(பெரிதாக்க படங்களின் மேல் க்ளிக்குக..)
Sunday, 11 September 2011
Tuesday, 6 September 2011
பிரிவு..
நீயில்லாத நிமிடங்களில்
ஒவ்வொரு நொடிகளும்
எனைப்பிடித்துப் பெருஞ்சர்ப்பத்தைப்போல
அணுவணுவாக விழுங்கிவிடுகின்றன
காற்றில்லாத வெற்றிடமொன்றில்
அடைத்து விடப்பட்டதுபோல
நீயில்லாத கணங்களில்
என் ஒவ்வொரு சுவாசங்களும்
பெருஞ்ச்சுமையாய் இடம்பெறுகின்றன
அருகேதானே இருக்கிறேன் என்று
தொலைபேசியில் நீ சிணுங்கினாலும்
சுடர் அணையும் சிறுகணத்தில்
கனமாய் இறங்கும் இருளைப்போல
சிலுவைகளாய்க் கனக்கின்றன
நீயற்ற சிறு நொடிகளும்
பிரிவு முடித்து உன் ஒவ்வொரு மீள்கையிலும்
நீயற்ற நிமிடங்களின் வலிகளை அனுப்பிவிட்டு
ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாயைப்போல
ஒவ்வொரு தடவையும்
பூரித்துப்போகிறது எனதுள்ளம்
எல்லாப்பிரிவுகளின் முடிவிலும்
இன்னமும் இன்னமும் பேரன்பைச் சுமந்துகொண்டு
நீ மீண்டுவந்தாலும்
எல்லாப்பிரிவுகளின் முடிவிலும்
இன்னமும் இன்னமும் பேரன்புடன்
உன்னை நான் அணைத்துக்கொண்டாலும்
எல்லாப் பிரிவுகளும்
எனக்கொரு மீள்பிறப்பாக அமைந்துவிடுகிறதடி
எல்லாவித மொழிகளும் மௌனமாகி விட்டதைப்போல
எல்லா மனிதர்களும் ஊமையாகி விட்டதைப்போல
காற்று தன் அசைவை நிறுத்திவிட்டதைப்போல
உன் பிரிவின் சிறு கணங்களின் இடைவெளியில்
இயங்காமல் நின்றுவிடுகிறது எனதுலகம்
கண நேரமென்றாலும் கண்மணியே...!
உன் அருகின்மை
யுகங்களைக் கரைத்துவிட்டுப் போய்விடுகிறதடி
என் காலத்திற்கு...
Friday, 5 August 2011
மௌனக்காதல்......
ஒத்தையடிப் பாதையில
ஒதுங்கிநான் நடக்கையில
ஓரக்கண்ணாலே என்
உசிர்குடிச்சுப் போனவளே
அப்போ போனஉசிர்
அப்புறமா திரும்பலையே
இப்போ தனிச்சுஎன்
உடல்மட்டும் நிக்கிறதே
சின்னச் சிரிப்பாலே
சிதறவிட்ட புன்னகையால்
கன்னக் குழியோரம்
கவுத்துஎனைப் போட்டவளே
கன்னங் கருங்கூந்தல்
காற்றிலாடும் ரட்டைஜடை
கண்ணில் இளசுகளை
கட்டிவைக்கும் பேரழகு
என்னை ஒருசிரிப்பில்
எங்கோ தொலைச்சுப்புட்டேன்
இன்னும் தேடுகிறேன்
இருக்குமிடம் நீயறிவாய்
கரும்புப் பார்வையொன்றை
காட்டிவிட்டுச் சென்றுவிட்டாய்
கலைஞ்ச எம்மனசு இப்போ
காற்றிலாடும் இலவம்பஞ்சு
***
ஊரும் ஒறங்கிருச்சு
ஊர்க்குருவி தூங்கிருச்சு
பச்சைப் பாய்விரிச்சு
பயிர்கூடத் தூங்கிருச்சு
இச்சை உடலடக்கி
இருக்கும் முனிவர்களும்
சற்றே தலைசாய்த்து
சாய்ந்திடும் சாமத்தில்
பித்துப் பிடிச்சமனம் உம்
பின்னாடி அலையும்மனம்
சற்றும் தூங்கலையே
சாமக்கோழி கூவிருச்சே
பிடிச்சஎன் நோய்தீர
பெருமருந்து உள்ளதடி
எடுத்துச் சென்றஉசிர்
எங்கிட்டத் தந்திடடி
***
சுத்துதடி சுழலுதடி
உச்சந்தலை கிறுகுதடி
சிரிக்கிமவ ஓன்நெனைப்பில்
சீவனே போகுதடி
பொட்டலம்நான் கட்டிவச்சேன்
பொடிமருந்தும் தடவிப்பாத்தேன்
வந்தவலி போகலையே
வாட்டியெனை வதைக்கிறதே
தீராத தலைவலியும்
தீரவழி உள்ளதடி
திருடிச்சென்ற எம்மனசு
திருப்பிஅதைத் தந்துடடி
***
உண்ண முடியுதில்லை
உருசையும் தெரியுதில்லை
உள்ள சோறுதண்ணி
எறக்க முடியுதில்லை
உன்னை நெனச்சமனம்
உண்ண மறுக்குதடி
என்ன செஞ்சுபாத்தும்
எனக்குப்பசி எடுக்கலடி
முன்னப்போல நானாக
மூணுவேளை உணவுண்ண
உங்கூட வந்துப்புட்ட
எம்மனசை தந்திடடி
***
உள்ள நெஞ்சுக்குள்ள
உதிரத்தால் கூடுகட்டி
உன்னை வச்சிருக்கேன்
உசிருக்கு உசிராக
பாவப்பட்ட ஆம்பிளைங்க
பாசத்துக்கு ஏங்குவாங்க
கண்ணீர்விட்டுக் கதறியழ
கடைசிவரை முடியாது
உன்னைக் கரம்பிடிக்கும்
எங்கனவு பலிச்சிடுமோ
ஊமைக் கனவுபோல
எங்காதல் ஆயிருமோ...?
****
தோழர் பாட்டு...!
எட்டூரும் பாத்திருக்க
என் ஆத்தா உச்சி மோர
நான் வளர்ந்தேன் புழுதிக்காட்டில்
எங்கூட அவன் வளர்ந்தான்
சிற்றோடை போல
சிலுசிலுக்கும் தென்றல்போல
பற்றாடை வரிசைபோல
பஞ்சு வண்ண மேகம்போல
பட்டாலே மனதிலே
படபடக்கும் காலங்கள்
சுட்டாலும் எரிக்கேலா
சுவையான கனவுகள்
வற்றாமல் வரிசையாய்
வந்து குதிச்சு
நெஞ்சார சுழன்றடிச்சு
நினைவுகள் பறக்கிறதே
சிற்றாடை கட்டி
சிலிர்த்துக்கொண்டு பேசும்
உற்றாரும் ஊராரும்
உரிமை கொண்டாடா
பொற்றாமரை குளத்தடி
பொதிகை மர நிழலில்
பொழுது விழும் நேரம்
பொரி உறுண்டை வாங்கி வந்து
பொத்திப்பொத்தி நீ திண்ண
பொறுக்காமல் நான் பொங்க
பத்திரமாய் மறைத்து
பையிலே வாங்கி வந்து
பரிவுடனே நீ தர
பணிவுடன் நான் ஏற்க
பார்த்திருந்த பறவைகளும்
பரிவுடனே சிறகசைக்க
பாச நினைவுகள்-நெஞ்சில்
பலகோடி வருகிறதே
ஊரோரம் தோப்போரம்
ஊர்க்குருவி பாட்டோடு
ஊம்பாட்டும் சேந்துவர
உணர்வுகளை அது இழுக்க
எசப்பாட்டு நாம்பாட
ஏரிகளில் மீனோட
வெள்ளாடை கட்டி வந்து
வெயில் போல நிலவடிக்க
மல்லாக்கப்படுத்திருந்து
மார்குறுக்கை கைவச்சு
பாட்டி கதை கேட்டு
பலகனவில் நாம் மிதந்து
நீட்டி நிமிந்து
நிம்மதியாய் தூங்கிய
நேற்றென் காலங்கள்
நினைவில் வருகிறதே.......
மூட்டை முடிச்சோடு
முழுசாய்ப்புலம்பெயர்ந்து
வாழ்ந்த மண்விட்டு நாங்கள்
வரிசையாய் நகர்கையிலும்
ஒண்டாய்ப்போவோம்
ஒருவேளை செத்தாலும்
ஒருபாயில் சாவமெண்டு
புத்தி தெரியாத வயதில் நீ
புலம்பியதும்...
நீ வெம்ப நான் வெம்ப
எமைப்பார்த்து ஊர் வெம்ம
சேர்ந்து நகர்ந்த வண்டி
ஊர்விட்டு ஊர் போய்
சேர்ந்த கதைகள்
நினைவில் வருகிதே....
ஒட்டி ஒட்டி இடமில்லா
ரியூப்பில் காத்தடிச்சு
வக்கிள் எடுத்து
வலிச்ச றிம்பூட்டி
உக்கிக்கிடந்த சைக்கிலுக்கு
உசிர் கொடுத்து
ஒற்றைச்சைக்கிலில்
ஒன்றாக ஊர் சுத்தி
ஒருகால் நீ போட
ஒருகால் நான் போட
புழுதி வீதிகளில்
வலம்வந்த காலங்கள்
கண்ணில் விழுந்தென்னை
கலங்க வைக்கிறதே...
வஞ்சமில்லாது காலங்கள்
வருசங்களாய்ப்பறந்தோட
அஞ்சாத நெஞ்சனாய்
அணைக்கும் நேசனாய்
நெஞ்சிலே மண்பற்றை
சுமந்து நீ வளர
பிஞ்சிலே கோழை நான்
பின்னும் கோழை-என்
நெஞ்சிலே வீரத்தை
எப்படி எதிர்பார்ப்பாய்..
உண்மை தெரிஞ்ச
உத்தமன் நீ-ஒருபோதும்
என்னை உன்னுடன்
வாவென்று கேட்டதில்லை
கண்டந்தாண்டி கடல் தாண்டி
வாழ நான் ஓடிவர
கையசைத்து விடைதந்து
கடமை செய்ய நீ சென்றாய்
என் மனுசி எம்புள்ளை
என்குடும்பம் என்று நான்
சுத்தி சுத்தி சுழன்றடித்து
சுய நலத்தில் கூடுகட்டி
அண்ணாந்து பாக்கையில்
என் மக்கள் என் இனம்
என் தேசம் என்று நீ
எட்ட முடியா உயரத்தில்
ஏறி நின்று கையசைத்தாய்...
ஓடிவந்துன்னை
ஒருக்கால்பார்த்து
காலில் விழுந்துன்னை
கட்டி அணைத்து
உச்சிமோர்ந்து என்
உசிரை விட நினைக்கையில்-நாம்
பத்தி வயிறெரிய
பாசத்தில் துடிதுடிக்க
பாழுங்காலத்தால்
பலர்செய்த சதியால்
குளத்தோரம் பூத்தமரம்
குயில் பாடும் பொதிகை மரம்
குலங்காக்க எழுந்தமரம்
குனியாத வீரமரம்
வேருடன் சாஞ்சிடுச்சே-என்னுடன்
வேதனை தங்கிடுச்சே.....
Sunday, 17 July 2011
வேரில் தமிழ் பாய்ந்த வீரமரம் சாயாது.
காலம் என்னைக் கையில் தூக்கி வைத்திருக்கிறது எப்பொழுது என்னுடைய கவிதையின் வேலை முடிகிறதோ அப்பொழுது காலம் என்னைக் கைவிட்டு விடும்'-புதுவை
மரணித்துப்போவது மனிதர்கள் மட்டுமே ஒப்பற்ற கவிஞ்ஞனே உன் கவிதைகளில் எல்லைகளற்று விரிந்து பரந்திருக்கும் பிரபஞ்சத்தில் தமிழின் முடிவு நாள்வரைக்கும் உன் வரிகளில் வாழ்ந்துகொண்டேயிருப்பாய்...காலம் எப்படி உன்னைக்கைவிடும்?..ஒரு காலத்தின் பிரதியாய் உன் எழுத்துக்கள் இருக்கையில்....
காலனே!
கயிறு என்மேலெறிய
கணக்கெடுக்கின்றாயா நாட்களை?
விரைவில் முடியாதென் கணக்கு.
சாக்குறிக்கும் ஜாதகமே பொய்யென
உணர்த்துவேன் உனக்கு.
மரண பயமில்லை எனக்கு.
இறுதி நாளைச் சொல்லவரும் உன் தூதுவனைக்கூட
முகம் மலர்த்தி வரவேற்பேன்.
மேதியுர்தி ஏறிவரும் உன்னையும்
பாயருகே அமர்த்தி
பத்து வருடங்கள் கழித்து வாவெனச் செப்பும்
பலமெனக்குண்டு.
என் ‘அப்பு’ எனக்களித்த வரமிது.
சாவு ஒரு நாள் என்னைத் தழுவும்
என் ஒப்புதலுடன்
போதும் என் ஜீவிதமெனும் நிறைவுடன்
நானாக உன்னைக் கூவியழைத்து
கூட்டிப்போ என்பேன்
அதுவரை உனக்கு
என் முகவரி எதற்கு?
காலா!
சென்று வேறெவனும்
இழிச்ச வாயன் இருப்பான்
எடுத்துச் செல்.
என்னைத் தான் வேண்டுமெனில்
நானாக உன்னை அழைப்பேன்
அப்போது வா தோழா.’
புதுவை இரத்தினதுரை
Monday, 6 June 2011
சருகானவர்கள்.....
எதிர்பார்ப்புக்கள் எதுவுமின்றி
ஒளித்தொகுப்பை நடத்திவிட்டு
காலங்கள் தொலைந்ததனால்
காய்ந்து சருகாவதற்காய்
வேர்களை நோக்கி
உதிர்ந்துவிழும் இலைகள்
நினைவு படுத்துகின்றன
பனிமர தேசத்தில்
பிடுங்கி நடப்பட்ட
ஈழத்துத் தமிழர்களை....
அந்நியன்....
பைன்மரத்தை தீண்டிவரும்
மாலைநேரக் குளிர்காற்றில்
மனதைப் பறிகொடுத்து
மயங்கி நின்றபோது
ஓடி வழிந்தோடி
ஒருகால்ப் பாதணியை ஊடுருவி
உள்ளங்காலூடு புகுந்து
உச்சி மண்டையில்
சுள்ளென்று உறைக்கும்படி-குளிரில்
சில்லென்று குத்திய
மழைத்துளி சொல்லியது
நான் அந்நியன் என்று....
Thursday, 5 May 2011
என்னருமைத் தாய் நிலமே......
தசாப்தங்களாய்ப் போராடித்
தாய் நிலத்திற்க்காய்
உதிரமிட்டுக்
கட்டிக் கட்டிக்
காத்த கனவுகளை
உன் பிள்ளைகளின்
பெருவிருப்பைச்
சிதைக்கும்
ஊழிக்காலம் ஒன்று
உன் மடியில்
உருவான போது
எப்படித்
துடித்திருப்பாயம்மா
என்னருமைத் தாய் நிலமே......
ஒட்டி உலர்ந்த
வயிறுகளுடனும்
வெடித்துப் பிளந்துபோன
உதடுகளுடனும்
எச்சிலைக்கூட விழுங்க
இடைவெளியின்றி
ஏவப்பட்ட
செல்களின்
நடுவே எங்கள்
பச்சிளம் குழந்தைகள்
பரிதவித்தனவாம்
ஜயகோ....
எம்பிள்ளைகள்
துடித்தபோது
எப்படித்தாங்கினாயம்மா
என்னருமைத் தாய் நிலமே......
கந்தகப்புகை நடுவே
கண்ணுறக்கம்
மறந்துவிட்டு
உந்தனுக்காய்
வெந்தணலில் நீராடிய
வேகாத இலட்ச்சியங்களின்
வித்துடலைக்கூடச்
சிதைத்த பாதகரை
வெறிகொண்ட பித்தரை
சுமக்க வேண்டிய
கொடுமைதனை
எப்படித்தாங்கினாய் அம்மா
என்னருமைத் தாய் நிலமே......
உப்புக்காற்றூறிய
உன் கரையோரம்
நீளச்
செத்துக்கிடந்தது
எம் சந்ததி
செருக்குடன்
மேலேறி நடந்தது
இனவாதம்
கொத்துக் கொத்தாய்
கொடுப்பதற்கா
நாங்கள்
கொள்கைகளில்
தீக்குளித்தோம்
பித்துப்பிடித்துப்போய்
உலகத்தின் வீதிகளில்
கத்தினோம்
திசையறியாது
நின்றோம்
தீக்குளித்தோம்
அத்தனையும் வீணாக
ஆணவம் வென்றதென்று
விக்கித்துப்போனாயா அம்மா
விதி மகளின் செயல்கண்டு
என்னருமைத் தாய் நிலமே......
போர்தின்ற பெருநிலத்தில்
வேரோடிக்கிடக்கும்
சுதந்திரத்திற்கான
தவிப்புக்களில்
உன் மடியில்
ஓயாது
கணன்று கொண்டிருக்கும்
தீநாக்கின் வெம்மைகளைத்
தின்று வளர்ந்த
சுதந்திரப்பறவைகள்
வெளிப்பட்டு
நிளம் பிளக்க
எம் கனவுகளை
உரத்துச் சொல்லிய
வானத்தை தின்றுவிட்டு
வெற்றிடத்தை எமக்களித்துக்
காலம் உறங்குகிறது
கண்டுடைந்தாயா அம்மா
என்றும் கலங்கா
கலிங்கத்துத் தேசமே
என்னருமைத் தாய் நிலமே......
இழப்புகளும் வலிகளும்
இருந்துவாட்ட
ஏக்கங்களும் சோகங்களும்
வளர்ந்து
எதிர்காலத்தை தின்றுவிட
நிழலற்ற நிலங்களிலே
படுத்துறங்கி
நிச்சயமற்ற நாட்களிலே
வாழ்ந்து கொள்ளும்படி
உன் பிள்ளைகளை மட்டும்
சபித்துப்
பிடித்துக்கொண்ட
பெருஞ்சாபத்தை நினைத்து
திக்கெல்லாம் சிதறிக்கிடக்கும்
சந்ததியை நினைத்து
தீப்பட்ட புண்ணாக
தீண்டவொண்ணா நிலமாக
தீய்ந்துகிடக்கிறாயா அம்மா
என்னருமைத் தாய் நிலமே......
வண்ண வண்ணமாய்
வளர்ந்திருக்கும்
வயல் நிலங்கள்
வானளாவ உயர்ந்த கட்டிடங்கள்
அகண்டு பெருக்கும்
அழகழகான வீதிகள்
துறைமுகங்கள்
தூங்கா நகரங்கள்
ஒல்லியும் குண்டாயும்
உடலை மாற்றிய
மனிதர்கள் என்று
ஒட்டுமொத்த
சிங்களபுரியே
சிருஷ்டியின் மூர்க்கத்தில்
அதிரும்போது
உன் மடியில் மட்டும்
தீநாக்குகள் வந்து விழுந்தது
ஏனோ அம்மா
என்னருமைத் தாய் நிலமே......
புழுதி எழும் வீதிகள்
அக்கினி வெயிலெரிக்க
அங்குமிங்குமாய்
சில குடிசைகள்
ஒவ்வொரு வீட்டிலும்
பலி கொடுத்த
வலிகள்
அதிர்ந்து பேசக்கூட
முடியாமல்
மிரட்ச்சியுற்ற கண்கள்
உக்கிர வறுமையின்
வக்கிரத்தாலும்
போர்தின்ற வடுக்களாலும்
மக்கிப்போன
வாழ்க்கையை சுமந்தபடி
எட்டிப்பார்க்கும்
தலைகள் என்று
என் அன்னை மண்ணே-உன்
முற்றத்தில் மட்டும்
முட்களின்
விதைகளை வீழ்த்திய
விதிப்பறவையை
என் செய்வேன்
என்னருமைத் தாய் நிலமே......
Subscribe to:
Posts (Atom)
