட்டில் இருந்து வெளிப்பட்டுப் பிரதான வீதியில் இணைந்தபோது இப்படியொரு காட்ச்சி.ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி பின்புறம் இருக்கை பொருத்தப்பட்ட மிதிவண்டி ஒன்றை மிதித்துக்கொண்டிருந்தாள்.பின்னிருக்கையில் பாதுகாப்புப் பட்டி பொருத்தப்பட்ட அவரின் சின்னக்குழந்தை.அவர்களின் பின்னே அந்தப்பெண்மணியின் மற்றைய இரண்டு குழந்தைகள் ஆளுக்கு ஒரு சிறிய மிதிவண்டியில். எல்லோருக்கும் பின்னால் கடைசியாக அந்தப்பெண்மணியின் கணவர் மிதிவண்டியில் அவர்களைத்தொடர்ந்து கொண்டிருந்தார்.எல்லோர் தலைகளிலும் தலைக்கவசமும் உடலில் பச்சை நிற பாதுகாப்பு ஜக்கெற்றும் மாடியிருந்தார்கள்.அந்தப் பெண்மணியின் துவிச்சக்கரவண்டியின் பின்னிருக்கையில் இருந்த குழந்தையின் தலையிலும் தலைக்கவசம் மாட்டிவிட்டிருந்தார்கள்.அந்தக்குழந்தை தலைக்கவசத்துடன் அழகாக அங்குமிங்கும் பார்த்தபடி போய்க்கொண்டிருந்தது. ஒரு அழகிய ஊர்வலம்போல் மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.அவர்களிடம் நகரத்தின் அவசரம் எதுவுமிருக்கவில்லை.சூழலின் அமைதியைக் குலைக்கும் இரைச்சல் மிகுந்த,புகை கக்கும் ஊர்திகள் எதுவுமிருக்கவில்லை.அவர்கள் முகத்தில் குதூகலமும் புன்னகையும் குடிகொண்டிருந்தது.வெள்ளைக்க்காரர் மத்தியிலும் இப்படிக்கூட்டுக் குடும்பங்களை காணும்போது எனக்கு நிறைவாக இருக்கும் அதேவேளை ஊரின் நினைவுகளையும் அது கிளறிவிட்டுப் போய்விடும்.எனக்கும் இப்படி ஒரு மிதிவண்டி வாங்கி ஓடவேண்டும் என்று பலநாள் ஆசை.ஆனாலும் பாரிஸ் நகரத்தின் வீதிகளில் யாரைப்பற்றியும் கவலையின்றி விரையும் வாகனங்களுக்குப் பயந்து எனது ஆசையை கிடப்பில் போட்டிருந்தேன்.இவ்வளவு நெருக்கடி மிகுந்த இயந்திரத்தனமான வீதிகளிலும் பயமின்றி மிதிவண்டிகளில் செல்பவர்களைப்பார்த்தால் எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும்.அதிலும் குடும்பமாக மிதிவண்டியில் செல்பவர்கள் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள்.அவர்கள்தான் எத்தனை நெருக்கமாக வாழ்க்கையை உணர்கிறார்கள்.இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருக்கும் இறுக்கம்களையும் மன அழுத்தம்களையும் கரைத்து விடுகின்றன மிதிவண்டிப் பயணங்கள்.

கவலைகளைப்பற்றிய வாசனைகள் எதுவுமறியா என் சிறுவயதுக்காலங்களில் அமைந்த ஒரு மென்மையான நாளில்தான் என் முதல் மிதிவண்டி ஓட்டிய அனுபவம் கிடைத்திருந்தது.முழுமை பெறாத ஒரு மிதிவண்டி ஓட்டலாக அது அமைந்திருந்தாலும் என் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்து என் மனக்குளத்தில் தேங்கிவிட்டிருக்கிறது அந்த நாளின் வாசனைகள்.எனது தந்தையிடம் ஒரு கறுப்பு நிற றலி சைக்கிள் நின்றது.அதன் உயரமும்,நீண்டு அகன்ற அதன் இருக்கையும் மரச்சட்டம் போட்ட பின் இருக்கைகளும் எனக்குப் பயத்தை உண்டுபண்ணி அதை ஓட்டிப்பார்க்க நினைக்கும் என் ஆசையைத் தடுத்துக்கொண்டிருந்தன.எனது தந்தை பாடசாலை விடுமுறை நாட்களில் கிடைக்கும் சில நேரம்களில் ஒரு துணியும் சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெயும்தந்து அந்த மிதிவண்டியை துடைக்கச்சொல்வார்.எங்கள் வீட்டு முற்றத்தில் சிமெண்ட் மேடை ஒன்று இருந்தது.அந்த மேடையின் மேல் மிதிவண்டியை கவிழ்த்து தலைகீழாக நிறுத்தி ஒவ்வொரு கம்பியாகத்துடைத்து றிம் மக்காட் என்று முழுச்சைக்கிலையும் துடைத்து முடிக்கும்போது அது பளபளவென்று அப்பொழுது பிறந்த கன்றுக்குட்டிபோல் மினுங்கிக்கொண்டிருக்கும்.அப்பொழுதிலிருந்தே மிதிவண்டி ஓட்டுவது குறித்த கனவுகள் என்னுள் முகிழ்விடத்தொடங்கியிருந்தன.மிதிவண்டியின் பின்னிருக்கையில் புத்தகப்பையை செருகியபடி எல்லோரும் பார்க்க நான் மிதிவண்டியில் போயிறங்குவதாக கற்பனை செய்து கொள்வேன்.கொஞ்சம் கொஞ்சமாக மிதிவண்டியோடு நான் நெருக்கமாக உணர ஆரம்பித்திருந்தேன்.காலத்தின் சக்கரங்களில் நாட்கள் தேய்பட மிதிவண்டியின் உயரத்துடன் என் உயரமும் சமனாக இருப்பதாக உணர்ந்த நாளொன்றில்தான் மிதிவண்டியை ஓட்டிப்பார்ப்பதற்கான முதல் முயற்சியை செய்து பார்த்தேன்.ஜந்து நிமிடங்களுக்குமேல் நீடிக்காத அந்த பரிசோதனை முயற்ச்சியில் நான் தோற்றுப்போய் விட்டிருந்தேன்.ஒற்றைக்காலால் பெடலை மிதித்தபடி மற்றைய காலை நிலத்தில் ஊன்றி ஊன்றிக் கொஞ்சத்தூரம் நகர்ந்தாலும் துவிச்சக்கரவண்டியின் "கான்ரிலை"எனது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவர முடியவில்லை.அங்குமிங்கும் ஆட்டம் காட்டியபடி என்னைச்சிறிது தூரம் இழுத்துச்சென்ற மிதிவண்டி அந்தக்கல்லு வீதியின் நடுவில் பொத்தென்று என்னையும் இழுத்து விழுத்திவிட்டு முன்சில்லு சுற்ற சிரித்தபடி கிடந்தது. எழுந்து மிதிவண்டியை நிமிர்த்திய எனக்கு காதுப்பக்கம் ஏதோ ஊர்வதுபோல் இருந்தது.கைவைத்து பார்த்தபொழுது ரத்தம் உச்சம்தலையில் இருந்து சொட்டுச்சொட்டாக வடிந்து கொண்டிருந்தது.அப்படியே வீட்டிற்க்குவர ரத்தத்தைப் பார்த்த அம்மா அழுதபடி நாலு வீடு தள்ளி இருந்த முருகேசு ஜயாவிடம்  என்னைக் கூட்டிப்போனார்.முருகேசு ஜயா தமிழ்ப் பரியாரி.காயம்பட்ட இடத்தில் இருந்த தலைமுடியை வட்டமாக வெட்டியகற்றி அந்த இடத்தில் சுண்ணாம்புபோல் வெள்ளை நிறத்தில் இருந்த ஏதோ ஒரு மருந்தைப்பூசி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.தலைக்காயம் மாற மறுபடியும் துவிச்சக்கரவண்டி ஆசை என்னுள் வந்திருந்தது.இந்தமுறை அப்பாவினதும் அம்மாவினதும் உதவியுடன் ஒரே நாளில் துவிச்சக்கரவண்டி ஓடக்கற்றிருந்தேன்.ஆனாலும் என்னால் அந்த முதல்நாள் ஜந்து நிமிட ஓட்டத்தை மறக்கமுடியவில்லை.அன்றிலிருந்து ஏறத்தாழ பதின்நான்கு வருடங்கள் நானும் மிதிவண்டியும் இணைபிரியாத நண்பர்களாகிவிட்டிருந்தோம்.என்னுடைய எல்லாப் பயணங்களிலும் கூடவே வரும் நண்பனாக என்னை அது சுமந்துகொண்டிருந்தது.

நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அப்பா எனக்கு கறுப்பு நிற "லுமாலா" சைக்கில் ஒன்றை வாங்கித்தந்திருந்தார்.என் மகிழ்ச்சி முழுவதையும் உருக்கிச்செய்த கறுப்பு நிற இரும்புத்தோழனாக முற்றத்தில் நெஞ்சை நிமிர்த்தி நின்றுகொண்டிருந்தது அந்த மிதிவண்டி.அன்றைய நாள் முழுவதும் வானத்திலிருந்து தேவதைகள் இறங்கிவந்து என்பாதங்களை தரையில் தங்கிவிடாமல் தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்தார்கள்.அன்றைய பகலும் இரவும் என் தோழ்களில் மலர்களைத்தூவிக்கொண்டிருந்தன.பறந்து பறந்து நண்பர்கள் வீடுகளுக்குச்சென்று என் புதிய மிதிவண்டியைக்காட்டி அவர்களின் கருத்துக்களைச் சேகரித்துக்கொண்டேன்.அழகிய "ஸ்டிக்கர்"களை வாங்கி ஒட்டி அலங்கரிப்பது,கலர்கலரான நூல்களை வாங்கி சக்கரங்களின் கம்பிகளில் கட்டுவது,மக்காட்கல்லு வேண்டிப்பூட்டியது என்று அந்த விடுமுறை முழுவதும் அந்த மிதிவண்டியே என் நாட்க்களை ஆக்கிரமித்திருந்தது.விடுமுறையும் முடிந்து நானும் மிதிவண்டியும் ஓடிஓடிக் களைத்துப்போயிருந்த ஒரு நாளில்தான் அந்த இடப்பெயர்வும் வந்தது.ஊர்கூடித்தெருவிலே மூட்டைமுடிச்சுக்களுடன் ஊர்ந்துகொண்டிருந்தபொழுதொன்றிலே என் தோழனும் எங்கள்வீட்டுப் பொருட்களில் கொஞ்சத்தை சுமந்துகொண்டு என்னுடன் கூட நகர்ந்துகொண்டிருந்தான்.கிளாலிக்கரையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் எனது மிதிவண்டியையும் விடாப்பிடியாக படகேற்றி வன்னிகொண்டுபோய்ச் சேர்த்திருந்தேன்.வன்னி வீதிகளின் புழுதியையும் செம்மண்ணையும் குடித்தபடி சலிக்காமல் அந்த ஒருவருடம் முழுவதும் என் எல்லாப் பயணங்களிலும் என்னைச் சுமந்துகொண்டு திரிந்தது என் மிதிவண்டி.வன்னியில் என் மிதிவண்டிக்குப் பல சோதனைகள்.குடமுடைந்தது,செயின் அறுந்தது,ரியூப் வெடித்தது என்று அந்த ஒருவருடமும் அதற்க்கு சோதனைமேல் சோதனைகள்.பல நூறுமுறை பஞ்சராகி உடம்பு முழுவதும் பல காயங்களை வாங்கியிருந்தன இரண்டு "ரியூப்களும்".வன்னியில் ஒரு வருடத்திற்க்குமேல் தாக்குப் பிடிக்க முடியாமல் நாங்கள் எல்லோரும் யாழ்ப்பாணம் நகர்ந்தபோது எனது மிதிவண்டியும் எங்களுடன் இழுபட்டுக்கொண்டு யாழ்ப்பாணம் வந்துசேர்ந்துவிட்டிருந்தது.

வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் திரும்ப முடிவெடுத்தபொழுதொன்றில் வயதாகிப்போய் மூலையில்கிடந்த அப்பாவின் றலிச்சைக்கிலை பெரிய சுமையாக உணர்ந்த வீட்டார் அதை வன்னியிலேயே விற்றுவிட்டு யாழ்ப்பாணம்போகத் தீர்மானித்தனர்.றலிச்சைக்கிள் எங்களைவிட்டுப் பிரியப்போவதை நினைத்து எரிந்துகொண்டிருந்த என் மனதைப்போலவே எரித்துக்கொண்டிருந்த வெயில் நாளொன்றில் வன்னி விவசாயி ஒருவருக்கு நல்லவிலைக்கு அந்தச்சைக்கிலை விற்றுவிட்டு பயணச்செலவுக்காக அப்பா அந்தப் பணத்தை எண்ணிப் பத்திரப்படுத்திக்கொண்டார்.யாழ்ப்பாணம் போகப்போவதை  எண்ணி வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியோடும்,திளைப்போடும் இருந்தபோது ஏனோ எனக்கு மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.வீட்டின் ஒரு மிகமூத்த உறுப்பினரை இழந்துவிட்டது போன்ற உணர்வு என் உடலெங்கும் பரவி இருந்தது.அந்தச் சைக்கிலுடன் சேர்த்து மிதிவண்டியுடன் ஒட்டிக்கிடந்த எனது சிறுவயது ஞாபகங்களையும் யாரோ பறித்துச்சென்றுவிட்டதைப்போலவே உணர்ந்தேன். துருதுருவென்று நீட்டிக்கொண்டிருந்து சிறுவயதுகளில் என்னைப் பயமுறுத்திய அதன் இருக்கை,சட்டம்போட்ட பின்னிருக்கை,சக்கரக்கம்பிகளில் சுற்றிக்கட்டியிருந்த கலர்கலரான நூல்கள்,சைக்கிலை துடைக்க செயின்கவறை ஒட்டிச் செருகியிருந்த எண்ணெய் தோய்த்த அழுக்குப்படிந்த துணி,புழுதி படிந்த வீதிகள்,மிதிவண்டியின் பின்னால் ஓடிவரும் நண்பர்கள் என்று அந்த மிதிவண்டியோடு சேர்த்து காலம் பலவற்றை அள்ளிச்சென்றுவிட்டாலும் புதிய நினைவுகளை உள்வாங்கிக்கொண்டு வாழ்க்கை நின்றுவிடாமல் வயதான அந்த மிதிவண்டியின் சக்கரங்களைப்போல இன்னமும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் காலத்துடன் சேர்ந்து நானும் என் மிதிவண்டியும் வளர்ந்து தேய்ந்துகொண்டிருந்ததோம்.முதுமையின் அடையாளங்களைச் சுமந்துதிரியும் மனிதர்களைப்போலவே காலத்தின் நீட்ச்சியில் என் கறுப்பு நிற மிதிவண்டியும் மெல்லமெல்ல தன் நிறம்மங்கி கொஞ்சம்கொஞ்சமாக அதன் ஆரம்பகால களையை இழந்துவிட்டிருந்தாலும் என் எல்லாவற்றிலும் அது என்னுடன்கூடவே இருந்தது.இடப்பெயர்வுகளின்போது சுமைகளைப் பகிர்ந்துகொண்டதில்,இழப்புகளில் துவண்டு கிடந்த நேரம்களில் தனிமையைத்தேடிப் பயணிக்கையில்,பந்துவிளையாடும் மைதானத்தில்,கோவில் வீதியில் நண்பர்களுடனான அரட்டைகளில்,மதவடியில் வெட்டியாக நிற்கையில்,நண்பணிண் காதலுக்கு தூதாகப்போகையில்,போரில் இறந்த தோழனின் மரணச்செய்தியை சுமந்து செல்கையில் என்று எல்லாவற்றிலும் கூடவே வந்தது என் மிதிவண்டி. பாடசாலை செல்லும்போதும்,முடிவடைந்து வரும்போதும் வெள்ளைக்கொக்குகளைப்போல் வீதி நீளத்திற்க்குப்போகும் பள்ளித்தோழர்கள்,அழகான பள்ளிக்கூடத்தோழிகளின் புன்னகைகள்,மெதுமெதுவாகப் பின்னேபோகும் கிழுவை வேலிகள்,பூவரசுகள்,மதில்கள்,தண்டவாளமின்றி மொட்டையாகக்கிடந்த யாழ்தேவி பயணித்த புகைவண்டித்தடங்கள் என்று என் மிதிவண்டியுடனான பயணங்கள் அத்தனையும் எத்தனை அழகானவைகள்.இளவயது நண்பர்கள்,பாடசாலை சென்றநாட்கள்,கவலையற்று நண்பர்களுடன் சுற்றித்திரிந்த மாலைப்பொழுதுகள்,அம்மாவின் குளையல் சோறு,அப்பாதரும் சில்லறைக்காசுகள்,நாவல்ப்பழங்கள்,மைக்கறை படிந்த பாடசாலைச்சீருடைகள்,எங்கள் இளவயதுப் புன்னகைகள் என்று காலம் எல்லாவற்றையும் பறித்துவிட்டதைப்போலவே என் பயணத்தோழனையும் எங்கோ பறித்துச்சென்றுவிட்டது.இழந்துஇழந்து இழப்பதற்க்கு எதுவுமின்றி வெளிநாடுகளுக்கு ஓடிவந்த ஈழத்தமிழர்களைப்போலவே நானும் மிதிவண்டியுடன் சேர்த்து எல்லாவற்றையும் இழந்து நாடுகடந்து ஒற்றையாக நின்றாலும் என் நினைவுகளில் நீங்காது நின்று புன்னகைத்துக்கொண்டிருக்கிறான் என் பயணத்தோழன். வெளிநாட்டு நகரங்களின் சிமெண்ட் வீதிகளில் விலையுயர்ந்த துவிச்சக்கர வண்டிகளில் உடம்பு நோகாமல் சவாரி செய்தாலும் எம்பிஎம்பி மிதித்தபடி கால்களிலும் மட்காட்டிலும் புழுதியடிக்க வாழ்க்கையின் மிக அழகிய நாட்களைச் சுழற்றியபடி பயணிக்கும் மண்ணுக்கும் எங்களுக்குமான உணர்வுச்சங்கிலியை இணைத்துவைத்திருக்கும் எம்மூரின் மிதிவண்டிப்பயணங்களுக்கு அவை ஒருபோதும் இணையாக முடியுமா....?

Tuesday, 27 December 2011

கார்த்திகைப்பொழுதுகளில் ஆவியாகும் கண்ணீர்த்துளிகள்....

மெல்லக்கடந்து போகும்
கார்த்திகைப்பொழுதுகளின் துடிப்பில்
எழுந்து அடங்கிப்போகின்றன
மாவீரர்களின் ஞாபகங்கள்

சூரியத்துளிகளில் ஒளிரும்
போராளித்தோழர்களின் நினைவுகளில் ஊறிப்போய்
பாரமாய்க்கனக்கின்றன
இந்த மாலைப்பொழுதுகள்

இடிந்து தூர்ந்துபோய்க்கிடக்கும்
கல்லறைகளின் நடுவே
பூத்திருக்கும் புற்களின் இடையே
பறந்து திரியும் வண்ணாத்திப்பூச்சிகளின் சிறகடிப்பில்
சிலிர்த்துக்கொள்கின்றன கார்த்திகைமேகங்கள்

வரலாற்றை எழுதிவிட்டு நிரையாகப்போய்விட்ட
தோழர்தோழியரின் ஞாபகங்களில் 
தோய்ந்தொழுகும் கண்ணீர்த்துளிகளில் இருந்து
ஆவியாகின்றன பல கதைகள்

பறவைகளின் சிறகுகளில் இருந்து
உதிர்ந்துவிழும் இறகுகளில்
இன்னமும் ஒட்டியிருக்கும் சிறு சூட்டைப்போல
தோற்கடிக்கப்பட்ட கோபத்தின் வெம்மைகள்
நினைவுகளில் இன்னமும்
நீறாக உறங்கிக் கிடக்கின்றன

கல்லறைகளில் தவம்கிடக்கும்
காலப்புதல்வர்களின் தியாகங்களை
நெஞ்சறைகளில் சுமந்தபடி
விக்கித்திருக்கிறோம்
இன்னமும் விடியாத இரவுகளில் திசைகளைத்தேடியபடி...