Pages

Friday 5 August 2011

மௌனக்காதல்......

ஒத்தையடிப் பாதையில
ஒதுங்கிநான் நடக்கையில
ஓரக்கண்ணாலே என்
உசிர்குடிச்சுப் போனவளே

அப்போ போனஉசிர்
அப்புறமா திரும்பலையே
இப்போ தனிச்சுஎன்
உடல்மட்டும் நிக்கிறதே

சின்னச் சிரிப்பாலே
சிதறவிட்ட புன்னகையால்
கன்னக் குழியோரம்
கவுத்துஎனைப் போட்டவளே

கன்னங் கருங்கூந்தல்
காற்றிலாடும் ரட்டைஜடை
கண்ணில் இளசுகளை
கட்டிவைக்கும் பேரழகு

என்னை ஒருசிரிப்பில்
எங்கோ தொலைச்சுப்புட்டேன்
இன்னும் தேடுகிறேன்
இருக்குமிடம் நீயறிவாய்

கரும்புப் பார்வையொன்றை
காட்டிவிட்டுச் சென்றுவிட்டாய்
கலைஞ்ச எம்மனசு இப்போ
காற்றிலாடும் இலவம்பஞ்சு
***
ஊரும் ஒறங்கிருச்சு
ஊர்க்குருவி தூங்கிருச்சு
பச்சைப் பாய்விரிச்சு
பயிர்கூடத் தூங்கிருச்சு

இச்சை உடலடக்கி
இருக்கும் முனிவர்களும்
சற்றே தலைசாய்த்து
சாய்ந்திடும் சாமத்தில்

பித்துப் பிடிச்சமனம் உம்
பின்னாடி அலையும்மனம்
சற்றும் தூங்கலையே
சாமக்கோழி கூவிருச்சே

பிடிச்சஎன் நோய்தீர
பெருமருந்து உள்ளதடி
எடுத்துச் சென்றஉசிர்
எங்கிட்டத் தந்திடடி
***
சுத்துதடி சுழலுதடி
உச்சந்தலை கிறுகுதடி
சிரிக்கிமவ ஓன்நெனைப்பில்
சீவனே போகுதடி

பொட்டலம்நான் கட்டிவச்சேன்
பொடிமருந்தும் தடவிப்பாத்தேன்
வந்தவலி போகலையே
வாட்டியெனை வதைக்கிறதே

தீராத தலைவலியும்
தீரவழி உள்ளதடி
திருடிச்சென்ற எம்மனசு
திருப்பிஅதைத் தந்துடடி
***
உண்ண முடியுதில்லை
உருசையும் தெரியுதில்லை
உள்ள சோறுதண்ணி
எறக்க முடியுதில்லை

உன்னை நெனச்சமனம்
உண்ண மறுக்குதடி
என்ன செஞ்சுபாத்தும்
எனக்குப்பசி எடுக்கலடி

முன்னப்போல நானாக
மூணுவேளை உணவுண்ண
உங்கூட வந்துப்புட்ட
எம்மனசை தந்திடடி
***
உள்ள நெஞ்சுக்குள்ள
உதிரத்தால் கூடுகட்டி
உன்னை வச்சிருக்கேன்
உசிருக்கு உசிராக

பாவப்பட்ட ஆம்பிளைங்க
பாசத்துக்கு ஏங்குவாங்க
கண்ணீர்விட்டுக் கதறியழ
கடைசிவரை முடியாது

உன்னைக் கரம்பிடிக்கும்
எங்கனவு பலிச்சிடுமோ
ஊமைக் கனவுபோல
எங்காதல் ஆயிருமோ...?
****

No comments:

Post a Comment