Pages

Thursday 25 July 2013

எதை எழுதுவேன் நான்...?

தாங்கவியலா 
வெறுமைகளில் அமிழ்ந்து
விழிகளில் நீர்வர
நினைவுகள் கரைந்தழிகிறது...
எழுதுகோலும்
வெற்றுத்தாளுமாய்
என் எதிரிலே...
எதை எழுதுவது...?

முகவரி இழந்து
முகமிழந்து 
முற்றத்து நிழல் இழந்து
ஊர் சுமந்த கனவிழந்து
உள்ளே வலி சுமந்து
அகதியாய்
உருக்குலைந்து கிடக்கும்
கதை எழுதவா..?

ஒளித்து ஒளித்து - தன்
இணையுடன் விளையாடும்
ஒற்றைப்பனை அணிலுக்கும்
விரத விருந்துண்டு
களைத்து
முற்றத்தில் 
துருத்திக்கொண்டு நிற்கும் 
வேம்பில்
கரகரத்த குரலில்
கரையும்
காக்கைக்கும்
கிடைத்த சுதந்திரம்
என் மண்ணில்
என் முற்றத்தில்
எனக்கு மறுக்கப்பட்டதை 
எழுதவா..?

என் பாடு பொருளாய்
பலகாலம் இருந்த
கொலுசொன்றின் ஒலிக்காக
மனசெல்லாம் காத்திருந்து
காலங்கள்
உருக்குலைந்து 
உள்ளே துருப்பிடித்து
மனச்சுவர்களில்
உக்கி உதிர்ந்து போனதை
எழுதவா..?

என் தேசத்தின் 
தெருக்களில் நிற்கும்
எருக்கலைக்கும்
நாயுருவிக்கும் கூட
எல்லாமாய்
எதுவுமாய்
வெளித்தெரியாமல்
உள்ளே ஒட்டி இருப்பவை
வேர்கள்...
ஊட்டி வளர்த்து - என்
உள்ளிருக்கும் ஆன்மாவை
உருவாக்கிய பாட்டியை
எங்கள் வீட்டின் 
வெளித்தெரியா வேரை
விட்டுப்போகும்படி
பிடுங்கி எறிந்த போரை
நீழ்கின்ற இரவினிலே
நினைவுகளினூடே
கொப்பளிக்கும்
அது தந்த வலிகளை
எழுதவா..?

உறவுகள் அறுபட
அகதியாய்
ஊர் விட்டு வந்து
பனி உதிர்ந்த வீதிகளில்
பாதை தெரியாமல்
கனவுகளை பரணில்
காயப்போட்டுவிட்டு
வயிற்றுக்கும்
வாழ்க்கைக்குமாய்
போராடும்போது
செருக்குடன் கடந்துபோகும்
செல்வந்த தமிழர்களின்
இரக்கமற்ற வார்த்தைகளை
இந்நாட்டின் நாசனாலிற்றி
என்ற திமிர்களை
புழுவைப்போல் எமைப்பார்க்கும்
எள்ளல்களை
எழுதவா..?

சுமை அமத்தும்
அகதி வாழ்க்கையில்
ஊற்றெடுக்கும்
விழி நீரை துடைக்க
ஒரு உறவும் இன்றி
உருக்குலைந்து
நிற்கதியாய் நின்றிருக்கும்
பொழுதுகளில் எல்லாம்
நாமிருக்கிறோம் என்று 
தானாடாவிட்டாலும்
தமிழனென்ற தசையாடிய
ஓடி வந்து தூக்கிவிடும்
ஊரில் பார்த்தறியா
உடன்பிறவா இரத்தங்களை
நினைக்கும்பொழுதெல்லாம்
பனி இரவிலும்
கண்கள் பனிக்க
உள்ளம் விம்மி அழும்
கதை எழுதவா..?

நெஞ்சுள் இருக்கும்
கறுத்த பக்கம்கள்
தெரியாமல்
உரித்துள்ள ரத்தங்கள் என்று
உரிமையுடன் எதிர்பார்த்த
உறவுகள் 
கழுத்தறுத்த 
கதை எழுதவா..?

இவை எல்லாம் பார்த்த 
கொதிப்பில்
தொல்லைகளை துடைத்தழித்து
எல்லைகள் வரையப்பட்ட
என் சுதந்திர மண்ணில்
ஒரு நாள் இறப்பேன் என்று
நெஞ்சுக்குள்
நெருப்பாய் வளர்த்த
கனவை
கடைசியாக தின்று முடித்த
முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த
காலமும் 
கண்ணீரும்
எம் வலிகளைப்போக்காத
கதை எழுதவா..?

வானம் பார்த்து
வரும் கண்ணீரில்
வடுக்களைத்
தடவிக்கொள்கிறேன்..
ஓ கடவுளே..
எதை எழுதுவேன் நான்..?
எல்லாக் கண்ணீரும்
என் வேலிகளை 
அரிக்கையில்...

1 comment:

Anonymous said...

<<<<<>>>>""தொல்லைகளை துடைத்தழித்து

எல்லைகள் வரையப்பட்ட

என் சுதந்திர மண்ணில்

ஒரு நாள் இறப்பேன் என்று

நெஞ்சுக்குள்

நெருப்பாய் வளர்த்த

கனவை``

Post a Comment